Saturday, April 21, 2007

சாபக்கேடும், சவக்கிடங்கும், சாத்தானின் ஆயுதமுமானதைப் பற்றி..!

கடைசியாக எப்போது மழையை இரசித்தேன்?
நினைவில்லை.
கருநிறக் காளானென தெருவெங்கும்
ஆங்காங்கே முளைத்திருக்கும்
குடைகளின் விளிம்புகளிலிருந்து
வெண்பனித் துகள்களாய்..
சரம் சரமாய்..
மழைநீர் கோர்த்துத் தொங்குவதை,
தார்ச்சாலைகளில் விழுந்து தெறிப்பதை
கடைசியாக எப்போது விழிவிரியப் பார்த்திருந்தேன்?
அதுவும் நினைவில்லை.

இன்றும் மழைபெய்தது.
உச்சந்தலையில் தென்னைமரக் கொண்டையிட்டலைந்து,
வீட்டுமுற்றத்தில் தேங்கி நிற்கும் மழைநீரில்
காகிதப் படகு விடவென
கொப்பித்தாள்களைக் கிழித்து
அம்மாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட நாட்களில் பெய்த
அதே மழை..,
மறுபடியும் இன்று.

இப்போதெல்லாம்..,
என் கண்களுக்கு எதுவுமே தெரிவதில்லை
எதிர்ப்படும் மனிதர்கள்,
தெருவில் கடந்து போகும் வாகனங்கள்,
கோவில் வாயிலில் ஒதுங்கியிருக்கும் பிச்சைக்காரர்கள்,
சிறுவர்கள், முதியவர்கள்,
வானம் வெடித்துப் பெய்யும்
பெருமழை...
என எதுவுமே

சிந்தனையின் கனத்த திரைகள்
என்னைப் பார்வையற்றவளாக்கி விட்டன.
விழிகளுக்கும் மூளைக்குமிடையே
பார்வை நரம்பின் குறுகிய வளைவொன்றினுள்
சிந்தனை சிறைப்பட்டிருந்து
என் விழிகளைக் குருடாக்கிப் போனது.
அன்றேல், யார் கண்டார்?
சிந்தனையின் பதுங்கு குழிகளுள்
விம்பங்களினின்றும் வெளிப்பட்ட மின் அதிர்வுகள்
தேங்கிக் கிடக்கின்றனவோ என்னமோ...

சிந்தனை ஒரு சாபக்கேடு

சவக்கிடங்கு
சாத்தானின் ஆயுதம்.

சிந்தனை என் செவிப்பறையைத்
துளைத்திருந்ததெல்லாம் பழங்கதை.
வெள்ளை இயந்திரங்கள் பறித்தெடுத்த மகனைத் தேடி
தெருக்கள் வழியே ஓடித்திரிந்த
கிழவியின் ஓலம்..
கருநிற மிருகமொன்று அப்பாவின் உயிர்விழுங்கக் கண்ட
குழந்தையின் கேவல்..
பூட்ஸ்களின் தடதடப்பு,
உறுமல்கள், நெறுமல்கள்..
எதுவும் என்னை அசைத்துவிட முடியாது,
இன்று.
ஏனெனில்,
என் காதுகள் செவிப்புலனை இழந்து - இப்போது
நாட்களாகின்றன.

சிந்தனை ஒரு சாபக்கேடு
சவக்கிடங்கு
சாத்தானின் ஆயுதம்.


பேசும் திறனை எப்படி இழந்தேன்
என்பது பற்றி
நான் உங்களுக்குச் சொல்லப் போவதில்லை
மௌனித்திருக்கிறேன் - அல்லது
மௌனித்திருக்க விதிக்கப்பட்டிருக்கிறேன்
என்பதற்காய்
நடந்தவையெதுவும் இல்லையென்றாகிடுமா..
அல்லது, நடக்கவே நடக்காததெதுவும்
நடந்துதான் விடுமா..
சிந்தனை என் நாவின் மீது
உறைபனியெனப் படிந்து, இறுகி
அதனைச் செயலற்றதாக்கிற்று.
இனியும், அது குறித்துப் பேச
நான் பிரியப்படவில்லை.

சிந்தனை ஒரு சாபக்கேடு
சவக்கிடங்கு
சாத்தானின் ஆயுதம்.

பேசுதல், கேட்டல், இப்போது பார்த்தலென
அனைத்தையும் இழந்துவிட்ட பின்னும்,
தொலைதூரத்திலுள்ள
இலக்கற்ற புள்ளியொன்றை நோக்கி
முடுக்கிவிட்ட பொம்மை போல
தொடர்கிறதென் பயணம்...

ஆம்,
இப்போதும் என் கண்களுக்கு
எதுவுமே தெரிவதில்லை தான்.12 comments:

வி. ஜெ. சந்திரன் said...

தனித்துவமான நடை. நல்லதொரு ஆக்கம்.

(அதிகம் எழுதி அலங்காரம் செய்ய விரும்பவில்லை)

செல்வநாயகி said...

நல்லதொரு ஆக்கம்.

நிவேதா said...

நன்றி, வி.ஜெ.சந்திரன்!

நன்றி, செல்வநாயகி!

மஞ்சூர் ராசா said...

அன்பு நிவேதா

உங்கள் கவிதை நடை அழகாகவும் மெல்லிய சோகம் இழையோடும் வண்ணமும் இருக்கிறது.
ஆனால் கவிதை மிகவும் நீளமாக இருப்பது கவிதையின் உயிர்ப்பை குறைக்கிறது
இன்னும் கொஞ்சம் சுருக்கியிருந்தால் கச்சிதமாக இருந்திருக்கும். மேலும்
இடையிடையே "சிந்தனை ஒரு சாபக்கேடு
சவக்கிடங்கு
சாத்தானின் ஆயுதம்." தேவையில்லை என நினைக்கிறேன்.

வாழ்த்துக்கள்.

amp said...

வெள்ளை இயந்திரங்கள்...கருப்பு மிருகம்....

இதிலும் கூட வர்ணங்களா?:))

ஆனால் கவிதை படித்த வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை:)

அதீதன் said...

//வெள்ளை இயந்திரங்கள் பறித்தெடுத்த மகனைத் தேடி
தெருக்கள் வழியே ஓடித்திரிந்த
கிழவியின் ஓலம்..
கருநிற மிருகமொன்று அப்பாவின் உயிர்விழுங்கக் கண்ட
குழந்தையின் கேவல்..
பூட்ஸ்களின் தடதடப்பு,
உறுமல்கள், நெறுமல்கள்..
எதுவும் என்னை அசைத்துவிட முடியாது,
இன்று.
ஏனெனில்,
என் காதுகள் செவிப்புலனை இழந்து - இப்போது
நாட்களாகின்றன.//
I share the same. :-( [மௌனித்திருக்க விதிக்கப்பட்டிருக்கிறேன்]

//அப்பாவின் உயிர்விழுங்கக் கண்ட
குழந்தையின் கேவல்..//
எஸ்போஸ் ? :-(

&
நீங்களும் அய்யனாரும் நினைத்தது சரிதான் நிவேதா.
சொல் என்றொரு சொல்லில் இருந்து தான் இப்பெயரை எடுத்தேன்.

அதீதன் said...

மஞ்சூர் ராசா,
//"சிந்தனை ஒரு சாபக்கேடு
சவக்கிடங்கு
சாத்தானின் ஆயுதம்."
தேவையில்லை என நினைக்கிறேன்.//
I think it is needeed.
Repeated lines emphasize the 'frustration' she has.

அதீதன் said...

மஞ்சூர் ராசா,
//"சிந்தனை ஒரு சாபக்கேடு
சவக்கிடங்கு
சாத்தானின் ஆயுதம்."
தேவையில்லை என நினைக்கிறேன்.//
I think it is needeed.
Repeated lines emphasize the 'frustration' she has.

மிதக்கும் வெளி said...

fine

DJ said...

/சிந்தனை என் நாவின் மீது
உறைபனியெனப் படிந்து, இறுகி
அதனைச் செயலற்றதாக்கிற்று.
இனியும், அது குறித்துப் பேச
நான் பிரியப்படவில்லை./
பிடித்த வரிகள்.

/சிந்தனை சாபக்கேடு/ மட்டுமில்லை, தமது சிந்தனைகளை பிறரில் திணிப்பவர்களின் 'சிந்தனை' இன்னும் அச்சமூட்டுபவை.

நிவேதா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி, மஞ்சூர் ராசா.. கவிதையின் நீளம் தவிர்க்க முடியாததாகிவிட்டது.. மற்றும் இடையிடையே வந்த அந்த வரிகள் - அதீதன் குறிப்பிட்டிருந்ததைப் போல - விசனத்தை / கோபத்தை முழுமையாக வெளிப்படுத்த தேவைப்பட்டிருந்தன.


நிறங்கள் வேறெவற்றையும் விட மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றன என்பது எனது எண்ணம்..:-) பின்னூட்டத்துக்கு நன்றி அருண்..

பின்னூட்டத்துக்கு நன்றி, அதீதன்.. நீங்களும் நானும் மட்டுமல்ல.. இங்கு பலரும் அப்படித்தான் இருக்கவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோமென்பது மறுக்க முடியாததே.. ஆமாம், எஸ்போஸ் தான்:-) அவரது குழந்தைக்கென எழுதியதை தவிர்க்க முடியாத காரணங்களால் தற்போது வலைப்பதிவேற்ற முடியவில்லை.. அண்மையில் மிகவும் பாதித்த சம்பவமது.

நன்றி,மிதக்கும் வெளி!

நன்றி, டிசே! ம்ம்ம்.. உண்மைதான்.

நர்மதா said...

மிக நல்ல கவிதை ஒன்றை வாசித்த திருப்தி கனமாக உள்ளது.