Friday, March 30, 2007

சிட்டுக்குருவிகளைப் பிரசவிக்க விரும்பும் கனவுகள்

1.

மார்பின் மீது கவிழ்ந்து கிடந்தது
ரமேஷ் - பிரேமின் கவிதைத் தொகுதி
என்னையறியாமலேயெ உறங்கிவிட்டிருந்தேன்
பிரதியின் பக்கங்களிலிருந்து நழுவிய
புலிக் கவிதையொன்று
ஆழ்கனவுகளினூடு நுழைந்து
என் முலையுறிஞ்சத் தொடங்கியது

இருண்ட தெருக்களின்
ஆளரவமற்ற வளைவுகளின் மறைப்புகளில்
எதிர்கொள்ள நேர்ந்த
சிலமனிதர்களின் நினைவும்,
பாம்பின் வாலாய்
தொங்கிக்கொண்டு கிடப்பதை
அவர்கள் காட்டிக்கொண்டு திரிவதும்
ஏனோவொரு இனம்புரியா அதிர்வுடன்
கனவினை ஒருகணம் உலுப்பலாயிற்று

பேருந்துகளின் நெரிசல்களினூடு
பிருஷ்டமுரசிய விறைத்த வால்களை
முறித்தெறிய தீராத அவாக்கொண்டு
இரட்டைப் பூட்டிட்டு
தன்னைத்தான் தாளிட்ட
என் யோனி
கவிதையின் ஸ்பரிசத்தில்
கிளர்ந்தெழுந்து கசியவாரம்பித்ததும்
அதிசயம்தான்.

2.

dali

கொஞ்சங் கொஞ்சமாக
இல்லாமலாகிக் கொண்டிருந்தது,
மொழியினதும், எழுத்துக்களினதும்
சாத்தியப்பாடுகள் குறித்தான
எனது பிரக்ஞை.
வரிவடிவங்கள் கலைத்து
அடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன
எனது மொழி பிடுங்கப்பட்டு
அந்நிய எழுத்துருவமொன்று
வலிந்து திணிக்கப்பட்டது
என் மண்டையோடு பிளந்து

'அவை எங்கள் உணர்வுகளை
மோப்பம் பிடிக்கக் கூடியவை'
கூட்ஸியின் வரிகள்
ஆறுதல் தரத் தவறின.
கனவு வளர்ந்தது,
சாத்தியப்பாடுகளை கட்டுடைத்துக்கொண்டு

இனி,
நான் பேசப்போவதில்லை
எதுவும் எழுதுதலும் இனி சாத்தியமில்லை
என்னைப் பற்றி,
என் கனவுகளைப்பற்றி
எப்படித்தான் பேசுவது
உங்கள் வாயைக்கொண்டு?

3.

புலியின் நெற்றிப்பொட்டிலிருந்து
நழுவிய ஏதோவொன்று
தொடைகளின் இடுக்கைத் தடவி உள்நுழைந்து
கருப்பையை நிறைக்க
திடுக்கிட்டு விழித்தேன்

கனவினைக் கீறிப்பிளந்து
வெளியேறிய கவிதை
பிரதிக்குள் தஞ்சமடைந்து
அப்பாவியாய் ஏறெடுத்து நோக்கிற்று
பீதியில் தோய்ந்திருந்த என் முகத்தை

ரௌத்திரம் கொண்ட
பெண்புலியின் குரல் மட்டும்
தொடர்ந்தும் காதின் மடல்களைத்
துளைத்த வண்ணம்,
'நான் சிட்டுக் குருவிகளைப்
பிரசவிக்க விரும்புகிறேன்..'

தொடைகளினிடையே இரத்தம் கசிந்தபடியிருக்க,
'சக்கரவாளக் கோட்டம்'
என் மார்பின் மீது
கவிழ்ந்திருந்தது.


*Painting: Girl from the Back by Salvador Dali


Tuesday, March 27, 2007

தவறவிடப்படக்கூடாத சாட்சியங்கள்...

1.

மின்சாரத்தடை
சுற்றிவளைப்பு
தேடுதல்..

நாய்களின் ஓலம்
பூட்ஸ்களின் தடதடப்பு
நெரிபடும் சருகுகள்..

விமானத்தாக்குதலின் பின்னரான இரவு
இப்படித்தான் கழிந்து கொண்டிருந்தது
ஒவ்வொரு கணத்தின் கணமும்
நூற்றாண்டுகளாய்..

மணலுக்குள் தலைபுதைத்து நின்று
ஆசுவாசப் பெருமூச்செறியும்
தீக்கோழியென எனதிருப்பும்..
தலையணையின் அடியில்
குழிதோண்டி முகம் பதித்து
கருவறையுள் மீண்டதான
கனவுகளுடன்.

சாளரங்களுக்கப்பால்..,
ஓங்கிவளர்ந்து
அகலக் கிளைவிரித்து
கரும் பூதமென
ஓவென்று நின்றிருக்கும்
மாமரம் மட்டும்
அனைத்துக்குமான சாட்சியமாய்..


2.

'அந்த அங்கிள்மார்
குண்டு போடுறதுக்கு முதல்
தமிழாக்களுக்கெல்லாம் சொல்லுவாங்களாம்
அம்மா சொன்னா..
உங்களுக்கு தெரிந்தால்
எனக்கும் சொல்லுங்கோ,
ஒண்டாய் ஓடி ஒளியலாம்
அபி அம்ப யாளுவோ நேத'

'என்ன இல்லையென்று
இப்படி சண்டை பிடிக்கிறாங்கள்'

பரிதாபத்துடன் பார்க்கிறேன்
அந்தச் சின்னப் பெண்ணை..

எதையும்
சொல்லிக்காட்டிக் கொண்டிருக்க
விருப்பமில்லை எனக்கு.
புளித்துப்போன கதைகளவை..
யாழ்நூலக எரிப்பு
செம்மணி
சூரியகந்த
83'

அவள் குழந்தை.
சிங்களத்திதானென்றாலும்,
அவளுக்குத் தெரியவேண்டாம்
பெரியவர்களின் வக்கிரங்கள்

இருந்தும்,
சொல்லாமலிருக்க முடியவில்லை..
பாடசாலைவிட்டு வரும் வழியில்
துவக்குச் சூடு பட்டு விழுந்த
மைத்துனனைப் பற்றி..,
கிழக்கே
பசியால் உயிர்துறந்து கொண்டிருக்கும்
அவள்போன்ற ஆயிரமாயிரம்
சிறுவர்களைப் பற்றி..

வியப்பால் விழிவிரித்துக்
கேட்டுக் கொண்டிருந்தவளின்
கன்னங்கிள்ளி
புன்னகைத்தேன்

'நான் சொல்வது இருக்கட்டும்..
இன்னொரு 83ன்போது
என்னை நீ பாதுகாப்பாயா..'

சின்னக் குழந்தை
கேட்டிருக்கக்கூடாதோ..

புரிந்ததோ இல்லையோ
தலையை ஆட்டினாள்
ஓவென்று..

படபடக்கும் அவள் விழிகளிலிருந்து
விரிந்தன எல்லாமே..
இலங்கையில் இனப்பிரச்சனையா..
எவர் சொன்னது..?


(வலைப்பதிவை மெருகூட்டித் தந்த நண்பனுக்கு..)