Friday, February 16, 2007

பிரதிகளினூடு ஒரு பயணம்.., யதார்த்தத்தை நோக்கி

'எழுதுவது என்பது ஒரு நெருப்புக் குளியல்.
எழுத்துத் தீ,
கருத்துக்களின் பெருங்குழப்பத்தை மேலே உயர்த்தி
படிமங்களின் கூட்டத்தைப் பிரகாசமாக எரிக்கிறது;
அவை சடசடக்கும் தணல்களாக,
உதிரும் சாம்பலாக மாறும் வரை...
ஆனால்,
இந்தத் தீயின் தன் விருப்பம் போல் எரியும் குணம் மர்மமானது.
எழுதுவது என்பது உயிரோடு எரிவது.
ஆனால்,
அதே நேரத்தில் சாம்பலிலிருந்து மீண்டும் பிறப்பதுமாகும்.

எழுதுவது என்பது ஒரு சுரங்கத் தொழிலாளியைப் போல்,
நெற்றியில் பொருத்திய விளக்கோடு
சுரங்கத்தின் ஆழத்திற்குள் இறங்குவதாகும்.
அந்த விளக்கின் தெளிவற்ற ஒளி
ஒவ்வொரு பொருளையும் உருமாற்றிக் காட்டக் கூடியது.
அதன் சுடர் எப்போதும் வெடிக்கும் ஆபத்திலிருப்பது.
கரித் தூசியில் அதன் இமைப்பொளி
கண்களை அரித்துச் சிதைக்கக்கூடியது.'

- Blaise Sendrars

இன்றைய பொழுதில் எழுதுபவர்களில் எத்தனைபேர் இத்தகைய புரிதலுடன் எழுதுகிறார்கள்.. எழுத்தின் மதிப்பையும், மகிமையையும் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.. வாசிப்பவர்களனைவரும் கடைந்தெடுத்த மூடர்களென்ற நம்பிக்கையில் எழுதிக்கொண்டிருப்பவர்களே அநேகமென்று தோன்றுகிறது.

வாசிப்பென்பது என்னைப் பொறுத்தவரை ஒரு தியானம், எழுத்தைப் போலவே. அதுவொரு தவம். மன நிம்மதியை வேண்டுவதற்கான தியானமே குழப்பத்தை விளைவிக்கும் அதிசயம் உணர்ந்திருக்கிறீர்களா, எப்போதாவது? பொ.கருணாகரமூர்த்தியின் 'பெர்லின் இரவுகள்' மற்றும் கனிமொழியின் 'கருவறை வாசனை' யும்தான் அந்தக் கைங்கரியத்தைப் புரிந்தவை. பெர்லின் இரவுகள் - ஒரு காரோட்டியின் கண்கள் வழியே பெர்லின் நகர இரவு வாழ்க்கையைச் சித்தரிக்கும் நூல். கருவறை வாசனை - கனிமொழியின் முதலாவது கவிதைத் தொகுதி.

1.

ஒரு நகரின் இரவு வாழ்க்கையெனும்போது அங்கு பாலியல் தொழிலாளர்கள் தவிர்க்க முடியாதவர்கள். அவர்களது உலகம் விழித்துக்கொள்வது பெரும்பாலும் இரவில்தான். ஒரு காரோட்டியாக தனது பார்வையில் இரவு வாழ்க்கையின் பெரும் பகுதியினை ஆக்கிரமித்திருக்கும் இப்பெண்களைப் பற்றிய தனது அனுபவங்களை சுவைபட எடுத்துக் கூறியிருக்கிறார், கருணாகரமூர்த்தி. புத்தகத்தை விரித்த நிமிடத்திலிருந்து வாசித்துமுடிக்கும்வரை கீழே வைக்கவிடாத வண்ணம் வாசகரைக் கட்டிப்போடும் சுவாரசியமான மொழிநடை அவருக்கு வாய்த்திருக்கிறதென்பதென்னமோ உண்மைதான். எனினும் மனதை உறுத்தியது, தனது 'அங்கதம் தோய்ந்த நடையினூடாக' (கவனிக்க: இது நான் கூறியதல்ல, அவரைப்பற்றிய அறிமுகத்தில் அப்படித்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது) அவர் கூற விரும்பும் விடயம் என்னவென்பதுதான்.

இந்த அங்கதப்பாணியைக் கையாளுவதென்பது கத்திமேல் நடப்பதையொத்த சற்று ரிஸ்க்கான சமாச்சாரம்.., அது எழுத்தாயிருந்தாலென்ன.. சாதாரண உரையாடலாயிருந்தாலென்ன. மனிதர்கள் தனித்துவமானவர்களென்பது உண்மையாயின், ஒருவருக்கு வேடிக்கையாகப் படுவது இன்னுமொருவருக்கு வேதனையாகவும் போய்விடக்கூடும். அந்தவகையில், பெர்லின் இரவுகளை வாசித்துக்கொண்டிருக்கையில் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வந்தது கமலஹாசனின் முழுநீள நகைச்சுவைப்படம் 'தெனாலி' தான். அது நல்லதொரு பொழுதுபோக்குப் படம்.. சுவையாக எடுக்கப்பட்டிருந்தது.. ஏனைய அறுவைப் படங்களைவிட பார்க்கலாம். என்றாலும், யாழ்ப்பாணப் பேச்சுவழக்கை கேலிக்கூத்தாக்கியதும், எமது மக்களின் அவலங்களை வைத்து சிறந்த நகைச்சுவைப் படமொன்றை இயக்கலாமென்பதை உணர்த்தியதும்கூட அதேபடம்தான். பெர்லின் இரவுகளில் நகைச்சுவையாக / அங்கதமாக கருணாகரமூர்த்தி எடுத்துக் காட்டியிருக்கும் சில விடயங்கள் விளிம்புநிலைச் சமூகமொன்றின் அன்றாட அவலங்களென்பதை அவர் உணர்ந்திராமைக்காக அவரைக் குற்றம் சாட்டுவதும் அவ்வளவு நல்லதில்லை.. காரணம், யாழ்ப்பாணப் பேச்சுவழக்கு இவ்வளவுதூரம் பிரபலப்படுத்தப்படுகிறதேயென்ற பெருமிதத்துடன் வாய்பிளந்துகொண்டு தெனாலியை இரசித்தவர்களல்லவா நாங்கள்..?

மனிதர்களின் பிறழ்வுநிலைக் குணங்களை / விசித்திரப் போக்குகளை படம்பிடித்துக் காட்டியிருக்கிறது, பெர்லின் இரவுகள். சில சம்பவங்கள் உண்மையிலேயே சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டினவெனினும், பாலியல் தொழிலாளர்களைப் பற்றிக் கூறுகையில் ஒரு மூன்றாம் மனிதர் / கதைசொல்லியென்ற தனது புறவயத் தன்மையிலிருந்து பிறழ்வுற்று தன்னையும் மீறிய ஒருவிதக் காழ்ப்புணர்வை அவர் வெளிக்காட்டியிருப்பது இதன் நடுநிலைமை குறித்த சந்தேகங்களைக் கிளப்புகிறது.

ஒரு படைப்பாளி இப்படி இப்படித்தான் எழுதவேண்டுமென்ற கட்டுப்பாடுகளை எவரும் விதித்துவிட முடியாததென்பதென்னமோ உண்மைதான். அதுவும் ஒரு அல்புனைவுப் படைப்பு (அப்படித்தானென்று நினைக்கிறேன்) நிபந்தனைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் அப்பாற்பட்டதாகவேயிருத்தல் வேண்டும். எனினும், சம்பவங்களை ஒளிவுமறைவில்லாமல் / தணிக்கைகளில்லாமல் எடுத்துக்கூறியபடி நகருமொரு எழுத்து நடையினூடாக தனது புனிதத்துவத்தை நிலைநாட்ட வேண்டியதன் அவசியம்தான் என்னவோ..?

பாலியல் தொழிலாளியொருவர் தனக்கு அழைப்பு விடுத்தபோது அவரது பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ள தான் படாத பாடுபட்டதாகவும், ஒருவழியாய் தப்பியோடி வரும்வழியில் தனது சிந்தனை இவ்வாறு சென்றதாகவும் குறிப்பிடுகிறார்:

'சோரமும், மிடிமையும் இங்கில்லை என்னுமோர் உலகு வேண்டும்.' பாரதியின் கனவு கனவேதான். அவ்வாறு ரம்யமானதொரு உலகை நிர்மாணிக்க என் கையிலுள்ள ஒற்றைச் செங்கல்லை நான் எங்கு நாட்டவேண்டும்? மூளை கபாலத்துள் கொதித்துக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது...
(பெர்லின் இரவுகள் - பக்.96)

என்னைக் கேட்டிருந்தால், அந்தச் செங்கல்லை இவ்வுலகின் ரம்யத்தினைப் பாதுகாக்கும் பொருட்டு உங்கள் தலையிலேயே போட்டுக்கொள்ளுங்களென ஆலோசனை கூறியிருப்பேன். இது விதண்டாவாதமல்ல.. ஒரு ஆதங்கம்! பாலியல் தொழில் இன்று நேற்று உருவானதல்ல.. சரித்திரத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்தே அது நடைமுறையிலிருந்து வந்திருக்க வேண்டும். இந்நிலையில் எந்தவிதத்தில் அது உலகின் ரம்யத்தினைக் குறைத்ததென்பது மட்டும் புரியவேயில்லை. தவிரவும், தகவல் தொழிநுட்பம் போன்ற உயர்படிப்புப் படிப்பவர்கள் செக்ஸ் பாருக்குப் போவதேனென்ற கேள்வி, அத்தகைய இடங்களுக்குப் போனால் அவர்கள் அங்கே சுத்தம் செய்யும் வேலை செய்வதாயிருந்தால்கூட 'தப்பாகத்தான்' (அதிலென்ன தப்பான புரிதல் வேண்டியிருக்கிறதோ..) புரிந்துகொள்ளப்படுவதென நீளும் ஆதங்கங்களுக்கு மத்தியில் பாலியல் தொழிலாளியொருவருடனான சந்திப்பைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். மனிதர்களுக்குப் பாலியல் வேட்கையுள்ள வரையும் பாலியல் தொழிலுமிருக்குமென்ற அப்பெண்ணின் கூற்று..., ஒழுக்கம், விழுமியம், நெறிகளனைத்தும் மனிதன் தனக்குத்தானே சூடிக்கொண்ட போலிக் கிரீடங்கள் மட்டும்தானென்ற அவரது வாதம் இவையனைத்தும் கூடவே இந்நூலில் இடம்பெற்றுள்ளமை வரவேற்கத்தக்கதே.

எனினும், இந்த நக்கல் தொனி பெரும்பாலானோருக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுவது குறித்த விழிப்புணர்வும், எச்சரிக்கையும் இத்தகைய புத்தகங்களை வாசிக்கையில் வாசகருக்கு வேண்டியிருக்கிறது. முற்போக்குவாதிகளாக / யதார்த்தவாதிகளாக தம்மைக் காட்டிக்கொள்ள விரும்புபவர்கள் அங்கதப்பாணியின் திரைமறைவில் தனது சுயத்தை - அதன் வக்கிரங்களுடன் - சாதுர்யமாக ஒளித்துக்கொள்ளவும் இங்கு வாய்ப்புக்கள் பலவுண்டு.

தனது அறையில் தன்னிடம் படிக்கவந்தவொரு பெண்ணுக்குச் 'சுக்கிலாபிஷேகம்' செய்த சூரனான நண்பனுடன் முரண்படுகையில் அவன் கூறியதாகக் குறிப்பிடுவது,

"கவிதையில் இன்பம், காணாததில் இன்பமென்று சதா கனவில மிதக்கிற நீங்களெல்லாம் இந்த உலகத்துக்கு 'பிட்' இல்லாத பேர்வழியள்... சய்க்!"
பெம்மான் இன்னும் ஏதேதோவெல்லாம் சொல்லி வைது கொண்டிருந்தான்.
(பக்.102)

இதன்மூலம் அவர் கூறவிரும்புவதென்ன.. இந்தக் கேலி உணர்த்துவதென்ன.. தான் செய்வதுதான் சரியென்ற நினைப்பில் அவன் வைது கொண்டிருக்கிறான்.. சீ.. இவனெல்லாம் என்ன பேர்வழி.. என விரித்துப் பொருள்கொள்ளலாமா.. அப்படியாயின், நான் அவ்வாறில்லையென்ற பெருமூச்சொன்றும் இதற்குள் தொக்கி நிற்பதாகவே படுகிறது.

பாலியல் தொழிலாளியுடனான சந்திப்பைப் பற்றிய குறிப்பு இவ்வாறு முடிவடைகின்றது:

...என்றவள் தொள்ளாயிரத்து இருபத்தேழாவது தடவையாகக் கூந்தலைப் பின்னே தள்ளிவிட்டுத் தன் விரல் நகங்களுக்குப் பொலிஷ் போட ஆரம்பித்தாள்.
(பக்.70)

இந்தக் அங்கதத்தின் பின்னணி புரிவதற்கு அதற்கு முன்னரான சந்திப்பு பற்றிய விபரங்களையும் குறிப்பிட்டாக வேண்டும். பேட்டியின்போது அப்பெண் கூறியவற்றின் சுருக்கம்: இத்தொழிலின்மூலம் குறுகிய காலத்தில் நிறைய சம்பாதிக்கலாம்.. தேவையானளவு சம்பாதித்ததன் பின்னர் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவதால் ஒன்றும் கெட்டுப்போகப் போவதில்லை.. ஆணுலகம் தம்மைக் கற்புடைமைக் கோட்பாட்டின் காவலர்களென்ற போலியான புனிதப் பார்வையுடன் எம்மைப் பார்க்கிறது.. எனது மோரல் டமேஜ் பற்றிப் பேசுவதற்கு எவருக்கும் உரிமையில்லை.. வெறும் தத்துவங்களும் கோட்பாடுகளும் வயித்துக்கு எப்போதும் பதில் சொல்வதில்லை.. இது இயல்பான விஷயம், சரி தவறென விசாரம் பண்ண எதுவுமேயில்லை.. பெண்ணியவாதிகளை விடவும் நாங்கள் அறிவும், பிரக்ஞையுமுடையவர்கள்.. எங்கள் மீது புனிதநீரைக் கொட்டுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை..

இவ்வளவற்றின் இறுதியில் அவ்வாக்கியம் வருகின்றது. ஆக மொத்தத்தில் தெரிவதென்ன.. இவர்கள் பேட்டியையோ, அப்பெண்ணின் கருத்துக்களையோ செவிமடுப்பதைவிட அவள் எத்தனை தடவை தனது கூந்தலை நளினமாகப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டிருந்தாளென்பதை எண்ணுவதிலேயே / கணக்கிடுவதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள். இவ் அலட்சிய மனப்பான்மை குறிப்பிட வருவது யாது? அவளொரு பாலியல் தொழிலாளி.. (இவ்வலட்சியம் பிறப்பது அந்தஸ்திலிருந்து.. இதையே ஒரு பேராசிரியர் கூறிக்கொண்டிருந்தால் இவர்களது கவனம் எப்படியிருந்திருக்குமென்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்..) அவள் சொல்வதை நாமென்ன கேட்பது.. என்ற எண்ணமோ..?

இது வெறும் நகைச்சுவைதானே.. எழுதியவரே இப்படியெல்லாம் யோசித்திருப்பாரோ என்னமோ.. ஒற்றை வரியில் எத்தனை குறை கண்டுபிடிக்கிறாளவையென உங்களில் யாராவது முறைக்கக்கூடும். இந்தப் விழிப்புணர்வை / பிரக்ஞையைத் தொலைத்துவிட்டபடியால்தான் இன்று இப்படியிருக்கிறோமென்பதை அவ்வளவு இலகுவில் மறுத்துவிட முடியுமா என்ன..

இப்படி சில (உண்மையில் பல) விடயங்களை விடுத்துப்பார்த்தால் பெர்லின் இரவுகள் - பெர்லின் நகரத்து இரவு வாழ்க்கையையும், மனிதர்களையும், அவர்களது தனித்துவமான அம்சங்களையும் மனக்கண் முன் படமென விரியச்செய்யும் - ஒரு சுவையான புத்தகம்தான்.

2.

மற்றையது, கனிமொழியின் கருவறை வாசனை..

ஈழத்தமிழர்களுக்காகக் குரல்கொடுப்பது தவறென்றால் அத்தவறை நாங்கள் மீண்டும் மீண்டும் செய்யத் தயாராக இருக்கிறோமென துணிந்து கூறிய கனிமொழியின் மீது அளவுகடந்த மதிப்புண்டு. அதன் பின்னணியிலான அரசியல் குறித்தோ, கருணாநிதியின் காய்நகர்த்தல் குறித்தோ அலசி ஆராய விருப்பமில்லையெனினும், ஸ்டாலினைத் தனது அரசியல் வாரிசாகக் களமிறக்கியதற்குப் பதிலாகக் கனிமொழியை இறக்கியிருந்தால் (அவரது அரசியல் நாட்டம் ஒருபுறமிருக்க) நிலைமை வேறுவிதமாகவிருந்திருக்குமென்பதில் சந்தேகமேயில்லைதான்.

'அகத்திணை' யை வாசித்தபோது மேலும் உயர்ந்த அம்மதிப்பு, அவரது முதல் தொகுப்பான 'கருவறை வாசனை' (தற்போதுதான் வாசிக்கக் கிடைத்தது) யைப் பார்த்தபோது வியப்பாக மாறியது. முன்னட்டையில் 'கனிமொழி கருணாநிதி' என குறிப்பிடப்பட்டிருந்தது, முதல் வியப்பு.. பின்னட்டையைத் திருப்பியபோது தோன்றியது வியப்பல்ல, கோபம். கல்யாண்ஜி (வண்ணதாசன்) என்றொருவர் பின்னட்டைக் குறிப்பெழுதியிருக்கிறார். கருணாநிதியின் தொண்டரடிப் பொடியாகவிருக்க வேண்டும்.. அப்படித்தான் நினைத்துக்கொள்ளத் தோன்றியது. புத்தகம் கனிமொயினுடையது, ஆனால் புராணம் முழுக்க கருணாநிதியைப் பற்றியிருந்தது. இதை வைத்துக்கொண்டு எனக்குக் கருணாநிதியின்மேல் என்னமோ தீவிரப் பகையென எவரும் எடைபோட்டுவிடக் கூடாது. எடைபோட்டாலுமே கூட அதனால் எனக்கோ, அவருக்கோ எதுவித நட்டமும் வரப்போவதில்லையென்பது வேறுவிடயம்.

கனிமொழி வெறும் கனிமொழி மட்டுமே அல்ல. கலைஞர் கருணாநிதியின் புதல்வி.
(கருவறை வாசனை - பின்னட்டை)

எவராவது கேட்டார்களா.. ஏன் வெறும் கனிமொழியாக அவர் இருந்துவிடக் கூடாதா.. கருணாநிதியின் புதல்வியென்றால் போகுமிடமெல்லாம் அவ்வடையாளத்தைக் காவிக்கொண்டே திரியவேண்டுமென்ற கட்டாயமெதுவுமிருக்கிறதா என்ன..

கலைஞரே ஒரு கவிதை. அவர் எழுதிய கவிதை கனிமொழி. ஆயிரம் கவிஞர்களுக்கு முகவரி தந்தவர் இன்று தன் முகவரியிலிருந்து ஒரு கவிஞரை தமிழுக்குத் தருகிறார்.
(பதிப்புரையில் குறிப்பிடப்பட்டிருப்பது..)

கலைஞருக்கு வால் பிடிக்கும் வேலை.. ஒரு இலக்கிய ஆளுமை எவராலும் வலிந்து உருவாக்கப்படுவதில்லை.. கனிமொழியின் ஆளுமை வளர்ச்சியில் கலைஞரின் தாக்கமிருக்கக்கூடும்.. ஆனால், அவர்தான் ஒரே ஆதாரமாக / கனிமொழியென்ற ஒரு இலக்கிய ஆளுமையை தோற்றுவித்த 'கடவுளாக' இருந்துவிட முடியாது ஒருபோதும். தனது ஏனைய புதல்வர்களை கலைஞரால் இதே ஆளுமையுடன் வளர்க்க முடியாமற் போனது நினைவிருக்குமானால், கனிமொழியின் வளர்ச்சியிலும் அவரது பங்கு மிகக்குறைவாகவே இருந்திருக்க வேண்டுமென்பது தெளிவு.

இன்னொருவரது பெயரால் (தந்தை, துணைவர்) அடையாளப்படுத்தப்படுவதன் வலி அதனை அனுபவித்தவர்களுக்குத்தான் புரியக்கூடும். பெரும்பாலும் இவ்வாயுதம் பெண்களை இலக்கு வைத்துத்தான் எறியப்படுவது குறிப்பிடத்தக்கதே. அதன்மூலம் அவளது சுயத்தை இன்னொருவரது - பெரும்பாலும் ஒரு ஆணினுடையதன் - பின்தொடரலாக / தொடர்ச்சியாக உருவகப்படுத்துவதன்மூலம் அவளது தனித்துவத்தை, திறனை மட்டந்தட்டும் / அழித்தொழிக்கும் முயற்சியே இது. அத்தகைய விம்பங்கள் மற்றும் முன்மதிப்பீடுகளிலிருந்து விடுபட விரும்புபவர்கள் ஏனையவர்களை விடவும் அதியுச்ச வினைத்திறனுடன் செயற்பட வேண்டியிருக்கிறது. எனினும், 'கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்' என்றெல்லாம் எடுத்துக்கூறி - அவர்களை வெறும் கட்டுத்தறியாகவே மதிப்பிட்டு - ஆன்மவலிமையை முடக்கிவிடக் காத்துக்கொண்டிருக்கும் சமூகத்தில் இது மிகப்பெரிய சவால்தான். ஆணாதிக்கவுலகில் தனக்கானதொரு ஸ்தானத்தைக் கைப்பற்றிக் கொள்வதேயொரு பெரும் போராட்டமாயிருக்க, இன்னொரு ஆணின் பெயரால் தன்னைச் சுற்றிப் பிணைக்கப்பட்டிருக்கும் வளையங்களை அறுத்தெறிந்துவிட்டுத்தான் அப்போராட்டத்தினை எதிர்கொள்ள வேண்டியிருப்பது இரட்டைச் சுமையாகவே அமைவது கனிமொழி போன்ற இன்னும் பலரது அவலமே.

தன்னை, தனது சுயத்தை அவமானப்படுத்தும் இத்தகைய வெத்துவேட்டு வேஷங்களையெல்லாம் கனிமொழி தனது புத்தகத்தில் ஏன் அனுமதித்தாரென்ற கேள்வி மனதைக் குடைந்துகொண்டேயிருந்தது. எனினும், முதல் கவிதையை வாசித்ததுமே மனம் திருப்தியில் நிறைந்ததையும் குறிப்பிடத்தான் வேண்டும். முன்னைய பக்கங்களின் வேஷங்களையெல்லாம் கிழித்தெறிவதாக அமைந்திருந்தது அக்கவிதை.

எனக்கு என்று
சொற்கள் இல்லை.
மொழி எம்மை
இணைத்துக் கொள்வதுமில்லை.
உமது கதைகளில்
யாம் இல்லை,
எனக்கென்று சரித்திரமில்லை.
நீங்கள் கற்றுத் தந்ததே நான்
வார்த்துத் தந்ததே நிஜம்.
எனக்கென்று கண்களோ,
செவிகளோ, கால்களோ,
இல்லை.
அவ்வப்போது நீ இரவலாய்
தருவதைத் தவிர.
(பக்.15)

அகத்திணையின் அளவுக்கு இத்தொகுதி மனதை வசீகரிக்கவில்லையெனினும், ஒருசில கவிதைகள் - கருவறை வாசனை உட்பட - குறிப்பிட்டுச் சொல்லத்தக்கனவாகவே அமைந்திருந்தன. தொகுப்பின் இறுதியில் இடம்பெற்றிருந்த கனிமொழியுடனான சிறு உரையாடல், என்னவொரு துணிவான ஆளுமை படைத்த பெண்ணென வியக்க வைத்தது, ஒருகணம்.

(நன்றி: தொலைதூரத்துத் தோழனுக்கும், அன்பு மைத்துனனுக்கும் தொகுப்புக்களுக்காக..)

Thursday, February 15, 2007

காதலர் தினம்: மாயையும் மிகைபுனைவும் / மகிழ்வும் மனக்கிளர்வும்

1.

'...ஆண்-பெண் என்ற அங்க அடையாளங்கள் மறந்து எனது / எனக்குத் தேவையற்ற ஆண்மையை நான் களையவேண்டும். உன்னிடத்தில் நானொரு ஆணாக இருப்பதைவிட துடிக்கின்ற மென்னிதயம் கொண்ட ஒரு சக மனிதனாய் இருக்கவே என்றும் விரும்புவேன்.

இது என் நேசம் என்னும் பெருங்கடலின் சிறுதுளிதான். முழுச் சமுத்திரத்தையும் காட்ட எனக்கு இப்பிறப்பின் பின்பான மரணமும் கூடப் போதாது. உன்னிலிருக்கும் நேசத்தை எத்தனையோ நாட்களாய் எழுதவிரும்பி இன்றாவது சாத்தியமாகியிருக்கிறது என்பதில் மகிழ்ச்சியே. அதற்காய் இந்த காதலர் தினத்துக்கு நன்றி. நமக்கான நேசமான நாட்கள் 365 நாட்களும் எமக்காய் இருக்கின்றன என்பதை உனக்கு நினைவுபடுத்தத் தேவையும் இல்லைதானே பிரிய தோழி?'

(தோழரொருவரின் மடலொன்றிலிருந்து..)


மாயையும் மிகைபுனைவும்

காதல் - இவ்வொற்றை வார்த்தையைப்பற்றி காலங்காலமாகக் கவிஞர்களும், இன்னும் பலரும் எவ்வளவோ எழுதிக் குவித்துவிட்ட பின்னர், நானும் சொல்வதற்கு இனியும் என்னிடம் எதுவுமிருப்பதாகத் தோன்றவில்லை. இரு மனங்களிடையேயான பிணைப்பை - அவ்வுறவு என்ன பெயரால் அடையாளப்படுத்தப்பட்டாலும் (தாய்-சேய், நட்பு, கணவன்-மனைவி.. இன்னபிற) - காதலென்று அழைக்கலாமென்றே நினைக்கிறேன்.

அன்னையர் தினம், தந்தையர் தினம், மாமன் தினம், மச்சான் தினம்... என்பவற்றின் வரிசையில் தவிர்க்க முடியாத இடம் வகிக்கும் இக்காதலர் தினத்தின் பின்னணியென எங்கேயோ கேள்விப்பட்டது:

ரோமாபுரிப் பேரரசில் அரசை விஸ்தரிப்பதற்கான மாபெரும் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலமாம் அது. இளைஞர்கள் எவருக்கும் திருமணம் செய்துவைக்கக்கூடாதென அரசர் பாதிரிமார்களுக்கு உத்தரவு போட்டிருந்தாராம். அனைவரது கவனமும் யுத்தம்.. யுத்தம்.. யுத்தத்தின் மீது மட்டுமேயிருக்க வேண்டுமென்பது அவரது நோக்கமாயிருந்திருக்க வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் 'வலண்டைன்' என்ற பாதிரியார் இளைஞர் பலருக்கு இரகசியமாகத் திருமணம் செய்துவந்தமை தெரியவர, அரசர் அவரைத் தூக்கிலிட்டு விட்டாராம். அப்பாதிரியார் தூக்கிலிடப்பட்ட தினமே இன்று காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறதாம்.

கதை ஒருபுறம் கிடக்கட்டும். இவ்வாறு 'தினங்கள்' கொண்டாடுவதன் பின்னணியை எடுத்து நோக்குவோமாயின், மேற்கத்தைய உலகின் - பல்தேசியக் கம்பனிகளின் - வியாபார உத்திகளில் ஒன்றே இதுவுமென்பதை சொல்லத் தேவையில்லை. இத்தினங்களின் பெயரால் அதிகம் பேறு பெறுவது - பரிசுப்பொருட்கள் போன்றவற்றின் உற்பத்தியால் - இவை மட்டுமே. வரவிருக்கும் 'பெண்கள் தினம்' குறித்தும் விமர்சனங்கள் பலவுண்டு. இதைக் கொண்டாடுவதன் சரி, பிழைகளை விடுத்துப் பார்த்தாலும்.. இன்றைய பொழுதில் இதன் தேவையென்ன என்ற கேள்வியெழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. பெண்ணிய அமைப்புகள் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதும், கோஷமிடுவதும்.. வருடத்தில் ஒரேயொருநாள் பெண்களை கடவுளராகத் தூக்கிப் பிடிப்பதும், பிறகு தூர வீசியெறிவதும்.. பெண்களுக்காவது ஒரு நாளிருக்கிறது, எமக்கென்று என்னதான் இருக்கு.. என சில ஆண் தோழர்கள் விஷமத்தனமாகக் கேட்கும்போது, மிச்சம் 364 நாளையும் கைப்பற்றிக் கொண்டிருப்பது யாராமென்று பதிலளிப்பதுபோல.. எல்லாக் கேள்விகளுக்கும் இலகுவில் மறுமொழிகளைக் கண்டடைந்துவிட முடிவதில்லை.


2.

ஆழ்கிணற்றின் அடியாழத்திலுள்ள ஒரு வெள்ளைக்கல் போல
என்னிடத்தில் ஒரேயொரு நினைவு மட்டும்.
அதை நான் போக்க முடியாது, போக்க விரும்புவதுமில்லை.
அது ஒரு உவகை, அது வேதனையும் கூட.
எனக்குத் தோன்றுகிறது, என் கண்களை உற்றுப் பார்ப்பவருக்கு
அது தெளிவாகத் தெரியுமென்று -
சோகம் ததும்பும் கதையொன்றைக் கேட்பவரைவிட
அவர் நெஞ்சம் மேலும் கனக்கும், துயருறும்.
எனக்குத் தெரியும், கடவுளர் மனிதரைக் கல்லாக மாற்றியுள்ளனர்,
மனங்களை மட்டும் அப்படியே விட்டுவைத்து.
அந்த அற்புதமான சோகங்கள் இன்னும் எஞ்சியிருக்க வேண்டுமென்று
என் நினைவாக மாற்றப்பட்டு விட்டாய் நீ.

- அன்னா அக்மதோவா


மகிழ்வும் மனக்கிளர்வும்

(இப்படித்தான் மலர்ந்தது ஒரு தினம்...)

கடந்திருந்த ஆண்டுகளில் எத்தனையோ காதலர் தினங்களைக் கடந்துவிட்டிருக்கிறேன்.., எந்தச் சிலிர்ப்புகளும் எதிர்பார்ப்புகளுமில்லாமல். பெப்ரவரி 14 என்றாலே பதட்டமடையச் செய்வது அன்றைய தினத்தில் அணியப் போகும் ஆடைதான். குறிப்பாக எதையும் உணர்த்தாத வர்ணங்களில் உடைகளைத் தேடிப்பிடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். வெள்ளை தூய்மையைக் குறிக்குமென்ற நினைப்பில் அணிந்துகொண்டு போனால், தெருவில் எவனாவது சொல்லிவிட்டுப் போவான்.. "அட, vacancy இருக்கிறது போல.." பச்சை, நீலம், சிவப்பு ஆகிய நிறங்களில் கைக்குட்டை கொண்டு போனால்கூட தொலைந்தோம். நகர வாழ்க்கை அப்படி.. தொல்லைகளின்றி வாழ்வதென்பது சற்றுச் சிரமம்தான்.

வாழ்வின் அதியுன்னதமான தருணமெதுவென்று உங்களைக் கேட்டால் என்னவென்று சொல்வீர்களாயிருக்கும்..? சில காலங்களுக்கு முன்னர் என்னைக் கேட்டிருந்தால்.. நட்ட நடுவிரவில் பௌர்ணமி நிலவொளியில் கடற்கரை மணலில் கால்புதைய மனதுக்குப் பிடித்த ஒருவருடன் நடப்பது, நிலவு ஒளிந்துகொண்ட கும்மிரவொன்றில் நட்சத்திரக் கூட்டங்களை எண்ணியபடி பசும்புற்றரையில் படுத்துக்கிடப்பது, 'பொன்னியின் செல்வன்' பூங்குழலியைப்போல புயல்வீசுமோர் நாளில் தனித்து படகோட்டிச் செல்வது, ரஷ்ய ஸ்தெப்பி வெளியிலும், கஸாக்கியக் கிராமங்களினூடும் பட்டாம்பூச்சியாய்ப் பறந்து திரிவது, நைல் நதியின் லயத்திற்கேற்ப விரல்களால் தாளமிட்டபடி ஆபிரிக்கக் கண்டத்தின் குறுக்குநெடுக்கே அலைவதென... இப்படியே நீண்டிருக்கும் என் பட்டியல். இன்றோ, கட்டிலில் மல்லாந்து படுத்தபடி.. திறந்திருக்கும் சாளரத்தினூடாகத் தவழ்ந்து வரும் தென்றலை ஆழ உள்ளிழுத்து, மாமரத்து இலைகளின் சலசலப்பையும், அவற்றின் கிளைகளினூடே துண்டுதுண்டாகத் தெரியும் இரவு வானத்தையும், கண்சிமிட்டும் நட்சத்திரங்களையும் இரசித்தபடியிருக்கும் நடுநிசிப் பொழுதொன்றில் மனதிற்குப் பிரியமான ஒருவர் எனக்காகத் தானெழுதிய கவிதையொன்றை வாசிக்கக் கேட்பதுதான் என்பேன். அந்தத் தினம் எவ்வளவு வனப்புமிக்கதாயிருந்திருக்கும்..

(காதலர் தினத்தன்று நள்ளிரவில் தொலைபேசியிலழைத்த நண்பரொருவர் வாழ்த்துக்கூறி வாசித்துக் காட்டிய கவிதையின் ஒரு பகுதி..)

......

நீ எங்கும்
என்னைப் பின் தொடர்கிறாய்

காரில் அதிரும் இசையில்...
கனத்த மெளங்களுடையில்....
சோர்ந்து போன பிணிகளில்...

காமம் தீர்ந்துபோகின்றவோர் நாளில்
இதே காதல் இருக்குமா?
காதில் ஒலித்தபடியிருக்கும் உன் வினா

நாளையில் வாழாது
நாளையைப் பற்றி தீர்க்கமாய் உரையாடுவது
போலி போலத்தோன்றும்

இக்கணத்து நேசம் உன்னதமானது
உன்னதைப் போலவே.

எனக்கு
நீயும் நிகழ்காலமும் வேண்டும்.....
என்றும்.

......

காதலர் தினம் அன்பால் பிணைக்கப்பட்ட அனைவராலும் கொண்டாடப்படுவதென்ற வகையில் கிடைத்த எத்தனையோ வாழ்த்துக்களில் ஒன்றுதான் இதுவும். எனினும், தனக்கேயான தனித்துவங்களோடும்.., நேசப் பிரவாகிப்போடும் காலாகாலத்துக்கும் ஆழ்மனதில் அழியாமல் நிலைத்து நிற்கக்கூடும், இவ்வாழ்த்தும் இந்நாளும்.

மாயையோ, மிகைபுனைவோ.. எது எப்படியிருந்தாலும், வாழ்வின் உன்னதமான சில தருணங்களை அனுபவிப்பதற்காயினும் தத்துவ சித்தாந்த விசாரங்களை விடுத்து இந்நாட்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.


('நீல மென்துகிலணிந்து, கடல் தாய் இசை பாட, நீள நடக்குமொரு' பெண்ணை நேசிப்பவனுக்கு..)