1.
'...ஆண்-பெண் என்ற அங்க அடையாளங்கள் மறந்து எனது / எனக்குத் தேவையற்ற ஆண்மையை நான் களையவேண்டும். உன்னிடத்தில் நானொரு ஆணாக இருப்பதைவிட துடிக்கின்ற மென்னிதயம் கொண்ட ஒரு சக மனிதனாய் இருக்கவே என்றும் விரும்புவேன்.
இது என் நேசம் என்னும் பெருங்கடலின் சிறுதுளிதான். முழுச் சமுத்திரத்தையும் காட்ட எனக்கு இப்பிறப்பின் பின்பான மரணமும் கூடப் போதாது. உன்னிலிருக்கும் நேசத்தை எத்தனையோ நாட்களாய் எழுதவிரும்பி இன்றாவது சாத்தியமாகியிருக்கிறது என்பதில் மகிழ்ச்சியே. அதற்காய் இந்த காதலர் தினத்துக்கு நன்றி. நமக்கான நேசமான நாட்கள் 365 நாட்களும் எமக்காய் இருக்கின்றன என்பதை உனக்கு நினைவுபடுத்தத் தேவையும் இல்லைதானே பிரிய தோழி?'
(தோழரொருவரின் மடலொன்றிலிருந்து..)
மாயையும் மிகைபுனைவும்
காதல் - இவ்வொற்றை வார்த்தையைப்பற்றி காலங்காலமாகக் கவிஞர்களும், இன்னும் பலரும் எவ்வளவோ எழுதிக் குவித்துவிட்ட பின்னர், நானும் சொல்வதற்கு இனியும் என்னிடம் எதுவுமிருப்பதாகத் தோன்றவில்லை. இரு மனங்களிடையேயான பிணைப்பை - அவ்வுறவு என்ன பெயரால் அடையாளப்படுத்தப்பட்டாலும் (தாய்-சேய், நட்பு, கணவன்-மனைவி.. இன்னபிற) - காதலென்று அழைக்கலாமென்றே நினைக்கிறேன்.
அன்னையர் தினம், தந்தையர் தினம், மாமன் தினம், மச்சான் தினம்... என்பவற்றின் வரிசையில் தவிர்க்க முடியாத இடம் வகிக்கும் இக்காதலர் தினத்தின் பின்னணியென எங்கேயோ கேள்விப்பட்டது:
ரோமாபுரிப் பேரரசில் அரசை விஸ்தரிப்பதற்கான மாபெரும் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலமாம் அது. இளைஞர்கள் எவருக்கும் திருமணம் செய்துவைக்கக்கூடாதென அரசர் பாதிரிமார்களுக்கு உத்தரவு போட்டிருந்தாராம். அனைவரது கவனமும் யுத்தம்.. யுத்தம்.. யுத்தத்தின் மீது மட்டுமேயிருக்க வேண்டுமென்பது அவரது நோக்கமாயிருந்திருக்க வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் 'வலண்டைன்' என்ற பாதிரியார் இளைஞர் பலருக்கு இரகசியமாகத் திருமணம் செய்துவந்தமை தெரியவர, அரசர் அவரைத் தூக்கிலிட்டு விட்டாராம். அப்பாதிரியார் தூக்கிலிடப்பட்ட தினமே இன்று காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறதாம்.
கதை ஒருபுறம் கிடக்கட்டும். இவ்வாறு 'தினங்கள்' கொண்டாடுவதன் பின்னணியை எடுத்து நோக்குவோமாயின், மேற்கத்தைய உலகின் - பல்தேசியக் கம்பனிகளின் - வியாபார உத்திகளில் ஒன்றே இதுவுமென்பதை சொல்லத் தேவையில்லை. இத்தினங்களின் பெயரால் அதிகம் பேறு பெறுவது - பரிசுப்பொருட்கள் போன்றவற்றின் உற்பத்தியால் - இவை மட்டுமே. வரவிருக்கும் 'பெண்கள் தினம்' குறித்தும் விமர்சனங்கள் பலவுண்டு. இதைக் கொண்டாடுவதன் சரி, பிழைகளை விடுத்துப் பார்த்தாலும்.. இன்றைய பொழுதில் இதன் தேவையென்ன என்ற கேள்வியெழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. பெண்ணிய அமைப்புகள் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதும், கோஷமிடுவதும்.. வருடத்தில் ஒரேயொருநாள் பெண்களை கடவுளராகத் தூக்கிப் பிடிப்பதும், பிறகு தூர வீசியெறிவதும்.. பெண்களுக்காவது ஒரு நாளிருக்கிறது, எமக்கென்று என்னதான் இருக்கு.. என சில ஆண் தோழர்கள் விஷமத்தனமாகக் கேட்கும்போது, மிச்சம் 364 நாளையும் கைப்பற்றிக் கொண்டிருப்பது யாராமென்று பதிலளிப்பதுபோல.. எல்லாக் கேள்விகளுக்கும் இலகுவில் மறுமொழிகளைக் கண்டடைந்துவிட முடிவதில்லை.
2.
ஆழ்கிணற்றின் அடியாழத்திலுள்ள ஒரு வெள்ளைக்கல் போல
என்னிடத்தில் ஒரேயொரு நினைவு மட்டும்.
அதை நான் போக்க முடியாது, போக்க விரும்புவதுமில்லை.
அது ஒரு உவகை, அது வேதனையும் கூட.
எனக்குத் தோன்றுகிறது, என் கண்களை உற்றுப் பார்ப்பவருக்கு
அது தெளிவாகத் தெரியுமென்று -
சோகம் ததும்பும் கதையொன்றைக் கேட்பவரைவிட
அவர் நெஞ்சம் மேலும் கனக்கும், துயருறும்.
எனக்குத் தெரியும், கடவுளர் மனிதரைக் கல்லாக மாற்றியுள்ளனர்,
மனங்களை மட்டும் அப்படியே விட்டுவைத்து.
அந்த அற்புதமான சோகங்கள் இன்னும் எஞ்சியிருக்க வேண்டுமென்று
என் நினைவாக மாற்றப்பட்டு விட்டாய் நீ.
- அன்னா அக்மதோவா
மகிழ்வும் மனக்கிளர்வும்
(இப்படித்தான் மலர்ந்தது ஒரு தினம்...)
கடந்திருந்த ஆண்டுகளில் எத்தனையோ காதலர் தினங்களைக் கடந்துவிட்டிருக்கிறேன்.., எந்தச் சிலிர்ப்புகளும் எதிர்பார்ப்புகளுமில்லாமல். பெப்ரவரி 14 என்றாலே பதட்டமடையச் செய்வது அன்றைய தினத்தில் அணியப் போகும் ஆடைதான். குறிப்பாக எதையும் உணர்த்தாத வர்ணங்களில் உடைகளைத் தேடிப்பிடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். வெள்ளை தூய்மையைக் குறிக்குமென்ற நினைப்பில் அணிந்துகொண்டு போனால், தெருவில் எவனாவது சொல்லிவிட்டுப் போவான்.. "அட, vacancy இருக்கிறது போல.." பச்சை, நீலம், சிவப்பு ஆகிய நிறங்களில் கைக்குட்டை கொண்டு போனால்கூட தொலைந்தோம். நகர வாழ்க்கை அப்படி.. தொல்லைகளின்றி வாழ்வதென்பது சற்றுச் சிரமம்தான்.
வாழ்வின் அதியுன்னதமான தருணமெதுவென்று உங்களைக் கேட்டால் என்னவென்று சொல்வீர்களாயிருக்கும்..? சில காலங்களுக்கு முன்னர் என்னைக் கேட்டிருந்தால்.. நட்ட நடுவிரவில் பௌர்ணமி நிலவொளியில் கடற்கரை மணலில் கால்புதைய மனதுக்குப் பிடித்த ஒருவருடன் நடப்பது, நிலவு ஒளிந்துகொண்ட கும்மிரவொன்றில் நட்சத்திரக் கூட்டங்களை எண்ணியபடி பசும்புற்றரையில் படுத்துக்கிடப்பது, 'பொன்னியின் செல்வன்' பூங்குழலியைப்போல புயல்வீசுமோர் நாளில் தனித்து படகோட்டிச் செல்வது, ரஷ்ய ஸ்தெப்பி வெளியிலும், கஸாக்கியக் கிராமங்களினூடும் பட்டாம்பூச்சியாய்ப் பறந்து திரிவது, நைல் நதியின் லயத்திற்கேற்ப விரல்களால் தாளமிட்டபடி ஆபிரிக்கக் கண்டத்தின் குறுக்குநெடுக்கே அலைவதென... இப்படியே நீண்டிருக்கும் என் பட்டியல். இன்றோ, கட்டிலில் மல்லாந்து படுத்தபடி.. திறந்திருக்கும் சாளரத்தினூடாகத் தவழ்ந்து வரும் தென்றலை ஆழ உள்ளிழுத்து, மாமரத்து இலைகளின் சலசலப்பையும், அவற்றின் கிளைகளினூடே துண்டுதுண்டாகத் தெரியும் இரவு வானத்தையும், கண்சிமிட்டும் நட்சத்திரங்களையும் இரசித்தபடியிருக்கும் நடுநிசிப் பொழுதொன்றில் மனதிற்குப் பிரியமான ஒருவர் எனக்காகத் தானெழுதிய கவிதையொன்றை வாசிக்கக் கேட்பதுதான் என்பேன். அந்தத் தினம் எவ்வளவு வனப்புமிக்கதாயிருந்திருக்கும்..
(காதலர் தினத்தன்று நள்ளிரவில் தொலைபேசியிலழைத்த நண்பரொருவர் வாழ்த்துக்கூறி வாசித்துக் காட்டிய கவிதையின் ஒரு பகுதி..)
......
நீ எங்கும்
என்னைப் பின் தொடர்கிறாய்
காரில் அதிரும் இசையில்...
கனத்த மெளங்களுடையில்....
சோர்ந்து போன பிணிகளில்...
காமம் தீர்ந்துபோகின்றவோர் நாளில்
இதே காதல் இருக்குமா?
காதில் ஒலித்தபடியிருக்கும் உன் வினா
நாளையில் வாழாது
நாளையைப் பற்றி தீர்க்கமாய் உரையாடுவது
போலி போலத்தோன்றும்
இக்கணத்து நேசம் உன்னதமானது
உன்னதைப் போலவே.
எனக்கு
நீயும் நிகழ்காலமும் வேண்டும்.....
என்றும்.
......
காதலர் தினம் அன்பால் பிணைக்கப்பட்ட அனைவராலும் கொண்டாடப்படுவதென்ற வகையில் கிடைத்த எத்தனையோ வாழ்த்துக்களில் ஒன்றுதான் இதுவும். எனினும், தனக்கேயான தனித்துவங்களோடும்.., நேசப் பிரவாகிப்போடும் காலாகாலத்துக்கும் ஆழ்மனதில் அழியாமல் நிலைத்து நிற்கக்கூடும், இவ்வாழ்த்தும் இந்நாளும்.
மாயையோ, மிகைபுனைவோ.. எது எப்படியிருந்தாலும், வாழ்வின் உன்னதமான சில தருணங்களை அனுபவிப்பதற்காயினும் தத்துவ சித்தாந்த விசாரங்களை விடுத்து இந்நாட்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
('நீல மென்துகிலணிந்து, கடல் தாய் இசை பாட, நீள நடக்குமொரு' பெண்ணை நேசிப்பவனுக்கு..)
Thursday, February 15, 2007
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
"கட்டிலில் மல்லாந்து படுத்தபடி.. திறந்திருக்கும் சாளரத்தினூடாகத் தவழ்ந்து வரும் தென்றலை ஆழ உள்ளிழுத்து, மாமரத்து இலைகளின் சலசலப்பையும், அவற்றின் கிளைகளினூடே துண்டுதுண்டாகத் தெரியும் இரவு வானத்தையும், கண்சிமிட்டும் நட்சத்திரங்களையும் இரசித்தபடியிருக்கும் நடுநிசிப் பொழுதொன்றில் மனதிற்குப் பிரியமான ஒருவர் எனக்காகத் தானெழுதிய கவிதையொன்றை வாசிக்கக் கேட்பதுதான் என்பேன்."
நிவேதா, அந்தக் கவிதையைக் கேட்கும் நீங்கள் மட்டுமல்ல, அதை உங்களுக்காக வாசிக்கவிருப்பவரும் அதிர்ஷ்டசாலிதான். இத்தகையதோர் விருப்பினையுடையவளை நேசித்தல் வாய்க்கப்பெற்றவரல்லவா அவர்...! காதல் விளைவித்த அற்புதங்களைப் பின்னொருநாளில் நினைத்துப் பார்க்கும்போது அபத்தமெனத் தோன்றினாலும், அந்தக் கணமென்பது அழிந்துபோய்விடுமா...? அந்தக் கணம் நெகிழ்வூட்டிற்று அல்லவா...? பரவசத்தைத் தந்ததை யாரால் மறுத்தல் இயலும்...?அதற்காகவேனும் காதலைப் போற்றுவோம்.
நன்றி, தமிழ்நதி!
மாயையோ, அபத்தமோ அந்தந்தக் கணங்களின் சிலிர்ப்புக்களை அனுபவித்தபடி பொழுதுகளைக் கடந்துவிடுவதுதான் மேல் இல்லையா.. இது போன்ற சின்னச் சின்ன சந்தோஷங்களிலேயே வாழ்வின் வனப்பு அடங்கியிருக்க, அதை இரசிக்காதவர்கள் வாழத்தெரியாதவர்கள் தானே..
நிவேதா நீங்களுமா ;-)?
என்ன செய்ய, டிசே..:-(
/'...ஆண்-பெண் என்ற அங்க அடையாளங்கள் மறந்து எனது / எனக்குத் தேவையற்ற ஆண்மையை நான் களையவேண்டும். உன்னிடத்தில் நானொரு ஆணாக இருப்பதைவிட துடிக்கின்ற மென்னிதயம் கொண்ட ஒரு சக மனிதனாய் இருக்கவே என்றும் விரும்புவேன்./
சக தோழியை, காதலியை, மனைவியை ஆண்-பெண் என்ற எல்லைகளைக் கடந்து மதிக்கும் ஒரு ஆணிண் மனதை இதை விட அழகான வார்த்தைகளால் சொல்லி விட முடியாது.
/மாயையோ, மிகைபுனைவோ.. எது எப்படியிருந்தாலும், வாழ்வின் உன்னதமான சில தருணங்களை அனுபவிப்பதற்காயினும் தத்துவ சித்தாந்த விசாரங்களை விடுத்து இந்நாட்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது./
மறுக்க முடியாத உண்மை. காதலர் தினம் தேவையா? என்ற கேள்விக்கு, நண்பர்களுடன் ஏற்பட்ட நெடிய விவாதத்திற்கு பின்னரும் முடிவாக, "என்ன இருந்தாலும், அந்த சந்தோஷமான ஃபீலிங்காகவாவது அது தேவைடா மச்சான்!" என்று பொத்தாம் பொதுவாகத்தான் என்னால் சொல்ல முடிந்திருக்கிறது. ஆனால் அதை இவ்வளவு அழகாகவும் சொல்ல முடியும் என்பதை காட்டியுள்ளீர்கள்.
பின்னூட்டத்துக்கு நன்றி, நந்தா!
Post a Comment