Wednesday, January 10, 2007

தூவானமாய்ப் பொழியும் தாரகைகள்...


புரிகிறது நீ அருகிலில்லையென
என்றென்றைக்குமான கனவாய்
எதையெதையோ யாசித்து
யதார்த்தம் பெருநெருப்பாய்
பொசுக்கிடும்போது
எங்கிருந்தோ வந்துவிடுகின்றன
சில கண்ணீர்த்துளிகளும்
அனல் பறக்க

நீயற்ற கணங்களிலிருந்து
தப்பியோடி தப்பியோடி
காலமற்ற வெளிநோக்கி
தொடருமென் பயணம்
உன் வாசலில் வந்துமுடியக் கூடுமென
எதிர்பார்ப்பதும் வேடிக்கைதான்

எழுத்துக்கள்
வார்த்தைகள்
வாக்கியங்கள்
இடமாற்றி இடமாற்றி
அபத்தமான விளையாட்டொன்றின்
ஈவிரக்கமற்ற பிடியில்
தவிர்க்கவே முடியாது
சிக்குண்ட இருப்பு
புரிகிறதா உனக்கு..

வார்த்தைகளுடன் மட்டுமே வாழ்ந்து
கனவுகளை சுவைத்து
ரசித்தும்
சிலிர்த்தும்
பெருமூச்சுவிட்டும்
இன்னும் எத்தனை காலத்துக்கு...

விஷ அம்பு குத்தித் துளைத்த
ஆழ்நெஞ்சத்து ரணத்திலிருந்து
ரத்தமும் சீழுமாய்
வடியும் ஆன்மாவுக்கும்
புன்னகைக்கத் தெரியும்
வட்டமாய் வளையங்களாய்
கோளமாய் கோர்வைகளாய்
யாக்கை தேடியலையும்
பொழுதுகளிலும் தயங்காமல்

கதகதப்புத் தேடி
காற்றில் அலைவுறும் கை
வெறுமைகளின் பரிகசிப்பில்
சூம்பிப்போக
உள்ளம்
ஊசிதுளைத்த பலூனாயும்
திருவிழா சனக்கூட்டத்தினிடை
தொலைந்த சிறுமியாயும்

எனது சலனங்கள் உனக்குப் புரியக்கூடுமா... தெரியவில்லை. இதே வெறுமைகளை, வேதனையை, விரக்தியை நீயும் அனுபவித்திருப்பாயா.. தெரியவில்லை. கசிந்துருகும் காதலின் வலியை இதேபோல் உணர்ந்திருப்பாயா.. தெரியவில்லை. ஏன் அடிக்கடி காரணங்களற்றுக் கண்ணீர் வருகின்றதென்றும், ஏன் தனிமையில் புன்னகைக்கிறேனென்றும், வகுப்பறையில் பாடங்களில் ஆழ்ந்திருக்கும்போது ஏன் எனையறியாமலேயே பெருமூச்சு விடுகிறேனென்றும், இருந்தாற்போல உள்ளம் கனத்துப் போவது ஏனென்றும்.. இப்படியான எனது இன்னுமின்னும் பல கேள்விகளுக்கும் உன்னிடம் பதிலிருக்குமா.. அதுவும் தெரியவில்லை.

மௌனித்திருந்தாலும்
புறவுலகம் வானமாய்
உச்சந்தலைமேல் கவிந்திருந்தாலும்
பேதைப் பெண்ணுக்குப் புரிவதெல்லாம்
நீ அருலில்லையென்பது
மட்டும்தான்...

.........

புன்னகைகளை மதித்திருந்த காலமுமிருந்தது.. அதுவோர் கனாக்காலம் போல.. அந்தக்காலத்துத் தேவதைக் கதைகளில் வருகின்ற இனிய முடிவுகளைப் போல.. சாயம் பூசிக்கொண்ட வெளிறிய புன்னகைகளைக் கண்ணுற நேர்ந்ததன் பிற்பாடு எல்லாவற்றையும் போல அதுவும் கசந்து போனது. இன்றைய பொழுதில் அர்த்தமில்லாப் பல்லிளிப்புக்களுக்கு மத்தியில் நான் மட்டும் புன்னகைத்து என்னவாகப் போகிறதென்ற எனது தயக்கங்களை ஒற்றை வார்த்தையில் துடைத்தெறிந்து விடுகிறாய்..

இதழோரங்களில் கசியும்
உனக்கான புன்னகை
சோப்பு நுரையைப்போல
காற்றில் அலைவுண்டு
உன் கரைகளை வந்தடையும்
கருவுக்குள் சுருண்டிருக்கும்
பச்சிளங்குழந்தையின்
கதகதப்பிற்கான தேட்டம்
முற்றுப்பெறுவதை
தவிப்புடன் நோக்குமுந்தன்
சின்னஞ்சிறு தேவதைகளிரண்டும்
எமது கடமையை நீ செய்தாயோவென
கடுஞ்சினங்கொள்ளுமெந்தன்
புன்னகை மீது...

ஒரு கவிதை எழுதிடத்தான் வேண்டும்.. உன்னைப்போல் நெக்குருகிக் கசிதல் சாத்தியமாகப் போவதில்லையெனினுமே கூட.. எப்படி எழுதுவது.. எங்கிருந்து தொடங்குவது..

நீயின்றி பூரணமடையப் போவதில்லை
எனது எந்த இருப்பும்
எல்லாப் பொழுதுகளிலும்
உனக்காகவே உன்னோடே
காலங்களின் விறைத்த கணங்களினூடு
நானும் உயிர்த்திருப்பேன்
குட்டி அலிஸாய்
உன் மனக்காடுகளில் துள்ளியோட
போதாது இப்பிறவி ஒருசிறிதும்...

அடிக்கடி கேட்டுக் கொள்கிறேன், எனை நானே.. எப்படி.. எப்படி.. முழுதாய் எடுத்துரைப்பது.. நேசிக்கிறேன் நேசிக்கிறேனென நிமிடத்துக்கு நூறு முறை கூறிடினும் ஆதங்கம் நிறைவேறிடுமோ.. படுக்கையை விட்டு எழுந்ததும் உன் நினைவு.. முதல் நாள் அனுப்பிய மடல்களின் ஒரு சில வார்த்தைகள் நெஞ்சோடு தங்கிவிட்டவை நினைவில் விரிந்து அந்நாள் பிரகாசிக்கும்.. குளிக்கையில், சாப்பிடுகையில், நடக்கையில், படிக்கையில், கண்மூடித் தலைசாயும் போதெல்லாம் உன் நினைவு.. உன்னுடனான என் எதிர்காலங்கள் இன்னுமின்னும் என்னவோ எல்லாம் மனத்திரையில் தொடர்ந்தோடும்.. தன்னையறியாமல் விழி கசியும்.. புன்னகைகள் எனைக் கேட்காமல் வழிந்தோடும்..

இளம்பரிதி மேற்கில் சாய்கையில்
மனதெங்கும் கவிந்துகொள்ளும்
அந்தியின் மந்தாரம்
தொலைதூரத்துக் கேவல் சீண்டிட
விழித்தெழும் தாய்மை
பகற்கனவு கலைவுற்று
மேகத்தினின்றும் பொசிந்த
சிறுதுளியின் ஸ்பரிசத்தில்
உணர்வு கிளர்ந்து உதடு சிலிர்க்க
தலைக்கு மேலால் விரையும்
கருஞ்சிட்டின் நிழலைப்போல
நினைவுக் குவடுகளில்
ஒரு குழந்தை குறும்புப் புன்னகையோடு
மறுபடியும்...

.........

மனப் பொந்துகளில்
விழியோரக் கசிவினில்
துளிர்விடும் நினைவொன்று
பீதிகளை வாரியிறைத்துப் போகும்
மழைமேகமென
உருத்திரனைக் கண்ட ஒற்றைக்கால் நாரை
மோனம் கலைந்து
வரங்கள் கிட்டா விரக்தியில்
கணப்பொழுதில்
கடந்துவிடும் காலவடுக்குகளை
சூன்யங்களை விழுங்கிடும்
உன் பிரியங்களின் கதகதப்பில்
பின்மாலைப் பொழுது தோறும்
என் சாம்பர் வானினின்றும்
தூவானமாய்ப் பொழிகின்றன தாரகைகள்


(இன்மைகளை நிரப்பிடத் தெரிந்தவொரு உறவுக்காக..)

9 comments:

சோமி said...

/வார்த்தைகளுடன் மட்டுமே வாழ்ந்து
கனவுகளை சுவைத்து
ரசித்தும்
சிலிர்த்தும்
பெருமூச்சுவிட்டும்
இன்னும் எத்தனை காலத்துக்கு./

சோமி said...

/வார்த்தைகளுடன் மட்டுமே வாழ்ந்து
கனவுகளை சுவைத்து
ரசித்தும்
சிலிர்த்தும்
பெருமூச்சுவிட்டும்
இன்னும் எத்தனை காலத்துக்கு./

தெரியவில்லை.. ..

என்னுடைய வலி நிறைந்த பல வார்த்தைகள் எனக்குள்ளேயே அடங்கிப் போகிறது. நான் தனியே சாகவிரும்புகிறேன். யாரலும் கொல்லப்பட்டல்ல.
ஆக வெளிப்படுத்த முடியா என் வார்த்தைகளும் செயல்களும் எனக்குள்ளேயே சிலிர்த்து அடங்கும்.

என்னால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. சில இடங்களில் நிறுத்தி மீளவும் மீளவும் வாசிதேன்.

பதிவுக்கு நன்றி நிவேதா.

சத்தியா said...

ஓ!... உள்ளம் ஒன்று
தன் கதவை மெல்லத் திறந்து உண்மையான நேசனையை... சுவாசிப்பை...
தவிப்பை...
கள்ளமில்லாமல் கண்ணீர் கொண்டு கவியாய் வடித்ததுவோ...?

ம்... உண்ர வேண்டிய உள்ளம்
வாசித்து உணருமா?

தமிழ்நதி said...

நிவேதா…, வெறுமையை நிறைக்கவியலாத தொலைவிலுள்ள காதல் குறித்து இதனிலும் அழகாய் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. நேற்று நானும் எனது தோழியும் பேசிக்கொண்டோம். கவிதைகளை ‘நன்றாயிருக்கிறது’என்ற ஒரு வார்த்தையோடு மட்டுமே கடந்துபோய்விடுதலன்றி வேறெவ்விதமும் விமர்ச்சிக்க முடியாததைப் பற்றி. உங்கள் எழுத்தைப் பற்றி நிறையச் சொல்லவேண்டும் போலிருக்கிறது. ஆனால், நான் சொல்வதை விடவும் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் அந்த எழுத்தே சொல்லிவிடுகிறது அல்லவா…?

sooryakumar said...

ஆகா..எவ்வளவு அருமையாக எழுதுகிறீர்கள். எழுத்தின் உந்நதத்தால்
உயிருள்ள ஒரு ஆத்மாவை தரிசிக்கமுடிகிறது. எண்ணிலடங்கா உணர்வுகள் உங்கள் எழுத்தை வாசிக்கையில் ஏற்பட்டன. அவற்றை நான் சொன்னால் அது உங்கள் எழுத்தின் வலிமையைக் குறைத்துவிடும். வாழ்க நின் பேனா.

நிவேதா/Yalini said...

சோமி, சத்தியா, தமிழ்நதி, சூர்யகுமார்...

பின்னூட்டங்களுக்கு நன்றி!

சோமி, வெளிப்படுத்த முடியா உணர்வுகளும், பிரியங்களும் வார்த்தைகளுள்ளும் அடங்காமல் எமக்குள்ளேயே புதைந்துவிடுவதுதான் அனைவருக்குமான மிகப்பெரிய கொடுமைபோலும்.. ம்ம்ம்..

சத்தியா.., உணரவேண்டிய உள்ளம்தான் என் முதல் வாசகரும்.. எப்போதோ வாசித்து உணர்ந்தாயிற்று..:-)

கவிதைகள் குறித்து மட்டுமல்ல தமிழ்நதி.. பெரும்பாலான படைப்புகளையும் விமர்சிக்க முடிவதில்லை.. அவையனைத்தும் தனித்தனி ஆளுமைகளின் தனித்துவமான உணர்தல்களென்ற புரிதல் வந்தவுடன்..

இன்னுமொருவரை உணர்ச்சிவசப்படக்கூடிய வல்லமை வாய்த்திருப்பதே மொழியின் பலமாக்கும்.. நன்றி, சூர்யகுமார்.

மு. மயூரன் said...

//வெளிப்படுத்த முடியா உணர்வுகளும், பிரியங்களும் வார்த்தைகளுள்ளும் அடங்காமல் எமக்குள்ளேயே புதைந்துவிடுவதுதான் அனைவருக்குமான மிகப்பெரிய கொடுமைபோலும்.. ம்ம்ம்..//

நிவேதா/Yalini said...

நன்றி, மயூரன்! உண்மைதானில்லையா..

sukan said...

ஆழமான உணர்வுகளை அழகாக உணரும்படியாக ஒருவித கனமான அமைதியுடன் எழுதியுள்ளீர்கள்.