Friday, December 22, 2006

சிதைதல்

தொண்டைக்குள் சிக்குண்ட முள்ளென
நெஞ்சுக்குள் நெருடும்
என்னமோவொன்று
சமயங்களில்
நீ உடைத்தெறிய முயலும்
நெடும் மௌனங்களினூடு
தகர்ந்து போவது
என் முள்ளென்புகளும்தான

நெருக்கமான உரையாடல்கள்
அதன்பின்னரான விடைபெறுதல்கள்
உணர்வுகளை அசுரபசியுடன்
பிடுங்கித் தின்னும்
இந்தக் காதலுடன்
தொலைபேசி கைநழுவ
கால்களினிடையே முகம்புதைத்து
விம்மி விம்மியழும் பொழுதுக்கள்
இனிமேலும் வேண்டாமெனக்கு..

எதுவும் பேசிக்கொள்ளாத கணங்களின்
வலி தெறிக்கும் குரலில்
நினைப்பதனைத்தையும்
சொல்லிவிட முடிந்திடுமாயின்
சிதைதல் சிலகாலங்களுக்கேனும்
தள்ளிப்போகக்கூடும்

காத்திருத்தல்களில் வந்துமுடியும்
கனவுகளின் கனத்த முடிச்சுகளுடன்
தன் வழி ஏகுதலும்
பிரியம் கூற விழைதலும்
பழம் பஞ்சாங்கங்களாய்க் கசக்க
வெறும் வார்த்தைகள்
உன்னில் சலனங்களை
ஏற்படுத்தக் கூடுமோவென்ற
சந்தேகங்களோடு
முன்புபோல் எதுவும்
ஆறுதலளிப்பதாயில்லை

விழிநீரை வீணாக்குவது மட்டுமே அழுகையாகின்
அழத்தோன்றினால்
அழுவதில் ஒன்றுமேயில்லைதான்
நீயற்ற வெறுமைகளின்
இறுக்கந்தளர்த்த வழியற்று
இரத்தங் கசியக் கசியப் பாடலுறுவதே
எனக்கான அழுகையாகிப் போனமை
நீயறிவாயா எனதன்பே.

21.12.2006

Monday, December 04, 2006

அகமெங்கும் பொழியும் முன்பனிக்கால மந்தாரங்கள்


1.

உதடுகள் இறுகத் தாளிடப்பட்டு
ஊடறுக்க முடியா மௌனங்களுடன்
வாழ்தலின் கனம்
உயிர்தின்னத் தொடங்கியவோர் பொழுதில்
கழற்றியெறிந்த கச்சையின்
வியர்வை தோய்ந்த பெண்மையின் வாசனையை
ஆழ உள்ளிழுத்து
குலுங்கிக் குலுங்கியழுதபடி,
ஏதுமற்ற வெளியில் குருதி துளிர்க்க
காற்றைக் கிழித்து சுழன்று கீழிறங்கும்
மனச்சாட்டையின் முறுக்கிய மொழியில்
என் முலைகளுக்கு நான்
பேசக் கற்றுக்கொடுத்தேன்

சுவாலைவிட்டு நிலவு எரிந்து
கருகும் பிணவாடை கவிந்திருந்த இரவதனில்
ஊர் கேட்ட முதற் குரல்:
"நான் மகத்தானவள்..."
என்பதாயிருந்தது
நட்சத்திரங்களும் எதிரொலித்து
அண்டசராசரமெங்கும் நிறைந்து வழிய
காம்புகளில் துளிர்த்த
முதல் துளியின் வாசனை
பறைசாற்றிப் போகும்
நான் மகத்தானவள்..
மகத்தானவள்..

மொழியின் லாவகம் கைவந்த மறுகணம்
காலங்கள் பற்றியதான
இல்லாமலேயே போய்விட்ட பிரக்ஞைகளோடு
வெறித்த கண்கள்
தெருவோரமெங்கும் நிலைகுத்தி நிற்க,
நொடிக்கொரு திசையில்
திரைகளை விலத்தியபடி
விட்டேத்தியாய் சிறகடித்துப் பறக்கும்
என்னொரு முலை..
சமூகத்தின் அடிவயிற்றைக் கீறிப்பிளந்த
தடயங்களைச் சேகரித்தபடி
நானுமொரு பெண்ணென்ற கெக்கலிப்புடன்
பின்தொடரும் மற்றொன்று..

இனியெதற்கு என் தயவு
முலைகளே பேசட்டும்..,
கழுத்தை நெரிக்கும்
'ஆம்பிளை'த்தனங்களைப் பற்றி..
கால்களைப் பிணைக்கும்
யுத்தச் சங்கிலியைப் பற்றி..
இன்னமும்,
அந்தரத்தில் அலைவுண்டிருக்கும்
என் எப்போதைக்குமான
கனவுகளைப் பற்றி...


2.

அனைத்தையும் களைந்தெறிந்து
கனவுகளோடு மட்டுமேயென
வாழ முற்படுவது
தேவலை போலவும்...
அவள் தந்த உடலுக்காகவும்,
நோயில் வீழ்ந்த தேசமொன்றில்
நிர்ப்பந்திக்கப்பட்ட வாழ்தலுக்காகவும்
கண்காணா பரப்பிரம்மத்தை
சபித்துச் சபித்து
தேறுதலடைவது போலவும்...
கட்டற்று பிரவகிக்கும் வார்த்தைகளை
அதன் போக்கிற்குப் பெருக்கெடுத்தோட
அனுமதிக்க மறுத்தவோர்
தனித்த இரவதனில்
எப்படியும் நெஞ்சு வெடித்து
என்றென்றைக்குமாக இறந்துபோவேன்
யாரும் எதிர்பாரா பிரளயமொன்றிற்கு வித்திட்டபடி...

03.12.2006

Tuesday, October 31, 2006

பட்டாம்பூச்சி நெய்யும் கனவுகள்:

-ஒற்றைப் புனைவும் ஒரு சில புதிர்களும்-

மாமரத்துக் குயில்கள்
மழைக்காலத்தைச் சபிப்பதில்லை;
மரமேறத் தெரிந்தவன்
உயரங்கள் குறித்து அலட்டுவதில்லை;
கரைந்தொழுகிய காலங்கள்
மீண்டோடி வருகையில்
அள்ளிப்பருக ஒரு கை
பிரக்ஞைகளேதுமின்றி
மார்புக் குவட்டில்
முளைவிடத் தொடங்கும்
இன்றே..
இப்போதே..

01. கிளைவிரிக்கும் ஆன்மாவும் கருவறுக்கும் புனைவும்

என்றோவோர் காலத்தில், ஏழேழு கடல்களுக்கும் ஈரேழு கண்டங்களுக்கும் அப்பாலுள்ள தனித்ததோர் தேசத்தில்.. சித்தனையும், மலைநாகத்தையும் புணர்ந்து களித்த மலைமுகடொன்று நீலநிற உதடுகளுடன் குழந்தையொன்றைப் பிரசவித்ததாம்... என்றவாறாகத்தான் ஆரம்பிக்கின்றன, கதைசொல்லிகளைப் பற்றியதான கதைகளும்.., ஏன் அவர்களது மரணமுங்கூட. தலைகொய்து உரலிலிட்டு உலக்கை கொண்டு இடித்தும் சிதறிய ஒவ்வொரு பருக்கையிலிருந்தும் புதியதொரு கதைசொல்லி முளைவிட, இரு பனைமரங்களுக்கிடையே கால்களை அகலவிரித்தபடி தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்ட நிலையில், மரங்கள் இருவேறு திசைகளில் தறிக்கப்பட.., யோனி பிளவுற்று உயிர்மூலம் சிதைந்துதான் அவர்களது மரணமும் சம்பவித்ததாம். இடைக்காலத்துச் சூனியக்காரிகளைப் போலவே அக்காலத்துக் கதைசொல்லிகளும் பெண்களாக மட்டுமேயிருந்தனரென்பதையும் விரும்பியோ விரும்பாமலோ என்னைப்போலவே நீங்களும் நம்பித்தானாக வேண்டும்.

இவ்வாறாக, கதைசொல்லிகள் மரணங்களைப் பற்றிப் பேச விரும்பாமையின் மர்மம் உங்களுக்கும் புரிந்திருக்கக்கூடும். தவிரவும், அவர்கள் கூறுவதன்படி மரணங்களுக்கு அழத்தெரியாதென்பதையும் உங்கள் புரிதல்களோடு இணைத்தபடி சரத்துளிகளாய் கதைகளை உள்வாங்கிக்கொள்கின்ற போதுதான் கதைகளும் உங்களை நேசிக்க ஆரம்பிக்கின்றன. மேகங்களினிடுக்கில் சொருகிவிட்டுவந்த ஈரலிப்பை அணிந்துகொள்ள முன்வருமொருநாளில் மரணங்களும் மஞ்சள் நதியாய் மாறி உங்கள் பாலைவனங்களில் நீர்த்தடம் பதித்துச் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நானுமொரு கதைசொல்லியைச் சந்தித்தேன், இன்றைக்குச் சில்லாயிரமாண்டுகளுக்கு முன்பு. இதோ நீ நின்றுகொண்டிருக்குமிடத்தில்.., உன் நிழல் படரும் பரப்பில்.., மூன்றுகோடியே முப்பத்துமூன்று லட்சத்து முப்பத்து மூவாயிரத்து முன்னூற்று முப்பத்து மூன்று தசம் மூன்று மூன்று வருடங்களுக்கு முன்னர் எங்கிருந்தோ ஒரு விதை வந்து வீழ்ந்ததாம். அது அப்போதைக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதென்பது தெரியவந்ததால் மூன்று நாட்களுக்குள் அதனைப் புதைத்துவிடல் நலமென அவர்கள் முடிவுசெய்து முடிக்க மூன்று நிமிடங்களாயின. புதைத்த மூன்றே கணங்களில் முளைவிட்ட அவ்விதையிலிருந்துதான் தான் தோன்றியதாக அக்கதைசொல்லி கூறிமுடித்தபோது என் ஆளுமை மூன்றாகப் பிளவுபட்டுப் போயிருந்தது.

அதைவிடுத்துப் பார்த்தாலும், கதைசொல்லிகளைக் கதைசொல்லும்படி எவரும் வற்புறுத்திவிட முடியாது. பாற்சந்தியில் எதிர்ப்பட்ட இரு கடவுளருக்கிடையேயான மோதலில் பிரபஞ்சவெளி வெடித்துச் சிதறி, இன்மையும் இல்லாமையும் எங்கும் நிறைந்திருக்கின்றபோது, ஒரு கதை அவர்களது கனவிலிருந்து தன்னை நிகழ்த்திக்கொள்ளத் தொடங்கும். எனது கணிப்பின்படி, எமக்கிடையிலான சந்திப்பு நிகழ்ந்து மூன்று நாழிகைகளுள் கோடானுகோடிகாலச் சரித்திரங்கொண்ட ஆதியன்னையொருத்தி கனவுகளைக் கீறிப்பிளந்து வெளியேறி புள்ளியிலிருந்து அல்லது நேர்கோட்டிலிருந்து தன்னை நிகழ்த்திக்கொள்ள ஆயத்தமானாள்.

நிழல்கள் உருவங்களை விழுங்கத் தொடங்கியவக்கணத்தில் என் பட்டாம்பூச்சிகள் மயிர்க்கொட்டிகளாக மாறின.


02. அதிகாரத்தின் நிறமும் அழகு / அவலட்சணங்களின் பின்னணியும்

'...கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்ட பழங்காலப் பெண்களில் பலரும் அவர்களது கணவர்களைக் கொண்டோ அல்லது வேறு ஆண் உறவினரைக் கொண்டோ அடையாளப்படுத்தப்படவில்லை. பெண்கள் வேறு தனிநபர் அடையாளங்களுடன் அடிக்கடிகுறிப்பிடப்படுவதால், தந்தையர், கணவர்கள், மகன்கள் ஆகியோரைச் சார்ந்து மட்டுமே சமூக அடையாளங்கள் வரையறுக்கப்படவில்லை என்பது தெரிகிறது. கல்வெட்டில் பெயர் குறிப்பிடப்பட்ட பெண்களில் பெரும்பாலானவர்கள் சொத்துடையவர்களாகவும், சொத்தின்மீது கட்டுப்பாடு செலுத்தியவர்களாகவுமே விவரிக்கப்படுகிறார்கள். பல பெண்கள் நிலவுடைமை பெற்றிருந்தவர்களாகவும் விவரிக்கப்படுகிறார்கள். பெயர் குறிப்பிடப்பட்டவர்களில் பாதிப்பேர் கொடையளித்தவர்களாகவோ, அல்லது கல்வெட்டின் மையமான நபராகவோ இருப்பது, அவர்களது தற்சார்புத் தன்மையையும், அதிகாரத்தையும் தெளிவாக அடையாளங் காட்டுகிறது.'
(தமிழகக் கல்வெட்டுக்களில் பெண்கள் - லெஸ்லி சி.ஓர்)


b

day break II

நீ ஏன் எப்போதும் ஏதாவதொன்று இன்னொன்றாக மாறுவதைப் பற்றியே பேசுகிறாயென உங்களில் எவராவது வினவக்கூடும். மாற்றங்கள் மட்டுமே நிரந்தரமென்றாகிவிட்ட உலகில் வேறெதைப்பற்றியும் பேசமுடியாத என் இயலாமை.., 'இருப்பது இல்லாததாகாது; இல்லாதது இருப்பதாகாது' எனும் தத்துவ விசாரங்களை மட்டுமே சார்ந்திருப்பதுகூட ஒருவகையில் எனது இயலாமையென்றேதான் கூறவேண்டும். எந்தவொன்றன் அந்தமும் இன்னொன்றன் ஆதியாகின்றது. நீ இறப்பாயானால் அக்னியுடன் சங்கமித்து சாம்பலாகி மண்ணுடன், காற்றுடன், கடலுடன் கலக்கிறாய்.. அங்கே நீ அழியவில்லை; உனது வாழ்வு அத்துடன் முடிந்துவிடவில்லை. மண்ணாய், காற்றாய், கடலாய் நீ தொடர்ந்தும் உயிர்த்திருக்கிறாய்.., இதோ இப்போதிருக்கும் நீயாகவல்லவெனினுமேகூட.

அப்போதெல்லாம்.., பட்டாம்பூச்சிகள் கன்னங்கரேலென இருந்தனவாம்; காக்கைகள் வெள்ளை வெளேரெனவும். அழகு, அழகின்மை பற்றிய கற்பிதங்கள் ஏதோவொரு மூதாதைக் காகத்தின் மூளையில் மின்னலிட சரேலென்று கழன்றது கருமை, பட்டாம்பூச்சிகளிடமிருந்தும்.. என எழுதிட விருப்பம்தானெனினும் யதார்த்தம் நிச்சயமாக எதிர்மாறானதுதானாக்கும். கறுப்பு - அவலட்சணம், வண்ணமயம் - அழகு ஆகிய கருத்தாக்கங்கள் வலுப்பெற்று வரத்தொடங்க, காகங்கள் மிகவும் பெருந்தன்மையுடன் வலிந்து, கருமையைத் தமக்கென ஏற்றுக்கொண்டனவாயிருக்க வேண்டும். சிறகுகளில் வண்ணத் தீற்றல்களைக் கண்டதன் பின்பு அவற்றைப் பேணிப்பாதுகாப்பதிலேயே பட்டாம்பூச்சிகளின் பொழுதெல்லாம் கரையலாயிற்று.

பிறகெப்படி கவலைப்பட, இல்லவே இல்லையென்றாகிவிட்ட கருமைகள் குறித்து..

03. பிரதிமைகளை விழுங்கிய பிம்பங்களும் புளித்துப் போன பிரலாபங்களும்

'மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, இலங்கையில் பாலியல் வன்புணர்தலுக்காளான பெண்ணொருத்தியின் அதிகுறைந்த வயது 6 மாதங்கள்; அதிகூடிய வயது 85 வருடங்களாம்..'

இப்போதெல்லாம் யாரைக் கேட்டாலும், "பட்டாம்பூச்சிகளா.. ஓ.. பிடிக்குமே" என்கிறார்கள். சிலர் ஒருபடி மேலே சென்று, பட்டாம்பூச்சிகளை யாருக்குத்தான் பிடிக்காதென என்னையே எதிர்க்கேள்வி கேட்கிறார்கள். அன்றாடங்களின் நகர்வில்.., அலமலந்த தேடல்களில்.. பிடிக்கும்.. பிடிக்குமென்பவர்களை மட்டுமே காண்கிறேன் அல்லது அவர்கள் மட்டுமே எனக்கு எதிர்ப்படுகிறார்கள்.

அப்படி என்னதான் பிடித்திருக்கிறது..? வர்ணச் சிதறல்கள், படபடக்கும் சிறகுகள், அழகு, மென்மை... நீண்டுகொண்டே போகின்றன, மறுமொழிகள். பட்டாம்பூச்சிகள் ஒருகாலத்தில் மயிர்கொட்டிகளாகவிருந்தனவென்பது யாருக்காவது நினைவிருக்குமா..? அப்போது பிடித்திருந்ததா உங்களுக்கு அவற்றை..? அவற்றின் இரத்தத்தின் நிறம் யாருக்குத் தெரியும்.. அதில் ஈரலிப்பிருமென்பதையாவது ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கிறதா உங்களிடம்.. அவற்றின் உணர்கொம்புகளை நேசிக்கமுடியுமா உங்களால்.. அவற்றின் மயிர்களைக் கண்டு அருவருப்படைகிறீர்கள்.. தூர விலகியோடுகிறீர்கள்.. உதிர்ந்த மயிர்கள் பற்றிய கரிசனை எள்ளளவுமிருக்குமா உங்களுக்கு.. மயிர்க்கொட்டிகள் இல்லையேல் பட்டாம்பூச்சிகளும் இல்லையென்பது உறுதியாகத் தெரிந்திருந்தும் இன்னுமேன் அவற்றை அழிக்கப் பாடுபடுகிறோம்?

மயிர்க்கொட்டிகளுக்குக் கேள்வி கேட்கத் தெரியாதென நினைக்காதீர்கள் அற்பர்களே.. அவற்றின் நீல உதடுகள் அகலப்பிளவுறுமோர் நாளில் உங்கள் வானங்கள் வெளிறிப்போய்விடக்கூடும்.


04. கனவுலக இருண்மைகளும் கற்காலத்துக் கரைமீறல்களும்

கண்மூடித் திறப்பதற்குள் சிறகுதிர்த்துப் பறந்து மறையும் பெயரறியா வண்ணப் பறவையொன்றன் நினைவில் அடிமனம் அலைவுற.., ஆதியன்னை விழித்தெழுந்தாள். அவளது கணப்பொழுது கண்ணயர்வில் தலைகீழாகிவிட்டிருந்தது, அவள் படைத்திருந்த உலகம். உருகி உருகி அவள் தன் மேனி தொட்டு வண்ணம் பூசியிருந்த கருநிறப் பட்டாம்பூச்சிகள் நிறக்குவியல்களுடன் அல்லாடுவதையும், வெண்காகங்கள் கருநிறங்கொண்டு கூவிப் பிதற்றலுற்றுத் திரிவதையும் கண்ணுற்று, உள்ளம் வெம்பினாள்: உலகம் அதிர்ந்து நிலம் நடுங்கியது. உயிர் கசிந்து விழிநீர் பெருக்கினாள்: ஆழி பொங்கி கண்டங்களைச் சூழ்ந்தது. முடிவுக்கு வந்தவளாய் தேறுதலுற்று பெருமூச்செறிந்தாள்: புயல்வீசி மலைகளும் சுருண்டன.

இன்றைய கணத்தில், அவள் உயிர்ப்பித்த பூவுலகில் அவளுக்கென எஞ்சியிருந்ததென்னமோ கூந்தலிடை சிக்கிக்கொண்ட மென்சிறகிலிருந்து துளிர்த்த கனவுகள் மட்டும்தான். காகங்கள் கெக்கலித்துக் கொண்டாலும், இன்னமும் ஆதியன்னையின் கனவுகளெங்கும் மயிர்க்கொட்டிகள் சுருள்சுருளாய் ஊர்ந்து திரிவது உங்களில் எத்தனைபேருக்குத் தெரியும்..?

இன்றில்லையெனினும்.. என்றேனுமொருநாள் அண்டம் முழுவதற்குமாய் விரியும் அவள் யோனி.., பிதுக்கித் தள்ளும் இளவரசர்களை.. அன்று இருளும் கருமை களைந்து வேறு நிறம் போர்த்தும். இளவரசர்கள் மயிர்க்கொட்டிகளை முத்தமிட்டு உயிர்ப்பிக்குமந்நாளில் அவள் உலகம் பட்டாம்பூச்சிகளால் நிறையும்.

Friday, October 27, 2006

*எனக்குள் பெய்யும் மழை...


என்னிடம்
ஒரு துண்டுப் பிரசுரத்தைப் போல
நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க
வார்த்தைகள் இல்லை

இரவு
இரவினால் அதிகாரமிடப்பட்ட பகல்
நாளைக் காலையில்
சூரியன் உதிக்குமா என்பதில் கூட
சந்தேகம் கொண்டுள்ள என்னிடம்
கனவுகள்
தம் அர்த்தத்தை இழந்தவைதான்

இந்தச் சமூகத்தின் தொப்புள் கொடிக்கு
துப்பாக்கி நீட்டப்படும்போது
ஒரு மெல்லிய பூ நுனியில்
உட்காரக் கூடிய
வண்ணத்துப் பூச்சியின் கனது
எனக்கு சம்பந்தமற்ற
ஒரு சம்பவிப்பு மட்டுமே

நான் மனிதனாய் வாழும் முயற்சியில்
பூக்களை மரத்துடன் விட்டுவிட விரும்புகிறேன்
எனக்கு
பகலாய் உருவமைக்கப்பட்ட அழகிய இரவு
கனவாய் உள்ளது
- சிவரமணி


இலங்கையின் அரசியல் யாப்புக்களுக்குள் ஆழ்ந்து போயிருந்தேன். இன்றைக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னைய காலப்பகுதி நினைவினை ஆக்கிரமித்திருந்தது. புராதன நிலமானியச் சமூகவமைப்பு, ஐரோப்பியரின் வருகை, நாட்டின் சமூக பொருளாதார அரசியல் மாற்றங்கள், அந்நிய ஆக்கிரமிப்பின் உச்சகட்டமாக ஆங்கிலேயரின் வருகையும் கண்டி இராசதானியைக் கைப்பற்றுதலும், ஒரு சில வருடங்களுக்குள் சமூகவமைப்பே தலைகீழாகப் புரண்டமை அனைத்தும் மனத்திரையில் படமென விரிந்துகொண்டிருக்க, சட்டென்று கவனத்தைத் திசைதிருப்பியது எங்கிருந்தோ வந்து விழுந்த மழைத்துளியொன்று.

இப்போதெல்லாம் சில்லிடச் செய்யும் துளிகள் எதை நினைவுபடுத்துமென்பது சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லையே.. என்னவனின் இதழ் கசிவு.. புன்னகைத்துக்கொண்டே நிமிர்ந்தேன். மறுபடியும் கொட்டும் மழைக்குக் கூரை ஒழுகத் தொடங்கிவிட்டிருந்தது. பழங்காலத்து வீடில்லையா.. பாவம், அதுவும் எத்தனைகாலத்துக்குத்தான் நின்றுபிடிக்கும். கூரையிலிருந்து வழிந்து யன்னலில் விழுந்து தெறித்த துளிகளிலொன்றுதான் என் கவனத்தையும் சிதறடித்திருக்கிறது. சொட்டுச் சொட்டாய் மழைத்துளிகள் சந்தம் தவறாமல் விழுவதையும், தெறித்து பல்லாயிரம் முத்துத் துகள்களாய்ச் சிதறுவதையும் இடைக்கிடை சில என் கன்னங்களை வருடிச் செல்வதையும் இரசித்துக் கொண்டிருந்தேன்.

இப்படி எவ்வளவு நேரம் கழிந்ததோ நினைவில்லை.. சில கணங்களாக இருக்கக்கூடும் மற்றவர்களின் பார்வையில். எனக்கோ நினைவினடுக்குகளில் தொலைந்த யுகயுகாந்தரங்கள்தான். திடுக்கிட்டு விழிப்புநிலைக்குத் திரும்பியபோது மழைத்துளிகள் எனது அரசறிவியல் புத்தகத்தில் தாரை தாரையாகக் கோலமிட்டிருந்தன. பதறிப்போய் புத்தகத்தை எடுத்து மார்போடு அணைத்துத் துடைத்துக் கொண்டாலும், சில்மிஷம் செய்துவிட்டுப்போன துளிகளைக் கடிந்துகொள்ள முடியவில்லை. புத்தகங்களையும், படிப்பையும் எந்தளவுக்கு நேசிக்கிறேனோ அதையும்விட ஒருபடி அதிகமாய் மழையை நேசிக்கிறேனாக்கும்.

வானம் கவிழ்ந்து சரம் சரமாய் பூமியை நோக்கி கீழிறங்கிக் கொண்டிருந்தது. நடுச்சாமத்தில் தொடங்கிய மழைதான்.. விடிந்தும் கதிரவனைக் காணவில்லை.. அவனுக்கென்ன கவலை.. இருண்டபடிதான் காலையும் விடிந்தது.. இப்போது பகலாயிற்று.. இன்னமும் விட்டபாடில்லை, வானமும் தெளிந்தபாடில்லை. பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். தோளில் கனத்த புத்தகங்கள் தவிர, கையில் இன்னும் சில.. பற்றாக்குறைக்கு மறுகையில் குடை வேறு. மெல்லிய கூதல் காற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கையிலிருந்த புத்தகங்களை மார்போடு அணைத்தபடி கதகதப்புத் தேடிக்கொண்டு மழையை இரசித்தும் அனுபவித்தும் கொண்டு தனிவழி தொடர்ந்ததென் பயணம். மனம் மட்டும் நழுவி கடந்தகாலங்களை நோக்கி தாவிக்கொண்டிருந்தது.

இன்றைக்குச் சில மாதங்களுக்கு முன், இதேபோன்றதோர் மழைநாளில்தான் நானும் அவளும் காலாற நடந்து திரிந்தோம். மழை வலுக்க, வீட்டுக்குப் போகலாமென்ற என் வேண்டுகோளையும் அலட்சியப்படுத்திவிட்டு, 'உன்னுடன் இருக்கவேண்டும் போலிருக்கிறது..' என்றபடி கைகோர்த்துக்கொண்டு என்னை நடப்பாட்டிச் சென்றாள். மழைநீரில் தெருவெல்லாம் நிரம்பி முழங்காலளவு வெள்ளம்.. முன்னெச்சரிக்கையாய் தக்க ஆடையணிந்திருந்ததால் தப்பித்தோம். எதிரில் வருபவரின் முகம் கூடத் தெரியாதளவு தடித்த திரையாய் கவிந்திருந்தது மழை. தெருக்களில் மனித நடமாட்டத்தைக் காணவே காணோம்.. வாகனங்கள் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாய்.. வாய்க்கால்கள், குழிகள் குறித்த பயம் தெருவோரமாக நடக்கவிடவில்லை. கொழும்புத் தெருக்களைப்பற்றிச் சொல்லவேண்டியதில்லைதானே. நடுத்தெருவில் ராசகுமாரிகள் போல நடந்துகொண்டிருந்தோம், வேடிக்கைப் பேச்சுக்களில் எமைத் தொலைத்தபடி. கையில் குடையிருந்தென்ன.. பேய்மழைக்கு உச்சந்தலை தவிர மிச்சமெல்லாம் நனைந்தாயிற்று. மணிக்கணக்காய் கதைபேசித்திரிந்த காலங்கள்... இன்று, அதே மழை.. அதே தெருக்கள்.. நான் மட்டும் தனியளாய். கனத்துப் போனது மனம், கருக்கட்டிய மேகம்போல.

ம்ம்ம்... மறுபடியும் சுயவுணர்வு பெற்றுத் திரும்பி, ஒழுகும் இடங்களைக் கண்டுபிடித்து மழைத்துளிகளை ஏந்த பாத்திரங்களை வைக்கிறேன். மழையென்றால் காணும்.. வீட்டில் கிடக்கும் பழைய வாளிகளுக்கும், பண்டம் பாத்திரங்களுக்கும் வேலை வந்துவிடும். இந்த வீடு பரவாயில்லை.. ஆறுவயதுவரை வாழ்ந்த பழைய வீட்டின் நினைவு வந்தது. மிகவும் சிரமப்பட்டிருந்த காலங்கள் அவை...

அந்தவீடு தெரு மட்டத்திலிருந்து சில அடிகள் தாழ்வாக அமைந்திருந்ததால் கொஞ்சம் மழையென்றாலும் தண்ணீர் வீட்டுக்குள் புகுந்து நிறைந்துவிடும். கடும் மழையென்றால் வீட்டுக்குள் வெள்ளம்தான். அப்பா என்னையும், தம்பியையும் கட்டிலில் ஏற்றிவிடுவார். பாடசாலைக்கும் போகாமல் அக்காவினதும், அப்பாவினதும் தலையாய கடமை தொடங்கும். தண்ணீரை வாளியில் அள்ளி வெளியே ஊற்றுவது. மழைநாட்களென்றால் அப்பாவின் மாணவியருக்குக் கொண்டாட்டம்தானாம் அப்போதெல்லாம். அவர்தான் பாடசாலைக்கு வர மாட்டாரே.. எனக்கும் அதெல்லாம் வேடிக்கைதான். சமயங்களில் அக்காவோடு போட்டிக்கு தண்ணீர் அள்ளி ஊற்றுவேன். யார் வேக வேகமாக ஊற்றுவதென்று பந்தயமே நடக்கும். காலில் சிரங்கு வந்துவிடுமென்று பேசுவாள் அம்மா.. அதையெல்லாம் யார் கணக்கெடுத்தார்.. புது வீடு தேடியலைந்தபோது வெள்ளம் நுழையாத மேட்டுநிலம்தான் வேண்டுமென பிடிவாதமாய் நின்றாராம் அப்பா.. அதேபோலவே இந்த வீடு வாய்த்தது.

இன்றும், தெருவில் முழங்காலளவு வெள்ளத்தில் அடியெடுத்து அடியெடுத்து நடப்பதென்றால் கொள்ளைப் பிரியம்.., பள்ளங்கள் குழிகள் பற்றிய பயமிருந்தாலுமேகூட. ஊரிலுள்ள கஞ்சல், குப்பையெல்லாம் காலடியில் வந்து சிக்கிக்கொள்ளுமென்றாலும் அதிலுமொரு தனிசுகமிருக்கிறதுதானே.. சமயங்களில் வேகமாகக் கடக்கும் வாகனமொன்று நீரை வாரியிறைத்து ஆடைகளை நனைத்துப் போகும்.. ஆனாலும், ஒருபோதும் கோபம் வந்ததில்லை. சிலவேளை மன்னிப்புக் கேட்கும் பாவனையில் வாகனத்திலிருந்து ஒரு மனிதர் எட்டிப்பார்த்தாலும், 'இதெல்லாம் ஒன்றுமேயில்லை..' என தலையசைத்துப் புன்னகைத்து அவரை வழியனுப்புகையில் மறுபடியுமொருமுறை குழந்தையாகி விடுகிறேன்.

மழைக்காலங்கள் ரம்மியமானவைதான்.., நீயும் அருகிலிருந்தால்...


(*தலைப்பு நன்றி: யமுனா ராஜேந்திரன்)

Tuesday, October 24, 2006

பசுமையாம்.., பாரிப்பாம்.. கருகிடட்டும் கனவுகள்..!


01.

இப்போதெல்லாம்.. சிலநாட்களாகவே என் கனவுகளில் வளைய வருகிறாள், ஒருத்தி. வெளிர் இரவுகளில் நீலம் பாரித்த புன்னகையுடன் கருநிலவாய் தினந்தோறும் தோன்றி வளர்ந்து தேய்ந்து பின் மறைகிறாள்.., புரியாத மொழியில் கதறும் அவள் குரலின் ஒவ்வொரு பிசிறலும் ஊசியாய்த் துளைக்க... காதுமடல்கள் நீள நீளமாய் வளர்ந்து செவிப்பறையை இறுகவடைத்துவிட வேண்டுமென்ற எனது வேண்டுதல்களையும் புறக்கணித்தபடி.

ஏன் வருகிறாள், எதற்காக அலறுகிறாள், என்னிடமிருந்து என்னத்தை எதிர்பார்க்கிறாள்..? பதில் வேண்டின், காலவடுக்குகளின் ஏதோவோர் ஆழத்தில் புதையுண்டுபோன படிமங்களை மறுபடியும் கிளறியெடுக்க வேண்டியிருக்கும்.., சிதழூறும் ரணங்களைச் சீண்டுவதைப்போல கணநேர இன்பம் வேண்டி காலாகாலத்திற்குமான வேதனையை மறுபடியும் உயிர்ப்பிக்க வேண்டியிருக்கும்.. சாம்பல் பூத்த நினைவுகளையும் கூடத்தான்.

இன்னமும், விழிகளை நிறைத்திருப்பதெல்லாம்.. திரையிடப்பட்ட முகமும், நீண்ட கறுப்பு உடையும், கையிலேந்திய அவளது பால்மணம் மாறா பச்சிளங்குழந்தையும்தான். ஆற்றங்கரையோரக் குடியேற்றமொன்று... சிந்துவெளி, ஹரப்பா.. தைகிரீஸ் - யூப்ரடீஸ்.. ஏன் மாயா அல்லது பெயர் குறிப்பிட முன்னரே வரலாற்றோட்டங்கள் புறக்கணித்துவிட்ட ஆபிரிக்க நாகரிகச் சமுதாயமென்றுகூட எடுத்துக்கொள்ளலாம்.. அதது அவரவர் விருப்பம்.. என்னைப் பொறுத்தவரை அதுவொரு வெறும் ஆற்றங்கரையோரத்துக் குடியேற்றம் மட்டும்தான். நேரம் நடுச்சாமத்தை எட்டிக்கொண்டிருப்பது சாமக்கோழியின் கேவலின் வழி புரிந்தாலும், இப்போதுதான் மேளங்களினதும், முரசினதும் ஒலி துரித லயத்தினை அண்மித்திருந்தது. கிராமியச் சடங்கோ அல்லது ஏதேனுமொரு விழாவோ அங்கே இடம்பெற்றுக் கொண்டிருப்பதற்கு அறிகுறியாக கொம்பு வாத்தியமொன்று உச்சஸ்தாயியில் முழங்கும் ஓசை காதைப் பிளக்க.., பாரம்பரிய நடனத்தின் உச்சகட்டத்தில் இளம்பெண்களும், ஆண்களும் தமை மறந்து தீப்பந்தங்களின் மந்தகாச வெளிச்சத்துடன் சுடரின் அசைவுக்கேற்ப சந்தம் பிசகாமல் ஆடிக்கொண்டிருந்தனர். ஏனோவொரு போதை கலந்த மயக்கத்தின் ஆழத்தில் கிராமமே கட்டுண்டிருக்க.. ஒருத்தி மட்டும் கருநிழலென அவ்விடத்திலிருந்து நழுவுகிறாள், தனது என்றென்றைக்குமான விழிப்புணர்வினைத் தக்கவைத்தபடி.

ஆற்றங்கரையில் நின்றிருந்த தனித்த படகிலேறி சலனங்களற்ற நீரோட்டத்தின் பாதையில் அவளும், அவளைச் சுமந்த படகும் நகரத் தொடங்க.. கையிலேந்திய குழந்தையுடனான அப்பிம்பம் எந்தன் ஆதியன்னையை நினைவுறுத்திப் போனது.. குழந்தை இயேசுவுடனான அன்னை மரியாளையும்.., சமயங்களில் தாரகாசுரனை வதம்செய்த காளியையும். வாத்தியங்களின் ஓசை தொலைதூரத்தில் மங்கிக்கொண்டிருக்க, அடுத்து வந்த சில மணித்துளிகளின் மீது கவிந்துகொண்டது நடுச்சாமத்தின் கனத்த மௌனம்.

ஆற்றுத் தீவொன்றில் கரையொதுங்கியது படகு, அவளைக் கேளாமலேயே. தாவியிறங்கியவள் குழந்தையுடன் நீரினுள் அடியெடுத்து நடக்கத் தொடங்குகிறாள். தூக்கம் கலைந்தெழுந்து குழந்தை அழுதுவிடக் கூடாதேயென்ற கவலை அவள் முகத்தில் அப்பியிருந்தமை திரைகளைத் தாண்டியும் எப்படி எனக்குத் தெரிந்ததென்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். எதிர்ப்பட்டபோது அவளது தோளில் அமர்ந்திருந்த பட்டாம்பூச்சியொன்றை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. முகத்திரை விலக்கி நீலம் பாரித்த புன்னகை எனை வந்து தீண்டியபோது, "அம்மா.." என்றலறி அவள் காலடியில் விழுந்தேன். அள்ளியணைக்க கைநீட்டுகையில், பட்டாம்பூச்சிக் குவியலென மாறி திசைக்கொன்றாய் அவள் பறந்துவிட்டிருந்தாள்.. குழந்தை மட்டும் கொட்டக் கொட்ட விழித்தபடி என் கால்களைக் கட்டிக்கொண்டது.

ஒரு பெருங்கடமை... யுகயுகாந்தரங்களாய் என் தலையில் அப்படித்தான் சுமத்தப்பட்டது.


02.

அத்துடன் எல்லாமும் முடிந்து விடவில்லை. பின்னரும் சில பொழுதுகளில் அவள் அடிக்கடி வருவாள், என் கடமையை நினைவுறுத்திப் போகவோ என்னவோ. ஏ.கே 47 ரக துப்பாக்கியுடனும், சமயங்களில் டி. 56 உடனும்.. சாதாரண பிஸ்டலுடனும் கூட. கறுத்த பெட்டியொன்றைக்கொண்டு வந்து ஒப்படைப்பாள்.. இதைப் பாதுகாப்பது உன் பொறுப்பென. அதைப் பாதுகாப்பதற்கேயாயினும் நானென் உயிரைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டியிருக்கும், பிரியத்திற்குரியவர்களை அல்லது அப்படிக் காட்டிக் கொள்பவர்களை / பாசாங்கு செய்பவர்களைக் கொன்றேனும் நானென் கடமையை நிறைவேற்றியேயாக வேண்டியிருக்கும்.

ஓரிரவில், சில வக்கிர மனிதர்களின் பிடியிலகப்பட்டு சிதைக்கப்பட்டுக் கொண்டிருந்த என் முகத்தில் அவளது சாயலைக் கண்டேன். ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி புணர்ந்துவிட்டு எனை அவர்கள் தூக்கியெறிந்த போதும், வீறாப்புடன் மறுபடி நிமிர்ந்தெழுந்து என் வழி தொடர்கையில்.. தடுமாறி விழப்போனவளின் இடையைச் சுற்றி இறுகவணைத்து தன் தோள் மீது என் தலைசாய்த்துக்கொள்ளச் செய்தவனில் அவளது படைப்பின் இறுமாப்புக்களைக் கண்டேன். அந்தக் கணத்தில் அவனது அணைப்பும், அருகாமையும் எனக்கு வேண்டியிருந்தது. அவளொருபோதும் எனைக் கைவிடுவதில்லையென்ற நம்பிக்கையும் எனக்குத் தேவைப்பட்டிருந்தது.

பிறிதொரு நாள், பாடசாலைப் புளியமரத்து நிழலின் கீழ் சிமெந்துக்கட்டில் நான் உட்கார்ந்திருந்தபோது வைத்தியம் பார்ப்பதற்கென வந்த பூசாரி வாகாய் உடலில் அத்துமீற விழைகையில் கைகொடுக்க ஏன் வராமல் போனாளென்பது இன்னமும் புரிந்தபாடில்லை. கதறித்துடித்தபடி விழித்தெழுந்து அருகில் படுத்திருந்த சகோதரியின் முதுகில் முகம்புதைத்து பிரமைகளிலிருந்து விடுபட முயன்றபோதும் அவள் ஆறுதல் கூறவில்லை. அன்றைக்குக் குளியலறைக் கதவு திறந்து என் நிர்வாணங்களைப் போர்த்திக் கொண்டவனைத் தண்டித்திருப்பாளென்றும் எனக்குத் தோன்றவில்லை.

இருந்தும், என் கடமைகளின் மீது மட்டும் கரிசனை அதிகம் கொள்கிறாயடி பெண்ணே..


03.

இப்படியே அவளும், அவள் குறித்த / அவள் சார்ந்த கனவுகளும் அலைக்கழித்துக் கொண்டிருக்க ப்ராய்டின் கனவுகள் பற்றிய கருத்தாக்கங்களைத் தேடி வாசிக்கத் தொடங்கினேன். பால்யகாலத்தில் அடக்கிவைக்கப்பட்ட உணர்வுகளும், ஆசைகளும்தான் கனவுகளாக வெளிப்படுகின்றனவாம். அதுவே பிற்காலங்களில் மனப்பிறழ்வுகளாகவும் உருமாறுவதுண்டு. எது எவ்வாறிருப்பினும், நானுமொரு சிறுமியாகவிருந்தபோது எவனாலும் வன்புணரப்பட வேண்டுமென்ற உள்ளார்ந்த ஆசை நிரம்பியிருந்ததா என் மனதுள்ளும்..

கனவுகளோ அல்லது நனவுநிலைக் காட்சியசைவுகளோ... கதறக் கதற வதம் செய்யப்பட்டமை நினைவிலுண்டு. உண்மையைக் கூறுவதாயின் அதுவே எனது பெரு விருப்பாயுமிருந்திருக்கலாம்.., உறவுகளின் போலி வேடங்களைக் களைந்தெறிவதற்கான.. இன்னமும் தெளிவுற்றால், மனிதர்களது நிஜ முகத்தினைக் கண்டடவதற்கான எனது மனங்கொள்ளா ஆசையிலிருந்து அது முளைவிட்டதாகவுமிருக்கலாம்.

பாலியல் வல்லுறவுக்குள்ளாகி, குதறப்பட்ட முலைகளுடனும் கிழிந்த உதடுகளுடனும் தொடைகளில் இரத்தம் வழிந்தோட.. பெற்றோர் முன் போய் நின்றால் அவர்கள் என்ன நினைப்பார்களாயிருக்கும்.. ஓவென்று பெருங்குரலெடுத்து அழுவாளோ அம்மா..? அக்கா என்ன சொல்வாள்.. நீயொரு அப்பட்டமான sadist.. போய்க் குளிச்சுட்டு வாடி.. என்பாளாயிருக்கும். என்னவன்...??? தோழியொருத்தியின் துணைவனைப் போல.., நான் நேசித்தது உன் மனதைத்தான்.. உடலையல்லவென தமிழ்த்திரைப்பட வசனங்களை எடுத்து வீசிவிட்டு (உண்மையில் அச்சம்பவத்தினூடான அவளது களங்கங்களை - அவர்கள் கூறுவதன்படி - முற்றுமுழுதாக ஏற்பதன் அடையாளமிது).. பிறிதொரு பொழுதில் வாக்குவாதம் முற்றிப்போக, "நீயென்ன பத்தினியா.." என்று எதிர்க்கேள்வி கேட்பானோ... இல்லையில்லை.., உன்னுடலில் எந்தக் களங்கமுமில்லையென்றபடி என்னை நெஞ்சில் தாங்கிக் கொள்வானாயிருக்கும்.

நிஜங்களை நிந்திப்பதாலும், நியாயப்பாடுகளைப் புறக்கணிப்பதாலும் நிழல்கள் நிதர்சனமாவதில்லை. வேடங்களைந்த முகங்களைத் தரிசிப்பதற்கான தீராத தேட்டம் உள்ளமெங்கும் நிறைந்திருப்பினும் இப்போதைக்குக் கெஞ்சுகிறேன் அவளை.., என்னைக் கைவிட்டுவிடும்படி.. என் கனவுகளினின்றும் காணாமற் போகும்படி.

சில கணங்களேனும், ஆழ்ந்த உறக்கத்தில் கனவுகளற்ற பெருவெளியில் கரைந்திட வேண்டும் நான். எனக்குத் தேவை ஓய்வு. வெறும் ஓய்வு. என்றென்றைக்குமான ஓய்வு. என்னை உறங்க விடுங்கள், தயவுசெய்து.


Sunday, October 15, 2006

இரவின் தடங்கள்

அந்தக் கணத்தின் நிசப்தம்
எதையும் உணர்த்திப் போனதாக
நினைவில்லை
இருட்டும் நானும் மட்டுமேயான தெருக்களில்
மழைச்சரங்களும் சில்லூறுகளும்
என் காலடித்தடங்களுடன்
வழித்துணையாக கூடவே
சலனங்களில்லாப் பொழுதுகளின்
பிரளயங்களைத் தூண்டியபடி

மௌனங்கள் இன்னமும்
மொழிபெயர்க்கப்படா
சாலைகளின் வளைவுகளுள்
ஏதோவொன்றிலிருந்து தோன்றிப் பின்
தொடர்கிறது
கனவுகளைக் கலைத்துப்போகும்
முகமூடி மனிதனைப்போல
இன்னுமொரு காலடியோசை

பாதங்கள் விரிந்து
முதுகுப் பரப்பெங்கும்
நிழலாய்ப் படர்வதை உணர்ந்து
திடுக்கிட்ட மனம் சில்லிட்டுப் போக
பிரபஞ்சத்தை நிறைத்தபடி
கண்ணெதிரே விரிகிறது
முன்னமொரு நாளில்
அணுவணுவாய் உணர்வுகளை
சிதைத்துப் போனவனின் முகம்

மற்றுமொரு மழைக்காலத்தில்
பீதியூட்டும் காலடியோசை
பின்தொடராத் தவிப்பில்
பதறுகின்ற மனத்தோடு
மறுபடியும் நான்

தெருக்கள் மட்டும்
நீண்டு கொண்டே போகும்
என்றென்றைக்குமாய்...

15.10.2006

Thursday, October 05, 2006

சுவர்க்கத்தின் வர்ணமும் பூலோகத்தின் வெளிறலும்


பாதாள ரயில்வண்டி இரு நிலையங்களுக்கிடையே
வெகுநேரம் நின்றுவிடும் சமயத்தில்
சம்பாஷணை எழுகிறது, பின் மெதுவாக மங்கி
மௌனமாய் மாறுகிறது
ஒவ்வொரு முகத்தின் பின்னாலும்
சிந்தனையற்ற வெறுமை ஆழமடைகிறது
சிந்திக்க ஏதும் இல்லை என்ற
வளர்ந்துவரும் பீதி மட்டுமே எஞ்சி நிற்கிறது
- T.S.Eliot (நன்றி:- அழகும் உண்மையும்: மார்க்ஸியப் பார்வை. தமிழாக்கம் - நேத்ரா, எஸ்.வி.ராஜதுரை)


1.

உலகின் எந்த மூலையிலும், இண்டு இடுக்கிலுங் கூட இடமில்லாமற் போனதாய்.. ஒவ்வொரு அணுவாலும் புறக்கணிக்கப்படுவதாய் உணர்ந்த இரு நெஞ்சங்களின் சங்கமிப்போடு தொடர்கிறது, இன்றைய படத்துடனான இரண்டறக் கலத்தல். திரையில் பார்வையற்ற சிறுவனொருவனுக்கு - அவனது குறைபாட்டினைக் காரணங்காட்டி - அவன் வாழவிரும்பிய உலகில் இடம் மறுக்கப்படுகிறது. அன்றாடங்களின் நகர்வில் அமர்ந்து படம்பார்த்துக் கொண்டிருக்கும் என்னைப்போன்ற ஒருத்திக்கோ, பெண்ணாய் அல்லது அவர்கள் கூறுவதன்படி இரண்டாம் தரப் பிரஜையாய் பிறந்துவிட்ட காரணத்தால்.., வயது ஏற ஏற.. வருடங்கள் நகர நகர சிறுவர்களின் உலகில் இடமில்லாமற் போகிறது. அதேவேளை பெரியவர்களின் உலகிலும் - அவர்களது கயமைத்தனங்களை இயல்பாக ஏற்றுக்கொண்டு வாழத்தெரியாததால் - இடம் மறுக்கப்பட்டு விடுகிறது. இனியும் எங்கே போய்த் தேடுவது எனக்கான இடத்தை..? உடல் குறுக்கி மனம் நடுங்கி, உன் மனச்சந்தில் ஒடுங்கிக்கொண்டிருக்கும் இன்றைய பொழுதுகூட நாளை பறிபோய்விடக்கூடுமோ என்னமோ.. யார் கண்டார்? ஒரு கணம் சோர்ந்த பாதங்கள் எங்கேனும் தரித்து நின்றாலும் உடைமையாளர்களின் அலறல் வீரிட்டெழுகிறது. "போ... ஓடிப்போ இங்கிருந்து... இது உனக்கான இடமல்ல". எந்த இடமும் எனக்கானதல்லவென எனக்கும் புரிகிறதுதான். இருந்தும், அதையே சொல்லிக்காட்டி நான் அநாதரவானவளென அடிக்கடி நீங்கள் நினைவுறுத்துகின்ற போது.. தெள்ளிய ஓடைபோல என் இயலாமைகள் உங்கள் வார்த்தைகளினூடு பிரதிபலித்துத் தெறிக்கின்ற போது இன்னுமின்னுமதிகமாக உங்கள் உலகத்தினை அருவருக்க ஆரம்பிக்கிறேன்.

பால்யப் பருவத்து பசும் நினைவுகளுடன் இன்னமும் சிறகடித்துப் பறப்பவர்களைக் கண்ணுறும் போதெல்லாம் சமயங்களில் ஒருவிதப் பொறாமையுணர்வு தலைதூக்கும். நகரங்களால் தூக்கி வளர்க்கப்பட்ட எம் போன்ற குழந்தைகளுக்குக் கடந்தகாலங்களை அசைபோடுகையில் நினைவில் நிற்பதெல்லாம் தூசும் வாகனப் புகைகளும் மறைத்த சில மங்கிப்போன சம்பவக் கோர்வைகள்தான். வறண்டு போன பால்யங்களில் படித்துச் சிலிர்த்த கஸாக்கியக் கிராமங்களையும், ஸ்தெப்பிப் புல்வெளிகளையும், சணல் பூத்த வயல்களையும் பற்றியதான கனவுகள் மட்டும் இன்னமும் எஞ்சியிருந்து இன்றைய பொழுதின் வாழ்தலுக்கு வர்ணங்களேற்றிப் போகும். தனிமையின் சிலிர்ப்பில்.. மனதில் அலைமோதும் மெல்லிசையின் மிதப்பில்.. கால்கள் எனைமீறி நர்த்தனமிட்டுப் பின்னும் போதும்.., மெய்மறந்து கனம் தொலைத்து நீர்ப்பரப்பின்மீது மீன்குஞ்சென மிதந்தலையும் போதும் மூப்படையவோ, சாகவோ மறுத்தபடி லிவ் உல்மனுக்குள்ளும் எனக்குள்ளும் வாழ்ந்திருக்கும் அந்தச் சின்னஞ்சிறு பெண் உயிர்த்தெழுவதை உணர்ந்திருக்கிறேன்.

உங்களது மொழியில்.., உங்களது மதிப்பீடுகளின்படி அழகானவளல்ல நான்.., பிறை நுதற் பாவையல்ல; சேலகட்டிய விழியினளல்ல; கொவ்வைக் குமிண் சிரிப்பழகியல்ல; முதிர் கோம்புக் கொங்கையினளல்ல; அலைந்தாடும் கொடியிடைக் குமரியுமல்ல. நானொரு வெறும் பெண்... உங்கள் கனவுகளில் வளைய வருமொருத்தியின் நளினங்களுடனும், 'பெண்மை' யின் இலக்கணமான மென்மையுடனுமல்லவெனினுமேகூட.., எனதேயெனதான விழுமியங்களுடன் - மலரல்ல, நிலவல்ல, தேவதையுமல்லாத - பெண் மட்டும்தான்.

நானும் காதலிப்பேன் ஒருவனை.., ஒரு குழந்தையின் கதறலைப்போல.. நெக்குருகி நெக்குருகி.. நெஞ்சம் கசிந்து. சமயங்களில் தாயுமாவேன்.., ஒரு சிறுமி தனது விளையாட்டுப் பொம்மைக்குத் தாயாவதைப்போல.. கள்ளமற்று, கபடமற்று.. சற்றும் பிறழ்வுறாமல்.


2.

சமீபத்தில், குறுகிய காலத்திற்குள்ளாகவே சில அருமையான படங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. ஷியாம் பெனகலின் அங்கூர், Frida, இங்க்மர் பெர்க்மனின் Cries and Whispers, கிச்சான் உள்ளிட்ட இன்னும் சில குறும்படங்களென அவ்வரிசை நீளும். ஏன் அவையனைத்தையும் பற்றி எழுத என்னால் முடிவதில்லையென்ற சந்தேகம் எனக்குள்ளேயும் பலமுறை எழுவதுண்டு. உண்மையைக் கூறுவதானால் எழுதுமளவுக்கு அவற்றில் பெரும்பாலான படங்கள் மனதில் எவ்விதச் சலனங்களையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. சிறந்த படங்களனைத்தும் எம்மைப் பாதிக்கவேண்டுமென்றும், எம்மைப் பாதிக்கும் அனைத்தும் சிறந்தவையாகத்தானிருக்க வேண்டுமென்றும் நியதிகளொன்றுமில்லைதானே. வேறெவற்றையும்விட குழந்தைகளுக்கான / குழந்தைகளைப் பற்றிய எவையும் என் அகவுணர்வை அதிகமதிகம் பாதிக்கின்றன. அங்கூர் போன்ற தரமான படங்களை விடவும், நேற்றுக் கேட்ட குழந்தையொன்றின் அழுகை பற்றிச் சொல்வதற்கு என்னிடம் ஆயிரம் கதைகளிருக்கக்கூடும்.

இங்க்மர் பெர்க்மனின் Cries and Whispers இதற்கு விதிவிலக்கு. 'So let the cries and whispers die away' என படம் முடிவுற்ற பின்னரும் கூட அடிமனது அலறிக்கொண்டேதானிருந்தது. அலறல்களின் நீட்சியில் அந்நிகழ்வு குறித்த தகவல்களை வழங்கிய நண்பருக்கும் நன்றி கூறிக்கொண்டேயிருந்தேன். இத்தகைய film festivals கொழும்பில் அடிக்கடி நடைபெறுகின்றபோதும் அவைகுறித்த தகவல்கள் அனைவரையும் - குறிப்பாக இதுசார்ந்த ஆர்வமுடையவர்களுக்கு - முறையாகப் போய்ச்சேருவதில்லை. கடந்த வாரம் முழுதும் இங்க்மர் பெர்க்மனின் 6 படங்கள் திரையிடப்பட்டிருந்தும் நாளாந்த அலுவல்களின் மத்தியில் ஒரேயொரு படத்திற்கு மட்டுமே செல்லும்வாய்ப்புக் கிடைத்தமை வருந்தவைத்தாலும், அவ்வாய்ப்பினைப் பெற்றுத் தந்தமைக்காக நண்பருக்கு மிகவும் கடமைப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.

விடயத்திற்கு வருவோமாகில், ஈரான் படங்களில் மிகவும் கவர்ந்த அம்சம் தமது அதியுயர் பண்பாட்டினூடாக (rich culture) அவர்கள் குழந்தைகளைப் பேணும் / பாராட்டும் விதம்தான். பெரும்பாலான ஈரானியப் படங்கள் சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கின்றமையும், சிறுவர்களே முக்கிய கதாபாத்திரங்களாக விளங்குகின்றமையும் விதந்து நோக்கத்தக்கவை. விழிவிரித்து ஆச்சரியப்பட வைப்பது, பார்வையாளர்களை தம்மோடு ஒன்றித்துப் போகவைக்கும் அச்சிறுவர்களின் அசாத்தியமான நடிப்புத் திறமைதான். சினிமாத்துறையில் பல்லாண்டுகால அனுபவம் வாய்த்த ஆனானப்பட்ட நடிகர் திலகங்களுக்கே சாத்தியமற்றுப் போன உணர்வு வெளிப்பாடுகளை அநயாசமாகவும், மிக மிக இயல்பாகவும் அச்சிறுவர்கள் தம் முகங்களில் வெளிக்கொணர்கின்றமை மெய்சிலிர்க்க வைப்பதில் வியப்பதற்கில்லை.

மேலைத்தேய பகட்டுலகம் சிறுவர்களுக்குத் தம்மத்தியில் வழங்கியிருக்கும் ஸ்தானத்தின் போலித்தனங்கள் அவற்றிற்கு முழு எதிரிடையாகவமைந்த ஈரானியத் திரைப்படங்களைப் பார்க்கும்போதே இன்னும் தெளிவாகப் புலனாகின்றன. சிறுவர்களின் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட அதிநவீன சாகசங்களை அல்லது அசட்டு / குறும்புத்தனங்களை மாத்திரமே பதிவுசெய்துவந்த மேலைத்தேயத் திரையுலகம் ஈரானியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது எத்தனையோ. சிறுவர்களது உலகம், உணர்வுகள், எதிர்பார்க்கைகளென மேலைத்தேயம் கவனத்திற்கொள்ளாத பல விடயங்களை ஈரானியத் திரைப்படங்களில் கண்ணுற நேர்கையில் மொழி, பண்பாட்டு, புவியியல் வேறுபாடுகளுக்குமப்பால் நாமும் அவற்றுடன் ஒன்றிப்போக முடிகின்றது.


3.

சர்வதேசச் சிறுவர் தினத்தை முன்னிட்டு கொழும்பு எல்பின்ஸ்டன் திரையரங்கில் சர்வதேசச் சிறுவர் திரைப்படங்கள் இவ்வாரம் முழுவதும் - கடந்த ஞாயிறன்று இலங்கையின் 'சமனல தட்டு' படத்துடன் ஆரம்பித்து ஜேர்மானிய, பிரான்சிய, இந்திய, ஈரானிய, ரஷ்ய, சீனப்படங்களென - திரையிடப்பட்டு வருகின்றன. இன்று மஜீத் மஜீதியின் மற்றுமொரு சிறுவர் படமான 'Colour Of Paradise' னைப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது.

c1

தாயையிழந்த பார்வைப் புலனற்ற சிறுவனொருவனைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள கதை தெஹ்ரானின் பார்வையற்றோர் பாடசாலையொன்றின் கோடைக்கால விடுமுறையுடன் ஆரம்பமாகின்றது. மூன்றுமாதகால விடுமுறையை முன்னிட்டு பாடசாலை மூடப்பட தன்னை அழைத்துச் செல்லவரும் அப்பாவுக்காக காத்திருக்கிறான் மொஹமட். தாமதமாக வந்துசேரும் அப்பாவோ - மனைவியுமற்ற நிலையில் குறைபாடுடைய மகனைப் பெரும் சுமையாகவே கருதும் சராசரிக் கல்வியறிவற்றவர்களில் ஒருவர்தான் அவருமாதலால் - அவனைக் கிராமத்துக்கு அழைத்துச்செல்லப் பிரியப்படவில்லை. பாடசாலை அதிபர் கைவிட, வேறுவழிகளேதுமின்றி மொஹ்மடை அழைத்துச் செல்கின்றாரெனினும் அங்கே அவன் தனது இரு தங்கைகளுடனும், பாட்டியுடனும் குதூகலமாகப் பொழுதைக் கழிப்பதை தனது அடுத்த திருமணத்திற்கான பெரும் இடையூறாகக் கருதி, தனது தாயின் பலத்த எதிர்ப்புக்களையும் மீறி ஊரிலிருந்து அவனை வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு போய் ஒரு தச்சரிடம் (அவரும் பார்வையற்றவரே..) வேலைக்குச் சேர்த்துவிடுகிறார். பேரனின் பிரிவும், மகனின் நடவடிக்கைகளும் வேதனையில் ஆழ்த்த வயது முதிர்ந்த பாட்டி நோய்வாய்ப்பட்டு இறந்து போகின்றார். அத்துடன், அப்பாவின் மறுமணமும் கைவிடப்படுகின்றது. அவர் மகனை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வரும் வழியில், நதியின் குறுக்காகக் கடக்கையில்.. பாலம் உடைந்து விழுந்து மொஹமட் நீரோட்டத்துடன் அடித்துச் செல்லப்படுகிறான். இத்தனைகாலமும் மகனை சுமையாகவே கருதி வெறுத்திருந்தும் இனம்புரியாத பாசம் வந்து தாக்க, அப்பாவும் நீரில் குதிப்பதாகத் தொடர்கிறது கதை.

சிறிய கதைதானெனினும், ஒவ்வொரு காட்சி நகர்வினூடாகவும் எம்மை இலயித்துப் போகச்செய்யும் இயக்குநரின் அசாதாரண இலாவகம் வியக்கவைத்தது. மொஹமட் ஊருக்குத் திரும்பும் காட்சி அருமையாக எடுக்கப்பட்டிருந்தமையையும், இன்னகாட்சிதான் மிகவும் கவர்ந்தது / பாதித்ததென தனித்து அடையாளங்காட்ட முடியாமல் படத்தின் ஒவ்வொரு நகர்வும் மனதை அள்ளிப் போனமையையும் குறிப்பிட்டுத்தானாக வேண்டும். பார்வைப் புலனற்றவனெனினும் மொஹமடின் கேட்கும் திறமையும், பொருட்களை அவன் உணர்ந்துகொள்ளும் விதமும், அவற்றினூடாக அவன் கற்பதும் அழகாக எடுத்துக்காட்டப்பட்டிருந்தன. பறவைகள் ஒலியெழுப்புகையிலும், ஆற்றோரக் குறுங்கற்களிலும், கோதுமைத் தானியங்களிலும்.. அனைத்திலுமே தான் கற்றிருந்த பிரெய்லி எண்களையும், எழுத்துக்களையும் அவன் நினைவு கூர்கின்றமை கற்றலின் மீதான அவனது தீராத தாகத்தினை வெளிக்காட்டியிருந்தது. தங்கைமாருடன் கோதுமை வயல்களினூடாகவும், வண்ண வண்ணப் பூக்கள் மலர்ந்திருந்த வெளிகளினூடாகவும் அவன் ஓடித்திரிந்த போது, நானும் மறுபடியும் சிறுமியாய் மாறி அவர்களோடு கைகோர்க்க முடியாதாவென்ற ஏக்கம் தலைதூக்கியது. வனப்புமிகு அம்மலையோரக் கிராமத்தின் எழிலையும், மலர்களின் வண்ணச் சிதறல்களையும் அவனால் கண்டுகளிக்க முடியாதுதானெனினும் தங்கையரின் அன்பும், பாட்டியின் அரவணைப்பும் - அவை மட்டுமே அவன் வேண்டுவதென்ற வகையில் - அவனறிந்த இருட்டுலகிற்கு சுவர்க்கத்தின் நிறங்களையேற்றிச் செல்லுமென்பதை உணர்த்தியபடி படம் நகர்ந்துகொண்டிருந்தது.

அப்பா மொஹமடைத் தச்சரிடம் கொண்டுபோய் விட்டவந்நாளில்...:

"எனது ஆசிரியை சொன்னார்.., எமக்குப் பார்வையில்லையென்பதால் கடவுள் வேறெவரையும்விட எம்மை அதிகம் நேசிப்பதாய்.. ஆனால், அது பொய். எம்மை உண்மையாகவே நேசித்திருந்தால் கடவுள் எம்மை பார்வையற்றவர்களாகப் படைத்திருக்கவே மாட்டார். எனது நீட்டிய கைகளின் மூலம் தடவித் தடவி ஒருநாள் கடவுளைக் கண்டுபிடிப்பேன். அன்று அவரிடம் கேட்பதற்கென பல கேள்விகளும், அவரிடம் சொல்வதற்கென எத்தனையோ இரகசியங்களும் என்னிடம் உள்ளன.."

எனக்கூறி அவன் கேவிக் கேவி அழுதபோது இனம்புரியாதவொரு சோகம் மனதில் கவிந்துபோனது.., கூடவே ஒருவித வாஞ்சையும். அந்தக் கணத்தில் அந்தச் சுட்டிப் பையனில் என்னைக் கண்டேன்.. என் சின்னஞ்சிறு பெண்ணைக் கண்டேன். அவனைக் கட்டியணைத்து, நீயும் நானும் ஒரே இலக்கினை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோமென்று கூறவேண்டும் போலிருந்தது. நம்பிக்கைகளை மனதுள் நிறைத்தபடி மனிதத்துவத்தை எதிர்நோக்கிய பயணத்தில், அவனுடனிணைந்து நடைபோடவேண்டும் போலவுமிருந்தது.

hossein_mahjub_mohsen_ramezani_the_color_of_paradise_001

அப்பா தான் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணைச் சந்திக்கச் செல்லும்போதான காட்சிகளின் கோமாளித்தனங்கள் படத்தின் கனதியைக் குறைத்துவிடுகின்றமை வருந்தவைத்ததெனினும் அது எந்தவிதத்திலும் இரசனையைக் குலைத்துவிடாமையும், பார்வையாளரைப் படத்துடன் ஒன்றிப்போகும் உணர்வைத் தோற்றுவித்தமையும் மஜீத் மஜீதியின் சாதனையென்றே சொல்லவேண்டும்.


4.

மிக நொய்ந்த சமூகப்பிரிவினரென்ற வகையில் சிறுவர்களை அடக்கியாள்வதற்கான உலகத்தின் முயற்சிகள் குறித்த விழிப்புணர்வு இருக்கின்றதா எம்மிடம்..?

திருகோணமலையில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வெளிநாட்டு அரசுசாரா அமைப்பொன்றின் எதிரேயுள்ள ஐஸ்கிறீம் கடையொன்றில் 14 வயதே நிரம்பிய சிறுவனொருவன் வேலைசெய்வதாகவும், அவ்வமைப்பின் தொண்டர்கள் அங்கே வந்து ஐஸ்கிறீம் அருந்தி சிறுவர் உரிமைகள் பற்றிய காரசாரமான வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுகின்றபோதும் அச்சிறுவனை ஏனென்று கேட்பதற்கு யாருமேயில்லாத அவலநிலையை நண்பரொருவர் எடுத்துக் கூறியிருந்தார். சிறுவர் உரிமைகள் தொடர்பான மேலைத்தேயத்தின் அக்கறை இவ்வளவும்தான்.

சில தினங்களுக்கு முன், கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எட்டு வயதே நிரம்பிய மைத்துனரொருவரை நலம் விசாரித்து வந்திருந்தேன். அண்மையில் யாழ்ப்பாணத்தில் கடையொன்றினுள் புகுந்த இனம்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியதில் ஒரு இளைஞர் பலியானதுடன், அப்போதுதான் பாடசாலையிலிருந்து திரும்பிய இச்சிறுவனும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்தான். முள்ளந்தண்டில் சிதிலங்கள் பாய்ந்ததில் கைகால்கள் வழங்காமல், உடல் மரத்துப்போய் படுத்த படுக்கையாகக் கிடந்த அந்தத் துருதுருச் சிறுவனைப் பார்த்தபோது மனதின் அலறல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. என்ன தெரியும் அவனுக்கு..? காலாகாலத்திற்கும் சுமந்துகொண்டிருக்க வேண்டிய இவ்வடுக்கள் அவனது குழந்தைப் பருவத்தையுமல்லவா பறித்துக்கொண்டு விட்டன.. ஏன் இப்படி... ஏன் இப்படி...


(சிந்திக்க ஏதுமற்ற பொழுதுகளைத் தூண்டிவிட்ட பால்யகாலத்து நினைவுகளுக்கு..)Wednesday, September 06, 2006

கட்டங்கள் மற்றும் வட்டங்களுக்குள் வாழ்தல்...

நாளை நன்றாக விடியட்டும் என் பிரிய பெண்ணுக்கு..!

வட்டங்கள்! (01)

"வாத்திட ரெண்டாவது பெட்டையை மூன்று நாளாக் காணேல்லையாம்.."

சபிக்கப்பட்ட பொழுதொன்று விடிகின்றது.., மௌனங்களைக் கலைத்துப் போட்டபடியும், கிரணங்களைச் சிதறவிட்டபடியும். தாயின் கர்ப்பப்பைக்குள் அவள் தவழ்ந்திருந்த காலத்திலிருந்தே எனக்கு அவளைத் தெரியும். துடுக்குப் பெண். வாயால் அனைவரையும் அடக்கியாள்பவள். வங்காள விரிகுடா வாயை அகலத் திறந்து அழத்தொடங்கினால் போதும். அவள் வேண்டும் விதத்தில் அணைத்து ஆறுதல் கூறினாலேயொழிய கேவிக்கேவி மூக்கை உறிஞ்சுவதை நிறுத்த மாட்டாள்.. ரயில் எஞ்சின் ஸ்டேஷனில் இழுத்து இழுத்துப் பிடித்து ஒருவழியாய் நிற்குமே அதேபோல. சாவது ஒரு கலையென்று சில்வியா பிளாத் சொன்னாலும் சொன்னார், அழுவதும் ஒரு கலையென்று இவளைப் பார்த்த பிறகுதான் யாரும் நம்புவார்கள். சந்தர்ப்பம் பார்த்து உருண்டோடி விழும் கண்ணீர்.., எதிரேயிருப்பவர்களை ஒரு கணம் உருக்கி.. நெகிழச்செய்யும்படி. செய்த கள்ளத்தை மறைக்க, திட்டு வாங்கிக் கொள்ளாது தந்திரமாய் தப்ப, பார்க்கிறவர்களெல்லாம் "ஐயோ பாவம்" என்று பரிதாபப்படவைக்க.. இன்னும் என்னென்னத்துக்கோவெல்லாம் அவளது கண்ணீர் பயன்பட்டது.

அந்தப் பெண்ணும் ஒருநாள் அழுகையை நிறுத்துவாளென்று யார்தான் எதிர்பார்த்தார்?

புதன்கிழமை பின்னேரம் வகுப்புக்குப் போகிறேனென்று கிளம்பியவள்தான். ஏழெட்டு மணிக்கெல்லாம் "அம்மா பசிக்குது" என்றபடி டாணென்று வீட்டில் நிற்பவள் அன்றைக்கு வீடு திரும்பவேயில்லை. எங்கும் தேடியாயிற்று.. வகுப்பு நிலையம், நண்பிகள் வீடு, நூலகம், அவள் அடிக்கடி போகும் சில இடங்களென.. கடற்கரையும்கூட அதில் அடங்கும்தான்..


கட்டங்கள்! (01)

தேடல்கள்.. காத்திருப்புக்கள்.. எதிர்பார்ப்புக்கள்.. நிராசைகள்..

பாடப்புத்தகத்தை இலக்கேதுமின்றி புரட்டுகிறேன்.. விதிகள், தத்துவங்கள்.. வாதங்கள், வாய்ப்புக்கள்.. நியமங்கள், போலிகள்.. எடுப்பு, பதம்.. இன்னுமின்னும் என்னென்னமோ.. பக்கங்களின் நடுவே ஞானஸ்நானம் பெறும் இயேசுவின் ஓவியம்.. இடுப்பைச் சுற்றியிருக்கும் ஒற்றையாடையோடு.. பவுலோ யாரோ பெயர் நினைவில்லை.. ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.. சுற்றிலும் பெண்கள்.. பெண்கள் மட்டும்தான்.. காகிதங்கள் நழுவுகின்றன விரல்களிலிருந்து.. மறுபடியும், கருத்துக் குறிப்பு.. அகலக் குறிப்பு.. அனுமானங்கள், எண்ணக்கருக்கள்.. தீர்மானங்கள்.. முதல் பக்கம்.. 'பொய்யில் நீக்கி எனை மெய்யில் நடத்துக.. இருளில் நீக்கி எனை ஒளியில் நடத்துக..' எப்போதோ எங்கேயோ வாசித்திருந்த உபநிடதமொன்றின் வரிகள்.. நினைவில் நின்றுவிட, புத்தகத்தில் எழுதிவைத்தது.. சட்டென்று என்னமோ தோன்ற இறுதிப் பக்கத்தைப் புரட்டுகிறேன்.. 'வேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தன.. உன் பாதங்கள் இவை.. என்னில் படிவங்கள் எப்படியோ..' இதுவும் எங்கேயோ வாசித்ததுதான்.. மணிவாசகரோ, காரைக்காலம்மையாரோ யாரோ எழுதிவிட்டுப் போனது..

உள்ளம் நெக்குவிட்டுருக நின்றேன் பராபரமே... தாயுமானவரா.. நினைவில்லை.. யாராகவும் இருந்துவிட்டுப் போகட்டும்.. சொன்னது எவராகவும் இருக்கட்டும்.. என்ன சொன்னரென்பதுதான் முக்கியம் எனக்கு.. தலையைச் சாய்த்தால் புத்தகங்கள்.. ஓவியங்கள்.. கணனி.. பொம்மைகள்.. நான் தேடும் எதுவோ இங்கேயில்லை.. எங்கேயோ தவறிவிட்டிருந்தது.. அல்லது நான் தவறவிட்டிருந்தேன்..

தொலைபேசியில் அழைத்து நாளைய தினத்தின் கடமைகளையும், பொறுப்புக்களையும் பட்டியலிடும் நண்பி.. எனது பொறுப்பற்ற குணம் எத்தனை பேரை வருத்தியதென குற்றப்பத்திரிக்கை வாசிக்கும் அப்பா.. வழமையாக கதைசொல்லும் அம்மா ஏனோ இன்று மட்டும் மௌனமாய்.. தம்பி இவையனைத்தையும் கடந்த பேரமைதியில்.. உறங்குநிலையில்.. அக்கா எங்கோ வெகுதொலைவில்.. நீயும் கூடத்தான்.. எழுத்துக்களின் மேலே சுழலும் விழிகள் தயங்கும்.. சட்டென்று நினைவிலறையும் விம்பமொன்றின் பாதிப்பில்..

என்ன செய்கிறேன்.. எங்கே போகிறேன்.. எதைத் தேடியலைகிறேன்.. வினாக்கள் மட்டும் நீண்டுகொண்டே போகும்.. அனுமனின் வாலாய்.. அனுமன் வேண்டாம்.. இலக்கிய நாயகர்கள் வேண்டாம்.. இத்துப்போன பழைய பஞ்சாங்கங்கள் வேண்டாம்.. இல்லை, சீனப்பெருஞ்சுவரென்று சொல்வோமா.. ம்ஹூம்.. அதுவும் எங்கோவோர் இடத்தில் முடிவடைகிறதாக்கும்.. நைந்த ரிப்பனிலிருந்து இழுபடும் நூலாய்.. சுற்றும் முற்றும் பார்க்கிறேன்.. பொருத்தமான உவமானம் எங்கேயாவது தட்டுப்படுகிறதாவென.. ஆம்.. ஆம்.. ஆமாம்.. அதேதான்.. சிலந்தியின் அடிவயிற்றிலிருந்து கசியும் பிசுபிசுத்த திரவமாய்.. நீண்டபடியிருக்கின்றன விடைகாணமுடியா வினவல்கள் மட்டும்..

தொலைதூரத் தோழிக்கான எழுதப்படா மடல்கள்.. இடைவெளி கூடக்கூட பிரியங்களும் நீர்த்துப்போகுமோ.. அவளற்ற உலகத்தை உயிர்ப்பற்றதெனினும்கூட கட்டியமைக்க முடிந்துவிட்டது. எந்தச் சலனமுமில்லாமல் வாரவிறுதி நாட்கள் நகர்ந்துகொண்டே போகின்றன.. அவளற்ற கணங்கள்.. சூனியமாய்ப்போன எதிர்காலம்..

களைப்பாக இருக்கிறது.. விழிகள் சோர்ந்து விட்டதாக உணர்கிறேன்.. அலைக்கழிந்தபடியிருக்கும் மனம் மட்டும் கடலளவு கனக்கிறது.. கடல் எப்படி கனக்கும்.. நீ தூக்கிப் பார்த்திருக்கிறாயா.. எங்கிருந்தோ ஒலிக்கிறது கெக்கலிப்புக் குரலொன்று.. இப்படியேதான் ஒவ்வொருமுறையும் ஏதோவொரு குரலின் அபஸ்வர நாதத்தில் தடுமாறித் தடக்கி வீழ்கிறேன், எனது நேர்வழிப் பாதையினின்றும்.

என்னிலிருந்து ஆரம்பிக்கும் எனது உலகம்.. சுழன்று சுழன்று.. விரிந்து பரவி.. வெளியெங்கும் வியாபித்து.. வெறுமைகளை நிறைத்தபடி காத்திருக்கிறது. காத தொலைவிலிருந்து வந்து மோதிய மர்ம அதிர்வொன்றினால் தாக்கப்பட்டு தெறித்துச் சிதறுகிறது எனது நான்.. திக்குக்கொன்றாக.. ஒருத்திக்கு கத்தத் தெரியும், கோபிக்கத் தெரியும்.. அழத் தெரியாது. அடுத்தவளுக்கு அழத் தெரியும்.. கேவத் தெரியும்.. சிந்திக்கத் தெரியாது. மற்றுமொருத்திக்கு சிந்திக்கத் தெரியும்.. எழுதத் தெரியும்.. சுயமிழக்கத் தெரியாது.. இன்னுமொருத்திக்கோ சுயமிழக்கத் தெரியும்.. நேசிக்கத் தெரியும்.. கத்தத் தெரியாது.

பலவந்தமாக விழிகளை இறுக்கி மூடினால்.. என் செல்லக் குட்டி.. என்றபடி புன்னகைப்பாய் நீ.. என்னைக் கொல்லாதையடா.. என்று கவனத்தைத் திசைதிருப்ப முயன்றால்.. கதையாய், கவிதையாய், கனவாய், கருத்தாய்.. எல்லாமாகவும் வந்து என் உலகை ஆக்கிரமித்துக் கொள்வாய்.. உனக்கப்பால் சிந்திக்க முயன்றால் தோற்றுத் திரும்பவேண்டியதுதான்..

இதற்கு மேலும் என்னத்தைச் சொல்ல.. கானகமாய்.. ஊறும் மெல்லொளியாய்.. பாடும் வண்டினமாய்.. உருத்தொலைந்து நானும் மாற்றுயிர் கொண்டால் எப்படி என்னைக் கண்டடைவாய் எனதன்பே..

அதிகாலையில் கதிர்க்கரங்களால் துயிலெழுப்புவேன்.. நீராடுகையில் உன் மேனி தழுவும் ஒற்றைத் துளிக்குள் மறைந்திருப்பேன்.. உடல் போர்த்தும் ஆடையின் சிறு நீள இழையாவேன்.. காற்றில் தவழ்ந்து செவிசேரும் மென் ஸ்வரமொன்றில் உயிர்த்திருப்பேன்.. சோர்ந்து நீ உறங்குகையில் நித்ராதேவியாய் உன் மீது கவிந்து கொள்வேன்.. அடையாளங் கண்டுகொள்வாயோ என் கண்ணே..


வட்டங்கள்! (02)

"எப்பவாவது என்னைக் காணவில்லையென்றால் பீச்சுக்கு ஒருக்கா வந்து பாருங்கோ.. எங்கயாவது என்ட ஏதாவது சாமான் கிடந்தால் நான் கனநாளா தேடிக்கொண்டிருந்ததைத் தேடி போயிருப்பேன் என்று நினைச்சு பேசாமல் திரும்பிப் போங்கோ.. என்னை யாரும் எங்கேயும் தேடத்தேவையில்லை.."

இப்படித்தான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள். அப்படி என்னத்தைத்தான் இத்தனை நாளாய்த் தேடிக்கொண்டிருக்கிறாயென்று கேட்டால், ஒருபோதுமே அவளால் ஒழுங்காகப் பதிலளிக்க முடிந்ததில்லை. பத்துவயதாகும்போது, 'பொன்னியின் செல்வனை' என்றாள்.. பதின்மூன்று வயதில் எல்லாம் தெரிந்த மனுசி போல 'மனிதர்களை' என்றாள்.. பதினைந்தில் விடுபடலை.. பதினாறில் காதலோ என்னமோ.. தன் பிறக்காத குழந்தையை.. நேர்மையை.. புன்னகையை.. தொலைந்துவிட்ட வார்த்தைகளை.. சட்டென்று ஒருநாள் வாழ்ந்துமுடித்த கிழவியின் தோரணையோடு 'மரணத்தை' என்றாள். கடந்த ஒருசில வருடங்களில் அவள் அதிகம் வாழ்ந்துவிட்டாள் போலும்.

இருந்தாற்போல, எதிர்பாராதவோர் தருணத்தில் அத்துமீறி எனது அறைக்குள் நுழைந்தவள்.. 'கடலுடன் நான் உரையாடினேன்..' என்றாள். மின்னலாய்த் தெறித்த அவளது வார்த்தைகள் அவசர எழுத்து வேலையையும் புறமொதுக்கி என்னை நிமிரச் செய்தன. உயர்ந்த எனது ஒற்றைப் புருவம் 'அப்படியா..' என்பதைக் குறிப்பாலுணர்த்தியது அவளுக்கும் புரிந்திருக்க வேண்டும்.

'நீ நினைக்கக்கூடும் எனக்குப் பைத்தியமென்று. எப்படியும் நினைத்துவிட்டுப் போ. எனக்கு அதுதொடர்பாக எவ்வித கரிசனையுமில்லை. உனக்கு நம்பிக்கையில்லையென்பதற்காக எமது உரையாடல் பொய்யாகி விடாது..'

படபடவென்று பேசிக்கொண்டே போனவள்..

'அன்றைக்கு மழை என்னை அழைத்தது நினைவிருக்கிறதா உனக்கு.. தனது துளிச்சரங்களைப் பிடித்து ஏறிவரும்படி கேட்டது.. என்னை மேகக்கூட்டங்களினிடையே அழைத்துச் செல்வதாகவும், நிலவின்மீது உறங்கவைத்து தாலாட்டுப் பாடுவதாகவும் ஆசைகாட்டியது. நட்சத்திரங்களுக்குப் பாட்டுப்பாடத் தெரியுமா என்று நான் திருப்பிக் கேட்டேன்.. சூரியனுக்குப் பூக்களென்றால் மிகவும் பிடிக்குமா என்றும்.. அதிருப்தியில் உதட்டைச் சுளித்துக்கொண்டு திரும்பிப் பாராமல் நகர்ந்தது..'

நான் புன்னகைத்தேன்.. "நீ பொய் சொல்கிறாய்.. என்னுடன் இன்னுமொருவரையும் அழைத்துக்கொண்டு வரட்டுமாவென்று கேட்டிருப்பாய்.. அது மறுத்திருக்கும்.. நீதான் எடுத்தெறிந்து பேசிவிட்டு வந்திருப்பாய்.. எனக்குத் தெரியும்.."

மௌனம்.. மௌனம்..

"அதெப்படி நான் அவர்களை விட்டுப் போவது?" உனதிந்தக் கேள்விக்கு என்னிடம் பதிலிருக்கவில்லை.


கட்டங்கள்! (02)

உணர்ந்துணர்ந்து மறுகுதல்...

இப்படித்தான் சில வேளைகளில் கதறியழத் தோன்றும்.. வெறிபிடித்தலையும் மனதை அடக்க முயன்று தோற்றபோதெல்லாம் நிறைவேறாமற் போன எதிர்பார்ப்புகளும், சிதைந்து போன கனவுகளும் மனதை நிறைத்து விம்மப் பண்ணும். எதை இழந்தேன்..? எதைப் பெறத் தோற்றேன்..? யாருக்குத் தெரியும் ஆழ்மனப் பிரவாகத்தின் போக்கும், திசையும், அதன் திடீர் திருப்பங்களும்..?

எப்போதிருந்தோ உணரத் தொடங்கியது.. எதையோ இழந்ததாய்.. எவரையோ பறிகொடுத்ததாய்.. தேடலின் போது தொலைந்தது என் நிம்மதியும் சந்தோஷமும்தான்.. ஆயிரம் பேருக்கு மத்தியிலும் தனிமையைத் தேடத் தொடங்கினேன்.. திரையாய் மறைத்த தனிமைக்குள் ஆயிரம் பேரைத் தேடத் தொடங்கினேன். முண்ணுக்குப் பின் முரணாகவே சிந்தித்துப் பழகிப்போனது மனம். மற்றவர்களது தடத்தைப் பின்பற்றுதலையும், அவர்களது போக்கைத் தொடர்தலையும் எப்படியும் வெறுத்தேன்.


வட்டங்கள்! (03)

ஊகங்கள்.. வதந்திகள்.. கண், காது, மூக்கு, இன்னும் பெயர் தெரியாத பல உறுப்புக்கள் பூண்ட கதைகள் ஊரெங்கும் பரவின.

"காசுக்கு ஆசைப்பட்டு எவனாவது பிள்ளையைக் கடத்தியிருப்பான்"

"இதென்ன விசர்க்கதை.. காசுக்கு கடத்துறதுக்கு அவட அப்பரென்ன கோடீஸ்வரரா.. சாதாரண மாசச் சம்பளக்காரராக்கும்.."

"அவளென்ன தமிழ்ப் பொம்பிளைகள் மாதிரியே திரிஞ்சவள்.. நகையுமில்லாம ஒன்றுமில்லாம திமிர்க்கதை கதைச்சுக்கொண்டு.. இப்படி ஒருநாளைக்கு நடக்குமென்டு நானும் நினைச்சனான்.. எவனையாவது தள்ளிக்கொண்டு போனாளோ என்னமோ.. முந்தியும் இப்படியொரு தொடர்பிருந்ததா கேள்விப்பட்டனான்.."

"அது ஒரு சாதிப்பெட்டை.. எங்கயாவது விழுந்து செத்திருக்கும் போலத்தான் தோணுது எனக்கென்டால்.."

"ஏன் ஏதாவது லவ் பெயிலியரோ..? இருக்கும் இருக்கும்.. யார் கண்டார்.. இந்தக்காலத்து பிள்ளைகளுக்கு வேறென்ன வேலை"

"ஏன் அப்படியென்டா மட்டும்தான் சாக வேணுமே.. அவவுக்கு வேற என்ன பிரச்சனை இருந்ததோ.."


எனக்கு அவளைத் தெரியும்.., தாயின் கர்ப்பப்பைக்குள் அவள் தவழ்ந்திருந்த காலத்திலிருந்தே...

....................

"பொம்பிளைப் பிள்ளையை கூடவா வெயிலுக்குள்ள அலைய விடாதீங்க.. முகம் கறுத்துப் போனால் பிறகு பிரச்சனை.."

"அந்தக் கீரையை சாப்பிடக் குடுக்காதீங்க.. மலடாக்கிப் போடுமாம்.."

ஆயத்தப்படுத்தல்கள்.. சந்தை மாடல்லவா.. நாளை அவளும்..

"எனது உடம்பில் எந்த நாயும் சொந்தங் கொண்டாட விடமாட்டன்.." நினைவிலறைந்துவிட்டுப் போயின அவளது வார்த்தைகள்.

....................

"வந்துசேர்ந்திட்டுதாம்.."

அலுங்காமல் குலுங்காமல் மூன்று நாட்களின் பின் அவள் திரும்பினாள்.. அனைவரதும் பார்வையில் அது மூன்று இரவுகளாக மட்டுமே தெரிந்தது. இளம்பெண்ணொருத்தி மூன்று இரவுகள் காணாமல் போயிருந்துவிட்டு திரும்பியிருக்கிறாள். சல்லடைகளாகத் துளைத்த பார்வைகளைத் தகர்த்தெறிந்துவிட்டு நகர்பவளை மெல்லப் பின்தொடர்கிறேன். ஒருவித மௌனம் அவளைச் சுற்றிலும் கவிந்திருந்தது. தாய்மொழி மறந்துவிட்டிருந்தாள். எதுவும் பேச மறுத்தாள்.

அவளேன் பேச வேண்டும்..? எதைப்பற்றி பேச வேண்டும்..? தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்.. நெஞ்சுபிளந்தே அவள் காட்டினாலும் அவளது ஆழ்மனத்து வடுக்களைப் புரிந்துகொள்ளும் வல்லமை உங்களுக்கு அறவேயில்லையென்பது தெரிந்திருந்தும் என்னத்தைத்தான் எதிர்பார்க்கிறீர்கள் அவளிடமிருந்து..?

"நான் கடலைக் காதலித்தவள்.. காற்றைப் பெற்றெடுத்தவள்.."

ஆதிமாதாவின் அகங்காரக் குரல் கேட்கிறதா..?


முடிந்த முடிவென்று எதுவுமேயில்லை!

கட்டங்கள் நேர்கோடுகளாலானவை.. இறுக்க அடைபட்டிருப்பவை. முழுமூச்சுடன் முயற்சித்தால் எங்காவது ஓர் மூலையைப் பிய்த்தெறிந்துகொண்டு விடுபட்டுவிட முடியும். வட்டங்களைச் சமைத்திருப்பதோ ஒற்றை வளைகோடு.. எந்தப்பக்கத்தால் உடைக்க முயற்சித்தாலும் கோடு நெகிழும்.., வடிவம் மாறும்.., விடுபடல் மட்டும் சாத்தியமேயில்லை.

வட்டங்களுக்குள் அடைபட்டுவிடாதே.. அனைவரும் எச்சரிக்கிறார்கள்.. எங்கெங்கு காணினும் வட்டமடா.. எனும் நிலையில் எங்கேதான் போய் ஒளிந்துகொள்வதோ.. ஒவ்வொன்றிலிருந்தும் விடுபட விடுபட இன்னுமின்னும் பல புதிய வட்டங்களுக்குள் அடைபட்டுக் கொண்டுதானிருக்கிறோம்.. தத்துவங்கள், கொள்கைகள், இன்னபிற மண்ணாங்கட்டிகளென்று.

கதையொன்று எழுதத் திட்டமிட்டால்.. கட்டுக்கடங்காது சிறகடித்துப் பறக்கும் சிந்தனாப் பறவையை அடக்க முயன்று தோற்று, இறுதியில் இப்படித்தான் கொண்டுவந்து முடிக்க வேண்டியதாகின்றது:

'அனைத்தையும் துறந்து, கட்டங்கள் மற்றும் வட்டங்களுக்குள் வாழ்வதும் ஒருவகையில் வசதியானதுதான்..'Sunday, August 20, 2006

திரை எழுப்பும் அலை

சுவர்க்கம் - குழந்தைகள் - யதார்த்தம்:
வி(ழிப்/ளிம்)பு நிலை அணுகல்


எனக்குள்ளே
ஒரு சின்னஞ்சிறுபெண்
எப்போதும் இருந்து கொண்டு
ஒருபோதும்
மூப்படையவோ - சாகவோ
மறுத்தபடி வாழ்கிறாள்
- லிவ் உல்மன்'..என் எந்த வெற்றியும் அவளைத் திருப்தி செய்வதில்லை. என் எந்த சந்தோஷமும் அவளுக்குக் கிளுகிளுப்பு ஊட்டுவதில்லை. பல அதிகாலை நேரங்களில் விழிப்பு வந்ததும் இனிமேல் 'அவளுடைய' வாழ்க்கையை வாழ்ந்துவிட வேண்டியதுதான் என்று தீர்மானம் உருவெடுக்கும். படுக்கையில் பக்கத்தில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் என் செல்ல மகளின் மூலமாக எனக்குள் வாழும் அந்தச் சிறுமியின் வாழ்வை வாழ்ந்துவிட ஆசை மிகக் கொள்வேன்..'

ஹோர்மோன்களும் என்னை வஞ்சித்துவிட்ட நாளொன்றில் சாளரத்தினருகேயமர்ந்து சலசலக்கும் மாமரத்து இலைகளையும், அதன் கிளைகளினூடு ஓடித்திரிந்து கொண்டிருந்த அணில்குஞ்சையும் ஏக்கத்துடன் ரசித்துக் கொண்டிருக்கையில்தான் உணர்ந்தேன், உள்ளத்தை அழுத்தும் பெண்மையின் கனத்தை. அன்று, நிர்மலமான ஆகாயத்தில் நான் வெறித்திருந்த இனம்புரியாத புள்ளியொன்றிலிருந்து தொடங்கிற்று, குழந்தைகளின் உலகத்தினிடமிருந்தான என் அந்நியப்படல். அதன்பின்னரான பொழுதுகளில்.., முடிந்ததில்லை; ஒருபோதும் முடிந்ததில்லை.. அவளது வாழ்க்கையினை வாழ்தலென்பது என்றென்றைக்குமான கனவாகிப் போயிற்று.

'..ஜன்னலருகே நின்றபடி நீ தோட்டத்தில் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அச்சமயங்களில் எனக்குத் தெரிந்த எதையும்விட நான் உனக்கு நெருக்கமானவளாகிறேன்.

நீ என்னுடைய பகுதி - முழுச்சுதந்திரம் பெற்ற பகுதி. இன்னும் கூடவேயிருந்து இன்னும் நெருக்கமாக உன்னைக் கவனித்து எப்படி உன் சுதந்திரம் உனக்குள் வாழ்கிறது என்பதை உள்வாங்க ஆசைப்படுகிறேன்.

நீ மற்ற குழந்தைகளோடு சிரிக்கும்போது - தனியே உன் ரகசிய விளையாட்டுக்களில் ஆழ்ந்துவிடும்போது - விதவிதமான வண்ணங்களும் வாசனைகளும் அழகுகளும் இன்னும் உன் உலகமாக இருக்கும்போது நான் எல்லாவற்றையும் விட்டு உன்னிடம் ஓடிவந்து உன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்துவிடத் துடிக்கின்றேன்.

நான் இடைவிடாது தேடிக்கொண்டிருக்கிற - தொலைத்துவிட்ட பால்யகாலத்து சாம்ராஜ்யம் அதுவாகவே இருக்கலாம்...'

(நன்றி:- 'நான் பேச விரும்புகிறேன்' - ச.தமிழ்ச்செல்வன்)

பெரியவர்களுக்கு மறுக்கப்பட்டுவிட்டதோர் சாம்ராஜ்யம் அது.. வாழ்தலின் வன்மங்களின் உச்சாணிக் கொம்பிலேறி கிடுகிடு பள்ளத்தினை நோக்கிப் பலவந்தமாகத் தள்ளப்படுகையில், தலைகுப்புற விழுந்துகொண்டிருக்கும் - யுகங்களாகத் தோன்றும் - அந்தக் கணத்தில் கறைபடிந்துவிட்ட பால்யகாலங்கள் நினைவெங்கும் விரிந்து சிறகடித்துப் பறக்கத்தொடங்கும். பிஞ்சுக்குழந்தையின் மாசுமறுவற்ற அறியாமையின் உலகத்தின் இதயத்தில் மௌனங்களால் நிரம்பி வழியுமொரு மூலையினைப் பெற்றுக்கொள்தல் சாத்தியமாகுமெனில்.., அதன் கபடமற்ற மனதில் நெளிந்து வளையும் பாதைகளினூடாக பயணித்தல் முடியுமெனில்.., இதம் தராத கடந்தகாலத்து நினைவுகளைச் சுமந்தபடி, வதைத்துக் கொண்டிருக்கும் நிகழ்காலத்தினூடு.. நினைப்புக்கும் நடப்பிற்குமிடையேயான இடைவெளிகளை அளந்தபடி நீண்டிருக்கும் எமது பயணங்களும் பசுமையின் முதல்துளியால் ஆசீர்வதிக்கப்படக்கூடும்.

குழந்தைகள் சுவர்க்கத்திலிருந்து தருவிக்கப்படவில்லை; மாறாக, தமது இருத்தலின்.. நடத்தைகளின் மூலம் சுவர்க்கங்களை அவர்களே உருவாக்குகிறார்கள்.

1.
சிலதினங்களுக்கு முன்னர், மற்றுமொரு பௌர்ணமி தினத்தில் - இப்போதெல்லாம் பௌர்ணமிகள் முன்னைவிடவும் அழகாகத் தோன்றுகின்றனவென்பதையும் இங்கே குறிப்பிட்டுத்தானாக வேண்டும் - கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஆதரவில் நிகரி திரைப்பட வட்டத்தினரால் (niharifilmcircle@gmail.com) திரையிடப்பட்ட Majid Majidi யின் Children Of Heaven எனும் மற்றுமொரு ஈரானியத் திரைப்படமொன்றைக் கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. மேலைத்தேயத் திரையுலகின் மெத்தனங்களுக்குச் சவால்விடுக்கும் வகையில் புதிய புதிய திரையம்சங்களுடனும் பண்பாட்டுப் பின்னணிகளுடனுமான ஈரானியப் படங்களின் வடிவமைப்புப் பாங்கு (patterns) மனதைச் சிலிர்க்கவும், பெருமிதங்கொள்ளவும் வைப்பதுடன், இவர்களது திரைப்படத் தொழினுட்ப உத்திகள் மேலைத்தேயனவற்றிலும் எந்தவிதத்திலும் சளைத்தனவல்ல என்பதற்குமப்பால் நவீன தொழினுட்பங்களை மட்டும் நம்பிக்கொண்டு படங்களையெடுத்து ஆஹா.. ஓஹோவென்ற பாராட்டுதல்களையும், கைதட்டல்களையும் பெற்றுவிடும் ஹொலிவுட்டையும், அதன் தீவிர இரசிகர்களின் இரசனைகளையும் கேள்விக்குள்ளாக்கவும் செய்கின்றன. சினிமாவும் மற்றுமொரு கலையூடகம் அல்லது கலைத்துறையென்றவகையில் - இன்னவின்ன மட்டுமே கலைகளெனக் கருதப்படக் கூடியவையென எமக்கு நாமே வரையறைகளை விதித்துக்கொள்தல் அபத்தமென்பதால் - பரந்ததோர் நோக்குடன் விமர்சனங்களுக்கப்பால் அனைத்தையும் ஏற்றுக்கொண்டும் இரசித்துக்கொண்டும் நகரவேண்டியதுதான்.

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் 1959ம் ஆண்டு பிறந்த மஜித் மஜீதி தனது 14வது வயதிலேயே அமெச்சூர் நாடகக் குழுக்களில் நடிக்கத் தொடங்கி பின்னர் நாடகக் கலை தொடர்பான கல்விநிறுவனமொன்றில் சேர்ந்து பயின்றார். ஈரானில் 1978ல் இஸ்லாமியப் புரட்சி நிகழ்ந்ததுடன் சினிமாவை நோக்கி அவரது ஈடுபாடு திசைதிரும்பலாயிற்று. அவர் முதலில் எழுதி நெறியாள்கை செய்த Baduk (1992) பல்வேறு விருதுகளையும் பெற்றது.
- துண்டுப் பிரசுரத்திலிருந்து..

உரையாடலுக்கான மிகவும் பலவீனமானதோர் ஊடகமென்றவகையில், ஒரு சிறந்த திரைப்படத்தினை இரசிப்பதற்கு மொழியொன்றும் அத்தியாவசியமான நிபந்தனையல்ல. காட்சியமைப்புக்களும், கமராக் கோணங்களும், பாத்திரங்களின் நடிப்பும் பேசாத வார்த்தைகளை வேறெந்த ஆனானப்பட்ட செம்மொழியினாலும் உணர்த்திவிட முடியாது. சகோதரர்களான அலியும், சாராவும், அவர்களுக்கிடையே கால்மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் காலணிகளும்தான் Children Of Heaven படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாகவமைய, படம் முழுக்க உரையாடிக் கொண்டிருப்பது அச்சிறுவர்களின் பார்வைப் பரிமாற்றங்களும், அந்த அழுக்குக் காலணிகளுமேயொழிய அங்கு மொழியின் பிரயோகம் மிக மிகக் குறைவாகவே காணப்பட்டது.

சிறுமி சாராவின் ரோஸ் நிறக் காலணிகள் தைக்கப்படுவதிலிருந்து தொடங்கும் படம், அக்காலணிகள் அண்ணனான அலியின் கவனக்குறைவினால் தொலைந்து போக.. காலணியில்லாமல் பாடசாலைக்குச் செல்லவழியில்லாது அலியின் காலணிகளையே இருவரும் மாற்றி மாற்றிப் பாவிப்பதும், தொலைந்துவிட்ட காலணியைத் தேடும் படலம் தொடர்வதும், இனியும் அதனால் பயனில்லையெனத் தெரிந்து குற்றவுணர்ச்சியோடு புதுக்காலணி வாங்குவதற்கான வழிவகைகளை அலி திட்டமிடுவதுமென நீள்கின்றது.

சாதாரணத் தொழிலாளியான அப்பா, நோய்வாய்ப்பட்ட அம்மா, நினைத்தமாத்திரத்தில் புதிதாக காலணிகள் வாங்கவியலாதளவு வறிய குடும்பப் பின்னணி... இவற்றினூடு வெளிப்பட்டுத் தெரியும் குழந்தை மனத்தின் கபடமற்ற சகோதர பாசம் மனதை நெகிழவைத்தது. காலணிகள் தனது கவனக்குறைவினால் தொலைந்தமை வீட்டிற்குத் தெரியவந்தால் அப்பாவிடம் திட்டு வாங்க நேரிடுமென்பதால் எவரிடமும் சொல்லவேண்டாமென்றும், தனது காலணிகளைப் பயன்படுத்தும்படியும் அலி சாராவைக் கெஞ்சுவதும்.. வேறுவழியின்றி அவள் ஒத்துக்கொள்வதும்.. தங்கையின் சீவிச் சீவிக் குட்டையாகிப்போன பென்சிலுக்குப் பதிலாக அலி நீண்ட பென்சிலொன்றை அவளுக்குக் கொடுப்பதுமென காட்சிகளெங்கும் மேவித் தெரிந்தவை அக்குழந்தைகளின் மாசுமறுவற்ற உலகம்தான். அண்ணனின் காலணிகளோடு பாடசாலை செல்ல நேரும் முதல்நாளில் சாரா உணரும் குறுகுறுப்பையும், வெட்கத்தையும் இயக்குனர் பதிவுசெய்திருந்த விதம் இரசிக்கவைத்தது. தனது பாடசாலை முடிவடைந்தவுடன் மூச்சிரைக்க ஓடிவந்து அலியிடம் காலணிகளை ஒப்படைப்பதும், அலி அதனை மாற்றிக்கொண்டு மூச்சிரைக்க தனது பாடசாலைக்கு ஓடுவதுமென ஒருவித படபடப்புடனேயே படம் நகர்வது குறிப்பிடத்தக்கது.

மனதை மிகவும் கவர்ந்த, மூச்சைப்பிடித்துக் கொண்டு பார்க்கவைத்த காட்சி: இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க.. சாராவிற்கு அலியின் காலணிகள் அளவிற் பெரிதாகையால், ஒருநாள் அவள் அவசரத்துடன் பஹ்ரைன் தெருக்களில் ஓடி வருகையில் காலணியொன்று நழுவி நீர்நிறைந்த வாய்க்காலொன்றினுள் வீழ்ந்து நீரோட்டத்துடன் ஓடத் தொடங்குகையில் நெஞ்சம் அதிர்ந்து போனது. நீரோட்டத்துடன் சேர்ந்து காலணியும் ஓட ஓட, இதயத்தின் படபடப்பு எல்லை கடந்துவிட்டிருந்தது. நாற்காலியின் நுனியில் அமர்ந்து கைகளைக் குவித்துக்கொண்டு, அந்தக் காலணி மறுபடி கிடைத்துவிட வேண்டுமென்று கெஞ்சிக்கொண்டேயிருந்தேன். அன்றைய தினம் படம் பார்த்துக்கொண்டிருந்த எவரையும் அந்தக் காட்சி அப்படித்தான் உணரவைத்திருக்கும்; இல்லாவிட்டால்தான் ஆச்சரியப்பட்டிருந்திருக்க வேண்டும். வாய்க்காலில் ஓரிடத்தில் சிக்கிக்கொண்ட காலணியை சிறுமிக்குதவும் நோக்கில் ஒரு பெரியவர் எடுத்துவிட முயற்சிக்கும்போது மனம் ஆசுவாசத்துடன் நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், அடுத்த கணம் அவரது கைகளிலிருந்து நழுவி அது மறுபடியும் நீரோட்டத்துடன் இணைந்து கொண்டபோது மூச்சு ஒருகணம் நின்றே போயிருந்தது. பின்னர் வாய்க்கால் சுத்திகரிப்பவரொருவரால் அக்காலணி காப்பாற்றப்பட்ட போது, சாராவின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்த அதே சந்தர்ப்பத்தில் எமது கண்களையும் பனிக்கவைத்த - காட்சிகளினதும் கதாபாத்திரங்களினதும் ஒவ்வொரு அசைவினூடும் எம்மையும் கரைந்துபோக/இரண்டறக் கலக்க வைத்த - இயக்குநரின் அசாத்தியத் திறமை வியக்கவைத்தது. படத்தில் பிரமிக்க வைக்கும் மற்றுமொரு விடயம், அக்குழந்தைகளின் நடிப்பு. போலித்தனங்களின் சாயல்களேதுமில்லாமல் இயல்பாக அக்கதாபாத்திரமாகவே அவர்கள் வாழ்வதைப் பார்த்தபின்னும், தமிழ்ச்சினிமாவின் சில 'நடிப்பு வீரர்' களின் சாகசங்களைச் சகித்துக்கொள்தலென்பது சந்தேகமேயில்லாமல் இயலாமைக்கு அப்பாற்பட்டதே.தங்கைக்கு எப்படியாவது ஒரு காலணியைப் பெற்றுத்தந்துவிட வேண்டுமென்ற முனைப்பிலிருக்கும் அலியின் கண்களில் ஒரு மரதனோட்டப்போட்டி - அதில் மூன்றாவது இடத்தினைப் பெற்றுக்கொள்பவருக்கு காலணிகள் பரிசாக வழங்கப்படுமென்ற - அறிவிப்பு தென்படுகின்றது. அதைத் தங்கையிடம் வந்து தெரிவிக்கும் காட்சியும், இருவரும் குதூகலத்துடன் சோப்பு நுரைகளைக் கொண்டு விளையாடுவதும் இரசிக்கவைத்தன. ஓட்டப்போட்டியும் மிக அருமையாகப் படம்பிடிக்கப்பட்டிருந்தமையைக் குறிப்பிட்டுத்தானாக வேண்டும். முடிவை நாம் முன்கூட்டியே ஊகிக்கக்கூடியதாகவும், எப்போதுதான் முடியுமோவென பொறுமையின்றிச் சலித்துக்கொள்ள வைப்பனவாகவுமமைந்த - எமது தமிழ்த்திரைப்படங்களில் இடம்பெறுவதைப் போன்ற - மற்றுமொரு போட்டியல்ல இது. அக்காட்சி சிறிது நீண்டநேரம் நீடித்திருந்த போதும், ஒவ்வொரு கணத்திலும் சிறுவன் அலியுடன் கூடவே நாமும் ஓடிக்கொண்டிருப்பதானவோர் உணர்வு மனதை நிறைத்திருந்தது. ஒருகட்டத்தில் தான் முதலாவதாக ஓடிக்கொண்டிருந்தும் மூன்றாவது இடத்தைத்தானே பிடிக்கவேண்டுமென்ற நினைப்பு வந்து தாக்க, வேண்டுமென்றே தனது வேகத்தைக் குறைத்து இருவரைத் தன்முன்னே அனுமதிக்கும்போது, கவலை உள்ளத்தில் கவிந்துபோனது.., கூடவே ஒரு பதட்டமும்.. ஒருவேளை மூன்றாவது ஸ்தானம் கிடைக்காமல் போகுமானால்...

இறுதியாக, போட்டியில் முதலிடம் வென்று கோப்பையைத் தூக்கும்போது அலி எவ்வித சந்தோஷமுமில்லாது விக்கி விக்கி அழும்.. மூன்றாவது பரிசான காலணிகளைப் பார்த்து ஏங்கும் - அவன் போட்டியிட முன்வந்ததே சாராவுக்காகத்தானென்பதால் - காட்சி மனதைப் பிசைந்தது. இதைத்தானோ குழந்தையுள்ளம் என்கிறார்கள்..?

2.
Children Of Heaven படம் நேரடியாக எவ்வித அரசியலையும் பேசியிருக்கவில்லையெனினும், இத்தகைய படங்கள் அரசியலைப் பேசாதிருப்பது அபூர்வமே. இதன் காட்சி நகர்வுகளினூடு சாரம்சமாக மறைந்திருந்தது, பிற்படுத்தப்பட்ட பிரதேசங்களின் வறுமைதான். உயர்வர்க்கத்துக் குடும்பங்களின் செழிப்பையும், நகர்ப்புறத்தின் முன்னேற்றங்களையும் பஹ்ரைனின் கீழ்வர்க்கத்து மக்களின் அன்றாடப்பாடுகளின் அல்லல்களுடனும், குச்சு ஒழுங்கைகளுடனும் ஒருங்கே ஒப்புநோக்குகையில் மனதையுறுத்துவது இரு வர்க்கங்களுக்கிடையேயான பாரிய இடைவெளிதான். மாடமாளிகைகளும் கூடகோபுரங்களும் ஒருபுறமிருக்க, மறுபுறத்தே இடிந்த வீடுகளும் சாதாரணக் காலணிகளுக்காக துன்பப்படும் குழந்தைகளும். முதலாளித்துவ சமுதாயத்தில் பணக்காரர்கள் இன்னுமின்னும் பணக்காரர்களாகிக் கொண்டிருக்க.., ஏழைகள் இன்னுமின்னும் ஏழைகளாவது உண்மைதான் போலும்.

காலணிகளைத் தாமதமாகக் கொண்டுவந்து சேர்த்ததற்காகத் தங்கையைக் கடிந்து கொள்ளும் அண்ணன் பின்னர் அவளைச் சமாதானப்படுத்துவதற்காகவும், தன்னால்தானே அவள் சிரமப்படுகிறாளென்ற குற்றவுணர்ச்சியோடு அவளை மகிழ்விப்பதற்காகத் தனக்கு ஆசிரியரிடமிருந்து பரிசாகக் கிடைத்த விலையுயர் பேனாவை தங்கைக்குக் கொடுப்பதும்.., அப்பேனாவை சாரா தொலைத்துவிட, அதைக் கண்டெடுக்கும் விழிப்புலனற்ற பிச்சைக்காரரொருவரின் குழந்தை - அதைத் தானே வைத்துக்கொள்ளப் போகின்றதென்ற எமது எதிர்பார்ப்புக்களைப் பொய்யாக்கியபடி - பேனாவை மறுபடியும் சாராவிடம் ஒப்படைப்பதும்.. இத்தனை சிரமங்களுக்கிடையேயும் குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகத்தான் இருந்துவருகிறார்களென நிரூபித்து விடுகின்றன.

3.
"You may give them your love
But not your thoughts,
For they have their own thoughts…
You may house their bodies
But not their souls,
For their souls dwell
In the house of tomorrow,
Which you cannot visit,
Not even in your dreams.."

- Kahlil Gibran

இவையனைத்தும் ஒருபுறமிருக்க, எமதிந்தச் சுவர்க்கத்தின் சிருஷ்டிகர்த்தாக்களுக்குச் சமூகத்தில் நாம் வழங்கியிருக்கும் ஸ்தானம் யாதென ஆராயப் புகுவோமாயின் வெறுமையே மிஞ்சும். யுத்தம் தொடக்கம் வறுமை வரை சமூகத்தின் அத்தனை இயலாமைகளுக்கும், பாலியல் துஷ்பிரயோகம் / பாலியல் தொழில் போன்ற சமூகத்தின் அதீத வக்கிர மனப்பான்மைகளுக்கும் முதலில் பலியாவது குழந்தைகள்தான்.

இலங்கையின் மிக மோசமான சிறுவர் துஷ்பிரயோகமாகக் கருதப்படுவது (வட-கிழக்கில்) அவர்களை ஆயுதமேந்த வைத்தலும், படையில் சேர்த்தலும்தான். சர்வதேசரீதியாகவும் இதுசார்ந்த பிரச்சாரம் இன்றளவும் பாரியளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது (அமெரிக்காவில் இராணுவத் தேவைகளின் நிமித்தம் பராயமடைந்தவர்களுக்கான வயதெல்லை குறைக்கப்பட்டமை தொடர்பில் எதுவும் பேசாதிருத்தல் நலம்.., அவற்றைக் கேள்விகேட்பதற்கு எமக்கு அருகதையில்லாததால்..?!). பராயமடையாதவர்களைப் படையில் இணைத்தலென்பதன் நியாய/அநியாயங்களை ஆராய்வதற்கு முன்னர் - பெண்களுக்கு ஆயுதமேந்துதல் மறுக்கப்பட்டிருந்த காலங்களில் பூலான்தேவி கொள்ளைராணியானதை எந்தளவு நியாயப்பாடுகளுடன் ஏற்றுக்கொள்கிறோமோ / மறுக்கிறோமோ அதேபோல - அதன் பின்னணி குறித்தும் கவனஞ்செலுத்தியேயாக வேண்டும். பலவந்தப்படுத்தல்களை விடுத்து நோக்கினால்.. தனது சகோதரி சிதைக்கப்படுவதையோ, தனது உறவினர் அல்லது நண்பர் கொல்லப்படுவதையோ நேருக்கு நேர் பார்க்கும் எந்தவொருவரும் உளவியல்ரீதியாக கடும்தாக்கத்திற்குள்ளாக்கப்பட்டு.. ஆயுதத்தினைத் தீர்விற்கானவோர் வழியாகத் தேர்ந்தெடுத்தல் தவிர்க்கமுடியாதது. அடிப்படை மூலகாரணியான இனமுரண்பாடு தீர்க்கப்பட்டாலேயொழிய இத்தகைய வன்மங்களைத் தடுத்துநிறுத்த முடியாது.

இவ்வடிப்படை யதார்த்தத்தினை விளங்கிக்கொள்ளாத சர்வதேச சமூகமும் மற்றவர்களும் பராயமடையாத ஆயுததாரிகளின் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களேயொழிய, தென்னிலங்கைச் சிறாரின் அவலநிலையை யாரும் கருத்திற்கொண்டபாடில்லை. வடகிழக்கில் ஆயுதமேந்துவதன் மூலம் 'உரிமை மறுக்கப்பட்ட' சிறுவர்களைவிடவும் பலமடங்கானோரின் உரிமை தென்னிலங்கையில் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்துமே உரிமை மறுப்புகள்தான்.., அங்கே யுத்தத்தின் பெயரால்; இங்கேயோ வறுமையின் பெயரால். எண்ணற்ற சிறுவர்கள் வறுமையின் காரணமாக - வயிற்றுப் பிழைப்பிற்காக - தமது கல்வியையும் துறந்து வீட்டு வேலைகளுக்குச் செல்கிறார்கள். உடல், உளரீதியான பாதிப்புகளின் படி நோக்குவோமாயின் துவக்கு ஏந்துவதற்கும், துடைப்பங்கட்டை ஏந்துவதற்குமிடையிலொன்றும் பாரிய வேறுபாடுகளில்லை.

அதைவிடவும் வருந்தவைப்பது பாலியல் துஷ்பிரயோகங்களதும், பராயமடையாத பாலியல் தொழிலாளர்களதும் அபரிமிதமான அதிகரிப்பு. இவற்றிற்குப் பலியாவது சிறுமிகள் மட்டும்தானென நினைத்தால், நீங்கள் ஏமாந்துபோக வேண்டியதுதான். விகிதாசார அடிப்படையில் சிறுமிகளை விடவும், சிறுவர்களே அதிகமதிகம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. பராயமடையாத பாலியல் தொழிலாளர்களுக்கும், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குமிடையிலான வேறுபாடு / முரண்பாடு குறித்தும் - பொதுவாக இவ்விரண்டு பதங்களும் ஒன்றுடனொன்று சிக்கார்ந்த நூலிழை வேறுபாட்டினைக் கொண்டுள்ளநிலையில் - நாம் இங்கு கவனஞ்செலுத்த வேண்டியதாகின்றது. பாலியல் தொழிலினைத் தனது வாழ்வாதாரமாகவும், வாழ்க்கை முறையாகவுமேற்றுக்கொண்டவரே பாலியல் தொழிலாளியென அடையாளப்படுத்தப்படுகின்றார். ஒரு ஆண் / பெண் சுயவுணர்வுடனோ அல்லது சுயவுணர்வற்ற நிலையிலோ, இத்தகைய வாழ்க்கைமுறையினை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டு, காலப்போக்கில் அதுவே அவரது / அவராகவே ஏற்றுக்கொள்ளப்பட்ட வாழ்தலாகவும், தொழிலாகவும் மாற்றமடைகின்றது. ஆயினும், சிறுவர்கள் / பராயமடையாதவர்களின் நிலையினையெடுத்து நோக்கின் பலவந்தமாகவோ, சூட்சுமமாகத் திட்டமிடப்பட்ட முறையிலோ, வன்முறையினூடாகவோ அல்லது வேறுவழிகளேதுமற்றுப்போன காரணத்தினாலோ அவர்கள்மீது இத்தகைய வாழ்க்கைமுறை வளர்ந்தோரினால் திணிக்கப்படுகின்றது. பணம், வருவாய் போன்ற பொருளாதாரக் காரணிகளும், சில சமூகக் காரணிகளுமே கூட இதற்கான ஊக்குவிப்பான்களாகவமைகின்றன.

ஆனால் பாலியல் துஷ்பிரயோகத்தினைப் பொறுத்தவரை, ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள் பராயமடையாதவரொருவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல்களுக்குள்ளாவதையே அது குறித்து நிற்கின்றது. ஆனால் அவர் பாலியல் தொழிலாளியொருவரைப் போல 'பால்' இனை தனது வாழ்வாதாரமாகவோ, வாழ்க்கை முறையாகவோ ஏற்றுக்கொண்டவரல்ல. இத்தகைய பாலியல் துஷ்பிரயோகம் அல்லது பாலியல் ரீதியான அத்துமீறலானது பிற்பட்ட காலங்களில் சிக்கார்ந்த, மோசமான பிரச்சனைகளைத் தோற்றுவிக்கக்கூடிய அதேவேளை ஒருவரின் ஆளுமை வளர்ச்சியிலும் கடும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும். சிறுவயதில் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியமை நாளடைவில் பாலியல் தொழிலாளியாக உருவெடுப்பதில் தாக்கம் செலுத்தக்கூடிய சாத்தியப்பாடுகளையும் மறுப்பதற்கில்லை.

இலங்கையைப் பொறுத்தவரை பராயமடையாதோரின் பாலியல் தொழிலானது - இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பிரதேசங்கள், கடற்கரைகள், ஆயுர்வேத சிகிச்சை முறைகள் ஆகியவற்றுக்குச் சமானமாக - ஒரு மறைமுக Tourist Attraction ஆக வளர்ந்து வரும்நிலையில் அதுதொடர்பான அடிப்படை விழிப்புநிலைசார் அறிவு எத்தனை பேருக்கு இருக்கக்கூடுமென்பது சந்தேகத்திற்குரியதே. இதுபற்றிய பகிரங்கக் கருத்தாடல்கள் - அதுவும் அறிவுஜீவிகள் மட்டத்தினைவிடத் தாழ்ந்த மட்டங்களில் / சராசரி மக்கள் மத்தியில் - இடம்பெறுவது மிகக்குறைவு. அரசியல், பணம் மற்றும் இன்னபிறக் காரணிகளின் பின்னணியில் திட்டமிட்ட முறையில் அவை மூடிமறைக்கப்படுகின்றன. இது வெறுமனவே சமுதாயத்தின் மைய நீரோட்டத்திலிருந்து விலகிய சபிக்கப்பட்டவொரு பிரிவினரின் உரிமைகள் பற்றிய கரிசனையல்ல. மாறாக, ஒட்டுமொத்தச் சமூகக் கட்டமைப்பின் - தவிர்க்க முடியாததோர் அங்கமாக விளங்கிவருபர்களாதலால் - போக்கினைக் கேள்விக்குள்ளாக்க வேண்டிய தேவையை இந்நிலைமை உருவாக்குகின்றது.

சமூகத்துக் கயமைகளை ஊடறுத்து உள்நுழைய வழிசமைக்காதவரையில், குழந்தைகளுக்கும் சுவர்க்கத்திற்குமிடையிலான உறவு/முரண் குறித்து நாமெல்லோரும் அலட்டிக்கொண்டிருத்தல் - குழந்தைகள்=சுவர்க்கம் எனக் கொள்வோமாயின்.. அதுவே உண்மையாயினும் - அபத்தமானதில்லையா..?


(ஒரே கணத்தில் தாயாகவும், குழந்தையாகவும் உணர்தலை சாத்தியமாக்கிப்போன என் பிரிய மாதுளங்கொளுந்திற்காக..)

நன்றி: படங்கள்


Saturday, August 12, 2006

*சிறகெனக் கனக்கும் காலங்கள்


நானுமொருகாலத்தில் உயிர்த்திருந்தேனென்றால் எவரும் நம்புவார்களோ என்னமோ..?!

1.

என் தாயுமானவளுக்கு...

நெற்றிப்பொட்டில் முகிழ்த்தெழுந்து
வேர்கொண்டகன்று
நீண்டு
வளர்ந்து
கிளைவிரித்து உயர்ந்துயர்ந்து
தலை முழுதும் சுழன்றுபரவும்
வலி...
நீயில்லா வலி.

சிந்தனைகளின் அழுத்தலில்
கேள்விகளின் குடைதலில்
தலைக்குள் குருதி,
தறிகெட்டு தடைதகர்த்து குமுறிப்பாய
நரம்புகள் பின்னிப் பிணைந்து
இறுகித் தெறித்து
வெடித்துச் சிதறக்கூடும்.

நானும் சிதையக்கூடும்.

சீக்கிரம் வந்துவிடு.

.............

அடிக்கடி
நீ அருகிலிருப்பதாய் தோன்றுவதெல்லாம்
பொய்பொய்யென
பிரமைதானென
உணர்ந்துணர்ந்து உள்குறுகும்போது
கண்முன்னே மயிர்பிடுங்கும் வேதனையில்
மனசு மறுகுகின்றது.

சீக்கிரம் வந்துவிடு.

...........

நெஞ்சம் நெகிழ்ந்து நெகிழ்ந்து
நெக்குருகி - உடல்நடுங்கி
நீயில்லா ஏக்கம் நிரம்பி
வழிய
நிற்கிறேன்.

சீக்கிரம் வந்துவிடு.

...........

ஒற்றைக்குயிலின் அழுகையின் நீட்சியில்
எழுகிறது என் சோகம்
பொழியும் மழையின் ஒவ்வொரு துளியிலும்
வழிகிறது என் கண்ணீர்

தனிமை தனிமை தனிமை
தனிமை தலைவிரித்தாடுகிறது

சீக்கிரம் வந்துவிடு.

...........

விரக்தி மிகுந்த வெறுமையும்
வெறுமை நிறைந்த விரக்தியும்
விரவி நிற்கும் -
கையறு நிலையில்
மெய்யது தவிக்க
எற்றுண்டு கிடக்கிறேன்,
கணங்களின் கரையோரம்...

சீக்கிரம் வந்துவிடு.

..........

தாங்கவொண்ணாத் துயரமாயிருக்கிறது
உன் பிரிவு...

சீக்கிரம் வந்துவிடு.

சீக்கிரம் வந்துவிடு.
- தமிழினி


2.

போர்த்துண்டது கருமை, என்றென்றைக்குமாய்...

'..நான் உன்மீது வைத்திருப்பது அன்பில்லை, ஒருவிதமான வெறியென்றும் சொல்லலாம். நீ எனக்கு வேண்டும். வாழ்நாள் முழுவதுக்குமாக நீ எனக்கு வேண்டும். என்னை விட்டு விலகிச் செல்ல நினைத்தாயானால் கொலை செய்யவும் தயங்க மாட்டேன். ஆனால், கொலை செய்ய மாட்டேன். ஹி..ஹி..ஹீ..'

எமது இறுதிச் சந்திப்பு நினைவிருக்கிறதா உனக்கு? அதுவொரு ஜூலை மாதத்துப் பிற்பகல் பொழுதாகத்தானிருந்திருக்க வேண்டும். நாட்காட்டி 23 என குறித்துக் கொண்டிருந்ததாகவும் நினைவு. மறுநாள் நீ என்னை நீங்கி காததூரம் போகப்போவதை அறியாதவளாய் நான் மட்டும் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருந்தேன், வழமையாகக் கலகலக்கும் நீயோ மௌனித்திருந்தாய்.

அன்றைக்கு வானம் எப்படியிருந்தது..?

சாம்பல்நிற ஒளிக்கீற்றொன்று
அன்றும் தென்பட்டிருக்கக் கூடுமோ..

வெண்பஞ்சு மேகமொன்று
தனதேயான விஷமத்தனங்களுடன்
அதனை எனது பார்வையிலிருந்து
மறைத்து விட்டிருக்குமோ..

சூரியன்
முகில்க்கூட்டங்களினிடை
மறைந்து வெளிவந்து
ஜாடைகாட்ட முற்பட்டிருந்திருக்குமோ..

ஏன் என் அடிமனம் எதனையும் உணரத் தவறிவிட்டிருந்தது..?

மரணங்கள்
சொல்லிக்கொண்டு
வருவதில்லை..,
பிரிவுகளும் கூடத்தான்.
உனது பிரிவும்
அப்படித்தான் நிகழ்ந்தது..,
அதனைத் தொடர்ந்த
எனது மரணமும்.

எல்லாம் தெரிந்திருந்தும் அடி பெண்ணே..,

நிர்த்தாட்சண்யமாய்
என்னுள் ஊடுருவித் துளைத்த
உன் விழிகளின் ஆழங்களில்..
எத்தனை நூற்றாண்டு காலத்துக்
கண்ணீர்த்துளிகளை
உயிரோடு சிதையேற்றியிருந்தாய்?

பாறையாய் இறுகிக்கிடந்த
இதயத்தில்..
எத்தனை கோடானுகோடி
மூதாதைகளின் துயரங்களைப்
பதுக்கியிருந்தாய்?

உள்ளத்திலிருந்து கிளர்ந்தெழுந்த வார்த்தைகள் தொண்டைக்குழியை அடைய முன்னமே தற்கொலை செய்துவிட்டிருந்தன போலும். கருமை போர்த்தவந்நாளில்.., என்றென்றைக்குமான எமது பிரிவினைப்பற்றி நீ எதுவுமே பேசத்துணியவில்லை.

கத்திக் குளறியிருக்க மாட்டேன்..
அழுது புலம்பியிருக்க மாட்டேன்..
வேதனையில்,
விரக்தியில்
உன்னை சபித்துமிருக்க மாட்டேன்..

இன்னும் சில நிமிடங்கள்.. ஒரு சில நிமிடங்கள் உன்னோடு கழித்திருப்பேனடி என் கண்ணே.. ஏன் பேச மறுத்தாய்?

அந்தச் சில நிமிடங்களுக்குள் இத்தனைகாலம் சொல்லாமற் போன என் பிரியங்களையும், கேட்க நினைத்திருந்த மன்னிப்புக்களையும், மனமார்ந்த வாழ்த்துக்களையும் கூறி.. இறுதியாய் ஒருமுறை உன்னை ஆரத்தழுவி.. விடைகொடுத்திருப்பேன்.. ஏனடி சொல்லாமற் போனாய்?

கன்னத்தைச் செல்லமாகத் தட்டி, வருடிவிட்டு அவசர அவசரமாக உன்னைப் பிரிந்தபோது, உன் கண்களில் பிரதிபலித்திருந்த ஏக்கத்தினை.. காலாகாலத்திற்குமான வேதனையை ஏன் என்னால் புரிந்துகொள்ள இயலாமற் போனது?

என் உள்ளுணர்வு ஏன் அந்தக்கணத்தில் மரத்துப் போனது?

உன்னை என்றென்றைக்குமாகப் பிரியப் போகிறேனென்று ஏன் எனக்கு தோன்றாமல் போனது?

ஏன்.. ஏன்.. ஏன்..???

தெருவோரத்தின் வளைவில் என் நிழலும் போய் மறையும்வரை பார்த்துக் கொண்டே நின்றிருந்தாயா? அந்தக் கணத்தில் என்ன நினைத்துக்கொண்டாய்? அடி அவசரக்காரியே.. என்று என்னைக் கடிந்து கொண்டிருப்பாயா? இன்னும் கொஞ்சநேரம் இருந்துவிட்டுப் போவென மனதுக்குள் கெஞ்சிக் கொண்டிருந்தாயா? இல்லையெனில், உனது தயக்கத்தினையும் துணிவின்மையையும் எண்ணியெண்ணி உன்னை நீயே நொந்துகொண்டிருந்தாயா?

ஜூலைகள் கறுத்துப் போனவைதான்; மறுப்பதற்கில்லை.


3.

உயர்கின்றன மதில்கள், என்னைக்கூட கேளாது...

'..உன் பேச்சில் மழலைத்தனமிருந்தது. அந்தவொரு குறும்புத்தனம் வீதியில் செல்லும்போது.., உனக்குள்ளே நீ பேசிக்கொள்வது, சிரிப்பதென்று. உனதந்தச் சிரிப்பில் எனது கவலைகளை மறந்திருக்கின்றேன். உன் வருகையை எதிர்பார்த்து எத்தனையோ நாள் என்வீட்டு வாசலில் கண்மூடாமல் காத்திருந்திருக்கிறேன். உன்னுடன் பழகும்போதெல்லாம் என்னுள்ளிருக்கும் பாரங்களத்தனையும் வெறும் தூசு போல் தெரியும்; உன்னுடனேயே வாழ்ந்துவிட வேண்டுமென்றும் தோன்றும்..'

காரிருள் மேகமாய்
சுற்றிலும் கவிந்துகொண்டு,
போகுமிடமெல்லாம்
என்னைப் பின்தொடர்கின்றது..,

பார்க்கும்,
கேட்கும்,
ஸ்பரிசிக்கும் அனைத்திலும்
படர்ந்து பரவி
எல்லைகளற்ற மதில்களாய்..
தடித்த திரையாய்
என்னை ஆக்கிரமித்தபடி எழுகின்றது..,

காற்றினுள் கலந்திருக்கும்
அவள் விட்டுச்சென்ற
களங்கமற்ற நேயத்தின் வாசம்.

நூலகத்திலிருந்து வீடு திரும்பும் எனது நீண்ட பயணத்தில் வழித்துணையாக வந்தது அவள் நினைவுகள்தான். கூடவே வெறுமையும், உயிர்கொல்லும் தனிமையும்.

தலை கனக்கத் தொடங்கியது.. இந்தவுடலை இனியும் சுமந்துகொண்டு அலைதல் சாத்தியமில்லையென மனம் எண்ணமிடத் தொடங்கிற்று.

அமைதியை விரும்புபவள்..,
நிச்சலனத்தை வேண்டுபவள்..,
இப்போதோ,
அவள் விட்டுப்போன
மௌனத்தை உடைத்தெறிய
செவிப்பறைகளைக் கிழித்தெறியும்
இரைச்சல்களை
நேசிக்கத் தொடங்குகிறேன்.

அடிமனத்து ஓலங்கள்
எல்லை கடக்குமொரு பொழுதில்
வீங்கிப் பெரிதாகி
என் மண்டை
வெடித்துப் பிளந்தால்தான்
ஆசுவாசமாக உணர்வேனாக்கும்.

மதில்கள் பொருட்படுத்துவதில்லை.., சிறையுண்ட ஆன்மாவின் விருப்பு வெறுப்புக்களை.


4.

கடந்து விட்டிருந்த காலம், கேவல்களைச் செவிமடுத்ததோ...

'..உன்னுடனேயே வாழ்ந்துவிட வேண்டுமென்று எனக்கும் ஆசைதான். ஆனால், எம்மிருவரது வீட்டிலும் அதனை அனுமதிக்கப் போவதில்லை. அவர்களுக்கு இதெல்லாம் எங்கே தெரியப்போகின்றது? அவர்கள் தங்களது சுயநலம் கருதித்தானே எம்மைப் பெற்றெடுத்ததும். உறவுகளென்பது பொய். ஒருநாளும் அவை உண்மையானதாக இருக்கமுடியாது. ஒருகாலத்தில் என்னைச் சுற்றியிருப்பவர்களைக் கேள்விகேட்டே என் கவலைகளைக் குறைப்பேன். அவர்களது குற்றவுணர்ச்சியைக் கூட்டுவேன்..'

மகத்தானவள் நீ...

எதிர்பார்ப்புகளற்ற அன்பைச்
சாத்தியமாக்கிப் போனவள் நீ...

அடையாளங்களைத் துறந்து,
சுயம் தொலைத்து
எல்லைகளற்ற நேசத்தில்
கரைந்துவிடப் பழக்கியவள் நீ...

என் ஆணவங்களை
அடியோடு சாய்த்தவள் நீ..
என் ஆன்மாவை
உயிரோடு சிதைத்தவள் நீ..

கட்டுக்கடங்காமல் அன்பை வாரி வழங்கத் தெரிந்திருந்தது உனக்கு. அனைத்தையும், அனைவரையும் உன் கட்டுக்குள் வைத்து ஆண்டுகொண்டிருக்கத் தெரிந்திருந்தது உனக்கு. நட்ட நடுக்காட்டில் தவிக்கவிட்டு தடயங்களேயில்லாமல் மறைந்துவிடும் நெஞ்சழுத்தமும் வாய்த்திருந்தது உனக்கு.

ஆனாலுமென்ன, உன்னைச் சுற்றியிருந்தவர்கள் எவருமே உன் தனித்துவங்களைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டிருந்தனர்.., என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். நீ தந்த அன்பை அதே நிறைவுடனும், முழுமையுடனும் திருப்பித்தர ஒருபோதும் என்னால் முடிந்ததில்லை. உனதன்பை உள்ளது உள்ளபடி உள்வாங்கவும் நான் கொடுத்து வைத்திருக்கவில்லை.

அனைத்தையும் பொய்யாக்கிவிட்டு
நீ புறப்பட்ட போது..,
இனியும்,
என் வாழ்வில் நீயில்லையென்பது
அடிமனதில் உறைத்த போது..,

காலம் கடந்துவிட்டிருந்தது
என் பெண்ணே..
உன் அருமை புரியத் தொடங்குகையில்
காலம் யுக யுகாந்தரங்களைக் கடந்துவிட்டிருந்தது.

அண்டசராசரங்களும் அதிர பெருங்குரலெடுத்து கதறியழத் தோன்றுகின்றது. கையில் கிடைக்கும் அனைத்தையும் வீசியெறிந்து, உடைத்து நொறுக்கி.. நானும் களைத்து விழும்வரை.. தெறித்துச் சிதறும்வரை ருத்ர தாண்டவமாட வேண்டும் போலிருக்கிறது. எழுதப்படாமலேயே போய்விட்ட எத்தனையோ மடல்கள் நினைவில் விரிந்து என் உலகை நிறைக்கின்றன. வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் சிக்குண்டிருந்து என்னை மூச்சுத்திணறச் செய்கின்றன.

மறுபடியொருமுறை உன்னைக் காண்பேனா, என் கண்ணே?


*(நன்றி:- குட்டிரேவதி)

Thursday, August 03, 2006

மானுடவுயிரும் மகத்தானதோர் ஆயுதமே!


- மேல்புலத் தோற்றப்பாடுகளும் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சாராம்சங்களும்'When everybody wants to fight there's nothing to fight for. Everybody wants to fight his own little war, everybody is a guerilla'
- James Ahmed

விலகி நின்று பார்க்கையில் விசித்திரமானதாகவிருக்கிறது உலகத்தின் போக்கு. ஓரிடத்தில் போற்றப்படுபவை மற்றுமோர் இடத்தில் இகழப்படுகின்றன. ஒரு சாராருக்கு இயல்பாகத் தோன்றுகின்றவை இன்னோர் சாராருக்கு அசாதாரணமாகிப் போகின்றன. அரசியல் நடத்தைகளிலும், பண்பாட்டுப் படிமங்களிலுமே இம்முரண்நகை அதிகமதிகம் வெளிப்பட்டுத் தெரிகின்றது.


யார் 'தீவிரவாதிகள்'..?


என்றென்றைக்குமாக செத்துப்போனவர்கள் நாங்கள்.. மீண்டும் சாகிறோம் இப்போது வாழ்வதற்காக.
- கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ்

உண்மையில் எவர்தான் தீவிரவாதிகளல்லரென தொடுக்கப்பட்டிருக்க வேண்டும் இவ்வினா. பொருட்பயன்பாடு / வார்த்தைப் பிரயோகத்தினை அடிப்படையாகக் கொண்டு நோக்குவோமாயின் தனக்கான கொள்கைப் பிடிப்புக்களிலிருந்து சற்றும் வழுவாமல், இரட்டை வேடமணியாமல் இறுதிவரை தனதேயான தனித்துவங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் போரிடுபவர்களனைவருமே - நஞ்சூட்டப்பெற்று மரணித்த சோக்ரடீஸிலிருந்து இந்தக் கணத்தில் உலகின் எங்கோவோர் மூலையில் தான் கொண்ட இலட்சியத்தின் பொருட்டு உயிர்துறந்து கொண்டிருக்கின்றவோர் போராளிவரை - ஒருவகையில் தீவிரவாதிகள்தான். காந்தியை 'மகாத்மா' என்கிறார்கள்; 'அஹிம்சாவாதி' என்கிறார்கள்; அவரைப்போல அமைதியாகப் போராடக் கற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்கள். காந்தியம் குறித்து கடும் விமர்சனமிருந்தாலும் அவருமொரு தீவிரவாதிதானென்பதை எத்தனைபேரால் ஏற்றுக்கொள்ளமுடியும்?

அப்படியேயாகுமெனில் (அப்படியாகாதெனினும்) 'பயங்கரவாதி' களென அடையாளப்படுத்தப்படுவோர் யார்? புறநிலைப் பொருட்களாலான ஆயுதங்களை / கருவிகளைத் தரித்தபடி, தம்மைத் தவிர்ந்த ஏனைய உடைமைகளுக்கு - அவை உயிராகட்டும், சொத்தாகட்டும், வேறேதேனும் பொருளாகட்டும் - சேதம் விளைவிப்பவர்களேயென பொதுமைப்படுத்தப்படுவதில் சிக்கல்களிலிருக்கின்றன. அப்படியெனின் அவர்களைச் 'சேதவாதிகள்' அல்லது 'உடைமைப் பறிப்பாளர்கள்' என அழைப்பது வேண்டுமானால் பொருத்தமாயிருக்கக்கூடும்.

ஆயுதங்களென எவற்றை வரையறுக்கிறார்கள்? இன்றைய காலத்தில் (பயங்கரவாதிகளின்) ஆயுதங்களென்றாலே எவரது நினைவிற்கும் முதன்முதலில் வருவது துடைப்பங்கட்டையளவிலான துவக்கும், கண்ணிவெடிகளும், இன்னுமின்னும் பல 'கறுப்பு' பொருட்களும்தான். தொழினுட்பம் முன்னேறிவிட அணுவாயுதங்களும், உயிரியல் ஆயுதங்களுமே கூட இன்று முக்கிய பேசுபொருளாகின்றனதான். ஆனால், இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழ்கிறோமென்ற மிதப்பில் என்றோவொரு காலத்தில் எமது மூதாதையர் வாள்களாலும், வேல்களாலும் அதற்கும் முன்னர் கற்களாலும், மரத்தடிகளாலும் போரிட்டனரென்பதை மறந்துவிடுவதோ, மறுத்துவிடுவதோ எந்தவிதத்தில் நியாயமாகும்?

ஏன் அவர்களைப் பயங்கரவாதிகளென அழைக்கிறோம்? எண்ணிப் பார்ப்பதற்கே பயங்கரமான காரியங்களை அவர்கள் செய்வதனாலென நீங்கள் சாட்டுச் சொல்லலாம். அதென்ன அது பயங்கரமான காரியம்... உயிர்பறித்தலொன்றும் அவ்வளவு சிரமமான காரியமல்லவே. இன்று நானுமொரு கொலை செய்தேனென்றால் யார் நம்புவீர்கள்? ஒன்றல்ல, இரண்டல்ல.. சரியாகச் சொல்வதானால் நான்கு உயிர்கள் இன்று என் சுயநலத்தின் பொருட்டு காவுகொள்ளப்பட்டன. நுளம்புகளைச் சொல்கிறேன். காதுக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டு உறக்கத்தைக் கலைத்துக் கொண்டிருந்தவைகளை சந்தர்ப்பத்திற்காய்க் காத்திருந்து, குறிவைத்து சடாரென்று கைகளால் தாக்கினேன். இரத்தம் தெறிக்க சுருண்டு வீழ்ந்து இறந்தன. இனம்புரியாதவோர் உணர்வு மனதில் மின்னி மறைந்தது. நாளை என்னையும் 'பயங்கரவாதி' யென அடையாளப்படுத்துமோ இந்த நுளம்புகள்? உயிரிழந்தவற்றின் உறவுகள் நாளையிரவு என்மீது போர்ப்பிரகடனம் செய்யக் கூடுமோ?

நுளம்புகளையும் மனிதவுயிர்களையும் சமானமாகக் கருதுவது எவ்விதத்தில் நியாயமென சிலர் கொதித்தெழக்கூடும். ஒரு போத்தல் கசிப்பைவிடவும் மனிதவுயிரின் பெறுமதி மலிந்துபோன தேசமொன்றில் காவியுடைகளும் குருதியில் தோய்ந்துகொண்டிருக்க... இதிலென்ன இருக்கிறது அதிசயிக்க..? இன்றே தொடங்கிவிட்ட நாளையினை முன்னிட்டு இந்தப் பொழுதின் இருத்தலுக்கெதிராகப் போராடும் அனைவருமே போராளிகள்தான்.


எது 'சுதந்திரம்'..?


இரத்தத்தில் பிறந்தது அந்தச் சொல்,
இருண்ட உடலில் வளர்ந்து, துடித்து
உதடுகளின் வழியாகப் பறந்து சென்றது அந்தச் சொல்

தூரத்தில் மிக அருகில்
இறந்த தந்தைகளிடமிருந்து
அலையும் இனங்களிடமிருந்து
கல்லாக மாறிய நிலங்களிலிருந்து
வந்தது அந்தச்சொல்
ஏழைப் பழங்குடிகளால்
களைத்துப்போன நிலங்கள்
துக்கம் சாலையை நிறைத்த போது
மக்கள் புறப்பட்டார்கள்
வந்து சேர்ந்தார்கள்
சொற்களை மீண்டும் விளைவிக்க
புதிய நிலத்தையும் நீரையும்
இணைத்தார்கள்
நாம் பெற்றிருப்பது இதுதான்
இன்னும் வெளிச்சத்திற்கு வராத
புதிய உயிர்களின் விடியலுடன்
இறந்த மனிதர்களுடன்
நம்மைப் பிணைக்கும் அலைவரிசையும் இதுதான்.
- பாப்லோ நெரூதா


01. ஊடக சுதந்திரம்/உரிமை

இன்றைய கொழும்புத் தமிழ் நாளிதழ்களின் தலையங்கங்களை அவசர அவசரமாக நோட்டம் விட்டதில் முகமெங்கும் இழையோடத் தொடங்கியது மெல்லிய புன்னகை.

மூதூர் புலிகள் வசம்; சமர் தொடர்கின்றது! படையினரின் பல மினி முகாம்கள் தொடர் வரிசையில் வீழ்ச்சியுற்றன.
- சுடரொளி

மூதூரிலும் சுற்றுப்புறங்களிலும் தொடர்ந்தும் கடும் சமர். நகரை புலிகள் கைப்பற்றியதாக கூறப்படுவதை படையினர் மறுப்பு.
- தினக்குரல்

மூதூரைக் கைப்பற்ற புலிகள் முயற்சி; இருதரப்புக்கும் கடும் மோதல். மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகள், ஆலயங்களில் தஞ்சம்.
- வீரகேசரி

ஒரே கதையை ஒவ்வொருவரும் எப்படிச் சொல்கிறார்கள். எவரென்ன செய்தாலும் பரவாயில்லை.. தனது தரப்பை மேம்படுத்த வேண்டுமென்ற முனைப்பு ஒருவரிடம். தனது தரப்பும் முக்கியம்தான்.. அதற்காக மற்றவரை பகைத்துக்கொள்ள முடியாதென்கிறார் இன்னொருவர். ஐயோ.. தரப்பை விடுங்கள்.. எனக்கு மற்றவர்களில் சரியான பயமென ஒதுங்கி பொதுப்படையாகப் பேச ஆரம்பிக்கிறார் வேறொருவர்.

ஊடகங்களின் அரசியலானது யதார்த்தத்தினையே புரட்டிப்போடும் ஆற்றல் வாய்ந்ததென்பதை எவரும் இலகுவில் மறுத்துவிட முடியாது. மாவிலாறு அணைக்கட்டுப் பகுதி இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு விட்டதென்று சிங்கள நாளேடுகளில் இன்று செய்தி வெளியாகியிருந்தமையை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். கெப்பற்றிப்பொல சம்பவம் மக்கள் மத்தியில் தேவைக்குமதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டளவுக்கு வங்காலைச் சம்பவமோ, எகலியகொட பம்பேகம தோட்டத்தில் காடையர் உட்புகுந்து மக்களைத் தாக்கியமையோ சிங்கள மக்களைச் சென்றடையவில்லையென்பதே உண்மை. இப்படியெல்லாம் நடந்திருக்கிறதாவென்றே அவர்களுக்குத் தெரிந்திருக்கப் போவதில்லை. இலங்கைத்தீவின் வரலாற்றேடுகளிலிருந்து தமிழர்கள் மற்றும் தமிழ் மன்னர்கள் பற்றிய குறிப்புக்களுக்கு நேர்ந்ததைப்போல இதனையும் திட்டமிட்ட மறைப்பென்றே கூறவேண்டும்.

தொடர்ச்சியாக நிகழ்ந்துவரும் ஊடகவியலாளர் மீதான வன்முறைகளையும், தொடர் கொலைகளையும்கூட கவனத்திற்கொண்டேயாக வேண்டும். கடந்த மாதம் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த, பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாகப் பத்திரிகைகளில் எழுதிவரும் சுதந்திர ஊடகவியலாளரான சம்பத் லக்மல் சில்வா (வயது 24) கடத்திச் செல்லப்பட்டு கொலையுண்டமைக்கு தலையற்ற உடல்கள் மலையகப் பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்களும் ஆதாரங்களும் அவரிடத்திலிருந்தமையே காரணமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூதூர் மோதல் தொடர்பாக தகவல்களெதனையும் வெளியிட வேண்டாமென இன்று அரசாங்கம் செய்தி ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமற்ற அறிவித்தலொன்றைக் கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதே. இவ்வறிவித்தலைத் தொடர்ந்து தனியார் வானொலிகளும் மௌனம் சாதிக்கத் தொடங்கியுள்ளதுடன் செய்தியறிக்கைகளைத் தவிர்த்து திரையிசைப் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கின்றன. அதுவுமொரு விதத்தில் நல்லதுக்குத்தான். மக்களைத் தூண்டிவிட்டு இனவழிப்பினைத் திட்டமிட்ட முறையில் மேற்கொள்வதை விடவும், அறியாமையிலாழ்த்தி நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க அரசாங்கம் முயல்வதை மனிதாபிமானரீதியான முயற்சிகளுள் ஒன்றாகவும் எடுத்துக் கொள்ளலாம்.


02. அறிதலுக்கான சுதந்திரம்/உரிமை (The right to know)

அண்மையில் பெரும்பான்மையினத்தினைச் சேர்ந்த தென்பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவியொருவருடனான உரையாடலின்போது, உண்மையில் உங்களுக்கு என்னதான் தேவை.. உங்களுக்கு என்ன இல்லையென்று போராடுகிறீர்களென்று அவர் வினவியபோது விக்கித்துப் போனது நெஞ்சம். சிங்கள மொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டமை, பல்கலைக்கழக அனுமதியில் மட்டுப்பாடு, யாழ். பொதுநூலகம் எரியூட்டப்பட்டமை, செம்மணிச் சம்பவமென ஒவ்வொன்றாக கூறக்கூற அவர் விழிவிரித்துக் கேட்டுக்கொண்டிருந்தார். இருந்தாலுமேகூட இது ஆயுதமேந்துமளவுக்கு பாரிய பிரச்சனையல்லவே.. பேசித் தீர்த்திருக்கலாமென்பது அவரது நிலைப்பாடு. ஆமாம்... தந்தை செல்வா, அமிர்தலிங்கம் காலத்திலிருந்து நாம் பேசிக்கொண்டுதானிருக்கிறோம். எதிர்க்கட்சியெனும் அந்தஸ்து 1977 களில் கைவசமானவுடன் தமிழீழத் தாயகத்தினை விழுங்கிவிட்டார்களென தமிழரசுக் கட்சியினரை ஒரேயடியாகக் குற்றம் சாட்ட முடியாதெனினும் - தமிழ்த்தேச அரசியலுக்கு அவர்களாற்றிய அளப்பரிய பங்கினை மறுத்துவிட முடியாதென்பதால் - உண்மை அதுவாகத்தானிருக்கின்றது. வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக்கொள்ளுமளவுக்கு எம்மவர்களின் வரலாறுகள் திறமானவையாகவில்லை. காரணம், அவ்வக் காலங்களின் அதிகார வர்க்கத்தினரின் நலன்களுடன் முரண்படும் எவையும் வரலாற்றில் தொகுக்கப்படுவதில்லை. யதார்த்தத்தினை நோக்கின், வரலாற்றில் கூறப்பட்ட விடயங்களையும் விட கூறப்படாத விடயங்களிலேயே உண்மையான வரலாறு பொதிந்துள்ளது.


03. நீதித்துறைசார் சுதந்திரம்

அதிகாரப்பிரிவினைக் கோட்பாட்டின்படி ஒரு சிறந்த ஜனநாயக ஆட்சி நிலவுவதற்கு இன்றியமையாததோர் காரணி எந்தத் தலையீடுகளுமில்லாமல், கட்டுப்பாடுகளுமில்லாமல் சுதந்திரமாக இயங்கக்கூடிய நீதித்துறையாகும். நீதித்துறையானது அரசுக்கோ / நாட்டின் தலைவருக்கோ கூட கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. நியாயத்தின்படி நடைமுறை அரசியலிலிருந்து (கூட்டாட்சி நாடுகளில் மத்திய / பிராந்திய அரசுகளுக்கிடையேயான பிணக்குகளைப் பாகுபாடில்லாமல் தீர்ப்பதற்கு) அது விலகியே நின்றாகவேண்டும். இலங்கைக்குப் பொருத்தமானதோர் தீர்வாக தற்போது முன்வைக்கப்படுவது - ஐரோப்பிய யூனியனையொத்த - நாடுகளின் கூட்டாட்சியென்ற கோட்பாடாகும். இதன் பொருத்தப்பாடுகளை விடுத்துப் பார்த்தாலும், இலங்கையில் நீதித்துறையின் நிலைமை கேள்விக்குரியதே.

இதற்கோர் சிறந்த உதாரணம்: யாழ். மேலதிக நீதவான் சிறிநிதி நந்தசேகரன் இராணுவத்தினரால் மிரட்டப்பட்டமை. அரச இயந்திரத்தில் அங்கத்துவம் வகித்துக்கொண்டே இராணுவத்தினரின் அடாவடித்தனங்களைத் துணிச்சலுடன் தட்டிக்கேட்பவர்களில் மிகவும் கவர்ந்தவர்கள் இவரும், வவுனியா மாவட்ட நீதிபதி இளஞ்செழியனும்தான். பாதுகாப்பு மற்றும் சோதனைகளைக் காரணஞ்சாட்டி யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் பாதுகாப்புக் கவசமணிந்து கொண்டு பயணிப்பதை இராணுவத்தினர் நிறுத்த முயற்சித்தபோதும், வீடுகளில் படலைகளை அகற்றும்படி நிர்ப்பந்தித்த போதும் மக்களின் முறையீட்டின் பேரில் அதனைத் தடுத்து நிறுத்தியவர் சிறிநிதி. மேலும், எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்தவொரு குடிமகனும் தன்னைத் தனிப்பட்ட முறையில் நாடிவந்து முறைப்பாடு செய்யலாமென பகிரங்கமாக அறிவித்து நீதித்துறையினர் மீதான மக்களின் நம்பிக்கையினை வலுப்படுத்தியவர்.

இத்தகைய காரணங்களுக்காக முன்னரும் பலமுறை அவர் இராணுவத்தினரின் சீண்டல்களுக்கு ஆளானபோதும், அவரது உத்தியோகபூர்வ வாகனத்தின் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடாத்த முயன்ற சந்தர்ப்பம் - நாடளாவிய ரீதியில் தமிழ் மக்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் மத்தியில் - பரவலான விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது.

வியக்க வைக்கும் ஆளுமைகளுள் ஒருவரான அவரை அண்மையில் சந்திக்கச் சந்தர்ப்பம் வாய்த்த போது, யாழ். இளைஞர்களின் மனோநிலை மாற்றங்கள் தொடர்பாக வருத்தம் தெரிவித்திருந்தார். தென்னிலங்கையை விடவும் இங்கே நிலைமை மோசமாகவுள்ளதெனவும், இரு தசாப்தகாலத்திற்கும் மேலாகத் தொடரும் முறுகல் நிலையினால் கசிப்பு அடிக்காமலேயே சக மனிதனின் கழுத்தைச் சீவுமளவுக்கு மக்களின் மனங்கள் இறுகிப்போயுள்ளனவெனவும் கூறியமை சிந்தனையைத் தூண்டியது. வாழ்ந்தால் அவரைப்போல வாழவேண்டுமென்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.


04. நடமாடுவதற்கான சுதந்திரம்

சில தினங்களுக்கு முன்னர் முச்சக்கர வண்டியொன்றில் பயணிக்கப் புறப்படுகையில் வண்டிச் சாரதி தனது தோழரொருவரையும் ஏற்றிக்கொள்வதற்கு அனுமதி கேட்டார். அவர்களிருவரும் பெரும்பான்மையினத்தவர்கள். முச்சக்கர வண்டிச் சாரதியுடன் வருடக்கணக்கான அறிமுகமிருந்ததாலும், மனிதாபிமான / சகமனித நேயத்துடனும் அனுமதிக்கப்போனதுதான் வினையாகப் போயிற்று. வழியில் இடைமறித்த பொலிஸார் ஆயிரத்தேட்டு கேள்விகளை முன்வைக்கலாயினர். இன்றைய நாட்களில் பெரும்பான்மையினத்தவர்களைக்கூட அவர்கள் நம்புவதாயில்லை. இராணுவத்தினரே பணத்திற்கு விலைபோகும் போது சாதாரணச் சனங்கள் எம்மாத்திரம்? அவர்களது சந்தேகித்தல்களின் காரணமாக அன்றைய பயணம் அரைமணி நேரத்திற்கும் மேலாக தாமதித்திருந்தாலும் ஒருவழியாக விடுபட்டு வந்தது நிம்மதிப் பெருமூச்சுவிட வைத்தது.

அண்மைக் காலங்களில் கொழும்பு நகரெங்கும் பொலிஸார் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுப்பதும், பாடசாலைகளிலும் மக்கள் குடியிருப்புக்களுக்கண்மையிலும் ஒன்றுகூடல்களை ஒழுங்குபடுத்தி வருவதும் குறிப்பிடத்தகுந்ததே. சந்தேகத்திற்கிடமானவர்கள்/பொருட்களைக் கண்ணுற்றால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மக்களும், மாணவரும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். ஆனாலும், சந்தேகத்திற்கிடமானவர்களென இவர்களால் அடையாளப்படுத்தப்படுபவர்கள் யார்? சந்தேகத்திற்கிடமானவர்களென்பது தொடர்பில் இவர்களது வரையறைகள் யாது? முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கான கருத்தரங்கின் போது வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள்:

'மூன்று பேருக்கு மேலதிகமாக வண்டியில் ஏறிவிட்டு இடையில் இறங்கிச் செல்லும் நபர் தொடர்பாகக் கவனமெடுக்க வேண்டும். வண்டியில் வரும்போது முக்கிய இடங்கள் தொடர்பாகக் குறிப்பெடுப்பவர்கள், அநாவசியமாக பேச்சுக் கொடுப்பவர்கள், முக்கியமான இடங்கள் தொடர்பாக விசாரிப்பவர்கள் தொடர்பில் அவதானித்து இராணுவத்திற்கு தகவல்களை வழங்கலாம் அல்லது இராணுவ, பொலிஸ் காவலரண்களில் சந்தேகப்படுபவர்களை ஒப்படைக்கலாம்.

செல்லுமிடத்தின் கட்டணம் தொடர்பாக எதுவித விசாரணையுமில்லாமல் ஏறுபவர்கள், வண்டியில் ஏறியபின் முக்கியஸ்தர்களின் விலாசங்களை விசாரிப்பவர்கள், செலூலர் தொலைபேசியினூடாக சந்தேகத்திற்கிடமாக உரையாடுவோர் தொடர்பாக கவனம் செலுத்தி பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவிக்க வேண்டும்.'

இச்சந்தர்ப்பத்தினை சிலர் தமக்கு வேண்டாதவர்களைப் பழிதீர்ப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் அவலமும் இடம்பெறத்தான் செய்கின்றது. மனிதர்கள் எப்போதும் மனிதர்கள்தான்.

இன்னமும் பேச்சுச் சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், உயிர்வாழ்வதற்கான சுதந்திரம், இத்யாதி.. இத்யாதி.. தொடர்பில் நான் கவனஞ் செலுத்தவில்லையென்பதனால் அப்படியும் சமாச்சாரங்களிருக்கின்றவென்பதையாவது மறந்துவிடாமலிருப்போம்.


என்னதான் 'தவறு'..?


எங்களை யாரும் பொருட்படுத்தவில்லை.
இயந்திரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் வாழ்க்கையைக்
காட்டிலும் எமது உயிர்கள் குறைவான மதிப்பை
உடையனவாகவே இருந்தன.
நாங்கள் கற்களைப் போல,
சாலையோரத்துக் களைச்செடிகள் போல இருந்தோம்.

எங்கள் குரல்கள் அடக்கப்பட்டன.
நாங்கள் முகமற்றவர்களாக இருந்தோம்.
நாங்கள் பெயரற்றவர்களாக இருந்தோம்.
எங்களுக்கு எதிர்காலமே இருக்கவில்லை.
நாங்கள் உயிர்வாழவே இல்லை.

எங்களுக்கு ஒரு குரல் வேண்டுமென்றால்
நாங்கள் ஆயுதங்களை ஏந்தவேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.
எங்களுக்கு ஒரு முகம் வேண்டுமென்றால்
எங்கள் முகங்களை மறைத்துக்கொள்ள வேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.
எங்களுக்கு ஒரு பெயர் வேண்டுமென்றால்
எங்கள் பெயர்களை மறந்துவிட வேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.
எங்களுக்கு ஓர் எதிர்காலம் வேண்டுமென்றால்
எங்கள் கடந்த காலத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.

எனவேதான் நாங்கள் போராளிகளானோம்.
எமது மக்கள் சாவதை
எமது மக்கள் ஏமாற்றப்படுவதை
இனியும் நாங்கள்விரும்பவில்லை,
நாங்கள் மறக்கப்படுவதை
இனியும் நாங்கள் விரும்பவில்லை.

எங்கள் கறுப்பு முகமூடிக்குப் பின்னால்
எங்கள் ஆயுதமேந்திய குரலுக்குப் பின்னால்
பெயர்சொல்லி அழைக்க முடியாத
எங்கள் பெயருக்குப் பின்னால்
நீங்கள் காண்கின்ற எங்களுக்குப் பின்னால்
நாங்கள் உண்மையில் நீங்களேதான்.
(நன்றி: எதிர்ப்பும் எழுத்தும் - துணைத்தளபதி மார்க்கோஸ்)

இழந்துவிட்ட உரிமைகளை, மறுக்கப்பட்ட சுதந்திரங்களை மீட்பதற்கு உயிரையும் ஆயுதமாக்கிப் போனவர்களின் நினைவாக...

Thursday, July 27, 2006

*மகா காலம் வியாபித்த அழியாத் துயர்...

பிரிவு என்னைப் பொறுத்தவரை பொய்..!


1.

என்னைப் பற்றியும்
உன்னைப் பற்றியும்
சொல்வதற்கு இனியேதுமில்லை

காலங்கடத்திப் போட்ட
தலைமுறையொன்றின் பிறள்வில்
சரிந்து கிடக்கிற
எம் வாழ்வின் மீது
ஒரு பனிக்காலத்தின் குளிர்மை
வசந்தகாலம் முழுதும்
சிறகடித்தொதுங்கும்
வண்ணத்துப் பூச்சிகளின் நிறக்குவியல்
மழைக்காலத்தின் செழுமை
இனியெதுவும் வேண்டாம்

வாழ்வின் அலைச்சலில்
எதையெதையோ பொய்யாக்கி
இனியும் யாரிடம் சொல்லப் போகின்றோம்

கேட்பதற்கும் சொல்வதற்கும்
யாருமேயற்ற நாளொன்றில்
நானும் நீயும்
நினைவுகளாய் கரைந்தொழுகி...
உன்னொத்த நண்பர்களை
இனியெங்கு தேடிப்போவேன்...

வாழ்வின் கரைசல்களில்
எல்லாம் வந்து போகிறது
அசைவற்றுப் போகின்ற உணர்வுகளில்
உள்மனம் எதையோ
வேண்டிக் கிடக்கிற கணங்களில்
நினைவுகளாய் மீண்டும்
ஏன் வந்து போகிறாய்

எதற்காக வெளிக்கிட்டோம்
இரு தசாப்தங்களைத்
தொலைத்த நாளொன்றில்
இன்னும் வெறுமையாய்
தோற்றுப் போனதென்ற பிரமையில்
நான்... நீயெப்படியோ...

நானும் நீயும்
நாமெல்லோரும்
காலங்கடத்திய
அந்த நாட்களும்
என்னில் அழிந்து போவதாய்
உணரும் போதெல்லாம்
வெடித்துச் சிதறுகிறது
மனப் பெருவெளி...

போர்க்காலத்தின் நெரிசலும்
வரண்டுபோன இந்த வாழ்வும்
சிதைந்து போன கனவுகளும்
இப்போதெல்லாம்
சுகமெனத் தெரிகிறது என்னில்.
- பி. ரவிவர்மன்


2.

யார் எங்கு போனார்கள்
எதற்கு எதுவுமே புரியவில்லை
என்றென்றைக்குமான அகதியாய்
ஓர் மூலையில் ஒதுங்கி

எதை இழந்தேன்
எதைப் பெறத் தோற்றேன்
வெற்றுக் கரத்துடன் வீதியில் இறங்கினேன்
வேதனையில் யாரோ விம்முகிறார்கள்
எங்கோ தூக்கமற்று இரவிரவாய் அழுந்தி
எங்கோவோர் இதயம் வேதனையில் துடிக்கிறது
வேண்டாம்!

அவலம் தரும் பிரிவு வேண்டாம்
பாழ்பட்ட பிரிவினைப்
பழிப்பேன் நான்
வலம் வந்த
இரக்கமற்ற நினைவுகளைப்
பழிப்பேன் நான்

தூக்கமற்று புரள்வதற்காய்
இரவுகள் வருகின்றன
பித்துப் பிடித்தலைவதற்காய்
பகல்கள் காத்திருக்கின்றன

விதியைப்பற்றி எச்சலனமும் இன்றில்லை
வேகமாக அதிர்ந்ததிர்ந்து
ஓயும் கணங்கள் இனியில்லை
இனி எவரும் வரப்போவதில்லை

இனி மனிதர்களைத் தேடி அலைய வேண்டும்
பாழ்வெளியில்
பறவைகளைப் பார்த்து ஏங்கி
குறுகுறுத்து ஓய வேண்டும்
- அஸ்வகோஷ்


3.

ஆசைமகனே என் அன்பான கண்மணியே
நேசத்துரையே நெடுந்தூரம் போனாயோ
உந்தன் தலையரிந்து ஓலைக் குடலைகட்டி
சென்று சென்று விற்றனரோ! தின்று பசியாறினரோ
அம்மாவென அழைக்கும் ஆசைத் திருக்குரலை
எம்மாதுளக் கொளுந்தே நான்கேட்ட தென்னாளோ
ஓங்கிய கத்தி விழும்போது உடல் நடுங்க
ஏங்கியெனை நினைத் தென்னம்மாவே என்றாயோ
- விபுலானந்தர்


* நன்றி - எம்.பௌசர்