Friday, January 19, 2007

அம்ரிதா ப்ரீதம் - கவிதைகள்

முதல் படைப்பு

நான்
வடிவம் பெறாத நானாக இருந்தேன்

அந்த நான்
தனது காட்சித்தெளிவால்
தண்ணீராய் உருமாறியது

நீ
உனது காட்சித்தெளிவால்
தீப்பிழம்பானாய்

தீ அலகொன்று நீர்மீது மிதந்தது
ஆனால் அதெல்லாம் ஆதிகாலத்துக் கதை

இந்த மண்ணுலகத்தைச் சேர்ந்த 'என்'னின் தாகம்
ஆறென ஓடிய 'உன்'னில்
தாகசாந்தியடைந்தது.

இந்த மண்ணுலகத்தைச் சேர்ந்த 'என்'னின் கனவுதான்
உன்னை
அந்த மரச்செறிவில் கண்டது.

நமது
எனது உனது
உடலின் நறுமணம்-
படைத்தல் என்பதன் மெய்ப்பொருள் இதுதான்

இந்தப் பேரண்டம் படைக்கப்பட்டது
இதற்குப் பிறகுதான்.


முதல் நூல்

நான் அங்கிருந்தேன்
நீயுங்கூட இருந்தாயோ என்னவோ
உன் மூச்சுக்காற்று என் காதில் படும் தூரத்தில்-
அல்லது
ஒரு அரிய தரிசனத்தின் இருளில்-
சூழலும் சித்தத்தைச் சுழட்டும் புள்ளியில்-
ஆனால் அதெல்லாம் ஆதிகாலத்துக் கதை.

நமது
உனது எனது
இருப்பாக இருந்ததுதான்
உலகத்தின் முதல் மொழியானது.
'என்'னை 'உன்'னை
அடையாளங்காணவே சொற்கள் உருவாயின.
அவை
அந்த முதல் மொழியில் முதல் நூலை எழுதின.

நமக்கு விதிக்கப்பட்ட சந்திப்பு, நமது சந்திப்பு
இதுதான்
கற்படுக்கையில் நாம் உறங்கினோம்
நமது கண்கள், உதடுகள், விரல் நுனிகள்
உனது உடலின்
எனது உடலின்
சொற்களானது.
பிறகு அந்த ஆதிநூலை
மொழிபெயர்த்தார்கள்

ரிக் வேதம் இயற்றப்பட்டது கூட
இதற்குப் பிறகுதான்.


முதல் சமயம்

உனது இருப்பை
ஆடையென சுற்றிக்கொண்டவுடன்
நமது உடல்கள் உள்நோக்கி
தியானத்தில் அமர்ந்தன.

ஆன்மாவின் சந்நிதியில்
பின்னிப்பிணைந்திருந்த நமது கைகளும் கால்களும்
மாலையாகக் கோர்க்கப்பட்ட மலர்களாக-
நானும் நீயும்
வேள்வித்தீயில் கரையும் கற்பூரமாக

நமது உதடுகளிலிருந்து தப்பியோடிய
நமது பெயர்கள்
திருவாசகங்களாயின

அது
எனக்கும் உனக்குமான
புனிதச் சடங்கு

ஏனையச் சமயச்சடங்குகளும்
பிறகு வந்தவைதான்.


முதல் ஓவியம்

அங்கு நானிருந்தேன்
நீயுங்கூடத்தான்

அங்குமிங்கும் அலைந்துதிரிந்த நிழலுருவங்களில்
நானும் ஒரு உருவமாக
ஒருவேளை நீயும் ஒரு மெல்லிய நிழலாக
அன்று அலைந்தாயோ என்னவோ

எங்கும் போர்த்தியிருந்த இருட்டில்
சாம்பல் பூத்த நிழல்களாக நாம்
ஆனால் அதெல்லாம் ஆதிகாலத்துக்கதை.

இரவுகளில், மரஞ்செடிகளில்
அப்பியிருந்த இருட்டுதான்
நமது
எனது உனது ஆடையானது.

சூரியனின் ஒளிக்கீற்று உள்ளே நுழைந்து
நமது உடலினூடாக
உனது எனது உடலினூடாக
மின்னிப் பாய்ந்தது

அதன் ஒளிச்சிதறல்கள்
கற்களின்மீது விழுந்து
அவற்றைச் செதுக்கியெடுத்தது.

அச்சமயம்
ஒளியேறிய இந்த வடிவான கைகளும் கால்களும்தான்
இந்தப் பேரண்டம் தீட்டிய முதல் ஓவியம்.

அந்த ஓவியத்துக்கு
இலைகள் தமது பசுமையை வழங்கின
வானம் தனது சாம்பல் நிறத்தை
மலர்கள்
சிவப்பை
இரத்தச் சிவப்பை
மஞ்சள் நிறத்தை வழங்கின.

ஓவியக்கலை உருவானது இதற்குப் பிறகுதான்.


முதல் இராகம்

அங்கு நான்
நீயும்தான்
வரம்பற்ற மௌன அமைதி
நம்முடன்
காய்ந்த உலர்ந்த சருகாய்
கடற்கரை மண்துகள்களாய்
ஆனால் அதெல்லாம் ஆதிகாலத்துக்கதை.

பாதைகள் சந்திக்கும் இடத்தில்
உன்னை நோக்கிக் குரல் கொடுத்தேன்
நீயும் பதில் ஒலி அளித்தாய்

காற்றின் தொண்டையில் ஒரு நடுக்கம்
மண்துகள்கள் உயிர்பெற்றன.
நீரோடைகள் இசைக்கத்தொடங்கின

மரக்கிளைகள் இறுகின
இலைகளில் சலனம்
சிறிய மொட்டொன்று கண்சிமிட்டியது
பறவையொன்று சிறகுகளை உசுப்பி விறைத்திருந்தது

செவிகளுக்கு எட்டிய முதல் பாடல் இதுதான்
யாழ் இசைக்கும் சப்தஸ்வரங்கள் பிறந்ததெல்லாம்
இதற்குப் பிறகுதான்.


- அம்ரிதா ப்ரீதம் (தமிழில்: வ.கீதா)

6 comments:

இளங்கோ-டிசே said...

இக்கவிதைகளுக்கு நன்றி.

செல்வநாயகி said...

நிவேதா,
நல்ல கவிதைகள். வாசிக்கத் தந்தமைக்கு நன்றி. அம்ரீதா பற்றிய அறிமுகமொன்றையும் முடிந்தால் தாருங்களேன்.

நிவேதா/Yalini said...

டிசே, செல்வநாயகி..

பின்னூட்டங்களுக்கு நன்றி!

அம்ரிதா ப்ரீதம் பற்றி எனக்குத் தெரிந்ததும் மிகச் சொற்பமே.. புத்தகங்களில் தேடிக்கொண்டிருக்கிறேன்.., மிக விரைவில் உங்கள் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டுமென்பதுதான் என் விருப்பமும்..:-)

மு. மயூரன் said...

//அம்ரிதா ப்ரீதம் பற்றி எனக்குத் தெரிந்ததும் மிகச் சொற்பமே.. புத்தகங்களில் தேடிக்கொண்டிருக்கிறேன்.., மிக விரைவில் உங்கள் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டுமென்பதுதான் என் விருப்பமும்..:-)//

தமிழ் விக்கிபீடியாவிலும் அதனை சேர்ப்பீர்களானால் பயன்மிக்கதாய் இருக்கும்.
(வசதிப்பட்டால், நேரமிருந்தால்)

நிவேதா/Yalini said...

நன்றி, மயூரன்! முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.. தகவல்கள் கிடைப்பதுதான் குதிரைக் கொம்பாயுள்ளது. கூகிளில் தேடினால் அது எனது வலைப்பதிவையே முதல்பக்கத்தில் கொண்டுவந்து காட்ட புளகாங்கிதமடைவதா, தலைவிதியை நொந்துகொள்வதாவென்றிருக்கிறது. ஆங்கிலவழி விக்கிபீடியாவிலும்கூட ஒன்றையும் காணோம். அம்ரிதா ப்ரீதம் பற்றி / அவரது படைப்புகள் எதுவும் நூல் வடிவில் தமிழில் வந்ததாகத் தெரியவில்லை. ஆங்கிலவழி நூல்களில் காணப்படும் தகவல்கள் போதுமானவையாகத் தோன்றவில்லை. ம்ம்ம்.. பார்ப்போம்.

செல்வநாயகி said...

நிவேதா,

இச்செய்தியை ஏற்கனவே அறிவீர்களா? அம்ரிதா ப்ரீதம் சமீபத்தில் மரணித்துவிட்டதாக கீற்றுவின் இப்பக்கத்தில் வாசித்தேன் :((
http://www.keetru.com/ani/may06/amritha.html

அங்கும் அவர்பற்றிய மேலதிக விபரங்கள் எழுதப்படவில்லை. பசிசாபிக் கவிஞர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனக்குப் பொருள் விளங்கவில்லை. ஒருவேளை "பஞ்சாபி" என்பதுதான் பிழையாக அப்படி வந்துள்ளதா எனவும் தெரியவில்லை.