Tuesday, October 31, 2006

பட்டாம்பூச்சி நெய்யும் கனவுகள்:

-ஒற்றைப் புனைவும் ஒரு சில புதிர்களும்-

மாமரத்துக் குயில்கள்
மழைக்காலத்தைச் சபிப்பதில்லை;
மரமேறத் தெரிந்தவன்
உயரங்கள் குறித்து அலட்டுவதில்லை;
கரைந்தொழுகிய காலங்கள்
மீண்டோடி வருகையில்
அள்ளிப்பருக ஒரு கை
பிரக்ஞைகளேதுமின்றி
மார்புக் குவட்டில்
முளைவிடத் தொடங்கும்
இன்றே..
இப்போதே..

01. கிளைவிரிக்கும் ஆன்மாவும் கருவறுக்கும் புனைவும்

என்றோவோர் காலத்தில், ஏழேழு கடல்களுக்கும் ஈரேழு கண்டங்களுக்கும் அப்பாலுள்ள தனித்ததோர் தேசத்தில்.. சித்தனையும், மலைநாகத்தையும் புணர்ந்து களித்த மலைமுகடொன்று நீலநிற உதடுகளுடன் குழந்தையொன்றைப் பிரசவித்ததாம்... என்றவாறாகத்தான் ஆரம்பிக்கின்றன, கதைசொல்லிகளைப் பற்றியதான கதைகளும்.., ஏன் அவர்களது மரணமுங்கூட. தலைகொய்து உரலிலிட்டு உலக்கை கொண்டு இடித்தும் சிதறிய ஒவ்வொரு பருக்கையிலிருந்தும் புதியதொரு கதைசொல்லி முளைவிட, இரு பனைமரங்களுக்கிடையே கால்களை அகலவிரித்தபடி தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்ட நிலையில், மரங்கள் இருவேறு திசைகளில் தறிக்கப்பட.., யோனி பிளவுற்று உயிர்மூலம் சிதைந்துதான் அவர்களது மரணமும் சம்பவித்ததாம். இடைக்காலத்துச் சூனியக்காரிகளைப் போலவே அக்காலத்துக் கதைசொல்லிகளும் பெண்களாக மட்டுமேயிருந்தனரென்பதையும் விரும்பியோ விரும்பாமலோ என்னைப்போலவே நீங்களும் நம்பித்தானாக வேண்டும்.

இவ்வாறாக, கதைசொல்லிகள் மரணங்களைப் பற்றிப் பேச விரும்பாமையின் மர்மம் உங்களுக்கும் புரிந்திருக்கக்கூடும். தவிரவும், அவர்கள் கூறுவதன்படி மரணங்களுக்கு அழத்தெரியாதென்பதையும் உங்கள் புரிதல்களோடு இணைத்தபடி சரத்துளிகளாய் கதைகளை உள்வாங்கிக்கொள்கின்ற போதுதான் கதைகளும் உங்களை நேசிக்க ஆரம்பிக்கின்றன. மேகங்களினிடுக்கில் சொருகிவிட்டுவந்த ஈரலிப்பை அணிந்துகொள்ள முன்வருமொருநாளில் மரணங்களும் மஞ்சள் நதியாய் மாறி உங்கள் பாலைவனங்களில் நீர்த்தடம் பதித்துச் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நானுமொரு கதைசொல்லியைச் சந்தித்தேன், இன்றைக்குச் சில்லாயிரமாண்டுகளுக்கு முன்பு. இதோ நீ நின்றுகொண்டிருக்குமிடத்தில்.., உன் நிழல் படரும் பரப்பில்.., மூன்றுகோடியே முப்பத்துமூன்று லட்சத்து முப்பத்து மூவாயிரத்து முன்னூற்று முப்பத்து மூன்று தசம் மூன்று மூன்று வருடங்களுக்கு முன்னர் எங்கிருந்தோ ஒரு விதை வந்து வீழ்ந்ததாம். அது அப்போதைக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதென்பது தெரியவந்ததால் மூன்று நாட்களுக்குள் அதனைப் புதைத்துவிடல் நலமென அவர்கள் முடிவுசெய்து முடிக்க மூன்று நிமிடங்களாயின. புதைத்த மூன்றே கணங்களில் முளைவிட்ட அவ்விதையிலிருந்துதான் தான் தோன்றியதாக அக்கதைசொல்லி கூறிமுடித்தபோது என் ஆளுமை மூன்றாகப் பிளவுபட்டுப் போயிருந்தது.

அதைவிடுத்துப் பார்த்தாலும், கதைசொல்லிகளைக் கதைசொல்லும்படி எவரும் வற்புறுத்திவிட முடியாது. பாற்சந்தியில் எதிர்ப்பட்ட இரு கடவுளருக்கிடையேயான மோதலில் பிரபஞ்சவெளி வெடித்துச் சிதறி, இன்மையும் இல்லாமையும் எங்கும் நிறைந்திருக்கின்றபோது, ஒரு கதை அவர்களது கனவிலிருந்து தன்னை நிகழ்த்திக்கொள்ளத் தொடங்கும். எனது கணிப்பின்படி, எமக்கிடையிலான சந்திப்பு நிகழ்ந்து மூன்று நாழிகைகளுள் கோடானுகோடிகாலச் சரித்திரங்கொண்ட ஆதியன்னையொருத்தி கனவுகளைக் கீறிப்பிளந்து வெளியேறி புள்ளியிலிருந்து அல்லது நேர்கோட்டிலிருந்து தன்னை நிகழ்த்திக்கொள்ள ஆயத்தமானாள்.

நிழல்கள் உருவங்களை விழுங்கத் தொடங்கியவக்கணத்தில் என் பட்டாம்பூச்சிகள் மயிர்க்கொட்டிகளாக மாறின.


02. அதிகாரத்தின் நிறமும் அழகு / அவலட்சணங்களின் பின்னணியும்

'...கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்ட பழங்காலப் பெண்களில் பலரும் அவர்களது கணவர்களைக் கொண்டோ அல்லது வேறு ஆண் உறவினரைக் கொண்டோ அடையாளப்படுத்தப்படவில்லை. பெண்கள் வேறு தனிநபர் அடையாளங்களுடன் அடிக்கடிகுறிப்பிடப்படுவதால், தந்தையர், கணவர்கள், மகன்கள் ஆகியோரைச் சார்ந்து மட்டுமே சமூக அடையாளங்கள் வரையறுக்கப்படவில்லை என்பது தெரிகிறது. கல்வெட்டில் பெயர் குறிப்பிடப்பட்ட பெண்களில் பெரும்பாலானவர்கள் சொத்துடையவர்களாகவும், சொத்தின்மீது கட்டுப்பாடு செலுத்தியவர்களாகவுமே விவரிக்கப்படுகிறார்கள். பல பெண்கள் நிலவுடைமை பெற்றிருந்தவர்களாகவும் விவரிக்கப்படுகிறார்கள். பெயர் குறிப்பிடப்பட்டவர்களில் பாதிப்பேர் கொடையளித்தவர்களாகவோ, அல்லது கல்வெட்டின் மையமான நபராகவோ இருப்பது, அவர்களது தற்சார்புத் தன்மையையும், அதிகாரத்தையும் தெளிவாக அடையாளங் காட்டுகிறது.'
(தமிழகக் கல்வெட்டுக்களில் பெண்கள் - லெஸ்லி சி.ஓர்)


b

day break II

நீ ஏன் எப்போதும் ஏதாவதொன்று இன்னொன்றாக மாறுவதைப் பற்றியே பேசுகிறாயென உங்களில் எவராவது வினவக்கூடும். மாற்றங்கள் மட்டுமே நிரந்தரமென்றாகிவிட்ட உலகில் வேறெதைப்பற்றியும் பேசமுடியாத என் இயலாமை.., 'இருப்பது இல்லாததாகாது; இல்லாதது இருப்பதாகாது' எனும் தத்துவ விசாரங்களை மட்டுமே சார்ந்திருப்பதுகூட ஒருவகையில் எனது இயலாமையென்றேதான் கூறவேண்டும். எந்தவொன்றன் அந்தமும் இன்னொன்றன் ஆதியாகின்றது. நீ இறப்பாயானால் அக்னியுடன் சங்கமித்து சாம்பலாகி மண்ணுடன், காற்றுடன், கடலுடன் கலக்கிறாய்.. அங்கே நீ அழியவில்லை; உனது வாழ்வு அத்துடன் முடிந்துவிடவில்லை. மண்ணாய், காற்றாய், கடலாய் நீ தொடர்ந்தும் உயிர்த்திருக்கிறாய்.., இதோ இப்போதிருக்கும் நீயாகவல்லவெனினுமேகூட.

அப்போதெல்லாம்.., பட்டாம்பூச்சிகள் கன்னங்கரேலென இருந்தனவாம்; காக்கைகள் வெள்ளை வெளேரெனவும். அழகு, அழகின்மை பற்றிய கற்பிதங்கள் ஏதோவொரு மூதாதைக் காகத்தின் மூளையில் மின்னலிட சரேலென்று கழன்றது கருமை, பட்டாம்பூச்சிகளிடமிருந்தும்.. என எழுதிட விருப்பம்தானெனினும் யதார்த்தம் நிச்சயமாக எதிர்மாறானதுதானாக்கும். கறுப்பு - அவலட்சணம், வண்ணமயம் - அழகு ஆகிய கருத்தாக்கங்கள் வலுப்பெற்று வரத்தொடங்க, காகங்கள் மிகவும் பெருந்தன்மையுடன் வலிந்து, கருமையைத் தமக்கென ஏற்றுக்கொண்டனவாயிருக்க வேண்டும். சிறகுகளில் வண்ணத் தீற்றல்களைக் கண்டதன் பின்பு அவற்றைப் பேணிப்பாதுகாப்பதிலேயே பட்டாம்பூச்சிகளின் பொழுதெல்லாம் கரையலாயிற்று.

பிறகெப்படி கவலைப்பட, இல்லவே இல்லையென்றாகிவிட்ட கருமைகள் குறித்து..

03. பிரதிமைகளை விழுங்கிய பிம்பங்களும் புளித்துப் போன பிரலாபங்களும்

'மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, இலங்கையில் பாலியல் வன்புணர்தலுக்காளான பெண்ணொருத்தியின் அதிகுறைந்த வயது 6 மாதங்கள்; அதிகூடிய வயது 85 வருடங்களாம்..'

இப்போதெல்லாம் யாரைக் கேட்டாலும், "பட்டாம்பூச்சிகளா.. ஓ.. பிடிக்குமே" என்கிறார்கள். சிலர் ஒருபடி மேலே சென்று, பட்டாம்பூச்சிகளை யாருக்குத்தான் பிடிக்காதென என்னையே எதிர்க்கேள்வி கேட்கிறார்கள். அன்றாடங்களின் நகர்வில்.., அலமலந்த தேடல்களில்.. பிடிக்கும்.. பிடிக்குமென்பவர்களை மட்டுமே காண்கிறேன் அல்லது அவர்கள் மட்டுமே எனக்கு எதிர்ப்படுகிறார்கள்.

அப்படி என்னதான் பிடித்திருக்கிறது..? வர்ணச் சிதறல்கள், படபடக்கும் சிறகுகள், அழகு, மென்மை... நீண்டுகொண்டே போகின்றன, மறுமொழிகள். பட்டாம்பூச்சிகள் ஒருகாலத்தில் மயிர்கொட்டிகளாகவிருந்தனவென்பது யாருக்காவது நினைவிருக்குமா..? அப்போது பிடித்திருந்ததா உங்களுக்கு அவற்றை..? அவற்றின் இரத்தத்தின் நிறம் யாருக்குத் தெரியும்.. அதில் ஈரலிப்பிருமென்பதையாவது ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கிறதா உங்களிடம்.. அவற்றின் உணர்கொம்புகளை நேசிக்கமுடியுமா உங்களால்.. அவற்றின் மயிர்களைக் கண்டு அருவருப்படைகிறீர்கள்.. தூர விலகியோடுகிறீர்கள்.. உதிர்ந்த மயிர்கள் பற்றிய கரிசனை எள்ளளவுமிருக்குமா உங்களுக்கு.. மயிர்க்கொட்டிகள் இல்லையேல் பட்டாம்பூச்சிகளும் இல்லையென்பது உறுதியாகத் தெரிந்திருந்தும் இன்னுமேன் அவற்றை அழிக்கப் பாடுபடுகிறோம்?

மயிர்க்கொட்டிகளுக்குக் கேள்வி கேட்கத் தெரியாதென நினைக்காதீர்கள் அற்பர்களே.. அவற்றின் நீல உதடுகள் அகலப்பிளவுறுமோர் நாளில் உங்கள் வானங்கள் வெளிறிப்போய்விடக்கூடும்.


04. கனவுலக இருண்மைகளும் கற்காலத்துக் கரைமீறல்களும்

கண்மூடித் திறப்பதற்குள் சிறகுதிர்த்துப் பறந்து மறையும் பெயரறியா வண்ணப் பறவையொன்றன் நினைவில் அடிமனம் அலைவுற.., ஆதியன்னை விழித்தெழுந்தாள். அவளது கணப்பொழுது கண்ணயர்வில் தலைகீழாகிவிட்டிருந்தது, அவள் படைத்திருந்த உலகம். உருகி உருகி அவள் தன் மேனி தொட்டு வண்ணம் பூசியிருந்த கருநிறப் பட்டாம்பூச்சிகள் நிறக்குவியல்களுடன் அல்லாடுவதையும், வெண்காகங்கள் கருநிறங்கொண்டு கூவிப் பிதற்றலுற்றுத் திரிவதையும் கண்ணுற்று, உள்ளம் வெம்பினாள்: உலகம் அதிர்ந்து நிலம் நடுங்கியது. உயிர் கசிந்து விழிநீர் பெருக்கினாள்: ஆழி பொங்கி கண்டங்களைச் சூழ்ந்தது. முடிவுக்கு வந்தவளாய் தேறுதலுற்று பெருமூச்செறிந்தாள்: புயல்வீசி மலைகளும் சுருண்டன.

இன்றைய கணத்தில், அவள் உயிர்ப்பித்த பூவுலகில் அவளுக்கென எஞ்சியிருந்ததென்னமோ கூந்தலிடை சிக்கிக்கொண்ட மென்சிறகிலிருந்து துளிர்த்த கனவுகள் மட்டும்தான். காகங்கள் கெக்கலித்துக் கொண்டாலும், இன்னமும் ஆதியன்னையின் கனவுகளெங்கும் மயிர்க்கொட்டிகள் சுருள்சுருளாய் ஊர்ந்து திரிவது உங்களில் எத்தனைபேருக்குத் தெரியும்..?

இன்றில்லையெனினும்.. என்றேனுமொருநாள் அண்டம் முழுவதற்குமாய் விரியும் அவள் யோனி.., பிதுக்கித் தள்ளும் இளவரசர்களை.. அன்று இருளும் கருமை களைந்து வேறு நிறம் போர்த்தும். இளவரசர்கள் மயிர்க்கொட்டிகளை முத்தமிட்டு உயிர்ப்பிக்குமந்நாளில் அவள் உலகம் பட்டாம்பூச்சிகளால் நிறையும்.

Friday, October 27, 2006

*எனக்குள் பெய்யும் மழை...


என்னிடம்
ஒரு துண்டுப் பிரசுரத்தைப் போல
நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க
வார்த்தைகள் இல்லை

இரவு
இரவினால் அதிகாரமிடப்பட்ட பகல்
நாளைக் காலையில்
சூரியன் உதிக்குமா என்பதில் கூட
சந்தேகம் கொண்டுள்ள என்னிடம்
கனவுகள்
தம் அர்த்தத்தை இழந்தவைதான்

இந்தச் சமூகத்தின் தொப்புள் கொடிக்கு
துப்பாக்கி நீட்டப்படும்போது
ஒரு மெல்லிய பூ நுனியில்
உட்காரக் கூடிய
வண்ணத்துப் பூச்சியின் கனது
எனக்கு சம்பந்தமற்ற
ஒரு சம்பவிப்பு மட்டுமே

நான் மனிதனாய் வாழும் முயற்சியில்
பூக்களை மரத்துடன் விட்டுவிட விரும்புகிறேன்
எனக்கு
பகலாய் உருவமைக்கப்பட்ட அழகிய இரவு
கனவாய் உள்ளது
- சிவரமணி


இலங்கையின் அரசியல் யாப்புக்களுக்குள் ஆழ்ந்து போயிருந்தேன். இன்றைக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னைய காலப்பகுதி நினைவினை ஆக்கிரமித்திருந்தது. புராதன நிலமானியச் சமூகவமைப்பு, ஐரோப்பியரின் வருகை, நாட்டின் சமூக பொருளாதார அரசியல் மாற்றங்கள், அந்நிய ஆக்கிரமிப்பின் உச்சகட்டமாக ஆங்கிலேயரின் வருகையும் கண்டி இராசதானியைக் கைப்பற்றுதலும், ஒரு சில வருடங்களுக்குள் சமூகவமைப்பே தலைகீழாகப் புரண்டமை அனைத்தும் மனத்திரையில் படமென விரிந்துகொண்டிருக்க, சட்டென்று கவனத்தைத் திசைதிருப்பியது எங்கிருந்தோ வந்து விழுந்த மழைத்துளியொன்று.

இப்போதெல்லாம் சில்லிடச் செய்யும் துளிகள் எதை நினைவுபடுத்துமென்பது சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லையே.. என்னவனின் இதழ் கசிவு.. புன்னகைத்துக்கொண்டே நிமிர்ந்தேன். மறுபடியும் கொட்டும் மழைக்குக் கூரை ஒழுகத் தொடங்கிவிட்டிருந்தது. பழங்காலத்து வீடில்லையா.. பாவம், அதுவும் எத்தனைகாலத்துக்குத்தான் நின்றுபிடிக்கும். கூரையிலிருந்து வழிந்து யன்னலில் விழுந்து தெறித்த துளிகளிலொன்றுதான் என் கவனத்தையும் சிதறடித்திருக்கிறது. சொட்டுச் சொட்டாய் மழைத்துளிகள் சந்தம் தவறாமல் விழுவதையும், தெறித்து பல்லாயிரம் முத்துத் துகள்களாய்ச் சிதறுவதையும் இடைக்கிடை சில என் கன்னங்களை வருடிச் செல்வதையும் இரசித்துக் கொண்டிருந்தேன்.

இப்படி எவ்வளவு நேரம் கழிந்ததோ நினைவில்லை.. சில கணங்களாக இருக்கக்கூடும் மற்றவர்களின் பார்வையில். எனக்கோ நினைவினடுக்குகளில் தொலைந்த யுகயுகாந்தரங்கள்தான். திடுக்கிட்டு விழிப்புநிலைக்குத் திரும்பியபோது மழைத்துளிகள் எனது அரசறிவியல் புத்தகத்தில் தாரை தாரையாகக் கோலமிட்டிருந்தன. பதறிப்போய் புத்தகத்தை எடுத்து மார்போடு அணைத்துத் துடைத்துக் கொண்டாலும், சில்மிஷம் செய்துவிட்டுப்போன துளிகளைக் கடிந்துகொள்ள முடியவில்லை. புத்தகங்களையும், படிப்பையும் எந்தளவுக்கு நேசிக்கிறேனோ அதையும்விட ஒருபடி அதிகமாய் மழையை நேசிக்கிறேனாக்கும்.

வானம் கவிழ்ந்து சரம் சரமாய் பூமியை நோக்கி கீழிறங்கிக் கொண்டிருந்தது. நடுச்சாமத்தில் தொடங்கிய மழைதான்.. விடிந்தும் கதிரவனைக் காணவில்லை.. அவனுக்கென்ன கவலை.. இருண்டபடிதான் காலையும் விடிந்தது.. இப்போது பகலாயிற்று.. இன்னமும் விட்டபாடில்லை, வானமும் தெளிந்தபாடில்லை. பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். தோளில் கனத்த புத்தகங்கள் தவிர, கையில் இன்னும் சில.. பற்றாக்குறைக்கு மறுகையில் குடை வேறு. மெல்லிய கூதல் காற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கையிலிருந்த புத்தகங்களை மார்போடு அணைத்தபடி கதகதப்புத் தேடிக்கொண்டு மழையை இரசித்தும் அனுபவித்தும் கொண்டு தனிவழி தொடர்ந்ததென் பயணம். மனம் மட்டும் நழுவி கடந்தகாலங்களை நோக்கி தாவிக்கொண்டிருந்தது.

இன்றைக்குச் சில மாதங்களுக்கு முன், இதேபோன்றதோர் மழைநாளில்தான் நானும் அவளும் காலாற நடந்து திரிந்தோம். மழை வலுக்க, வீட்டுக்குப் போகலாமென்ற என் வேண்டுகோளையும் அலட்சியப்படுத்திவிட்டு, 'உன்னுடன் இருக்கவேண்டும் போலிருக்கிறது..' என்றபடி கைகோர்த்துக்கொண்டு என்னை நடப்பாட்டிச் சென்றாள். மழைநீரில் தெருவெல்லாம் நிரம்பி முழங்காலளவு வெள்ளம்.. முன்னெச்சரிக்கையாய் தக்க ஆடையணிந்திருந்ததால் தப்பித்தோம். எதிரில் வருபவரின் முகம் கூடத் தெரியாதளவு தடித்த திரையாய் கவிந்திருந்தது மழை. தெருக்களில் மனித நடமாட்டத்தைக் காணவே காணோம்.. வாகனங்கள் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாய்.. வாய்க்கால்கள், குழிகள் குறித்த பயம் தெருவோரமாக நடக்கவிடவில்லை. கொழும்புத் தெருக்களைப்பற்றிச் சொல்லவேண்டியதில்லைதானே. நடுத்தெருவில் ராசகுமாரிகள் போல நடந்துகொண்டிருந்தோம், வேடிக்கைப் பேச்சுக்களில் எமைத் தொலைத்தபடி. கையில் குடையிருந்தென்ன.. பேய்மழைக்கு உச்சந்தலை தவிர மிச்சமெல்லாம் நனைந்தாயிற்று. மணிக்கணக்காய் கதைபேசித்திரிந்த காலங்கள்... இன்று, அதே மழை.. அதே தெருக்கள்.. நான் மட்டும் தனியளாய். கனத்துப் போனது மனம், கருக்கட்டிய மேகம்போல.

ம்ம்ம்... மறுபடியும் சுயவுணர்வு பெற்றுத் திரும்பி, ஒழுகும் இடங்களைக் கண்டுபிடித்து மழைத்துளிகளை ஏந்த பாத்திரங்களை வைக்கிறேன். மழையென்றால் காணும்.. வீட்டில் கிடக்கும் பழைய வாளிகளுக்கும், பண்டம் பாத்திரங்களுக்கும் வேலை வந்துவிடும். இந்த வீடு பரவாயில்லை.. ஆறுவயதுவரை வாழ்ந்த பழைய வீட்டின் நினைவு வந்தது. மிகவும் சிரமப்பட்டிருந்த காலங்கள் அவை...

அந்தவீடு தெரு மட்டத்திலிருந்து சில அடிகள் தாழ்வாக அமைந்திருந்ததால் கொஞ்சம் மழையென்றாலும் தண்ணீர் வீட்டுக்குள் புகுந்து நிறைந்துவிடும். கடும் மழையென்றால் வீட்டுக்குள் வெள்ளம்தான். அப்பா என்னையும், தம்பியையும் கட்டிலில் ஏற்றிவிடுவார். பாடசாலைக்கும் போகாமல் அக்காவினதும், அப்பாவினதும் தலையாய கடமை தொடங்கும். தண்ணீரை வாளியில் அள்ளி வெளியே ஊற்றுவது. மழைநாட்களென்றால் அப்பாவின் மாணவியருக்குக் கொண்டாட்டம்தானாம் அப்போதெல்லாம். அவர்தான் பாடசாலைக்கு வர மாட்டாரே.. எனக்கும் அதெல்லாம் வேடிக்கைதான். சமயங்களில் அக்காவோடு போட்டிக்கு தண்ணீர் அள்ளி ஊற்றுவேன். யார் வேக வேகமாக ஊற்றுவதென்று பந்தயமே நடக்கும். காலில் சிரங்கு வந்துவிடுமென்று பேசுவாள் அம்மா.. அதையெல்லாம் யார் கணக்கெடுத்தார்.. புது வீடு தேடியலைந்தபோது வெள்ளம் நுழையாத மேட்டுநிலம்தான் வேண்டுமென பிடிவாதமாய் நின்றாராம் அப்பா.. அதேபோலவே இந்த வீடு வாய்த்தது.

இன்றும், தெருவில் முழங்காலளவு வெள்ளத்தில் அடியெடுத்து அடியெடுத்து நடப்பதென்றால் கொள்ளைப் பிரியம்.., பள்ளங்கள் குழிகள் பற்றிய பயமிருந்தாலுமேகூட. ஊரிலுள்ள கஞ்சல், குப்பையெல்லாம் காலடியில் வந்து சிக்கிக்கொள்ளுமென்றாலும் அதிலுமொரு தனிசுகமிருக்கிறதுதானே.. சமயங்களில் வேகமாகக் கடக்கும் வாகனமொன்று நீரை வாரியிறைத்து ஆடைகளை நனைத்துப் போகும்.. ஆனாலும், ஒருபோதும் கோபம் வந்ததில்லை. சிலவேளை மன்னிப்புக் கேட்கும் பாவனையில் வாகனத்திலிருந்து ஒரு மனிதர் எட்டிப்பார்த்தாலும், 'இதெல்லாம் ஒன்றுமேயில்லை..' என தலையசைத்துப் புன்னகைத்து அவரை வழியனுப்புகையில் மறுபடியுமொருமுறை குழந்தையாகி விடுகிறேன்.

மழைக்காலங்கள் ரம்மியமானவைதான்.., நீயும் அருகிலிருந்தால்...


(*தலைப்பு நன்றி: யமுனா ராஜேந்திரன்)

Tuesday, October 24, 2006

பசுமையாம்.., பாரிப்பாம்.. கருகிடட்டும் கனவுகள்..!


01.

இப்போதெல்லாம்.. சிலநாட்களாகவே என் கனவுகளில் வளைய வருகிறாள், ஒருத்தி. வெளிர் இரவுகளில் நீலம் பாரித்த புன்னகையுடன் கருநிலவாய் தினந்தோறும் தோன்றி வளர்ந்து தேய்ந்து பின் மறைகிறாள்.., புரியாத மொழியில் கதறும் அவள் குரலின் ஒவ்வொரு பிசிறலும் ஊசியாய்த் துளைக்க... காதுமடல்கள் நீள நீளமாய் வளர்ந்து செவிப்பறையை இறுகவடைத்துவிட வேண்டுமென்ற எனது வேண்டுதல்களையும் புறக்கணித்தபடி.

ஏன் வருகிறாள், எதற்காக அலறுகிறாள், என்னிடமிருந்து என்னத்தை எதிர்பார்க்கிறாள்..? பதில் வேண்டின், காலவடுக்குகளின் ஏதோவோர் ஆழத்தில் புதையுண்டுபோன படிமங்களை மறுபடியும் கிளறியெடுக்க வேண்டியிருக்கும்.., சிதழூறும் ரணங்களைச் சீண்டுவதைப்போல கணநேர இன்பம் வேண்டி காலாகாலத்திற்குமான வேதனையை மறுபடியும் உயிர்ப்பிக்க வேண்டியிருக்கும்.. சாம்பல் பூத்த நினைவுகளையும் கூடத்தான்.

இன்னமும், விழிகளை நிறைத்திருப்பதெல்லாம்.. திரையிடப்பட்ட முகமும், நீண்ட கறுப்பு உடையும், கையிலேந்திய அவளது பால்மணம் மாறா பச்சிளங்குழந்தையும்தான். ஆற்றங்கரையோரக் குடியேற்றமொன்று... சிந்துவெளி, ஹரப்பா.. தைகிரீஸ் - யூப்ரடீஸ்.. ஏன் மாயா அல்லது பெயர் குறிப்பிட முன்னரே வரலாற்றோட்டங்கள் புறக்கணித்துவிட்ட ஆபிரிக்க நாகரிகச் சமுதாயமென்றுகூட எடுத்துக்கொள்ளலாம்.. அதது அவரவர் விருப்பம்.. என்னைப் பொறுத்தவரை அதுவொரு வெறும் ஆற்றங்கரையோரத்துக் குடியேற்றம் மட்டும்தான். நேரம் நடுச்சாமத்தை எட்டிக்கொண்டிருப்பது சாமக்கோழியின் கேவலின் வழி புரிந்தாலும், இப்போதுதான் மேளங்களினதும், முரசினதும் ஒலி துரித லயத்தினை அண்மித்திருந்தது. கிராமியச் சடங்கோ அல்லது ஏதேனுமொரு விழாவோ அங்கே இடம்பெற்றுக் கொண்டிருப்பதற்கு அறிகுறியாக கொம்பு வாத்தியமொன்று உச்சஸ்தாயியில் முழங்கும் ஓசை காதைப் பிளக்க.., பாரம்பரிய நடனத்தின் உச்சகட்டத்தில் இளம்பெண்களும், ஆண்களும் தமை மறந்து தீப்பந்தங்களின் மந்தகாச வெளிச்சத்துடன் சுடரின் அசைவுக்கேற்ப சந்தம் பிசகாமல் ஆடிக்கொண்டிருந்தனர். ஏனோவொரு போதை கலந்த மயக்கத்தின் ஆழத்தில் கிராமமே கட்டுண்டிருக்க.. ஒருத்தி மட்டும் கருநிழலென அவ்விடத்திலிருந்து நழுவுகிறாள், தனது என்றென்றைக்குமான விழிப்புணர்வினைத் தக்கவைத்தபடி.

ஆற்றங்கரையில் நின்றிருந்த தனித்த படகிலேறி சலனங்களற்ற நீரோட்டத்தின் பாதையில் அவளும், அவளைச் சுமந்த படகும் நகரத் தொடங்க.. கையிலேந்திய குழந்தையுடனான அப்பிம்பம் எந்தன் ஆதியன்னையை நினைவுறுத்திப் போனது.. குழந்தை இயேசுவுடனான அன்னை மரியாளையும்.., சமயங்களில் தாரகாசுரனை வதம்செய்த காளியையும். வாத்தியங்களின் ஓசை தொலைதூரத்தில் மங்கிக்கொண்டிருக்க, அடுத்து வந்த சில மணித்துளிகளின் மீது கவிந்துகொண்டது நடுச்சாமத்தின் கனத்த மௌனம்.

ஆற்றுத் தீவொன்றில் கரையொதுங்கியது படகு, அவளைக் கேளாமலேயே. தாவியிறங்கியவள் குழந்தையுடன் நீரினுள் அடியெடுத்து நடக்கத் தொடங்குகிறாள். தூக்கம் கலைந்தெழுந்து குழந்தை அழுதுவிடக் கூடாதேயென்ற கவலை அவள் முகத்தில் அப்பியிருந்தமை திரைகளைத் தாண்டியும் எப்படி எனக்குத் தெரிந்ததென்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். எதிர்ப்பட்டபோது அவளது தோளில் அமர்ந்திருந்த பட்டாம்பூச்சியொன்றை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. முகத்திரை விலக்கி நீலம் பாரித்த புன்னகை எனை வந்து தீண்டியபோது, "அம்மா.." என்றலறி அவள் காலடியில் விழுந்தேன். அள்ளியணைக்க கைநீட்டுகையில், பட்டாம்பூச்சிக் குவியலென மாறி திசைக்கொன்றாய் அவள் பறந்துவிட்டிருந்தாள்.. குழந்தை மட்டும் கொட்டக் கொட்ட விழித்தபடி என் கால்களைக் கட்டிக்கொண்டது.

ஒரு பெருங்கடமை... யுகயுகாந்தரங்களாய் என் தலையில் அப்படித்தான் சுமத்தப்பட்டது.


02.

அத்துடன் எல்லாமும் முடிந்து விடவில்லை. பின்னரும் சில பொழுதுகளில் அவள் அடிக்கடி வருவாள், என் கடமையை நினைவுறுத்திப் போகவோ என்னவோ. ஏ.கே 47 ரக துப்பாக்கியுடனும், சமயங்களில் டி. 56 உடனும்.. சாதாரண பிஸ்டலுடனும் கூட. கறுத்த பெட்டியொன்றைக்கொண்டு வந்து ஒப்படைப்பாள்.. இதைப் பாதுகாப்பது உன் பொறுப்பென. அதைப் பாதுகாப்பதற்கேயாயினும் நானென் உயிரைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டியிருக்கும், பிரியத்திற்குரியவர்களை அல்லது அப்படிக் காட்டிக் கொள்பவர்களை / பாசாங்கு செய்பவர்களைக் கொன்றேனும் நானென் கடமையை நிறைவேற்றியேயாக வேண்டியிருக்கும்.

ஓரிரவில், சில வக்கிர மனிதர்களின் பிடியிலகப்பட்டு சிதைக்கப்பட்டுக் கொண்டிருந்த என் முகத்தில் அவளது சாயலைக் கண்டேன். ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி புணர்ந்துவிட்டு எனை அவர்கள் தூக்கியெறிந்த போதும், வீறாப்புடன் மறுபடி நிமிர்ந்தெழுந்து என் வழி தொடர்கையில்.. தடுமாறி விழப்போனவளின் இடையைச் சுற்றி இறுகவணைத்து தன் தோள் மீது என் தலைசாய்த்துக்கொள்ளச் செய்தவனில் அவளது படைப்பின் இறுமாப்புக்களைக் கண்டேன். அந்தக் கணத்தில் அவனது அணைப்பும், அருகாமையும் எனக்கு வேண்டியிருந்தது. அவளொருபோதும் எனைக் கைவிடுவதில்லையென்ற நம்பிக்கையும் எனக்குத் தேவைப்பட்டிருந்தது.

பிறிதொரு நாள், பாடசாலைப் புளியமரத்து நிழலின் கீழ் சிமெந்துக்கட்டில் நான் உட்கார்ந்திருந்தபோது வைத்தியம் பார்ப்பதற்கென வந்த பூசாரி வாகாய் உடலில் அத்துமீற விழைகையில் கைகொடுக்க ஏன் வராமல் போனாளென்பது இன்னமும் புரிந்தபாடில்லை. கதறித்துடித்தபடி விழித்தெழுந்து அருகில் படுத்திருந்த சகோதரியின் முதுகில் முகம்புதைத்து பிரமைகளிலிருந்து விடுபட முயன்றபோதும் அவள் ஆறுதல் கூறவில்லை. அன்றைக்குக் குளியலறைக் கதவு திறந்து என் நிர்வாணங்களைப் போர்த்திக் கொண்டவனைத் தண்டித்திருப்பாளென்றும் எனக்குத் தோன்றவில்லை.

இருந்தும், என் கடமைகளின் மீது மட்டும் கரிசனை அதிகம் கொள்கிறாயடி பெண்ணே..


03.

இப்படியே அவளும், அவள் குறித்த / அவள் சார்ந்த கனவுகளும் அலைக்கழித்துக் கொண்டிருக்க ப்ராய்டின் கனவுகள் பற்றிய கருத்தாக்கங்களைத் தேடி வாசிக்கத் தொடங்கினேன். பால்யகாலத்தில் அடக்கிவைக்கப்பட்ட உணர்வுகளும், ஆசைகளும்தான் கனவுகளாக வெளிப்படுகின்றனவாம். அதுவே பிற்காலங்களில் மனப்பிறழ்வுகளாகவும் உருமாறுவதுண்டு. எது எவ்வாறிருப்பினும், நானுமொரு சிறுமியாகவிருந்தபோது எவனாலும் வன்புணரப்பட வேண்டுமென்ற உள்ளார்ந்த ஆசை நிரம்பியிருந்ததா என் மனதுள்ளும்..

கனவுகளோ அல்லது நனவுநிலைக் காட்சியசைவுகளோ... கதறக் கதற வதம் செய்யப்பட்டமை நினைவிலுண்டு. உண்மையைக் கூறுவதாயின் அதுவே எனது பெரு விருப்பாயுமிருந்திருக்கலாம்.., உறவுகளின் போலி வேடங்களைக் களைந்தெறிவதற்கான.. இன்னமும் தெளிவுற்றால், மனிதர்களது நிஜ முகத்தினைக் கண்டடவதற்கான எனது மனங்கொள்ளா ஆசையிலிருந்து அது முளைவிட்டதாகவுமிருக்கலாம்.

பாலியல் வல்லுறவுக்குள்ளாகி, குதறப்பட்ட முலைகளுடனும் கிழிந்த உதடுகளுடனும் தொடைகளில் இரத்தம் வழிந்தோட.. பெற்றோர் முன் போய் நின்றால் அவர்கள் என்ன நினைப்பார்களாயிருக்கும்.. ஓவென்று பெருங்குரலெடுத்து அழுவாளோ அம்மா..? அக்கா என்ன சொல்வாள்.. நீயொரு அப்பட்டமான sadist.. போய்க் குளிச்சுட்டு வாடி.. என்பாளாயிருக்கும். என்னவன்...??? தோழியொருத்தியின் துணைவனைப் போல.., நான் நேசித்தது உன் மனதைத்தான்.. உடலையல்லவென தமிழ்த்திரைப்பட வசனங்களை எடுத்து வீசிவிட்டு (உண்மையில் அச்சம்பவத்தினூடான அவளது களங்கங்களை - அவர்கள் கூறுவதன்படி - முற்றுமுழுதாக ஏற்பதன் அடையாளமிது).. பிறிதொரு பொழுதில் வாக்குவாதம் முற்றிப்போக, "நீயென்ன பத்தினியா.." என்று எதிர்க்கேள்வி கேட்பானோ... இல்லையில்லை.., உன்னுடலில் எந்தக் களங்கமுமில்லையென்றபடி என்னை நெஞ்சில் தாங்கிக் கொள்வானாயிருக்கும்.

நிஜங்களை நிந்திப்பதாலும், நியாயப்பாடுகளைப் புறக்கணிப்பதாலும் நிழல்கள் நிதர்சனமாவதில்லை. வேடங்களைந்த முகங்களைத் தரிசிப்பதற்கான தீராத தேட்டம் உள்ளமெங்கும் நிறைந்திருப்பினும் இப்போதைக்குக் கெஞ்சுகிறேன் அவளை.., என்னைக் கைவிட்டுவிடும்படி.. என் கனவுகளினின்றும் காணாமற் போகும்படி.

சில கணங்களேனும், ஆழ்ந்த உறக்கத்தில் கனவுகளற்ற பெருவெளியில் கரைந்திட வேண்டும் நான். எனக்குத் தேவை ஓய்வு. வெறும் ஓய்வு. என்றென்றைக்குமான ஓய்வு. என்னை உறங்க விடுங்கள், தயவுசெய்து.


Sunday, October 15, 2006

இரவின் தடங்கள்

அந்தக் கணத்தின் நிசப்தம்
எதையும் உணர்த்திப் போனதாக
நினைவில்லை
இருட்டும் நானும் மட்டுமேயான தெருக்களில்
மழைச்சரங்களும் சில்லூறுகளும்
என் காலடித்தடங்களுடன்
வழித்துணையாக கூடவே
சலனங்களில்லாப் பொழுதுகளின்
பிரளயங்களைத் தூண்டியபடி

மௌனங்கள் இன்னமும்
மொழிபெயர்க்கப்படா
சாலைகளின் வளைவுகளுள்
ஏதோவொன்றிலிருந்து தோன்றிப் பின்
தொடர்கிறது
கனவுகளைக் கலைத்துப்போகும்
முகமூடி மனிதனைப்போல
இன்னுமொரு காலடியோசை

பாதங்கள் விரிந்து
முதுகுப் பரப்பெங்கும்
நிழலாய்ப் படர்வதை உணர்ந்து
திடுக்கிட்ட மனம் சில்லிட்டுப் போக
பிரபஞ்சத்தை நிறைத்தபடி
கண்ணெதிரே விரிகிறது
முன்னமொரு நாளில்
அணுவணுவாய் உணர்வுகளை
சிதைத்துப் போனவனின் முகம்

மற்றுமொரு மழைக்காலத்தில்
பீதியூட்டும் காலடியோசை
பின்தொடராத் தவிப்பில்
பதறுகின்ற மனத்தோடு
மறுபடியும் நான்

தெருக்கள் மட்டும்
நீண்டு கொண்டே போகும்
என்றென்றைக்குமாய்...

15.10.2006

Thursday, October 05, 2006

சுவர்க்கத்தின் வர்ணமும் பூலோகத்தின் வெளிறலும்


பாதாள ரயில்வண்டி இரு நிலையங்களுக்கிடையே
வெகுநேரம் நின்றுவிடும் சமயத்தில்
சம்பாஷணை எழுகிறது, பின் மெதுவாக மங்கி
மௌனமாய் மாறுகிறது
ஒவ்வொரு முகத்தின் பின்னாலும்
சிந்தனையற்ற வெறுமை ஆழமடைகிறது
சிந்திக்க ஏதும் இல்லை என்ற
வளர்ந்துவரும் பீதி மட்டுமே எஞ்சி நிற்கிறது
- T.S.Eliot (நன்றி:- அழகும் உண்மையும்: மார்க்ஸியப் பார்வை. தமிழாக்கம் - நேத்ரா, எஸ்.வி.ராஜதுரை)


1.

உலகின் எந்த மூலையிலும், இண்டு இடுக்கிலுங் கூட இடமில்லாமற் போனதாய்.. ஒவ்வொரு அணுவாலும் புறக்கணிக்கப்படுவதாய் உணர்ந்த இரு நெஞ்சங்களின் சங்கமிப்போடு தொடர்கிறது, இன்றைய படத்துடனான இரண்டறக் கலத்தல். திரையில் பார்வையற்ற சிறுவனொருவனுக்கு - அவனது குறைபாட்டினைக் காரணங்காட்டி - அவன் வாழவிரும்பிய உலகில் இடம் மறுக்கப்படுகிறது. அன்றாடங்களின் நகர்வில் அமர்ந்து படம்பார்த்துக் கொண்டிருக்கும் என்னைப்போன்ற ஒருத்திக்கோ, பெண்ணாய் அல்லது அவர்கள் கூறுவதன்படி இரண்டாம் தரப் பிரஜையாய் பிறந்துவிட்ட காரணத்தால்.., வயது ஏற ஏற.. வருடங்கள் நகர நகர சிறுவர்களின் உலகில் இடமில்லாமற் போகிறது. அதேவேளை பெரியவர்களின் உலகிலும் - அவர்களது கயமைத்தனங்களை இயல்பாக ஏற்றுக்கொண்டு வாழத்தெரியாததால் - இடம் மறுக்கப்பட்டு விடுகிறது. இனியும் எங்கே போய்த் தேடுவது எனக்கான இடத்தை..? உடல் குறுக்கி மனம் நடுங்கி, உன் மனச்சந்தில் ஒடுங்கிக்கொண்டிருக்கும் இன்றைய பொழுதுகூட நாளை பறிபோய்விடக்கூடுமோ என்னமோ.. யார் கண்டார்? ஒரு கணம் சோர்ந்த பாதங்கள் எங்கேனும் தரித்து நின்றாலும் உடைமையாளர்களின் அலறல் வீரிட்டெழுகிறது. "போ... ஓடிப்போ இங்கிருந்து... இது உனக்கான இடமல்ல". எந்த இடமும் எனக்கானதல்லவென எனக்கும் புரிகிறதுதான். இருந்தும், அதையே சொல்லிக்காட்டி நான் அநாதரவானவளென அடிக்கடி நீங்கள் நினைவுறுத்துகின்ற போது.. தெள்ளிய ஓடைபோல என் இயலாமைகள் உங்கள் வார்த்தைகளினூடு பிரதிபலித்துத் தெறிக்கின்ற போது இன்னுமின்னுமதிகமாக உங்கள் உலகத்தினை அருவருக்க ஆரம்பிக்கிறேன்.

பால்யப் பருவத்து பசும் நினைவுகளுடன் இன்னமும் சிறகடித்துப் பறப்பவர்களைக் கண்ணுறும் போதெல்லாம் சமயங்களில் ஒருவிதப் பொறாமையுணர்வு தலைதூக்கும். நகரங்களால் தூக்கி வளர்க்கப்பட்ட எம் போன்ற குழந்தைகளுக்குக் கடந்தகாலங்களை அசைபோடுகையில் நினைவில் நிற்பதெல்லாம் தூசும் வாகனப் புகைகளும் மறைத்த சில மங்கிப்போன சம்பவக் கோர்வைகள்தான். வறண்டு போன பால்யங்களில் படித்துச் சிலிர்த்த கஸாக்கியக் கிராமங்களையும், ஸ்தெப்பிப் புல்வெளிகளையும், சணல் பூத்த வயல்களையும் பற்றியதான கனவுகள் மட்டும் இன்னமும் எஞ்சியிருந்து இன்றைய பொழுதின் வாழ்தலுக்கு வர்ணங்களேற்றிப் போகும். தனிமையின் சிலிர்ப்பில்.. மனதில் அலைமோதும் மெல்லிசையின் மிதப்பில்.. கால்கள் எனைமீறி நர்த்தனமிட்டுப் பின்னும் போதும்.., மெய்மறந்து கனம் தொலைத்து நீர்ப்பரப்பின்மீது மீன்குஞ்சென மிதந்தலையும் போதும் மூப்படையவோ, சாகவோ மறுத்தபடி லிவ் உல்மனுக்குள்ளும் எனக்குள்ளும் வாழ்ந்திருக்கும் அந்தச் சின்னஞ்சிறு பெண் உயிர்த்தெழுவதை உணர்ந்திருக்கிறேன்.

உங்களது மொழியில்.., உங்களது மதிப்பீடுகளின்படி அழகானவளல்ல நான்.., பிறை நுதற் பாவையல்ல; சேலகட்டிய விழியினளல்ல; கொவ்வைக் குமிண் சிரிப்பழகியல்ல; முதிர் கோம்புக் கொங்கையினளல்ல; அலைந்தாடும் கொடியிடைக் குமரியுமல்ல. நானொரு வெறும் பெண்... உங்கள் கனவுகளில் வளைய வருமொருத்தியின் நளினங்களுடனும், 'பெண்மை' யின் இலக்கணமான மென்மையுடனுமல்லவெனினுமேகூட.., எனதேயெனதான விழுமியங்களுடன் - மலரல்ல, நிலவல்ல, தேவதையுமல்லாத - பெண் மட்டும்தான்.

நானும் காதலிப்பேன் ஒருவனை.., ஒரு குழந்தையின் கதறலைப்போல.. நெக்குருகி நெக்குருகி.. நெஞ்சம் கசிந்து. சமயங்களில் தாயுமாவேன்.., ஒரு சிறுமி தனது விளையாட்டுப் பொம்மைக்குத் தாயாவதைப்போல.. கள்ளமற்று, கபடமற்று.. சற்றும் பிறழ்வுறாமல்.


2.

சமீபத்தில், குறுகிய காலத்திற்குள்ளாகவே சில அருமையான படங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. ஷியாம் பெனகலின் அங்கூர், Frida, இங்க்மர் பெர்க்மனின் Cries and Whispers, கிச்சான் உள்ளிட்ட இன்னும் சில குறும்படங்களென அவ்வரிசை நீளும். ஏன் அவையனைத்தையும் பற்றி எழுத என்னால் முடிவதில்லையென்ற சந்தேகம் எனக்குள்ளேயும் பலமுறை எழுவதுண்டு. உண்மையைக் கூறுவதானால் எழுதுமளவுக்கு அவற்றில் பெரும்பாலான படங்கள் மனதில் எவ்விதச் சலனங்களையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. சிறந்த படங்களனைத்தும் எம்மைப் பாதிக்கவேண்டுமென்றும், எம்மைப் பாதிக்கும் அனைத்தும் சிறந்தவையாகத்தானிருக்க வேண்டுமென்றும் நியதிகளொன்றுமில்லைதானே. வேறெவற்றையும்விட குழந்தைகளுக்கான / குழந்தைகளைப் பற்றிய எவையும் என் அகவுணர்வை அதிகமதிகம் பாதிக்கின்றன. அங்கூர் போன்ற தரமான படங்களை விடவும், நேற்றுக் கேட்ட குழந்தையொன்றின் அழுகை பற்றிச் சொல்வதற்கு என்னிடம் ஆயிரம் கதைகளிருக்கக்கூடும்.

இங்க்மர் பெர்க்மனின் Cries and Whispers இதற்கு விதிவிலக்கு. 'So let the cries and whispers die away' என படம் முடிவுற்ற பின்னரும் கூட அடிமனது அலறிக்கொண்டேதானிருந்தது. அலறல்களின் நீட்சியில் அந்நிகழ்வு குறித்த தகவல்களை வழங்கிய நண்பருக்கும் நன்றி கூறிக்கொண்டேயிருந்தேன். இத்தகைய film festivals கொழும்பில் அடிக்கடி நடைபெறுகின்றபோதும் அவைகுறித்த தகவல்கள் அனைவரையும் - குறிப்பாக இதுசார்ந்த ஆர்வமுடையவர்களுக்கு - முறையாகப் போய்ச்சேருவதில்லை. கடந்த வாரம் முழுதும் இங்க்மர் பெர்க்மனின் 6 படங்கள் திரையிடப்பட்டிருந்தும் நாளாந்த அலுவல்களின் மத்தியில் ஒரேயொரு படத்திற்கு மட்டுமே செல்லும்வாய்ப்புக் கிடைத்தமை வருந்தவைத்தாலும், அவ்வாய்ப்பினைப் பெற்றுத் தந்தமைக்காக நண்பருக்கு மிகவும் கடமைப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.

விடயத்திற்கு வருவோமாகில், ஈரான் படங்களில் மிகவும் கவர்ந்த அம்சம் தமது அதியுயர் பண்பாட்டினூடாக (rich culture) அவர்கள் குழந்தைகளைப் பேணும் / பாராட்டும் விதம்தான். பெரும்பாலான ஈரானியப் படங்கள் சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கின்றமையும், சிறுவர்களே முக்கிய கதாபாத்திரங்களாக விளங்குகின்றமையும் விதந்து நோக்கத்தக்கவை. விழிவிரித்து ஆச்சரியப்பட வைப்பது, பார்வையாளர்களை தம்மோடு ஒன்றித்துப் போகவைக்கும் அச்சிறுவர்களின் அசாத்தியமான நடிப்புத் திறமைதான். சினிமாத்துறையில் பல்லாண்டுகால அனுபவம் வாய்த்த ஆனானப்பட்ட நடிகர் திலகங்களுக்கே சாத்தியமற்றுப் போன உணர்வு வெளிப்பாடுகளை அநயாசமாகவும், மிக மிக இயல்பாகவும் அச்சிறுவர்கள் தம் முகங்களில் வெளிக்கொணர்கின்றமை மெய்சிலிர்க்க வைப்பதில் வியப்பதற்கில்லை.

மேலைத்தேய பகட்டுலகம் சிறுவர்களுக்குத் தம்மத்தியில் வழங்கியிருக்கும் ஸ்தானத்தின் போலித்தனங்கள் அவற்றிற்கு முழு எதிரிடையாகவமைந்த ஈரானியத் திரைப்படங்களைப் பார்க்கும்போதே இன்னும் தெளிவாகப் புலனாகின்றன. சிறுவர்களின் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட அதிநவீன சாகசங்களை அல்லது அசட்டு / குறும்புத்தனங்களை மாத்திரமே பதிவுசெய்துவந்த மேலைத்தேயத் திரையுலகம் ஈரானியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது எத்தனையோ. சிறுவர்களது உலகம், உணர்வுகள், எதிர்பார்க்கைகளென மேலைத்தேயம் கவனத்திற்கொள்ளாத பல விடயங்களை ஈரானியத் திரைப்படங்களில் கண்ணுற நேர்கையில் மொழி, பண்பாட்டு, புவியியல் வேறுபாடுகளுக்குமப்பால் நாமும் அவற்றுடன் ஒன்றிப்போக முடிகின்றது.


3.

சர்வதேசச் சிறுவர் தினத்தை முன்னிட்டு கொழும்பு எல்பின்ஸ்டன் திரையரங்கில் சர்வதேசச் சிறுவர் திரைப்படங்கள் இவ்வாரம் முழுவதும் - கடந்த ஞாயிறன்று இலங்கையின் 'சமனல தட்டு' படத்துடன் ஆரம்பித்து ஜேர்மானிய, பிரான்சிய, இந்திய, ஈரானிய, ரஷ்ய, சீனப்படங்களென - திரையிடப்பட்டு வருகின்றன. இன்று மஜீத் மஜீதியின் மற்றுமொரு சிறுவர் படமான 'Colour Of Paradise' னைப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது.

c1

தாயையிழந்த பார்வைப் புலனற்ற சிறுவனொருவனைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள கதை தெஹ்ரானின் பார்வையற்றோர் பாடசாலையொன்றின் கோடைக்கால விடுமுறையுடன் ஆரம்பமாகின்றது. மூன்றுமாதகால விடுமுறையை முன்னிட்டு பாடசாலை மூடப்பட தன்னை அழைத்துச் செல்லவரும் அப்பாவுக்காக காத்திருக்கிறான் மொஹமட். தாமதமாக வந்துசேரும் அப்பாவோ - மனைவியுமற்ற நிலையில் குறைபாடுடைய மகனைப் பெரும் சுமையாகவே கருதும் சராசரிக் கல்வியறிவற்றவர்களில் ஒருவர்தான் அவருமாதலால் - அவனைக் கிராமத்துக்கு அழைத்துச்செல்லப் பிரியப்படவில்லை. பாடசாலை அதிபர் கைவிட, வேறுவழிகளேதுமின்றி மொஹ்மடை அழைத்துச் செல்கின்றாரெனினும் அங்கே அவன் தனது இரு தங்கைகளுடனும், பாட்டியுடனும் குதூகலமாகப் பொழுதைக் கழிப்பதை தனது அடுத்த திருமணத்திற்கான பெரும் இடையூறாகக் கருதி, தனது தாயின் பலத்த எதிர்ப்புக்களையும் மீறி ஊரிலிருந்து அவனை வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு போய் ஒரு தச்சரிடம் (அவரும் பார்வையற்றவரே..) வேலைக்குச் சேர்த்துவிடுகிறார். பேரனின் பிரிவும், மகனின் நடவடிக்கைகளும் வேதனையில் ஆழ்த்த வயது முதிர்ந்த பாட்டி நோய்வாய்ப்பட்டு இறந்து போகின்றார். அத்துடன், அப்பாவின் மறுமணமும் கைவிடப்படுகின்றது. அவர் மகனை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வரும் வழியில், நதியின் குறுக்காகக் கடக்கையில்.. பாலம் உடைந்து விழுந்து மொஹமட் நீரோட்டத்துடன் அடித்துச் செல்லப்படுகிறான். இத்தனைகாலமும் மகனை சுமையாகவே கருதி வெறுத்திருந்தும் இனம்புரியாத பாசம் வந்து தாக்க, அப்பாவும் நீரில் குதிப்பதாகத் தொடர்கிறது கதை.

சிறிய கதைதானெனினும், ஒவ்வொரு காட்சி நகர்வினூடாகவும் எம்மை இலயித்துப் போகச்செய்யும் இயக்குநரின் அசாதாரண இலாவகம் வியக்கவைத்தது. மொஹமட் ஊருக்குத் திரும்பும் காட்சி அருமையாக எடுக்கப்பட்டிருந்தமையையும், இன்னகாட்சிதான் மிகவும் கவர்ந்தது / பாதித்ததென தனித்து அடையாளங்காட்ட முடியாமல் படத்தின் ஒவ்வொரு நகர்வும் மனதை அள்ளிப் போனமையையும் குறிப்பிட்டுத்தானாக வேண்டும். பார்வைப் புலனற்றவனெனினும் மொஹமடின் கேட்கும் திறமையும், பொருட்களை அவன் உணர்ந்துகொள்ளும் விதமும், அவற்றினூடாக அவன் கற்பதும் அழகாக எடுத்துக்காட்டப்பட்டிருந்தன. பறவைகள் ஒலியெழுப்புகையிலும், ஆற்றோரக் குறுங்கற்களிலும், கோதுமைத் தானியங்களிலும்.. அனைத்திலுமே தான் கற்றிருந்த பிரெய்லி எண்களையும், எழுத்துக்களையும் அவன் நினைவு கூர்கின்றமை கற்றலின் மீதான அவனது தீராத தாகத்தினை வெளிக்காட்டியிருந்தது. தங்கைமாருடன் கோதுமை வயல்களினூடாகவும், வண்ண வண்ணப் பூக்கள் மலர்ந்திருந்த வெளிகளினூடாகவும் அவன் ஓடித்திரிந்த போது, நானும் மறுபடியும் சிறுமியாய் மாறி அவர்களோடு கைகோர்க்க முடியாதாவென்ற ஏக்கம் தலைதூக்கியது. வனப்புமிகு அம்மலையோரக் கிராமத்தின் எழிலையும், மலர்களின் வண்ணச் சிதறல்களையும் அவனால் கண்டுகளிக்க முடியாதுதானெனினும் தங்கையரின் அன்பும், பாட்டியின் அரவணைப்பும் - அவை மட்டுமே அவன் வேண்டுவதென்ற வகையில் - அவனறிந்த இருட்டுலகிற்கு சுவர்க்கத்தின் நிறங்களையேற்றிச் செல்லுமென்பதை உணர்த்தியபடி படம் நகர்ந்துகொண்டிருந்தது.

அப்பா மொஹமடைத் தச்சரிடம் கொண்டுபோய் விட்டவந்நாளில்...:

"எனது ஆசிரியை சொன்னார்.., எமக்குப் பார்வையில்லையென்பதால் கடவுள் வேறெவரையும்விட எம்மை அதிகம் நேசிப்பதாய்.. ஆனால், அது பொய். எம்மை உண்மையாகவே நேசித்திருந்தால் கடவுள் எம்மை பார்வையற்றவர்களாகப் படைத்திருக்கவே மாட்டார். எனது நீட்டிய கைகளின் மூலம் தடவித் தடவி ஒருநாள் கடவுளைக் கண்டுபிடிப்பேன். அன்று அவரிடம் கேட்பதற்கென பல கேள்விகளும், அவரிடம் சொல்வதற்கென எத்தனையோ இரகசியங்களும் என்னிடம் உள்ளன.."

எனக்கூறி அவன் கேவிக் கேவி அழுதபோது இனம்புரியாதவொரு சோகம் மனதில் கவிந்துபோனது.., கூடவே ஒருவித வாஞ்சையும். அந்தக் கணத்தில் அந்தச் சுட்டிப் பையனில் என்னைக் கண்டேன்.. என் சின்னஞ்சிறு பெண்ணைக் கண்டேன். அவனைக் கட்டியணைத்து, நீயும் நானும் ஒரே இலக்கினை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோமென்று கூறவேண்டும் போலிருந்தது. நம்பிக்கைகளை மனதுள் நிறைத்தபடி மனிதத்துவத்தை எதிர்நோக்கிய பயணத்தில், அவனுடனிணைந்து நடைபோடவேண்டும் போலவுமிருந்தது.

hossein_mahjub_mohsen_ramezani_the_color_of_paradise_001

அப்பா தான் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணைச் சந்திக்கச் செல்லும்போதான காட்சிகளின் கோமாளித்தனங்கள் படத்தின் கனதியைக் குறைத்துவிடுகின்றமை வருந்தவைத்ததெனினும் அது எந்தவிதத்திலும் இரசனையைக் குலைத்துவிடாமையும், பார்வையாளரைப் படத்துடன் ஒன்றிப்போகும் உணர்வைத் தோற்றுவித்தமையும் மஜீத் மஜீதியின் சாதனையென்றே சொல்லவேண்டும்.


4.

மிக நொய்ந்த சமூகப்பிரிவினரென்ற வகையில் சிறுவர்களை அடக்கியாள்வதற்கான உலகத்தின் முயற்சிகள் குறித்த விழிப்புணர்வு இருக்கின்றதா எம்மிடம்..?

திருகோணமலையில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வெளிநாட்டு அரசுசாரா அமைப்பொன்றின் எதிரேயுள்ள ஐஸ்கிறீம் கடையொன்றில் 14 வயதே நிரம்பிய சிறுவனொருவன் வேலைசெய்வதாகவும், அவ்வமைப்பின் தொண்டர்கள் அங்கே வந்து ஐஸ்கிறீம் அருந்தி சிறுவர் உரிமைகள் பற்றிய காரசாரமான வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுகின்றபோதும் அச்சிறுவனை ஏனென்று கேட்பதற்கு யாருமேயில்லாத அவலநிலையை நண்பரொருவர் எடுத்துக் கூறியிருந்தார். சிறுவர் உரிமைகள் தொடர்பான மேலைத்தேயத்தின் அக்கறை இவ்வளவும்தான்.

சில தினங்களுக்கு முன், கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எட்டு வயதே நிரம்பிய மைத்துனரொருவரை நலம் விசாரித்து வந்திருந்தேன். அண்மையில் யாழ்ப்பாணத்தில் கடையொன்றினுள் புகுந்த இனம்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியதில் ஒரு இளைஞர் பலியானதுடன், அப்போதுதான் பாடசாலையிலிருந்து திரும்பிய இச்சிறுவனும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்தான். முள்ளந்தண்டில் சிதிலங்கள் பாய்ந்ததில் கைகால்கள் வழங்காமல், உடல் மரத்துப்போய் படுத்த படுக்கையாகக் கிடந்த அந்தத் துருதுருச் சிறுவனைப் பார்த்தபோது மனதின் அலறல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. என்ன தெரியும் அவனுக்கு..? காலாகாலத்திற்கும் சுமந்துகொண்டிருக்க வேண்டிய இவ்வடுக்கள் அவனது குழந்தைப் பருவத்தையுமல்லவா பறித்துக்கொண்டு விட்டன.. ஏன் இப்படி... ஏன் இப்படி...


(சிந்திக்க ஏதுமற்ற பொழுதுகளைத் தூண்டிவிட்ட பால்யகாலத்து நினைவுகளுக்கு..)