Friday, December 22, 2006

சிதைதல்

தொண்டைக்குள் சிக்குண்ட முள்ளென
நெஞ்சுக்குள் நெருடும்
என்னமோவொன்று
சமயங்களில்
நீ உடைத்தெறிய முயலும்
நெடும் மௌனங்களினூடு
தகர்ந்து போவது
என் முள்ளென்புகளும்தான

நெருக்கமான உரையாடல்கள்
அதன்பின்னரான விடைபெறுதல்கள்
உணர்வுகளை அசுரபசியுடன்
பிடுங்கித் தின்னும்
இந்தக் காதலுடன்
தொலைபேசி கைநழுவ
கால்களினிடையே முகம்புதைத்து
விம்மி விம்மியழும் பொழுதுக்கள்
இனிமேலும் வேண்டாமெனக்கு..

எதுவும் பேசிக்கொள்ளாத கணங்களின்
வலி தெறிக்கும் குரலில்
நினைப்பதனைத்தையும்
சொல்லிவிட முடிந்திடுமாயின்
சிதைதல் சிலகாலங்களுக்கேனும்
தள்ளிப்போகக்கூடும்

காத்திருத்தல்களில் வந்துமுடியும்
கனவுகளின் கனத்த முடிச்சுகளுடன்
தன் வழி ஏகுதலும்
பிரியம் கூற விழைதலும்
பழம் பஞ்சாங்கங்களாய்க் கசக்க
வெறும் வார்த்தைகள்
உன்னில் சலனங்களை
ஏற்படுத்தக் கூடுமோவென்ற
சந்தேகங்களோடு
முன்புபோல் எதுவும்
ஆறுதலளிப்பதாயில்லை

விழிநீரை வீணாக்குவது மட்டுமே அழுகையாகின்
அழத்தோன்றினால்
அழுவதில் ஒன்றுமேயில்லைதான்
நீயற்ற வெறுமைகளின்
இறுக்கந்தளர்த்த வழியற்று
இரத்தங் கசியக் கசியப் பாடலுறுவதே
எனக்கான அழுகையாகிப் போனமை
நீயறிவாயா எனதன்பே.

21.12.2006

9 comments:

Anonymous said...

மிகவும் அருமயான வரிகள்.
நெஞ்சின் ஆழத்தில் இனம் புரியாத வலியை..ஏற்படுத்துகின்றன உங்கள் எழுத்தின் வலிமைகள்.
ஒரு காட்சிப் படிமத்தை உருவாக்கி உருக வைக்கின்றன.
வாழ்த்துகள்.

Anonymous said...

I couldnt avoid reading it second time.

nalla irukku.

த.அகிலன் said...

//எதுவும் பேசிக்கொள்ளாத கணங்களின்
வலி தெறிக்கும் குரலில்
நினைப்பதனைத்தையும்
சொல்லிவிட முடிந்திடுமாயின்
சிதைதல் சிலகாலங்களுக்கேனும்
தள்ளிப்போகக்கூடும்//

மிகவும் அருமயான வரிகள்.

நிவேதா/Yalini said...

சூர்யகுமார், enbee, அகிலன்

பின்னூட்டங்களுக்கு நன்றி!

Anonymous said...

//விழிநீரை வீணாக்குவது மட்டுமே அழுகையாகின்
அழத்தோன்றினால்
அழுவதில் ஒன்றுமேயில்லைதான்//

நிவேதா/Yalini said...

நன்றி, அனானிமஸ்!

நந்தா said...

இந்த கவிதையின் முக்கிய வரிகளை மேற்கோள் காட்ட நினைத்து தேடி, சலித்து போனேன். வேண்டுமானால் கவிதை முழுசுமே மேற்கோள் காட்டலாம்.

உள்ள ஏதோ பண்ணுதுங்க உங்க கவிதைய படிச்சதுல இருந்து. வேற என்னத்தை சொல்ல?

நிவேதா/Yalini said...

பின்னூட்டத்துக்கு நன்றி, நந்தா!

JC Nithya said...

சுற்றியிருக்கும் எதுவுமே
நினைப்பில் உறைக்காமல்
வாசிப்பு எனுமொரு அனுபவத்தில்
முற்றிலும் மூழ்கிட செய்யும்
வசியம் உங்கள் எழுத்தில்.

மிகவும் பிடித்திருந்தது நிவேதா.