Monday, December 04, 2006

அகமெங்கும் பொழியும் முன்பனிக்கால மந்தாரங்கள்


1.

உதடுகள் இறுகத் தாளிடப்பட்டு
ஊடறுக்க முடியா மௌனங்களுடன்
வாழ்தலின் கனம்
உயிர்தின்னத் தொடங்கியவோர் பொழுதில்
கழற்றியெறிந்த கச்சையின்
வியர்வை தோய்ந்த பெண்மையின் வாசனையை
ஆழ உள்ளிழுத்து
குலுங்கிக் குலுங்கியழுதபடி,
ஏதுமற்ற வெளியில் குருதி துளிர்க்க
காற்றைக் கிழித்து சுழன்று கீழிறங்கும்
மனச்சாட்டையின் முறுக்கிய மொழியில்
என் முலைகளுக்கு நான்
பேசக் கற்றுக்கொடுத்தேன்

சுவாலைவிட்டு நிலவு எரிந்து
கருகும் பிணவாடை கவிந்திருந்த இரவதனில்
ஊர் கேட்ட முதற் குரல்:
"நான் மகத்தானவள்..."
என்பதாயிருந்தது
நட்சத்திரங்களும் எதிரொலித்து
அண்டசராசரமெங்கும் நிறைந்து வழிய
காம்புகளில் துளிர்த்த
முதல் துளியின் வாசனை
பறைசாற்றிப் போகும்
நான் மகத்தானவள்..
மகத்தானவள்..

மொழியின் லாவகம் கைவந்த மறுகணம்
காலங்கள் பற்றியதான
இல்லாமலேயே போய்விட்ட பிரக்ஞைகளோடு
வெறித்த கண்கள்
தெருவோரமெங்கும் நிலைகுத்தி நிற்க,
நொடிக்கொரு திசையில்
திரைகளை விலத்தியபடி
விட்டேத்தியாய் சிறகடித்துப் பறக்கும்
என்னொரு முலை..
சமூகத்தின் அடிவயிற்றைக் கீறிப்பிளந்த
தடயங்களைச் சேகரித்தபடி
நானுமொரு பெண்ணென்ற கெக்கலிப்புடன்
பின்தொடரும் மற்றொன்று..

இனியெதற்கு என் தயவு
முலைகளே பேசட்டும்..,
கழுத்தை நெரிக்கும்
'ஆம்பிளை'த்தனங்களைப் பற்றி..
கால்களைப் பிணைக்கும்
யுத்தச் சங்கிலியைப் பற்றி..
இன்னமும்,
அந்தரத்தில் அலைவுண்டிருக்கும்
என் எப்போதைக்குமான
கனவுகளைப் பற்றி...


2.

அனைத்தையும் களைந்தெறிந்து
கனவுகளோடு மட்டுமேயென
வாழ முற்படுவது
தேவலை போலவும்...
அவள் தந்த உடலுக்காகவும்,
நோயில் வீழ்ந்த தேசமொன்றில்
நிர்ப்பந்திக்கப்பட்ட வாழ்தலுக்காகவும்
கண்காணா பரப்பிரம்மத்தை
சபித்துச் சபித்து
தேறுதலடைவது போலவும்...
கட்டற்று பிரவகிக்கும் வார்த்தைகளை
அதன் போக்கிற்குப் பெருக்கெடுத்தோட
அனுமதிக்க மறுத்தவோர்
தனித்த இரவதனில்
எப்படியும் நெஞ்சு வெடித்து
என்றென்றைக்குமாக இறந்துபோவேன்
யாரும் எதிர்பாரா பிரளயமொன்றிற்கு வித்திட்டபடி...

03.12.2006

7 comments:

த.அகிலன் said...

//என்றென்றைக்குமாக இறந்துபோவேன்
யாரும் எதிர்பாரா பிரளயமொன்றிற்கு வித்திட்டபடி...//

மனசின் உள்ளே நுழைந்து என் குமுறல்களையும் வருடிவிடுகிறது இக்கவிதைகள் நன்றி நிவேதா

Anonymous said...

ம்ம்ம்ம்ம்ம்!

Anonymous said...

உங்களது இந்தக் கவிதையை மட்டுமல்ல, நீங்கள் எழுதிய மற்றைய பதிவுகளையும் படித்துக்கொண்டிருக்கும்போதே மனசு கனத்துப் போகிறது.

தமிழ்நதி said...

நிவேதா,

உங்கள் ஆக்கங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். உள்ளுணர்வைத் தேடித் தொடுவதாக இருக்கின்றன உங்கள் எழுத்துக்கள். நிறைந்த வாசிப்பனுபவத்தையும் தேடலையும் கொண்டவர்களாலேயே இவ்விதம் எழுதுதல் இயலும்.

நிவேதா/Yalini said...

அகிலன், செந்தழல் ரவி, துவாரகன், பொறுக்கி, தமிழ்நதி... பின்னூட்டங்களுக்கு நன்றி!

"நட்டுவாக்காலி" என்ற அம்மாவின் கிண்டல்களையும் பொருட்படுத்தாது உச்சந்தலையில் இரட்டைப் பின்னலிட்டு துள்ளித் திரிந்த வயதில் பிரியமானவர்களின் பாராட்டுக்களையும், ஒரு செல்லக் கன்னக் கிள்ளலையும் எதிர்நோக்கித் தொடங்கிய பயணம்தான்... எவரும் வந்து செல்லமாய்க் கிள்ளிப்போகும் பருவங்களைக் கடந்துவிட்டதாக உலகம் கூறிக்கொண்டிருந்தாலும், என்னளவில் நான் இன்னமும் அதே ஏக்கங்களோடு.. நீட்டிய கன்னத்தோடு.. காத்திருக்கும் அதே இரட்டைசடைச் சிறுமி மட்டும்தான்..

sooryakumar said...

அற்ப்தமான எழுத்து நண்பி...!
நெஞ்சு கனக்கிறது.
நன்றி.

நிவேதா/Yalini said...

நன்றி, சூர்யகுமார்...