Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Monday, November 21, 2005

பெண்மையின் வெம்மை

சுய ஆதிக்கத்திலிருந்து
மனம் நழுவிப் போன தருணங்களில்
உணர்ந்திருக்கிறேன்
கணங்களின் மகத்துவத்தை...

ஏதோவொரு புள்ளியில்
பிரக்ஞையும் தொலைந்துவிட
நினைவுகளின் பிரவாகிப்பில்
ஆன்மாவின் ஒவ்வோர் அணுவும்
அள்ளுண்டு போவதை
குரூரங் கலந்த சந்தோஷத்துடன்
ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்திருக்கிறேன்

துள்ளித் திரிந்த பருவமதில்
ஏதோ ஹோர்மோன் மாற்றத்தைச்
சாட்டாகக் கொண்டு
எல்லைகள் குறுக்கப்பட்ட போதும்...

இன்னமும்
ஆண்களுக்கே உரித்தாயிருக்கும் இப்பூமியின்
ஒவ்வொரு சதுர அடியிலும்
உரிமைகள் மறுக்கப்பட்ட போதும்...

செருக்கோடு தலைநிமிர வைத்த
புனிதமான பெண்மையே
'கற்பு' என்ற பெயரில்
பலவீனமாக்கப்பட்ட போதும்...

பாதுகாப்பென்றும்,
இன்னபிற காரணங்களென்றும்,
போலி அரிதாரங்களுக்குள்
தேவைகளும் விருப்பங்களும் முடக்கப்பட்ட போதும்...

இவர்களின்
பெண்ணென்ற வெறும் உடல் பிண்டத்துக்குள்
ஆளுமையும், தனித்துவமும்
வெளித்தெரிய முடியாதபடி புதையுண்ட போதும்...

விடுபடலுக்கான எத்தனிப்பின்
ஒவ்வொரு
தோல்வியின் முடிவிலும்
கட்டுக்கள் மேலும் இறுக்கப்பட்ட போதும்...

இதே போல்... இதையே போல்
கைகட்டி வாய்பொத்தி
வெறுமனே வேடிக்கை பார்த்தவாறு
நின்றிருந்திருக்கிறேன்

களங்கமற்ற புன்னகைகள்
களவாடப்படுகையிலும்...
கறைபடியாக் கனவுகள்
சிதைந்தே போகையிலும்...
சில ஆணாதிக்க முதலைகளை
சந்திக்க நேர்கையிலும்...
அறியாமையில் சிக்குண்ட
அபலைகளை எண்ணுகையிலும்...

என் கையாலாகாத்தனத்தை நொந்து
உள்ளம் வெதும்பியிருக்கிறேன்

பெண் சுதந்திரம்
வெறும் படபடக்கும்
காகிதக் குவியல்களால்
தீர்மானிக்கப்படுவதையும்...
எமது அறிவும், ஆற்றலும்
அர்த்தமற்ற சில எண்களால்
மதிப்பிடப்படுவதையும்...

குனிந்த தலையுடன்
மௌனமாகவே அங்கீகரித்திருந்திருக்கிறேன்

உள்ளத்தின் தகிப்பு...
உணர்வுகளின் உக்கிரம்...
விழிச் சாளரங்களினூடாக வடிந்தொழுகுகிறது
வெறும் நீர்த்துளிகளாகவல்ல..,
சுட்டெரிக்கும் அக்னித்துளிகளாய்...
விழிநீருக்கே இத்தனை வெம்மை வாய்த்திருக்கையில்
என் அடிமனத்து ஆழங்களில்
இன்னும் எத்தனை ஆயிரம் அக்னிப் பிளம்புகள்
நர்த்தனமாடிக் கொண்டிருக்க வேண்டும்..?

Sunday, November 20, 2005

முதல் மடல்....!!

வளையங்களை அறுத்தெறியவும்... விட்டு விலகியோடவும் துடிக்கும் ஒரு உள்ளத்தின் குரல்:

இவ்வலைப்பதிவைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் தோழருக்கு இனிய வந்தனங்கள். இணையத்தளத்தில் எனக்கானவொரு அடையாளத்தைப் பெற்றுக்கொண்ட அற்புதமான இத்தருணத்தில் என் மெய்சிலிர்ப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரிதும் மகிழ்வடைகிறேன்.

இவ்வலைப்பதிவின் தலைப்பு உங்கள் சிந்தனைகளைக் கிளரக்கூடும். இத்தலைப்பினைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணத்தினை நானே சொல்லிவிடுகிறேன்.

கர்நாடக சங்கீதத்துடன் நெருங்கிய தொடர்புடைய தலைப்பு இது. இசையறிவுடையவர்கள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்றுதான். "ரேகுப்தி" என்பது மோஹன ராகத்திற்கு முற்காலத்தில் வழங்கப்பட்டு வந்த பெயராகும். அதென்ன, மோஹன ராகத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறேனேயென யோசிக்காதீர்கள். இது புராதன ராகங்களிலொன்று. முல்லைப்பண் எனவும் அழைக்கப்படுகின்றது. இரவு நேரத்தில் பாடுவதற்கு மிகவும் உகந்ததாக இவ்விராகம் கருதப்படுகின்றது. மோஹனத்தின் ரஞ்சகத்தன்மைக்கு இதைவிடவும் சான்றுகள் வேண்டுமா என்ன? மேலும், தென்னிந்திய இசை தவிர பிறநாட்டு சங்கீதங்களிலும் இடம்பெறும் பெருமை இதற்கேயுரியது. மாணிக்கவாசகரின் திருவாசகம் தொன்றுதொட்டு இவ்விராகத்திலேயே பாடப்பட்டு வருவதும் இதன் தனிச்சிறப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

இவற்றையெல்லாம் வாசித்துவிட்டு இவ்வலைப்பதிவு முழுக்க முழுக்க இசை பற்றியதென்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். காலங்களையும் கடந்து நிலைபெற்றிருக்கின்ற..., சர்வ வியாபகத்தன்மை வாய்ந்த..., உள்ளம் நெகிழும் உணர்வுகளைப் பிரதிபலிக்கக்கூடிய ஒன்றன் பெயரை எந்தன் வலைப்பதிவுக்குத் தலைப்பாகத் தேர்ந்தெடுத்ததில் தவறில்லையே...?

மழைக்கால அந்திவேளையொன்றில் பாட மறுத்த ஊமைக்குயிலின் குரல்வளையின் ஆழத்தில் சிக்குண்ட கானங்களைப் பற்றியவை எனது பதிவுகள்... கரைசேர முன்னரே காணாமற்போன அலைகளின் ஓலங்களைப் பற்றியவை எனது பதிவுகள்...

பதிவுகளை ரசிப்பதோடு, உங்களைப் பற்றியதான தடயங்களையும் விட்டுச்செல்ல வரவேற்கிறேன்.

- நிவேதா