Friday, October 27, 2006

*எனக்குள் பெய்யும் மழை...


என்னிடம்
ஒரு துண்டுப் பிரசுரத்தைப் போல
நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க
வார்த்தைகள் இல்லை

இரவு
இரவினால் அதிகாரமிடப்பட்ட பகல்
நாளைக் காலையில்
சூரியன் உதிக்குமா என்பதில் கூட
சந்தேகம் கொண்டுள்ள என்னிடம்
கனவுகள்
தம் அர்த்தத்தை இழந்தவைதான்

இந்தச் சமூகத்தின் தொப்புள் கொடிக்கு
துப்பாக்கி நீட்டப்படும்போது
ஒரு மெல்லிய பூ நுனியில்
உட்காரக் கூடிய
வண்ணத்துப் பூச்சியின் கனது
எனக்கு சம்பந்தமற்ற
ஒரு சம்பவிப்பு மட்டுமே

நான் மனிதனாய் வாழும் முயற்சியில்
பூக்களை மரத்துடன் விட்டுவிட விரும்புகிறேன்
எனக்கு
பகலாய் உருவமைக்கப்பட்ட அழகிய இரவு
கனவாய் உள்ளது
- சிவரமணி


இலங்கையின் அரசியல் யாப்புக்களுக்குள் ஆழ்ந்து போயிருந்தேன். இன்றைக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னைய காலப்பகுதி நினைவினை ஆக்கிரமித்திருந்தது. புராதன நிலமானியச் சமூகவமைப்பு, ஐரோப்பியரின் வருகை, நாட்டின் சமூக பொருளாதார அரசியல் மாற்றங்கள், அந்நிய ஆக்கிரமிப்பின் உச்சகட்டமாக ஆங்கிலேயரின் வருகையும் கண்டி இராசதானியைக் கைப்பற்றுதலும், ஒரு சில வருடங்களுக்குள் சமூகவமைப்பே தலைகீழாகப் புரண்டமை அனைத்தும் மனத்திரையில் படமென விரிந்துகொண்டிருக்க, சட்டென்று கவனத்தைத் திசைதிருப்பியது எங்கிருந்தோ வந்து விழுந்த மழைத்துளியொன்று.

இப்போதெல்லாம் சில்லிடச் செய்யும் துளிகள் எதை நினைவுபடுத்துமென்பது சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லையே.. என்னவனின் இதழ் கசிவு.. புன்னகைத்துக்கொண்டே நிமிர்ந்தேன். மறுபடியும் கொட்டும் மழைக்குக் கூரை ஒழுகத் தொடங்கிவிட்டிருந்தது. பழங்காலத்து வீடில்லையா.. பாவம், அதுவும் எத்தனைகாலத்துக்குத்தான் நின்றுபிடிக்கும். கூரையிலிருந்து வழிந்து யன்னலில் விழுந்து தெறித்த துளிகளிலொன்றுதான் என் கவனத்தையும் சிதறடித்திருக்கிறது. சொட்டுச் சொட்டாய் மழைத்துளிகள் சந்தம் தவறாமல் விழுவதையும், தெறித்து பல்லாயிரம் முத்துத் துகள்களாய்ச் சிதறுவதையும் இடைக்கிடை சில என் கன்னங்களை வருடிச் செல்வதையும் இரசித்துக் கொண்டிருந்தேன்.

இப்படி எவ்வளவு நேரம் கழிந்ததோ நினைவில்லை.. சில கணங்களாக இருக்கக்கூடும் மற்றவர்களின் பார்வையில். எனக்கோ நினைவினடுக்குகளில் தொலைந்த யுகயுகாந்தரங்கள்தான். திடுக்கிட்டு விழிப்புநிலைக்குத் திரும்பியபோது மழைத்துளிகள் எனது அரசறிவியல் புத்தகத்தில் தாரை தாரையாகக் கோலமிட்டிருந்தன. பதறிப்போய் புத்தகத்தை எடுத்து மார்போடு அணைத்துத் துடைத்துக் கொண்டாலும், சில்மிஷம் செய்துவிட்டுப்போன துளிகளைக் கடிந்துகொள்ள முடியவில்லை. புத்தகங்களையும், படிப்பையும் எந்தளவுக்கு நேசிக்கிறேனோ அதையும்விட ஒருபடி அதிகமாய் மழையை நேசிக்கிறேனாக்கும்.

வானம் கவிழ்ந்து சரம் சரமாய் பூமியை நோக்கி கீழிறங்கிக் கொண்டிருந்தது. நடுச்சாமத்தில் தொடங்கிய மழைதான்.. விடிந்தும் கதிரவனைக் காணவில்லை.. அவனுக்கென்ன கவலை.. இருண்டபடிதான் காலையும் விடிந்தது.. இப்போது பகலாயிற்று.. இன்னமும் விட்டபாடில்லை, வானமும் தெளிந்தபாடில்லை. பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். தோளில் கனத்த புத்தகங்கள் தவிர, கையில் இன்னும் சில.. பற்றாக்குறைக்கு மறுகையில் குடை வேறு. மெல்லிய கூதல் காற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கையிலிருந்த புத்தகங்களை மார்போடு அணைத்தபடி கதகதப்புத் தேடிக்கொண்டு மழையை இரசித்தும் அனுபவித்தும் கொண்டு தனிவழி தொடர்ந்ததென் பயணம். மனம் மட்டும் நழுவி கடந்தகாலங்களை நோக்கி தாவிக்கொண்டிருந்தது.

இன்றைக்குச் சில மாதங்களுக்கு முன், இதேபோன்றதோர் மழைநாளில்தான் நானும் அவளும் காலாற நடந்து திரிந்தோம். மழை வலுக்க, வீட்டுக்குப் போகலாமென்ற என் வேண்டுகோளையும் அலட்சியப்படுத்திவிட்டு, 'உன்னுடன் இருக்கவேண்டும் போலிருக்கிறது..' என்றபடி கைகோர்த்துக்கொண்டு என்னை நடப்பாட்டிச் சென்றாள். மழைநீரில் தெருவெல்லாம் நிரம்பி முழங்காலளவு வெள்ளம்.. முன்னெச்சரிக்கையாய் தக்க ஆடையணிந்திருந்ததால் தப்பித்தோம். எதிரில் வருபவரின் முகம் கூடத் தெரியாதளவு தடித்த திரையாய் கவிந்திருந்தது மழை. தெருக்களில் மனித நடமாட்டத்தைக் காணவே காணோம்.. வாகனங்கள் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாய்.. வாய்க்கால்கள், குழிகள் குறித்த பயம் தெருவோரமாக நடக்கவிடவில்லை. கொழும்புத் தெருக்களைப்பற்றிச் சொல்லவேண்டியதில்லைதானே. நடுத்தெருவில் ராசகுமாரிகள் போல நடந்துகொண்டிருந்தோம், வேடிக்கைப் பேச்சுக்களில் எமைத் தொலைத்தபடி. கையில் குடையிருந்தென்ன.. பேய்மழைக்கு உச்சந்தலை தவிர மிச்சமெல்லாம் நனைந்தாயிற்று. மணிக்கணக்காய் கதைபேசித்திரிந்த காலங்கள்... இன்று, அதே மழை.. அதே தெருக்கள்.. நான் மட்டும் தனியளாய். கனத்துப் போனது மனம், கருக்கட்டிய மேகம்போல.

ம்ம்ம்... மறுபடியும் சுயவுணர்வு பெற்றுத் திரும்பி, ஒழுகும் இடங்களைக் கண்டுபிடித்து மழைத்துளிகளை ஏந்த பாத்திரங்களை வைக்கிறேன். மழையென்றால் காணும்.. வீட்டில் கிடக்கும் பழைய வாளிகளுக்கும், பண்டம் பாத்திரங்களுக்கும் வேலை வந்துவிடும். இந்த வீடு பரவாயில்லை.. ஆறுவயதுவரை வாழ்ந்த பழைய வீட்டின் நினைவு வந்தது. மிகவும் சிரமப்பட்டிருந்த காலங்கள் அவை...

அந்தவீடு தெரு மட்டத்திலிருந்து சில அடிகள் தாழ்வாக அமைந்திருந்ததால் கொஞ்சம் மழையென்றாலும் தண்ணீர் வீட்டுக்குள் புகுந்து நிறைந்துவிடும். கடும் மழையென்றால் வீட்டுக்குள் வெள்ளம்தான். அப்பா என்னையும், தம்பியையும் கட்டிலில் ஏற்றிவிடுவார். பாடசாலைக்கும் போகாமல் அக்காவினதும், அப்பாவினதும் தலையாய கடமை தொடங்கும். தண்ணீரை வாளியில் அள்ளி வெளியே ஊற்றுவது. மழைநாட்களென்றால் அப்பாவின் மாணவியருக்குக் கொண்டாட்டம்தானாம் அப்போதெல்லாம். அவர்தான் பாடசாலைக்கு வர மாட்டாரே.. எனக்கும் அதெல்லாம் வேடிக்கைதான். சமயங்களில் அக்காவோடு போட்டிக்கு தண்ணீர் அள்ளி ஊற்றுவேன். யார் வேக வேகமாக ஊற்றுவதென்று பந்தயமே நடக்கும். காலில் சிரங்கு வந்துவிடுமென்று பேசுவாள் அம்மா.. அதையெல்லாம் யார் கணக்கெடுத்தார்.. புது வீடு தேடியலைந்தபோது வெள்ளம் நுழையாத மேட்டுநிலம்தான் வேண்டுமென பிடிவாதமாய் நின்றாராம் அப்பா.. அதேபோலவே இந்த வீடு வாய்த்தது.

இன்றும், தெருவில் முழங்காலளவு வெள்ளத்தில் அடியெடுத்து அடியெடுத்து நடப்பதென்றால் கொள்ளைப் பிரியம்.., பள்ளங்கள் குழிகள் பற்றிய பயமிருந்தாலுமேகூட. ஊரிலுள்ள கஞ்சல், குப்பையெல்லாம் காலடியில் வந்து சிக்கிக்கொள்ளுமென்றாலும் அதிலுமொரு தனிசுகமிருக்கிறதுதானே.. சமயங்களில் வேகமாகக் கடக்கும் வாகனமொன்று நீரை வாரியிறைத்து ஆடைகளை நனைத்துப் போகும்.. ஆனாலும், ஒருபோதும் கோபம் வந்ததில்லை. சிலவேளை மன்னிப்புக் கேட்கும் பாவனையில் வாகனத்திலிருந்து ஒரு மனிதர் எட்டிப்பார்த்தாலும், 'இதெல்லாம் ஒன்றுமேயில்லை..' என தலையசைத்துப் புன்னகைத்து அவரை வழியனுப்புகையில் மறுபடியுமொருமுறை குழந்தையாகி விடுகிறேன்.

மழைக்காலங்கள் ரம்மியமானவைதான்.., நீயும் அருகிலிருந்தால்...


(*தலைப்பு நன்றி: யமுனா ராஜேந்திரன்)

1 comment:

த.அகிலன் said...

கவிதை நடையில் கட்டுரை எழுதுகிறீர்கள் நிவேதா கட்டுரை சிறுகதை இரண்டுக்கும் இடையில் இருக்கிறது இது நல்ல மொழி தொடருங்கள் வாழ்த்துக்கள் படிக்க ஆலலுண்டு
அன்புடன்
த.அகிலன்