Tuesday, October 24, 2006

பசுமையாம்.., பாரிப்பாம்.. கருகிடட்டும் கனவுகள்..!


01.

இப்போதெல்லாம்.. சிலநாட்களாகவே என் கனவுகளில் வளைய வருகிறாள், ஒருத்தி. வெளிர் இரவுகளில் நீலம் பாரித்த புன்னகையுடன் கருநிலவாய் தினந்தோறும் தோன்றி வளர்ந்து தேய்ந்து பின் மறைகிறாள்.., புரியாத மொழியில் கதறும் அவள் குரலின் ஒவ்வொரு பிசிறலும் ஊசியாய்த் துளைக்க... காதுமடல்கள் நீள நீளமாய் வளர்ந்து செவிப்பறையை இறுகவடைத்துவிட வேண்டுமென்ற எனது வேண்டுதல்களையும் புறக்கணித்தபடி.

ஏன் வருகிறாள், எதற்காக அலறுகிறாள், என்னிடமிருந்து என்னத்தை எதிர்பார்க்கிறாள்..? பதில் வேண்டின், காலவடுக்குகளின் ஏதோவோர் ஆழத்தில் புதையுண்டுபோன படிமங்களை மறுபடியும் கிளறியெடுக்க வேண்டியிருக்கும்.., சிதழூறும் ரணங்களைச் சீண்டுவதைப்போல கணநேர இன்பம் வேண்டி காலாகாலத்திற்குமான வேதனையை மறுபடியும் உயிர்ப்பிக்க வேண்டியிருக்கும்.. சாம்பல் பூத்த நினைவுகளையும் கூடத்தான்.

இன்னமும், விழிகளை நிறைத்திருப்பதெல்லாம்.. திரையிடப்பட்ட முகமும், நீண்ட கறுப்பு உடையும், கையிலேந்திய அவளது பால்மணம் மாறா பச்சிளங்குழந்தையும்தான். ஆற்றங்கரையோரக் குடியேற்றமொன்று... சிந்துவெளி, ஹரப்பா.. தைகிரீஸ் - யூப்ரடீஸ்.. ஏன் மாயா அல்லது பெயர் குறிப்பிட முன்னரே வரலாற்றோட்டங்கள் புறக்கணித்துவிட்ட ஆபிரிக்க நாகரிகச் சமுதாயமென்றுகூட எடுத்துக்கொள்ளலாம்.. அதது அவரவர் விருப்பம்.. என்னைப் பொறுத்தவரை அதுவொரு வெறும் ஆற்றங்கரையோரத்துக் குடியேற்றம் மட்டும்தான். நேரம் நடுச்சாமத்தை எட்டிக்கொண்டிருப்பது சாமக்கோழியின் கேவலின் வழி புரிந்தாலும், இப்போதுதான் மேளங்களினதும், முரசினதும் ஒலி துரித லயத்தினை அண்மித்திருந்தது. கிராமியச் சடங்கோ அல்லது ஏதேனுமொரு விழாவோ அங்கே இடம்பெற்றுக் கொண்டிருப்பதற்கு அறிகுறியாக கொம்பு வாத்தியமொன்று உச்சஸ்தாயியில் முழங்கும் ஓசை காதைப் பிளக்க.., பாரம்பரிய நடனத்தின் உச்சகட்டத்தில் இளம்பெண்களும், ஆண்களும் தமை மறந்து தீப்பந்தங்களின் மந்தகாச வெளிச்சத்துடன் சுடரின் அசைவுக்கேற்ப சந்தம் பிசகாமல் ஆடிக்கொண்டிருந்தனர். ஏனோவொரு போதை கலந்த மயக்கத்தின் ஆழத்தில் கிராமமே கட்டுண்டிருக்க.. ஒருத்தி மட்டும் கருநிழலென அவ்விடத்திலிருந்து நழுவுகிறாள், தனது என்றென்றைக்குமான விழிப்புணர்வினைத் தக்கவைத்தபடி.

ஆற்றங்கரையில் நின்றிருந்த தனித்த படகிலேறி சலனங்களற்ற நீரோட்டத்தின் பாதையில் அவளும், அவளைச் சுமந்த படகும் நகரத் தொடங்க.. கையிலேந்திய குழந்தையுடனான அப்பிம்பம் எந்தன் ஆதியன்னையை நினைவுறுத்திப் போனது.. குழந்தை இயேசுவுடனான அன்னை மரியாளையும்.., சமயங்களில் தாரகாசுரனை வதம்செய்த காளியையும். வாத்தியங்களின் ஓசை தொலைதூரத்தில் மங்கிக்கொண்டிருக்க, அடுத்து வந்த சில மணித்துளிகளின் மீது கவிந்துகொண்டது நடுச்சாமத்தின் கனத்த மௌனம்.

ஆற்றுத் தீவொன்றில் கரையொதுங்கியது படகு, அவளைக் கேளாமலேயே. தாவியிறங்கியவள் குழந்தையுடன் நீரினுள் அடியெடுத்து நடக்கத் தொடங்குகிறாள். தூக்கம் கலைந்தெழுந்து குழந்தை அழுதுவிடக் கூடாதேயென்ற கவலை அவள் முகத்தில் அப்பியிருந்தமை திரைகளைத் தாண்டியும் எப்படி எனக்குத் தெரிந்ததென்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். எதிர்ப்பட்டபோது அவளது தோளில் அமர்ந்திருந்த பட்டாம்பூச்சியொன்றை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. முகத்திரை விலக்கி நீலம் பாரித்த புன்னகை எனை வந்து தீண்டியபோது, "அம்மா.." என்றலறி அவள் காலடியில் விழுந்தேன். அள்ளியணைக்க கைநீட்டுகையில், பட்டாம்பூச்சிக் குவியலென மாறி திசைக்கொன்றாய் அவள் பறந்துவிட்டிருந்தாள்.. குழந்தை மட்டும் கொட்டக் கொட்ட விழித்தபடி என் கால்களைக் கட்டிக்கொண்டது.

ஒரு பெருங்கடமை... யுகயுகாந்தரங்களாய் என் தலையில் அப்படித்தான் சுமத்தப்பட்டது.


02.

அத்துடன் எல்லாமும் முடிந்து விடவில்லை. பின்னரும் சில பொழுதுகளில் அவள் அடிக்கடி வருவாள், என் கடமையை நினைவுறுத்திப் போகவோ என்னவோ. ஏ.கே 47 ரக துப்பாக்கியுடனும், சமயங்களில் டி. 56 உடனும்.. சாதாரண பிஸ்டலுடனும் கூட. கறுத்த பெட்டியொன்றைக்கொண்டு வந்து ஒப்படைப்பாள்.. இதைப் பாதுகாப்பது உன் பொறுப்பென. அதைப் பாதுகாப்பதற்கேயாயினும் நானென் உயிரைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டியிருக்கும், பிரியத்திற்குரியவர்களை அல்லது அப்படிக் காட்டிக் கொள்பவர்களை / பாசாங்கு செய்பவர்களைக் கொன்றேனும் நானென் கடமையை நிறைவேற்றியேயாக வேண்டியிருக்கும்.

ஓரிரவில், சில வக்கிர மனிதர்களின் பிடியிலகப்பட்டு சிதைக்கப்பட்டுக் கொண்டிருந்த என் முகத்தில் அவளது சாயலைக் கண்டேன். ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி புணர்ந்துவிட்டு எனை அவர்கள் தூக்கியெறிந்த போதும், வீறாப்புடன் மறுபடி நிமிர்ந்தெழுந்து என் வழி தொடர்கையில்.. தடுமாறி விழப்போனவளின் இடையைச் சுற்றி இறுகவணைத்து தன் தோள் மீது என் தலைசாய்த்துக்கொள்ளச் செய்தவனில் அவளது படைப்பின் இறுமாப்புக்களைக் கண்டேன். அந்தக் கணத்தில் அவனது அணைப்பும், அருகாமையும் எனக்கு வேண்டியிருந்தது. அவளொருபோதும் எனைக் கைவிடுவதில்லையென்ற நம்பிக்கையும் எனக்குத் தேவைப்பட்டிருந்தது.

பிறிதொரு நாள், பாடசாலைப் புளியமரத்து நிழலின் கீழ் சிமெந்துக்கட்டில் நான் உட்கார்ந்திருந்தபோது வைத்தியம் பார்ப்பதற்கென வந்த பூசாரி வாகாய் உடலில் அத்துமீற விழைகையில் கைகொடுக்க ஏன் வராமல் போனாளென்பது இன்னமும் புரிந்தபாடில்லை. கதறித்துடித்தபடி விழித்தெழுந்து அருகில் படுத்திருந்த சகோதரியின் முதுகில் முகம்புதைத்து பிரமைகளிலிருந்து விடுபட முயன்றபோதும் அவள் ஆறுதல் கூறவில்லை. அன்றைக்குக் குளியலறைக் கதவு திறந்து என் நிர்வாணங்களைப் போர்த்திக் கொண்டவனைத் தண்டித்திருப்பாளென்றும் எனக்குத் தோன்றவில்லை.

இருந்தும், என் கடமைகளின் மீது மட்டும் கரிசனை அதிகம் கொள்கிறாயடி பெண்ணே..


03.

இப்படியே அவளும், அவள் குறித்த / அவள் சார்ந்த கனவுகளும் அலைக்கழித்துக் கொண்டிருக்க ப்ராய்டின் கனவுகள் பற்றிய கருத்தாக்கங்களைத் தேடி வாசிக்கத் தொடங்கினேன். பால்யகாலத்தில் அடக்கிவைக்கப்பட்ட உணர்வுகளும், ஆசைகளும்தான் கனவுகளாக வெளிப்படுகின்றனவாம். அதுவே பிற்காலங்களில் மனப்பிறழ்வுகளாகவும் உருமாறுவதுண்டு. எது எவ்வாறிருப்பினும், நானுமொரு சிறுமியாகவிருந்தபோது எவனாலும் வன்புணரப்பட வேண்டுமென்ற உள்ளார்ந்த ஆசை நிரம்பியிருந்ததா என் மனதுள்ளும்..

கனவுகளோ அல்லது நனவுநிலைக் காட்சியசைவுகளோ... கதறக் கதற வதம் செய்யப்பட்டமை நினைவிலுண்டு. உண்மையைக் கூறுவதாயின் அதுவே எனது பெரு விருப்பாயுமிருந்திருக்கலாம்.., உறவுகளின் போலி வேடங்களைக் களைந்தெறிவதற்கான.. இன்னமும் தெளிவுற்றால், மனிதர்களது நிஜ முகத்தினைக் கண்டடவதற்கான எனது மனங்கொள்ளா ஆசையிலிருந்து அது முளைவிட்டதாகவுமிருக்கலாம்.

பாலியல் வல்லுறவுக்குள்ளாகி, குதறப்பட்ட முலைகளுடனும் கிழிந்த உதடுகளுடனும் தொடைகளில் இரத்தம் வழிந்தோட.. பெற்றோர் முன் போய் நின்றால் அவர்கள் என்ன நினைப்பார்களாயிருக்கும்.. ஓவென்று பெருங்குரலெடுத்து அழுவாளோ அம்மா..? அக்கா என்ன சொல்வாள்.. நீயொரு அப்பட்டமான sadist.. போய்க் குளிச்சுட்டு வாடி.. என்பாளாயிருக்கும். என்னவன்...??? தோழியொருத்தியின் துணைவனைப் போல.., நான் நேசித்தது உன் மனதைத்தான்.. உடலையல்லவென தமிழ்த்திரைப்பட வசனங்களை எடுத்து வீசிவிட்டு (உண்மையில் அச்சம்பவத்தினூடான அவளது களங்கங்களை - அவர்கள் கூறுவதன்படி - முற்றுமுழுதாக ஏற்பதன் அடையாளமிது).. பிறிதொரு பொழுதில் வாக்குவாதம் முற்றிப்போக, "நீயென்ன பத்தினியா.." என்று எதிர்க்கேள்வி கேட்பானோ... இல்லையில்லை.., உன்னுடலில் எந்தக் களங்கமுமில்லையென்றபடி என்னை நெஞ்சில் தாங்கிக் கொள்வானாயிருக்கும்.

நிஜங்களை நிந்திப்பதாலும், நியாயப்பாடுகளைப் புறக்கணிப்பதாலும் நிழல்கள் நிதர்சனமாவதில்லை. வேடங்களைந்த முகங்களைத் தரிசிப்பதற்கான தீராத தேட்டம் உள்ளமெங்கும் நிறைந்திருப்பினும் இப்போதைக்குக் கெஞ்சுகிறேன் அவளை.., என்னைக் கைவிட்டுவிடும்படி.. என் கனவுகளினின்றும் காணாமற் போகும்படி.

சில கணங்களேனும், ஆழ்ந்த உறக்கத்தில் கனவுகளற்ற பெருவெளியில் கரைந்திட வேண்டும் நான். எனக்குத் தேவை ஓய்வு. வெறும் ஓய்வு. என்றென்றைக்குமான ஓய்வு. என்னை உறங்க விடுங்கள், தயவுசெய்து.


No comments: