Tuesday, December 27, 2005

வரலாற்றின் நரகல்களுக்குள் புதைந்துபோன இன்னுமொருத்தி

கொதித்துக் கொண்டிருக்கிறது என் தேசம்..
உலையிலிட்ட அரிசியாய்
அச்சத்திலே வெந்து கொண்டிருக்கும் சனங்கள்.
இன்னும்..
ரோம் எரிந்து கொண்டிருக்க,
பிடில் வாசிப்பில் மூழ்கியிருந்த நீரோ மன்னனாய்
சுய தேடல்களுக்குள் ஆழ்ந்தபடி நான்..

கணனியின் திரையில்
நேற்றுத்தான் பார்த்த
அவளது மரத்துப் போன உடல்...
அதே இறுகியும்,
புதைந்தும்
போன உணர்வுகளோடு.

தர்சினி...

வஞ்சிக்கப்பட்ட
என் ஆயிரமாயிரம் சகோதரிகளுள்
ஒருத்தி.


உருண்டையாய், குமிழியாய் இனம்புரியாத ஏதோவொன்று அடிவயிற்றிலிருந்து விண்ணென்று கிளம்பித் தொண்டையை அடைத்துக் கொள்கிறது.. மூச்சு முட்டுகிறது. என்னை விட்டுவிடுங்கள்... விட்டுவிடுங்கள்... முருகா... கந்தா...

'காக்க காக்க கனகவேல் காக்க,
நோக்க நோக்க நொடியில் நோக்க,
தாக்க தாக்க தடையறத் தாக்க,
பார்க்க பார்க்க பாவம் பொடிபட...'

எப்போதோ பாடமாகிப் போன வரிகள் இப்போதேன் நினைவுக்கு வருகின்றன? ....என்னை விட்டுவிடுங்கள்.... விடுங்கள்ள்ள்ள்ள்..

'அல்லற் படுத்தும் அடங்கா முனியும்,
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்,
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்,
பெண்களைத் தொடரும் பிரம ராட்ஷதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட...'

உயிர்ப்பிழந்த குரல் தேய்ந்து கொண்டே போகிறது... கடைசி நம்பிக்கையும் கைநழுவிப்போன தருணங்களில், இயலாமையின் உச்சகட்டத்தில் தத்துவங்களும், சித்தாந்தங்களும் செயலிழந்துபோக ஆன்மாவோ இருந்தும் இல்லாதிருக்கின்ற.. - அல்லது யாருக்குத் தெரியும் - ..இல்லாதிருந்தும் இருக்கின்ற இறைவனிடம் சரணடைந்து விடுகிறது.

உதடுகள் கிழிந்து தொங்க... மார்பு கடித்துக் குதறப்பட்டிருக்க... திமிறித் தோற்றுப்போய் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.., அவர்களது காம விளையாட்டுக்களை. பிய்த்தெறியப்பட்ட ஆடைகளுக்குள்ளால் வடிந்து கொண்டிருக்கிறது என் ஆன்மா... தனது வீம்புகளோடும்.., (அவ)மானங்களோடும்.., (அவ)மரியாதைகளோடும்.

வேதனை.. வேதனை.. உயிர்பிடுங்கும் வேதனை. ஒவ்வொரு அணுவும் வலிக்கிறது.. ஒவ்வொரு உணர்வும் மரத்துப் போகிறது.

*எனது கண்களின்
வடிப்பில்..,
என்னுள்ளத்தின் தவிப்பில்..
உங்களுக்குத்தான் எவ்வளவு இன்பம்..?

எரிந்து கொண்டிருக்கிறது உடம்பு, அனலிலிட்ட புழுவாய்த் துடித்துக் கொண்டிருக்கிறது இதயம். உடலில் எஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச சக்தியையும் ஒன்றுதிரட்டி நெருங்க முயன்ற மூன்றாவது **அதிரடிச் சட்டைக்காரனின் முகத்தில் காறி உமிழ்கிறேன்... "சீ... நாயே!" பூட்ஸ் காலால் அடிவயிற்றில் விழுந்தது ஒரு உதை. சர்வமும் கலங்கிற்று.., கர்ப்பப்பை கரைந்து கால்களினூடு ஒழுகிற்று. பிறக்காத என் மதலையின் ஈனக்குரல் எங்கிருந்தோ அலைந்துவந்து உயிர் பிடுங்கிச் சென்றது.

*பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தைப் போன்று
சிதைக்கப்பட்டேன்..
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்படுத்தப்பட்டன..

நிலமெங்கும் சிதறிக் கிடக்கும் பச்சை இரத்தம் நான் சிதைந்து போனதன் தடயமல்ல... அவர்களிலிருந்து வெளிப்பட்ட குரூரத்தின் அடையாளம். அவர்களது வக்கிர புத்தியால் வென்றெடுக்க முடிந்தது இவ்வளவும்தான். தோற்றுப் போனது என் உடல்தான்.., உயிரல்ல. மரணித்தது வெறும் பிண்டம்தான்.., நானல்ல.

ஒருகாலத்தில் 'நானாயிருந்த' என் உடலைக் கல்லோடு பிணைத்துக் கிணற்றிலெறிகிறார்கள். கோழைப் பயல்கள்.. பயந்தாங்கொள்ளிகள்.. நானோ இங்கிருக்க, வெறும் உடல் உங்களை என்ன செய்துவிடப் போகிறது?

'நான்' இன்னும் உயிர்த்திருக்கிறேன்...

சீதையாய்ப் பிறந்தபோது கற்பு என்ற உங்கள் கற்பிதத்தை நிரூபிப்பதற்காகத் தீக்குளிக்க வைத்தீர்கள்..
நான் உயிர்த்திருந்தேன்.

திரௌபதி என்னை, அடகுப் பொருளாய் வைத்து சூதாடியபோதும், நட்டநடுச் சபைதனில் துகிலுரிந்தபோதும்..
நான் உயிர்த்திருந்தேன்.

அரிச்சந்திரன் மனைவியாய், அரியணையில் அமர்ந்திருந்தவளை வெறும் பண்டமாய் மதித்து அந்தணனுக்கு விற்றீர்கள்..
நான் உயிர்த்திருந்தேன்.

குஷ்டரோகி உன்னைக் கூடையில் சுமந்துதிரிய நேர்ந்தபோதும்..
நான் உயிர்த்திருந்தேன்.

நம்பிவந்தவளை, துன்பங்களை மட்டுமல்ல ஒற்றை ஆடையையும் பகிர்ந்துகொண்டவளை நடுக்காட்டில் தன்னந்தனியே விட்டு ஓடினீர்கள்..
நான் உயிர்த்திருந்தேன்.

மன்னம்பேரி, கோணேஸ்வரி, கிருஷாந்தி, சாரதாம்பாள் வரிசையில் நாளை நானும்..,

உங்கள் வரலாற்றின் கறைபடிந்த அத்தியாயங்களில்..,
என் ஆயிரமாயிரம் சகோதர சகோதரிகளின் நினைவுகளில்..
உயிர்த்திருப்பேன்.

என்றென்றைக்கும் உயிர்த்திருப்பேன்.

*ஓய்ந்தேன் என மகிழாதே,
உறக்கமல்ல தியானம்..
பின்வாங்கல் அல்ல பதுங்கல்..
எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன,
உனக்கு நரையேற்றும் காலங்கள்...*நினைவில் நின்றவை..
**அதிரடிச் சட்டை - (நன்றி:- திசேரா)

(அண்மையில்தான் அறிமுகமாகி, ஆழ்மனச் சிதைவுகளிலிருந்து எனை மீட்பித்த ஒரு உறவுக்கு..)

Wednesday, December 21, 2005

'உயிரோடு சிதைதலென்பது...' - என்னவளோடு ஒரு கணம்


இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதில்லை..
இப்படியும் இருக்கிறது..
இப்படியும் இருக்கலாம் என்பதை..,
கண்டதை..,
உணர்ந்ததை..,
பகிர்ந்துகொள்ள விழையும் ஒரு முயற்சி.

தனிப்பட்ட உணர்தல்கள்..
அவற்றினூடு எழுந்த விசனங்கள்..

சமூகம் என்ன செய்யும்..
அமைதியாய்.., ஆறுதலாய்
அனைத்தையும்
வேடிக்கை பார்த்திருப்பதைத் தவிர..?அவள்:

அவனில் நான் கண்ட எது எனக்குப் பிடித்துப் போனது?
எது என்னை அவன்பால் ஈர்த்தது?
எது அவன்மீதான என் நேசத்தைத் தூண்டியது?
அவனது கபடமற்ற புன்னகையோ..,
நடையுடை பாவனையோ..,
வசீகரிக்கும் பேச்சோ..
எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்.

ஆனால்...
என்னை இன்றளவும் அவனைவிட்டு நீங்காதவண்ணம் கட்டிப்போட்டது யார்?
இத்தனை காலம் கழிந்த பின்னரும்..,
எத்தனையோ எல்லாம் நடந்து முடிந்த பின்னரும்..
நான் இன்னமும் அவனை வெறுக்காமலிருப்பது ஏன்?
தாலியென்ற பெயரில் என் கழுத்தில் அவன் விலங்கிட்டதாலா..?
என் தனித்துவத்தைத் தன் அடையாளங்களுக்குள் புதைத்து விட்டதாலா..?

அப்போதெல்லாம் அவன் பல பெண்களின் ஹீரோவாகத்தான் வலம்வந்தான். அரசியல், இலக்கியம், முற்போக்குவாதம், பின்நவீனத்துவம், அது, இது, என்னவெல்லாமோ எழும் அவன் நாவிலிருந்து. பெண்களே வாய்பிளந்து வியக்கும் வண்ணம் பெண்ணியம் பேசத்தெரிந்த அவன் என்னை நேசிக்க ஆரம்பித்தபோது பெருமையாகத் தானிருந்தது.

எத்தனை பெண்களின் பொறாமைத் தீ கனலும் பார்வைகள் சுட்டெரித்திருக்கும் என்னை?
தீவிர பெண்ணியவாதிகளே இவன் ஆளுமையில் அசந்து போயிருந்தார்கள் அல்லவா?
இவனைப் போன்றவன்தான் வாழ்க்கைத் துணையாக வரவேண்டுமென்று நான் மட்டுமா கனவு கண்டிருந்தேன்?


நான்:

அவன் அப்படித்தான்.
அவன் மட்டுமல்ல..,
இன்னும் எத்தனையோ ஆண்களும்.

அவனைவிடத் தாழ்ந்தவளில்லை அவள்..
படிப்பிலும்..,
அறிவிலும்..,
தேடலிலும்...

ஆனால் என்னதான் பெண்ணியவாதியாயிருந்தாலும், என்னதான் திறமையுடையவளாயிருந்தாலும் அவளது இயல்பான அப்பாவித்தனம் அவனைப் போன்ற நீலிக்கண்ணீர் வடிக்கும் முதலையொன்றின் பிடியில் அவளை விழுத்திவிட்டது.

அவனுக்குத் தேவைப்பட்டதெல்லாம் ஒரு பெண்.. பெண்ணுடல் அவ்வளவே. தனது தகுதிக்கேற்ற.., சிந்திக்கத் தெரிந்த ஒரு உடல் தன் வறட்டு கௌரவத்தைத் தக்கவைத்துக்கொள்ள உதவுமென்று நினைத்தானோ என்னமோ.. அவள் வந்து விழுந்தாள்.

நான் பார்த்துக் கொண்டிருந்தேன்...
அவளது இலட்சியங்கள்..,
கனவுகள் எல்லாம்
முடக்கப்படப் போகின்றனவென்று தெரிந்தும்
நான் பார்த்துக் கொண்டிருந்தேன்...
சிறிது சிறிதாக அவள் சிதையத் தொடங்கவும்,
நான் பார்த்துக் கொண்டிருந்தேன்..
இந்தக் கணத்திற்காய்..,
இந்த இயலாமைக்காய்..
இறுதிவரை நான் என்னை மன்னிக்கப் போவதில்லையென உணர்ந்தும்
நான் பார்த்துக் கொண்டிருந்தேன்...

அவள் பிடிவாதக்காரி...
நான் முயன்றிருந்தாலும் அவளைத் தடுக்க முடிந்திருக்காது என்னால்..
அவள் முடிவை மாற்றியிருக்க முடிந்திருக்காது என்னால்..
அவன்மீது அவள்கொண்ட நேசத்தை பொய்ப்பித்திருக்க முடிந்திருக்காது என்னால்..

இப்படித்தான்..
என்னவள் பாழுங்கிணற்றில் தானாகப் போய்விழுவதை வேடிக்கை பார்த்திருந்துவிட்டு..,
அனைவரையும் போல வாழ்த்தி ஆசிகூறிவிட்டு..
என் கையாலாகாத்தனத்தை மறைப்பதற்கான நியாயப்படுத்தல்களையும் முன்வைக்க முயல்கிறேன்.


அவள்:

என் கனவுகளில் மட்டுமே உயிர்த்திருந்த என்னவனின் முழுமொத்தச் சாயலையும் அவனில் கண்டேன். அவனைவிடச் சிறந்த துணைவன் கிடைக்கவே மாட்டானென நம்பியிருந்தேன். எனக்குத் தேவைப்பட்டது:-

someone who listens to me..
someone who cares for me..
someone who understands me..

இப்போதுதான் எனக்கும் புரிகிறது..

அவன் ஒருபோதும் நான் சொல்பவற்றைக் காதுகொடுத்துக் கேட்டதில்லை.
ஏனெனில் அவனுக்குக் கேட்பதற்கு..,
அதைவிடவும் பேசுவதற்கு..
இன்னும் எவ்வளவோ விடயங்களிருந்தன.
என்னை..
என் குரல்களை..
என் ஓலங்களை..
செவிமடுக்க அவனுக்கு நேரமிருக்கவில்லை.
ஆனால் அவனது அத்தனை அலட்டல்களையும்,
அத்தனை அறுவைகளையும்,
அத்தனை பிரசங்கங்களையும்
நான் பொறுமையாய்..,
அமைதியாய்..
கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன்.

அவன் ஒருபோதும் எனக்காக அக்கறைப்பட்டதில்லை.
ஏனெனில் அவன் அக்கறைப்பட வேண்டிய விடயங்கள்..
மிக முக்கியமான விடயங்கள்..
இன்னும் எத்தனையோ இருந்தன.
அரசியல்..,
இலக்கியம்..,
பெண்ணியம்..,
தலித்தியம்..,
இன்னும் என்னவெல்லாமோ.
அதனால் எனக்காக அக்கறைப்பட அவனுக்கு நேரமிருக்கவில்லை.
ஆனால் நானோ அவனது உடல்நலம், எழுத்து, உழைப்பு, நண்பர்கள்..
எல்லாவற்றின்மீதும் அக்கறை கொண்டிருந்தேன்..
கவலை கொண்டிருந்தேன்.
அவற்றைத்தவிர வேறெதையும் கணக்கெடுக்க எனக்கு நேரமிருந்ததில்லை.

அவன் ஒருபோதும் என்னைப் புரிந்துகொள்ள முயன்றதில்லை.
ஆனால் நான்,
அவனது ஒவ்வொரு அசைவையும் புரிந்துகொண்டு
அதன்படி நடக்கவேண்டுமென
எதிர்பார்க்க மட்டும் அவன் தயங்கவில்லை.
நோயில் கிடந்தால் தாதியாகவும்..,
பாலியல் தேவைகளை நிறைவேற்ற விபச்சாரியாகவும்..,
சமையல்காரியாகவும்..,
வேலைக்காரியாகவும்..
இப்படி நீண்டுகொண்டே போனது
அவனது எதிர்பார்ப்புகளின் பட்டியல்.
ஆனால்,
எத்தனைநாள்..
சுகவீனமுற்றுப் படுக்கையில் கிடந்தபோது
தலைகோதும் அவன் விரல்களின் ஸ்பரிசத்திற்காய் ஏங்கியிருப்பேன்..?
எத்தனை தடவை..
உடலும், மனமும் சோர்ந்திருக்க
அவன் தோளில் தலைசாய்க்கத் துடித்திருப்பேன்..?

அவன் புரிந்துகொண்டதில்லை..
புரிந்துகொள்ள முயற்சித்ததுமில்லை.
ஏனெனில் அவன் ஒரு அறிவுஜீவி...
முற்போக்குவாதி...
இலக்கியவாதி...
சீர்திருத்தவாதி...
etc.. etc..
அவன் புரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் இன்னும் எவ்வளவோ இருந்தன.


நான்:

அவள் ஒரு அறிவுஜீவியின் உத்தம பத்தினி.
அவள் விரும்புகிறாளோ, இல்லையோ..
அந்த அடையாளத்தை
அதற்கேயுரிய வரையறைகளோடு..,
அதற்கேயுரிய கடப்பாடுகளோடு..,
அதற்கேயுரிய பலவீனங்களோடு..
அவள் ஏற்றுத்தானாக வேண்டும்.

இதே தாதியாகவும்.., இதே சமையல்காரியாகவும்.., இதே வேலைக்காரியாகவும் அவள் வேறெங்காவது பணியாற்றியிருந்தால் அவளது உழைப்பு மூலதனமாகியிருக்கும். இந்த ஆண்மேலாதிக்கக் குடும்பக் கட்டமைப்புக்குள் அவளது உழைப்பு 'கடமை' என்ற பெயரில் பெறுமதியிழந்துவிடுகிறது. சமூகத்தில் ஒரு ஆணின் உழைப்புக்கு வழங்கப்படும் அதே மதிப்பும், மரியாதையும் 'இல்லத்தரசிகள்' ஆகிய பெண்களினதுக்கும் வழங்கப்படாத வரையில் சமத்துவமென்பதும், சரிநிகர் சமானமென்பதும் எங்ஙனம் சாத்தியம்?

இல்லத்தரசிகளை விடுவோம். அவள்போல வேலைக்குப்போகும் பெண்களின் பரிதாப நிலையை என்னவென்று சொல்வது? முற்போக்குவாதியொருவரின் படித்த மனைவி வீட்டிற்குள் சிறைப்பட்டுக் கிடப்பது அவரது கௌரவத்திற்கு இழுக்கல்லவா? "எனது துணைவி வேலைக்குப் போகிறாள்.. இதோபார் அவளது உரிமைகளை நான் அங்கீகரித்து விட்டேன்; அவளுக்கான சுதந்திரத்தை.. விடுதலையை வழங்கிவிட்டேன்" என பறைசாற்றித் திரியும் பாசாங்குக்காரர்களில் ஒருவன்தான் அவனும். வேலைக்குப் போவதென்பது சுதந்திரத்தின் அடையாளம்.. வேலை செய்யும் பெண்களனைவரும் விடுதலையடைந்தவர்களென்பது அவன் நினைப்பு.

அவன் மட்டுமல்ல.., இன்னும் பலரதும்..

ஒரு சராசரி வேலையா எம் விமோசனத்தைத் தீர்மானிக்கப் போகிறது?
இதையடைவதற்கா இத்தனை காலமாய்ப் போராடிக் கொண்டிருந்தோம்?
இதுதானா நாம் கேட்கும் விடுதலை?


அவள்:

இல்லாமலிருக்கலாம்.. அதற்காக 'நான் உனக்கு சமைத்துப் போடுகிறேன்.. உன் உடைகளைத் துவைத்துப் போடுகிறேன்.. உன் காமத்தைத் தணிக்க வேசியாகிறேன்.. அதற்கான பெறுமதியை.., காசைத் தா' என்றா கேட்கமுடியும்?

கேவலமானவள்தான் நானும்..
ஒரு விபச்சாரியை விட..
வேலைக்காரியை விட..
அடிமையை விட..

என் உழைப்பிற்கான பலாபலனை எதிர்பார்க்கக்கூட எனக்கு உரிமையில்லை. ஏனெனில் அது என் கடமை.. அப்படிப்பட்ட கற்பிதங்களோடுதான் வளர்க்கப்பட்டேன். அவனது கடமை... சம்பாதிப்பது. அதில் நானும் பங்குகொள்கிறேனல்லவா.. ஏன், என் கடமைகளில் பங்குகொள்ள அவனால் முடியாமல் போனது..? இரட்டைப் பொறுப்பைச் சுமக்கும் என் சிரமம்.. என் சுமை.. ஏன் அவனுக்குப் புரியாமல் போனது..?

அவன் பார்வையில் எனக்கு
முகம் இல்லை...
இதயம் இல்லை...
ஆன்மாவும் இல்லை...
- ###

ஆனால் அன்று அவன் எனக்காக எழுதிய கவிதைகளை இன்றுவரை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். இன்றில்லையெனினும் எப்போதோ ஒருநாள் அவனால் நேசிக்கப்பட்டிருக்கிறேன் என்பதற்கான அடையாளமாய்.. என்றாவது மறுபடியும் என்னை நேசிக்கத் தொடங்குவான் என்ற நம்பிக்கையை ஊட்டுவதற்காய்..


நான்:

இயலாமை தந்த சலிப்பு..

சிறைக்குள்ளிருந்தபடியே, 'இங்கே வேளை தவறாமல் உணவு கிடைக்கிறது.. உடை கிடைக்கிறது.. வசதியாய் இருக்க இடமும் இருக்கிறது.. வேறென்ன வேண்டும்.. ஏன் விடுதலையடைய வேண்டும்..' எனக் கேட்பவர்களுக்கு மத்தியில் சிறைக்குளல்லவா இருக்கிறேனென்ற பிரக்ஞை உயிர்த்தெழுந்ததால் துடிப்பவள் அவள்.

உண்ண உணவில்லாமல் போனாலும்.., உடுக்கத் துணியில்லாமல் போனாலும்.., இருக்க இடமில்லாமல் போனாலும் சுதந்திரமாய் வாழவே விரும்பும் எம்மவர்களின் ஓலங்கள் கேட்கிறதா உங்களுக்கும்?

நீங்கள் கவிதை எழுதுங்கள்...
வேண்டாமென்று சொல்லவில்லை.

உங்கள் உணர்வுகளைக் கிளறிவிட்ட
அவள் உடல் அவயவங்களைப்பற்றி எழுதுங்கள்..
அவை முதிர்கோங்கைப் போலவும்,
மூங்கிலைப் போலவும்,
பட்டுத் தலையணை போலவும் இருந்ததாக எழுதுங்கள்..
அவள் உங்கள் கனவுகளைக் கவர்ந்த
பாதகியென்று எழுதுங்கள்..
அவளது நினைவுகள் உங்களை
நிதமும் தொந்தரவு செய்தவாற்றை எழுதுங்கள்..
ஆனால்,
அவளை நேசிக்கிறேன் என்று மட்டும் எழுதிவிடாதீர்கள்..
அவளுக்காக எதையும் செய்வேன் என்று மட்டும் எழுதிவிடாதீர்கள்..
என்றாவதொருநாள்..,
சில நிமிடங்கள்கூட அவளுக்காக ஒதுக்க முடியாது போகின்றபோது
உங்கள் எழுத்துக்களே
உங்களைப் பரிகசிக்கக்கூடும்..,
எள்ளிநகையாடக்கூடும்..

அவளுக்காய் பரிதாபப்படுகிறேன்..

பாலியல் பண்டமயமாக்கலையும், பெண்ணுடம்பு ஆண்களின் சொத்தாக்கப்படுவதையும் வன்மையாகக் கண்டித்தவன் அவனென்பதை மறந்துவிடத்தான் முயன்று கொண்டிருக்கிறாள்.

தெருக்கோடியில், கையில் நீண்ட தடியுடன் அமர்ந்திருக்கும் மனநிலை பிறழ்வுற்ற அந்தப் பிச்சைக்காரிகூட அவளைவிட விடுதலையடைந்தவள்தான். தனது எல்லைகளைமீறும் எந்தவொரு மனிதனையும் கடைந்தெடுத்த கேவலமான சொற்களால் வசைபாடவும், கற்களையும் தடியையும் எறிந்து தாக்கவும் முடிகிறது அவளால். அவளை நெருங்கவும் தயங்குகிறார்கள் இந்த ஆண்கள்.

ஆனால் என்னவளோ அநேகமாக ஒவ்வொரு இரவும் பலாத்காரப்படுத்தப்படுகிறாள். அவள் சம்மதத்தைப் பற்றிக் கவலைப்படாமலேயே அவளுடல் மேயும் விரல்களைத் தடுக்கும் உரிமைகூட அவளுக்கில்லை. அவள் விருப்பம்... அவள் அனுமதி... அவனுக்கு ஒரு பொருட்டேயில்லை. அவளுடம்பு அவனது சொத்து. தனது வெளிக்குள் அத்துமீறி நுழைபவனைத் தண்டிக்கும் அந்தப் பிச்சைக்காரப் பெண்ணின் வீரியம்கூட அவளுக்கில்லை.

ஏனெனில்..,
அந்தப் பெண் ஓர் மனநிலை பிறழ்வுற்ற,
ஆதரவற்ற பிச்சைக்காரி.
இவளோ..
சமூகத்தில் உயர் அந்தஸ்திலுள்ள
ஓர் அறிவுஜீவியின்
பத்தினி...


அவள்:

'தாலி கட்டிய போதினிற் பெரிதுவக்கும் தன் துணைவனைச் சான்றோன் எனக்கேட்ட மனைவி'... இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்... வாழப்பழகிக் கொண்டிருக்கிறேன்.

தனக்குச் சேவைசெய்ய நான் கொடுத்து வைத்திருக்க வேண்டுமாம்.. அப்படித்தான் சொன்னான் ஒருநாள்.

சில்லம் பல்லமாகச் சிதறுண்டு போனது இதயம்..
விண்ணென்று அடிவயிற்றிலிருந்து கிளம்பி,
மனசெல்லாம் பரவி,
தலைக்குள் ஊசியாய்க் குத்தியது வேதனை..
அவன் அகங்காரம் தந்த வேதனை..


நான்:

முற்போக்குவாதிகள்... என் வெறுப்புக்களை மிகைப்படுத்தும் புண்ணிய புத்திரர்கள்...

ஒரு சராசரி குடிகாரக் கணவனைவிட பெண்விடுதலை பற்றிக் கதையளக்கும் ஆணாதிக்க முதலைகள், முற்போக்குவாத முகமூடிக்குள் ஒளிந்துகொண்டு பெண்ணினத்திற்குச் செய்யும் அநியாயங்கள் அநேகம்.

உலகின் இரட்சகர்கள் தாங்கள்தானென்ற நினைப்பு அவர்களுக்கு..

கூடவேயிருந்து ஒத்தூத ஒரு கும்பல் கிடைத்துவிட்டால் காணும்.. அறியாப்பதர்கள் சில தலைமீது தூக்கிவைத்துக் கொண்டாடினால் போதும்..

இவர்களை மிஞ்ச யாருமேயில்லைதான்..
தன்னகங்காரத்தில்..,
தற்பெருமை பேசுவதில்..,
தன்னைத் தவிர்ந்தோரை முட்டாள்களாகக் கருதுவதில்...


அவள்:

நான் வாழ்ந்தேன்..,
வாழ்நாளெல்லாம் நானாக..
இருள் நிறைந்த பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்..
இன்னமும் வாழ்கிறேன்.
- ###

ஆனாலும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால்.., இன்னமும் நான் அவனை நேசிக்கிறேன்.

பாதையைக் கடக்க
இருவருமாய் அடியெடுத்து வைத்த நாளொன்றில்,
எங்கோ தொலைவில்
வேகமாய்வந்த வாகனத்தைக்கண்டு பதறி..
என் கரம் பற்றியிழுத்தானே..

அந்தக் கணத்திற்காய் அவனை நேசிக்கிறேன்.

முழங்கை எலும்பு விலகி
வேதனையில் நான் துடித்த போது
அவன் விழிகளில் ஈரம் துளிர்த்ததே..

அந்தக் கண்ணீருக்காய் அவனை நேசிக்கிறேன்.

இன்னமும்..., இனியும்..

நான்:

என்னத்தைச் சொல்ல..

நான் மௌனித்துப் போனேன்..### - நினைவில் நின்ற பெண்கவிஞரொருவரின் வரிகள்.. பெயர் ஞாபகமில்லை.

Tuesday, December 13, 2005

அன்பே சிவம்...


இந்த மனிதர்களைப்பற்றிச் சொல்வதற்கு
இனியும் என்னிடம்
எதுவுமேயில்லை..

இவர்களுடனான
என் கசந்துபோன
சில அனுபவங்களை
நினைவுக்குவியலிலிருந்து பொறுக்கியெடுக்கிறேன்..

என் கட்டுப்பாடுகளையும் மீறி..,
அடிமனத்தின் ஆழங்களில் ஊற்றெடுத்து..,
திடீரென்று கிளம்பிப்
பொங்கிப் பாய்கிறது..
இவர்கள் மீதான வெறுப்பு.


தெய்வநியதிகளுக்குள் மனிதத்தைத் தொலைத்துவிட்டவர்கள் இவர்கள்...

ஒரு திருவிழா தினத்தன்று, தோழியரின் ஓயாத வற்புறுத்தலின் பேரில் நீண்டகாலத்திற்குப் பின்னர் சிவன்கோவில் வாசலில் அடியெடுத்துவைத்தேன். முக்கியமான தினமென்றபடியால் கோவிலில் கூட்டத்திற்குக் குறைவிருக்கவில்லை. புத்தாடைகளுடனும், மினுமினுக்கும் ஆபரணங்களுடனும், முகம் முழுக்கப் புன்னகையுடனும் ஆண்களும்.., பெண்களும்.., சிறுவரும்.., வயது முதிர்ந்தோரும்.., இன்னுமின்னும் பலருமென களைகட்டிக் கொண்டிருந்தது கோவில் முன்றம். அனைவரையும் கடந்து, உள்நுழைந்து பூசையில் கலந்துகொண்டோம். நாதஸ்வரத்தினதும் இன்னபிற இசைக்கருவிகளினதும் ஓசை காதைத்துளைக்க.. புரியாத மொழியில் அர்ச்சகரும் ஏதேதோ கூற.. பக்திப் பரவசத்துடன் மெய்மறந்து நின்றிருந்த மனிதர்மீது திரும்பியது என் பார்வை. என்ன வேண்டுகிறார்களாயிருக்கும் இவர்கள்..?

அதோ அந்தச் சிறுமி.. பூசை முடிந்ததும் அம்மா பஞ்சுமிட்டாய் வாங்கித்தரவேண்டுமென வேண்டுகிறாளோ..? அந்தப் பையன்.. இந்தமுறை தவணைப் பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கவேண்டுமென நேர்ந்து கொண்டவனாயிருக்கும்.. ஆனால் அந்த இளைஞன்.. காதலியின் தரிசனம் இன்றைக்காவது கிட்டவேண்டுமென்று வேண்டுகிறானோ..? அந்த அம்மாள் என்ன வேண்டுகிறாளாயிருக்கும்..? பிள்ளைகள் சுகமாக இருக்க வேண்டும்.., கணவன் நீண்டகாலம் வாழவேண்டுமென்றாக்கும்.. அப்படியென்றால் அந்தக் கிழவர்.. விரைவில் என்னை உன்னிடம் அழைத்துக்கொள் என்று கேட்கிறாராக்கும்..

இவர்களில் எத்தனைபேர் எந்தவித எதிர்பார்ப்புகளுமேயில்லாமல் இறைவனை வணங்குகிறார்கள்? எத்தனைபேர் அநியாயமாய் மாண்டுபோன ஆன்மாக்களுக்காகப் பிரார்த்திக்கிறார்கள்? எத்தனைபேர் துன்பத்திலுழலும் மக்களைத் தங்கள் வேண்டுதல்களின்போது நினைவு கூருகிறார்கள்? 'மக்கள் சேவை மகேசன் சேவை' என்பது கேட்பதற்கு நன்றாய்த்தான் இருக்கிறது. நடைமுறையில், இந்த மதங்கள் மக்கள் மத்தியில் சுயநலத்தை அல்லவா மென்மேலும் வளர்த்துக் கொண்டிருக்கின்றன..

அபிஷேகம் ஆரம்பமாகின்றது.. பால், இளநீர், இன்னும் எத்தனை எத்தனையோ திரவியங்களால் திருவுருவச் சிலை நீராட்டப்படுகின்றது. இனம்புரியாத அதிர்வு உள்ளத்தில்.. இங்கு லீட்டர் கணக்கில் அநியாயமாய் வீணாய்ப் போகும் பால் எத்தனை குழந்தைகளின் பசி தீர்க்கப் பயன்பட்டிருக்கும்? கொழும்பு மாநகரின் சேரிப்புறங்களில்.. மூக்கிலிருந்து சளி வடிய வடிய.. இத்துப்போன கந்தலாடைகளுடன் ஓடித்திரியும் சிறுவர்களின் முகங்கள் நினைவில் அறைந்து சென்றன. பேருந்தில், சில மாதங்களே நிரம்பிய குழந்தையை இடுப்பில் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டிருந்த.., பிள்ளைக்குப் பாலூட்டவும் வழியில்லாத ஒட்டியுலர்ந்துபோன மேனியுடனான அந்தப் பெண்ணுருவத்தின் நீட்டிய கைகளும் விழிமுன் நிழலாடின..

என்ன மனிதர்கள் இவர்கள்..? கல்லிலும்கூட இறைவனைக் காணத்தெரிந்த இந்தக் கனவான்களால் ஏன் அந்தக் குழந்தையின் முகத்திலும்.., பரிதாபத்திற்குரிய அந்தப் பெண்ணின் விழியிலும்.., இதுபோன்ற இன்னும் எத்தனையோ வறிய நெஞ்சங்களிலும் கடவுளைக் காணமுடியாமல் போயிற்று?


அறியாமையெனும் சுழலுக்குள் சிக்குண்டு விடுபட மறுத்தவர்கள் இவர்கள்...

சுனாமி வந்தாலும் வந்தது.. அதைச் சாட்டாகக்கொண்டே அசட்டுச் சனங்களை ஏய்க்கவும் தவறவில்லை இந்த மனிதர்கள். முழு ஊரையும் கடல்கொண்டு போனபின்பும், சுவடே தெரியாமல் மானுட இருப்பே அழிந்துவிட்ட பின்பும், சில ஆலயங்களில் இறைவனின் திருவுருவச் சிலைகள் மட்டும் எந்தச் சேதாரமுமில்லாமல் தற்செயலாகத் தப்பிப்பிழைத்ததை வைத்துக்கொண்டு அரசியல் நடத்தத் தொடங்கிவிட்டனர். சிலைகள் சிதைவுறாமை அதிசயமாம்.., அற்புதமாம்.., இறைவனின் மகிமையாம்.. மக்களின் நம்பிக்கையை வைத்துப் பணம் சம்பாதித்தல் இங்கு பிரபல்யமான தொழிலாகப் போயிற்று. சுனாமியிலிருந்து தப்பிப்பிழைத்த சிலைகள் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றன; புனிதம் பொருந்தியவையாகவும், சக்தி வாய்ந்தவையாகவும் கருதப்பட்டு பயபக்தியுடன் வணங்கப்படுகின்றன.

நல்ல வேடிக்கைதான்.. எந்த இதயமுள்ள இறைவனாவது தன் குழந்தைகளைப் பலிகொடுத்து உருவச் சிலைகளை மீட்பானா..? மண்ணாலும், கல்லாலுமான சிலைகளைவிட மானுட உயிர்களைக் கேவலமாக நினைக்கும் இறைவர்களின் புத்திரர்களா நாங்கள்..? உயிருள்ள ஜீவன்களைக் கைவிட்டு, தன்னைத்தான் காப்பாற்றிக்கொள்ளும் சக்திவாய்ந்த இந்தச் சிலைகள் இருந்தாலென்ன.. இல்லாவிட்டாலென்ன..? சொல்பவன் சொல்கிறானென்றால்.. கேட்பவனுக்கு எங்கே போயிற்று புத்தி?


காலத்தின் மாறுதல்களுக்கேற்ப தம்மைத் தகவமைக்க மறந்தவர்கள் இவர்கள்...

மதமாற்றத்தைச் சட்டரீதியாகத் தடைசெய்யகோரி ஆர்ப்பாட்டம்.., போராட்டம்.., கூச்சல்... எய்தவனிருக்க அம்பை நொந்துகொள்ளும் பேதமைத்தனத்தின் உச்சகட்டம். விரும்பிய மதத்தினைக் கடைப்பிடிக்கும் உரிமையை மறுக்கக்கோருபவர்கள்.., புதிதாக முளைத்த சிறிய சிறிய மிஷனரிகளால் தங்கள் நூற்றாண்டுகாலப் பழைமை வாய்ந்த மதங்களின் பாரம்பரியப் பெருமையும், புகழும் சீர்குலைந்து போவதாக அஞ்சுபவர்கள்... மதமாற்றங்கள் இடம்பெறுவதற்கான அடிப்படைக் காரணங்களை ஏன் உணரத் தவறினார்கள்?

வறுமை.. வறுமை.. வறுமை..

அடுத்தவேளைச் சாப்பாடு கிடைப்பதுகூட நிச்சயமற்ற நிலையிலிருப்பவனிடம் போய் தேவ உலகின் மேன்மை பற்றியும், அடுத்த ஜென்மத்தின் விமோசனம் பற்றியும் கதையளந்தால்.. எவன் கேட்பான்? பசியில் வாடும் குழந்தையிடம் சொர்க்கத்துக்குப் போக விருப்பமா என்று கேட்டால்.., அங்கே நிறைய பாண் (bread) கிடைக்குமா அக்கா என்றுதான் அது திருப்பிக் கேட்கும். இனிவரும் பிறவிகளில் கோடானுகோடி செல்வத்தைத் தரக்கூடிய கடவுளைவிட.., அடுத்தவேளை உணவை உறுதிப்படுத்தக்கூடிய.., இவ்வுலகில் வாழ்தலை இலகுவாக்கக்கூடிய கடவுளரே இத்தகைய கதியற்ற மனிதர்களுக்குத் தேவை... அது எந்த மிஷனரியாயிருந்தாலும் சரி.. அவற்றின் பின்னணியிலிருக்கும் அமெரிக்காவாயிருந்தாலும் சரி.. வேறு யாராயிருந்தாலும் சரி.. இந்த யதார்த்தத்தினைக்கூடப் புரிந்துகொள்ள முடியாத பழம்பெரும் மதங்களின் இருப்பு கேள்விக்குள்ளாவதில் வியப்பென்ன?

மறுபுறம் சாதிய அமைப்பு... தாழ்த்தப்பட்ட சாதியினர் மேலாதிக்க வர்க்கத்தினரின் விருப்பு வெறுப்புக்களுக்குக் கட்டுப்பட்டே வாழ்ந்தாக வேண்டிய நிலை. கல்வி, மற்றும் மதவழிபாடுகளின்போது புறக்கணிப்பு.. மனிதரை மனிதராக மதிக்கத்தெரியாத பிராமணிய சித்தாந்தங்களினால் வந்த வினை. முறையான கல்விவசதியும், அதன்வழிவந்த சமூக அந்தஸ்தையும் பெற்றுத்தரக்கூடிய.., வழிபாடுகளின்போது தம் பிறப்பினைக் காரணங்காட்டித் தம்மை அவமதிக்காத ஒரு மதத்தினை இழிகுலத்தவரென இவர்களால் அடையாளப்படுத்தப்படுவோர் தெரிந்தெடுப்பதில் என்ன தவறு?

கிலோக்கணக்கான தங்கத்தினாலும், விலையுயர்ந்த பட்டுப்பீதாம்பரங்களாலும் திருவுருவச் சிலைகளை அலங்கரித்து அழகுபார்க்கத் தெரிந்தவர்கள்.. அந்தக் கரிசனையில் கொஞ்சத்தை இந்த ஏழைச் சனங்களிடமும் காட்டினால் பிறகும் தேவைப்படுமோ இந்த மதமாற்றத் தடைச்சட்டங்கள்? சாதிய ஏற்றத்தாழ்வுகளாலும், வர்க்க முரண்பாடுகளாலும் மனிதரைப் புறக்கணிக்காதிருந்தால்.., அவர்களை அகௌரவப்படுத்தாதிருந்தால்.., அனைவருக்கும் சமவாய்ப்பினை வழங்க முன்வந்தால்... அதன்பின்னும் நிலைபெறுமோ இம்மதமாற்றங்கள்?

இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்... இந்த அறியாமையிலுழலும் மானிடப் பதர்கள். அன்புநிறை நெஞ்சங்களுள் தெய்வீகம் உறைந்திருப்பதை உணராமல் கல்லிலும், முள்ளிலும், இன்னும் எங்கெல்லாமோ தேடியலைந்து கொண்டிருக்கிறார்கள்.

என்ன செய்து கொண்டிருக்கிறது இந்த உலகம்..?
புதிய தெய்வங்களைக் கண்டுபிடிக்கிறது..
புதிய சட்டங்களை உருவாக்குகிறது..
பாப்லார் மரங்களில் காற்று ஊடுருவிச் செல்லும் ஓசை.
காலையொளியில் ஒரு தேவனைப் போல்
சுடர்விட்டபடி ஒரு தேனீ இதோ செல்கிறது.
அதன் ரீங்காரத்தில் ஓங்கார நாதம்.
உலகை விடுங்கள்.
நான் கேட்க விரும்பும் பூமியின் வரலாறு
இதில்தான் உள்ளது.
- ஹேர்மன் ஹெஸ்ஸே

Thursday, December 08, 2005

மீள்வருகை...


1.

நன்றி... நன்றி... நன்றி... கிஞ்சித்தும் எதிர்பார்த்திராத வாழ்த்துக்களையும், ஊக்குவிப்புக்களையும், உளம் நிறைந்த ஆசிகளையும் கண்டு மெய்சிலிர்த்தே போனேன், தோழர்களே. என் மொழியின் பலவீனம்... உணர்ந்ததை முழுவதுமாக வெளிப்படுத்தத் தெரியவில்லை. இப்படியொரு அற்புத உலகத்தையும், அன்பான மனிதர்களையும் இத்தனை காலமும் அறிந்திராமற் போனமைக்காக வருந்துகிறேன்.

இதோ.. உங்கள் பின்னூட்டங்கள் குறித்தான எனது கருத்துக்கள்...

ஆழ்வார்க்கடியான்..,
உங்கள் அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி. ஒற்றை அனுபவம் வாழ்வை நிர்ணயிக்கக்கூடாதுதான். ஆனாலும் மனதில் அறைந்து விட்டுச்சென்ற ஒற்றை வார்த்தை வாழ்வின் போக்கையே திசைதிருப்பக்கூடுமல்லவா... அந்த மாற்றம் மனதுக்கும் பிடித்திருந்தால் என்ன செய்ய...? (நிவாரணமுகாம் அனுபவம்...)

சுப்ரமணியம், மதுமிதா, செல்வநாயகி, அன்பு, கண்ணண், தங்கமணி, karthikaramas, மயூரன்..,
உளமுருகச் செய்த உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக மிக நன்றி.

மதி..,
நீங்கள் மட்டுமல்ல, இந்த அக்கா/அண்ணா விளித்தலில் உடன்பாடில்லாத இன்னும் எத்தனையோ பேர் உலகில் இருக்கிறார்கள். ஆனால் இந்த மறத்தமிழர் குணம் - பொடிச்சி சொன்னதைப் போல் - விட்டுப் போகுதில்லை. இங்கே எத்தனையோ கடைகளில் 'அண்ணா' என்று கூப்பிடப்போய், அவங்கள் 'சொல்லுங்கோ அக்கா' என்று திருப்பிக்கேட்டுவிட, 'தேவைதான்' என்று அடிமனம் என்னையே நொந்துகொண்ட சந்தர்ப்பங்கள் ஏராளம். ஆனாலும் பாருங்கோ, இன்னமும் நான் திருந்தினபாடில்லை. 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்று யாரோ சொன்னத வைத்துக்கொண்டு ஊர் முழுக்க சொந்தம் சேர்த்துக்கொண்டிருக்கிறன். :-)

டி.சே. தமிழன்..,
நீங்களும், பொடிச்சியும், இன்னும் பலரும் நேர்மையான சொல்லல்முறையைச் சிலாகித்திருப்பது என்னை வியப்பிலாழ்த்துகிறது. இந்த நேர்மைதான் எத்தனையோ பேருடன் முரண்பட வைத்தது. சிலதினங்களுக்கு முன்னரும் அருமை நண்பனொருவனை இப்படித்தான் இழந்தேன். உண்மை.. எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிதாய் இருப்பதில்லையல்லவா? 'பொய்' யின் கவர்ச்சியும், 'கற்பனை' யின் அலங்காரமுமே மனித மனங்களால் விரும்பப்படுகின்றன. அவர்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக எப்படி அறிந்தே துரோகம் செய்வது?

நேர்மையையும், வெளிப்படைத்தன்மையையும் ஏற்றுக்கொள்ளத் தெரிந்த உங்களைப் போன்றோரின் அறிமுகம் கிடைத்ததில் மிகவும் சந்தோஷம். மற்றும்படி, உணர்ச்சிவசப்படுதலிலும் 'ப்ரோ', 'தங்கத்தீ' (சத்தியமா விளங்கேல்ல) என அழைத்தலிலும் எந்தத் தவறுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

சந்திரவதனா அக்கா..,
அன்பான உற்சாகப்படுத்தலுக்கு நன்றி. உங்கள் கருத்துக்கு மயூரனே தக்க பதிலளித்து என் சிரமங்களைக் குறைத்துவிட்டார். உடற்பயிற்சி செய்வது தவறென நான் சொல்லவரவில்லை, உடற்பயிற்சி நிலையங்களை நாடுபவர்களைத் திட்டவும் எனக்கு எந்த அருகதையுமில்லை. உடற்பயிற்சியென்பது ஒருவகையில் செலவளிக்க வழியில்லாது சேர்ந்துபோன சக்தியினை / அதிகபட்ச சக்தியினை சூழலுக்கு இழக்கும் ஒரு முறைதானே... ஒருவிதத்தில் சக்திவிரயம்தானே... அன்றாடக் கருமங்களை நிறைவேற்றுவதற்கே போதுமான தெம்பில்லாமல் எத்தனையோ ஆயிரக்கணக்கான மக்கள் அல்லலுற்றுக் கொண்டிருக்க, மறுபக்கத்தில் உடற்பயிற்சி செய்து உடற்பலத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் வசதிபடைத்தவர்கள்... இப்படியாக, இவ்வுலகத்து மனிதரிடையே நிலவும் அசமத்துவம் மீதான என் விசனங்களைத்தான் எடுத்துக்கூறினேன்.

கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேசமயம், அக்கருத்துக்கள் எந்த சூழலிலிருந்து முன்வைக்கப்படுகின்றன, என்ன மனநிலையுடன் முன்வைக்கப்படுகின்றன என்பதையும் கவனத்திற் கொள்வோமாயின் - சற்றுச் சிரமம்தான், நடைமுறைக்குச் சரிவராதுதான் என்றாலும் - இன்னும் தெளிவான புரிதலேற்படக்கூடுமென்பது எனது தாழ்வான அபிப்ராயம்.

anonymous அண்ணனுக்கு..,
80 களிலேயே பெண்களைச் சுடலைக்குச் செல்ல அனுமதித்தார்களென்றால் உங்கள் குடும்பம் மிகவும் முற்போக்கானதாகத்தானிருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக எல்லாருக்கும் இப்படியான பரம்பரையில் பிறக்கும் பேறு கிடைப்பதில்லை. சில மாதங்களுக்கு முன்னர் நான் நேரில் அனுபவித்ததைத்தான் சொன்னேன். பழமைவாதம் இன்னமும் மரணித்து விடவில்லை...

feman...,
பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி. ஆனால் பெண்கள் மிருதுவானவர்கள், மென்மையானவர்களென்ற உங்கள் வாதத்தை எந்தவிதத்திலும் என்னால் நியாயப்படுத்த முடியவில்லை. இறுதிக்கிரியைகளை ஏற்றுக்கொள்ளும் மனவுறுதி பெண்களுக்கு இல்லையென்ற முடிவுக்கு நீங்களாக எப்படி வரமுடியும்? இந்தச் சடங்குகளில் கலந்துகொள்ள மட்டுமல்ல, இவற்றை முன்னின்று நடத்தவும் தேவையான மனோதிடம் என்னிடமிருக்கிறதென்று தலைநிமிர்த்தி நானே சொல்கின்றபோது, அதை எப்படி நீங்கள் மறுக்கமுடியும்?

உடன்பிறந்த சகோதரியைப்போல் எம்மோடு நெருங்கிப் பழகிய ஒரு ஆசிரியை (கிறிஸ்தவப் பெண்) கடந்தவருடம் தற்கொலையில் உயிரை மாய்த்துக்கொண்டபோது - அப்போது அவர் ஒரு நிறைமாதக் கர்ப்பிணி - அவரது இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் மயானம்வரை சென்று பிடி மண்ணள்ளிப் போட்டுவந்தோம், நானும் சில தோழிகளும். அப்போதிருந்த மனவுறுதி சைவச் சடங்கென்றதும் தொலைந்துவிடுமோ?

பத்துமாதம் வயிற்றில் சுமந்து, சீராட்டிப் பாராட்டி வளர்த்த செல்வக்குழந்தைகளைப் போர்முனைக்கு - மரணத்தின் வாயிலுக்கு - வழியனுப்பி வைக்கும் தாய்மார்களையா மென்மையானவர்கள் என்கிறீர்கள்? அருமைப் புதல்வன் வீரமரணமடைந்தானென்று கேள்விப்பட்டதும் போர்க்களத்திற்கு ஓடிச்சென்று அம்பு முதுகில் பாய்ந்ததா, மார்பில் பாய்ந்ததாவென ஆராயும் சங்ககாலத்து மறத்தமிழச்சிகளின் வழிவந்த பெண்களைப் பார்த்தா மிருதுவானவர்களென்கிறீர்கள்?

மென்மைக்குரிய அளவுகோலாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்... அழுகையையா? அழுகை பலவீனத்தின் அறிகுறியென்று எவர் சொன்னது? அதுவொரு உணர்ச்சி வெளிப்பாடு அவ்வளவுதான். அழுகை - பெண்மைத்தனம், கோபம் - ஆண்மைத்தனமென்ற கற்பிதங்களிலிருந்து விலகிநின்று பாருங்கள். உணர்வுகள் மதிப்பிற்குரியவை... அவற்றை வெளிப்படுத்தவும் தைரியம் வேண்டும். அழத்துணிவில்லாதவன்... எனக்குக் கவலையாக இருக்கிறதென்று சொல்லத் தயங்குபவன் உலகில் வேறு என்னத்தை சாதித்துவிட முடியும்?

உங்கள் வாதங்கள் தவறென்றோ, அநியாயமானவையென்றோ நான் சொல்லவரவில்லை. அவற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனமைக்கான காரணங்களைத்தான் முன்வைத்தேன்.

தோழர்கள் அனைவருக்கும்..,
இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறேன். ஆரம்பித்த பிற்பாடுதான் என் அறிவினதும், அனுபவத்தினதும் போதாமை தெரியவருகின்றது. அறிவுபூர்வமாகவும், ஆக்கபூர்வமாகவும் எதுவும் எழுத இன்னும் சற்றுக்காலம் பொறுத்திருக்க வேண்டிவரும். அதுவரை இந்த வலைப்பதிவு என் உணர்வுகளுக்கான வடிகாலாக அமையட்டும். மற்றும்படி.., இந்த L board காரியிடமிருந்து தோழர்கள் அதிகமாக எதையும் எதிர்பார்க்க மாட்டார்களென நம்புகின்றேன்.


2.

இதுவரைகாலமும் இந்த உலகத்தின் மீதான வெறுப்பையும்..,
மனிதர்களின் மீதான அவநம்பிக்கையையும்..
அடிமனத்தாழங்களில்
சேர்த்துச் சேர்த்து வைத்திருந்தேன்..
எனதேயெனதான உலகமொன்றைப் பற்றிய
கனவுகளில் மூழ்கி..,
இவர்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போயிருந்தேன்..
இவ்வுலகம் எனக்கானதல்லவென்ற உணர்வு
மேலோங்க மேலோங்க...
இன்னுமின்னும் அதிகமாக
இவர்களையும்..,
இவர்கள் சார்ந்தவற்றையும்
அலட்சியப்படுத்தத் தொடங்கினேன்.

போதிசத்துவருக்கு அரசமரத்தடியில் ஞானம் கிட்டியதாம்..
எனக்கோ கசந்துபோன உறவொன்று
விலகியதன் பின்னர் ஞானம் பிறந்தது..
இனியும்..
உணர்ந்துணர்ந்து உருகவும்..,
உள்ளுக்குள்ளே கிடந்து மறுகவும் தயாரில்லை, நான்..

நான் உணர்வுகளை - கோபம், காமம், விரக்தி, வேதனை என எதுவாயிருந்தாலும் - நேசிக்கிறேன்..
உயிரினும் மேலாய் மதிக்கிறேன்..
இந்த மனிதர்களைப் பொறுத்தவரை
அவை எத்துணை கேவலமாயிருந்தாலும்..,
எத்துணை ஆபாசமாயிருந்தாலும்..

மொழி பலவீனமானதுதான்..
எனினும்,
இந்த மனிதர்களோடு வேறெந்த ஊடகத்தினூடு உரையாட..?
சொல்லாதுபோன வார்த்தைகளையும்,
அடிமனத்தில் உறைந்துபோன உணர்வுகளையும்
வேறெப்படி வெளிப்படுத்த..?

இனி இவர்களுக்கு எடுத்துச் சொல்லுவேன்..
என் கோபங்களை..,
தாபங்களை..,
அடக்கியே வைத்திருந்த
அடக்கக்கூடாத உணர்வுகளை...


3.

இன்னும் எத்தனையோ சொல்ல வேண்டியிருக்கிறது இந்த மனிதர்களுக்கு...

நான் அவர்களை எவ்வளவு நேசித்தேன்
என்று சொல்ல வேணும்...
அவர்களது அரவணைப்புக்காக எவ்வளவுதூரம் ஏங்கினேன்
என்று சொல்ல வேணும்...
என் மீதான புறக்கணிப்பின் சாயல்கள் அவர்களில் பிரதிபலித்த போதெல்லாம் நான் எப்படி மனமுடைந்து போனேன்
என்று சொல்ல வேணும்...
இவ்வுலகத்திலிருந்து தனிச்சுப் போனதாய் உணர்ந்த போதெல்லாம் நான் எப்படி அழுதேன்
என்று சொல்ல வேணும்...
அவர்களது அதிகாரமும், அடக்குமுறையும் என்னைக் காயப்படுத்தின
என்று சொல்ல வேணும்...
அவர்களது மரபார்ந்த நம்பிக்கைகளும், தெய்வ நியதிகளும் என்னை அவமதித்தன
என்று சொல்ல வேணும்...
என்மீது வலிந்து திணிக்கப்பட்டுள்ள 'பெண்' என்ற அடையாளத்தை - அதற்கென வகுக்கப்பட்டுள்ள பலவீனங்களோடு - நான் வெறுக்கிறேன்
என்று சொல்ல வேணும்...
அவர்களது வக்கிரப் பார்வையும், குருதி படிந்த கரங்களும் என்னை அச்சத்திலாழ்த்தின
என்று சொல்ல வேணும்...
அவர்களது சில கருத்தியல்களோடு ஒத்துப்போக முடியாத என் இயலாமையைப் பற்றிச்
சொல்ல வேணும்...
அவர்களது சில்லறைத்தனமான எதிர்பார்ப்புக்களை என்னால் நிறைவேற்ற முடியாது
என்று சொல்ல வேணும்...
அவர்களது மூளையைக் குத்தகைக்கெடுத்து அவர்களின் பாஷையில் நான் பேசுவது சாத்தியமில்லை
என்று சொல்ல வேணும்...
உள்ளத்தை அடகுவைத்து, உணர்வுகளைக் கடன்வாங்க எனக்குத் தெரியாது
என்று சொல்ல வேணும்...

எல்லாவற்றிற்கும் மேலாக...,
இன்னமும் நான் அவர்களை எந்தக் கபடமுமில்லாமல் நேசிக்கிறேனென்றும்...,
அவர்களற்ற உலகத்தைக் கனவுகளில்கூட என்னால் உருவாக்க முடியாதென்றும்...,
அவர்களுக்கு மத்தியில் - ஆனாலும், என் சுயத்தை இழந்துவிடாமல் நான் நானாகவே - வாழவிரும்புகிறேனென்றும்...
நான் சொல்லியேயாக வேண்டும்...

Thursday, November 24, 2005

கனத்துப்போன நினைவுகள்...

"எனை உறுத்தும் நினைவுகளைச் சொல்வேன்
நொந்துபோன என் நாட்களின்
வேதனைச் சுமையினைச் சொல்வேன்
சிதழூறும் காயங்கள் பேசும் மொழியினில்
என்னைப் பேசவிடுங்கள்"
- அஸ்வகோஸ்

இந்த மனிதர்களுக்கும் எனக்குமிடையிலான உறவு எப்போது ஆரம்பமானது? கருவறைக் காலத்திற்கும் முன்பாய் இருக்கலாம். இவர்கள் புகைத்தெறிந்த சிகரட்டைச் சுற்றியிருந்த காகிதத்தைத் தயாரிக்கப் பயன்பட்ட, வைக்கோலாய் இருந்திருப்பேனோ நான்.......?! வார் அறுந்ததென இவர்கள் வீசியெறிந்த செருப்பு என் தோலால் செய்யப்பட்டிருந்திருக்குமோ.......?! fashion போய்விட்டதென இவர்களால் வெறுத்தொதுக்கப்பட்ட மேற்சட்டையின், உற்பத்திக்கு ஆதாரமாயிருந்த பருத்திப் பூவோ நான்.......?! வைக்கோலாய்...., மிருகமாய்...., பருத்திப் பூவாய் நானிருந்தபோது இவர்கள் இப்போதிருக்கும் இதே மனிதர்களாகத்தான் இருந்தார்களா அல்லது இவர்களுடனான சில கசந்துபோன அனுபவங்கள்தான் என் சிந்தனையை இவ்வாறெல்லாம் தூண்டுகின்றனவா?

எல்லாப் பெண்களையும் போல நானும் நேசித்தேன் ஒருவனை, உயிருக்குயிராய்... எதனிலும் மேலாய். ஆனால், என் மிகையான வெறுப்புக்கு இலக்காகியிருந்த ஆணாதிக்க வர்க்கத்தின் பிரதிநிதிகளில் அவனும் ஒருவனென்பதை நான் மறந்துவிட்டிருந்தேன். எனதேயெனதான உலகினில் வாழ்வதற்கான என் உரிமையை மறுத்த கயவர்களில் ஒருவன் அவனென்பதையும் உணரத் தவறிவிட்டிருந்தேன். ஆணாதிக்கத்தின் விஷவேர் அவனது அடிமனத்திலும் ஆழ ஊடுருவியிருந்தது. எம் சமூகத்தின் மரபார்ந்த போலி விழுமியங்களும், மூடக்கொள்கைகளும் அவனது இரத்தத்திலும் இரண்டறக் கலந்திருந்தன. இறுதிவரை அவனது தேவைகளும், எதிர்பார்ப்புகளும் என்னாலும் எனது உணர்வுகளும், ஏக்கங்களும் அவனாலும் புரிந்துகொள்ளப்படாமலே போயின. தூய, வெண்மையானதென நான் கருதியிருந்த அவனது ஆன்மாவில் ஆணாதிக்கப் புழுதிகள் படிந்தன... பின்னென்ன...., பிரிவது நிச்சயமாயிற்று.

இப்படித்தான் இன்னுமின்னும் அதிகமாக ஆண்களை வெறுக்கப் பழகிக் கொண்டேன், நான்.

மற்றுமொருநாள், நெரிசலான பேருந்துப் பயணத்தினூடு என் வயதொத்த இளைஞனொருவனின் வேண்டாத சில்மிஷங்கள் எல்லைமீறவும் அனிச்சையாய் ஓங்கிய என் கையைத் தடுத்து நிறுத்தின அவனது வார்த்தைகள்: "இவ்வளோ பத்தினிப் பொம்பளையா இருந்தா, பேசாம ஹெலிகொப்டரில போயிருக்க வேண்டியதுதானே." ஒருகணம் அதிர்ந்தே போனேன். என் விருப்பத்தைக் கேளாமலேயே தொங்கிப் போனதென் தலை. அவமானத்தினாலா அல்லது இயலாமையினாலா என்பதை ஆராயும் நிலையில் நானிருக்கவில்லை. ஆனாலும், பத்தினிப் பெண்கள் அனைவருமே பணக்காரிகளல்லர் என்பதை எப்படிப் புரியவைப்பேன், அவனுக்கு? 'ஹெலிகொப்டரில் போகுமளவுக்கு வசதி படைத்த பணக்காரிகள் மட்டும்தான் பத்தினிப் பெண்களாயிருக்க முடியும்; உலகத்திற்கு முகங்கொடுக்கத் துணிந்த பேருந்தில் பயணிக்கவும், தெருவில் நடந்து செல்லவும் முன்வருகின்ற ஏனைய பெண்கள் விபச்சாரிகளாகவேயிருந்தாக வேண்டும்' என்ற அவனது கருத்தியலின் நியாயத்திற்குப் புறம்பான தன்மையையும், அதை ஏற்றுக்கொள்ள முடியாத என் போன்ற மத்திய வர்க்கத்துப் பெண்களின் இயலாமையையும் எப்படித்தான் எடுத்துரைப்பேன், அவனிடம்?

இவ்வாறுதான் மனிதர்களைக்கண்டு அருவருப்படையத் தொடங்கினேன், நான்.

பாட்டியின் இறுதிக்கிரியைகள் நடந்தேறிய நாள். அதில் கலந்துகொள்ளுமுகமாக நகரத்து நெரிசல்களிலிருந்து விடுபட்ட நிம்மதியுடனும், மிகவும் பிரியத்திற்குரிய பாட்டியைத் தொலைத்துவிட்ட வேதனையுடனும் நெடுங்காலத்துக்குப் பின்னர் என் பிறந்தகமான அந்தப் பிற்பட்ட விவசாயக் கிராமத்திற்குப் போய்ச்சேர்ந்தேன். நான் பிறந்த சிலமாதங்களுக்குள்ளாகவே என் பெற்றோர் சொந்த ஊரிடமிருந்து விடைபெற்றுவிட்டபடியால் கிராமத்து வாசனையறியாமலேயே வளர்ந்திருந்தேன். ஆகையால் எத்தனையோ எதிர்பார்ப்புகளாலும், நெஞ்சுகொள்ளாக் கவலைகளாலும் நிறைந்திருந்தது மனம். வீட்டில் செய்யவேண்டிய சடங்குகள் முடிந்ததும், தகனக்கிரியைகளுக்காக பாட்டியின் உடல் சுடலைக்கு எடுத்துச்செல்லப்படுகையில் பெண்ணென்ற ஒரே காரணத்திற்காக அவரது உடலைப் பின்தொடர்வதற்கான அனுமதி எனக்கு மறுக்கப்பட்டது. பாடையில் செல்வது பெண்ணாயிருந்தும் பாடையைத் தொடர்ந்துசெல்லப் பெண்களுக்கு அனுமதியில்லை. வேடிக்கைதான்... ஆனாலும் இவை தெய்வநியதிகள்; நூற்றாண்டுகாலமாகத் தொடர்ந்துவரும், எம் சமூகத்தினரின் புனிதமான நம்பிக்கைகள்... சம்பிரதாயங்கள். எதிர்த்துக் கேள்விகேட்க எனக்கென்ன தகுதியிருக்கின்றது? இருந்தும்... என்னையும், எனது பெண்மையையும் மதிக்கத் தெரியாத சமூகத்தையும், அதன் நியதிகளையும் நான் மட்டும் மதிக்கவேண்டுமென அவர்கள் எவ்வாறு எதிர்பார்க்கலாம்?

ஆகையினால்தான் இந்தப் போலி அரிதாரங்களையெல்லாம் அலட்சியப்படுத்த ஆரம்பித்தேன், நான்.

ஆழிப்பேரலையின் கோரதாண்டவம் அரங்கேறி முடிந்த சிலதினங்களுக்குப்பின் சேகரித்த நிவாரணப்பொருட்களோடு இலங்கையில் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிரதேசமாகிய மட்டக்களப்பிற்கு சில NGO நண்பர்களோடு பயணமானேன். அங்கே ஒரு அகதிமுகாமில், விநியோகிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களைப் பெறுவதில் ஒரு கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருக்க, அந்தச் சந்தடிகளுக்கப்பால் சில சிறுவர் எதிலும் கலந்துகொள்ளாமல் கனத்தமௌனத்துடன் வேடிக்கைபார்த்திருந்தமை உள்ளத்தை உறுத்த, சற்று நகர்ந்து அவர்களிடம் பேச்சுக்கொடுக்கலானேன். கடல்கொந்தளிப்பில் பெற்றோரிருவரையுமிழந்து 3 வயதுத் தம்பியுடன் அமர்ந்திருந்த சரண்யா என்ற 11 வயதேயான சிறுமியிடம் ஏதாவது வேண்டுமாவென்று கேட்டதற்கு, "ஒன்றுமே வேண்டாம் அக்கா, நீங்க கேட்டதே போதும்" என்ற அவளது பதில் எந்தக் கல்நெஞ்சத்தையும் அக்கணம் உருகச்செய்திருக்கும்.

ஒருபக்கத்தில், ஒருவேளை உணவுக்கே அடுத்தவர் கையையெதிர்பார்த்திருக்கும் இவ்வகதிகள். மறுபக்கத்திலோ, உண்டுகொழுத்த தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சி நிலையங்களைநாடி பணத்தையும், சக்தியையும் விரயமாக்கும் உயர்வர்க்கத்தினர். எல்லாமே இருந்தும் திருப்தியடையா உள்ளத்தோடு மேலும் மேலும் அப்பாவி மக்களைச் சுரண்டியும், ஏய்த்தும் பொருள்சேர்க்கும் முதலாளிகள் ஒருபுறம். மறுபுறத்திலோ, உயிரைத்தவிர எல்லாவற்றையும் கடல்கொண்டு போனபின்பும் சில ஆறுதல்வார்த்தைகளோடு திருப்திகண்ட இந்தச்சிறுமி. ஒருபுறம் சுனாமியால் உடைமைகளனைத்தையுமிழந்து அன்றாடப் பிழைப்பிற்கே அல்லலுறும் மக்கள், மறுபுறம் எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபமென எவரோ கொடுத்த நிவாரண உதவிகளையும் கூட சுருட்ட முயலும் அரசியல்வாதிகள்.

அன்றிலிருந்துதான் கடவுளரின் இருப்பையும் சந்தேகிக்கத் தொடங்கினேன், நான்.

இப்படித்தான்... இப்படித்தான் சமூகவிரோதிகள் உருவாகின்றார்கள். அவர்கள் தாமாகவே அவதரிப்பதில்லை. மனிதவரலாற்றின் வளர்ச்சிக் கட்டங்களில் மனிதத்திற்கான தேவைகள் மலியும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சூழ்நிலைகளாலும், இன்னுமின்னும் பல்வேறு காரணங்களாலும் இப்படித்தான் அவர்கள் கொஞ்சங்கொஞ்சமாக உருவாக்கப்படுகிறார்கள். சமூகத்தின் அங்கத்தவர்களென்றவகையில் நாமனைவரும் இதற்குப் பொறுப்பேற்றேயாகவேண்டும்..!!

Monday, November 21, 2005

பெண்மையின் வெம்மை

சுய ஆதிக்கத்திலிருந்து
மனம் நழுவிப் போன தருணங்களில்
உணர்ந்திருக்கிறேன்
கணங்களின் மகத்துவத்தை...

ஏதோவொரு புள்ளியில்
பிரக்ஞையும் தொலைந்துவிட
நினைவுகளின் பிரவாகிப்பில்
ஆன்மாவின் ஒவ்வோர் அணுவும்
அள்ளுண்டு போவதை
குரூரங் கலந்த சந்தோஷத்துடன்
ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்திருக்கிறேன்

துள்ளித் திரிந்த பருவமதில்
ஏதோ ஹோர்மோன் மாற்றத்தைச்
சாட்டாகக் கொண்டு
எல்லைகள் குறுக்கப்பட்ட போதும்...

இன்னமும்
ஆண்களுக்கே உரித்தாயிருக்கும் இப்பூமியின்
ஒவ்வொரு சதுர அடியிலும்
உரிமைகள் மறுக்கப்பட்ட போதும்...

செருக்கோடு தலைநிமிர வைத்த
புனிதமான பெண்மையே
'கற்பு' என்ற பெயரில்
பலவீனமாக்கப்பட்ட போதும்...

பாதுகாப்பென்றும்,
இன்னபிற காரணங்களென்றும்,
போலி அரிதாரங்களுக்குள்
தேவைகளும் விருப்பங்களும் முடக்கப்பட்ட போதும்...

இவர்களின்
பெண்ணென்ற வெறும் உடல் பிண்டத்துக்குள்
ஆளுமையும், தனித்துவமும்
வெளித்தெரிய முடியாதபடி புதையுண்ட போதும்...

விடுபடலுக்கான எத்தனிப்பின்
ஒவ்வொரு
தோல்வியின் முடிவிலும்
கட்டுக்கள் மேலும் இறுக்கப்பட்ட போதும்...

இதே போல்... இதையே போல்
கைகட்டி வாய்பொத்தி
வெறுமனே வேடிக்கை பார்த்தவாறு
நின்றிருந்திருக்கிறேன்

களங்கமற்ற புன்னகைகள்
களவாடப்படுகையிலும்...
கறைபடியாக் கனவுகள்
சிதைந்தே போகையிலும்...
சில ஆணாதிக்க முதலைகளை
சந்திக்க நேர்கையிலும்...
அறியாமையில் சிக்குண்ட
அபலைகளை எண்ணுகையிலும்...

என் கையாலாகாத்தனத்தை நொந்து
உள்ளம் வெதும்பியிருக்கிறேன்

பெண் சுதந்திரம்
வெறும் படபடக்கும்
காகிதக் குவியல்களால்
தீர்மானிக்கப்படுவதையும்...
எமது அறிவும், ஆற்றலும்
அர்த்தமற்ற சில எண்களால்
மதிப்பிடப்படுவதையும்...

குனிந்த தலையுடன்
மௌனமாகவே அங்கீகரித்திருந்திருக்கிறேன்

உள்ளத்தின் தகிப்பு...
உணர்வுகளின் உக்கிரம்...
விழிச் சாளரங்களினூடாக வடிந்தொழுகுகிறது
வெறும் நீர்த்துளிகளாகவல்ல..,
சுட்டெரிக்கும் அக்னித்துளிகளாய்...
விழிநீருக்கே இத்தனை வெம்மை வாய்த்திருக்கையில்
என் அடிமனத்து ஆழங்களில்
இன்னும் எத்தனை ஆயிரம் அக்னிப் பிளம்புகள்
நர்த்தனமாடிக் கொண்டிருக்க வேண்டும்..?

Sunday, November 20, 2005

முதல் மடல்....!!

வளையங்களை அறுத்தெறியவும்... விட்டு விலகியோடவும் துடிக்கும் ஒரு உள்ளத்தின் குரல்:

இவ்வலைப்பதிவைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் தோழருக்கு இனிய வந்தனங்கள். இணையத்தளத்தில் எனக்கானவொரு அடையாளத்தைப் பெற்றுக்கொண்ட அற்புதமான இத்தருணத்தில் என் மெய்சிலிர்ப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரிதும் மகிழ்வடைகிறேன்.

இவ்வலைப்பதிவின் தலைப்பு உங்கள் சிந்தனைகளைக் கிளரக்கூடும். இத்தலைப்பினைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணத்தினை நானே சொல்லிவிடுகிறேன்.

கர்நாடக சங்கீதத்துடன் நெருங்கிய தொடர்புடைய தலைப்பு இது. இசையறிவுடையவர்கள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்றுதான். "ரேகுப்தி" என்பது மோஹன ராகத்திற்கு முற்காலத்தில் வழங்கப்பட்டு வந்த பெயராகும். அதென்ன, மோஹன ராகத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறேனேயென யோசிக்காதீர்கள். இது புராதன ராகங்களிலொன்று. முல்லைப்பண் எனவும் அழைக்கப்படுகின்றது. இரவு நேரத்தில் பாடுவதற்கு மிகவும் உகந்ததாக இவ்விராகம் கருதப்படுகின்றது. மோஹனத்தின் ரஞ்சகத்தன்மைக்கு இதைவிடவும் சான்றுகள் வேண்டுமா என்ன? மேலும், தென்னிந்திய இசை தவிர பிறநாட்டு சங்கீதங்களிலும் இடம்பெறும் பெருமை இதற்கேயுரியது. மாணிக்கவாசகரின் திருவாசகம் தொன்றுதொட்டு இவ்விராகத்திலேயே பாடப்பட்டு வருவதும் இதன் தனிச்சிறப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

இவற்றையெல்லாம் வாசித்துவிட்டு இவ்வலைப்பதிவு முழுக்க முழுக்க இசை பற்றியதென்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். காலங்களையும் கடந்து நிலைபெற்றிருக்கின்ற..., சர்வ வியாபகத்தன்மை வாய்ந்த..., உள்ளம் நெகிழும் உணர்வுகளைப் பிரதிபலிக்கக்கூடிய ஒன்றன் பெயரை எந்தன் வலைப்பதிவுக்குத் தலைப்பாகத் தேர்ந்தெடுத்ததில் தவறில்லையே...?

மழைக்கால அந்திவேளையொன்றில் பாட மறுத்த ஊமைக்குயிலின் குரல்வளையின் ஆழத்தில் சிக்குண்ட கானங்களைப் பற்றியவை எனது பதிவுகள்... கரைசேர முன்னரே காணாமற்போன அலைகளின் ஓலங்களைப் பற்றியவை எனது பதிவுகள்...

பதிவுகளை ரசிப்பதோடு, உங்களைப் பற்றியதான தடயங்களையும் விட்டுச்செல்ல வரவேற்கிறேன்.

- நிவேதா