Monday, December 31, 2007

அரியத்திலுருளும் உணர்வுகள்

பாவமன்னிப்புக் கேட்கவேண்டும் நான்
வலியெடுத்துக் கதறுமோர்
குழந்தையின் குரலில்
செய்தவைக்காகவும்
செய்யாமல் தவிர்த்தவைக்காகவும்
கதைத்தவைக்காகவும்
சமயங்களில்

கதைக்க மறுத்ததற்காகவும்
சுற்றியிருக்கும் அனைவருக்கும்
வெறுப்பினையே பரிசளித்தமைக்காக
பிறர் முதுகில் சுமையிறக்கி
ஆறுதலாக இளைப்பாறியமைக்காக
புன்னகைகளைக் கிழித்தெறிந்து
கருந்திரைகளைத் தொங்கவிட்டமைக்காக
இன்னமும் எனதன்பே,
விரல்கள்
நடுங்க மந்திரக்கோலைக் கைவிடும்
சூனியக்காரியொருத்தியின் பாவனையுடன்
உனதந்தச் சிவப்பு ரோஜாக்களை
வெளிறச் செய்தமைக்காக.

Thursday, December 13, 2007

உனக்கும் எனக்குமிடையே ஒரு மூன்றாவது மனிதனைப்போல

காலம்: இறுதித் தீர்ப்பு நாள்
இடம்:
நியாய சபை
நேரம்: விஜயன் வேட்டையாடப் போவதற்கு சற்று முன்பு



நாம் அங்கு காத்திருந்தோம் அந்நியர்களென,
தனிமையின் சுவரை எமக்கு நேரே வளர்த்திவிட்டு..
மௌனம் எமக்கிடையே
ஒரு மூன்றாவது மனிதனைப்போல அமர்ந்திருந்தது
எத்தனை குழந்தைகள் உன்னைச் சுற்றிலும், குவேனி*
தோளையும் முலைகளையும் பற்றித் தொங்கியபடி
காலை சுற்றிக்கொண்டு நகர விடாமல்
நான் கத்தியழ விரும்பினேன்
'நீ எனதும் அம்மாதானில்லையா?'
ஒரு பிடி நேசம்
சில கொத்து புன்னகை
சிறு துளி இடம் உன் மடியில்
வேறென்ன கேட்டேன் உன்னிடம்..
கண்ணாடிச் சில்லு விழுந்து தெறிப்பதற்கு முன்பு
ஓராயிரம் பிசுங்கான்களின் நிசப்தத்தை
புதைத்து வைத்திருக்குமாற் போல
'அழகாயிருந்தது என் தவறல்லவே' என்கிறாய்
இல்லாதுவிட்டிருந்தாலும் அவர்களிடமிருந்து தப்பித்திருக்க மாட்டாய்
உன்னிடத்திலோர் அரக்கி இருந்திருந்தாலும்..
ஆனால், இன்று அவர்களுன்னை அரக்கியென்கிறார்கள்
கைப்பற்றிக் கொண்டதை தங்களதாம்..
தீர்ப்பு வழங்கப்பட்டு உரலில் தலையிடிபட
சிதறும் சதைத்துணுக்குகளை தேங்காய்த் துருவலென
பொறுக்கியெடுத்து ஏப்பமிடுகின்றனர் உனது குழந்தைகள்
இது ஆறுதல் சொல்லிக்கொள்ளும் வேளையல்ல என்பது மட்டும் புரிகிறது


*குவேனி - இலங்கை பூர்வீகக்குடியொன்றின் அரசி. விஜயன் அவளைத் திருமணமுடித்து நாட்டைக் கைப்பற்றுகிறான். பின்னர் அவளைக் கைவிட்டு நாயக்க வம்ச அரசியொருத்தியை மறுபடி திருமணம் செய்கிறான். குழந்தைகளைக் காப்பாற்றிக்கொள்ள தனது குடியினரிடம் திரும்பிச் செல்பவள் காட்டிக்கொடுத்த துரோகியெனக் கருதப்பட்டு அவர்களால் கொல்லப்படுகிறாள்.

(for the country I love, and for a life that demands us much more than it deserves..)


தலைப்பு நன்றி : அருந்ததி ரோய் - 'The silence sat between grandniece and baby grandaunt like a third person' (pg.22), The God of Small Things

Friday, December 07, 2007

பிரதிகளை மீளப் பதிதல் - 3

See No Evil, Hear No Evil, Speak No Evil..!

Funny Boy
- Shyam Selvadurai

குழந்தைகள் தொலைந்து கொண்டிருக்கும்
நாட்டை
பூர்வீகமாய்க் கொண்டவர்க்கு
நேசித்தல் என்பதுகூட
நம்மை நாமே சிதைத்து
உருவழிப்பதுதான்...

(இளங்கோ - நாடற்றவனின் குறிப்புகள்)


1.

Right and wrong, fair and unfair had nothing to do with how things really were. I thought of Shehan and myself. What had happened between us in the garage was not wrong. For how could loving Shehan be bad? Yet if my parents or anybody else discovered this love, I would be in terrible trouble. I thought of how unfair this was and I was reminded of things I had seen happen to other people, like Jegan, or even Radha Aunty, who, in their own way, had experienced injustice. How was it that some people got to decide what was correct or not, just or unjust? It had to do with who was in charge; everything had to do with who held power and who didn't. If you were powerful like Black Tie or my father you got to decide what was right or wrong. If you were like Shehan or me you had no choice but to follow what they said. But did we always have to obey? Was it not possible for people like Shehan and me to be powerful too? I thought about this, but no answer presented itself to me.
(Selvadurai, Shyam - Funny Boy pg.274)


பேசுவதற்கும் சொல்வதற்கும் எதுவுமற்றுப் போன பொழுதொன்றில், அனுமானங்கள்.. போலிகள்.. வாதங்கள்.. வாய்ப்புக்கள்.. என நீண்டுகொண்டே போகும் பரீட்சைக் குறிப்புகளைத் தூக்கியெறிந்து கட்டிலில் கால் நீட்டியபடியமர்ந்து சுவாரசியமாய் எதையும் வாசிக்க ஆரம்பித்தாலும்.., இப்படித்தான் எங்காவதோர் புள்ளியில் வாசிப்பின் தொடர்ச்சி அறுபட்டுவிட, சாளரங்களுக்கப்பால் வெளிறலாய் விரிந்திருக்கும் வானத்தை வெறித்தபடி சிந்தனையில் ஆழ்ந்துவிட வேண்டியிருக்கிறது. வீட்டினருகில் நின்ற மாமரம் வெட்டப்பட்டதில் இப்போதெல்லாம் யன்னல் முழுவதையும் நிறைத்திருப்பது அந்த வெளிறிப்போன வானம் மட்டும்தான். அம்மாமரத்துக் கிளைகளினூடு ஓடித்திரிந்து கொண்டிருந்த அணில்குஞ்சு இப்போது எங்கே தஞ்சமடைந்திருக்கும்? மயில்நீலநிற செண்பகமொன்று வந்து குரலெழுப்பியபடியிருக்குமே, அது எங்கே போயிருந்திருக்கும்? காகங்கள், குயில்கள், புழு பூச்சிகள்.. எத்தனைக்கு உறைவிடமாயிருந்திருக்கும் அம்மரம்? இன்று அதன் இருப்பைப் பறைசாற்றிப்போக எஞ்சியிருப்பது, அது இருந்த இடத்தை இப்போது நிறைத்துக் கொண்டிருக்கும் வெறுமை.. வெறுமை மட்டுமே. எதிர்வீட்டுக்காரர்கள் மரத்தை ஏன் வெட்டினார்கள், எதற்கு வெட்டினார்களென்பது பற்றி நாம் கேள்விகேட்க முடியாது.. இஷ்டத்துக்கு வெட்டித்தள்ள அதென்ன உங்கள் தனிப்பட்ட சொத்தா என வாதிடவும் முடியாது.. வாழைப் பொத்திகளாய் மனிதவுடல்கள் அறுபட்டுவிழும் தேசமொன்றில் வாழ்ந்துகொண்டு மரத்தைப் பற்றிக் கேள்வியெழுப்ப எமக்கு எந்த அருகதையுமில்லை.. ஆமாம், எதற்குமொரு தகுதி/ அதிகாரம் வேண்டும்.

Funny Boy வாசித்துக்கொண்டிருந்தபோது, இந்தப் புள்ளியில்தான் என் வாசிப்பு அறுபட்டது.

கொழும்பின் உயர்மட்டத் தமிழ்க் குடும்பமொன்றில் பிறந்த அர்ஜூன் (அர்ஜி) எனும் சிறுவனின் பார்வையில் 70 மற்றும் 80 களில் கொழும்பின் அரசியல் மற்றும் சமூக நிலைமைகளை - அவற்றின் அபத்தங்களை - ஒருவித கிண்டல் தொனியுடன் விமர்சித்திருக்கிறார் ஷ்யாம் செல்வதுரை. Funny Boy என குறிப்பிடப்படும் அர்ஜி தனது Homosexuality யுடனும், இனங்களுக்கிடையே கடும் முறுகல் நிலை காணப்படும் சமூகத்தில் தனது இருப்பினை நிலைநாட்டவுமான போராட்டங்களை எவ்வாறு எதிர்கொள்கிறானென நீள்கிறது கதை.

பால்/ பாலினம் ஆகிய கருத்தாக்கங்கள் தொடர்பான போதிய விளக்கம் கதையுடன் தொடர்வதற்கு அவசியமாகின்றது. பால் வேறுபாடானது உயிரியல் ரீதியாகவும், பாலின வேறுபாடானது சமூக ரீதியாகவும் பெண்களையும் ஆண்களையும் வேறுபடுத்துவது இங்கு கவனிக்கத்தக்கது. பால் வேறுபாடெனப்படுவது உயிரியல் ரீதியாக, இனப்பெருக்க உறுப்புக்களின் வேறுபாடுகளினடிப்படையில், பிறப்பின் மூலம் தீர்மானிக்கப்படுவது. இங்கு உறுப்புக்களே பெண்/ ஆண் ஆகிய அடையாளங்களைத் தோற்றுவிப்பனவாக இருப்பதுடன், இவை வெறும் உடல்சார் வேறுபாடுகளாக மட்டுமே காணப்படுகின்றனவே தவிர, இக்கருத்தாக்கத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமிருப்பதில்லை. ஆனால், நடைமுறை வாழ்வில் ஆண் உயர்ந்தவனாகவும், பெண் அவனை விடத் தாழ்ந்தவளாகவும் காணப்படுவதான மனநிலையைக் கட்டியெழுப்புவதில் பாலினம் என்ற கருத்தாக்கத்தின் பங்கு அளப்பரியது. இது சமூகத்தில் பெண்/ ஆணின் நிலையினைத் தீர்மானிப்பதாக அமைவது. பெண்பிள்ளை காலை அகட்டி உட்காரக் கூடாது, சத்தம் போட்டுச் சிரிக்கக் கூடாது.. ஆண்பிள்ளை அழக்கூடாது.. என்பவற்றில் தொடங்கி, பெண் குழந்தைக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஆண் குழந்தைக்கு நீலநிறத்திலும் உடுப்பு தைப்பது முதல்.. சமைத்தல், கூட்டுதல், துவைத்தல், பிள்ளைகளைப் பராமரித்தலாகிய இன்னபிற வேலைகள் பெண்களுக்கானவை.. வேலைக்குப் போதல், சம்பாதித்தல், காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டு பத்திரிகை வாசித்தல் போன்ற வேலைகள் ஆண்களுக்கானவையென்பது வரையான அனைத்தும் பாலின வேறுபாட்டுக்குள் உள்ளடங்குபவை. இதனடிப்படையில் தான், பெண்ணியமென்பது 'பெண்' பற்றியதோ, 'பெண்'ணிடம் பேசுவதோ, 'பெண்'களால் பேசப்படுவதோ அல்ல. பெண்ணியம் பாலின அடிப்படையில் தொழிற்படும் ஒட்டுமொத்தச் சமூகம் பற்றியதென அ.மங்கை எடுத்துக்கூறுகிறார். அந்தவகையில் ஷ்யாம் செல்வதுரையின் அர்ஜி, இந்தப் பாலின அடிப்படையில் செயற்படும் ஒட்டுமொத்தச் சமூகத்தினை கேள்விக்குள்ளாக்குமொரு கதாபாத்திரமாக விளங்குகிறான். ஆழ்ந்து சிந்திக்கையில், எமது சமூகத்தின் உயிர்நாடியான இந்தப் பாலின ஒடுக்குமுறை சார் மனப்பான்மையை வேரோடு களைவதற்கான மாற்று வழியாக (An alternative way) Homosexuality யினை முன்வைக்கலாமெனவும் எண்ணத் தோன்றுகிறது.

சிறுவயதிலேயே அர்ஜிக்கு பெண்களின் விளையாட்டுக்களில் ஈடுபாடு அதிகம். அண்ணன்மார் விளையாடும் கிரிக்கட்டை விடவும், பெண்பிள்ளைகளின் விளையாட்டுக்கள் அதிகளவு புதிதாக்கும் ஆற்றலுடையதாகக் (creative) காணப்படுவது அவனை ஈர்க்கிறது. அவர்கள் விளையாடும் bride - bride (மணப்பெண்) விளையாட்டில் கற்பனைக்கு இடம் அதிகம். ஒரு திருமண வீடு எப்படியிருக்குமென கற்பனை செய்து, அதேபோல அலங்கரிப்பதும், வெளிக்கிடுவதும், அதை அப்படியே - ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக - செய்துபார்ப்பதும் என்றும் சுவாரசியமானவை. தேங்காய் சிரட்டைகளையும், காலியான தகர டின்களையும் கொண்டு திருமண கேக் ஒன்றை அலங்கரிக்கும் விதத்தை அர்ஜி கண்டுபிடிப்பதோடு, தனது கண்டுபிடிப்பு குறித்து பெருமையும் அடைகிறான். அண்ணன்மாரின் கிரிக்கட் அவனைப் பொறுத்தவரை வெறும் வறண்டுபோன விளையாட்டே, ஒரே பந்தை மாறி மாறி அடிப்பதும், பிடிப்பதுமென.. அதில் கற்பனைக்கு இடமில்லை.. சுவாரசியமுமில்லை.

சிறுவயதில் நாங்கள் விளையாடிய விளையாட்டுக்கள் இவ்விடத்தில் நினைவுக்கு வருகின்றன. அக்கா, நான், இன்னும் எங்கள் ஒழுங்கையில் வசித்த இரண்டு மூன்று தோழிகள் சேர்ந்து விளையாடுவதில் எனக்கு அதிகம் பிடித்தது செத்தவீடு கொண்டாட்டம். இப்போது யோசிக்கத்தான் அந்த வயதிலேயே நாங்கள் எவ்வளவு குரூரமானவர்களாக இருந்திருக்கிறோமென்பது மனதில் உறைக்கிறது. மண்ணைக் கிண்டி எறும்பு, புழு, பூச்சியெல்லாம் பிடித்து அவற்றைக் கொன்று தீப்பெட்டிகளில் அடைப்போம். இது அக்காவினதும், வயதில் மூத்த மற்ற தோழிகளினதும் வேலை. பிறகு, எல்லாருமாகச் சேர்ந்து தீப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஒழுங்கை முழுக்க ஊர்வலம் போய் ஓரிடத்தில் அவற்றைப் புதைத்து, மலர் தூவி, ஈர்க்குக் குச்சியால் சிலுவை செய்து வைத்து, சுற்றிவர நின்று அழுவோம். யார் கூடவாய் அழுவதென்று எங்களுக்குள் போட்டியே நடக்கும். இப்போது நினைக்க, இந்த நாட்டில் வாழ்வதற்குத் தகுந்த விதத்தில்தான் சிறுவயதிலேயே பயிற்சி (training) எடுத்திருக்கிறோமென்பது புரிகிறது. அதுதான் இன்றும், மரணங் குறித்த எச்சலனமுமில்லாமல் நீரோ மன்னனாய் பிடில் வாசித்துக் கொண்டிருக்க முடிகிறது போலும்.

மணப்பெண் விளையாட்டில் அர்ஜி தான் மணப்பெண். சாரி உடுத்துவதும், பெண்ணாய் வெளிக்கிடுவதும் அவனுக்கு மிகவும் பிடித்தமானவை. அவர்களது விளையாட்டில் மணமகனுக்குத்தான் கடைசி இடம். யாரும் அந்தப் பாத்திரத்தை வகிக்க விரும்புவதில்லை.. அவரைச் சீண்டுவதுமில்லை. மணமகன் இல்லாமலேயே இவ்விளையாட்டைக் கொண்டுநடத்த அர்ஜி விரும்பினாலும், திருமணத்தின்போது மிகவும் இன்றியமையாத ஒருவராக மணமகன் விளங்குவதால், அது தவிர்க்க முடியாததாவது, குழந்தைகளின் உலகில் வளர்ந்த ஆண்களின் இடத்தை தெளிவாகப் புலப்படுத்துவதாக அமைகிறது. அம்மாவின் நகைகளோடு விளையாடுவதும், மாமியின் மேக்கப் சாதனங்களை பரீட்சித்துப் பார்ப்பதுமென அர்ஜியின் 'பெண்தனங்கள்' (ஏனைய உறவினர்கள் குறிப்பிடுவதுபோல) குடும்பத்தினரின் கடும் விசனத்துக்கு அவனை ஆளாக்குகின்றன. இதன் விளைவாக பெண்களுடன் விளையாடக் கூடாதெனவும், அண்ணன்மாருடன் விளையாடும்படியும் அவன் நிர்ப்பந்திக்கப்படுகிறான்.


மாற்றுப் பார்வையில்.., இவ்விடத்தே வெறுப்புக்காளாவதும், கேலிக்குள்ளாவதும் அர்ஜியெனும் சிறுவனோ அல்லது அவனது ஆளுமையோ அன்றி, பெண் தன்மையே எனலாம். பெண்களுக்கான தன்மையைக் கொண்டிருப்பதென்பது - அது பெண்ணாயிருக்கும் பட்சத்திலேயே Girly Girlish என கிண்டலுக்காளாகும் நிலையில் - ஒரு ஆணை சமூகத்தில் (இன்றளவும்) மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு ஆளாக்கிவிடுகிறது. பொண்ணையன், ponds.. இன்னபிற பட்டப்பெயர்கள் காத்துக்கொண்டிருக்க, இந்தப் பெண் தன்மையினை நிர்ணயித்தது யார்/ எதுவென்ற கேள்வி - அத்தன்மை சமயங்களில் ஆண்களுக்கானதாகவும் இருக்கையில் - எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அர்ஜியின் மற்றுமொரு சகோதரி மீனா ஆண்பிள்ளைகளுடன் கிரிக்கட் விளையாடுவதைக் கண்டுகொள்ளாத சமூகம் அர்ஜியை மட்டும் பெண்பிள்ளைகளுடன் விளையாடுவதைக் கண்டித்தது ஏன்? ஒரு பெண், ஆணுக்குரிய தன்மைகளைக் கொண்டிருப்பது (அதாவது சமூகம் நிர்ணயித்த வீரம், கம்பீரம், etc. etc.) பொதுவாக பெருமைக்குரியதாகவே - பாரதியாரால் கூட - கருதப்பட்டிருக்க, ஒரு ஆண், பெண்ணுக்குரிய தன்மைகளைக் கொண்டிருப்பது கேலிக்குள்ளாக்கப்படும் பட்சத்தில் இங்கு உண்மையில் கீழ்த்தரமாக மதிக்கப்படுவது அந்த ஆணோ, வேறெதுவுமோ அல்ல. மாறாக, பெண்களுக்குரியதென கூறப்பட்டிருக்கும் பண்புகளே. 'பெண்'ணாக இருத்தலென்பது கேவலம்.. ஆணாக இருத்தல் பெருமை.. என்றவகையில் முடிவு பெறப்படுமானால், இந்த பெண்/ ஆண்தனங்கள் இருபாலாருக்குமிடையே விரவிக்காணப்படும் பட்சத்தில் இன்னவின்னது, இன்னாருக்கானதென இவற்றை வகைப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயமெனவும் நினைக்கத் தோன்றுகிறது.

அன்றாட உரையாடலில் இடம்பெறும், 'அவளொரு ஆம்பிளை மாதிரி..' என்பது பாராட்டு/ ஒரு compliment ஆகவும், 'அவனா.. அவனொரு பொம்பிளை..' என்பது அதற்கெதிரான நக்கல் தொனியைக் கொண்டிருப்பதும் ஏனென்ற கேள்வி மனதைக் குடைந்து கொண்டேயிருக்கிறது. சராசரி மனிதர்களை விடுத்துப் பார்த்தாலும், ஆனானப்பட்ட அறிவுஜீவிகளாக, பெண்விடுதலையில் அக்கறை கொண்டவர்களாகத் தங்களை இனங்காட்டிக்கொள்ளும் பலரின் மத்தியிலும் இவ்வார்த்தைப் பிரயோகங்கள் சர்வசாதாரணமாகவிருக்க (உ+ம்:- ஆம்பிளைகள் மாதிரி ஸ்மார்ட்டாயிருக்கிறாள்), மனிதர்கள் எத்துணை சாமர்த்தியமாக தங்களது குரூர முகங்களையும், அறிவீனங்களையும் அறிவெனும் திரைக்குள் மறைத்துக்கொண்டு விடுகிறார்களென யோசிக்கையில், அறிவையே மறுதலிக்க வேண்டியிருக்கிறது. அவனொரு பொம்பிளையென எவரையாவது சுட்டிக்காட்டி எவரும் கூறுவார்களாயின், நரம்புகளைப் புடைத்துக்கொண்டு சீறியெழும் எனது கோபம் நியாயமானதுதானென அர்ஜி உணர்த்தி விட்டிருக்கிறானென்றே கூறவேண்டும். (அந்தக் கோபம் குறித்த ஆணின் மீதான பரிவினால் எழுந்ததல்ல; மாறாக, பெண்ணாய் இருப்பதென்பது அவ்வளவு கேலிக்குரியதாய்ப் போனதாவென்ற விசனத்தோடு எழுந்ததென்பதையும் கவனிக்க).

இத்தகைய - சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட விதிகளினடிப்படையிலான - பிறழ்வுநிலைக் குணாம்சங்கள் மிக இயல்பானதும், அதிகாரத்தினை எதிர்க்கும் மாற்றுவெளியை நோக்கியதுமானதென Funny Boy எடுத்துக் காட்டுகின்றது. எமது இயல்பு அதுதானென்றால், அப்படியிருப்பதற்காக நாங்கள் வருந்தத் தேவையில்லை.., குற்றவுணர்ச்சிக்கும் ஆளாக வேண்டியதில்லையென அர்ஜிக்கு உணர்த்தும் நண்பனாக ஷெஹான் அறிமுகமாகிறான். ஷெஹானுக்கும் தனக்குமிடையிலான உறவு சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டதல்ல.. குடும்பத்தவர்களின் எதிர்ப்புக்குக் காரணமாகுமென்பது புரிந்தாலும், அவர்களைப்போல தன்னால் இருக்கமுடியாதென்ற தெளிவு அவனுக்கு ஏற்படுகிறது.

சரிகள் எதுவுமே எப்போதும் சரிகளாகவேயிருப்பதில்லை. அவற்றைப் பிழையாக்குவதற்கான சான்றுகள் கிடைக்கும் பட்சத்தில் அவை பிழையாகியே தீரும். சரி பிழைகளும், நியாய அநியாயங்களும் எப்போதும் அதிகார வர்க்கத்துக்கு சார்பானவையே. சரிகள் பிழைகளாவதும், பிழைகள் சரிகளாவதும் அதிகாரத்திலிருப்பவர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்கு நியாயம் மறுக்கப்பட்டது அர்ஜிக்கு நினைவு வருகிறது. அவனது மாமி ராதா, சிங்களவர் ஒருவரை நேசிக்கிறார். இருதரப்புப் பெற்றோரின் எதிர்ப்பும், நாட்டின் முறுகல் சூழ்நிலையும் இனங்களின் பெயரால் அவர்களைப் பிரிய நிர்ப்பந்திக்கின்றன. அடுத்து, அப்பாவிடம் வேலைபார்க்கும் அவரது பால்யகாலத்துத் தோழனின் மகனான ஜெகன். முன்னர், இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததைக் காரணம் சாட்டி கொழும்பில் கைதுசெய்யப்பட்டு பின்னர், எதுவும் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்படுகிறார். எனினும், வேலைத்தளத்தில் ஜெகனுக்குக் கீழே வேலை செய்பவர்கள் கூட (சிங்களவர்) அவரையோ, அவரது வார்த்தைகளையோ மதிக்கத் தயாரில்லை. அறைக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களைக் கிண்டுவது, தகாத வார்த்தைகளை சுவர்களிலும், கதவுகளிலும் எழுதிவைப்பதென 'தமிழ்ப் பயங்கரவாதி' (?!) ஒருவருக்குக் கீழே வேலை பார்ப்பதற்கான தமது மறுப்பை வெளிப்படுத்துகின்றனர். தனது வியாபாரம் முடங்கிவிடுமென பயந்த அப்பா ஜெகனை வேலையிலிருந்து நீக்கி, மத்திய கிழக்கிற்கு அனுப்பிவைக்கிறார். தமதேயான வழிகளில் இவர்கள் அதிகாரத்தினால் பாதிக்கப்படுகின்றனர். தமது வாழ்க்கை, தமது விருப்பத்தினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை இவர்களுக்கு மறுக்கப்படுகிறது.



2.




வேறெதனையும் விட ஷ்யாம் செல்வதுரையின் இப்பிரதி உணர்வுகளோடு மிக ஒன்றித்துப் போனமைக்கு மற்றுமொரு காரணம், கொழும்பு நகரைக் களமாகக் கொண்டு இக்கதை இயங்குவது தானென்பேன். பசுமையான பின்னணியுடனான அழகிய கிராமத்துக் கதைகள் நகரங்களில் வளர்ந்த எம்மைப் போன்றவர்களுக்கு கனவுலகப் பிரதிமைகளாக மட்டுமே தோற்றமளிப்பன. நகர வாழ்வினையும், அதன் இறுக்கங்களையும், சாதக பாதகங்களையும் எடுத்தாளும் கதைகள் தமிழில் எழுந்தது மிகக்குறைவு. ஆங்கிலத்தில் எழுதப்பட்டவையோ, பெரும்பாலும் மேலைத்தேய நகரங்களைச் சார்ந்தனவாக அமைந்திருப்பதால் - எமது நகரங்களுக்கும் அவர்களுக்குமிடையேயான - பாரிய பண்பாட்டுப் பொருளாதார வேறுபாடு அவற்றுடன் அதிகம் நெருங்க அனுமதிப்பதில்லை. ஆனால், நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் நகர வாழ்வின் அத்தனை அம்சங்களையும் இக்கதையில் காணும்போது - அர்ஜி நடந்த தெருக்களில் நானும் நடந்திருக்கிறேன்.. British Council, Cinnamon Gardens க்கு நானும் போயிருக்கிறேன்.. Chariot ல் அமர்ந்து Lamprais (special preparation of rice and curry that is baked in a banana leaf) சாப்பிட்டிருக்கிறேன் என - உணரும் பரவசம் எல்லையற்றது.

கதை நிகழ் காலத்தைய கொழும்பின் பதட்டமான சூழ்நிலை யதார்த்தபூர்வமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இன்று அதனை மறுபடியும் வாசிக்கையில், இன்றைக்கு இரண்டு அல்லது மூன்று தசாப்தகாலத்துக்கு முன்னரிருந்த கொழும்புக்கும்,
இப்போதைக்கிருக்கும் கொழும்புக்கும் பொருளாதார தகவல் தொழினுட்ப முன்னேற்றங்களுக்கப்பால், பெரிய வேறுபாடுகளெதுவுமில்லை. அன்றைய பதட்டமும் முறுகல்நிலையும் இன்றுவரையும் தொடர்ந்திருப்பதாகவே தோன்றுகிறது.

கொழும்பு நகரம் பல்லினக் கலாசாரங்களையும் ஒன்றிணைக்குமொரு தளம். நகரங்களுக்கேயுரிய எந்திர வாழ்க்கைக்கு இது மட்டும் விதிவிலக்கல்ல. குறிப்பிட்டளவுகாலம் இங்கு வசிக்கும் எவரும் சக மொழியுடன் ஓரளவாவது பரிச்சயம்கொள்ளும் சூழ்நிலையை அது வழங்கிவிடும். சக இனத்தவரைப்பற்றிய குறைந்தபட்சப் புரிதலுக்காவது இது உதவக்கூடும். ஆனால், யுத்தமும் அதன் தீவிரம் நாட்டின் கேந்திர ஸ்தானம் வரை நீட்சியடைந்தமையும் ஒருவித தடித்த திரையென இனங்களைச் சூழ நிரந்தரமாக கவிந்துகொண்டு விட்டதது.

50 களில் தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்த ஆர்ப்பாட்டங்களில் அர்ஜியின் அம்மாச்சியின் அப்பாவும் (great grand father) கொல்லப்படுகிறார். அந்தச் சம்பவம் அம்மாச்சியை சிங்களவர்களையே வெறுக்கும் தீவிர இனவாதியாக மாற்றுகிறது. வடக்கே விடுதலைப் போராட்டம் வெற்றிபெற்று தனித்தமிழீழம் சாத்தியமாகும் நாளில் அங்கு செல்லும் முதல் ஆளாக நானிருப்பேன் என்கிறார் அவர். தனிச்சிங்களச் சட்டத்தின் விளைவாக பிற்காலத்தில் வேலைவாய்ப்புப் பெறுவதைக் கருதி அர்ஜியை சிங்கள மொழிமூலத்தில் அவனது அப்பா படிக்க அனுமதிக்கும்போது, அவர் தமிழர்களுக்குத் துரோகம் செய்வதாகக் குற்றம்சாட்டவும் செய்கிறார் அம்மாச்சி. ராதா மாமியின் காதலும் அம்மாச்சியால் இவ்விதமே நிராகரிக்கப்படுகிறது. இதே காழ்ப்புணர்வு அவர்களைச் சுற்றியிருந்த சிங்களவர்கள் மத்தியிலும் காணப்பட்டபோதும், 83' கலவரத்தில் அர்ஜியின் வீடு காடையர்களால் தாக்கப்பட்டபோது அவர்களுக்குப் புகலிடம் தந்து பாதுகாப்பதும் சிங்கள நண்பர்களே.. மிக எளிதாக எதனையும் (இனங்களுக்கிடையிலான உறவை/ புரிதலைக்கூட) பொதுமைப்படுத்திவிட முடியாதென்பதற்கு இதுவொரு தக்க சான்று.

கலவரம் நீடித்திருந்த நாட்களின் நிகழ்வுகள் நாட்குறிப்புப் பதிவுகளாக - நேரடி சாட்சியமாக இடம்பெற்றுள்ளன. வீடுகள் முற்றுமுழுதாக தாக்கியழிக்கப்பட்டு எரியூட்டப்பட்டமையும், தெருக்களில் கும்பல் கும்பலாக மக்கள் கொல்லப்பட்டுக் கிடந்தமையும் விவரிக்கப்பட்டிருக்கும் விதம் உணர்வுகளைஅதிரச் செய்வதாகவுள்ளது. கலவரத்தைத் தூண்டிவிட்டது அரசுதானென்பது தெருக்களில் தமிழர்களின் கடைகள், வீடுகள் மட்டும் சரியாகக் குறிபார்த்துத் தாக்கப்படுவதிலிருந்தும் (வாக்காளர் பதிவிலிருந்து தகவல் திரட்டியதாகக் கூறப்படுகிறது), மிக நீண்டநேரத்துக்கு அரசாங்கம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்காமல் இழுத்தடித்துக் கொண்டமையிலிருந்தும், இராணுவத்தினரும், பொலிஸாரும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்காமல் தெருவில் வேடிக்கை பார்த்தபடியிருந்தமையிலிருந்தும் தெளிவாகிறது. 78' ல் சிறிமாவின் அரசாங்கம் கவிழ்ந்து ஐதேக ஆட்சியைக் கைப்பற்றியபோது நிலைமை சீரடையுமென நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்த அர்ஜியின் அப்பா இனியும் இந்த நாட்டில் வாழ முடியாதென முடிவெடுத்து குடும்பத்துடன் கனடாவுக்குப் புலம்பெயர முடிவெடுக்கிறார். கலவரம் தொடங்குவதற்கு சிலகாலங்களுக்கு முன்னரேயே நாட்டைவிட்டு வெளியேறுவோமென அர்ஜியின் அம்மா அடிக்கடி வலியுறுத்தி வந்தபோதும், வெளிநாட்டில் போய் வெள்ளைக்காரனுக்கு சேவகம் செய்வதா என மறுத்திருந்த அப்பா, பின்னர் அம்மா சூழ்நிலையின் தீவிரத்தை ஆரம்பத்திலேயே முன்னுணர்ந்ததை வலியுடன் வியந்து கொள்கிறார்.

புலம்பெயர்கையிலும் அவர்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது. அப்பா பெரிய தொழிலதிபர், ஹோட்டலொன்றும் நடாத்தி வருபவர். ஆனால், தனது சொத்துக்களையெல்லாம் கைவிட்டு வெறுங்கையோடு நாட்டைவிட்டு வெளியேற நேர்கிறது. பணமாக மாற்றிக் கையில் கொண்டுசெல்லவும் அரசாங்கம் தடைவிதித்ததுடன், ஒருவர் குறிப்பிட்டளவு பணம் மட்டுமே கையில் கொண்டுசெல்லலாமெனவும் சட்டமியற்றியிருந்தது. அனைத்தையும் கடந்து, பயணிப்பதற்கு முதல்நாள் ஷெகானைச் சந்தித்துவிட்டு வரும்வழியில் எரிந்து சேதமாகிக் கிடந்த தனது வீட்டைப் பார்க்கச் செல்கிறான் அர்ஜி. பெரும்பகுதி தீயில் கருகிக்கிடக்க, எரியாதிருந்த அனைத்துமே களவாடப்பட்டு வீடு நிர்வாணமாய் நின்றுகொண்டிருந்தது. பிறந்ததிலிருந்து இத்தனைகாலம் வாழ்ந்த அவ்வீட்டின் நிலை அவனைக் கதறச் செய்கிறது.

How naked the house appeared without its door and windows, how hollow and barren with only scraps of paper and other debris in its rooms. I felt hot, angry tears begin to well up in me as I saw this final violation. Then for the first time, I began to cry for our house. I sat on the verandah steps and wept for the loss of my home, for the loss of everything that I held to be precious. I tried to muffle the sound of my weeping, but my voice cried out loudly as if it were the only weapon I had against those who had destroyed my life.
(pg.311)

ஷ்யாம் செல்வதுரை முன்வைக்கும் அரசியல், சாதாரண மக்களுள் ஒருவராக நின்று நிகழ்வுகளை விமர்சிப்பதாலேயே அதிக கவனிப்புக்குரியதாகிறது.


3.

Sometimes I wonder if it was all worth it in the end. To have made all those sacrifices. Life is a funny thing, you know. It goes on, whatever decisions you make. Whether you married the person you loved or not seems to become less important as time passes.
(pg.81)

சுவாரசியமான கதாபாத்திரமாக இடைநடுவே வருபவர் Aunty Doris - ராதா மாமி நடிக்கும் 'The Kind and I' நாடகத்தை நெறியாள்கை செய்யும் Burgher சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியை. தமிழரொருவரைத் திருமணம் முடித்து தற்போது கணவனையிழந்து வயதாகிவிட்ட நிலையில் இத்தகைய நாடக நெறியாள்கைகளுடன் தன்னை இணைத்துக்கொண்டுள்ள இவர் திருமணங்கள் குறித்து முன்வைக்கும் கருத்து குறிப்பிடத்தகுந்தது.

தமிழரொருவரை விரும்பித் திருமணம் முடித்ததால் Aunty Doris ன் அப்பா கடுங்கோபங்கொண்டு மகளுடனான தொடர்புகளை முறித்துக்கொள்ளுமாறு குடும்பத்தினரையும் நிர்ப்பந்திக்கிறார். சில காலங்களில் குடும்பத்தினர் அனைவரும் சொல்லிக்கொள்ளாமலேயே இங்கிலாந்துக்குச் சென்றுவிட, அம்மா இறந்ததைக்கூட நண்பரொருவரின் வாயிலாகவே Aunty Doris அறிந்துகொள்ள நேர்கிறது. அப்பா இறந்ததன் பிற்பாடு தனது சகோதரிகளுடன் அவரால் தொடர்புகொள்ள முடிந்தாலும், காலம் அவர்களை அந்நியர்களாக்கி விட்டமையால் முன்புபோல் நெருக்கமாகப் பழக முடியாத தனது இயலாமையையும் நொந்துகொள்கிறார். கணவரும் இறந்துவிட, வயதான காலத்தில் தனியே இருக்கும்போது, நானும் அவர்களுடன் இங்கிலாந்துக்குச் சென்றிருந்திருக்கலாமோ, இருந்தால் எனது வாழ்க்கை இன்று வேறுவிதமாக இருந்திருக்குமென்றெல்லாம் சிந்திக்கத் தோன்றுகிறது அவருக்கு. காதலுக்காக எத்தனையோ தியாகங்கள் செய்தும் இறுதியில் அவை பெறுமதியானவையா என்ற சந்தேகமும் எழுகிறது. காலப்போக்கில், நாங்கள் திருமணம் முடித்தது நாம் விரும்பியவரையா, இல்லையா என்பது முக்கியமற்றதாகவே போய்விடுமென்ற அவரது கருத்தும் கவனிக்கப்பட வேண்டியதே.

திருமணம் பற்றியதை விடுத்துப் பார்த்தால், இக்கதாபாத்திரத்தினூடாக மிகக் கூர்மையான அரசியல் விமர்சனம் முன்வைக்கப்பட்டிருப்பதாகப் படுகிறது.


4.

இலங்கை பல்கலைக்கழகங்களில் ஆங்கில இலக்கிய பாடப்பரப்பில் Funny Boy ஒரு Text book ஆக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை - அதன் அரசியலைக் கருத்திற்கொண்டு நோக்கின் - அதிசயம்தான். அண்மைய இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு நடந்தது, அவர்கள் நடாத்தப்பட்ட விதம் அனைத்தையும் அறிந்துகொள்வதற்கான ஒரு புனைவியல் (முழுக்க முழுக்கப் புனைவல்லாத போதும்) சாட்சியமாக இதனைக் கொள்ளலாம்.

The araliya tree was bare of its flowers. They, too, must have been stolen. I was struck then by a bitter irony. These araliya flowers would probably be offered to some god as a pooja by the very people who had plucked them, in order to increase their chances of a better life in the next birth.
(pg.311)


குருடராய், செவிடராய், ஊமையாய் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தாலும் இதனை விடவும் அழகாக அதிகார மையங்களை, அதன் நியாய அநியாயங்களை, சமூகத்தின் முரண்நகைகளைக் கேள்விக்குட்படுத்த முடியுமா என்பது சந்தேகமாகத்தானிருக்கிறது.

Thursday, November 08, 2007

பிரதிகளை மீளப் பதிதல் - 2

Baudolino
by Umberto Eco


1.

வரலாறு நமக்குத் தேவைதான், ஆனால் அறிவின் தோட்டத்தில் சீரழிந்து, நோக்கமின்றித் திரியும் தறுதலைக்குத் தேவைப்படும் விதத்தில் அல்ல.
- நீட்ஷே (Nietzsche, Of The Use And Abuse Of History)


இந்த வரலாற்று மற்றும் மர்ம நாவல்கள் மீதான மோகம் அக்காவிடமிருந்து தொற்றிக் கொண்டதாயிருக்க வேண்டும். பெரிய பெரிய புத்தகங்களை வாசிக்கப் பழகியிராத வயதுகளில், விழிகளை உருட்டி உருட்டி அக்கா கதைசொல்லும்போது வாய் பிளந்தபடி நானுமொரு கதாபாத்திரமாய் அந்தக் கதைகளுக்குள் வாழ்ந்திருக்கிறேன். அவளொரு சிறந்த கதைசொல்லி. சம்பவங்களை விழிமுன் படமென விரியச் செய்வதிலும், வரைபடங்கள் வரைந்து சமயங்களில் நடித்தும் காட்டுவதிலும் அவளை மிஞ்ச யாருமில்லை. கதை கேட்கும் ஆர்வத்துக்காகவே புத்தகம் வாசித்து முடிக்கும்வரை காத்திருந்து, கதை சொல்லி முடியும்வரை நல்ல பிள்ளையாக சொன்னபடியெல்லாம் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன். அதெல்லாம் ஒரு காலம்.

ஒன்பதோ பத்து வயதில் வாசித்த பொன்னியின் செல்வனிலிருந்து வரலாறும் அதன் மர்மங்களும் மிகவும் ஈர்க்கத் தொடங்கின. ஆதித்த கரிகாலனின் கொலை குறித்து அக்காவுடனும், தோழிகளுடனும் மணிக்கணக்காய் விவாதித்துக் கொண்டிருந்ததாய் நினைவு. அதைத் தொடர்ந்து வாசிக்க நேர்ந்த வரலாற்று நாவல்களில் மனதில் இன்னும் நிலைத்திருப்பது Paul Doherty யின் The House of Death - மாவீரன் அலெக்ஸாண்டரினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு முற்றுகையைப் பற்றியது. மன்னர்களின் பலவீனங்களை, தகிடுதத்தங்களை அம்பலப்படுத்தும் ஒரு மர்ம வரலாற்று நாவல். மற்றும் சில படங்கள் - ராஜராஜசோழன் வகையறா தமிழ்ப்படங்களல்ல - First Knight, Brave Heart, Troy போன்ற ஹொலிவுட் வணிகப் படங்களும், The Grief of The Yellow River (2ம் உலகமகாயுத்தத்தின் போதான சீனாவைக் கதைக்களமாகக் கொண்டதோர் படம்), Les miserables, Anna and The King போன்ற கொஞ்சம் நடுத்தரப் படங்களும், Europa Europa, Sabiha Sumar ன் Silent Waters, Lumumba போன்ற குறிப்பிடத்தக்கனவும், இன்னும் பெயர் நினைவுக்கு வராத சிலவும் ஏதோவொரு வகையில் வரலாறும் மானுடமும் பற்றிய புரிதலுக்கு வழிவகுத்தன.

இவை அனைத்திலுமிருந்து வரலாறு குறித்த சில முடிவுகளுக்கு வர முடிந்தது:
- மானுட குல வரலாற்று அத்தியாயங்கள் பெரும்பாலும் கறைபடிந்தவை. அல்லது, கறைபடிந்தவை மட்டுமே அழியாக் காவியங்களாக வரலாற்றில் நீங்கா இடம்பிடிக்கின்றன.
ஒன்று மட்டும் புரியவில்லை. எல்லாமே அழிந்து கொண்டிருக்க அழிவு மட்டும் எப்படி அழியாது நிலைத்திருக்கிறது? வரலாற்றின் இந்தக் கறைபடிந்த அத்தியாயங்களிலிருந்து நாம் கற்றுக்கொண்டது என்ன? அவை எமக்கு எதைப் போதித்தன? ஆக்கத்தைவிட - மாபெரும் நகரங்களின், நாகரிகங்களின், கணக்கற்ற மானிடவுயிர்களின் - அழிவுதான் புகழ்ந்து போற்றப்படுகிறது; வீரமென்று மதிக்கப்படுகிறது. இந்த 'வீரம்' என்பதன் வரைவிலக்கணம் என்ன? 'அழிவு' என்பதா? அதில் பெருமைப்படுவதற்கும் போற்றப்படுவதற்கும் என்ன இருக்கிறது?

- வரலாறென்பது பாதி புனைவும், மீதி உருட்டுப் புரட்டுகளும் கலந்தது.
இந்தப் பொறுப்பு வரலாற்றாசிரியர்களைச் சார்ந்தது. வரலாறும், கடந்தகாலமும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவையென்கிறார் ஜோன்.எச்.அர்னோல்ட் (History: A Very Short Introduction). வரலாறு கடந்தகாலத்தை முழுமையாக வெளிப்படுத்தாது ஒரு பகுதியை மட்டுமே பிரதிபலிக்கும் அதேவேளை, கடந்தகாலமென்பது எண்ணற்ற ரகசியங்களின் புதைகுழியென வரலாற்றின் எல்லைகளைத் தாண்டியும் விசாலமான வெளியினை நோக்கி விரிந்திருப்பது. அதிகார வர்க்கத்தினரின் நலன்களைச் சார்ந்தவையும், அவற்றுடன் முரண்படாதவையும் மட்டுமே பெரும்பாலும் வரலாற்றில் தொகுக்கப்படுகின்றன. எங்கிருந்தாவது ஒன்றிரண்டு ஈனஸ்வரத்தில் ஒலிக்கும் ஒடுக்கப்பட்ட குரல்களைக் கணக்கிலெடுக்காது பார்த்தால், இன்று எம்மால் வரலாறெனப்படுவது ஒருவகையில் அதிகார வர்க்கத்தினரின் வரலாறு மட்டுமேயெனலாம். அதிலும் திணிக்கப்படுவதும், திரிக்கப்படுவதும் அநேகம். இலங்கையின் வரலாறு இதற்குத் தக்க சான்று.

உம்பர்த்தோ ஈகோவின் Baudolino வினை இவ்வாறு வரலாற்றின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தும் அதே 'வரலாற்று' நாவலாகக் கொள்ளலாம். இக்கதையினூடாக ஆசிரியர் மத்தியகாலத்து வரலாறென நாம் அறிந்ததை/ நம்பிக் கொண்டிருப்பதைக் கட்டுடைக்கிறார்.


2.


"It's not the truth, but in a great history little truths can be altered so that the greater truth emerges. You must tell the true story of the empire of the Romans, not a little adventure that was born in a far-off swamp, in barbarian lands, among barbarian peoples..."

"It was a beautiful story. Too bad no one will find out about it."

"You surely don't belive you're the only writer of stories in this world. Sooner or later, someone - a greater liar than Baudolino - will tell it."
(pg.521)


பிரதியின் சாராம்சத்தை விளங்கிக்கொள்ள எப்போதும் இறுதிப் பக்கத்திலிருந்து தொடங்க வேண்டியிருக்கிறது, இதுவே இந்நாவலை இதுவரை வாசித்திராதவர்களின் சுவாரசியத்தை போக்கி விடக்கூடுமென்றாலும்..

1204ம் ஆண்டின் ஏப்ரல் மாதம். பட்டு மற்றும் வாசனைத் திரவியங்களின் பாதையில் (Silk and Spice Route) கேந்திர நிலையமான கொன்ஸ்தாந்து நோபிள் நகரம் 4வது சிலுவைப்போரை முன்னின்று நடத்தும் தளபதிகளால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கீழை ரோமப் பேரரசின் (Byzantine Empire) முக்கிய வரலாற்றாசிரியரொருவரை (Niketas) போர்வீரர்களிடமிருந்து காப்பாற்றும் Baudolino தனது சுய வரலாற்றினை அவரிடம் சொல்லத் தொடங்குகிறான்.

இத்தாலியின் பின்தங்கிய கிராமமொன்றில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த Baudolino வுக்கு இரண்டு அற்புதமான வரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன: ஒன்று, எந்த மொழியினையும் இலகுவில் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல், மற்றையது பொய் சொல்லும் திறமை. சிறு வயதிலேயே இவனது துடிதுடிப்பையும், ஆற்றலையும் கண்டு வியந்து பேரரசர் Frederick Barbarossa அவனைத் தனது வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டு பாரிஸுக்கு அனுப்பி கல்விகற்கச் செய்கிறார்.

இடைநடுவே தனது வளர்ப்புத் தந்தையின் துணைவியாரின் மீது Baudolino காதல் கொள்வதும், சிலுவைப் போர்களும், தனது பிறந்த கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களால் பேரரசருக்கு எதிராகக் கட்டியெழுப்பப்பட்ட நகரமொன்றை அழிக்கவென முற்றுகையிடும் அரசரிடமிருந்து அதனை தனது அசாத்தியத் திறமையால் காப்பாற்றுவதும், அரசரின் பெரு விருப்புக்குரியவனாக விளங்குவதால் வரலாற்றையே புரட்டிப்போடும் வல்லமையை நண்பர்களுடனிணைந்து பரீட்சித்துப் பார்ப்பதுமென நகர்கிறது கதை. இவையனைத்துக்குமிடையில் அரசர் ஜெருசலேம் மீதான படையெடுப்பின்போது வழியில் தற்செயல் விபத்தொன்றில் இறந்துவிட, Baudolino மன்னருக்களித்த வாக்குறுதியின் பேரில் தனது நண்பர்களுடன் Prester John எனும் மதகுருவால் ஆளப்படும் கனவுத் தேசமொன்றைத் தேடி (இந்தியா) கீழை நாடுகளை நோக்கிப் பயணிக்கிறான்.

உயர்ந்த அறிவும், ஞானமும் கொண்ட பெண்கள் மக்களது மத நம்பிக்கையைக் கெடுத்து விடுவார்களென்ற பயத்தில் சூனியக்காரிகளென முத்திரை குத்தப்பட்டு அழிக்கப்பட்டமையும் நாவலில் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு அழிக்கப்பட்ட Hipatia எனும் பெண்ணொருவரின் சிஷ்யைகள் கீழைத்தேசத்துக்கு தப்பியோடி, தமது குருவின் வழிநின்று பெண்களால் மட்டுமேயான சமூகமொன்றைக் கட்டமைத்து வாழ்ந்து வருவதும் ஒரு குறிப்பாக இடம்பெறுகிறது. இனப்பெருக்கத்துக்கு அவர்கள் வேறேதோ creatures ஐ நாடுவதால் தனி மனிதப் பிறவிகளாயல்லாமல், மனிதவுருவமும் இடுப்புக்குக் கீழே ஆட்டினையொத்த உருவத்துடனும் காணப்படுகின்றனர். Prester John ன் தேசத்தைத் தேடிப்போகும் நண்பர்கள் தலைகளற்ற, ஒற்றைக் கால்களுடனான, முழந்தாள் வரை தொங்கும் காதுகளையுடைய மனிதவுருவங்களைக் காண்கின்றனர். அம்மனிதர்கள் வெவ்வேறு நம்பிக்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்களாக - சிலர் இயேசு மனிதவுயிராக அவதரித்தாரென்பதை நம்புபவர்களாகவும், சிலர் அதை மறுப்பவர்களாகவும், சிலர் தூய ஆவி வடிவத்தினை மட்டுமே நம்புபவர்களாகவும் - காணப்படுகின்றனர். இந்த மனிதர்கள் மேற்குலகு குறித்த அற்புதக் கனவுகளுடனும், அளப்பரிய ஆர்வத்துடனுமிருப்பதைக் காணும் நண்பர்கள் கீழைத்தேசம் குறித்து தாம் கொண்டிருந்த கனவுகளையும் அதன் இயல்பு நிலையினையும் நினைத்து ஏமாற்றத்துக்குள்ளாகின்றனர்.

பயணம் வெற்றியென்றும், தோல்வியென்றும் கூறமுடியாத நிலையில் முடிந்துவிட, பன்னிரண்டு நண்பர்களில் ஆறுபேரை இழந்து மீதி ஆறுபேர் மட்டுமே ஊர் திரும்ப முடிகிறது. சில சச்சரவுகளால் நண்பர்கள் பிரிய நேர்ந்துவிட்டாலும், Niketas இடம் கதைகூறி முடிந்ததும், தனது சில வாக்குறுதிகளைக் காப்பாற்றும் பொருட்டு தனியொருவனாக Baudolino மீண்டும் கீழை நாடுகளுக்குப் பயணமாகிறான்.

இங்கு Baudolino வின் உள்ளார்ந்த சிக்கல்களையும் குறிப்பிட்டாக வேண்டும். மிகவும் நேசித்த தன் வளர்ப்புத் தந்தையின் மரணத்துக்கு ஒருவகையில் தான் தான் காரணமென்ற உண்மை அவனைப் படுமோசமாக உறுத்தியமையே தந்தைக்காக, மறுபடியும் அந்தக் கனவு தேசத்தினை நாடிப் போவதற்கு அவனைத் தூண்டியதெனலாம். தன்னைப் பெற்றெடுத்த தாய்க்கும், தந்தைக்கும் ஒரு உண்மையான மகனாக அவனால் இருக்க முடியாமற் போனமை, தாய் இறக்கும் தறுவாயில் கூட அவளருகே நிற்க முடியாமற் போனமை தனது கடமையிலிருந்து தவறிவிட்ட குற்றவுணர்ச்சிக்கு அவனை ஆளாக்குகிறது. மறுபுறம் அவனது பிரியத்துக்குரிய பெண்கள் மூவர்: முதலாவது பெண், அவனது வளர்ப்புத் தந்தையின் துணைவி. பதின்மங்களில் ஆரம்பித்த அவள் மீதான மோகம் பின்னர் தந்தைக்கு துரோகம் செய்கிறோமோவென கவலைப்பட வைத்ததில் நீர்த்துப் போனது. அடுத்தவள், அவனது மனைவி. அவனை விட மிகவும் இளையவள். கர்ப்பமுற்றிருக்கும் போது ஒரு விபத்தில் உயிர்துறக்கிறாள். தன்னை முழுமையாக நேசித்த ஒரு பெண்ணுக்கு நல்ல துணைவனாகத் தானிருக்கவில்லையே என்பது இறுதிவரை அவனை வாட்டுகிறது. மூன்றாமவள், கீழைத்தேசத்தில் அவன் கண்ட Hipatia சமூகத்தைச் சேர்ந்தவொரு பெண். அவன் மறுபடியும் கீழைநாடுகளுக்கு பயணிப்பதற்கு அவளும் காரணமாகிறாள்.

இவ்வாறு, அவன் கூறிய கதையில் எது உண்மை எது பொய்யென என குழப்பமடையும் Niketas அவனது வரலாற்றையும் கதையாக எழுத விரும்பி நண்பருடன் உரையாடும் பகுதியே மேற்குறிப்பிட்டது.


3.

மத்தியகாலத்தில் கத்தோலிக்கத் திருச்சபைக்கும், அரசர்களுக்குமிடையே நிலவிய அதிகாரம் சார் போட்டியினை கதையோட்டத்தின் வழி அறிந்து கொள்ளமுடிகிறது. அரசு பற்றிய கோட்பாடுகள் மாறுதலடையத் தொடங்கிய அக்காலகட்டத்தில் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை முன்வைத்து அரசர்களும் திருச்சபையும் முரண்படத் தொடங்கினர். அரச அதிகாரமானது இறைவனிடமிருந்து மன்னனுக்கு நேரடியாக வழங்கப்படுகிறதென மன்னர்கள் எடுத்துக்கூற, அதிகாரம் இறைவனிடமிருந்து திருச்சபைக்கும் திருச்சபையின் வழியே மன்னர்களுக்கும் கடத்தப்படுவதாக திருச்சபையினர் எதிர்க்கருத்தினை முவைக்கலாயினர். இங்கு மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு இறைவனுக்கும் தமக்குமிடையிலான நெருக்கத்தினை நிரூபிக்க வேண்டிய தேவையும், கடப்பாடும் மன்னர்களுக்கும், திருச்சபைக்கும் அவசியமாயிற்று. இதற்குச் சிறந்த உபகரணமாகப் பயன்பட்டவை திருச்சின்னங்கள்/ வரலாற்றுச் சின்னங்கள் (Relics). புனிதர்களின் உடலின் பகுதிகளையும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும், இயேசுவுக்குச் சொந்தமானதென நம்பப்பட்ட பொருட்களையும் வைத்திருப்பது அதிகாரத்தைத் தக்க வைத்திருப்பதற்கும், மக்களது நம்பிக்கையைத் தம்பால் இழுப்பதற்கும் இவர்களுக்கு உதவியது (இலங்கை வரலாற்றில் புத்தரின் புனித தந்ததாதுவுக்கு நேர்ந்த அதே கதி). இதன் விளைவாக பல போலிப் பிரதியெடுப்புக்களும் உலாவத் தொடங்கியதுடன், உண்மையான நினைவுச் சின்னத்துக்கும் போலிச் சின்னங்களுக்குமிடையிலான வேறுபாட்டைக் கண்டறிய முடியாதளவு அவை பரவலாகவும் தொடங்கின.

கைப்பற்றப்பற்ற இத்தாலிய நகரமொன்றின் தேவாலயத்திலிருந்து, இயேசு பிறந்தவன்று அவரைச் சந்தித்த மூன்று அறிஞர்களின் பதப்படுத்தப்பட்ட உடல் Baudolino வுக்கு கிடைக்கப் பெறுகிறது. அதை மக்களுக்கு காட்சிப்படுத்தவெனக் கிளம்பும்போது அரசரின் தலைமை மதகுரு தடுத்து, இவ்வுடல்களைப் போர்த்தியிருக்கும் உடைகள் சற்று தராதரம் குறைந்தவையாகக் காணப்படுகின்றனவெனக் கூறியதையடுத்து கீழ்த்திசையிலிருந்து வந்த அந்த அறிஞர்களுக்கு இத்தாலிய தலைமைக் குருமார் (Archbishops) அணியும் ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன. இறுதியில் அந்த 'அறிஞர்கள்' கீழை நாடுகளிலிருந்து வந்த கத்தோலிக்க மதகுருக்களாகிப் போகின்றனர்.

இதற்கிடையில் போப்பாண்டவருக்கும் Frederick Barbarossa வுக்குமிடையே கடும் போட்டி உருவாகிறது (இந்தவிடத்தில் கதை சற்றுத் தெளிவாகப் புரியவில்லை. Anti-Pope என இன்னுமொருவர் குறிப்பிடப்படுகிறார். இவரைத் தமது ஏகாதிபத்திய நலன்களுக்கென அரசரது தலைமை மதகுருவே இரகசியமாக நியமித்ததாகவும் கூறப்படுகிறது). போப்பாண்டவரையும் விட மன்னரை அதிகாரம் மிகுந்தவராக எடுத்துக்காட்டும் பொறுப்பு Baudolino விடம் ஒப்படைக்கப்படுகிறது. Baudolino வின் ஆரம்பகால குரு Otto தான் இறக்கும் தறுவாயில், Prester John இன் சாம்ராஜ்யத்தை Frederick கண்டுபிடித்து அந்த மன்னருடன் தொடர்புகொள்வதன் மூலமே அவர் எதிர்பார்க்கும் உயரிய நிலையை அடைய முடியுமெனவும், அதற்கு உதவும்படியும் Baudolino விடம் கூறுகிறார். அப்படியொரு சாம்ராஜ்யம், பொன்னும் மணிகளும் தவழும், பாலாறும் தேனாறும் பெருக்கெடுத்து ஓடும் வளம் பொருந்திய கனவுத் தேசமொன்று மிகத் தொலைவில் கீழைநாடுகளில் காணப்படுகின்றதென்ற நம்பிக்கை, அது இறைவனின் நேரடி வரம் பெற்ற கத்தோலிக்க மதகுரு/ அரசரொருவராலேயே ஆளப்படுகிறதென்ற எண்ணம் மக்களிடையே ஆழமாக வேரூன்றியிருந்தது.

இதை மனதிற்கொண்ட Baudolino தனது நண்பர்களுடனிணைந்து Prester John, Frederick க்கு அனுப்புவதாக ஒரு கடிதமொன்றைத் தயாரிக்கிறான். இக்கடிதம் மன்னருக்கு பெரும் புகழையும், மதிப்பையும் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, ஏனைய அரசர்கள் மத்தியிலும் பெற்றுத்தரக்கூடும். போப்பாண்டவரும் கூட தவிர்க்கவே முடியாமல் மன்னரை மதிக்க வேண்டி நேரிடும். ஆனால், அக்கடிதம் Baudolino வின் கவனயீனத்தினால் பைசாந்திய (Byzantine) உளவாளியொருவரின் கையில் அகப்படுகிறது. அதை உண்மையான கடிதமென அவ்வுளவாளி நம்பியதன் விளைவு, Baudolino வின் கற்பனைத் திறமையில் உருவான அக்கடிதத்தை Frederick பகிரங்கப்படுத்துவதற்கு முன்பே, பைசாந்திய மன்னரிடமிருந்து Prester John தனக்கெழுதியதாக இதே கடிதம் அச்சு அசலாக Frederick க்கிடம் திரும்பி வருகிறது. அந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீள்வதற்குள், போப்பாண்டவரும் Prester John தனக்கெழுதியதாக ஒரு கடிதத்தைக் காண்பித்து, அதற்குத் தானனுப்பிய பதிலையும் காட்சிப்படுத்துகிறார். அத்தகைய சாம்ராஜ்யமொன்றின் இருப்பே சந்தேகத்திற்காளாகியிருந்த நிலையில், இக்கடிதப் பரிமாற்றம் நிகழ்வது Baudolino வுக்கு பெரும் வேடிக்கையாகத் தோன்றுகிறது.

கடிதமனுப்பும் முயற்சியும் தோல்வியடைந்த நிலையில் மன்னரின் புகழை நிலைநிறுத்தும் பொருட்டு வழி தேடியலையும் நண்பர்களின் கவனத்தையீர்க்கிறது, இறுதி இராப்போசனத்தன்று இயேசு மதுவருந்திய கிண்ணம். அது பாலஸ்தீனிய அரசரொருவரின் வசமிருந்ததாகக் கேள்விப்பட்டு நண்பர்கள் அதைத் தேடத் தொடங்க, Baudolino தனது சொந்தத் தந்தையிடம் அவர் இறக்கும் தறுவாயில் அந்தக் கிண்ணத்தை விவரிக்கிறான். அது ஆயிரம் மணிகளின் ஒளிபொருந்திய பிரகாசத்துடனும், அரிய வாசனைத் திரவியங்களின் நறுமணத்துடனும் திகழுமென இவன் கதைசொல்ல இடைமறித்த அந்தக் கிழக்குடியானவத் தந்தை, ஒரு தச்சனின் மகன் மணிகள் பதிக்கப்பட்ட கிண்ணமொன்றில் மதுவருந்தியதாக எனக்குக் கதை சொல்கிறாயா எனத் திட்டத் தொடங்குகிறார். அந்தவுண்மை அப்போதுதான் உறைக்கிறது அவனுக்கும். தனது தந்தை இறந்த பிற்பாடு அவர் உபயோகித்திருந்த பழைய கிண்ணமொன்றைத் துடைத்தெடுத்து அதுதான் இயேசு பயன்படுத்திய Holy Grasal என்று மன்னர் தொடக்கம் அனைவரையும் நம்பவைத்து விடுகிறான். சிலர் அதிலிருந்து ஆயிரம் சூரியன்களின் ஒளி பரவுவதைக் கண்டதாகவும், அரிய வாசனைத் திரவியங்களின் நறுமணம் கமழ்வதாகவும் கூறித் திரியத் தொடங்கினர். இது அதனை உரியதாக்கியிருந்த மன்னரின் புகழை ஒரேயடியாக உயர்த்தி விடுவதுடன், அரும் பெரும் பொக்கிஷமாக தான் செல்லுமிடமெங்கும் அதனைக் காவிச்செல்லுமளவு மன்னரும் அதை மதிக்கிறார். பிற்காலங்களில் ஏராளம் மனக்கசப்புகளுக்கும், பிரச்சனைகளுக்கும் அக்குடியானவனின் வெறும் கிண்ணமே காரணியாவது வேறுவிடயம்.

Prester John ன் சாம்ராஜ்யத்தைக் கண்டடைய முடியாது திரும்பும் நண்பர்கள் ஊர் திரும்புவதற்கு முதல் பணமும் புகழும் சேர்க்க, திருச்சின்னங்களைத் தாமே உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். தொழுநோயாளியின் முகம் பதித்த துணி, இயேசுவின் திருமுகம் பதித்த திரைச்சீலையாகிறது; கொல்லைப்புறத்தில் கிடக்கும் சாதாரண துருவேறிய ஆணி இயேசுவைச் சிலுவையில் அறைந்த ஆணியாகிறது; இடுகாடொன்றில் தோண்டியெடுக்கப்பட்ட எலும்புத் துண்டு புனிதரொருவரின் உடலின் ஒரு பகுதியாகிறது. கத்தோலிக்க தேவாலயங்களும் உயர் குடும்பத்தினரும் இத்தகைய நினைவுச் சின்னங்களை வாங்குவதற்குப் பெரும் பணத்தினைச் செலவளிக்கத் தயாராகவிருந்த நிலையில் இது செல்வம் கொழிக்கும் வியாபாரமாகத் திகழ்கிறது.

இவையனைத்தும் வரலாற்றுச் சின்னங்களதும், சம்பவங்களதும் நம்பகத்தன்மை குறித்து சிந்தனையைத் தூண்டுவதாக அமைகின்ற நாவலின் சில பகுதிகள் மட்டுமே.


4.

மிக எளிய வார்த்தைகளுள் கூறுவதானால், 'ஒரு பொய்யை நாம் தீவிரமாக நம்பத் தொடங்கும் போது அது உண்மையாகி விடுகிறது' என்பதே இந்நாவலின் தத்துவசாரமென நினைக்கிறேன். கதையின் ஒவ்வொரு சிறுசிறு சம்பவங்களிலும், கதையோட்டத்திலுமே கூட அதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

"Believing a relic true, you catch its scent. We believe that we, only we, need God, but often God needs us. At that moment I believed it was necessary to help him. That cup must truly have existed, if Our Lord had used it. If it had been lost, it had been through the fault of some worthless man. I was restroing the Grasal to Christianity. God would not have contradicted me."
(pg.280)

திருவள்ளுவரும் இதைத்தான் சொல்லிப் போனார் போலும்.

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்

(அதி.292)

ஆனால், தத்துவங்கள் இடம்பார்த்து பிரயோகிக்கப்பட வேண்டியது அவசியம். இது வரலாற்றிலும் பிரயோகிக்கப்படும்போது அதன் விளைவுகள் என்னவாயிருக்கும்? ஆடம்பரமான கற்பனைகளையல்ல, திடமான உண்மைகளுக்கிடையேயுள்ள உறவுகளை முதன்மைப்படுத்துவதே வரலாற்றின் நோக்கமாயிருக்க வேண்டும். இது வரலாற்றாசிரியர்களின் கடமையும் கூட. அதிலிருந்து தவறுமிடத்து, வருங்காலத்தையே ஒரு தவறான பாதையில் வழிநடத்திச் செல்வதைத் தவிர அது சாதிக்கப் போவது வேறொன்றுமில்லை. வரலாறென்பது வெறும் கட்டுக்கதைகளின் மூட்டையெனக் கருதப்படுமிடத்து, வரலாற்று முதல்வாதம் போன்ற அணுகுமுறைகளின்மீதும் ஐயங்கொள்ள வேண்டியதாகிறது. விடயமொன்றன் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் வரலாற்றை அறிந்துகொள்வதன் மூலமே அவ்விடயங் குறித்த தெளிந்த ஆழமான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாமென்ற அரிஸ்டோட்டிலின் கருத்து காலப்போக்கில் காலாவதியாகிவிடுமென்றே தோன்றுகிறது.

Monday, October 22, 2007

புகையெனப் படரும் பிணங்களின் வாசம்


1.

எந்தச் சந்தர்ப்பத்திலும் நீ அதை எதிர்கொள்ள நேரலாம்
காலப்புதைகுழியின் செவ்விய மண் மூடுண்ட
சிதைந்த சில உடலங்களைப் பற்றிய கதையொன்று
ஊர் நெடுக உலாவித் திரிந்தது தன் தலை சிலுப்பி
இழுத்து விரித்து என் படுக்கையில்
போர்த்தப்பட்டிருந்த ஒரு சவம்
தொண்டைக்குள் நுழைந்துகொண்டு
வார்த்தைகளை வடிகட்டியது
உடல் தின்று செரித்த கவிதை
வடக்கில் பொய்த்த மழை பேய்த்தூறல் தூவ
நீளும் விரல்களைத் தட்டிவிட்டபடி
கடந்து கொண்டேயிருக்கிறாய்,
எழுதப்படாத வார்த்தைகளுள்
உறைந்து கிடக்கும் என் பிணங்களை


2.

விரகம் புலியென வெறிகொண்டெழும் இரவுகளில்
இறுக்கிய தொடைகளின் இடுக்கில்
குரல்வளை நெரித்துக் கொன்ற தாபம்
பற்றைகளின் ஆழங்களில் புதையுண்டு கிடக்கிறது
ஒரு நெடுங்கால மர்மத்தைப் போல
யோனியெனுமொரு பாம்பு நீட்டிய நாக்குடன்
கால்களினூடு கசிய
என் கனவுகளெங்கும் பிணவாசம்
புகையெனப் படர்ந்தது
இனி, அகாலம் விடியும் வேளையில்
என் படுக்கையின் மீது
நிணக்கூழ் வடியும் கண்களுடன்
பிணமொன்று தவழும்
மழலையென

எதிர்பாலினப் படிமங்கள்

1.

நீண்டு வளரும் தெருவில்
அனாதையாக யாருமற்று
அலையும் தருணங்களில் உய்த்துணர்கிறேன்
உனது உதடுகளில் சிலபொழுது
கமழ்ந்த என் அன்னையின்
மஞ்சள் குங்கும நெற்றியின் வாசனையை
*(பக்.25)

உனது அணைப்பில்
கஞ்சாவின் மணம்..

நேற்றைய இரவில்
துரும்பாய் உனை மதித்து
தூக்கியெறிந்த குறட்டைகளின் நீட்சியில்
நான் தூங்கி வழிந்தது பொறுக்காமல்
அரைகுறையாய் நீ புகைத்துப் புகைத்து
வீணாக்கிய சிகரட்டின்
சாம்பல் மணம்..

உனது குட்டி போட்ட பூனை நடையில்
அதிர்ந்ததிர்ந்து ஓய்ந்த
இரவின் மணம்..
நிலவின் மணம்

உனது கரங்கள்
பேஸ்போல் மட்டை
கணம் ஒரு விந்தையுடன் இறுக்கும்
வார்ப்பிரும்புச் சங்கிலி

கதறிக் கதறி நெக்குவிட்டுருகும்போதும்
ஒருபோதும் உய்த்துணர முடிந்ததில்லை..,
எந்தையின் மடியிலிருந்து கசியும்,
நான் விரும்பும்
காம்போதியின் குழைவுகளை..


2.

பச்சைக்கிளியின் வளர்ந்த இறகு
வழியில் கிடக்கிறது
இறகை எடுத்துப் பார்க்கும்போது
முழுப் பறவையும் தெரிகிறது
*(பக்.32)

தத்துவவியல் சொன்னது:
இறகை வைத்து பறவையை மதிப்பிடாதே
வாய்ப்புக்கள் அபத்தமாகிப் போகும்
பறவையைக் கொண்டு இறகை மதிப்பிடாமல் விடாதே
முடிவுகள் சாத்தியமற்றுப் போகும்

காற்றில் தவழ்ந்து கூந்தல் சிக்கிய வானம்பாடி இறகு சொன்னது:
பறவையுடன் இருப்பதால்
நானும் பறவையாவதில்லை
என்னைச் சுமப்பதால்
பறவை இறகாவதில்லை

எனது ஒவ்வொரு அணுவும் அது 'நான் தான்'
'நான் தான்'
'நான் மட்டுமே தான்'
நீயற்ற எதுவும் நானாவதில்லை
என்னைப் பிரிந்த நீயும்..


3.

விழுங்கிய நாவல் பழம்
நான் பயந்தபடி வயிற்றில்
முளைத்துவிட்டிருக்கிறது
நாவல் பழக் கண்களோடு
என் மகள் படித்துக்கொண்டிருக்கிறாள்
இக்கவிதையை
*(பக்.33)

விழுங்கும் எதுவும்
வயிற்றில் முளைக்குமாமெனில்
வெண்ணிலவை பிடுங்கித் தின்பேன்
நீலக்கடலை அள்ளிப் பருகுவேன்
சுட்டெரிக்கும் தீயை..
விசும்பை..
நெஞ்சை அள்ளிப் போன
ஹரஹரப்பிரியாவின்
ஜன்யமொன்றை..



*சக்கரவாளக் கோட்டம் (ரமேஷ்-பிரேம்)


(இன்றைக்குச் சில மாதங்களுக்கு முன்பு - ஏறத்தாழ ஒரு வருடமாகிறது - பழக்கதோஷத்தில் வேடிக்கையாய் எழுதிவைத்தது.. ரமேஷ்-பிரேமின் 'சக்கரவாளக் கோட்டம்' தொகுப்பிலிருந்த ரசித்த/ முகஞ்சுளித்த சில கவிதைகளின் உணர்வுகளை ஒரு பெண்ணாய் மீளப் பதிதல்..)

Monday, October 15, 2007

பிரதிகளை மீளப் பதிதல் - 1

-The God of Small Things

1.

மிகவும் வசீகரித்த புத்தகமொன்றைப் பற்றி குறிப்பெழுதவென உட்காரும்போது எங்கிருந்து தொடங்குவதென்ற கேள்வியெழும். முதல் அத்தியாயத்திலிருந்து தொடங்க முடியாது. காரணம், இந்தக் கதை காலங்களுக்கிடையே முன்னும் பின்னுமாக மிக மிக வேகமாக நகர்ந்துகொண்டிருப்பது, சில அபாயகரமான இராட்டினங்களைப் போல.

அண்மையில், அவிசாவளையில் அமைந்திருக்கும் Leisure World க்கு தோழிகள் சிலர் போயிருந்தோம். Space Ship என்ற பெயரில் ஒரு இராட்டினம். விஷயம் தெரிந்தவர்கள் புத்திசாலித்தனமாக நழுவிக் கொண்டார்கள், தலைசுற்றுகிறதென்று. பெயருக்கேற்ற மாதிரி ஒரு கூண்டு. முழுக்க முழுக்க கம்பிகளால் அடைக்கப்பட்டு, போதாக்குறைக்கு இறுக்கமான சீட் பெல்ட்களுடன். இரண்டு கூண்டுகள். ஒன்று கீழேயிருக்கும். மற்றையது பனையளவு உயரத்தில் இதற்கு நேர்மேலே இருக்கும். ஒரு கூண்டில் நான்கு பேர் வீதம் (இருவர் இருவராக) ஒரே நேரத்தில் எட்டுப்பேர் பயணிக்கலாம். அந்தக் கூண்டு பூமியைப்போல தன்னைத்தானேயும் சுற்றும் (அப்படி சுற்றும்போது நாங்கள் தலைகீழாக இருப்போம் கூண்டுக்குள்), மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும், முன்னுக்கும் பின்னுக்கும் சுற்றும்.

இருக்குமிடத்திலிருந்து மெதுவாக முன்னேறுவதைப் போலிருக்கும், திடீரென்று வேகமெடுத்து ஒரு உலுக்கு உலுக்கி திசைதிரும்பி மறுபடியும் வேகம் குறையும். அடுத்தகணம், ஒரே வீச்சில் பின்புறமாக சுழலத்தொடங்கும். இடம் வலம் மறந்து திசைகள் பற்றிய பிரக்ஞையற்று தலைசுழல அமர்ந்திருப்போம். அதே அனுபவம் இப்பிரதியை வாசிக்கும்போதும்.. நிகழ்காலத்தில் தொடங்கும் கதை, கடந்தகாலங்களுக்குச் சட்டென்று தாவி, நிகழ்காலத்துக்கும், கடந்தகாலத்தின் கடந்தகால, நிகழ்கால, எதிர்காலங்களுக்குமிடையே ஊடாடி மாறி மாறிப் பயணித்து, இறுதியாக கடந்தகாலத்தின் ஏதோவொரு புள்ளியில் சடுதியாக வந்து நின்றுவிடுகிறது.

அது அருந்ததி ரோயின், The God of Small Things.

2.
Once he was inside her, fear was derailed and biology took over. The cost of living climbed to unaffordable heights; though later Baby Kochamma would say it was a Small Price to Pay.
Was it?
Two lives. Two children's childhoods.
And a history lesson for future offenders.

(pg.318)

இறுதி அத்தியாயத்திலிருந்து தொடங்குவதுதான் மிகப் பொருத்தமாயிருக்கக்கூடும். சிறிய குடும்பம், சிறிய விடயங்கள், சிறிய தவறுகள்.. ஆனால், அவற்றுக்கு விலையாகக் கொடுக்க நேர்ந்ததோ, இரண்டு உயிர்களும், இரு குழந்தைகளின் குழந்தைமையும்.

Estha, Rahel - ஐந்து அல்லது ஆறு வயது நிரம்பிய (ஆண்,பெண்) இரட்டைக் குழந்தைகள், அவர்களது விவாகரத்துப் பெற்ற அம்மா மூவரையும் முக்கிய கதாபாத்திரங்களாகவும், கேரளாவின் Ayemenem எனும் ஊரைக் களமாகவும் கொண்டு நகர்கிறது கதை. இங்கு, The God of Small Things எனக் குறிப்பிடப்படும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் அம்மாவுடன் தொடர்புவைத்திருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆண்நண்பராகிய Velutha வும் முக்கிய இடம்பெறுகிறார். பிரதியைப் புறக்கணித்து, காலமாற்றங்களின் அகரவரிசைப்படி கதையைச் சுருக்கமாகக் கூறுவதானால்,

பரம்பரை பரம்பரையாக ஊரில் பேரும் புகழும் பெற்ற ஒரு கிறிஸ்தவக் (Syrian Christians) குடும்பம். அதில், கதையின்படி நான்காவது தலைமுறை அம்மாவும், Chacko வும். அம்மா சிறிய வயதிலேயே வீட்டை விட்டுப்போய் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் முடித்து கல்கத்தாவில் குடியேறுகிறார். அளவுமீறிய குடிப்பழக்கமுடைய கணவன், ஏதோவொரு தவறில் வேலையை இழக்கும் நிலைக்காளாகிறார். கணவரது மேலதிகாரி, அவரது அழகான மனைவியின் மீதுள்ள நெடுநாள் நாட்டத்தில் வேலை இழப்பைத் தவிர்ப்பதாயின் மனைவியைச் சிலகாலம் தன்னுடன் தங்க அனுமதிக்கும்படி யோசனை கூறுகிறார். கணவரும் இதே யோசனையை அம்மாவிடம் எடுத்துரைக்க, இயலாத கட்டத்தில் அம்மா விவாகரத்துப் பெற்று பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி தன் பெற்றோரின் ஊருக்குத் திரும்பி வருகிறார். ஆண்குழந்தையை கணவரிடமே விட்டுவிட அம்மா விரும்பினாலும், பிள்ளைகள் எப்போதுமே தாயின் பொறுப்பாக (சட்டரீதியான குழந்தையாயிருந்தாலென்ன, சட்டத்துக்குப் புறம்பானதாயிருந்தாலென்ன) மட்டுமே கருதப்படுமொரு சமூகத்தில் அது இயலாததாகிவிடுகிறது.

அம்மாவின் அண்ணா Chacko, Oxford பல்கலைக்கழகத்தில் பட்டதாரிப் படிப்பு முடித்து, அங்கேயே ஆங்கிலேயப் பெண்ணொருவரையும் திருமணம் முடித்து, ஒரு பெண் குழந்தையும் பிறந்திருந்த நிலையில், மனைவி விவாகரத்து வேண்டிவிட ஊருக்குத் திரும்பி வந்து, தனது அம்மாவின் ஊறுகாய், மற்றும் பதப்படுத்திய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையைப் (Paradise Pickles & Preserves) பொறுப்பேற்று நடத்துகிறார்.

அது கம்யூனிஸம் கேரளாவில் பரவத் தொடங்கியிருந்த காலகட்டம். Chacko நிறுவனமொன்றின் முதலாளியெனினும், Oxford காலத்திலிருந்தே கம்யூனிஸத்தின் தீவிர ஆதரவாளர். சாதி வேறுபாடுகளை மறுப்பவர் (ஆனால், தனது வீட்டுக்குள் தாழ்ந்த சாதியினரை அனுமதிக்க மாட்டாதது வேறுவிடயம்). பாட்டி, Baby Kochamma, வேலைசெய்யும் Kochu Maria உட்பட 7 பேரைக்கொண்ட குடும்பத்தில் நாட்கள் வெகு சாதாரணமாக நகர்ந்து கொண்டிருக்க, திடீர் திருப்பம் Chacko வின் ஆங்கிலேய மனைவி Margaret மற்றும் மகள் Sophie Mol வருகையுடன் நிகழ்கிறது. Margaret தனது இரண்டாவது கணவர் விபத்தொன்றில் இறந்ததையடுத்து, அதனை மறப்பதற்காகவும், கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கழிக்கும் நோக்கிலும் மகளுடன் கேரளா வருகிறார். அவர்கள் வந்து சில வாரங்களில் அம்மாவுக்கும், தச்சுவேலை செய்துவரும் தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்த Velutha வுக்குமிடையிலான தொடர்பு வீட்டாருக்குத் தெரியவருவதுடன் (இது Velutha வின் மரணத்துக்கு வழிகோலுகிறது), எதிர்பாரா விபத்தொன்றில் Chacko வின் மகள் Sophie Mol இறக்கவும் நேரிடுகிறது. உயிருக்குயிராய் நேசித்திருந்த மகளை இழந்த Chacko வின் துயரம், ஒருவகையில் அம்மாதான் அதற்குக் காரணமென Baby Kochamma நம்பவைத்துவிட அம்மாவின் மீதான கோபமாக மாறி, அம்மாவையும் குழந்தைகளையும் வீட்டை விட்டுத் துரத்த வைத்துவிடுகிறது.

தொடர்வது, அழகிய குடும்பமொன்றின் சிதைவு. தம்மை ஒருவரிலிருந்து மற்றொருவரென வேறுபிரித்துப் பார்த்திராத, எப்போதும் நான், அவள்/ன் எனக் கருதாது 'நாம்' எனவே சிந்தித்துப் பழக்கப்பட்ட Estha வும், Rahel ம் பிரிய வேண்டிய நிர்ப்பந்தம். Estha அப்பாவிடம் கல்கத்தாவுக்கு அனுப்பப்படுகிறான். Rahel ஊரிலேயே தங்க அனுமதிக்கப்படுகிறாள். அம்மா வீட்டை விட்டு அனுப்பப்படுகிறார். குழந்தைகளைப் பராமரிக்கப் போதுமான ஊதியத்தைத் தரக்கூடிய வேலையொன்றை அம்மா பெற்றுக்கொண்டதன் பின்னர் அனைவரும் மறுபடியும் ஒன்றாக வாழலாமென்ற நம்பிக்கையுடன் மூன்றுபேரைக்கொண்ட அச்சிறிய அன்பால் பிணைக்கப்பட்ட குடும்பம் பிரிகிறது.

அவர்கள் மறுபடியும் இணைவதற்கான சந்தர்ப்பம் கிட்டுவதற்கு முன்னரே அம்மா - 31 வயதளவில்.. Not old. Not young. But a viable die-able age. இறந்துவிடுகிறார் (இறுதிவரை அப்படிப்பட்டதொரு வேலை அவருக்குக் கிடைக்கவேயில்லை, பாடசாலையொன்றை நடாத்த வேண்டுமென்ற அவரது கனவும் நிறைவேறவில்லை).

Rahel திருமணம் முடித்து அமெரிக்காவில் குடியேறுகிறாள். ஏறத்தாழ இருபது, இருபத்துமூன்று வருடங்கள் இப்படியே கடந்து போக, இவர்களின் அப்பா அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்வதற்கு முன்னர், இனியும் தனது மகனைத் தன்னால் பராமரிக்க முடியாதெனக் கூறி திரும்ப ஊருக்கு அனுப்பி விடுகிறார். Estha ஊருக்கு வந்ததை அறிந்துகொண்ட Rahel (தற்போது கணவரை விட்டுப் பிரிந்தாயிற்று) அமெரிக்காவிலிருந்து ஊருக்குத் திரும்பி வந்து காலவோட்டத்தில் அசாதாரணமான முறையில் அமைதியாகிப்போன சகோதரனைக் காண்கிறாள். தற்போது அவர்கள் - two-egg twins - முற்றிலும் மாறுபட்டவர்கள், அவள் மீள்நிரப்பமுடியா வெறுமையுடனும், அவன் அசாதாரணமான அமைதியுடனும்.

இது சிக்கார்ந்த கதையின் மிக மிக எளிமையாக்கப்பட்ட சுருக்க வடிவம். உண்மையான பிரதி இப்படித் தொடங்கி, இதேபோல முடிவதல்ல; இது மட்டுமேயல்ல.


3.
வியக்க வைக்கும் அம்சம் பாத்திர வடிவமைப்பும் வர்ணனையும். ஒவ்வொரு மனிதரையும் செதுக்கியெடுத்திருக்கிறார் ரோய். அவர்களது தோற்றம், நடத்தை, சிந்தனைகளென்பன உருவத்துடன் மறுவிம்பமாக மனதில் விரியும் அதேவேளை உருவமற்ற எண்ணங்களின் அதிர்வுகளுக்கு வடிவங்கொடுத்தவாறும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அம்மாவின் கனவில் வந்த ஒற்றைக்கை மனிதனைப் பற்றிய விவரணையில்,

The God of Loss.
The God of Small Things.
The God of Goosebumps and Sudden Smiles.
He could do only one thing at a time.

If he touched her, he couldn't talk to her, if he loved her he couldn't leave, if he spoke he couldn't listen, if he fought he couldn't win.
(pg.312)


அம்மாவையும், சகோதரனையும் விட்டு விலகியிருந்த நாட்களில் Rahel பல பாடசாலைகளுக்கு தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கிறாள். ஆசிரியையொருத்தியின் வாசலுக்கு வெளியே பசுமாட்டின் சாணத்தை பூக்களால் அலங்கரித்துக் கொண்டிருந்தமைக்காகவும், கதவுகளுக்குப் பின்னால் ஒளிந்திருந்தமைக்காகவும், மூத்த மாணவிகளுடன் முரண்பட்டமைக்காகவும், தலைமையாசிரியையால் கண்டிக்கப்படுகிறாள். காரணம் கேட்டபோது, தனது மார்புகள் நோகுமா என்பதைப் பரிசீலிப்பதற்காகவே அப்படிச் செய்ததாக ஒப்புக்கொள்கிறாள். கிறிஸ்தவ நிறுவனங்களைப் பொறுத்தவரை மார்புகளின் இருப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதில்லையாதலாலும், புகை பிடித்தமைக்காகவும், வகுப்பாசிரியையின் பொய்த் தலைமுடியை எரித்தமைக்காகவும் பாடசாலையை விட்டு விலக்கப்படுகிறாள்.

She remained free to make her own inquiries: into breasts and how much they hurt. Into false hair buns and how well they burned. Into life and how it ought to be lived.
(pg.18)


இருந்தபோதும், காலம் அவளை வெறுமையின் உறைவிடமாக மாற்றிவிடுகிறது. அமெரிக்காவிலிருந்து வளர்ந்த பெண்ணாக வெறுமையையும் கூடவே அழைத்துக்கொண்டு அவள் திரும்பி வருகையில், அவளது சகோதரன் Estha ஒரு கிழவனின் வாயுடன் கூடிய இளைஞனாக வாழ்ந்துகொண்டிருப்பதைக் காண்கிறாள்.

He carried inside him the memory of a young man with an old man's mouth. The memory of a swollen face and a smashed, upside-down smile. Of a spreading pool of clear liquid with a bare bulb reflected in it. Of a bloodshot eye that had opened, wandered and then fixed its gaze on him. Estha.
(pg.32)


காலமும், அனுபவங்களும், தொலைந்துவிட்ட குழந்தைமையும் அவர்களை அவ்விதம் மாற்றிவிட்டிருந்தன. The Quietness & The Emptiness.

அம்மாவின் உணர்வுகள் எடுத்துக்காட்டப்படும் விதமும் மிகச் சிறப்பானது. தன் குழந்தைகளின் மீது அளவுகடந்த பிரியம் வைத்திருந்த போதும், சமயங்களில் தனது உணர்வுகளை முன்னிலைப்படுத்துவதில் அவள் தயக்கம் காட்டவில்லை. பகல் கனவொன்றின் போது ஒற்றைக் கை மனிதனுடன் கடற்கரையோரத்தில் அவள் தனித்து அலைகிறாள், அந்தக் கனவில் தனது குழந்தைகளை விட்டு அவள் வெகுதூரம் விலகிவிட்டிருந்த போதும் அந்தக் கனவு மனிதனின் மீதான நேசத்தையும் விட்டுக்கொடுத்தாளில்லை. குழந்தைகள் அவளது வயிற்றின் பிரசவக் கோடுகளையும், தையல் தடங்களையும் தடவிக்கொடுத்து முத்தமிடுகையில்கூட அதை மூர்க்கமாகப் புறக்கணிக்கிறாள்.

Ammu grew tired of their proprietary handling of her. She wanted her body back. It was hers. She shrugged her children off the way a bitch shrugs off her pups when she'd had enough of them.
(pg.211)


இது அம்மாமாரின் மற்றும் தாய்மையின் புனிதம் பற்றி காலங்காலமாக நாம் கொண்டிருந்த கற்பிதங்களைத் தகர்த்தெறிவதாகவுள்ளது. தனது உடல் குறித்தான கரிசனை கொண்டவளாக Estha, Rahel ன் அம்மா சித்தரிக்கப்படுகிறாள்; ஒரு பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிடவும்படுகிறாள். அம்மாமாரைக் கடவுளரின் மறுவுருவமாகவல்லாது (தந்தைவழிச் சமூகத்தின் நலன்களைப் பேணுவதும், பெண்களின் கருப்பையைக் கட்டுப்படுத்துவதுமே இந்தக் கடவுளர் மயமாக்கலின் அடிப்படை நோக்கம்), சராசரி உணர்வுகளுடன் கூடிய மனுசியாக அணுகுமிந்தப் பார்வை இன்னமும் விரிவாக நோக்கப்பட வேண்டும். சட்டத்துக்குப் புறம்பான உறவு வீட்டாருக்குத் தெரியவந்து அறைக்குள் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் பொழுதில் நடந்தது புரியாமல் திகைத்து நிற்கும் குழந்தைகளைப் பார்த்து அவள் கத்துகிறாள்:

If it wasn't for you I wouldn't be here. None of this would have happened. I would have been free. I should have dumped you in an orphanage the day you were born. You're the millstones round my neck.
(pg.240)


அவளது இந்த வார்த்தைகள் வெளிப்படுத்தும் உணர்வே இங்கு முக்கியம் பெறுகிறது. நீங்களில்லாவிடில் இந்த இடத்தில் நானிருந்திருக்கவும் மாட்டேன்; இப்படியெல்லாம் அவமானப்பட்டிருந்திருக்கவும் மாட்டேன்; சுதந்திரமாக இருந்திருப்பேன் என்கிறாள். குழந்தைகளைப் பொக்கிஷமாகக் கருதும் எமது ideal தாய்மாருடன் ஒப்பிடுகையில் குழந்தைகளைச் சுமையெனத் திட்டும் இவளை எங்கே கொண்டுபோய் வைப்பது? ஆனால், யதார்த்தம் பெரும்பாலும் இப்படித்தானிருக்கிறது. குழந்தைகள் தாயின் பொறுப்பாக சுமத்தப்படுவது அவளது சுதந்திரத்துக்கான தடைக்கல்லாக அக்குழந்தைகளை மாற்றிவிடுகிறது. அதேயிடத்தில் ஆனானப்பட்ட தாய்மையின் 'புனிதம்' வெறும் myth ஆகிவிடுகிறது. But, she's the real woman.

4.

நாவலில் அதிகம் ரசிக்க வைப்பது அருந்ததி ரோயின் மொழிநடையும் கதை சொல்லும் பாணியும். சிறுவர்களின் உலகை மிக மிக அழகாக எடுத்துக் காட்டியுள்ளார் அல்லது வாழ்ந்து காட்டியுள்ளாரெனலாம். சமயங்களில், சிறுவர்களது சிந்தனை வியக்க வைப்பது. நாம் சற்றும் எதிர்பார்த்திராத அதிக கவனம் பெற்றிராத மிகச் சிறிய விடயங்கள் கூட சிறுவர்களால் மிக உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றன. அவர்களுடன் பழகுவதை நாம் இயல்பாக எடுத்துக் கொள்கிறோம். அவர்களது கேள்விகளுக்கு அலட்சியமாகப் பதில் சொல்கிறோம். ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் எமக்கு பலதையும் கற்றுக் கொடுப்பவர்களாகவும், தம் சந்தேகங்களால் எம்மை அசைத்துவிடக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களது கேள்விகளை சிடுசிடுத்துக்கொண்டு புறக்கணிப்பதற்கு முக்கிய காரணம் அதற்கான பதில் எமக்குத் தெரிந்திராமைதான். சிறுவயதில் அத்துணை சாமர்த்தியசாலிகளாகவிருப்பவர்கள் வளர்ந்ததும் வெகு சாதாரண மனிதர்களாகி விடுகின்றமைக்கு அவர்களது அலட்சியத்துடன் எதிர்நோக்கப்பட்ட கேள்விகளும் பெரியவர்களது புறக்கணிப்புக்களுமே காரணமாகவிருக்கலாம். அல்லது 'சின்னத்தனங்களிலிருந்து' விடுபட்டு பெரியவர்களின் உலகுக்குள் நுழையும் பேரவாவில் தாமாகவே தமது சிந்தனையைச் சுருக்கிட்டுக் கொண்டதாகவும் கருதலாம். எம்மால், சிறுபிள்ளைத்தனங்கள் எனக்குறிப்பிடப்படுபவை உண்மையில் சிறுபிள்ளைத்தனமானவையா என்ற கேள்வியும் எழுகிறது.

Sopie Mol ஐ ரோய் இப்படி விபரிக்கிறார்,

The seeker of small wisdoms: Where do old birds go to die? Why don't dead ones fall like stones from the sky?
The harbinger of harsh reality: You're both whole wogs and I'm a half one.
The guru of gore: I've seen a man in an accident with his eyeball swinging on the end of a nerve, like a yo-yo
(pg.17)

மற்றையது, சில விடயங்களை அவர் எடுத்துச் சொல்லும் பாணி,

While other children of their age learned other things, Estha and Rahel learned how history negotiates its terms and collects its dues from those who break its laws. They heard its sickening thud. They smelled its smell and never forget it.
History's smell.
Like old roses on a breeze.
It would lurk forever in ordinary things. In coat hangers. Tomatoes. In the tar on roads. In certain colors. In the plates at a restaurant. In the absence of words. And the emptiness in eyes.
(pg.54)
வரலாற்றின் தன்மை, Estha, Rahel ன் அம்மா சமூகத்தின் (வரலாற்றின்) விதிகளை மீறியதை அந்தக் குழந்தைகள் உணரும் விதம்..

அவர்களது வாழ்வு இப்படித் தடம்புரண்டு போனமைக்கு Sopie Mol ன் வருகையும், அவள் இறந்தமையும்தான் காரணமென்பது வெறுமனவே ஒருபக்கத்தால் மட்டும் அவ்விடயத்தை அணுகுமொரு முறைதான். உண்மையில் இவையனைத்தும் இந்தக் கதை நடந்துகொண்டிருக்கும் காலப்பகுதிக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டிருந்தன.

That it really began in the days when the love laws were made. The laws that lay down who should be loved, and how. And how much.
(pg.33)


யார், எப்படி, எந்தளவு நேசிக்கப்பட வேண்டும் என்ற அன்பின் விதிகள் உருவாக்கப்பட்ட நாளிலிருந்தே இந்தப் பிரச்சனைகள் முளைவிடத் தொடங்கிவிட்டிருந்தன. அம்மா இந்த விதிகளை மீறினார். யார் யார் நேசிக்கப்படத் தகுந்தவர்களென்ற பட்டியலில் இடம்பெற்றிராத தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவரை அவர் நேசித்தார். அத்தகையவர்களை எப்படி நேசிக்கவேண்டுமென்ற விதிகளைக் கடந்து, எந்தளவு நேசிக்கவேண்டுமென்ற அளவு கடந்து எல்லைதாண்டி நேசித்தார். அவரது அந்த நேசம் அவரால் நேசிக்கப்பட்டவரின் உயிரையும், அவர் குழந்தைகளின் குழந்தைமையையும் விலையாகப் பெற்றுக்கொண்டது. ரோய் சொல்வது போல, however, for practical purposes, in a hopelessly practical world... (pg.34)

ஆண்குழந்தை Estha தியேட்டரொன்றில் வைத்து குளிர்பான விற்பனையாளனொருவனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்காளாக்கப்படுகிறான். அவ்விற்பனையாளனின் ஆணுறுப்பைக் கையில் பிடித்திருப்பதற்குப் பரிசாக குளிர்பானமொன்று அவனுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தான் துஷ்பிரயோகத்துக்காளாவது புரியும் வயதில் அவனில்லையெனினும், அந்த அருவருப்பு, அச்சம்பவம் அவனில் ஏற்படுத்திய தாக்கம், இது தெரியவந்தால் அம்மா தன்னை வெறுத்துவிடுவாரோ என்ற பயம் (குழந்தைகள் எப்போதும் தாம் நேசிக்கப்பட வேண்டுமென எதிர்பார்ப்பவர்கள்), அந்த மனிதனை மறுபடியுமொருமுறை சந்திக்க நேருமோ என்ற கலக்கம், அதேநேரம் தனது சகோதரியை அந்த மனிதனிடமிருந்து பாதுகாக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வு அனைத்துமிணைந்து வீட்டை விடப் பாதுகாப்பானதோர் இடத்தை ஆற்றுக்கு அப்பால் தேர்ந்தெடுக்க அவனை வழிநடத்துகின்றன. ஒருவகையில் இதுவே Sopie Mol ன் மரணத்துக்கும் காரணமாயமைகிறது. பிற்காலத்தில் அவனது ஆளுமையிலும் பாரிய மாற்றத்தையேற்படுத்துகிறது. சிறிய, சாதாரணமாகத் தோற்றமளிக்கின்ற விடயங்கள் எப்போதும் அதனையொத்த விளைவுகளை மட்டுமே தந்துவிடுவதில்லையென்பதை இது உணர்த்திச் செல்கிறது.

சமூகத்தில் ஆண்களையும் பெண்களையும் நடாத்தும் விதத்திலுள்ள பாரிய வேறுபாட்டையும் இந்நாவல் கேள்விக்குள்ளாக்குகிறது. விவாகரத்துப் பெற்றுக்கொண்ட Chacko வின் Men's needs னைப் புரிந்துகொண்ட அவரது அம்மா (மம்மாச்சி) பெண்கள் தொந்தரவின்றியும், யார் கண்ணிலும் படாமலும் அவரது அறைக்கு பின்புறமாக வந்து செல்லக்கூடியவாறு புதிய வாயிலொன்றையும் அமைக்கிறார். உணவுக்காகக் காத்திருக்கும் பிள்ளைகளையும், குடிகாரக் கணவன்மாரையும் கொண்ட தொழிற்சாலைப் பெண்கள் பணத்துக்காக தாராளமாக அங்கு வந்து போயினர். ஆனால், அதேவேளை அதேபோல விவாகரத்துப் பெற்ற அம்மாவின் Women's needs புரிந்து கொள்ளப்படாதது ஆச்சரியத்துக்குரியதே. அம்மாவுக்கும் வேலுதாவுக்குமிடையேயான தொடர்பு தெரியவந்ததும் சீறிப்பாயும் மம்மாச்சி அம்மாவை அறையொன்றினுள் அடைத்து வைக்குமளவு கோபம் கொண்டமையும், இது வெளியில் தெரியவந்தால் குடும்பத்தின் மானம் மரியாதை என்னாகுமென்று வருந்துவதும் கவனிக்கத்தக்கது. குடும்பத்திலுள்ள ஆண் என்ன செய்தாலும் தொலையாத மானமும், மரியாதையும் பெண் என்றவுடன் கண்காணாத் தொலைவுக்குப் பறந்து விடுகின்றன. இங்கு மறுபடியும் 'அன்பின் விதிகளின்' (யார் நேசிக்கப்பட வேண்டும், எப்படி & எந்தளவு) ஆட்டம் தொடங்குகிறது.


5.

கேரளாவில் அப்போது பரவிக்கொண்டிருந்த மார்க்ஸிஸம் மற்றும் பூகோளமயமாக்கலுக்கெதிரான வலிமையான விமர்சனம் நாவலினூடு முன்வைக்கப்படுகிறது. இந்தியாவின் வேறெந்தப் பாகத்தையும்விட கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி அதிகளவு பலம் பொருந்தியதாக விளங்கியமைக்கு அங்கு கிறிஸ்தவர்கள் அதிகளவில் வாழ்ந்தமையையும் ஒரு காரணமாக முன்வைக்கப்படுகிறது. மார்க்ஸிஸத்தை கிறிஸ்தவத்துடன் ஒப்பிடும் ரோய் கிறிஸ்தவமும் மார்க்ஸியமும் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒத்த தன்மைகளைக் (similar characteristics) கொண்டிருப்பதனால், இந்துக்களை விட கிறிஸ்தவர்கள் அதில் அதிக ஈடுபாடு காட்டுவதற்கு வாய்ப்புண்டாகியிருக்கலாமென்கிறார்.

Marxism was a simple substitute for Christianity. Replace God with Marx, Satan with the bourgeoisie, Heaven with a classless society, the Church with the Party, and the form and the purpose of the journey remained similar. An obstacle race, with a prize at the end.
(pg.64)


ஆனாலும், இந்தக் கோட்பாட்டிலிருந்த குழப்பம் யாதெனில் கேரளாவின் சிரியன் கிறிஸ்தவர்கள் யாவரும் பெரும்பாலும் தோட்டங்கள், தொழிற்சாலைகளுக்குச் சொந்தக்காரர்களான நிலப்பிரபுக்களாகவே இருந்தமை; மரணத்தை விடப் பயங்கரமான விடயமாக கம்யூனிஸத்தைக் கருதும் இந்தக் கிறிஸ்தவர்கள் எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களித்தும் வந்தமை. கேரளாவில் கல்வியறிவு உயர்நிலையில் காணப்பட்டமையும் கம்யூனிஸத்தின் பரவலுக்கு ஒரு காரணமாகக் கருதப்பட்டது. ஆனாலும் உண்மையில், சாதிப்பாகுபாடுகளுக்குள்ளான, மரபார்ந்த விழுமியங்களுக்கு முன்னுரிமை வழங்குகின்ற சமூகத்தை ஒருபோதும் கேள்வி கேட்காத மறுசீரமைக்கும் அமைப்பாக மட்டுமே கம்யூனிஸம் கேரளாவில் அறிமுகமானதெனலாம். அதன் ஆதரவாளர்களும் சாதிப் பாகுபாடுகளுக்குட்பட்டே செயற்பட்டமையும் குறிப்பிடத்தகுந்தது.

The Marxists worked from within the communal divides, never challenging them, never appearing not to. They offered a cocktail revolution. A heady mix of Eastern Marxism and orthodox Hinduism, spiked with a shot of democracy.
(pg.64)

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக விளங்கிய நம்பூதிரிபாட் தேர்தல்களில் பங்குபெறுவதிலும், தேர்தல் மூலம் ஆட்சியை கைப்பற்றுவதிலும் நம்பிக்கை கொண்டிருந்தமையும், அதன் விளைவாகக் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டமையும், தீவிரவாதப் பிரிவினர் நக்ஸலைட்டுகளாகச் செயலாற்றத் தொடங்கியமையும் மேலும் கவனத்திற்கொள்ளத்தக்கன.

கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக (card holding member) இருந்த வேலுதாவின் மீது அம்மாவின் குடும்பத்தினர் பொய்யான குற்றப்பதிவு தாக்கல் செய்தபோது, தனிப்பட்ட விடயங்களில் தலையிட முடியாதென கட்சியும் அவனைக் கைவிட்டு விடுகிறது. இறுதியில் பொலிசாரினால் அடித்து நொறுக்கப்பட்டு இறக்கும் தறுவாயில், இதுவரைகாலமும் கடவுளாலும், வரலாற்றாலும் கைவிடப்பட்ட சாதியைச் சேர்ந்தவனை இப்போது மார்க்ஸும் கைவிட்டுவிட்டாரென்கிறார் ரோய்.

பூகோளமயமாக்கலின் விளைவுகளுக்குச் சிறந்த உதாரணமாக, கதைநிகழ் காலத்தைய Baby Kochamma வும், வேலைக்காரி Kochu Maria வும் திகழ்கின்றனர். செய்மதித் தொலைக்காட்சி மூலம் உலகத்தில் ஒளிபரப்பாகும் அத்தனை நிகழ்வுகளையும் நாள் முழுதும் அறைக்குள்ளிருந்தே கண்டுகளிப்பதுடன், அனைத்துப் போட்டிகளிலும் கலந்துகொண்டு இரு தடவை வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் இருவரும். Baby Kochamma தனது வீட்டிலிருக்கும் தளபாடங்கள் பொருட்கள் மீது அளவற்ற பிரியம் கொண்டவர்.அவரது மார்க்ஸிய - லெனினிஸம் மற்றும் புரட்சி பற்றிய பழைய பயங்கள், BBC யில் ஒளிபரப்பப்படும் வறுமை, யுத்தங்கள் பற்றிய செய்திகளால் மீள்வடிவம் பெறுகின்றன. வறுமையும், படுகொலைகளும் அவருக்குத் தனது வீட்டுத் தளபாடங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் விளைவிக்கும் காரணிகளாகவே தோற்றமளிக்கின்றன. எந்தக் கணத்திலும், தொலைக்காட்சியில் தென்படும் யாரேனுமோர் வறியவன் தனது பொருட்களைத் திருடிக்கொண்டு விடலாமென்ற பயத்தில் யன்னல்களைக் கூட எப்போதும் மூடியே வைக்கிறார். மெய்மறந்து தொலைக்காட்சியை இரசிக்கும் நேரங்களில் Baby Kochamma வும், வேலைக்காரி Kochu Maria வும் ஒரே கிண்ணத்திலிருந்து வேர்க்கடலையை அள்ளியெடுத்து வாய்க்குள் போட்டுக்கொள்வது, பூகோளமயமாக்கமும், செய்மதித் தொலைக்காட்சி நிகழ்வுகளும் அந்தப் பழைய வீட்டிலும் சமத்துவத்தைக் கொண்டுவந்து விட்டனவெனக் கிண்டல் தொனியுடன் குறிப்பிடப்படுகிறது.

சுருக்கமாகக் கூறுவதாயின், அருந்ததி ரோயின் இந்த நாவல், தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாததும், தன்னால் போற்றப்பட முடியாததுமானவற்றை அழிப்பதற்கு மனிதருக்குள்ள தீராத ஆவலை எடுத்து விளம்புவதாகவுள்ளது.

Feelings of contempt born of inchocate, unacknowledged fear - civilization's fear of nature, men's fear of women, power's fear of powerlessness.
Man's subliminal urge to destroy what he could neither subdue nor deify.
Men's Needs.

(pg.292)


இங்கு விலையாகக் கொடுக்கப்பட்டவை (மறுபடியும் ஆரம்பித்த இடத்துக்கு மீள்கிறோம்):

இரு குழந்தைகளின் குழந்தைமை
பெண்ணின் நேசம்
மற்றும், The God of Small Things


வரலாற்றின் விதிகளை மீறுபவர்களுக்கு இது மிகச் சாதாரணமான தண்டனையாக/ விலையாகத் தோன்றலாம்.
ஆனால்..,
நிச்சயமாக அது சாதாரணமானது தானா??


(நன்றி:- புத்தகத்தை அன்பளித்த தோழனுக்கு...)

Friday, October 12, 2007

ஒரு துண்டும் சில தகடுகளும் குறித்து...

'நச்சுப் பொய்கையொன்றின் நடுவே ஒரு செந்நிறத் தாமரை பூத்தது. அதுக்கு தான் *வெடிபலவன் மாதிரி இருக்கவேண்டுமென்று விருப்பம். தன்ரை கண்ணைக் குத்துற சிவப்பு அதுக்கு பிடிக்கேல்லை. வெடிபலவன் மாதிரி வெள்ளையாய் இருக்கோணும். தன்ரை கால் சேத்துக்குள்ளை புதைஞ்சிருக்கிறதும் அதுக்கு பிடிக்கேல்லை. வெடிபலவன் மாதிரி கால்கள் பற்றின உணர்வேயில்லாமல் பறந்து திரியோணும்.

தண்ணியில் கழுவிக் கழுவி தன்ரை சிவப்பில் கொஞ்சத்தை ஒருவழியா போக்கிக் கொண்டது. சரியா நொந்ததென்டாலும் தன்ரை காலை சேத்துக்குள்ளையிருந்து பிடுங்கியும் கொண்டது அந்தப் பிடிவாதம் பிடிச்ச தாமரை.

இப்ப அது வெள்ளையில்லை, ஆனா சிவப்பாவும் இல்லை. இப்பவும் அதாலை பறக்க முடியேல்லை, ஆனா ஒரே இடத்தில் முந்திமாதிரி புதைஞ்சும் இல்லை.

அது முக்கியம்.

தண்ணிக்குள்ளை தன்ரை பாட்டுக்கு மிதந்து திரிய முடிஞ்சது. அந்தமட்டில் அதுக்கு சந்தோஷம்தான்.'


ஏதோவோர் புள்ளியிலிருந்து தொடங்கியாகத்தான் வேண்டும், அல்லது கோட்டிலிருந்தாவது. ஒரு கதையெழுதவென உட்கார்ந்தேன்.. அந்தக் கதை என் மூளையிலிருந்து தன்னை நிகழ்த்திக்கொள்ளத் தொடங்கியது.

..................

மேசையின் மேலிருந்த அழைப்பிதழை அவள் வெறித்துக் கொண்டேயிருந்தாள். கணங்கள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்தியாலங்களாகி, மணித்தியாலங்கள் நாட்களாகி, நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி, வருடங்கள் யுகங்களாகி காலம் அவள் கண்ணெதிரே ஒரு நீர்த்திவலையென உருண்டோடிக் கொண்டிருந்தது.

இந்தத் திருமணத்துக்கு கட்டாயம் போகத்தான் வேண்டுமா?

'வேண்டும்' என்பதற்கான காரணங்கள்:
- அது மிக மிக நெருங்கிய தோழியின் திருமணம்.
- பாடசாலைக் காலத்துக்கு முன்பே அறிமுகமாகி இன்றுவரையும் வாழ்வின் மேடு பள்ளங்கள், கோணல்மாணல்கள், இன்பதுன்பங்கள் அனைத்திலும் பங்குகொண்டவள்.
- கட்டாயம் வர வேண்டுமென்று நேற்றும் தொலைபேசியில் தனியாக அழைப்பு விடுத்திருந்தாள்.
- அவளது வாழ்வின் மிக முக்கியமான தருணமொன்றில் நான் கூடவிருந்தாக வேண்டியது கட்டாயம்.
- போகாவிட்டால் ஒருபோதும் என்னை மன்னிக்க மாட்டாள்.
- ஒரு அருமையான நட்பை இழந்து விடுவேன்.
- என்னில் அதிகம் அக்கறை கொண்டிருப்பவளை மனம் வருந்தச் செய்துவிடுவேன்.
- etc. etc.

'வேண்டாம்' என்பதற்கான காரணங்கள்:
- அந்த இடத்தில் நான் நானாக இருக்க மாட்டேன்.
- சாறி உடுத்த வேண்டும், அது என்னால் முடியாது.
- காது கழுத்துக்கு ஏதாவது போட்டுக்கொண்டு போகவேண்டும், அதுவும் என்னால் முடியாது.
- ஆக மொத்தத்தில், என் சுயத்தை விட்டுக் கொடுக்க வேண்டிவரும்.

'நீ ஒன்டும் போடாமல் வந்தாலும் நான் எதுவுமே சொல்ல மாட்டன், வந்தால் காணும், எனக்கென்னமோ யோசனையாவேயிருக்கு வர மாட்டியோ என்டு'' (நன்றாகவே புரிந்து கொண்டிருப்பவள்).
'எனக்கும் ஒன்டும் போடாமல் வர விருப்பம்தான்.. பிறகு உன் மாப்பிள்ளை மயங்கி எனக்குப் பின்னால் வந்தாரென்டால்.., வேண்டாம், என்னாலை ஏன் ஒரு கல்யாணம் குழம்ப வேணும்'

வேடிக்கையாகப் பேசுவதொரு வித்தைதான். இக்கட்டான சந்தர்ப்பங்களிலிருந்து அவ்வப்போது நழுவிக்கொள்வதற்கான சிறந்த உபாயம். யாரையும் காயப்படுத்தாமலும், அதேநேரம் பிடிகொடுக்காமலும் கேள்விகள், மற்றும் எதிர்பார்ப்புக்களிலிருந்து மிக இலகுவாகத் தப்பித்துக்கொள்ளலாம், அந்த நேரத்துக்கு மட்டும். அதுவொரு தற்காலிக தப்பித்தல்.

சாறி கட்டத்தானே பிடிக்காது; சல்வார் இல்லாட்டி குர்தா ஏதும் போட்டுக்கொண்டு போகலாம். ஆனால், திருமண வீட்டில் அவள் மட்டுமொரு விநோதப் பிராணியாகிப் போவாள். ஆண்களை கோட் சூட்டுக்குத் தாவ அனுமதித்த திருமணங்களில் கூட பெண்களுக்கு சாறியிலிருந்து விடுதலையே இல்லை. 'எந்நாடு போனாலும் தென்னாடுடைய சிவனுக்கு மாதவிலக்குடைய பெண்கள் மட்டும் ஆவதேயில்லை' எங்கேயோ வாசித்திருந்த கவிதை அவள் நினைவுக்கு வந்தது. எல்லாம் ஒன்றுதான். பண்பாடும், மரபும் பெண்களாலேயே கட்டிக் (சாறி கட்டி, தாலி கட்டி) காப்பாற்றப்பட வேண்டும். ஆண்கள் அனைத்தையும் மொனிட்டர் பண்ணிக் கொண்டிருப்பார்கள்.

சாறி கட்ட, நகை போட ஏன் பிடிக்காது? இது அவள் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பதில் (கேள்வியின் தோரணையைப் பொறுத்து) அவள் கைவசமிருக்கும்.

அதிகாரத்துடன் அல்லது இளக்காரத்துடன் மூன்றாம் பேரால் கேட்கப்பட்டால்:
'என் உடம்பு.. எதுவும் போடுவதும் போடாததும் என் இஷ்டம்.. நீங்கள் யார் அதைப்பற்றிக் கவலைப்பட'

அக்கறையுடன், உண்மையாகவே அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் (மூன்றாம் தரவழி):
'நானொரு உயிருள்ள மனுசி.. ஷோக்கேஸ் பொம்மையில்லை.'

மிக நெருங்கிய யாரும் எந்தத் தோரணையுடன் கேட்டாலும்:
'விருப்பமில்லை'
வேறென்ன, மௌனம்ம்ம்...

ஒருமுறை அப்பாவின் நண்பரொருவர் 'ஏன் தோடு போடுவதில்லை?' எனக் கேட்டபோது, இதே கேள்வியைப் பல்லாயிரம் முறை எதிர்கொண்ட சலிப்பில் அமைதியாக அவரை நோக்கி 'ஏன் போட வேண்டும்?' எனத் திருப்பிக் கேட்டாள். சுவரில் மோதுண்ட பந்தைப் போல எதிர்பாராத மறுகேள்வியில் ஒருகணம் அதிர்ந்துபோய் வாயைப் பிளந்தார் அவர். 'she's really a smart girl..' அவரது வியப்பு வார்த்தைகளில் தொனித்தது. 'அது எங்கடை tradition என்டதுக்கும் அப்பாலை இந்தக் கேள்விக்கு எனக்கும் பதில் தெரியாது. அடுத்தமுறை உங்களைப் பார்ப்பதற்கு முதல் இதுக்கு பதில் கண்டுபிடித்து விடுகிறேனா பார்ப்போம்' என்றுவிட்டுப் போனார். அந்தக் கணத்தில் அவளுணர்ந்த சந்தோஷம், அது வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது. மிக மிக நுணுக்கமான முறையில் அவளை விளங்கிக்கொண்டவர் அவர் மட்டும்தான். மரபு அல்லது பண்பாடு என்ற வெகு அபத்தமான (பண்பாடு என்பது வெறுமனவே ஆறுமுழ சேலையிலும், ஒன்றரைப் பவுன் தங்கத்திலும் மட்டும் தங்கியிருப்பதில்லையென்ற புரிதலுடன். எ+கா 4 அபத்தம்: ஆண்கள் கோட்சூட் போட்டாலும் தொலையாத பண்பாடு சேலை கட்டியவுடன் காப்பாற்றப்பட்டு விடும்) காரணங்களுக்கு அப்பால் எதற்காக சாறி உடுத்தவும், தோடு போடவும் பெண்கள் நிர்ப்பந்திக்கப்பட வேண்டும் என்பது தான் கேள்வி.

பெண்களுக்கான அடையாளங்களாய் சமூகத்தால் முத்திரை குத்தப்பட்டவற்றைப் புறக்கணித்து வாழ்வதன் சிரமம் வாழ்ந்து பார்த்தவர்களுக்குத்தான் புரியும். 'என்ன தைரியம் உனக்கு இப்படிப் பண்ண' என்ற அதிகாரப் பார்வைகள், 'ஐயோ பாவம் அவ்வளவு வசதியில்லை போல' என்ற அங்கலாய்ப்புக்கள், 'வடிவாய் வெளிக்கிடத் தெரியாத பெட்டை' என்ற இளக்காரங்கள் கூடப் பரவாயில்லை. 'நீ இப்படியிருப்பதெல்லாம் மற்றவர்களிடமிருந்து உன்னை வித்தியாசமாய்க் காட்டிக்கொள்ளவும், மற்றவர்களது attention ஐ உன் பக்கம் திருப்பவும்தான், எல்லாரும் உன்னிடம் வந்து நீ ஏன் இப்படியென்று கேட்பதில் உனக்கு ஒருவித சந்தோஷம்' என்பதான அல்லது 'மற்றவர்களுக்கு முன்னால் உனது இமேஜை விட்டுக்கொடுக்காமலிருக்கத்தான் நீ இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறாய், மற்றபடி உண்மையில் உனக்கு விருப்பமில்லாமலில்லை' என்பதான 'நான் இப்படி' களை எதிர்கொண்டு எதிர்கொண்டு அவளுக்கு உண்மையில் 'தான் எப்படி' என்பதே ஒருவித குழப்பமாகிப் போனது.

இருந்தாலும் அருமையான குடும்பமொன்று அவளுக்கு வாய்த்திருந்தது. 'இப்படி தோடு கூட போடாமலிருந்தால் கல்யாணத்துக்கு வாற சனமெல்லாம் எங்களுக்கென்னமோ வசதியில்லையென்டு நினைக்கும்' என அங்கலாய்த்தாலும், 'நாங்கள் வசதியாயிருக்கிறமா இல்லையா என்டதை ஊர் முழுக்க சொல்லிக்கொண்டு திரியவேண்டுமா என்ன.. வசதியில்லாட்டியும் அக்கம்பக்கத்தில் கடன் வாங்கிக்கொண்டு போட்டு அழகு காட்டுற ஆக்களைப் பார்த்த பிறகுமா இப்படிக் கேட்கிறீங்கள்' என திருப்பிக் கேட்கும் மகளை நினைத்து உள்ளூரப் பெருமைகொள்ளும் அம்மா. சாமத்தியப்பட்டபோது இதெல்லாம் ஒன்றுமேயில்லையென்டு உடனேயே வெளியில் திரிய அனுப்பினவா, இவ்வளவுக்கும் அவளின் தோழிகளெல்லாம் ஒரு மாதம் வரை அறையை விட்டே எட்டிப்பார்க்க அனுமதிக்கப்படவில்லை. சுதந்திரமாகச் சிந்திக்கப் பழக்கிய அப்பா. 'என்ன வளர்ப்பு வளர்த்திருக்கிறீங்கள்' என்று விடுப்புக் கேட்பவர்களுக்கெல்லாம், 'என் பிள்ளையை நான் சராசரி பொம்பிளையா வளர்க்கவில்லை' என்று அடிக்கடி சொல்பவர். உண்மைதான்.., திருமணச் சந்தையில் விலைபோக தன் பிள்ளையை அவர் வளர்க்கவில்லைதான்.

ஆனால், இந்தப் பாதுகாப்பும் பிடிவாதங்களும் இந்தக் குடும்பத்துக்குள் இருக்கும்வரை மட்டும்தானென்பதும் அவளுக்குத் தெரிந்துதானிருந்தது. திருமணம் போன்ற சட்டகங்களுள் அடைபட்டால் அதற்கேயான விதிகளுடன் தான் (அவரின் விருப்பம், பிள்ளைகளின் விருப்பம், இனசனத்தின் விருப்பமென்று - அவளது விருப்பத்தை யார் பொருட்படுத்துவார் - சுயம் துண்டு துண்டாய்ச் சிதறி திசைக்கொன்றாய்ப் பறக்க) தொடர்ந்து வாழவேண்டிவரும், எமது விதிகளையும் ஒழுக்கங்களையும் தொலைத்துவிட்டு. 'நானும் விழுமியங்களுடதான் வாழ்கிறேன். ஆனால், எனக்கான விழுமியங்களையும், ஒழுக்கக் கோட்பாடுகளையும் நானே உருவாக்கிக் கொள்கிறேன்' (-அருந்ததி ரோய்?) எங்கேயோ வாசித்தது போல வாழ்ந்துவிட விருப்பம் தானெனினும், அதற்காகத் தனித்திருக்கவும் தயாரில்லை. ஏன் மனிதராய்ப் பிறந்த அனைவரும் நேசிக்கவும், நேசிக்கப்படவும், துணை தேடவும் சபிக்கப்பட்டிருக்கிறோம்..? நேசம் அவளது மாபெரும் பலவீனம்!

எப்படிப் பார்த்தாலும் அவள் இன்று திருமணத்துக்கு போய்த்தானாக வேண்டும். தனது சுயத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் ஒரு உறவை இழந்துவிட முடியாது. போகத்தான் வேண்டுமென்பதைக் கட்டாயமாக்கினால் பின்னும் அவள் முன் இரு தெரிவுகள்:
1. சாறி உடுத்திக்கொண்டு, நகையணிந்து போவது (சமூகத்துடன் ஒன்றிவாழும் முயற்சி. ஆனால், விருப்பமில்லாத ஒன்றை வருந்திச் செய்ததில் இயல்பாக இருக்க முடியாமற் போகும்)
2. வேறேதாவது இயல்பு குலையாமல் அணிந்து கொண்டு தான் தானாகவே போவது (ஆனால் நிறைய விநோதப் பிராணி பார்வைகளையும், கேள்விகளையும் எதிர்கொள்ள நேருமாகையால் அங்கும் இயல்பு குலையாமலிருக்குமா என்பது சந்தேகமே)

உறவுகள் வேண்டுமென்றால் 'என்'னை இழக்கவேண்டிவரும். எனது 'என்' வேண்டுமென்றால் உறவுகளை இழக்கவேண்டி வரும். நான் நானாக.., இதே மனிதர்களுக்கு மத்தியில் அவர்களை நேசித்துக்கொண்டு வாழ்வது எப்படி???


மனம் இவ்வளது தூரம் வட்டமிட்டு வரும்வரை அவள் அழைப்பிதழை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தாளென்று எழுதிக்கொண்டு அவசர அவசரமாக கதையை ஒரு முடிவுக்கு கொண்டுவந்து விடுகிறேன்.

.....................

கேரளாவில் ஆதித்தாய்வழிச் சமுதாயம் நிலவியதன் எச்சங்களாக இன்றும் நிலைத்திருப்பவற்றுள் அங்கு பெண்கள் பெரும்பாலும் வெள்ளை நிற சேலை கட்டுவதைக் குறிப்பிடலாம் என்கிறார் ஜெயமோகன் (ஆழ்நதியைத் தேடி-கட்டுரைத் தொகுப்பு). வெள்ளை நிறச் சேலைக்கும் ஆதித்தாய்வழிச் சமுதாயத்துக்குமான தொடர்பு என்னவென்ற கேள்வியெழலாம். தாய்வழிச் சமுதாயத்தில் பெண்களுக்குப் பாலியல் சுதந்திரமிருந்தது. அங்கு அவர்கள் எவரையும் கவர்ந்திழுக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது. கண்கவர் வண்ணங்களில் ஆடை அணிவதும், தம்மை அலங்கரித்துக் கொள்வதும் எதிர்பாலாரைக் கவர்ந்திழுக்க வேண்டிய, பெண்களுக்குப் பாலியல் சுதந்திரம் மறுக்கப்பட்ட, தந்தைவழிச் சமுதாயத்திலேயே அறிமுகமாகியிருக்கலாமெனும் ரீதியில் தொடர்பை நிறுவுகிறார் அவர்.

பெண்ணுடம்பு மிக மிக இயல்பாய்ப் பண்டமயமாதல் எனவும் தலைப்பிட்டிருக்கலாமோ?



*வெடிபலவன் - ஒருவிதத் தாவரம். பஞ்சைப்போல காற்றில் பறந்து செல்லும் கீழே ஒரு சிறிய விதையுடன்.

Sunday, September 02, 2007

மர்மங்கள் நிறைந்து வழிந்திடுமொரு வீடு

கண்மூடித் திறப்பதற்குள்
சிறகுதிர்த்துப் பறந்து மறையும்
வண்ணப் பறவையொன்றன் நினைவில்
அலைவுறும் அடிமனம்..
இறுதியில், எனக்கென மிஞ்சுவதென்னமோ
கூந்தலிடை சிக்கிக்கொண்ட
மென்சிறகிலிருந்து துளிர்த்த கனவுகள் மட்டும்தான்.


பல வருடங்களிருக்கலாம், நானதைக் கடந்து சென்று.
நினைவு தெளியாத வயதில்
அம்மாவின் காலை இறுக்கக் கட்டிக்கொண்டு
முகத்தை எதிர்ப்புறம் திருப்பியபடி
நடந்து சென்றிருந்திருப்பேன், அந்த வீட்டைக் கடந்து

ஒவ்வொரு பொழுதும் வெவ்வேறு விதமாய்
நிறம்மாறிக் கொண்டிருந்தது வீடு
சூனியம் கடலாய்க் காவுகொண்டிருந்தும்,
வீறிட்டபடி வெளிக்கிளம்பும் பெண்ணின் அலறல்
திடீரென்று வந்து செவி துளைத்துப் போகும்
மறுகணம், குழந்தையின் கேவல் ஓங்கியெழுந்து
மனமதிரப் பண்ணும்
சமயங்களில்,
ஆக்ரோஷங் கொண்ட பத்ரகாளியின் உறுமலாய்
ஏதோவொன்று...

அதன் புகை படிந்த யன்னல்களெங்கும்
வெந்நீர்த் திவலைகளெனத் துளிர்த்திருக்கும் மர்மம்
செங்கல் ஓடுகளினிடையே
மழைநீரென ஒழுகிக் கொண்டிருக்கும்
சுவரின் வெடிப்புக்களினூடு தலைநீட்டி
பல்லியொன்று கதை சொல்லித் திரிய
துள்ளி விழும் எனது நிழலும்
மர்ம வீட்டைப் பற்றிய பயம்
பாம்பைப்போல் சரசரவென்று
என் நாடி நாளங்களெங்கும் ஊர்ந்து கொண்டிருந்தது
ஒரு காலம்

இப்போது நான் வளர்ந்தவள்..,
பருக்களெனத் துருத்திக் கொண்டிருக்கும் திமிரும்,
விறைத்த மூளையுமாய்
மரணத்துக்கே மசியாதவளை வீடென்ன செய்துவிடும்,
வெறும் வீடு?

உளுத்துப்போன கூரையிலிருந்து
நம்பிக்கைகள் காரை காரையாய் பொடிந்து
உதிர்ந்திடத் தொடங்குமோர் பொழுதில்
விரிசல் விழுந்த மனத்தினளாய்
தனித்த மனுஷியாய்
மறுபடியுமொருமுறை அதைக் கடந்து போகலானேன்

அப்போது நீங்கள் என்னைப் பார்த்திருக்க வேண்டும்..

விரல் பிடித்து எழுதப்பழக்கியவள்
கதவுகளைத் தட்டித் திறக்கும் வழிசொல்ல மறந்திருந்தாள்
வாயிற்கதவின் ஆயிரமாயிரம் சிறு துளைவழியே
தயக்கத்துடன் எட்டிப் பார்த்து
ஒளிவீசும் பூச்செண்டுகொண்ட சிறுமியொருத்தி
எனை நோக்கி வரக்கண்டு
கவலைகள் மறந்து களித்துத் திரிந்திருந்தேன்
சில காலம்

வடதிசையிலிருந்து சுழன்றடித்த புயற்காற்று
மனதுள் சுழித்து
வீட்டைச் சுற்றி பூத்தூறல் பொழிய
என் பிரியங்களனைத்தும் ரோஜா இதழ்களாய்
வழிநெடுக கொட்டுண்டு கிடக்கக் கண்டேன்
அவசர அவசரமாய் பொறுக்கி மடியில் கட்டி
தலைநிமிர்ந்திட முன்னம்
வெகுதொலைவில் அவள்
சிறுபுள்ளியெனத் தேய்ந்து கொண்டிருந்தாள்

அது என் பிரமையென்கிறார்கள்..

மடி இன்னமும் கனத்தே கிடப்பதும்
பூச்செண்டுக்காரி தூரத்தே மங்கலாய் ஒளிர்வதும்
கனவேயாகுமெனில்,
நனவுநிலைக்குத் திரும்பும் விருப்பு இப்போதைக்கில்லை
தவிரவும்,
வீடுகள் மீதான பிரியம்
அவ்வளவு விரைவில் நீர்த்து விடுவதுமில்லை..


(என் சிறகு முளைத்த பிரியமானவளுக்கு.., நெஞ்சுகொள்ளா நேசத்துடனும், மன்னிப்பு வேண்டியும். இப்படித்தான் காட்டமுடிகிறது எனதன்பை.. நல்லதை நாடிப் போகின்றவளை வாழ்த்துவதல்லாமல், அழுது வழியனுப்புவானேன்?)

There shall be showers of blessings..
this is a promise of love..
There shall be seasons refreshing..
la la la la la la laaa..

Tuesday, July 24, 2007

முன்பனிக்காலத்துப் பிரியங்கள்

செஞ்சொண்டுக் காகமொன்றன்
நிலம் பதியா நிழல்போல
அலைவுண்டபடியிருக்கும்,
ஒரேயொரு நினைவு மட்டும் எனக்குள்..
அழித்துவிட முடியாததும் நித்தியமானதுமாய்..
சிவனொளிபாதத்தின் உச்சியில் நின்றபடி
சூரியோதயத்தின் முதல் கிரணத்தின்
ஸ்பரிசத்தை ரசிக்கும் பரவசத்துடனும்..,
விளிம்பில் நின்றுகொண்டு
ஆழ்கிணற்றினுள் எட்டிப்பார்ப்பதான
கலவரம் நிறைந்த ஆர்வத்துடனும்..


இந்தக்கணத்தில் உலகின் எங்காவதோர் மூலையில் கணனிக்கு முன் அமர்ந்திருந்து நீங்கள் இதனை வாசித்துக் கொண்டிருக்கக் கூடும்.., கையில் தேநீர்க் கோப்பையுடனோ.. நொறுக்குத் தீனியுடனோ. மிகச் சில காலம் மட்டுமேயான இவ்வுலகத்து வாழ்தலில் ஒவ்வொரு கணமும், கணத்தின் கணமும் அளப்பரிய பெறுமதி வாய்ந்தவை. விரல் சொடுக்குமொரு நொடிப்பொழுதில் என்னவும் நடந்துவிடலாம்.. அம்மாவின் விரலைப் பிடித்துக்கொண்டு துள்ளிநடந்த சிறுவன், கண்மூடித் திறப்பதற்குள் வாகனமொன்றில் சிக்கி நடுத்தெருவில் வீழ்ந்து கிடக்கலாம்.. புகழ்பெற்ற ஓட்ட வீராங்கனையொருத்தி ஒரு செக்கன் வித்தியாசத்தில் தோற்றுப் போகலாம்.. தற்செயலாக வெளிப்பட்ட ஒற்றை வார்த்தையின் காரணமாக நெடுங்கால உறவுகளும் முறிந்திடலாம்..

அந்தக்கணத்தை.., கடந்துபோன துர்ப்பாக்கியமான அந்தப் பொழுதை மறுபடியொருமுறை திருப்பித் தரும்படி, காலச்சக்கரத்தை ஒரேயொரு கணம் பின்னோக்கிச் சுழற்றும்படி நம்முள் எத்தனைபேர், எத்தனை தடவை கடவுளிடம் இறைஞ்சியிருப்போம்..

ஓ.எல் லில் வணிகக்கல்வி கற்பித்த ஆசிரியை கணவருடனான மனத்தாங்கலில் ஒன்பது மாதக் கர்ப்பிணியாய் தற்கொலை செய்துகொண்ட போது, கணவர் தனது மனைவிக்காக ஒரு சில நிமிடங்கள் செலவளித்திருந்தால் அதைத் தடுத்திருந்திருக்கலாமென இப்போதும் தோன்றுவதுண்டு. சுகமில்லாமல் படுத்திருக்கும் அம்மாவுக்கு, 'என்னம்மா பண்ணுது' என்ற எமது ஒற்றை வார்த்தை வேதனைகளனைத்தையும் போக்கியிருந்திருக்கும். பாராட்டுவது, நன்றிகூறுவது, மன்னிப்புக் கேட்பதென இதுபோன்ற இன்னமும் சிறு சிறு விஷயங்களில்தான் வாழ்தலின் அழகு தங்கியிருக்கிறது போலும். அவற்றை விடுத்து, தத்தமது ஈகோவைப் பாதுகாக்கும் தீவிர முயற்சியில் வாழ்வினதும், அதனை உயிர்ப்புள்ளதாக்கும் உறவுகளினதும் மகத்துவங்களைப் புரிந்துவிடத் தவறிக்கொண்டிருக்கிறோம்..

.........

எமது சந்திப்பு மிக மிகத் தற்செயலானதுதான். எழுதவென முடிவெடுத்த அந்தக் கணத்தினைத் தவறவிட்டிருந்திருப்பேனாயின் என்றென்றைக்குமாய் அவனையும் தொலைத்திருந்திருப்பேன். உலகின் ஒரு கோடியில் அவனும், மறுகோடியில் நானுமென எமது அன்றாட அலைக்கழிதல்களுக்குள் மூழ்கியிருந்திருப்போம், எதுவிதக் கரிசனைகளுமற்று. வாழ்வென்பதே ஒரு மிகப்பெரிய அதிசயம்தான்.. எப்படி அது மனிதர்களை இணைத்தும், பிரித்தும் வேடிக்கை பார்க்கிறது.. எந்தவொரு உயிராலும் பிறனிருக்கத் தான் தனித்து வாழ்தல் இயலாததாயிருக்க.., அரியமொன்றினுள் புளியங்கொட்டைகளையும், குண்டுமணிகளையும் போட்டு உருட்டி உருட்டி விதவிதமான வடிவங்கள் தோன்றுவதையும், சிறு சலனத்தின்போதும் மறைந்து இன்னொன்று தோன்றுவதையும் வாய்பிளந்து ரசிப்பது போல, வாழ்வு மனிதர்களை இணைப்பதையும், இமைப்பொழுதில் காததூரம் விலத்தி விடுவதையும் அதே லயத்துடன் ரசிக்க முடியாததாயிருப்பதும் ஏன் ?

கடல் கடந்த வாழ்வின் சிரமங்களுக்கு மத்தியில் ஈழத்து நினைவுகளுடனும், கடந்தகாலத்தின் காயங்களுடனும் எஞ்சியிருக்கும் உயிர்ப்புடன் மனிதர்களை ஆழ்ந்து நேசிக்க நிபந்தனைகள் தேவைப்படுவதில்லை அவனுக்கு.. மனிதர்கள் விசித்திரமானவர்கள். எவருடனும் நெருங்கிப் பழக முன்னரே அவரைப்பற்றிய விம்பங்களை மனதில் வளர்த்துக்கொள்ளத் தொடங்கி விடுவார்கள். பின்னர் பின்னரான பொழுதுகளில் நெருங்கிப் பழக சந்தர்ப்பம் வாய்த்தாலும், அந்த விம்பம் இடையிடையே குறுக்கிட்டு தொந்தரவுபடுத்தும். சமயங்களில் 'விம்பத்துடன் மட்டுமே வாழ்தல் மேல்' எனவும் தோன்றும். இறுதியில், விம்பமும் யதார்த்தமும் முரண்படுகிற புள்ளியில் விரிசல் வெடித்து வாக்குவாதம் முற்றி, நூலறுந்த பட்டமென உறவும் காற்றிலலையத் தொடங்கிவிடும். பிறகென்ன.., கண், காது, மூக்கு முளைத்த கதைகளும் அவலரைத்தல்களும் 'ஏனடா, இந்த மனுச சகவாசம்' என்ற நிலைக்கு இட்டுக்கொண்டுவந்துவிடும். அதையும் தாண்டி, மனிதர்களை அவரவரது இயல்புகளுடன் - அவனைப்போல எவராலும் - நேசிக்க முடிதல் அதிசயம்தான்.

நான் சொல்வது மட்டும்தான் சரி.. உனக்கென்ன தெரியுமென்ற தோரணையுடன் 'கொம்பு முளைத்த ஆம்பிளை' களுக்கு மத்தியில், என்னையும் சக மனுஷியாய் மதித்து அவன் கதைக்க முற்பட்டதுதான் பெரும் ஆறுதலாகவிருந்தது. வேறெவரும் என்னைக் கதைக்க வைக்க இத்தனை முயன்றதாய் நினைவில்லை. ஒவ்வொரு சின்னச் சின்ன விடயத்திலும் நான் என்ன நினைக்கிறேன், என் கருத்தென்ன.. பார்வையென்னவென்பது குறித்து இந்தளவு எவரும் அக்கறை கொண்டதாயும் நினைவில்லை. எனக்குள்ளே இறுகிக்கிடந்த சுயத்தை, மெல்ல மெல்ல மௌனத்தின் கண்ணாடித் திரைகளை உடைத்து நொறுக்கி வெளிக்கொணர முடிந்தது அவனுக்கு. இத்தனை 'வளவளா' க்காரியா நான், என ஒருகட்டத்தில் என்னாலேயே நம்பமுடியாமல் போனது. நீண்டகாலமாக எவருடனும் மனந்திறந்து பேசாததையெல்லாம் சேர்த்துவைத்து அவனுடன் பேசுகிறேனாக்குமென நினைத்துக் கொள்வதுதான்.

..........

மரணம் கருநிழலென உன்னைப் பின் தொடர்கிறதென்கிறாய்.. பிறந்த நாளிலிருந்து, செம்மண் ஒழுங்கைகளெங்கும் பூனையாய் மெல்ல அடியெடுத்து அது உன்னைத் துரத்திக் கொண்டிருக்க, பிரக்ஞையற்றவளாய் இங்கேயமர்ந்து எதுவும் எழுதிக்கொண்டிருப்பதும் அபத்தமெனத் தோன்றுகிறது.

நீயின்றி பூரணமடையப் போவதில்லை
எனது எந்த இருப்பும்
எல்லாப் பொழுதுகளிலும்
உனக்காகவே உன்னோடே
காலங்களின் விறைத்த கணங்களினூடு
நானும் உயிர்த்திருப்பேன்
குட்டி அலிஸாய்
உன் மனக்காடுகளில் துள்ளியோட
போதாது இப்பிறவி ஒருசிறிதும்...

(தொலைதூரத் தோழனுக்கு வாழ்த்துக்களுடன்..)

Tuesday, June 12, 2007

வெறுமைகளின் வன்முறை

இருத்தலை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு..!

- மால்கம் எக்ஸின் அட்டல்லாவுக்கும், எஸ்போஸின் குழந்தைக்கும் மற்றும் அனைவருக்கும்
1.

எப்போதும் எதையாவது பேசிக்கொண்டிருந்தாக வேண்டும்.
அல்லது, எழுதிக்கொண்டு..
குறைந்தபட்சம் வாசித்துக்கொண்டாவது.

ஒன்றும் அடுத்ததுமான இரு நிகழ்தல்கள்
அல்லது, அசைவுகளுக்கிடையிலான இடைவெளி (space)
சகிக்க முடியாததாகவிருக்கிறது.
உ+ம்: குளியலின் கடைசிச்சொட்டு நீருக்கும் துவாலையின் முதல் ஸ்பரிசத்துக்குமிடையிலான.. அல்லது, தொண்டைக்குள்ளால் இறங்கும் கடைசிப் பருக்கைக்கும் கையலம்புகையில் முதல் துளி நீருடனான உறவாடலுக்குமிடையிலான இடைவெளி..
(பாடிக்கொண்டே குளித்தல், பேசிக்கொண்டே சாப்பிடுதல் போன்ற உபாயங்கள் கைகொடுக்காது போயின்..)
யுகமென நீளும் அக்கணநேர வெறுமையின் வாதையில்
இத்தனையாண்டுகால வாழ்தலும் அதன் சமரசங்களும்
வரித்துக்கொண்ட அர்த்தங்களின் மீதான - துவம்சம்
நிகழ்ந்தே விடுகிறது.


2.

ஓ.. யாழ்ப்பாணமா..?!

புருவம் நெரித்து
அடையாள அட்டையைப் புரட்டியபடியிருக்கும்
அதிரடிச் சட்டைக்காரனினருகில்
அசடு வழிய அரைமணி நேரம் தாமதித்து
பல்லைக் காட்டுவதும்...
(கவனிக்க: புன்னகைக்கும் பல்லிளிப்புக்குமிடையிலான வேறுபாடு)

இயல்பு மறந்து சந்தேகப் பார்வையுடனேயே ஏறிட்டு நோக்கும்
அதிகார + இனவாத விழிகளை எதிர்கொள்வதும்...
(அவற்றைக் கடன்வாங்கிக்கொண்ட சடத்துவம், சடத்துவமல்லாத அனைத்தும் உள்ளடங்க)

அதிகரித்துக் கொண்டிருக்கும்
வாழ்க்கைச் செலவினைக் குறைகூறியபடி
சமயங்களில் உணவையே தள்ளிப்போட்டு பட்டினி கிடப்பதும்...
(இணையச் செலவுக்காய்.. கஞ்சிக்கழுது கொண்டிருப்பவரின் முன்னே பூவுக்கும் பாலுக்குமழுவதைப்போல)

இன்னபிறவும்,
மார்க்கோஸ் துணைவர மால்கம் எக்ஸுடன்
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் -
வாழ்க்கை, சுதந்திரம், இன்பம் -
(மேலும், We believe that all men are created equally because they are created in the image of God. - ட்ரூமன்)
பூக்கோவிலிருந்து பூர்த்தியு வரை
அனைத்தையும் விவாதித்தபடி
பனி படர்ந்த வெளி தாண்டி அடியெடுத்து வைப்பதான - கனவுகளைப்
புறக்கணித்தபடியேயிருக்கும் எப்போதும்..,
ஒரு சொட்டு இரக்கமுமின்றி (ஈவுமின்றி).


3.

இனியென்ன...

சிந்தனைக்குக் கடிவாளமிட்டு
(திமிரால் விறைத்த ஒற்றைக் கொம்புடன் கூடிய unicorn என சபித்தபடி),
உடலின் ஒவ்வொரு அணுவையும் பிழிந்து சாறெடுத்து
இனியுமேலாதென சோர்ந்து வீழ்கையில்
படுக்கைக்குத் திரும்ப வேண்டும்..

கனவினை ஆக்கிரமித்துக் கொள்ளும்
கருநிறைக் குருதி படிந்த தரையும்,
கோணிப்போன முகங்களும்,
எச்சிலாயும், இரத்தமாயும் கடைவாயிலிருந்து உயிர்வடிய
துளைக்கப்பட்ட மனித உடலங்களும்,
இன்னும் பலவுமென..
காட்சிப் படிமங்கள் யாவற்றையும் - வெறும்
கழிப்பறைக் காகிதமென
கடலின் அக்கரையிலேயே கசக்கியெறிந்து கைகழுவி
மஞ்சள் புற்பாய் விரித்த ஸ்தெப்பி வெளியெங்கும்
பட்டாம்பூச்சிகளைத் துரத்தித் திரிந்த
கஸாக்கியச் சிறுமியொருத்தியை
நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும் (ஆறுதலுக்காகவாவது..).


4.

அதற்கப்பாலும்...

(உம்பர்த்தோ ஈகோ.. டெரிடா, சிமோன் தி பூவாவை விமர்சித்ததன் போதானதைப் போன்ற)
உரையாடல்களின் நீட்சியில் எடுத்தெறியப்படும்
ஒரு வார்த்தைக்கும் மற்றுமொரு வார்த்தைக்கும்,
எழுதப்பட முன்னரே மனதிலுறைந்து விட்ட கவிதையொன்றின்
ஒரு வரிக்கும் மற்றைய வரிக்கும்,
(போர்கேயின் கணிதவியல் மற்றும் மார்க்வெஸின் மாயா யதார்த்தவாத மற்றும் அதனுடன் கூடிய..)
பிரதிகளின் ஒரு பக்கத்துக்கும் அதனருகான அடுத்த பக்கத்துக்கும்
இடையிலான இடைவெளியில்
வெளியெங்கும் வியாபிக்கும் ஆன்மாவின் எஞ்சிய தடயங்களோடு
சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வேன்,
இனியொருபோதும்..
என் சின்னஞ்சிறு மயிர்க்கொட்டிகளை வெறுமை விழுங்காதிருக்க.


5.

எப்படிச் சொல்வேன் நான்... நியூயோர்க்கின் ஆதுபான் அரங்கிலும், வவுனியாவின் வீடொன்றிலும் கண்முன்னே சுடப்பட்டிறந்த (அட்டல்லாவுக்கு ஆறு வயதாயிருந்திருக்கவேண்டும் அப்போது.. எஸ்போஸின் குழந்தைக்கு எட்டோ என்னமோ..) அவர்களது அப்பாக்களை என்னால் திருப்பித் தர முடியாது.. உயிர்ப்பிக்கவும் இயலாது. இன்மைகள் மனிதத் தடங்கள் மீது நிகழ்த்திய வன்முறையின் வெளிப்பாடென அதனை அடையாளப்படுத்துதல் மட்டுமே என்னால் சாத்தியமான போதிலும், அவர்களை அணைத்துக்கொண்டு சொல்வேன்..,

"எனது அப்பாவை அவர்கள் எப்போது பறித்துக் கொள்வார்களென்று எனக்கும் தெரியாது. நீண்டநாட்களாக அந்தக் கணத்தை - அப்படியேதும் நடந்துவிடக் கூடாதென்ற பதைபதைப்புடன் - எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் குழந்தைகளுள் ஒருத்திதான் நானும். வெகு விரைவில், என் உள்ளுணர்வின்படி - வானத்தில் இன்னுமொரு புது நட்சத்திரம் முளைக்கும்போது (இறந்தவர்கள் நட்சத்திரமாக வானில் மின்னுவார்களென்று அம்மா சொல்வாள்), உங்களுக்கு இன்னுமொரு தோழி கிடைத்துவிட்டதை உணர்வீர்கள்.

நாங்கள் அனைவருமிணைந்து எங்கள் அப்பாக்களுக்குக் கடிதமெழுதுவோம்:
'அப்பா, அப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன், அப்பா, நீங்கள் இறந்திருக்கக் கூடாதென்று நான் நினைக்கிறேன்.'

முகவரிகளற்ற உலகுக்கு அந்தக் கடிதங்களை அனுப்பி வைப்போம். அல்லாதுவிடில், எமது கனவுகளில் வளையவரும் வெண்சிறகணிந்த தேவதைகள் எமக்காய் அவற்றை எடுத்துச் செல்லட்டும்."

ஓ.. என் பிரிய மயிர்க்கொட்டிகளே! எனக்கும் தெரியும். அப்பாக்கள் எப்போதும் கண்டிப்பானவர்கள்.. வீட்டிலிருப்பதைவிட அவர்கள் வெளியிலிருக்கும் நேரம் அதிகம்.. எங்களைவிட மற்ற அனைவர் மீதும் அதிக அக்கறை கொள்வார்கள்.. எங்களுக்கு பரிசுப்பொருள் வாங்கித் தருவதோ, அம்மாவுக்கு உடுப்போ, நகையோ ஒன்றுமில்லை..ஆனால், அவர்களுக்கு வேறு செலவுகள் இருந்துகொண்டேயிருக்கும்..

இத்தனையிருந்தும், நாங்கள் அவர்களை நேசிக்கிறோம். ஏனென்றால், எமக்குத் தெரியும், அவர்கள் மற்றவர்களுக்காக உயிர்வாழ்ந்தவர்கள்.. மற்றவர்களுக்காக உயிர்துறந்தவர்கள். எங்களுக்காக அவர்கள் விட்டுச் சென்றது எதுவுமேயில்லை எனினும், மற்றவர்களுக்காக எங்களை விட்டுச் சென்றிருக்கும் எங்கள் அப்பாக்களை நாங்கள் எப்போதும் நேசிப்போம்!

-Apr 20, 2007-

Monday, June 04, 2007

நேசத்துக்குரியவர்களை நெகிழ்வுடன் அசைபோடுதல்

உன்னுடனான சில நிமிட உரையாடலே போதுமானதாயிருக்கிறது.., உலகத்துக் கவலைகளை மறக்க; மறுபடியுமொருமுறை புத்துயிர் பெற்றெழ. உனது அன்புக் கட்டளையின்படி நேற்றிரவு, வேண்டாத விடயங்களில் மனது அலைபாய்வதைத் தடுத்து மனதுக்குப் பிடித்த விடயங்களையே நினைப்பதென்ற தீர்மானத்துடன் படுக்கையில் சாய்ந்தேன்.

மனதுக்குப் பிடித்தது...? வேறென்னவாக இருக்கமுடியும் உன் நினைவுகளைத்தவிர. இறுதியாக என்ன பேசிக்கொண்டிருந்தோம்... ம்ம்ம்... பெரியார்.. மதம்.. மார்க்ஸியம். விவாதிப்பதற்கு அருமையான விடயங்களில்லையா.. இவை குறித்து உன்னுடன் இன்னும் எவ்வளவோ கலந்துரையாட வேண்டியிருக்கிறது; என் அரைகுறை அறிதல்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனது நம்பிக்கையீனங்களையும்.., எனக்கான கொள்கைகளை வகுப்பதில் தாக்கம் செலுத்திய நிர்ப்பந்தங்களையும்.., எனது நம்பிக்கைகள் எங்கே தொலைந்து போயினவென்பதையும்.. உன்னுடன் பகிர்ந்துகொள்ளத் துடிக்கிறது மனம். உனது நம்பிக்கைகளை நோக்குமிடத்தும்.., உன் அப்பாவைப்பற்றி நீ கூறியவற்றைக் கேட்டவிடத்தும் என் நிலைப்பாடுகளும் என்றேனுமொருகால் இப்படித் தடம்புரளுமாவென்ற கலக்கம்... அல்லது அப்படியேதும் நிகழ்ந்தால் இன்னும் நிம்மதியாய் உணர்வேனோவென்ற நப்பாசை... என்னவெல்லாமோ தோன்றுகின்றது.

நானும் ஒருகாலத்தில் இத்தகைய நம்பிக்கைகளோடு வாழ்ந்தவள்தான். முருகன்... சைவசமயம் கற்றுத்தந்த கடவுளரில் என்னை மிகவும் கவர்ந்தவன். இன்றைக்கு சில வருடங்களுக்கு முன்பு அவனையொத்த வயதுகளில் நானுமிருந்தபடியாலோ என்னமோ... ஒரு தோழனாய் என் அனைத்தையும் பகிர்ந்துகொள்ள முடிந்தது அவனோடு. கார்த்திகேயன்... அவனது பெயர்களில் மிகப் பிடித்தது.. நெஞ்சுகொள்ளாப் பிரியத்துடன் 'கார்த்தி' என்றே அவனை விளித்திருக்கின்றேன் (இந்தத் தாக்கத்தில்தான் என் நாட்குறிப்பிற்கும் கார்த்தி என்றே பெயரிட்டு.. இன்றுவரை அப்படித்தான்.. கார்த்தியோடு உரையாடுவதாய்த்தான் நாட்குறிப்பு எழுதிவருகிறேன்). மனம் கனத்துப் போகும் போதெல்லாம் அவனது படமொன்றினை வைத்துக்கொண்டு மணிக்கணக்காய் அவனுடன் உரையாடியிருக்கிறேன். ஒருபோதும் 'பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.. அது வேண்டும்.. இது வேண்டும்..' என்று எதுவும் கேட்டுக்கொண்டதில்லை அவனிடம். இது தந்தால்.. அது தருவேனென என் அன்பினை/பக்தியை ஒருபோதும் வியாபாரமாக்கியதுமில்லை. நான் வேண்டியதெல்லாம், 'நீ எப்போதும் என்னுடனேயே இருக்க வேண்டும்.. என் ஒவ்வொரு இன்பத்திலும் துன்பத்திலும்... ஏற்றத்தாழ்வுகளிலும் ஒரு ஆறுதலாக நீ இருக்கவேண்டும்..' என்பதுதான். அவனும் இருந்தான்... உலகம் எனை வஞ்சித்துவிட்டதாய் உணர்ந்து மனமுடைந்து அழுதபோதெல்லாம், 'யாமிருக்க பயமேன்..?' என்று கூறிச்சென்றான்.. அசட்டுக் குழந்தையே என்று அடிக்கடி என்னைக் கடிந்தும் கொண்டான்.

ஏன் இந்த நம்பிக்கையெல்லாம் சடுதியாகக் கைநழுவிப் போயிற்று..? சடங்குகள், ஒழுக்க ஆசாரங்கள், மரபு வழிவந்த (மூட) நம்பிக்கைகளை எந்தக்காலத்திலும் நான் ஏற்றுக்கொண்டதில்லையெனினும் ஏன் கடவுளரை வெறுக்க ஆரம்பித்தேன், நான்..?

வியாபாரமாகிப்போன பக்தி... தரகர்களாக மாறிப்போன பூசாரிகள்... கேலிக்கூத்தாய்ப்போன கிரியைகள்... மேலும் இந்தத் தெய்வ புத்திரர்கள்... கடவுளரின் மைந்தர்களாய்த் தம்மை அடையாளங்காட்டிக் கொள்பவர்களில் ஒருத்தியாய் - வெட்கித்தலைகுனிந்து - நானுமிருக்கக் கூடாதென்ற வீறாப்பில்தான் அவர்களைத் தூக்கியெறிந்தேன். இந்த மதமும், அதன் பாதுகாவலர்களும் என் பெண்மையை அவமதித்தபோது.., பெண்ணென்ற ஒரே காரணத்திற்காய் எத்தனையோ சந்தர்ப்பங்களில் என்னைப் புறக்கணித்தபோது... வெறியும் திமிரும் கிளர்ந்தெழ... என்னை மதிக்காத எதையும், எவரையும் நானும் மதிக்கப்போவதில்லையென முடிவெடுத்து இவர்களின் போலி அரிதாரங்களை அலட்சியப்படுத்தத் தொடங்கினேன். இந்த இந்த நாட்களில் என்னை நெருங்காதே என்று எந்த இறைவன் வந்து சொல்லிப் போனானாம் இவர்களிடம்..?! இறைவர்களை விடுங்கள்.. இறைவியரைக்கூட நெருங்க வேண்டாமாம்... அநியாயமாயில்லை.. அபத்தமாயில்லை..?? நான் மிக மிகப் புனிதமானதாக மதிக்கும் தாய்மையை இவ்வுலகத்தின் சிருஷ்டிகர்த்தாக்களாகக் கூறிக்கொள்ளும் சக்திகளே அவமதிக்கும்போது நான் மட்டுமேன் அவர்களை மதிக்க வேண்டும்..

மார்க்ஸியம் பற்றிய எனது அறிவு மிக மிகச் சொற்பமானதுதானென்றாலும், அந்தச் சொற்பத்திற்குள்ளும் ஆயிரத்தெட்டு முரண்பாடுகளை என்னால் அடையாளங்கண்டுகொள்ள முடிந்ததாலும்... - கம்யூனிஸமும் ஆணாதிக்கவழிச் சிந்தனையின் மற்றுமொரு வடிவமே.. என்னதான் சமத்துவம்பற்றி வலியுறுத்திக் கூறினாலும் பெண்கள் தொடர்பான ஆணாதிக்கமுறைமைச் சமுதாயத்தின் நிலைப்பாடுகளுக்கு முரணாகவோ, பாலினச் சமத்துவம் பற்றியோ அது அதிக கரிசனை காட்டவில்லை - இவர்களது மற்றுமொரு உழுத்துப்போன தத்துவக் கழிவுகளுள் ஒன்றாகத்தான் மார்க்ஸியத்தையும் கருதினேனென்றபோதும்... மனித சுயவுணர்வே உண்மையான, உயர்ந்த கடவுளென்று கூறிய மார்க்ஸ் என்ற தனிமனிதர் என்னை மிகவும் ஈர்த்ததும் இந்தக் காலங்களில்தான்.

மானுட இயலுமைகளுக்கும், புரிதலுக்கும் அப்பாற்பட்ட அமானுஷ்ய சக்தியொன்று இருப்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்தான் என்றாலும், அவ்வமானுஷ்ய சக்தி/ பரப்பிரம்மம் ஒரு சமுத்திரமென்றால்... அதில் நானும் ஒரு சிறுதுளி... நீயும் ஒரு சிறு துளி... அவனும்.. அனைவரும். இப்படி எத்தனையோ துளிகள் ஒன்றிணைந்துதான் ஒரு சமுத்திரம் உருவாகின்றதென்ற புரிதல் ஏற்படும்போது... அதன்பிறகும் எவரையும் வெறுக்கவோ, அலட்சியப்படுத்தவோ எம்மால் முடியப்போவதில்லை.

மனித இனத்தைக் கூறுபோடவும், ஒருசாராரை தீட்டு.. அந்த இந்தப் பணியாரங்களென்ற பெயரில் ஒதுக்கி வைக்கவும் வழிசெய்த மதங்களை/ கடவுளரை விடவும்... 'மனிதனே மனிதனுக்குக் கடவுளென்றால் மனிதனை இழிவுபடுத்துகின்ற.., அடிமைப்படுத்துகின்ற.., புறக்கணிக்கிற.., கைவிடுகின்ற.. எல்லா உறவுகளும் தூக்கியெறியப்பட வேண்டும்..' என்றுகூறிய மார்க்ஸ் எனும் மாமனிதருக்கு... சக மனிதரை நேசிக்கவும், மதிக்கவும் கற்றுத்தந்த அந்த அற்புதமான ஆளுமைக்குத் தலைவணங்குகின்றேன்.

நீ கூறியதுபோல மொஸ்கோவில் மழைபெய்கின்றதென்றவுடன் இங்கே குடைபிடிக்கின்ற அரைவேக்காடுகள், அவரையும் அவரது சிந்தனைகளையும் கொச்சைப்படுத்துவதாகவே தோன்றுகின்றது, எனக்கு. மார்க்ஸ் மதங்களை அவற்றின் இயல்பான பலவீனங்கள் காரணமாக மறுத்திருக்கலாம்.. ஆனால், ஒருபோதும் அவர் மதங்களைத் தூக்கியெறிய முயலவில்லை. 'மதம் ஒடுக்கப்பட்ட உயிரின் பெருமூச்சு, இதயமற்ற உலகத்தின் இதயம், அது உணர்ச்சியற்ற நிலைமைகளின் உணர்ச்சி..' என்ற தெளிவு இருந்திருக்கிறது அவருக்கு.

(தமிழ் மொழிபெயர்ப்பு அவ்வளவு வாய்க்கவில்லைதான் என்றாலும்) மார்க்ஸின் கவிதைகளில் கைவசமிருந்தவை..:

நான் கெட்டவனல்ல, நல்லவனுமல்ல;
என்னிடம் வேகமில்லை, சுணக்கமுமில்லை
நான் நேற்று முன்னே சென்றால்,
நான் இன்று பின்னால் செல்வேன்.
ஒளிமிக்க மதவாதி நான்
பெண்குதிரையல்ல, ஆண் குதிரையுமல்ல;
sophocles, சாட்டை இருவருமே
என்னுடைய எழுச்சியின் ஊற்றுக்கள்

....................................

கான்ட்டும் Fichte யும் தொலைதூரத்திலுள்ள
உலகத்தைத் தேடி வானில் பறக்கிறார்கள்;
நான் ஆழமான உண்மையைத் தேடுகிறேன்
அதைத் தெருவில் கண்டெடுக்கிறேன்

.....................................

என்னுடைய ஆன்மாவின் கருத்து வெறியை
என்னால் ஒருபோதும் அமைதிப்படுத்த இயலவில்லை
எதையும் நான் சுலபமென்று நினைக்கவில்லை
நான் ஓய்வில்லாமல் முன்னேற வேண்டும்
கடவுள்கள் அருளும் ஆசிகளை
அனைத்தையும் பெற நான் முயற்சிப்பேன்,
ஆழத்திலுள்ள அனைத்து அறிவைப் பெறுவேன்,
கவிதைக் கலையின் ஆழத்தைத் தொடுவேன்
எனவே நாம் எல்லாவற்றையும் இழக்கத் தயாராவோம்.