'எங்களைவிட எளிமையானவர்களாயும், எங்களைவிட அதிகப் பெருமிதத்தோடும், அல்லது குறைவான கண்ணீர்த்துளிகளோடும் இருப்பவர் யாருமில்லை'
நம்முடைய இதயங்கள் அதை ஒரு 'தாய'த்தாக
அணிந்துகொள்ளவில்லை.
கவிஞரின் கையின் கீழ் அது தேம்பியழவில்லை.
நம்முடைய கசப்பான தூக்கத்திலும் மறக்கவியலாத
அந்தக் காயங்களை எரிச்சலூட்டுவதும் இல்லை.
'அது உறுதியளிக்கப்பட்ட தேவலோகம்' அல்ல.
நம்முடைய ஆன்மாக்கள் அதன் மதிப்பை
விற்கவும், வாங்கவுமான ஒரு நுகர்பொருளாய்
கணக்கிடுவதில்லை.
நோய்மையும், ஏழ்மையுமாய், இந்த பூமியில்
மௌனமாய் இருந்துவரும் 'அதை'
பல நேரங்களில் நாம்
பொருட்படுத்தாமலே இருந்து வருகிறோம்,
ஆம், நம்மைப் பொறுத்தவரை அது எமது
புதைமிதியடிகளின் மீதான அழுக்கு,
ஆம், எம்மைப் பொருத்தவரை, அது எம்முடைய
பற்களுக்கு இடையிலான நறநறப்பு.
புழுதி, நாம் அதை அழுந்த மிதிக்கிறோம்.
நொறுக்குகிறோம், தேய்த்துப் பொடியாக்குகிறோம்,
மென்மையானதும், சிக்கலற்றதுமான பூமியை.
ஆனால் நாம் அதில் அமிழ்ந்திருப்போம்.
அதன் கிளைகளாகவும், மலர்களாகவும் மாறுவோம்,
ஆகவே அவமானமின்றிக் கூறுகிறோம் அதை -
நம்முடையதென்று.
- அன்னா அக்மதோவா
தற்பிரலாபங்களும் பின்புலத்துப் பரிகாசங்களும்
கொழும்பின் அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசமான காலிமுகத்திடலிலிருந்து இலங்கையின் மற்றுமொரு பிரபல்யமான தென்கரையோரத்து நகரமாகிய காலி வரை நீளும் காலிவீதியின் நெடுகே பயணிக்கையில் அமெரிக்க உயர்ஸ்தானிகராலயம் கழிந்து இன்னும் சில கட்டடங்களைத் தாண்டினால் ஒரு உயர்ந்த கட்டடம் - முகப்பில் சிகிரியா ஓவியம், 'A Land Like No Other' என்ற வார்த்தைகள் மற்றும் அழகிய நாவல் நிற மலரொன்றின் உருவத்துடனுமான - மாபெரும் சுவரோவியமொன்றுடன் நிமிர்ந்திருப்பதைக் காணலாம். இதுதான், Ceylon Tourist Board.
காலி வீதி கொழும்பு மாநகரின் பரிதாபத்திற்குரிய வீதிகளுலொன்று. நெரிசலான நேரங்களில் அவ்வீதியின் பதினைந்து நிமிடங்களில் கடக்கவேண்டிய தூரத்தைத் தாண்ட சமயங்களில் ஒன்றரை மணிநேரமும் எடுக்கலாமென்பதால் எமது காவல்துறையினர் - அந்நெரிசலினூடே தலைநகரின் பாதுகாப்பை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் வகையில் என்னவும் நடந்துவிடக் கூடுமென்ற பயத்தில் - போக்குவரத்து விதிகளை வாரத்துக்கொன்று என்ற நிலை மாறி, தற்போது நாளுக்கொன்றாய் மாற்றிவருகின்றமை வேறுகதை. இந்தச் சுற்றுலாச் சபையைக் கடக்கும்போதெல்லாம் கொட்டையெழுத்துக்களில் தெரிகின்ற A Land Like No Other என்ற வார்த்தைகள் முகத்தில் புன்னகையை நிரப்பிவிடத் தவறுவதில்லை.., 'துன்பம் வருங்கால் நகுக..' வென எவரோ கூறிவிட்டுச் சென்றமைக்கு இயைபாக.
1.
சதாமின் மரணம்: உலகை உலுக்கிவிட்டதென்பதெல்லாம் வெறும் மிகைப்பேச்சு.., எதிர்பார்த்ததுதான். எவருக்கும் இலகுவில் வளைந்து கொடுக்காத, கொள்கையுறுதியுடைய, உலகறிந்த (தேசியப் பற்றின் பொருட்டு சொந்த மருமகன்மாரையே கொலைசெய்த) தேசியவாதியொருவரின் இறப்பு வெறும் வாய்க்கு அவல் கிடைத்தாற்போல ஆளாளுக்கு
அபிப்ராயம் கூறுமளவுக்கு கேலிக்கூத்தாய்ப் போனதுதான் வேதனை. சரி, பிழைகள் பற்றியதான வாதப் பிரதிவாதங்களுக்கு முன் அத்தீர்ப்பின் நியாய / அநியாயங்கள் குறித்தும் கவனஞ்செலுத்த வேண்டியமை இங்கு தவிர்க்க முடியாததாகின்றது.., இன்னும் சில பின்புலக் காரணிகள் / மறைவுண்டுபோன சாராம்சங்கள் குறித்தும். ஈராக்கில் நிலவுவது அமெரிக்காவின் தலைமையிலான பொம்மையரசாங்கமென்ற வகையில் ஈராக்கிய நீதிமன்றம் வழங்கிய
தீர்ப்பின் திரைமறைவில் அமெரிக்காவின் அழுத்தமிருந்தமை அனைவருக்கும் தெரிந்ததே. சதாமிற்குத் தண்டனை வழங்க புஷ்ஷிற்கு யார், என்ன அதிகாரத்தைக் கொடுத்ததென்ற கேள்வி எழுவதும் இங்கு இயல்பானதெனினும் ஆழ நோக்குவோமானால், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சியின்போது இலங்கை உயர்நீதிமன்றம்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு 200 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட 'ஆயுள்' தண்டனை வழங்கியமைக்கு சற்றும் சளைத்ததல்ல இத்தீர்ப்பும்.
சதாமிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் பின்னணியிலான சில (அ)நியாயங்கள்:
- தன்னுடைய நாட்டின் இறைமைக்கு நேரடியாகப் பங்கமேற்படுத்தாத நாடொன்றை அமெரிக்கா ஆக்கிரமித்தமை. ஈராக்கில் இரசாயன ஆயுதங்களிருப்பதாகக் குற்றச்சாட்டுகளிருந்தாலுமேகூட அது ஐ.நாவின் பொறுப்பு. தவிரவும், ஈராக்கிற்கு அவை எப்படிக் கிடைத்தனவென்பதையும்.. வளைகுடா யுத்தத்தினையும் தற்போதைக்கு மறந்துவிடல் நலம்.
- ஈராக் மக்களை சதாமின் கொடூர ஆட்சியிலிருந்து விடுவிக்கும் ஒரு இரட்சகனாக - ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி - அமெரிக்கா கிளம்பியிருந்தால் அந்தத் தலையாய கடமையைப் பொறுப்பளித்தது யாரென்ற கேள்வி.. (சதாம் செங்கோலனோ, கொடுங்கோலனோ) உள்நாட்டுப் பிரச்சனைகளுக்குள் அமெரிக்கா தலையிட வேண்டுமென எந்தவொரு ஈராக்கியனாவது
வெள்ளைமாளிகையிடம் வேண்டுகோள் விடுத்திருந்தானாவென்ற சந்தேகம்..
- ஒரு நாட்டின் முன்னாள் தலைவரை, அவர் எத்தகைய படுகொலைகளுக்குக் காரணமாயிருந்தாலும், விசாரிக்கவென சர்வதேச மன்னிப்புச் சபை தோற்றுவிக்கப்பட்டிருக்க, (அதன் தீர்ப்பு எந்தளவு நியாயமாயிருக்கக்கூடுமென்ற கேள்விகள் எழுந்தாலும், அதுவே முறையென்றவகையில்) ஈராக்கிய நீதிமன்றம் இது உள்நாட்டுப் பிரச்சனையென்றபடி தான் பொறுப்பெடுத்தமை எந்தளவு ஏற்றுக்கொள்ளத்தக்கது..
இவை வெறுமனவே தீர்ப்பு பற்றிய விசனங்கள் மட்டும்தான். தீர்ப்பு நிறைவேற்றப்பட்ட விதம் தொடர்பாக இன்னும் பல கேள்விகளை எழுப்பலாம், எம்மால் முடிந்ததெல்லாம் அவ்வளவும்தானென கையாலாகாத்தனத்தை நொந்தபடி. மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களில் மதவாதத்திலிருந்து விடுபட்ட தேசியவாதத்துடன், தாம் கொண்ட கொள்கை நெறியினின்றும் இறுதிவரை விலகாதவர்கள் யசீர் அரபாத், சதாம் ஹ¤சேன், கேணல் கடாபி மூவருமே. இருப்பினும், முன்னவர்களின் மரணத்துடன் (யசீர் அரபாத்தின் இறப்பின் பின்னணியில் சதிமுயற்சியொன்றிருப்பதாக ஊகங்கள் வெளிவருகின்றமை குறிப்பிடத்தகுந்தது) கேணல் கடாபி நெகிழத் தொடங்கியுள்ளார்.
இவையனைத்தும் ஒருபுறமிருக்க, கொழும்புத் தெருக்களில் சில நாட்களாக ஆர்ப்பாட்ட ஊர்வலங்களும், கண்டனப் பேரணிகளும், சுவர்களை நிறைக்கும் போஸ்டர்களும்.. உத்தியோகபூர்வமாக அரசாங்கம் கண்டனமெதுவும் தெரிவிக்காத போதும் (இவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லையென யாரும் வருந்தவும் போவதில்லைதானெனினும்..) அரசியல் தலைவர்கள் பலர் சதாமின் கொலையைக் கண்டித்திருந்தனர். உண்மைதான், சதாம் இலகுவில் விலைபோகாத, தேசியத்திற்காக எதையும் செய்யத்துணிகின்ற, ஈராக்கின் நலனையே ஒரே இலக்காகக்கொண்ட தேசியத்தலைவர். குர்திஷ் இனப்படுகொலைகளை மேற்கொண்டமைகூட ஈராக்கைக் காப்பாற்ற தனக்கு வேறு தெரிவுகளில்லாமற் போனமையினாலேதானென ஒரு சந்தர்ப்பத்தில் அவர் கூறவும் செய்தார். தூரத்திலிருந்த ஒரு தேசியவாதியை எம் தலைவர்களால் புரிந்துகொள்ள முடியும்.., அவரது இழப்புக் குறித்து வருந்தவும் தெரியும்.., அதற்குக் காரணமானவர்களை வசைபாடவும் தெரியும்.. ஆனால், பக்கத்திலேயே இருப்பவர்கள் குறித்து எதுவித சலனமுமில்லை. ஏனெனில், அவர்கள் பயங்கரவாதிகள்!
வேடிக்கைதான். தினம் தினம் வடகிழக்கில் யுத்தத்தினாலும், பட்டினியினாலும் இறந்து கொண்டிருக்கும் உயிர்கள் குறித்து கண்டனம் தெரிவிக்க யாருமில்லை. இலுப்பைக் கடவையில் இறந்துபோன குழந்தைகள் பற்றிய கரிசனை எவருக்குமில்லை. ஆனால், சதாமின் கொலை மகா அநியாயம். இலுப்பைக் கடவையில் தாம் இலக்குவைத்துத் தாக்கியது விடுதலைப் புலிகளின் நிலைகளை மட்டுமேயென இராணுவப் பேச்சாளர் செய்திவெளியிட்டுள்ளார். தமது தளங்களுக்கு அருகே மக்களையும் அவர்கள் குடியமர்த்தி வைத்திருக்கிறார்களெனவே இழப்புக்கள் தவிர்க்க முடியாதனவாம். தாக்கப்பட்ட மக்களின் குடிசைகளுக்கருகே விடுதலைப் புலிகளின் தளமெதுவுமில்லையென யாழ்.ஆயர் கூறியிருந்தும், அதற்கான பதில் தென்னிலங்கையிடமில்லை. சிலவேளைகளில், மேலேயிருந்து பார்க்கும்போது குடிசைகள் 'காம்ப்' கள் போலத் தோற்றமளித்தனவென இராணுவப்
பேச்சாளர் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
2.
தொடர் பேருந்து குண்டுவெடிப்புக்கள் நிட்டம்புவவிலும், காலி ஹிக்கடுவையிலும். தலைநகரில் பதற்றம் அதிகரித்து அனைத்து வண்டிகளும் சல்லடையிட்டுச் சோதிக்கப்படுகின்றனவெனினும் என்னதான் பயன்? கொழும்பின் அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்துள்ளடங்குகின்ற லிபர்ட்டி சதுக்கத்திற்கருகில் இரண்டடிக்கொரு இராணுவத்தினரை வேகாத வெயிலுக்குள் நிறுத்தி வைத்திருந்தாலும், குண்டுவெடிப்புகளுக்கொன்றும் குறைச்சலில்லை. பாகிஸ்தானியத் தூதுவர் முதல் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரான மகிந்தவின் தம்பி கோத்தபாய ராஜபக்ஷ ஈறாக அனைவரையும் இலக்குவைத்து அங்கேதான் தாக்குதல் நடாத்தப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலையின்போதும் இப்படித்தான் விழிவிரிக்க நேர்ந்தது. பத்தடிகொரு பரிசோதனை நிலையத்தை அமைத்து அப்படி எதைத்தான் சோதிக்கிறார்கள்?
குண்டுகளையும், துவக்குகளையும் தவிர மிச்சமனைத்தையுமாக்கும். பற்றாக்குறைக்கு துப்புத் துலக்க ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸாரின் தயவு தேவைப்படுகிறதாம். நாளைக்கு அவர்கள் தரும் அறிக்கை பாதுகாப்பலுவலகத்தின் குப்பைத் தொட்டிக்குள் கண்டுபிடிக்கப்படும். ஆக மொத்தத்தில் அனைத்துமே வெறும் கண்துடைப்புத்தான். இதையும் நம்பிக்கொண்டுதானிருக்கிறார்கள், அப்பாவிச் சிங்களவர்கள்.
பேருந்துகளில் தொடர்ந்து குண்டுவெடித்ததைத் தொடர்ந்து தென்னிலங்கையின் சில பகுதிகளில் ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்களின் அறிக்கைகள் திசையெங்கும் பரவுகின்றன: பிரபாகரனுக்கு இரத்த வெறி அதிகரித்து விட்டது.. சமாதானப் பாதையில் தொடர்ந்து நின்றுவரும் அரசாங்கத்தின் பொறுமையைப் புலிகள்
சோதிக்கிறார்கள்.. மக்களின் பாதுகாப்பையும், உரிமைகளையும் உறுதிசெய்யும் பொருட்டு சர்வதேசம் அவர்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் செலுத்தவேண்டும்.. இன்னபிற...
கடந்த ஞாயிறன்று, கொழும்பின் பிரசித்தி பெற்ற தேவாலயமொன்றில் பிரார்த்தனைக்குப் பின்னரான பிரசங்கத்தின் இறுதியில் பாதிரியார் கூறுகின்றார்: எல்லாம் வல்ல இறைவன் இரத்தவெறி பிடித்தலையும் இந்தப் பாவிகளை மன்னித்து அவர்களுக்கு இரக்க சிந்தையைக் கொடுத்தருள்வாராக...
3.
சில நாட்களாக கொழும்பைப் பரபரப்பிற்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன, அரசாங்கத்தின் திடீர் நடவடிக்கைகள். 20 மைக்ரேனுக்குக் குறைந்த பொலித்தீன் பாவனை முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. தடுமாறிப் போனவர்கள், பொதுமக்களும் சில்லறை வியாபாரிகளும்தான். தற்போதைக்கு இருப்பிலிருப்பவற்றை ஒன்றும் செய்ய இயலாதாகையால் மூன்றுமாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சூழல் மாசடைதலைக் கருத்திற்கொண்டால் இதுவொரு நல்ல தீர்மானம்தான். என்றாலும், நாடு கிடக்கும் கேட்டிற்கு இதொன்றுதான் குறைச்சலென்றே சிந்திக்கத் தோன்றுகின்றது.
நாட்டில் பணவீக்கம் படுமோசமான நிலையை எட்டியுள்ளது. பச்சைத்தாளென ஒருகாலத்தில் வாய்பிளந்த ஆயிரம் ரூபாய்த்தாள்கூட சட்டென்று பெறுமதியிழந்துவிட்டது. சிலகாலங்களுக்கு முன்புவரை, பேருந்துகளில் நூறு ரூபாய்த்தாளை நீட்டினால் நடத்துனர் சினந்துகொண்டு சமயங்களில் நடுவழியில் இறக்கியும் விடுவார்.. இப்போதெல்லாம் சர்வசாதாரணமாக
வாங்கி மாற்றிக் கொடுக்குமளவுக்கு பேருந்துக் கட்டணங்களும் எகிறிப் போயின. போதாக்குறைக்கு பேருந்துகளில் கட்டாயம் பயணச்சீட்டு வழங்கப்படவேண்டுமெனவும் சட்டம் கொண்டுவரப்பட்டதில் நடத்துனர்களின் நிலைதான் பாவம். பேப்பர் விற்கும் விலை அரசாங்கத்திற்கெங்கே தெரியும்.. மிச்சம் பிடிக்கவென்றிருந்த கடைசி மார்க்கமும் கைநழுவிப்
போயிற்று. கொழும்பு, நீர்கொழும்புப் பகுதிகளில் பயணச்சீட்டு கொடுக்காத 81 பேருந்துகள் சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை கொசுறுத் தகவல்.
இத்தகைய அல்லல்களுக்கு மத்தியிலும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவுயர்வுப் (அடிப்படைச் சம்பளமான 120 ரூபாயை 300 ரூபாயாக உயர்த்த வேண்டி) போராட்டம் முடக்கப்பட்டமையானது அரசியல் தலைவர்களின் சாதனைதான். இலங்கை உண்மையிலேயே வனப்பு மிக்கதோர் நாடுதான். எழில்கொஞ்சும் கடற்கரைகள் மற்றும்
பசுந்தேயிலைத் தோட்டங்களுடன். நாட்டின் அந்நிய செலாவணியைப் பொறுத்தவரை இரண்டாவது அதிகூடிய ஸ்தானத்தைப் பெற்றிருப்பது தேயிலை ஏற்றுமதியே. முதலிடத்தை தைத்த ஆடைகள் பெற்றிருப்பதும், அடுத்தடுத்த இடங்களை தேயிலை ஏற்றுமதி மற்றும் மத்திய கிழக்குப் பணியாளர்கள் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தகுந்தன. கோட்டா
முறை முடிவடையத் தொடங்கியதிலிருந்து தைத்த ஆடைகளுக்கான ஏற்றுமதி வருமானம் தளம்பலடையத் தொடங்க இலங்கையின் பொருளாதாரம் பெருமளவு தேயிலை உற்பத்தியினையே சார்ந்திருக்கின்றது.
இருந்தபோதுமே கூட இத்தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்களின் நிலை குறித்த அக்கறை அரசியல்வாதிகளுக்கோ ஏன் தொழிற்சங்கங்களுக்கோ கூட இருப்பதாகத் தெரியவில்லை. நாட்டின் ஏனைய தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் அதிகளவில் வர்க்க ரீதியான சுரண்டல்களுக்குள்ளாகும் இவர்கள் போதாக்குறைக்கு
மலையகத் தமிழர்களென்ற வகையில் இனரீதியான ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாகின்றார்கள். மலையகத்தின் புவியியலமைவே இம்மக்களது ஒன்றுபடலுக்கும், எழுச்சிக்கும் பெருந்தடையாக அமைகின்றது. அதையும் மீறி போராடப் புகுந்தால் எங்கிருந்தாவது வந்து நுழையும் அரசியல்வாதிகள் தமது சுயநலத்திற்காக மக்களது வாழ்வாதாரத்தை விலைபேசி
அமுக்கிவிடுவார்கள். கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளே பூர்த்தி செய்யப்படாத நிலையில் சுதந்திர இலங்கையின் மிகக் கேவலமான அடிமைகளாக வாழ்ந்திருக்கும் இவர்கள் கேட்பதென்னமோ ஒரு முந்நூறு ரூபாய்தான். ஒரு இறாத்தல் பாண் 23 ரூபா.. ஒரு கிலோ அரிசி (மிக மட்டமானதுகூட 40 ரூபாய்க்குக் குறையாது) 45 ரூபாய்.. எந்தவொரு
மரக்கறியுமே கால்கிலோ 20 ரூபாய்க்குக் குறைத்து வாங்கிவிட முடியாது. ஐந்துபேர் கொண்ட சிறிய குடும்பமாயிருந்தாலும், ஒருவேளை உணவுக்கு இவையனைத்தும் போதாதென்பது ஒருபுறமிருக்க, நூற்றிருபது ரூபாயைக்கொண்டு கஞ்சி கூடக் காய்ச்சமுடியாதென்பதுதான் உண்மையிலும் உண்மை.
உணவுப் பிரச்சனைக்கும், எகிறிவரும் விலைவாசிக்கும் வழிகாணமுடியாதவர்களுக்கு தேவைதான்... பொலித்தீன் பையால் விளையும் சூழல் மாசடைவும், பயணச்சீட்டுகளும்.., தமது கையாலாகாத்தனத்தை மறைப்பதற்காவது.
............
எங்கே மனம் அச்சமற்று இருக்கிறதோ
எங்கே தலை கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கிறதோ
எங்கே அறிவு சுதந்திரமாய் சஞ்சரிக்கிறதோ
எங்கே சொற்கள் உண்மையின்
அடித்தளத்திலிருந்து பிறக்கின்றனவோ
எங்கே உலகம் சாதி மதப் பிளவுகளால்
உடையாமலிருக்கிறதோ
எங்கே இரக்கமும் செயல் முயற்சியும்
முழுமையை நோக்கி கைகளை நீட்டுகின்றனவோ
எங்கே தெள்ளிய நீரோடைகள்
மாண்டொழிந்து போன பழக்கவழக்கமெனும்
பாலைநிலம் வழியே செல்லாமலிருக்கின்றனவோ
அந்த சொர்க்கபூமியை நோக்கி - என் தந்தையே
என் நாடு விழித்தெழட்டும்!
- ரவீந்திரநாத் தாகூர்
கனவுலகப் பொருண்மைகளைப் பிதுக்கி வெளியேறும் யதார்த்தம்
சமீபத்தில், மிக நீண்ட காலத்திற்கு முன் அருளரால் எழுதப்பட்ட 'லங்கா ராணி' நாவல் வாசிக்கக் கிடைத்தது. 1977ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற இனக்கலவரத்தின்போது பாதிக்கப்பட்டு கொழும்பின் அகதிமுகாம்களில் நிறைந்துவழிந்த தமிழர்களை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணத்திற்குப் பயணித்த கப்பலின் பெயரே இது. நாவலும் அக்கப்பலின்
மூன்று நாள் பயணத்தின்போதான நிகழ்வுகளை விழிமுன் நிறுத்துவதாகவும், இனப்பிரச்சனையின் வரலாற்றை ஆவணப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. கடந்த காலங்களிலிருந்து எவற்றையும் கற்றுக்கொள்ளுமளவுக்கு எமது
வரலாறுகள் உவப்பானதாகவில்லையெனும் யதார்த்தம் மறுபடியுமொருமுறை மனதிலறைந்துவிட்டுச் செல்ல.. 58, 77 இனக்கலவரங்களை முழுமையாகப் புரிந்துகொண்டிருந்தால் 83 த் தவிர்த்திருக்கலாமென பெருமூச்சுவிட மட்டுமே முடிந்தது.
ஆங்கிலேயரின் வருகையிலிருந்துதான் அனைத்துமே ஆரம்பிக்கின்றன. தமது செலவுகளைக் குறைத்துக்கொள்ளும் பொருட்டு கோட்டை, கண்டி, யாழ்ப்பாணமென்ற மூன்று பெரும் பிரதேசங்களையுமிணைத்து ஒரே நிர்வாகத்திற்குக் கீழ் அவர்கள் கொண்டுவந்தனர். சிறுபான்மையினரான தமிழர் அரசாங்கத்தின் பெரும்பான்மையான பதவிகளைக் கைப்பற்றிக்
கொள்ள, 1948ல் ஆங்கிலேயர் நாட்டை விட்டுப் போனதும் முறுகல் வலுக்கத் தொடங்குகின்றது. இது கலிங்க மகான், எல்லாளன் காலத்து அத்துமீறலென்ற உணர்வு சிங்களவர் மத்தியில் புகட்டப்பட.. தமிழ்த் தலைவர்கள் பராக்கிரமபாகுவும்,
துட்டகைமுனுவும் இறந்துவிட்டனரென்ற நம்பிக்கையுடன் வாளாவிருந்தனர்.
மனிதர்கள் எப்போதுமே மனிதர்கள்தான். இந்தியாவில் நிகழ்ந்ததைப் போன்றதோர் விடுதலைப் போராட்டம் பிரித்தானியர்களுக்கெதிராக இலங்கையில் நடவாதமைக்கான காரணமென்ன..? ஆராயப் புகுந்தால் தெளிவாகும் பல. இண்டர்லெக்ஷ¤வல் வியாபாரிகள் தமது சுயநலன்களுக்காக மக்களது போராட்டத்தையே விலைபேசக் கூடியவர்கள்.
அன்றைய அருணாசலம், இராமனாதன் தொடக்கம்.. இன்றைய அறிவுஜீவிகள் பலரும் செய்துகொண்டிருப்பது அதைத்தான். படித்தவர்களுக்கு சித்தாந்த ரீதியாக ஆயிரம் கேள்விகளிருக்கும்.. பத்தாயிரம் சந்தேகங்களிருக்கும்.. எனினும், சாதாரண
மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவர்கள் வெகு சிலரே.
இவையனைத்தும் ஒருபுறமிருக்க, 'இன்னுமொரு துட்டகைமுனு..' என்ற சிங்கள வாசகங்களுடன் கொழும்பு நகர மண்டபத்து சுற்றுவட்டத்தில் காணப்படும் ஜனாதிபதி மகிந்தவின் தென்னைமர உயரத்து போஸ்டரை சமயங்களில் பேருந்தில் கடந்து செல்ல நேர்கையில்.., A Land Like No Other ம், லங்கா ராணியும் நினைவுக்கு வருவதை மட்டும் ஏனோ தவிர்க்கவே முடிவதில்லை.
இறுகிப்போன கணங்களை முன்னிட்டு...
நன்றி: தமிழ்நதி (அன்னா அக்மதோவாவுக்காக..)
16 comments:
"வேடிக்கைதான். தினம் தினம் வடகிழக்கில் யுத்தத்தினாலும், பட்டினியினாலும் இறந்து கொண்டிருக்கும் உயிர்கள் குறித்து கண்டனம் தெரிவிக்க யாருமில்லை. இலுப்பைக் கடவையில் இறந்துபோன குழந்தைகள் பற்றிய கரிசனை எவருக்குமில்லை. ஆனால், சதாமின் கொலை மகா அநியாயம்."
இதைத்தான் நிவேதா சொல்லிக்கொண்டிருக்கிறேன் பலகாலம். பாவம்... சிலருக்கு கேட்க விரும்பாதவைகள் காதில் விழுவதில்லையோ.. வடிகட்டி அனுப்பும் வித்தையைச் செவிகள் எங்கே கற்றுக்கொண்டனவென்று தெரியவில்லை. 'தமிழ்நதிக்கு நன்றி' எனது புத்தக அடுக்கில் வாசிக்கப்படுவதற்காக காத்திருப்பதற்குப் பதிலாக உங்களிடம் வந்தடைந்ததற்காக அந்தப் புத்தகம் உங்களுக்கு இப்போது நன்றி சொல்லிக்கொண்டிருக்கக்கூடும். உற்றுக் கேளுங்கள்.
உருப்படியாக ஒன்றும் சொல்லிவிடப் போவதில்லையானாலும், ஒன்றும் சொல்லாமல் கடந்து போகவும் முடியவில்லை.
நன்று.
//1977ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற இனக்கலவரத்தின்போது//
நீங்களுமா?
தமிழ்நதி, கண்ணன், அனானிமஸ்.. பின்னூட்டங்களுக்கு நன்றி!
தமிழ்நதி, தன் முதுகு தனக்குத் தெரியாதென்பதைப் போலத்தான் இதுவுமாக்கும். அமெரிக்கா செய்தால் பிழை.. அதையே தான் செய்தால் சரி.. இங்கே அமெரிக்காவை நியாயப்படுத்துகிறேனென அர்த்தமில்லை.. எதற்குமொரு தகுதி வேண்டும்.. கண்டனம் தெரிவிக்கவோ, குறை குற்றம் கண்டுபிடிக்கவோ.. மற்றும்படி, புத்தகத்தோடு சேர்த்து நானும் நன்றி கூறிக்கொண்டுதானிருக்கிறேன்.. இப்போதைக்குக் கேட்டிருக்க வேண்டுமே..:-)
கண்ணன், சொல்வதைத் தவிர எங்களாலானது எதுவுமேயில்லையென்றாகிவிட்ட நிலையில் அதையாவது செய்வதிலொரு திருப்திதானே..
அனானிமஸ், குறிப்பிட விரும்புவது சத்தியமாகப் புரியவில்லை. நீங்களுமா?? என்ற கேள்வியின் அர்த்தமும் விளங்கவில்லை. இனக்கலவரமென்ற வார்த்தைப் பிரயோகம் தவறாகவிருக்குமாயின் மன்னிக்க வேண்டுகிறேன். 77 கலவரத்தின்போது நான் கொழும்பில் வாழ்ந்திருக்கவில்லை. அதைப்பற்றி அறிந்ததெல்லாம் வாசித்தும், கேட்டும்தான். இனக்கலவரமல்லவென்றால் நடந்ததற்குப் பெயரென்ன.. மதக்கலவரமா.. சாதிக்கலவரமா.. இல்லாவிட்டால் சிங்களவரின் நியாயமான போராட்டமா.. எப்படி அழைப்பதை விரும்புகிறீர்கள்..?
அல்லது சிலவேளை, எப்போதோ நடந்து முடிந்துவிட்டதை இப்போதேன் தூக்கிப் பிடிக்க வேண்டுமென்ற அர்த்தத்தில் கேட்டீர்களோ என்னமோ.. அதைவிடக் கேவலமானதெல்லாம் நடந்துவிட்ட பிற்பாடு, தற்செயலாக வாசிக்கக் கிடைத்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்ததையே எடுத்துக் கூறவிரும்பினேன். அவ்வளவும்தான்.
நீங்களுமாவென்றால்.. ஆமாம், நானும்தான். என்றாலும், இவை எனது தனிப்பட்ட விசனங்கள் மட்டுமே. அந்த 'நீங்களென்ற' குழுவுக்குள் தயவுசெய்து என்னையும் கூட்டுச் சேர்த்துவிடாதீர்கள்.
//படித்தவர்களுக்கு சித்தாந்த ரீதியாக ஆயிரம் கேள்விகளிருக்கும்.. பத்தாயிரம் சந்தேகங்களிருக்கும்.. எனினும், சாதாரண
மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவர்கள் வெகு சிலரே.//
ம்.... யதார்த்தத்தில் இருந்து தாங்கள் வடிவமைத்துக் கொண்டுள்ள ஒரு உலகத்தில் இருந்து கொண்டு தாங்கள் விரும்பிய எல்லாக் கருத்துகளையும் அபிப்பிராயங்களையும் சொல்லுவதற்கு அவர்கள் அனைவருக்கும் இருக்கும் கருத்துரிமையில் காணாமல் போவது எதையும் சொல்லுவதற்கு வாய்ப்பற்றுப் போகும் அப்பாவியான தமிழர்களும் சிங்களவருமே.
மிக மென்மையாக வன்முறையின் வலிகளைப் பற்றி சொல்லுகிறீர்கள்.
தங்களை அறிவுசார் பிரதிநிதிகளாக பகிரங்கப் படுத்துவதற்கு தமிழகத்தில் தலித்தியம் பெண்ணியம் என்பவை போல சதாம் பற்றியும் உலக மனித உரிமை பற்றியும் இப்போது நிறையப் பேர் பேசுகிறார்கள்.தங்கள் இருப்பை நிலைப்படுத்துவதற்கான செயலிது.
உங்களை சார்ந்த மனிதர்களின் நியயங்களை பேசுவதற்கான எழுதியல் முனைப்பு உங்களிடம் இருப்பதாக நம்புகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி நிவேதா.
நன்றாக எழுதுகிறீர்கள்.இலங்கையில் இருந்து எழுதுவது சந்தோசம்.
பெயரிலி குறிப்பிட்ட"நீங்களுமா"
என்பதன் அர்த்தம் நான் அறிந்தவரை.
"இனக்கலவரம்" என்று நீங்கள் குறிப்பிட்டதை தான். இனக்கலவரம் என்பது இனங்களுக்கிடையான கலவரத்தினை குறிப்பிடும்.அந்தவகையில்
க்டந்த காலங்களில் இலங்கையில்
நடந்தவை இனக்கலவரமே அல்ல.
இலங்கையில் சிங்களவர்கள்தான் தமிழரை தாக்கி கொன்றார்களே ஒழிய
இரு இனங்களும் மோதவில்லை.
எனவே நீங்கள் குறிப்பிட்ட "இனக்கலவரம்" என்ற சொற்றடரை பெரும் பாலான ஈழத்து வலைப்பதிவர் பாவிப்பதில்லை.
அதைத்தான் அவ்ர் குறிப்பிட்டுள்ளார்.
புரிந்து கொள்வீர்கள் என் ந்ம்புகிறேன்.
நிற்க கொழும்பில் இருந்து எழுதும் நீங்கள் பல் விடையங்களை உங்கள்
எழுத்தில் கொண்டு வருவீர்கள் என்று
நம்ம்புகின்றேன்.
நன்றி...
நன்றி, சோமி!
ம்ம்ம்.. இந்தக் கருத்துரிமை தொடக்கம் அனைத்து மண்ணாங்கட்டிகளும் அரசியல்வாதிகளுக்கு மட்டும்தானென்பது எழுதப்படாத விதியாகிப் போனது. எதிர்க்க முனைந்தவர்களுக்கு நடந்ததென்னவென்பது நான் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லைதானே.
தமது இருப்பை நிலைநாட்டுவதற்காகப் போராடும் உரிமை அனைவருக்குமிருப்பதாக நம்புகின்றேன். என்றாலும், வேதனைப்பட வைப்பது தம்பக்க நியாயங்களின் உறுதிப்பாட்டைப் பேணுவதற்காக என்னவும் செய்யலாமென்ற அவர்களது தான்தோன்றித்தனமான மனப்போக்குத்தான்.
விளக்கத்திற்கும், பின்னூட்டத்திற்கும் மிக மிக நன்றி.., கரிகாலன்!
இலங்கையிலிருந்து எழுதுவது உங்களுக்கு வேண்டுமானால் சந்தோஷமாக இருக்கலாம்.. பல விடயங்களை எழுத்தில் கொண்டு வரலாமெனினும்.., கொழும்பிலிருந்து எழுதுவதுதான் பிரச்சனையே..:-)
அனானிமஸாய் பின்னூட்டமிட்டவர் பெயரிலியென்பது நீங்கள் கூறித்தான் தெரியவந்தது.. விளக்கமளித்தமைக்கு மிகவும் கடமைப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.., நன்றி!
மற்றும்படி, எமது மக்களின் தெருவோரத்துக் குடுமிப்பிடிச் சண்டைகளுக்கு சற்றும் சளைக்காத 'வலைப்பதிவுகளின் அரசியல்' மனதுக்கு உவப்பானதாயில்லையென்பது ஒருபுறமிருக்க.., பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் தமக்கான அரசியலுடனும் அதை மையப்படுத்திய வரையறைகளுடனும் செயற்படுவதன் காரணமாகவும்.., எதுவித எல்லைகளுள்ளும், சட்டகங்களுள்ளும் அடைபட்டுவிடாத சஞ்சிகையொன்றை ஆரம்பித்து நடாத்துவதற்கு பொருளாதார வசதி இடங்கொடுக்காததனாலும்.., இதனைக் கைவிட முடியவில்லை.. அதேவேளை, எப்போதாவது இருந்துவிட்டு நுனிப்புல் மேய்வது தவிர.., அதிகமாக நேரம் செலவளிக்கவும் விருப்பமில்லை.
இந்நிலையில் வலைப்பதிவர்கள் பாவிக்கும் / பாவிக்காத சொற்றொடர்கள் எனக்குத் தெரியவர வாய்ப்பேயில்லைதானே.., மன்னிக்க வேண்டுகிறேன்! உண்மையின்படி, நீங்கள் கூறுவதும் நியாயம்தான்.. இனக்கலவரமென்ற சொல் சற்றும் பொருத்தமானதல்லவென்று புரிகிறது.., நன்றி! எனினும், அந்நிகழ்வை 'இனக்கலவரம்' என்றே அடையாளப்படுத்தியிருந்த அந்நாவல் இன்றைக்கு 20 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டிருக்க.. எமது எழுத்துக்களை மீள்பரிசீலனை செய்யவேண்டியதன் அவசியமும் புரிகிறது.
குடுமிப்பிடி குழுச்சண்டைகளுக்கு மத்தியில் இப்படிப்பட்ட நல்ல விடயங்களும் வலைப்பதிவுலகில் இடம்பெறுவது வரவேற்கப்படத்தக்கதே..
நன்றி நிவேதா.
அனானியாய் பேசியவரைதான் பெயரில்லாதவர் என்ற ரீதியில் பெயரிலி என்று குறிப்பிட்டேன் ஒழிய வலைப்பதிவில்"பெயரிலி" என்று பெயரில்
வலைபதிந்து வரும் ரமணீதரனை அல்ல.
கொழும்பில் இருந்து வலைபதிவதில்
உள்ள சிரமங்களை நான் அறிவேன்.
உங்கள் பாதுகாப்பில் கவனம் எடுங்கள்.
வலைப்பதிவுகளில் எத்தனையோ நல்ல
விடையங்களும் இடம்பெறுகின்றன.அவற்றை கருத்தில்
எடுங்கள்.
நன்றி, கரிகாலன்!
இந்தப் பெயர்களின் பின்னாலுள்ள அரசியலை மறுப்பவள் தானெனினும், சமயங்களில் ஒருவரை அடையாளப்படுத்துவதன் பின்னணியிலான குழப்பங்களைத் தவிர்த்துக் கொள்வதற்கு அது அத்தியாவசியமாகின்றமையையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகின்றது. பெயர்களைத் தொலைப்பதானது - எம்மைப் போன்ற பலரினதும் - மாளமுடியா grief (தமிழில் எப்படி அழைக்க?) ஆகவும், அதேவேளை போலி அடையாளங்களையும், முன் மதிப்பீடுகளையும் துடைத்தெறியும் வகையில் மாபெரும் விடுபடலாகவும் அமைவது உண்மைதான். இருந்தாலும், இந்தப் பெயர் குறித்த குழப்பங்கள் விழிபிதுங்க வைக்கின்றன.. individual stuffs ஐ பொதுமைப்படுத்தப்போனால் இதுதான் விளைவாக்கும். வேண்டாமே..
வலைப்பதிவுலகில் எத்தனையோ நல்ல விடயங்களும் இடம்பெறுவது அறிந்ததே. எனினும், படிப்பு.., பரீட்சைகளோடு அலைக்கழிந்து கொண்டிருப்பவளுக்கு நேரம் கிடைப்பதுதான் குதிரைக்கொம்பு.. அத்துடன், இலங்கை இன்னமுமொரு மூன்றாமுலக நாடுதானாகையால்.., எம்மைப் போன்றவர்களுக்கு இணையவசதியென்பது சற்று விலைகூடின சமாச்சாரம்தான். எனது வலைப்பதிவை பேணவும், பின்னூட்டங்களை நேரத்துக்கு நேரம் பப்ளிஷ் பண்ணவும் நண்பரொருவர் உதவிவருகிறார். அவரது தயவு மட்டுமில்லாமல் விட்டிருந்தால் அடிக்கடி நோய்வாய்ப்படும் இந்தக் கணனியுடன் திண்டாடியிருந்திருப்பேன். நல்ல விடயங்களைக் கவனத்திலெடுக்க விருப்பமொன்றுமில்லாமலில்லை..:-)
ஒருநாளைக்கு குறைந்தது 5 தமிழர்களாவது காணாமல் போகும் நகரமொன்றிலிருந்துகொண்டு விரும்பியதைப் பேசுவதென்பது... ம்ம்ம்... பிரபல்யமானவோர் புள்ளி காணாமல் போனாலாவது ஆர்ப்பாட்டம், கண்டனங்களென்று களைகட்டும். எமக்கெல்லாம் ஏதாவது நடந்தால் எவன்தான் கணக்கெடுப்பான்..? உறவினர்களும், நண்பர்களும் சில காலத்துக்கு வருந்தக்கூடுமெனினும்.. காலத்தின் நகர்வில், யுத்தச் சூழலின் ஏனைய அனைத்து வக்கிரங்களுடனும் அவ்விழப்பு இன்னுமொரு வெறும் சம்பவமாக மட்டுமே அவர்கள் மனதிலும் நிலைத்துவிடக்கூடும். "சிலகாலங்களுக்கு முன்பு 'நிவேதா' என்றொரு பெண் இலங்கையிலிருந்து எழுதிக்கொண்டிருந்தாள்" என உங்களில் எவராவது எவருக்காவது எடுத்துக் கூறுவதுடன்.., அவ்வளவுதானென்றாகிவிடும் எனது இன்றைய இருப்பு.
தோழியொருவரின் உறவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்டிருக்கிறாராம். பிரபல்யமானவர்கள், முக்கியஸ்தர்கள், வர்த்தகர்களென்ற நிலைமாறி இன்று சாதாரண மக்களும் காணாமல் போகுமளவுக்கு திட்டமிட்ட இனவழிப்பு கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. பேருந்துகளில் சகோதர இனத்தவர் இறப்பதைப் பார்த்துப் பரிதாபப்படக்கூட முடியாதளவு மனது இறுகிப்போயுள்ளது.
கொழும்பில் வாழும் முன்னாள் மாற்றியக்கத்தவர்கள்கூட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான / விமர்சனங்களோடு ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதற்கு முதல் முக்கிய காரணம் இதுதானாக்கும். They're our only hope.. வெளிநாடுகளில் நாளைய இருப்புக் குறித்த பயங்களேதுமில்லாமல் வாழ்பவர்களுக்கு வேண்டுமானால் நியாய / அநியாயங்கள் குறித்த கேள்விகளிருக்கலாம். எனினும், இன்னுமொரு 83 குறித்த பீதிகளற்று, தலைநகரில் நாமும் தமிழர்களென தலைநிமிர்ந்து வாழ முடிவதற்கு.. எவரிடமும் விலைபோகாத அவர்களது கொள்கையுறுதியும், கட்டுக்கோப்பும்தான் காரணமென்பதை மறுப்பதற்கில்லை.
நிவேதா,
சரியான சொற்களைப் பயன்படுத்தல் என்பது தொடர்பில் பலரும் முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.
கற்பழிப்பு, கெடுத்தல் போன்ற சொற்களைத் தவிர்த்து 'பாலியல் வன்புணர்வு' என்ற பயன்பாட்டைப் பரிந்துரைப்பதும் அவற்றைப் பயன்படுத்துவதும் நடந்துவருகிறது. இதுபோல் வேறும் சில சொற்கள்.
அதுபோல்தான் நீங்கள் குறிப்பிட்ட சம்பவங்களை இனக்கலவரம் என்ற சொல்லூடாக வெளிப்படுத்தாமல் மாற்றுச்சொற்களைப் பயன்படுத்தவேண்டிய தேவையுண்டு. அவை இனப்படுகொலை, இனவழிப்பு என்ற சொற்கள்மூலம் பலரால் எழுதப்படுகின்றன.
கலவரம் வேறு அழிப்பு வேறு. 77, 83 இல் நடந்தவையெல்லாம் இனவழிப்புக்களே, கலவரமல்ல.
இனியொருமுறை அப்படி தமிழர்கள் தாக்கப்படும்போது சிங்களத்தரப்பிலும் அதேதொகை தலைகள் விழுந்தால், சிங்களவர் சொத்துக்கள் எரிக்கப்பட்டால், அண்மையில் நடந்ததுபோல் பேருந்துகளில் குண்டுகள்வெடித்தால்-எழுதுங்கள் 'இனக்கலவரம்' என்று.
அண்மையில் நடந்த பஸ்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களை 'இனக்கலவரத்தில்' கொல்லப்பட்டார்கள் என்றோ, அல்லது எண்பதுகளில் அனுராதபுரத்திலும் 99 இல் கோணகலையிலும் கொல்லப்பட்ட சிங்களவரை 'இனக்கலவரத்தில்' கொல்லப்பட்டார்கள் என்றோ எழுதினால் எல்லோரும் சிரிப்பார்கள். ஆனால் 58, 77, 83 இல் தமிழர்களுக்கு நடந்தவற்றை 'இனக்கலவரம்' என்றால் யாரும் சிரிப்பதில்லை என்பதோடு அப்படி எழுதவும் யாருக்கும் சலிப்பதில்லை. இவற்றுக்கிடையில் ஆறல்ல-ஒரு வித்தியாசத்தையேனும் அறிய ஆவல். ;-)
'நீங்களுமா?' என்று அழுத்திச் சொன்னதற்குக் காரணமிருக்கிறது.
இன்று கற்பழிப்பு, கெடுப்பு என்று நாங்கள் எழுதினால் அதையெதிர்த்துக் கொடிபிடித்து வரப்போகும் அணியில் நீங்களுமிக்கும் நிலையில், அதையொத்த - சரியான சொற்பயன்பாடு வேண்டிநிற்கும் - நிகழ்வுக்கு, கவனமில்லாமல் நீங்கள் எழுதியதைச் சுட்டவே அந்த 'நீங்களுமா?'. ;-)
கரிகாலன் பெயரிலி என்று குறிப்பிட்டது கந்தையா இரமணிதரன் என்பவரைக்குறித்தா அல்லது பெயர் போடாமல் எழுதும் எவரையும் குறித்தா என்று தெரியவில்லை.
ஆனால் நிவேதா அதை பெயரிலி என்ற பேரில் எழுதும் கந்தையா இரமணிதரன் என்று கருதியுள்ளார்.
அதுதவறு.
நான் அந்தப் பெயரிலியில்லை.
இனி பெயரிலி என்ற சொல்லை அனாமதேயங்களைச் சுட்ட பயன்படுத்த முடியாது.
_______________________
மேலிட்ட பின்னூட்டத்திலிருக்கும் எழுத்துப்பிழையைப் பொறுத்தருள்க.
பெயரிலி என்பது பொதுமைச்சொல்லானபடியாலேதான், -/பெயரிலி. என்று குறித்துக்கொள்கிறேன்.
நன்றி, அனானிமஸ்!
நீங்கள் கூறியவை ஏற்றுக்கொள்ளத் தக்கவைதான். இதையே முந்தைய பின்னூட்டத்திலும் குறிப்பிட்டு, அச்சொல்லைப் பாவித்தமைக்காக மன்னிப்பும் வேண்டியதாய் நினைவு. கூடவே, பெயரிலியென அடையாளப்படுத்தப்பட ஒருவரிருக்கும் நிலையில் அனாமதேயங்களை சுட்டிக்காட்ட அவ்வார்த்தையைப் பயன்படுத்துவது குழப்பங்களை ஏற்படுத்துகிறதெனக் கூறி, அதைத் தவிர்க்குமாறு வேண்டியிருந்தேனென்றும் நினைக்கிறேன். பதிவில் திருத்தங்களை மேற்கொள்ளப்போகையில் என்னமோ தொழில்நுட்பப் பிரச்சனைகள் தோன்ற, கைவைக்கத் தயக்கமாயிருந்தது.
சரியான சொற்பிரயோகங்கள் தொடர்பான கரிசனை, வேண்டியதுதான். புதிதுபுதிதாக அறிந்துகொள்வதிலும், குறைகள் சுட்டிக்காட்டப்படுகையில் - அது நியாயமாகவும் இருக்கும் பட்சத்தில் - தன் தரப்பை விட்டுக் கொடுத்துவிடக்கூடாதென்ற ஒரே நோக்கத்துடனான வீண்பிடிவாதங்களேதுமற்று தவறைத் திருத்திக்கொள்வதற்கான பக்குவமே இங்கு முக்கியம். கற்பழிப்பு.., இன்னபிற வரிசையில் இனக்கலவரமும். விரிவான விளக்கத்திற்கு நன்றி.
மற்றும்படி, முரண்பட்டு நிற்குமொரு புள்ளி...
// இன்று கற்பழிப்பு, கெடுப்பு என்று நாங்கள் எழுதினால் அதையெதிர்த்துக் கொடிபிடித்து வரப்போகும் அணியில் நீங்களுமிருக்கும் நிலையில், //
இந்த 'நீங்களுமா' அழுத்தங்களெல்லாம் வேண்டியதில்லை. அறிவுசார் தேடலிலும், தன் பக்க நியாயங்களை.. உணர்வுகளை.. பாதிப்புக்களை உரத்துச் சொல்வதிலும் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள இன்னுமொருத்தி மட்டுமேயானவளைப் பற்றிய - கொடிபிடித்து வரப் 'போகும்' அணியிலொருத்தி (எஞ்சுவதொரு புருவமுயர்த்தலும், கேள்விக்குறியும் மட்டுமே) என்பதான - உங்கள் முன் மதிப்பீடுகள் மனதிற்கு உவப்பானதாயில்லை.
அவ்வணியில் நானிருப்பதால் / இனிமேல் இருக்கப் போவதால் குறையைச் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமிருப்பதாக நீங்கள் நினைப்பது எங்கேயோ உறுத்துகிறது. ஒருவிதப் பழிவாங்கலோ...?!
தவிரவும், இந்தக் கொடிபிடிப்பதில் தொனிக்கும் ஏளனம் தொடர்பாக அதிகம் கரிசனை கொண்டாக வேண்டியுள்ளதெனினும், வீணான வாதப்பிரதிவாதங்களை வளர்த்துக்கொள்ள விருப்பமில்லையாதலால்.., இப்போதைக்கு ஒரு புன்னகையுடன் அதைக் கடந்துவிடுகிறேன்.
பெண்ணிலைவாதிகள் பற்றிய சமூகத்தின் முன்மதிப்பீடுகள், முற்போக்குவாதிகளென்றால் எவரும் படுக்கைக்கு அழைக்கலாமென்ற மனப்போக்கு, இன்னபிற விம்பங்களைக் களைந்தெறிய அத்தகைய அடையாளங்களிலிருந்து விடுபட்டாக வேண்டிய நிர்ப்பந்தமிருப்பதால்.., பெண்ணிலைவாதியென எவராலும் அடையாளப்படுத்தப்படுவதை வெறுக்கிறேனென சக வலைப்பதிவரொருவரிடம் கூறியபோது, எவரும் படுக்கைக்கு அழைத்துவிடுவார்களோவென்ற பயத்திலேயே நீங்கள் உங்களைப் பெண்ணிலைவாதியென அழைத்துக்கொள்ள விரும்பவில்லையோ என்றவாறாக அவர் எதிர்க்கேள்வி கேட்டபோதும்.. பதிலுக்கு உதிர்க்க முடிந்தது இதே புன்னகையைத்தான்!
முகத்தின் மீது வீசப்படும் கல்லையெடுத்து திருப்பி எறிபவர்களுமிருக்கிறார்கள்.. குனிந்து தப்பித்து விடுபவர்களுமிருக்கிறார்கள்..:-)
பின்னூட்டத்திற்கு நன்றி, -/பெயரிலி!
வேறு யாரும் வம்புக்கு வராமலிருக்க முன்னேற்பாடு..:-)
//அவ்வணியில் நானிருப்பதால் / இனிமேல் இருக்கப் போவதால் குறையைச் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமிருப்பதாக நீங்கள் நினைப்பது எங்கேயோ உறுத்துகிறது. ஒருவிதப் பழிவாங்கலோ...?!
//
இல்லை.
அவ்வணியில் இல்லாதவர்களாக நான் கருதுபவர்கள் எழுதியிருந்தாலும் விளக்கியிருப்பேன், "நீங்களுமா?" என்ற கேள்வியைத் தவிர்த்து.
'நீங்களுமா?' என்று கேட்டதை விளக்கப்போய் விளக்குமாறு பிஞ்சதுதான் மிச்சம்.
இதற்குமேலும் வேண்டாம் விளக்கம், அது வில்லங்கம். ;-) ;-)
அனானி அண்ணனுக்கு..,
இத்தனை அக்கறையுடன் வந்து பின்னூட்டமிடுவதற்கு, நன்றி!
விளக்குமாறு யாருடைய கையில் இருந்ததாம்.. பிய்ந்ததற்கு நான் பொறுப்பல்ல..;-)
Post a Comment