Sunday, April 29, 2007

காலனித்துவ இலங்கை அரசியல் சமூகத்தில் தமிழ்ப் பெண்களும் பெண்களின் அரசியலும்

காந்திய வழி சமூக சேவையாளர் மங்களம்மாளை முன்வைத்து..

(வள்ளிநாயகி இராமலிங்கத்தின் 'யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி - ஓர் ஆய்வு' எனும் நூலை வாசித்துக் கொண்டிருந்தபோது அவசரமாகவேனும் சில குறிப்புகள் எழுத வேண்டுமென தோன்றியதன் விளைவு )

1.
அறிமுகம் - வரலாற்றில் மறுக்கப்பட்ட அங்கீகாரம்


அதிகார வர்க்கம் எப்போதும் மிதவாதப் போக்குடையவர்களைத் திருப்திப்படுத்துவதன் மூலம் 'தீவிரவாதி'களின் எழுச்சியை முடக்கிவிட முயற்சிப்பது உலக வரலாற்றின் அத்தியாயங்கள் தோறும் நாம் கண்டுவரும் உண்மை. இறுதியில், அம்மிதவாதிகள் வரலாற்று / காவிய நாயகர்களாகி விடுவதையும், உண்மையாகப் பாடுபட்டவர்கள் போதிய அங்கீகாரம் வழங்கப்படாமல் உதாசீனப்படுத்தப்படுவதையும் கூட பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்.

மல்கம் எக்ஸின் 'என் வாழ்க்கை' எனும் சுயசரிதையை வாசித்து முடித்தபோது மனதில் மேலெழுந்ததும் இதே உணர்வுதான். கறுப்பினப் போராட்ட வரலாற்றில் மார்ட்டின் லூதர் கிங்கையும், நெல்சன் மண்டேலாவையும் அறிந்திருந்தளவு ஏன் மல்கம் எக்ஸை அறிந்திருக்கவில்லையென்ற கேள்வி உறுத்திக் கொண்டேயிருந்தது. இன்றுமே கூட, நியூயோர்க் நகரத் தெருக்களின் அடிமட்டக் கறுப்பின மக்களிடையே போதை வியாபாரியாகவும், பாலியல் தொழில் முகவராகவும் அலைந்திருந்து, சிறைசென்று அமெரிக்க வாழ் கறுப்பின மக்களின் எழுச்சிக்காகவும், அதிலும் முக்கியமாக சுயமரியாதை, சுயசார்புடன் கூடிய கறுப்பினச் சமூகமொன்றை உருவாக்கவும், கறுப்பனென்ற - வெள்ளையர்கள் உருவாக்கிவிட்ட - தாழ்வுச் சிக்கலிலிருந்து விடுபட்டு தனது பிறப்புக் குறித்துப் பெருமைகொள்ளுமோர் மக்கள் குழுவினரின் தோற்றத்துக்காகவும் அயராதுழைத்த மல்கம் எக்ஸுக்கு, படித்த உயர்வர்க்கக் கறுப்பினர்களின் தலைவரான மார்ட்டின் லூதர் கிங்க்கு வழங்கப்பட்ட கௌரவம் வழங்கப்படுகிறதா என்பது சந்தேகமே.

அவ்வளவு தூரம் போவானேன.. இலங்கையின் காலனித்துவ காலங்களின் போதான அரசியலை எடுத்து நோக்குவோமாயின் பிரித்தானியருக்கு வால் பிடித்துத் திரிந்த மிதவாதப் போக்குடைய சேர்.பொன்.இராமநாதன் போன்றோரையே எமது சுதந்திரப்போராட்டத் தலைவர்களாக ( இவர்கள் என்னத்தைப் போராடிக் கிழித்தனரென்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்) அறிந்து வைத்திருக்கிறோமே தவிர, இலங்கைத் தேசிய இயக்கத்தின் ஆரம்ப காலகட்டங்களில் வடபகுதியில் விடுதலைப் போராட்டத்தில் காந்திய வழியினைப் பின்பற்றி வந்த.., தீண்டாமை, சாதியப் பாகுபாட்டிற்கெதிராகத் தீவிரமாகச் செயற்பட்ட சுதந்திரப் போராட்ட இயக்கமான யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் போன்றவற்றைப் பற்றி - அரசியலை ஒரு தனிப்பாடமாகப் படித்திராத - எத்தனைபேர் எந்தளவு தூரம் அறிந்து வைத்திருக்கிறோம்?

இலங்கையின் காலனித்துவ ஆட்சிக்கெதிரான சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும, இலங்கைத் தேசிய இயக்கத்தின் வரலாற்றிலும் யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் பெயரளவில் மட்டும் இடம்பெறுகின்ற நிலையே காணப்படுகின்றது. இவ்வளவுக்கும் கொழும்பில் வசித்த ஏனைய மிதவாதத் தமிழ்த்தலைவர்களை விட சாதாரண மக்களுடன் நெருக்கமாகவிருந்த இவ்வியக்கம் பிரித்தானிய அரசு அறிமுகப்படுத்தியிருந்த டொனமூர் சீர்திருத்தப் பிரேரணையை - பிரதேசவாரிப் பிரதிநிதித்துவத்தினால் சிறுபான்மையினரின் அரசியல் பங்குபற்றுதல் திட்டமிடப்பட்ட வகையில் மட்டுப்படுத்தப்படுகிறதென - கடுமையாக எதிர்த்திருந்தது. தென்னிலங்கைத் தமிழ்த்தலைவர்கள் இவ்வெதிர்ப்புக்கு ஆதரவு வழங்குவதாக வாக்களித்திருந்தும் கடைசிநேரத்தில் கைகழுவிவிட்டமை குறிப்பிடத்தகுந்தது . இம்மிதவாதிகள் டொனமூர் பிரேரணையை எதிர்த்தமை சாதிய அடிப்படையில் தாழ்ந்தவர்கள் மற்றும் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்படப் போகின்றதென்ற காரணங்களுக்காக என்பது வேறுவிடயம்.

இத்தகைய வரலாற்றுச் சம்பவங்களின் தொடர்ச்சியாகத்தான் மங்களம்மாள் எனும் மாபெரும் பெண்ணொருத்தி வரலாற்றில் போதிய அங்கீகாரம் வழங்கப்படாமல் மறக்கடிக்கப்பட்டதையும் கவனத்திற்கொள்ள வேண்டும. அதற்குக் காரணமாகத் தனது நூலில் வள்ளிநாயகி கூறுவது:
'....அவரிடமும் சிறிது ஆடம்பரம், ஒரு கார், மேல்நாட்டுப்பாணி சேர்ட்டிபிகேற், இலங்கை அரசாங்கத்தில் அவரது கணவனுக்கு உயர்பதவி இருந்திருக்குமானால் கல்லினாலல்ல பொன்னினால் சிலையெழுப்புமளவில் யாழ்ப்பாணப் பெண்கள் அணி திரண்டிருப்பார்கள் . வறுமையில் உழன்று, மங்கிப்போன வெள்ளைக் கதராடை புனைந்து, நகை நட்டில்லாமல், ஒரு பையில் புத்தகங்களைக்கொண்டு நடைபவனி வரும் இவரை யார் கவனிப்பார் ..?'
(பக்.145)

2.
மங்களம்மாள் காலத்து சமூக அரசியற் பின்னணி

மங்களம்மாள் தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கிய காலங்களில் இலங்கை அரசியல் சமூகத்தின் நிலையையும, பெண்களின் நிலையையும் அறிந்துகொள்வது அவரது முக்கியத்துவத்தினை உணர்ந்துகொள்ள உதவியாகவிருக்கும். வள்ளிநாயகி கூறுவதன்படி, தமிழ் அரசியல் தலைவர்களாக விளங்கிய சேர்.பொன் .இராமநாதன் போன்றோர் கூட சுதந்திரம் பெறுவதற்கு நாம் இன்னமும் தயாரில்லையென அறிக்கைவிட்ட காலமது. அத்துடன், பெண்கள் அரசியலில் பங்குபற்றுதல், பெண்களுக்கு வாக்குரிமை வழங்குதலென்பவற்றையெதிர்த்து 'குடும்பத்தையும் வீட்டையும் பார்த்துக்கொள்வதுதான் பெண்களின் கடமை .. நாட்டைப் பார்க்க எங்களுக்குத் தெரியும்.. அவர்கள் அரசியலுக்கு வந்தால் வீட்டைப் பார்ப்பது யாராம் ' என்றெல்லாம் எமது ஆனானப்பட்ட தலைவர்கள் உரையாற்றித் திரிந்த காலமது. இவையனைத்தையும் மீறி ஒரு பெண் உத்வேகத்துடன் எழுந்தாலும், நமது பெண்களையும் கெடுத்துவிடுவாளோவென்று அஞ்சி அவளை முளையிலேயே கிள்ளியெறிய ஆயிரம் பேர் கொதித்தெழும் நிலை அன்றைக்கிருந்தது (இன்றைய படைப்புலக பிரம்மாக்கள் சிலர் இவர்களையும் மிஞ்சிவிடக்கூடியவர்களென்பதை இவ்விடத்தில் மறந்துவிடுவது நலம்).

படித்த உயர்வர்க்கத்துப் பெண்கள் கூட நாகரிக மோகத்தினால் ஆட்கொள்ளப்பட்டதாலோ என்னமோ இத்தகைய விழிப்புணர்ச்சியைப் பெற்றிருக்கவில்ல. நமது ஆண்களைப் பகைத்துக் கொள்வானேனென்று நினைத்தும் ஒதுங்கியிருக்கலாம் அல்லது காஞ்சிபுரம் சேலைகளையும், நகைகளையும் விட்டு மங்களம்மாள் கேட்டுக்கொண்ட கதராடையுடனான எளிய வாழ்வுக்கு அவர்கள் தயாரில்லாததாயுமிருக்கலாம்.

3.
பணியும் பங்கேற்பும்

1884ம் ஆண்டு பிறந்த மங்களம்மாள் அதிகம் படித்தவரல்லவெனினும், பட்டம்பெற்ற பலரையும் விட அனுபவ அறிவும், ஆழ்ந்த தேடலும், சீரிய சிந்தனையும் நிறைந்தவர். யாழ்ப்பாணத்தின் முதல் பெண்கள் முன்னேற்ற இயக்கமான பெண்கள் சேவை சங்கத்தினைத் தனது 18வது வயதில் வண்ணார்பண்ணையில் அமைத்தார் (1902). இது மதச்சார்பற்றதாயும், தமிழ்ப் பெண்களுக்கு அறிவும், தன்னம்பிக்கையும் ஊட்டுவதாயும், பெண்விடுதலைக்கான முதலாவது அடியை எடுத்து வைப்பதாயுமிருந்ததென வள்ளிநாயகி எடுத்துரைக்கிறார்.

மங்களம்மாளின் மகளிர் தேசியச் சேவைச் சங்கம் (1932), தமிழ் மகளிர் கழகம் (1933) போன்றவை தீண்டாமை ஒழிப்பு, பெண் விடுதலை, பெண் சமத்துவம் போன்ற சமூக சீர்திருத்த விடயங்களை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தகுந்தது. சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்த இவர் தனது கணவரின் துணையுடன் இந்தியாவுக்குச் சென்று காங்கிரஸ் தொண்டரானார. இந்தியாவிலேயே பெண்கள் அரசியலில் அதிகம் ஈடுபடத் தொடங்கியிராத காலத்தில் இவர் 1927ல் மாநகரசபைத் தேர்தலில் எழும்பூர்த் தொகுதியில் போட்டியிடத் தெரிவுசெய்யப்பட்டார். யாழ்ப்பாணப் பெண்ணொருத்திகு இந்தியத் தேர்தலில் போட்டியிடச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை - பின்புல அரசியலை விடுத்துப் பார்த்தால் - சிறப்புக்குரியதே. டொனமூர் குழுவினர் இலங்கையில் அரசியல் சமூக நிலைகளை ஆராய்ந்து கொண்டிருந்த காலத்தில் ஆண்கள் தமது எண்ணங்கள, கருத்துக்களை அனுப்பினால் இதில் இலங்கைப் பெண்களின் பங்கு என்னவெனக் கேள்வியெழுப்பி இவரெழுதிய கடிதத்தின் பகுதியொன்று :
'..சீ எமக்கு வெட்கம். ஒரு சின்ன விரலைத் தானும் நாம் அரசியலை நோக்கித் திருப்பவில்லை; வெளிநாட்டுப் பெண்கள் பாடுபடுவதுகூட எம்மில் எதுவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எமது பிறப்புரிமைக்காகப் போராடாத எம்மைப்பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்? எமது ஆண் சகோதரர்கள் எமது சீதனத்தினால் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றதோடு, பலர் பிரதிநிதித்துவ அமைப்பில் அமர்ந்துகொண்டு, நம்மைப்பற்றி ஒரு சொல் தானும் தமது மனுக்களில் கூறவில்லையே சகோதரிகளே! பால் வேற்றுமையினால் காட்டப்பட்ட தகைமையீனங்கள் அகற்றப்பட்டு அரசியலில் சமவுரிமை அளிக்கப்பட வேண்டுமல்லவா..'
(பக்.140)

சொத்துடை, படித்த ஆண்களுக்கென வரையறுக்கப்பட்டிருந்த வாக்குரிமையை ஆண்கள் பெற்றுக்கொண்டது பெண்களின் சீதனப் பணத்தினாலேயே. ஆனால், பெண்கள் தொடர்ந்து அடக்குமுறையினையே அனுபவித்துக் கொண்டிருந்தார்களெனும் உண்மை அவரால் எடுத்துக்கூறப்பட்டது. 'நாமார்க்கும் குடியல்லோம்' எனும் இலட்சிய வாசகம் பூண்ட 'தமிழ் மகள்' எனும் சஞ்சிகையினை 1923 ம் ஆண்டு ஆரம்பித்து தொடர்ந்து 40 வருடங்கள் - 1971ல் தான் இறக்கும் வரை - நடத்தி வந்தவரை அக்காலத்தில் சீர்திருத்தம் பேசிய ஆண்கள் கூட மதித்திருக்கவில்லை. ஆண்களுக்குத் 'தான் ஆண்' எனும் அகங்காரமென்றால், கல்வித்தகைமை பெற்ற பெண்கள் கூட 'சும்மா ஓடி ஓடித்திரியும் படிப்பறிவு காணாது ' என மங்களம்மாளைக் குறிப்பிட்டதாக வள்ளிநாயகி கூறுகின்றார். இவர்களைப் பொறுத்தவரை அறிவென்பது பத்திரங்களிலும், காகிதங்களிலும் முத்திரை குத்தப்பட்டது தானே தவிர அனுபவ அறிவும், சிந்தனா ரீதியான கேள்வியறிவுமல்லவெனத் தனது விசனத்தையும் முன்வைக்கிறார்.


மங்களம்மாளின் 'தமிழ்மகள்' சஞ்சிகை பெண் விடுதலை, பெண் சமத்துவம், பெண்மை நலன் பேணுதல், கதராடை, தீண்டாமை, சீதனக்கொடுமை, கன்னிப்பெண்கள் சமூகத் தொண்டு, சமூகச் சீர்திருத்தம் போன்ற பல தளங்களிலும் நின்று கட்டுரைகளை வெளியிட்டுள்ளது .
'..சம்சார சாகரமெனும் நரகக் குழியிலே விழுந்து உண்டு, உறங்குவதைக் கண்டதேயல்லாமல் ஓர் பயனும் எடுத்திலோம் எனும் பெண் பிறவிகளும் உளரே . கல்யாணம் செய்வதும் கதிர்காமம் போவதுதானா வாழ்வின் இலட்சியம்..?' (பக்.148,149)

என தனது கட்டுரையொன்றில் பெண்களைச் சாடவும் செய்கிறார். அவர் இறந்து பல்லாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் இது இன்றைக்கும் பொருந்தக்கூடியளவு பெரும்பான்மையான பெண்கள் தொடர்ந்தும் அறியாமையில் மூழ்கிக் கிடப்பது கவலைக்குரியதே.

வடபகுதியில் பல்கலைக்கழகமொன்றினை அமைப்பதென அரசு முடிவெடுத்திருந்த போது அதை எங்கே அமைப்பதென தமிழரின் இரு கட்சிகளுக்கிடையேயும் முரண்பாடுகள் தோன்றியிருந்த காலத்தில் அது குறித்த கட்டுரையொன்றையும் தனது சஞ்சிகையில் வெளியிட்டிருந்தார்.
'..மாநகர முதல்வர் தேர்வில் ஒன்றுபட்ட இரு தமிழ்க்கட்சிகளும், தமிழ்மக்களின் மிக முக்கியமான பல்கலைக்கழகப் பிரச்சனையைத் தீர்ப்பதில் ஒற்றுமைப்படாதிருத்தல் கண்டு பெண்களாகிய நாம் பெரிதும் வியக்கின்றோம். இத்தகைய தலைவர்களா தமிழ் மக்கள் பிரச்சனைக்குத் தீர்வு காணப்போகிறார்கள்?'
(பக்.151)

4.
துணைவர் மாசிலாமணி

பெரும்பாலான பெண்களின் சமூக வாழ்க்கை அவர்களது திருமணத்துடன் தடைப்படுதல் இயல்பு. ஆனால், மங்களம்மாளைப் பொறுத்தவரையில் திருமணம் தான் அவரது சமூக அரசியல் வாழ்க்கைக்கான உந்துகோலாயமைந்ததெனலாம். இவரது துணைவரான மாசிலாமணி இந்தியாவில் பிறந்த, இந்தியாவிலும், இலங்கையிலும் பொதுப்பணிகளில் ஈடுபட்டு உழைத்தவரும் , 'தேசாபிமானி' பத்திரிகையின் ஆசிரியருமாவார். யாழில் ஒத்துழையாமை இயக்கம் மற்றும் கதராடை பற்றிய தீவிரப் பிரச்சாரங்களில் ஈடுபட்டதுடன் மங்களம்மாள் இந்தியக் காங்கிரஸில் இணைவதை ஊக்குவித்தவரும் இவரே.

பெண்களின் வெற்றிக்குப் பின்னால் சமயங்களில் ஆண்களும் இருப்பதுண்டென்பதற்கு இவர்களது வாழ்க்கையே சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. இன்றைய 21ம் நூற்றாண்டின் முற்போக்குவாதிகள் பலரையும் போல வெளியில் பெண்ணுரிமை பேசித்திரிந்துவிட்டு வீட்டில் மனைவியை தோசைவார்க்க வைத்தவரல்ல இவர். மாசிலாமணியின் இறப்பின் பின்னர் மங்களம்மாள் அவரைப்பற்றி எழுதிய சில வரிகளே இதனை உணர்த்திப் போகும்:
'..இவரிடம் காணப்பட்ட பெருநோக்கு யாதெனில் மற்றும் ஏனையோர், தன்னை இன்னாளின் கணவராமெனக் கொள்ளுதல் வேண்டுமெனும் வாஞ்சையாம் .'
(பக்.147)

இத்தகைய அரும்பெருங்குணத்தை முற்போக்குவாதம், பெண்ணியம், சமத்துவம் பற்றி அளவளாவித் திரிகின்ற ஆண்களிடம் காண்பது அரிதாகவிருக்க இன்றைக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து மறைந்த மாசிலாமணி அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்திருந்தமை வியப்பிற்குரியதே..

5.
பெண்களின் அரசியல்

இது மிக விரிவாக ஆராயப்பட வேண்டிய விடயமெனினும, சுருக்கமாகக் கூறுவதாயின்..., சமீபத்தில் நண்பரொருவருடனான உரையாடலின்போது, 'ஆண்கள் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யும்போது சாடுகிறீர்களே.. சிறிமாவோ, சந்திரிக்கா, ஜெயலலிதா, ஏன் இந்திரா காந்தியென பெண்கள் பலரதும் ஆட்சியைப் பார்த்தவர்கள் நாம் .. இவர்கள் அதிகாரத்திலிருந்தபோது மட்டும் நிலைமை முன்னேற்றமடைந்திருந்ததா..?' எனக் கேட்டார்.

பெண்களின் அரசியலென்ற கருத்தாக்கம் இவ்விடத்தே தான் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்தக் குறிப்பிட்ட பெண் தலைவர்களனைவரும் ஆண்களின் பிரதிநிதிகளாய், ஆண் மேலாதிக்க சமூகம் உருவாக்கி வைத்திருந்த சமூக, அரசியல் சூழ்நிலைகளுக்குள் நின்றுகொண்டு ஆட்சி புரிந்தார்களேயொழிய எவரும் பெண்ணென்ற தமது சுய அடையாளத்தினை வலியுறுத்த முயன்றனரெனக் கூறமுடியாது. ஒருவகையில் தமது அத்தகைய அடையாளங் குறித்து வெட்கி ஆண் தலைவர்களை அப்படியே பிரதியெடுக்க முனைந்ததன் விளைவுதான் இதெனலாம்.


இந்தவகையில்தான் பெண்களின் அரசியல, அரசியலதிகாரத்துக்கு வெளியே நின்று முன்னெடுத்த மங்களம்மாள் முக்கியம் வாய்ந்தவராகின்றார். பெண்களுக்கேயான தனிப்பட்ட பிரச்சனைகள, சவால்களை அரசியல் தளத்துக்குக் கொண்டுவருவது மற்றும் பெண் சிந்தனை வழி நின்று அரசியலுக்கு முகங்கொடுப்பது.. இதனை எத்தனை பெண் தலைவர்கள் முன்னெடுத்துள்ளார்கள், இன்று முன்னெடுத்து வருகிறார்களென்பது கேள்விக்குரியதே.

Saturday, April 21, 2007

சாபக்கேடும், சவக்கிடங்கும், சாத்தானின் ஆயுதமுமானதைப் பற்றி..!

கடைசியாக எப்போது மழையை இரசித்தேன்?
நினைவில்லை.
கருநிறக் காளானென தெருவெங்கும்
ஆங்காங்கே முளைத்திருக்கும்
குடைகளின் விளிம்புகளிலிருந்து
வெண்பனித் துகள்களாய்..
சரம் சரமாய்..
மழைநீர் கோர்த்துத் தொங்குவதை,
தார்ச்சாலைகளில் விழுந்து தெறிப்பதை
கடைசியாக எப்போது விழிவிரியப் பார்த்திருந்தேன்?
அதுவும் நினைவில்லை.

இன்றும் மழைபெய்தது.
உச்சந்தலையில் தென்னைமரக் கொண்டையிட்டலைந்து,
வீட்டுமுற்றத்தில் தேங்கி நிற்கும் மழைநீரில்
காகிதப் படகு விடவென
கொப்பித்தாள்களைக் கிழித்து
அம்மாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட நாட்களில் பெய்த
அதே மழை..,
மறுபடியும் இன்று.

இப்போதெல்லாம்..,
என் கண்களுக்கு எதுவுமே தெரிவதில்லை
எதிர்ப்படும் மனிதர்கள்,
தெருவில் கடந்து போகும் வாகனங்கள்,
கோவில் வாயிலில் ஒதுங்கியிருக்கும் பிச்சைக்காரர்கள்,
சிறுவர்கள், முதியவர்கள்,
வானம் வெடித்துப் பெய்யும்
பெருமழை...
என எதுவுமே

சிந்தனையின் கனத்த திரைகள்
என்னைப் பார்வையற்றவளாக்கி விட்டன.
விழிகளுக்கும் மூளைக்குமிடையே
பார்வை நரம்பின் குறுகிய வளைவொன்றினுள்
சிந்தனை சிறைப்பட்டிருந்து
என் விழிகளைக் குருடாக்கிப் போனது.
அன்றேல், யார் கண்டார்?
சிந்தனையின் பதுங்கு குழிகளுள்
விம்பங்களினின்றும் வெளிப்பட்ட மின் அதிர்வுகள்
தேங்கிக் கிடக்கின்றனவோ என்னமோ...

சிந்தனை ஒரு சாபக்கேடு

சவக்கிடங்கு
சாத்தானின் ஆயுதம்.

சிந்தனை என் செவிப்பறையைத்
துளைத்திருந்ததெல்லாம் பழங்கதை.
வெள்ளை இயந்திரங்கள் பறித்தெடுத்த மகனைத் தேடி
தெருக்கள் வழியே ஓடித்திரிந்த
கிழவியின் ஓலம்..
கருநிற மிருகமொன்று அப்பாவின் உயிர்விழுங்கக் கண்ட
குழந்தையின் கேவல்..
பூட்ஸ்களின் தடதடப்பு,
உறுமல்கள், நெறுமல்கள்..
எதுவும் என்னை அசைத்துவிட முடியாது,
இன்று.
ஏனெனில்,
என் காதுகள் செவிப்புலனை இழந்து - இப்போது
நாட்களாகின்றன.

சிந்தனை ஒரு சாபக்கேடு
சவக்கிடங்கு
சாத்தானின் ஆயுதம்.


பேசும் திறனை எப்படி இழந்தேன்
என்பது பற்றி
நான் உங்களுக்குச் சொல்லப் போவதில்லை
மௌனித்திருக்கிறேன் - அல்லது
மௌனித்திருக்க விதிக்கப்பட்டிருக்கிறேன்
என்பதற்காய்
நடந்தவையெதுவும் இல்லையென்றாகிடுமா..
அல்லது, நடக்கவே நடக்காததெதுவும்
நடந்துதான் விடுமா..
சிந்தனை என் நாவின் மீது
உறைபனியெனப் படிந்து, இறுகி
அதனைச் செயலற்றதாக்கிற்று.
இனியும், அது குறித்துப் பேச
நான் பிரியப்படவில்லை.

சிந்தனை ஒரு சாபக்கேடு
சவக்கிடங்கு
சாத்தானின் ஆயுதம்.

பேசுதல், கேட்டல், இப்போது பார்த்தலென
அனைத்தையும் இழந்துவிட்ட பின்னும்,
தொலைதூரத்திலுள்ள
இலக்கற்ற புள்ளியொன்றை நோக்கி
முடுக்கிவிட்ட பொம்மை போல
தொடர்கிறதென் பயணம்...

ஆம்,
இப்போதும் என் கண்களுக்கு
எதுவுமே தெரிவதில்லை தான்.Friday, April 13, 2007

நிகழ்காலப் பயணியொருத்தியின் நாட்குறிப்பு

அல்லது அதனையொத்த ஏதோவொன்று..!

எனை மாற்றிக் கொண்டிருக்கிறாய்.... நீ.
எனக்கே தெரியாமல்...
கொஞ்சங் கொஞ்சமாய்.., மிக மிக இயல்பாய்.
பிடிக்கவில்லை எனக்கு.. ஒரு சிறிதும் பிடிக்கவில்லை..
நானாயிருந்த 'என்' னின் தோல்வியைக் காணச் சகிக்கவில்லை.
அச்சம் மேலிடுகிறது... மனது பதைபதைக்கிறது...
வேறெந்த சந்தர்ப்பத்திலும் இத்தனை பரிதாபமாய் என் சுயம் தோற்கடிக்கப்பட்டதில்லை.
உனைப்போல் வேறெவரும் என் உயிரள்ளிப் போனதுமில்லை.


அது ஒரு மழைநாள் தானில்லையா... இல்லை.., இல்லாமலிருந்திருக்க முடியாது. உன் வருகை எந்த முன்னறிவித்தல்களுமின்றி நிகழ்ந்திருக்கச் சாத்தியமில்லை. எனக்குப் புரியாமலிருந்திருக்கக்கூடும். எதுதான் புரிந்திருக்கிறது.. எனக்கு? 'உயிர்த்த நிலமும், துளிர்த்த மரங்களும் பறைசாற்றத் தவறியிருக்கலாம்'. ஆனால் வருணன் எனை வஞ்சித்துப்போக வாய்ப்பில்லை. அதுவொரு மழைநாளாகத்தானிருந்திருக்க வேண்டும். இடியும், மின்னலும் தமக்கேயான மொழியில் உன் வருகையைச் சொல்லிச் சென்றிருந்திருக்கக்கூடும். எனக்குத்தான் புரியவில்லை. சராசரி சலித்துப்போன மழைக்கால மாலைகளுள் ஒன்றாய் அன்றைய பொழுதையும் கருதி, நான் அலட்சியப்படுத்தியிருந்திருப்பேன்.

wasn't that a romantic rainy day... as these silly poets describe...? there have never been any romantic moments in my life... how could it be possible without mutual respect... or even understanding? but, things have never been the same since you came into my life.

அதுவொரு வெள்ளிக்கிழமை. எப்படி மறப்பேன்.., நான்? வெள்ளியன்றுதான் பிறந்ததாலோ என்னமோ, நல்லது நடக்குமானால் எல்லாமே வெள்ளிக்கிழமைதான் நடக்குமென்ற ஒரு அசட்டு நம்பிக்கை ஆழ வேரூன்றியிருந்தது... சிறுபராயந்தொட்டே. வெள்ளியென்றால் ஏனோ அப்படிப் பிரியம் எனக்கு. நம்பிக்கைகள் அவ்வளவு இலகுவில் பொய்த்துப் போவதில்லையென்பதை உணர்வதற்கு இன்னுமொரு சந்தர்ப்பம் வந்து வாய்த்தது.., உன் வருகையினூடு. கடந்து போன அந்த நாட்களை நினைக்கையில் ஏனோவோர் பிரகாசம் நிறைந்த புன்னகை நிறைக்கிறது.., முகத்தையும் மனத்தையும்.

my days were so blue... and especially, the rainy days were so painful... i don't know why... but they usually make me cry. i was not quite sure of what's going to be or what am i going to do in the future. those days, love seemed like a myth... a very popular myth. i have never dreamt of a day which i would lose myself in someone else's arms. i was a self - reliant girl.. so as i am today.. who loves herself more than anything in the world. but yet, my arms were stretched in need of love, care and comfort. i was waiting with stretched arms for a long time... waiting for someone who loves me.. not for who i am.. but for what i am.

when i felt that someone is trying to hold my arms tightly... suddenly i realized that the time has come to love and to be loved.

இன்னமும் அழுகிப்போகாத ஆன்மாவொன்றின் அவலக் குரல்களைக் கேட்டிருக்கிறாயா நீ எப்போதாவது..? மழைக்கால மாலைகளில்.., மனம் எங்கோ அலைபாய்கையில்.., காளான்களாய் முளைக்கும் உன்னைப் பற்றியதான நினைவுகளுடன்... தவிர்க்கவே முடியாத உன் அருகாமைக்கான ஏக்கங்களுடன் ஆன்மாவொன்று பாடலிசைப்பது உன் செவியை வந்தடைந்திருக்கிறதா எப்போதாவது..?

விண்மீன்களைத் தொலைத்த நாளொன்றில் வெண்மதி அறியக்கூடும் என் வேதனைகளை.., நிலவும் கரைந்த அமாவாசையிரவில் வானம் உணரக்கூடும் என் வெறுமைகளை. அலறுகிறது அடிமனம்.., அருகில் நீயில்லாமல் போனதில்.

உணர்தல்களுக்கு அப்பாற்பட்ட அநாகத நாதங்களிலிருந்து பொறுக்கியெடுக்க முயல்கிறேன் உனக்கான ஸ்வரங்களை... என்னுள் கரைந்தொழுகி.., கசிந்துருகி.. கருக்கொண்டு உயிர்த்தெழுகிறது உனக்கான ஒரு இராகம்.

கரைசேரா அலைகளின் காணாமற்போன இரைச்சல்களிலிருந்தும்... மலைச்சாரல்களின்வழி காற்று விட்டுச்சென்ற தடயங்களிலிருந்தும்... வானத்தின் விளிம்புகளினூடு கசிந்து கொண்டேயிருக்கும் மர்ம அதிர்வுகளிலிருந்தும் கண்டெடுத்த அமானுஷ்யங்களின் மொழியில்... எனதேயெனதான மொழியில் பாடிக்கொண்டேயிருக்கிறது ஆன்மா.., உன்னைப் பற்றியதோர் பாடலை.

தலைமுறைகளைத் தொலைத்த இனக்குழுமங்களும்... அழிந்துபோன மாயாவும், மெசபத்தேமியாவும்... தைகிரீஸ் - யூப்ரடீஸ் தமக்குள் புதைத்துக்கொண்ட மானுடத்தின் மகோன்னதங்களும் எமக்காக எதையேனும் விட்டுச்சென்றிருக்கவும்கூடும்... எங்கோ வெகுதொலைவில் எம் வருகைக்காக அவை காத்திருக்கவும்கூடும்.., என்றாவதொருநாள் உயிர்ப்பிக்கப்படுவோமென்ற நம்பிக்கையுடன்.

பாரோ மன்னர்களின் அறியப்படாத அதிசயங்களினூடு... நீரோக்களின் அலட்சியங்களினூடு... இன்னமும் எஞ்சியிருக்கின்ற எமக்கான படிமங்களைத் தேடியெடுக்க முயல்கிறேன். வரலாற்று நாயகர்களின் வாள்முனைகளின் கூர்மையில் உனது வீரியத்தினை அடையாளங்காண முனைகிறேன்.

காடுகள் இரம்மியமாய்.. இருளாய் ஆழப்பரந்து, விரிந்தபடி காத்திருக்கின்றன.. வரையறைகளைக் கடப்போம் நாம்.. வளையங்களை அறுத்தெறிவோம்.. நீ நீயாக.. நான் நானாக.

Thursday, April 12, 2007

சரிநிகர் - சில நினைவுக் குறிப்புகள்

1.

அப்போதெல்லாம் நான் மிகச் சிறியவளாயிருந்தேன்.. குறும்பு செய்துகொண்டு துள்ளித் திரிந்த பருவத்தில் என் எதிர்பார்ப்புகள் மிகச் சாதாரணமானவையாக இருந்தன.. கனவுகளோ, களங்கமற்றவையாக இருந்தன..

ஒரு படைப்பை வாசித்துப் புரிந்துகொள்ளும் மனப்பக்குவத்தை அடைந்துவிடாத நாட்களிலேயெ 'சரிநிகர்' என்ற வார்த்தை என்னுள் ஆழப்பதிவதாயிற்று. பனியடர்ந்த பெருவெளியொன்றை ஊடறுத்துப் போன பயணம் குறித்தான மனப்பதிவு அது. இன்றும் சரிநிகரெனும்போது சட்டென்று நினைவுக்கு வருவது அந்த உலகின் முடிவினை நோக்கிய பயணம்தான்.

அந்நாட்களில் நானொரு முரட்டுப் பிடிவாதங்கொண்ட சிறுமியாயிருந்தேன். 'கோள்முட்டி' என அக்கா திட்டிக் கொண்டிருந்ததெல்லாம் இப்போதும் நினைவிருக்கிறது. அன்றும் அப்படித்தான்.. அக்காவுடன் ஏதும் தகராறிருந்திருக்க வேண்டும்.. அருமையானதோர் சந்தர்ப்பத்தை இழந்து போனேன்..

'மழை தழுவிய சாலைகளின் வழி காற்று எழுதிச் சென்ற மௌனங்களோடு..' நட்சத்திரன் அண்ணாவின் கரம் பற்றி, அவர் கவிதை சொல்லக் கேட்டபடி நடந்திருந்த பொழுது இனியொருபோதும் வாய்க்காதென அக்காவைப்போல நானும் மனம்சிலிர்த்துச் சொல்லித் திரிந்திருக்கலாம்..

அக்காவுடனான கோபத்தில் நட்சத்திரன் அண்ணாவின் மற்ற கையைப் பிடித்துக் கவிதை கேட்டுச் செல்லும் வாய்ப்பை இழந்துதான் போனேன்..

பின்னரொரு பொழுதில் இந்தப் பயணம் குறித்து நட்சத்திரன் செவ்விந்தியன் ஒரு கவிதை எழுதியதும் நினைவு.. 'குடிக்கத் துணையின்றி' என்ற தலைப்பிலென்று நினைக்கிறேன்.. அக்கவிதை இந்தப் பயணம் குறித்ததா என்பது சரியாகத் தெரியவில்லை.. எனினும், நினைவினடுக்குகளில் பதிந்திருந்த சம்பவங்கள் இக்கவிதையை வாசிக்கும்தோறும் வெளிக்கிளம்ப அப்படித்தானிருக்கவேண்டும் போலத் தோன்றுகிறது.


2.

சரிநிகரின் இலக்கியப் பங்களிப்பெனும்போது (எனது பார்வையில்)... செல்வி, ஊர்வசி, ரேவதி, ஆழியாளென அத்தனை ஈழத்துக் கவிஞர்களையும் அறிமுகப்படுத்தியது சரிநிகர்தான். அந்நாட்களில்.., கவிதைகளின் உள்ளர்த்தம், அதனுள் பொதிந்திருந்த / கவிஞர் கூறவந்த உண்மையான உணர்வுகள் புரிந்ததோ என்னமோ, அந்தக் கவிதைகள் மிகவும் கவர்ந்திருந்தன. இன்று அக்கவிதைகளை மீள்வாசிப்புக்குட்படுத்தும்போது எனது புரிதல் அன்றைய பொழுதைவிட பெரிதும் மாறுபட்டிருக்கலாம். ஆனால், கவிதை மீதான ஈர்ப்பு விட்டுப்போகாது ஒருபோதுமே..

சிறுகதைகள் அந்தளவு பிடித்தமானதாயிருந்ததில்லை. சிறுகதையின் பரிணாமங்கள் / அது வியாபிக்கக்கூடிய வெளி / அதன் சாத்தியப்பாடுகள் குறித்தான பிரக்ஞையோடு, புரிதலோடு எத்தனைபேர் எழுதுகிறார்களென்று தெரியவில்லை. ஷோபாசக்தி, ரமேஷ் - பிரேம், அம்பை போன்றவர்களை விதிவிலக்கெனலாம்.. அநாமிகாவின் சில கதைகளும் பிடிக்கும்.. சில ரஷ்ய, தென்னமெரிக்க சிறுகதைகளைப் போல ஏன் தமிழில் எழுதமுடிவதில்லையென்ற கேள்வி நெடுநாட்களாகவே இருந்துவந்தது.

உதாரணத்துக்கு ஆல்பெர்தோ சிம்மலின் 'பிரிவு' எனும் தென்னமெரிக்கச் சிறுகதை.. ஒற்றைப் பந்தியைக் கொண்டது..:

அபா நகரம் நிலநடுக்கத்தால் அழிந்துபோன நாளில் ஒரு தாய் தன் மகன் மரணமடைவதைப் பார்த்தாள். அவளால் அந்த மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனைத் திருப்பித் தருமாறு தெய்வங்களிடம் வேண்டினாள். கருணை கொண்ட தெய்வங்களும் அந்தக் குழந்தையின் ஆன்மாவை மறு உலகத்தில் நுழைய அனுமதிக்காமல் மறுபடியும் அதை அவனுடைய உடலிலேயே புகுத்திவிட்டன. ஆனால், தெய்வங்களைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே! அந்த உடல் இன்னமும் செத்துத்தான் கிடக்கிறது. அதன் காயங்கள் ஆறவில்லை. மகன் திரும்பக் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் திளைத்த தாய் அது கஷ்டப்படுவதையும் துன்புறுத்தும் தனது சதைப்பிண்டத்தின் கைதியாயிருப்பதையும் கண்டு பீதி அடைந்தாள். அதன் பிறகுதான் அந்தக் கொடுமை நிகழ்ந்தது. குழந்தை அழுக ஆரம்பித்தது. புழுக்கள் அதன்மீது அப்பிக்கொண்டு அதன் உடலுள் புகுந்தன. அது சாவை வேண்டி அழுதது. ஆனால், நான் தான் சொல்கிறேனே, அது ஏற்கனவே இறந்துபோயிருந்தது. நொந்துபோன அந்தத் தாய் அதைக் கத்தியால் குத்தினாள். ஒருமுறை, இரண்டு முறை, முன்று முறை, பல முறை. பிறகு பெரிய பாறைகளால் தாக்கினாள். விஷத்தைக் கொடுத்தாள்.கழுத்தை நெரித்தாள்.ஆனால் அந்தக் குழந்தை வலியில் அழுதுகொண்டே இருந்தது. கடைசியில் அந்தத் தாய் தோல் கிழிந்த, எலும்புகள் உடைந்த, இரத்தம் உறைந்த அந்த உடலைத் தூக்கிக்கொண்டுபோய் நெருப்பில் எறிந்தாள். பாவப்பட்ட அந்தக் குழந்தையும் எரிந்து புகையாகவும், சாம்பலாகவும் மாறியது. காற்று அதைச் சிதறடித்து வெளியெங்கும் கலக்கச் செய்தது. அந்தத் தாய் முடிந்தளவு அவளைத் தேற்றிக்கொண்டாள். ஆனால் அவள் அதைச் செய்திருக்கக்கூடாது. ஏனென்றால் அந்தக் குழந்தையின் ஆன்மா கண்ணுக்குப் புலப்படாத அந்த எச்சங்களின் வழியாக இன்னமும் அலைந்து கொண்டுதானிருக்கிறது. துயருற்ற அந்த ஆன்மா உலகில் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறது. சுவாசிக்கும்போதும், வாயைத் திறக்கும்போதும், நீங்கள் அதை உணர்கையில் திடீரென்று ஒரு சோகம் உங்கள் மீது கவியும்.
(நன்றி: இந்த நகரத்தில் திருடர்களே இல்லை - லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள். தொகுப்பும் மொழிபெயர்ப்பும்:- ராஜகோபால்)

கதை முடிவடையும் விதம் மனதில் சர்ரென்று ஒருவித வலியை ஏற்படுத்துகிறது.. இல்லையா..?


3.

இப்போது நான் வளர்ந்தவள்.. (அல்லது அப்படித்தான் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது) உச்சகட்ட எதிர்பார்ப்புகளும், விருப்பங்களுமே என்னுள் நிறைந்துள்ளன.. கனவுகள் தொடர்ந்தும் களங்கமற்றவையென இறுமாந்திருப்பது தன்னைத்தான் ஏமாற்றிக்கொள்வதாகும். இந்நிலையில் மறுபடி சரிநிகருடனான தொடர்பு..

தற்போது, சில வருட இடைவெளியின் பிற்பாடு மறுபடியும் சரிநிகர் வெளிவரப்போவதாக அறிந்தபோது - மூன்றாவது மனிதன் வெளிவரப் போவதாக பௌசர் அறிவித்தபோது இருந்ததைப்போல - அத்துணை சந்தோஷமாகவிருந்தது. எம்மவர்களின் எழுத்துக்களை வெளிக்கொண்டுவருவதில் இத்தகைய இதழ்களின் பங்கு அளப்பரியதென்றவகையில் இது தொடர்ந்தும் வெளிவர வேண்டுமென்பதுதான் அனைவரையும்போல எனது விருப்பமும்..

வெளிவந்த முதல் இதழைப் பற்றி சில சுருக்கக் குறிப்புகள்:

- இதழின் தோற்றம்.. அதிகம் ஆடம்பரமாக இருந்ததாகப் பலரும் பேசிக்கொள்கிறார்கள்.., எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இந்தளவு செலவளித்திருக்க வேண்டியதில்லையோ..?! உள்ளுக்குள்ளே இருக்கும் சமாச்சாரங்கள்தான் அதன் தரத்தினைத் தீர்மானிக்கப் போகின்றவை.., வெறும் தோற்றமல்ல.. இதற்குச் செலவளிக்கும் பணத்தைச் சேமித்து விலையைக் குறைக்கமுடியுமானால் சஞ்சிகை பல தரப்பினரையும் சென்றடையக்கூடிய வாய்ப்புண்டு.

- விலை.. அதிகமாக இருப்பதாக குறைபட்டுக் கொள்வதைக் கேட்க முடிந்தது. ஒரு இதழுக்கு முந்நூறு ருபாய் செலவாகுவதாகவும், நூறு ருபாய்க்கு விற்பதாகவும் கேள்விப்பட்டேன். சாதாரணமாக கொழும்பில் விற்கும் அனைத்து சஞ்சிகைகளுமே - மூன்றாவது மனிதன், உயிர்நிழல் உட்பட - இதே விலையில் அல்லது இதற்கும் அதிகமாகவே தான் விற்கப்படுகின்றன. அனைவரையும்தான் கழுமரமேற்றவேண்டிவரும்.. பொதுவாகவே இத்தகைய சஞ்சிகைகள் உயர்தர வர்க்கத்தினருக்கானவை மட்டும்தானென்பதால் இது குறித்து அபிப்ராயம் சொல்வதற்கேதுமில்லை.

- சிங்கள மொழிமூலப் படைப்புகள் பலவற்றின் மொழிபெயர்ப்பு இதழை அதிகம் ஆக்கிரமித்துள்ளதை அவதானிக்க முடிந்தது. ஒருவகையில் நல்ல விடயம்தான்.. எனினும், சிங்கள சஞ்சிகைகளில் தமிழ்ப் படைப்புக்களுக்கு இத்தகைய இடம் வழங்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுவதைத் தவிர்க்கமுடிவதில்லை. இன ஒற்றுமையை / புரிந்துணர்வை பேண முயற்சித்திருக்கிறார்களோ என்னமோ.., ஆனால் நிர்ப்பந்தத்தின் பேரிலா..?? எம்மவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டிய தேவையும், கடப்பாடுமிருக்கின்ற நிலையில் இத்தகைய அதிகப்படியான ஒதுக்கீடு அவசியம்தானா..? இனத்துவேஷம் கதைக்கிறேனென அர்த்தமில்லை.. இத்தகைய தரம்வாய்ந்த சஞ்சிகைகள் இலங்கையிலிருந்து வெளிவருவது அரிதாகவிருக்க, எம்மவர்களது எழுத்துக்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கவேண்டிய கட்டாயமிருப்பதாக உணர்கிறேன்.

- சிமோன் தி பூவா கவிதைகளின் மொழிபெயர்ப்பு அருமையாகவிருந்தது. தமிழாக்கம் செய்தவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.. அவரின் அனுமதியுடன் தானென்றால் மறுப்பேதுமில்லை. தவறுதலாக நிகழ்ந்திருந்தால், இதுகுறித்து கவனத்திலெடுப்பது நன்று. அதுவும் சில தலைப்புகளிலேயே எழுத்து மற்றும் அமைப்பு ரீதியான தவறுகள் இடம்பெற்றிருப்பதும்கூட கவனிக்கப்பட வேண்டியனவே..

- சினிமாப் பகுதியில் வெளிவந்த அனைத்துக் கட்டுரைகளும் மிகவும் அருமையாகவிருந்தன என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்..


வெளிநாடுகளில் வதியும் தோழர்கள் மற்றும் ஆர்வலர்கள் சந்தாதரர்களாவதன் மூலம் சரிநிகரின் தொடர்ச்சியான வருகைக்கு உதவ விரும்பினால்.., தொடர்பு: sarinihar@gmail.com

Tuesday, April 10, 2007

எல்லாம் சரியாய் அமைதியாய்
அழகாய்த்தானிருக்கின்றன..
சுயத்தினை நோக்கிய தேடல்களும்,
உள்ளார்ந்த தொலைதல்களும்
என்றும் சுவாரசியமானவைதான்..,
தடுத்து நிறுத்தி
எதிர்க் கேள்வி கேட்க
எவரும் முன்வராத வரையிலும்.

தெருவில் தற்செயலாய்க்
கடந்து போகுமொரு சைக்கிள்,
அநிச்சையாய் எதிர்கொள்ளுமொரு
பாடசாலைச் சிறுவன்,
போதிமரம் தேவைப்படுவதில்லை...
இவை போதும்
எனக்கும்,
தூசி படர்ந்த மூலைக்குள்
மீளாத் துயில்கொள்ளும்
என் புத்தருக்கும்..

நான் வாழ விரும்புகிறேன்
அவர்கள் அனைவருக்கும் மத்தியில்,
என் சுயம்
காணாமல் போயினும்,
அடையாளம் தொலைப்பினும்..
அனைத்தையும் ஏற்றுக்கொண்டு..,
மரண பயத்தினையும் கூட..

மனிதர்களை என் நேசத்துக்குரியவர்கள்..,
வேறெதனையும் விட..