Thursday, December 13, 2007

உனக்கும் எனக்குமிடையே ஒரு மூன்றாவது மனிதனைப்போல

காலம்: இறுதித் தீர்ப்பு நாள்
இடம்:
நியாய சபை
நேரம்: விஜயன் வேட்டையாடப் போவதற்கு சற்று முன்பு



நாம் அங்கு காத்திருந்தோம் அந்நியர்களென,
தனிமையின் சுவரை எமக்கு நேரே வளர்த்திவிட்டு..
மௌனம் எமக்கிடையே
ஒரு மூன்றாவது மனிதனைப்போல அமர்ந்திருந்தது
எத்தனை குழந்தைகள் உன்னைச் சுற்றிலும், குவேனி*
தோளையும் முலைகளையும் பற்றித் தொங்கியபடி
காலை சுற்றிக்கொண்டு நகர விடாமல்
நான் கத்தியழ விரும்பினேன்
'நீ எனதும் அம்மாதானில்லையா?'
ஒரு பிடி நேசம்
சில கொத்து புன்னகை
சிறு துளி இடம் உன் மடியில்
வேறென்ன கேட்டேன் உன்னிடம்..
கண்ணாடிச் சில்லு விழுந்து தெறிப்பதற்கு முன்பு
ஓராயிரம் பிசுங்கான்களின் நிசப்தத்தை
புதைத்து வைத்திருக்குமாற் போல
'அழகாயிருந்தது என் தவறல்லவே' என்கிறாய்
இல்லாதுவிட்டிருந்தாலும் அவர்களிடமிருந்து தப்பித்திருக்க மாட்டாய்
உன்னிடத்திலோர் அரக்கி இருந்திருந்தாலும்..
ஆனால், இன்று அவர்களுன்னை அரக்கியென்கிறார்கள்
கைப்பற்றிக் கொண்டதை தங்களதாம்..
தீர்ப்பு வழங்கப்பட்டு உரலில் தலையிடிபட
சிதறும் சதைத்துணுக்குகளை தேங்காய்த் துருவலென
பொறுக்கியெடுத்து ஏப்பமிடுகின்றனர் உனது குழந்தைகள்
இது ஆறுதல் சொல்லிக்கொள்ளும் வேளையல்ல என்பது மட்டும் புரிகிறது


*குவேனி - இலங்கை பூர்வீகக்குடியொன்றின் அரசி. விஜயன் அவளைத் திருமணமுடித்து நாட்டைக் கைப்பற்றுகிறான். பின்னர் அவளைக் கைவிட்டு நாயக்க வம்ச அரசியொருத்தியை மறுபடி திருமணம் செய்கிறான். குழந்தைகளைக் காப்பாற்றிக்கொள்ள தனது குடியினரிடம் திரும்பிச் செல்பவள் காட்டிக்கொடுத்த துரோகியெனக் கருதப்பட்டு அவர்களால் கொல்லப்படுகிறாள்.

(for the country I love, and for a life that demands us much more than it deserves..)


தலைப்பு நன்றி : அருந்ததி ரோய் - 'The silence sat between grandniece and baby grandaunt like a third person' (pg.22), The God of Small Things

7 comments:

soorya said...

நான் அண்மையில் படித்த அருமையான படைப்புகளில் இதுவுமொன்று. ஆழமாகச் சிந்திக்க வைக்கிறது. இதைக் கருப்பொருளாக வைத்து ஒரு அரங்க நிகழ்வொன்று நிகழ்த்தலாம் போலுள்ளது. அம்முயற்சி ஏதும் நடைபெறுமாயின் நன்றியுடன் அதைத் தங்களுக்குத் தெரியப்படுத்துவேன். வாழ்த்துக்கள் தோழி.

மு. மயூரன் said...

//இதைக் கருப்பொருளாக வைத்து ஒரு அரங்க நிகழ்வொன்று நிகழ்த்தலாம் போலுள்ளது//

ஆகா... நிவேதா...!

வேறு யாரும் முந்திக்கொள்ளப்போகிறார்கள்..!

ஜமாலன் said...

உள்ளுக்குள் அந்த கதையாடலை ஒரு நாடகமாக நிகழ்த்தி விட்டது இக்கவிதை. அற்புதமான கவிதைகளில் ஒன்று. வாழ்த்துக்கள் நிவேதா.

நிவேதா/Yalini said...

நன்றி, சூர்யா!

நன்றி, மயூரன்!

//வேறு யாரும் முந்திக்கொள்ளப்போகிறார்கள்..!
//

:-)

நன்றி, ஜமாலன்!

சித்தாந்தன் said...

சரிநிகரில் வந்த கவிதைகளுடன்தான்
உங்களை அறிந்து கொண்டேன். மொழிக் கூர்மையும் தீவிரமும் கொண்டுள்ளன உங்கள் கவிதைகள்.வாழ்த்துக்கள்.

சித்தாந்தன் said...

உங்கள் கவிதைகள் நன்றாகவுள்ளன
மொழிக் கூர்மை கொண்டுள்ளன

சித்தாந்தன் said...

உங்கள் கவிதைகள் நன்றாகவுள்ளன
மொழிக் கூர்மை கொண்டுள்ளன