Tuesday, June 12, 2007

வெறுமைகளின் வன்முறை

இருத்தலை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு..!

- மால்கம் எக்ஸின் அட்டல்லாவுக்கும், எஸ்போஸின் குழந்தைக்கும் மற்றும் அனைவருக்கும்
1.

எப்போதும் எதையாவது பேசிக்கொண்டிருந்தாக வேண்டும்.
அல்லது, எழுதிக்கொண்டு..
குறைந்தபட்சம் வாசித்துக்கொண்டாவது.

ஒன்றும் அடுத்ததுமான இரு நிகழ்தல்கள்
அல்லது, அசைவுகளுக்கிடையிலான இடைவெளி (space)
சகிக்க முடியாததாகவிருக்கிறது.
உ+ம்: குளியலின் கடைசிச்சொட்டு நீருக்கும் துவாலையின் முதல் ஸ்பரிசத்துக்குமிடையிலான.. அல்லது, தொண்டைக்குள்ளால் இறங்கும் கடைசிப் பருக்கைக்கும் கையலம்புகையில் முதல் துளி நீருடனான உறவாடலுக்குமிடையிலான இடைவெளி..
(பாடிக்கொண்டே குளித்தல், பேசிக்கொண்டே சாப்பிடுதல் போன்ற உபாயங்கள் கைகொடுக்காது போயின்..)
யுகமென நீளும் அக்கணநேர வெறுமையின் வாதையில்
இத்தனையாண்டுகால வாழ்தலும் அதன் சமரசங்களும்
வரித்துக்கொண்ட அர்த்தங்களின் மீதான - துவம்சம்
நிகழ்ந்தே விடுகிறது.


2.

ஓ.. யாழ்ப்பாணமா..?!

புருவம் நெரித்து
அடையாள அட்டையைப் புரட்டியபடியிருக்கும்
அதிரடிச் சட்டைக்காரனினருகில்
அசடு வழிய அரைமணி நேரம் தாமதித்து
பல்லைக் காட்டுவதும்...
(கவனிக்க: புன்னகைக்கும் பல்லிளிப்புக்குமிடையிலான வேறுபாடு)

இயல்பு மறந்து சந்தேகப் பார்வையுடனேயே ஏறிட்டு நோக்கும்
அதிகார + இனவாத விழிகளை எதிர்கொள்வதும்...
(அவற்றைக் கடன்வாங்கிக்கொண்ட சடத்துவம், சடத்துவமல்லாத அனைத்தும் உள்ளடங்க)

அதிகரித்துக் கொண்டிருக்கும்
வாழ்க்கைச் செலவினைக் குறைகூறியபடி
சமயங்களில் உணவையே தள்ளிப்போட்டு பட்டினி கிடப்பதும்...
(இணையச் செலவுக்காய்.. கஞ்சிக்கழுது கொண்டிருப்பவரின் முன்னே பூவுக்கும் பாலுக்குமழுவதைப்போல)

இன்னபிறவும்,
மார்க்கோஸ் துணைவர மால்கம் எக்ஸுடன்
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் -
வாழ்க்கை, சுதந்திரம், இன்பம் -
(மேலும், We believe that all men are created equally because they are created in the image of God. - ட்ரூமன்)
பூக்கோவிலிருந்து பூர்த்தியு வரை
அனைத்தையும் விவாதித்தபடி
பனி படர்ந்த வெளி தாண்டி அடியெடுத்து வைப்பதான - கனவுகளைப்
புறக்கணித்தபடியேயிருக்கும் எப்போதும்..,
ஒரு சொட்டு இரக்கமுமின்றி (ஈவுமின்றி).


3.

இனியென்ன...

சிந்தனைக்குக் கடிவாளமிட்டு
(திமிரால் விறைத்த ஒற்றைக் கொம்புடன் கூடிய unicorn என சபித்தபடி),
உடலின் ஒவ்வொரு அணுவையும் பிழிந்து சாறெடுத்து
இனியுமேலாதென சோர்ந்து வீழ்கையில்
படுக்கைக்குத் திரும்ப வேண்டும்..

கனவினை ஆக்கிரமித்துக் கொள்ளும்
கருநிறைக் குருதி படிந்த தரையும்,
கோணிப்போன முகங்களும்,
எச்சிலாயும், இரத்தமாயும் கடைவாயிலிருந்து உயிர்வடிய
துளைக்கப்பட்ட மனித உடலங்களும்,
இன்னும் பலவுமென..
காட்சிப் படிமங்கள் யாவற்றையும் - வெறும்
கழிப்பறைக் காகிதமென
கடலின் அக்கரையிலேயே கசக்கியெறிந்து கைகழுவி
மஞ்சள் புற்பாய் விரித்த ஸ்தெப்பி வெளியெங்கும்
பட்டாம்பூச்சிகளைத் துரத்தித் திரிந்த
கஸாக்கியச் சிறுமியொருத்தியை
நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும் (ஆறுதலுக்காகவாவது..).


4.

அதற்கப்பாலும்...

(உம்பர்த்தோ ஈகோ.. டெரிடா, சிமோன் தி பூவாவை விமர்சித்ததன் போதானதைப் போன்ற)
உரையாடல்களின் நீட்சியில் எடுத்தெறியப்படும்
ஒரு வார்த்தைக்கும் மற்றுமொரு வார்த்தைக்கும்,
எழுதப்பட முன்னரே மனதிலுறைந்து விட்ட கவிதையொன்றின்
ஒரு வரிக்கும் மற்றைய வரிக்கும்,
(போர்கேயின் கணிதவியல் மற்றும் மார்க்வெஸின் மாயா யதார்த்தவாத மற்றும் அதனுடன் கூடிய..)
பிரதிகளின் ஒரு பக்கத்துக்கும் அதனருகான அடுத்த பக்கத்துக்கும்
இடையிலான இடைவெளியில்
வெளியெங்கும் வியாபிக்கும் ஆன்மாவின் எஞ்சிய தடயங்களோடு
சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வேன்,
இனியொருபோதும்..
என் சின்னஞ்சிறு மயிர்க்கொட்டிகளை வெறுமை விழுங்காதிருக்க.


5.

எப்படிச் சொல்வேன் நான்... நியூயோர்க்கின் ஆதுபான் அரங்கிலும், வவுனியாவின் வீடொன்றிலும் கண்முன்னே சுடப்பட்டிறந்த (அட்டல்லாவுக்கு ஆறு வயதாயிருந்திருக்கவேண்டும் அப்போது.. எஸ்போஸின் குழந்தைக்கு எட்டோ என்னமோ..) அவர்களது அப்பாக்களை என்னால் திருப்பித் தர முடியாது.. உயிர்ப்பிக்கவும் இயலாது. இன்மைகள் மனிதத் தடங்கள் மீது நிகழ்த்திய வன்முறையின் வெளிப்பாடென அதனை அடையாளப்படுத்துதல் மட்டுமே என்னால் சாத்தியமான போதிலும், அவர்களை அணைத்துக்கொண்டு சொல்வேன்..,

"எனது அப்பாவை அவர்கள் எப்போது பறித்துக் கொள்வார்களென்று எனக்கும் தெரியாது. நீண்டநாட்களாக அந்தக் கணத்தை - அப்படியேதும் நடந்துவிடக் கூடாதென்ற பதைபதைப்புடன் - எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் குழந்தைகளுள் ஒருத்திதான் நானும். வெகு விரைவில், என் உள்ளுணர்வின்படி - வானத்தில் இன்னுமொரு புது நட்சத்திரம் முளைக்கும்போது (இறந்தவர்கள் நட்சத்திரமாக வானில் மின்னுவார்களென்று அம்மா சொல்வாள்), உங்களுக்கு இன்னுமொரு தோழி கிடைத்துவிட்டதை உணர்வீர்கள்.

நாங்கள் அனைவருமிணைந்து எங்கள் அப்பாக்களுக்குக் கடிதமெழுதுவோம்:
'அப்பா, அப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன், அப்பா, நீங்கள் இறந்திருக்கக் கூடாதென்று நான் நினைக்கிறேன்.'

முகவரிகளற்ற உலகுக்கு அந்தக் கடிதங்களை அனுப்பி வைப்போம். அல்லாதுவிடில், எமது கனவுகளில் வளையவரும் வெண்சிறகணிந்த தேவதைகள் எமக்காய் அவற்றை எடுத்துச் செல்லட்டும்."

ஓ.. என் பிரிய மயிர்க்கொட்டிகளே! எனக்கும் தெரியும். அப்பாக்கள் எப்போதும் கண்டிப்பானவர்கள்.. வீட்டிலிருப்பதைவிட அவர்கள் வெளியிலிருக்கும் நேரம் அதிகம்.. எங்களைவிட மற்ற அனைவர் மீதும் அதிக அக்கறை கொள்வார்கள்.. எங்களுக்கு பரிசுப்பொருள் வாங்கித் தருவதோ, அம்மாவுக்கு உடுப்போ, நகையோ ஒன்றுமில்லை..ஆனால், அவர்களுக்கு வேறு செலவுகள் இருந்துகொண்டேயிருக்கும்..

இத்தனையிருந்தும், நாங்கள் அவர்களை நேசிக்கிறோம். ஏனென்றால், எமக்குத் தெரியும், அவர்கள் மற்றவர்களுக்காக உயிர்வாழ்ந்தவர்கள்.. மற்றவர்களுக்காக உயிர்துறந்தவர்கள். எங்களுக்காக அவர்கள் விட்டுச் சென்றது எதுவுமேயில்லை எனினும், மற்றவர்களுக்காக எங்களை விட்டுச் சென்றிருக்கும் எங்கள் அப்பாக்களை நாங்கள் எப்போதும் நேசிப்போம்!

-Apr 20, 2007-

Monday, June 04, 2007

நேசத்துக்குரியவர்களை நெகிழ்வுடன் அசைபோடுதல்

உன்னுடனான சில நிமிட உரையாடலே போதுமானதாயிருக்கிறது.., உலகத்துக் கவலைகளை மறக்க; மறுபடியுமொருமுறை புத்துயிர் பெற்றெழ. உனது அன்புக் கட்டளையின்படி நேற்றிரவு, வேண்டாத விடயங்களில் மனது அலைபாய்வதைத் தடுத்து மனதுக்குப் பிடித்த விடயங்களையே நினைப்பதென்ற தீர்மானத்துடன் படுக்கையில் சாய்ந்தேன்.

மனதுக்குப் பிடித்தது...? வேறென்னவாக இருக்கமுடியும் உன் நினைவுகளைத்தவிர. இறுதியாக என்ன பேசிக்கொண்டிருந்தோம்... ம்ம்ம்... பெரியார்.. மதம்.. மார்க்ஸியம். விவாதிப்பதற்கு அருமையான விடயங்களில்லையா.. இவை குறித்து உன்னுடன் இன்னும் எவ்வளவோ கலந்துரையாட வேண்டியிருக்கிறது; என் அரைகுறை அறிதல்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனது நம்பிக்கையீனங்களையும்.., எனக்கான கொள்கைகளை வகுப்பதில் தாக்கம் செலுத்திய நிர்ப்பந்தங்களையும்.., எனது நம்பிக்கைகள் எங்கே தொலைந்து போயினவென்பதையும்.. உன்னுடன் பகிர்ந்துகொள்ளத் துடிக்கிறது மனம். உனது நம்பிக்கைகளை நோக்குமிடத்தும்.., உன் அப்பாவைப்பற்றி நீ கூறியவற்றைக் கேட்டவிடத்தும் என் நிலைப்பாடுகளும் என்றேனுமொருகால் இப்படித் தடம்புரளுமாவென்ற கலக்கம்... அல்லது அப்படியேதும் நிகழ்ந்தால் இன்னும் நிம்மதியாய் உணர்வேனோவென்ற நப்பாசை... என்னவெல்லாமோ தோன்றுகின்றது.

நானும் ஒருகாலத்தில் இத்தகைய நம்பிக்கைகளோடு வாழ்ந்தவள்தான். முருகன்... சைவசமயம் கற்றுத்தந்த கடவுளரில் என்னை மிகவும் கவர்ந்தவன். இன்றைக்கு சில வருடங்களுக்கு முன்பு அவனையொத்த வயதுகளில் நானுமிருந்தபடியாலோ என்னமோ... ஒரு தோழனாய் என் அனைத்தையும் பகிர்ந்துகொள்ள முடிந்தது அவனோடு. கார்த்திகேயன்... அவனது பெயர்களில் மிகப் பிடித்தது.. நெஞ்சுகொள்ளாப் பிரியத்துடன் 'கார்த்தி' என்றே அவனை விளித்திருக்கின்றேன் (இந்தத் தாக்கத்தில்தான் என் நாட்குறிப்பிற்கும் கார்த்தி என்றே பெயரிட்டு.. இன்றுவரை அப்படித்தான்.. கார்த்தியோடு உரையாடுவதாய்த்தான் நாட்குறிப்பு எழுதிவருகிறேன்). மனம் கனத்துப் போகும் போதெல்லாம் அவனது படமொன்றினை வைத்துக்கொண்டு மணிக்கணக்காய் அவனுடன் உரையாடியிருக்கிறேன். ஒருபோதும் 'பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.. அது வேண்டும்.. இது வேண்டும்..' என்று எதுவும் கேட்டுக்கொண்டதில்லை அவனிடம். இது தந்தால்.. அது தருவேனென என் அன்பினை/பக்தியை ஒருபோதும் வியாபாரமாக்கியதுமில்லை. நான் வேண்டியதெல்லாம், 'நீ எப்போதும் என்னுடனேயே இருக்க வேண்டும்.. என் ஒவ்வொரு இன்பத்திலும் துன்பத்திலும்... ஏற்றத்தாழ்வுகளிலும் ஒரு ஆறுதலாக நீ இருக்கவேண்டும்..' என்பதுதான். அவனும் இருந்தான்... உலகம் எனை வஞ்சித்துவிட்டதாய் உணர்ந்து மனமுடைந்து அழுதபோதெல்லாம், 'யாமிருக்க பயமேன்..?' என்று கூறிச்சென்றான்.. அசட்டுக் குழந்தையே என்று அடிக்கடி என்னைக் கடிந்தும் கொண்டான்.

ஏன் இந்த நம்பிக்கையெல்லாம் சடுதியாகக் கைநழுவிப் போயிற்று..? சடங்குகள், ஒழுக்க ஆசாரங்கள், மரபு வழிவந்த (மூட) நம்பிக்கைகளை எந்தக்காலத்திலும் நான் ஏற்றுக்கொண்டதில்லையெனினும் ஏன் கடவுளரை வெறுக்க ஆரம்பித்தேன், நான்..?

வியாபாரமாகிப்போன பக்தி... தரகர்களாக மாறிப்போன பூசாரிகள்... கேலிக்கூத்தாய்ப்போன கிரியைகள்... மேலும் இந்தத் தெய்வ புத்திரர்கள்... கடவுளரின் மைந்தர்களாய்த் தம்மை அடையாளங்காட்டிக் கொள்பவர்களில் ஒருத்தியாய் - வெட்கித்தலைகுனிந்து - நானுமிருக்கக் கூடாதென்ற வீறாப்பில்தான் அவர்களைத் தூக்கியெறிந்தேன். இந்த மதமும், அதன் பாதுகாவலர்களும் என் பெண்மையை அவமதித்தபோது.., பெண்ணென்ற ஒரே காரணத்திற்காய் எத்தனையோ சந்தர்ப்பங்களில் என்னைப் புறக்கணித்தபோது... வெறியும் திமிரும் கிளர்ந்தெழ... என்னை மதிக்காத எதையும், எவரையும் நானும் மதிக்கப்போவதில்லையென முடிவெடுத்து இவர்களின் போலி அரிதாரங்களை அலட்சியப்படுத்தத் தொடங்கினேன். இந்த இந்த நாட்களில் என்னை நெருங்காதே என்று எந்த இறைவன் வந்து சொல்லிப் போனானாம் இவர்களிடம்..?! இறைவர்களை விடுங்கள்.. இறைவியரைக்கூட நெருங்க வேண்டாமாம்... அநியாயமாயில்லை.. அபத்தமாயில்லை..?? நான் மிக மிகப் புனிதமானதாக மதிக்கும் தாய்மையை இவ்வுலகத்தின் சிருஷ்டிகர்த்தாக்களாகக் கூறிக்கொள்ளும் சக்திகளே அவமதிக்கும்போது நான் மட்டுமேன் அவர்களை மதிக்க வேண்டும்..

மார்க்ஸியம் பற்றிய எனது அறிவு மிக மிகச் சொற்பமானதுதானென்றாலும், அந்தச் சொற்பத்திற்குள்ளும் ஆயிரத்தெட்டு முரண்பாடுகளை என்னால் அடையாளங்கண்டுகொள்ள முடிந்ததாலும்... - கம்யூனிஸமும் ஆணாதிக்கவழிச் சிந்தனையின் மற்றுமொரு வடிவமே.. என்னதான் சமத்துவம்பற்றி வலியுறுத்திக் கூறினாலும் பெண்கள் தொடர்பான ஆணாதிக்கமுறைமைச் சமுதாயத்தின் நிலைப்பாடுகளுக்கு முரணாகவோ, பாலினச் சமத்துவம் பற்றியோ அது அதிக கரிசனை காட்டவில்லை - இவர்களது மற்றுமொரு உழுத்துப்போன தத்துவக் கழிவுகளுள் ஒன்றாகத்தான் மார்க்ஸியத்தையும் கருதினேனென்றபோதும்... மனித சுயவுணர்வே உண்மையான, உயர்ந்த கடவுளென்று கூறிய மார்க்ஸ் என்ற தனிமனிதர் என்னை மிகவும் ஈர்த்ததும் இந்தக் காலங்களில்தான்.

மானுட இயலுமைகளுக்கும், புரிதலுக்கும் அப்பாற்பட்ட அமானுஷ்ய சக்தியொன்று இருப்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்தான் என்றாலும், அவ்வமானுஷ்ய சக்தி/ பரப்பிரம்மம் ஒரு சமுத்திரமென்றால்... அதில் நானும் ஒரு சிறுதுளி... நீயும் ஒரு சிறு துளி... அவனும்.. அனைவரும். இப்படி எத்தனையோ துளிகள் ஒன்றிணைந்துதான் ஒரு சமுத்திரம் உருவாகின்றதென்ற புரிதல் ஏற்படும்போது... அதன்பிறகும் எவரையும் வெறுக்கவோ, அலட்சியப்படுத்தவோ எம்மால் முடியப்போவதில்லை.

மனித இனத்தைக் கூறுபோடவும், ஒருசாராரை தீட்டு.. அந்த இந்தப் பணியாரங்களென்ற பெயரில் ஒதுக்கி வைக்கவும் வழிசெய்த மதங்களை/ கடவுளரை விடவும்... 'மனிதனே மனிதனுக்குக் கடவுளென்றால் மனிதனை இழிவுபடுத்துகின்ற.., அடிமைப்படுத்துகின்ற.., புறக்கணிக்கிற.., கைவிடுகின்ற.. எல்லா உறவுகளும் தூக்கியெறியப்பட வேண்டும்..' என்றுகூறிய மார்க்ஸ் எனும் மாமனிதருக்கு... சக மனிதரை நேசிக்கவும், மதிக்கவும் கற்றுத்தந்த அந்த அற்புதமான ஆளுமைக்குத் தலைவணங்குகின்றேன்.

நீ கூறியதுபோல மொஸ்கோவில் மழைபெய்கின்றதென்றவுடன் இங்கே குடைபிடிக்கின்ற அரைவேக்காடுகள், அவரையும் அவரது சிந்தனைகளையும் கொச்சைப்படுத்துவதாகவே தோன்றுகின்றது, எனக்கு. மார்க்ஸ் மதங்களை அவற்றின் இயல்பான பலவீனங்கள் காரணமாக மறுத்திருக்கலாம்.. ஆனால், ஒருபோதும் அவர் மதங்களைத் தூக்கியெறிய முயலவில்லை. 'மதம் ஒடுக்கப்பட்ட உயிரின் பெருமூச்சு, இதயமற்ற உலகத்தின் இதயம், அது உணர்ச்சியற்ற நிலைமைகளின் உணர்ச்சி..' என்ற தெளிவு இருந்திருக்கிறது அவருக்கு.

(தமிழ் மொழிபெயர்ப்பு அவ்வளவு வாய்க்கவில்லைதான் என்றாலும்) மார்க்ஸின் கவிதைகளில் கைவசமிருந்தவை..:

நான் கெட்டவனல்ல, நல்லவனுமல்ல;
என்னிடம் வேகமில்லை, சுணக்கமுமில்லை
நான் நேற்று முன்னே சென்றால்,
நான் இன்று பின்னால் செல்வேன்.
ஒளிமிக்க மதவாதி நான்
பெண்குதிரையல்ல, ஆண் குதிரையுமல்ல;
sophocles, சாட்டை இருவருமே
என்னுடைய எழுச்சியின் ஊற்றுக்கள்

....................................

கான்ட்டும் Fichte யும் தொலைதூரத்திலுள்ள
உலகத்தைத் தேடி வானில் பறக்கிறார்கள்;
நான் ஆழமான உண்மையைத் தேடுகிறேன்
அதைத் தெருவில் கண்டெடுக்கிறேன்

.....................................

என்னுடைய ஆன்மாவின் கருத்து வெறியை
என்னால் ஒருபோதும் அமைதிப்படுத்த இயலவில்லை
எதையும் நான் சுலபமென்று நினைக்கவில்லை
நான் ஓய்வில்லாமல் முன்னேற வேண்டும்
கடவுள்கள் அருளும் ஆசிகளை
அனைத்தையும் பெற நான் முயற்சிப்பேன்,
ஆழத்திலுள்ள அனைத்து அறிவைப் பெறுவேன்,
கவிதைக் கலையின் ஆழத்தைத் தொடுவேன்
எனவே நாம் எல்லாவற்றையும் இழக்கத் தயாராவோம்.