Friday, February 16, 2007

பிரதிகளினூடு ஒரு பயணம்.., யதார்த்தத்தை நோக்கி

'எழுதுவது என்பது ஒரு நெருப்புக் குளியல்.
எழுத்துத் தீ,
கருத்துக்களின் பெருங்குழப்பத்தை மேலே உயர்த்தி
படிமங்களின் கூட்டத்தைப் பிரகாசமாக எரிக்கிறது;
அவை சடசடக்கும் தணல்களாக,
உதிரும் சாம்பலாக மாறும் வரை...
ஆனால்,
இந்தத் தீயின் தன் விருப்பம் போல் எரியும் குணம் மர்மமானது.
எழுதுவது என்பது உயிரோடு எரிவது.
ஆனால்,
அதே நேரத்தில் சாம்பலிலிருந்து மீண்டும் பிறப்பதுமாகும்.

எழுதுவது என்பது ஒரு சுரங்கத் தொழிலாளியைப் போல்,
நெற்றியில் பொருத்திய விளக்கோடு
சுரங்கத்தின் ஆழத்திற்குள் இறங்குவதாகும்.
அந்த விளக்கின் தெளிவற்ற ஒளி
ஒவ்வொரு பொருளையும் உருமாற்றிக் காட்டக் கூடியது.
அதன் சுடர் எப்போதும் வெடிக்கும் ஆபத்திலிருப்பது.
கரித் தூசியில் அதன் இமைப்பொளி
கண்களை அரித்துச் சிதைக்கக்கூடியது.'

- Blaise Sendrars

இன்றைய பொழுதில் எழுதுபவர்களில் எத்தனைபேர் இத்தகைய புரிதலுடன் எழுதுகிறார்கள்.. எழுத்தின் மதிப்பையும், மகிமையையும் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.. வாசிப்பவர்களனைவரும் கடைந்தெடுத்த மூடர்களென்ற நம்பிக்கையில் எழுதிக்கொண்டிருப்பவர்களே அநேகமென்று தோன்றுகிறது.

வாசிப்பென்பது என்னைப் பொறுத்தவரை ஒரு தியானம், எழுத்தைப் போலவே. அதுவொரு தவம். மன நிம்மதியை வேண்டுவதற்கான தியானமே குழப்பத்தை விளைவிக்கும் அதிசயம் உணர்ந்திருக்கிறீர்களா, எப்போதாவது? பொ.கருணாகரமூர்த்தியின் 'பெர்லின் இரவுகள்' மற்றும் கனிமொழியின் 'கருவறை வாசனை' யும்தான் அந்தக் கைங்கரியத்தைப் புரிந்தவை. பெர்லின் இரவுகள் - ஒரு காரோட்டியின் கண்கள் வழியே பெர்லின் நகர இரவு வாழ்க்கையைச் சித்தரிக்கும் நூல். கருவறை வாசனை - கனிமொழியின் முதலாவது கவிதைத் தொகுதி.

1.

ஒரு நகரின் இரவு வாழ்க்கையெனும்போது அங்கு பாலியல் தொழிலாளர்கள் தவிர்க்க முடியாதவர்கள். அவர்களது உலகம் விழித்துக்கொள்வது பெரும்பாலும் இரவில்தான். ஒரு காரோட்டியாக தனது பார்வையில் இரவு வாழ்க்கையின் பெரும் பகுதியினை ஆக்கிரமித்திருக்கும் இப்பெண்களைப் பற்றிய தனது அனுபவங்களை சுவைபட எடுத்துக் கூறியிருக்கிறார், கருணாகரமூர்த்தி. புத்தகத்தை விரித்த நிமிடத்திலிருந்து வாசித்துமுடிக்கும்வரை கீழே வைக்கவிடாத வண்ணம் வாசகரைக் கட்டிப்போடும் சுவாரசியமான மொழிநடை அவருக்கு வாய்த்திருக்கிறதென்பதென்னமோ உண்மைதான். எனினும் மனதை உறுத்தியது, தனது 'அங்கதம் தோய்ந்த நடையினூடாக' (கவனிக்க: இது நான் கூறியதல்ல, அவரைப்பற்றிய அறிமுகத்தில் அப்படித்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது) அவர் கூற விரும்பும் விடயம் என்னவென்பதுதான்.

இந்த அங்கதப்பாணியைக் கையாளுவதென்பது கத்திமேல் நடப்பதையொத்த சற்று ரிஸ்க்கான சமாச்சாரம்.., அது எழுத்தாயிருந்தாலென்ன.. சாதாரண உரையாடலாயிருந்தாலென்ன. மனிதர்கள் தனித்துவமானவர்களென்பது உண்மையாயின், ஒருவருக்கு வேடிக்கையாகப் படுவது இன்னுமொருவருக்கு வேதனையாகவும் போய்விடக்கூடும். அந்தவகையில், பெர்லின் இரவுகளை வாசித்துக்கொண்டிருக்கையில் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வந்தது கமலஹாசனின் முழுநீள நகைச்சுவைப்படம் 'தெனாலி' தான். அது நல்லதொரு பொழுதுபோக்குப் படம்.. சுவையாக எடுக்கப்பட்டிருந்தது.. ஏனைய அறுவைப் படங்களைவிட பார்க்கலாம். என்றாலும், யாழ்ப்பாணப் பேச்சுவழக்கை கேலிக்கூத்தாக்கியதும், எமது மக்களின் அவலங்களை வைத்து சிறந்த நகைச்சுவைப் படமொன்றை இயக்கலாமென்பதை உணர்த்தியதும்கூட அதேபடம்தான். பெர்லின் இரவுகளில் நகைச்சுவையாக / அங்கதமாக கருணாகரமூர்த்தி எடுத்துக் காட்டியிருக்கும் சில விடயங்கள் விளிம்புநிலைச் சமூகமொன்றின் அன்றாட அவலங்களென்பதை அவர் உணர்ந்திராமைக்காக அவரைக் குற்றம் சாட்டுவதும் அவ்வளவு நல்லதில்லை.. காரணம், யாழ்ப்பாணப் பேச்சுவழக்கு இவ்வளவுதூரம் பிரபலப்படுத்தப்படுகிறதேயென்ற பெருமிதத்துடன் வாய்பிளந்துகொண்டு தெனாலியை இரசித்தவர்களல்லவா நாங்கள்..?

மனிதர்களின் பிறழ்வுநிலைக் குணங்களை / விசித்திரப் போக்குகளை படம்பிடித்துக் காட்டியிருக்கிறது, பெர்லின் இரவுகள். சில சம்பவங்கள் உண்மையிலேயே சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டினவெனினும், பாலியல் தொழிலாளர்களைப் பற்றிக் கூறுகையில் ஒரு மூன்றாம் மனிதர் / கதைசொல்லியென்ற தனது புறவயத் தன்மையிலிருந்து பிறழ்வுற்று தன்னையும் மீறிய ஒருவிதக் காழ்ப்புணர்வை அவர் வெளிக்காட்டியிருப்பது இதன் நடுநிலைமை குறித்த சந்தேகங்களைக் கிளப்புகிறது.

ஒரு படைப்பாளி இப்படி இப்படித்தான் எழுதவேண்டுமென்ற கட்டுப்பாடுகளை எவரும் விதித்துவிட முடியாததென்பதென்னமோ உண்மைதான். அதுவும் ஒரு அல்புனைவுப் படைப்பு (அப்படித்தானென்று நினைக்கிறேன்) நிபந்தனைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் அப்பாற்பட்டதாகவேயிருத்தல் வேண்டும். எனினும், சம்பவங்களை ஒளிவுமறைவில்லாமல் / தணிக்கைகளில்லாமல் எடுத்துக்கூறியபடி நகருமொரு எழுத்து நடையினூடாக தனது புனிதத்துவத்தை நிலைநாட்ட வேண்டியதன் அவசியம்தான் என்னவோ..?

பாலியல் தொழிலாளியொருவர் தனக்கு அழைப்பு விடுத்தபோது அவரது பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ள தான் படாத பாடுபட்டதாகவும், ஒருவழியாய் தப்பியோடி வரும்வழியில் தனது சிந்தனை இவ்வாறு சென்றதாகவும் குறிப்பிடுகிறார்:

'சோரமும், மிடிமையும் இங்கில்லை என்னுமோர் உலகு வேண்டும்.' பாரதியின் கனவு கனவேதான். அவ்வாறு ரம்யமானதொரு உலகை நிர்மாணிக்க என் கையிலுள்ள ஒற்றைச் செங்கல்லை நான் எங்கு நாட்டவேண்டும்? மூளை கபாலத்துள் கொதித்துக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது...
(பெர்லின் இரவுகள் - பக்.96)

என்னைக் கேட்டிருந்தால், அந்தச் செங்கல்லை இவ்வுலகின் ரம்யத்தினைப் பாதுகாக்கும் பொருட்டு உங்கள் தலையிலேயே போட்டுக்கொள்ளுங்களென ஆலோசனை கூறியிருப்பேன். இது விதண்டாவாதமல்ல.. ஒரு ஆதங்கம்! பாலியல் தொழில் இன்று நேற்று உருவானதல்ல.. சரித்திரத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்தே அது நடைமுறையிலிருந்து வந்திருக்க வேண்டும். இந்நிலையில் எந்தவிதத்தில் அது உலகின் ரம்யத்தினைக் குறைத்ததென்பது மட்டும் புரியவேயில்லை. தவிரவும், தகவல் தொழிநுட்பம் போன்ற உயர்படிப்புப் படிப்பவர்கள் செக்ஸ் பாருக்குப் போவதேனென்ற கேள்வி, அத்தகைய இடங்களுக்குப் போனால் அவர்கள் அங்கே சுத்தம் செய்யும் வேலை செய்வதாயிருந்தால்கூட 'தப்பாகத்தான்' (அதிலென்ன தப்பான புரிதல் வேண்டியிருக்கிறதோ..) புரிந்துகொள்ளப்படுவதென நீளும் ஆதங்கங்களுக்கு மத்தியில் பாலியல் தொழிலாளியொருவருடனான சந்திப்பைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். மனிதர்களுக்குப் பாலியல் வேட்கையுள்ள வரையும் பாலியல் தொழிலுமிருக்குமென்ற அப்பெண்ணின் கூற்று..., ஒழுக்கம், விழுமியம், நெறிகளனைத்தும் மனிதன் தனக்குத்தானே சூடிக்கொண்ட போலிக் கிரீடங்கள் மட்டும்தானென்ற அவரது வாதம் இவையனைத்தும் கூடவே இந்நூலில் இடம்பெற்றுள்ளமை வரவேற்கத்தக்கதே.

எனினும், இந்த நக்கல் தொனி பெரும்பாலானோருக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுவது குறித்த விழிப்புணர்வும், எச்சரிக்கையும் இத்தகைய புத்தகங்களை வாசிக்கையில் வாசகருக்கு வேண்டியிருக்கிறது. முற்போக்குவாதிகளாக / யதார்த்தவாதிகளாக தம்மைக் காட்டிக்கொள்ள விரும்புபவர்கள் அங்கதப்பாணியின் திரைமறைவில் தனது சுயத்தை - அதன் வக்கிரங்களுடன் - சாதுர்யமாக ஒளித்துக்கொள்ளவும் இங்கு வாய்ப்புக்கள் பலவுண்டு.

தனது அறையில் தன்னிடம் படிக்கவந்தவொரு பெண்ணுக்குச் 'சுக்கிலாபிஷேகம்' செய்த சூரனான நண்பனுடன் முரண்படுகையில் அவன் கூறியதாகக் குறிப்பிடுவது,

"கவிதையில் இன்பம், காணாததில் இன்பமென்று சதா கனவில மிதக்கிற நீங்களெல்லாம் இந்த உலகத்துக்கு 'பிட்' இல்லாத பேர்வழியள்... சய்க்!"
பெம்மான் இன்னும் ஏதேதோவெல்லாம் சொல்லி வைது கொண்டிருந்தான்.
(பக்.102)

இதன்மூலம் அவர் கூறவிரும்புவதென்ன.. இந்தக் கேலி உணர்த்துவதென்ன.. தான் செய்வதுதான் சரியென்ற நினைப்பில் அவன் வைது கொண்டிருக்கிறான்.. சீ.. இவனெல்லாம் என்ன பேர்வழி.. என விரித்துப் பொருள்கொள்ளலாமா.. அப்படியாயின், நான் அவ்வாறில்லையென்ற பெருமூச்சொன்றும் இதற்குள் தொக்கி நிற்பதாகவே படுகிறது.

பாலியல் தொழிலாளியுடனான சந்திப்பைப் பற்றிய குறிப்பு இவ்வாறு முடிவடைகின்றது:

...என்றவள் தொள்ளாயிரத்து இருபத்தேழாவது தடவையாகக் கூந்தலைப் பின்னே தள்ளிவிட்டுத் தன் விரல் நகங்களுக்குப் பொலிஷ் போட ஆரம்பித்தாள்.
(பக்.70)

இந்தக் அங்கதத்தின் பின்னணி புரிவதற்கு அதற்கு முன்னரான சந்திப்பு பற்றிய விபரங்களையும் குறிப்பிட்டாக வேண்டும். பேட்டியின்போது அப்பெண் கூறியவற்றின் சுருக்கம்: இத்தொழிலின்மூலம் குறுகிய காலத்தில் நிறைய சம்பாதிக்கலாம்.. தேவையானளவு சம்பாதித்ததன் பின்னர் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவதால் ஒன்றும் கெட்டுப்போகப் போவதில்லை.. ஆணுலகம் தம்மைக் கற்புடைமைக் கோட்பாட்டின் காவலர்களென்ற போலியான புனிதப் பார்வையுடன் எம்மைப் பார்க்கிறது.. எனது மோரல் டமேஜ் பற்றிப் பேசுவதற்கு எவருக்கும் உரிமையில்லை.. வெறும் தத்துவங்களும் கோட்பாடுகளும் வயித்துக்கு எப்போதும் பதில் சொல்வதில்லை.. இது இயல்பான விஷயம், சரி தவறென விசாரம் பண்ண எதுவுமேயில்லை.. பெண்ணியவாதிகளை விடவும் நாங்கள் அறிவும், பிரக்ஞையுமுடையவர்கள்.. எங்கள் மீது புனிதநீரைக் கொட்டுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை..

இவ்வளவற்றின் இறுதியில் அவ்வாக்கியம் வருகின்றது. ஆக மொத்தத்தில் தெரிவதென்ன.. இவர்கள் பேட்டியையோ, அப்பெண்ணின் கருத்துக்களையோ செவிமடுப்பதைவிட அவள் எத்தனை தடவை தனது கூந்தலை நளினமாகப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டிருந்தாளென்பதை எண்ணுவதிலேயே / கணக்கிடுவதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள். இவ் அலட்சிய மனப்பான்மை குறிப்பிட வருவது யாது? அவளொரு பாலியல் தொழிலாளி.. (இவ்வலட்சியம் பிறப்பது அந்தஸ்திலிருந்து.. இதையே ஒரு பேராசிரியர் கூறிக்கொண்டிருந்தால் இவர்களது கவனம் எப்படியிருந்திருக்குமென்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்..) அவள் சொல்வதை நாமென்ன கேட்பது.. என்ற எண்ணமோ..?

இது வெறும் நகைச்சுவைதானே.. எழுதியவரே இப்படியெல்லாம் யோசித்திருப்பாரோ என்னமோ.. ஒற்றை வரியில் எத்தனை குறை கண்டுபிடிக்கிறாளவையென உங்களில் யாராவது முறைக்கக்கூடும். இந்தப் விழிப்புணர்வை / பிரக்ஞையைத் தொலைத்துவிட்டபடியால்தான் இன்று இப்படியிருக்கிறோமென்பதை அவ்வளவு இலகுவில் மறுத்துவிட முடியுமா என்ன..

இப்படி சில (உண்மையில் பல) விடயங்களை விடுத்துப்பார்த்தால் பெர்லின் இரவுகள் - பெர்லின் நகரத்து இரவு வாழ்க்கையையும், மனிதர்களையும், அவர்களது தனித்துவமான அம்சங்களையும் மனக்கண் முன் படமென விரியச்செய்யும் - ஒரு சுவையான புத்தகம்தான்.

2.

மற்றையது, கனிமொழியின் கருவறை வாசனை..

ஈழத்தமிழர்களுக்காகக் குரல்கொடுப்பது தவறென்றால் அத்தவறை நாங்கள் மீண்டும் மீண்டும் செய்யத் தயாராக இருக்கிறோமென துணிந்து கூறிய கனிமொழியின் மீது அளவுகடந்த மதிப்புண்டு. அதன் பின்னணியிலான அரசியல் குறித்தோ, கருணாநிதியின் காய்நகர்த்தல் குறித்தோ அலசி ஆராய விருப்பமில்லையெனினும், ஸ்டாலினைத் தனது அரசியல் வாரிசாகக் களமிறக்கியதற்குப் பதிலாகக் கனிமொழியை இறக்கியிருந்தால் (அவரது அரசியல் நாட்டம் ஒருபுறமிருக்க) நிலைமை வேறுவிதமாகவிருந்திருக்குமென்பதில் சந்தேகமேயில்லைதான்.

'அகத்திணை' யை வாசித்தபோது மேலும் உயர்ந்த அம்மதிப்பு, அவரது முதல் தொகுப்பான 'கருவறை வாசனை' (தற்போதுதான் வாசிக்கக் கிடைத்தது) யைப் பார்த்தபோது வியப்பாக மாறியது. முன்னட்டையில் 'கனிமொழி கருணாநிதி' என குறிப்பிடப்பட்டிருந்தது, முதல் வியப்பு.. பின்னட்டையைத் திருப்பியபோது தோன்றியது வியப்பல்ல, கோபம். கல்யாண்ஜி (வண்ணதாசன்) என்றொருவர் பின்னட்டைக் குறிப்பெழுதியிருக்கிறார். கருணாநிதியின் தொண்டரடிப் பொடியாகவிருக்க வேண்டும்.. அப்படித்தான் நினைத்துக்கொள்ளத் தோன்றியது. புத்தகம் கனிமொயினுடையது, ஆனால் புராணம் முழுக்க கருணாநிதியைப் பற்றியிருந்தது. இதை வைத்துக்கொண்டு எனக்குக் கருணாநிதியின்மேல் என்னமோ தீவிரப் பகையென எவரும் எடைபோட்டுவிடக் கூடாது. எடைபோட்டாலுமே கூட அதனால் எனக்கோ, அவருக்கோ எதுவித நட்டமும் வரப்போவதில்லையென்பது வேறுவிடயம்.

கனிமொழி வெறும் கனிமொழி மட்டுமே அல்ல. கலைஞர் கருணாநிதியின் புதல்வி.
(கருவறை வாசனை - பின்னட்டை)

எவராவது கேட்டார்களா.. ஏன் வெறும் கனிமொழியாக அவர் இருந்துவிடக் கூடாதா.. கருணாநிதியின் புதல்வியென்றால் போகுமிடமெல்லாம் அவ்வடையாளத்தைக் காவிக்கொண்டே திரியவேண்டுமென்ற கட்டாயமெதுவுமிருக்கிறதா என்ன..

கலைஞரே ஒரு கவிதை. அவர் எழுதிய கவிதை கனிமொழி. ஆயிரம் கவிஞர்களுக்கு முகவரி தந்தவர் இன்று தன் முகவரியிலிருந்து ஒரு கவிஞரை தமிழுக்குத் தருகிறார்.
(பதிப்புரையில் குறிப்பிடப்பட்டிருப்பது..)

கலைஞருக்கு வால் பிடிக்கும் வேலை.. ஒரு இலக்கிய ஆளுமை எவராலும் வலிந்து உருவாக்கப்படுவதில்லை.. கனிமொழியின் ஆளுமை வளர்ச்சியில் கலைஞரின் தாக்கமிருக்கக்கூடும்.. ஆனால், அவர்தான் ஒரே ஆதாரமாக / கனிமொழியென்ற ஒரு இலக்கிய ஆளுமையை தோற்றுவித்த 'கடவுளாக' இருந்துவிட முடியாது ஒருபோதும். தனது ஏனைய புதல்வர்களை கலைஞரால் இதே ஆளுமையுடன் வளர்க்க முடியாமற் போனது நினைவிருக்குமானால், கனிமொழியின் வளர்ச்சியிலும் அவரது பங்கு மிகக்குறைவாகவே இருந்திருக்க வேண்டுமென்பது தெளிவு.

இன்னொருவரது பெயரால் (தந்தை, துணைவர்) அடையாளப்படுத்தப்படுவதன் வலி அதனை அனுபவித்தவர்களுக்குத்தான் புரியக்கூடும். பெரும்பாலும் இவ்வாயுதம் பெண்களை இலக்கு வைத்துத்தான் எறியப்படுவது குறிப்பிடத்தக்கதே. அதன்மூலம் அவளது சுயத்தை இன்னொருவரது - பெரும்பாலும் ஒரு ஆணினுடையதன் - பின்தொடரலாக / தொடர்ச்சியாக உருவகப்படுத்துவதன்மூலம் அவளது தனித்துவத்தை, திறனை மட்டந்தட்டும் / அழித்தொழிக்கும் முயற்சியே இது. அத்தகைய விம்பங்கள் மற்றும் முன்மதிப்பீடுகளிலிருந்து விடுபட விரும்புபவர்கள் ஏனையவர்களை விடவும் அதியுச்ச வினைத்திறனுடன் செயற்பட வேண்டியிருக்கிறது. எனினும், 'கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்' என்றெல்லாம் எடுத்துக்கூறி - அவர்களை வெறும் கட்டுத்தறியாகவே மதிப்பிட்டு - ஆன்மவலிமையை முடக்கிவிடக் காத்துக்கொண்டிருக்கும் சமூகத்தில் இது மிகப்பெரிய சவால்தான். ஆணாதிக்கவுலகில் தனக்கானதொரு ஸ்தானத்தைக் கைப்பற்றிக் கொள்வதேயொரு பெரும் போராட்டமாயிருக்க, இன்னொரு ஆணின் பெயரால் தன்னைச் சுற்றிப் பிணைக்கப்பட்டிருக்கும் வளையங்களை அறுத்தெறிந்துவிட்டுத்தான் அப்போராட்டத்தினை எதிர்கொள்ள வேண்டியிருப்பது இரட்டைச் சுமையாகவே அமைவது கனிமொழி போன்ற இன்னும் பலரது அவலமே.

தன்னை, தனது சுயத்தை அவமானப்படுத்தும் இத்தகைய வெத்துவேட்டு வேஷங்களையெல்லாம் கனிமொழி தனது புத்தகத்தில் ஏன் அனுமதித்தாரென்ற கேள்வி மனதைக் குடைந்துகொண்டேயிருந்தது. எனினும், முதல் கவிதையை வாசித்ததுமே மனம் திருப்தியில் நிறைந்ததையும் குறிப்பிடத்தான் வேண்டும். முன்னைய பக்கங்களின் வேஷங்களையெல்லாம் கிழித்தெறிவதாக அமைந்திருந்தது அக்கவிதை.

எனக்கு என்று
சொற்கள் இல்லை.
மொழி எம்மை
இணைத்துக் கொள்வதுமில்லை.
உமது கதைகளில்
யாம் இல்லை,
எனக்கென்று சரித்திரமில்லை.
நீங்கள் கற்றுத் தந்ததே நான்
வார்த்துத் தந்ததே நிஜம்.
எனக்கென்று கண்களோ,
செவிகளோ, கால்களோ,
இல்லை.
அவ்வப்போது நீ இரவலாய்
தருவதைத் தவிர.
(பக்.15)

அகத்திணையின் அளவுக்கு இத்தொகுதி மனதை வசீகரிக்கவில்லையெனினும், ஒருசில கவிதைகள் - கருவறை வாசனை உட்பட - குறிப்பிட்டுச் சொல்லத்தக்கனவாகவே அமைந்திருந்தன. தொகுப்பின் இறுதியில் இடம்பெற்றிருந்த கனிமொழியுடனான சிறு உரையாடல், என்னவொரு துணிவான ஆளுமை படைத்த பெண்ணென வியக்க வைத்தது, ஒருகணம்.

(நன்றி: தொலைதூரத்துத் தோழனுக்கும், அன்பு மைத்துனனுக்கும் தொகுப்புக்களுக்காக..)

13 comments:

-/பெயரிலி. said...

கருணாஹரமூர்த்தியின், 'கூடு கலைதல்' & 'பெர்லின் நகர இரவுகள்' குறித்து எழுதிய அல்லது எழுதிக்கொண்டிருக்கும் அல்லது எழுத விரும்பிய துண்டம் மூன்று மாதங்களாகக் கோப்புத்தொட்டிலுள் நித்திரை கொள்வதால், குறைமாதக்குழந்தையின் குளிர்த்தூக்கம் கலைக்க விருப்பமில்லை :-) அதனால், உடனடிக்குறிப்பொன்று. கருணாஹரமூர்த்தியின் பார்வை குறித்து அவரின் அறைப்பெம்மானின் கருத்துப்படி நீங்கள் சொல்வதோடு உடன்படமுடிகின்றது. ஆனால், பாலியற்றொழிலாளி குறித்து அவர் சொல்ல வந்தது, பாலியற்றொழிலாளியை இழிவாகப் பார்த்ததாகத் தோன்றவில்லை. அவர் சொன்ன பெண்ணுடனான அவரின் வாடகைச்சாரத்தியத்தின்போது, வாடகை தொடர்பாகவும் தொடர்ச்சியான அவளின் சிநேகிதம் தொடர்பாகவும் நிகழ்ந்ததைச் சொல்லும்போது, அவர் இழிவாகக் கருதிச் சொன்னதாக எனக்குப் படவில்லை. இதயம் பேசின வேங்கடசுப்பிரமணியன் போன்றோர் உலகம் சுத்தி, போகிற இடத்திலும் வாயிலே கோப்பை ஒட்டாமல், புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆபிரிக்க வேலைக்காரப்பெண்ணுக்கு, 'வாட்டர் மஜீக்' காட்டி, அப்படியே எமக்கு "இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்" காட்டியபோது, கருணாஹரமூர்த்தி ஜெர்மன் வாடகைவண்டியோட்டம் நிலைமையை நிலத்திலே வைத்துத் தெரிவித்திருக்கின்றது. ஆனால், (ஓசிப்புத்தகத்துக்கு நான் உதைக்கக்கூடாதென்ற விதியை மீறினாலுங்கூட), இந்நூல், மாலன் என்பவர் நடத்திய (நடத்தும்?) திசைகள் என்ற இணைய இதழொன்றுக்கு கருணாஹரமூர்த்தி எழுதிய தொடரின் தொகுப்பாகும். பெரும்பான்மையான புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்களின் சாபக்கேடான இந்திய வாசகனுக்குப் புரியும்படி எழுதுகிறேன் என பாதி ஈழவழக்கு காற்பாதி புலம்பெயர்ந்த நாட்டுவழக்கு, மீதி இந்திய வழக்கு என்று எழுதும் கேடு கருணாஹரமூர்த்தியின் இந்நூலிலேயும் மிக வெளிப்படை. அவருடைய கூடு கலைதலுக்கும் இதற்கும் அதன் நடை மிகத் தெளிவாகத் தெரிகின்றது. அவரைச் சொல்லிக் குற்றமில்லை; ஈழத்திலேயே இருக்கின்ற எத்தனை பேரே இணையத்திலே ஈழத்து வழக்கிலே எழுதுகின்றார்கள்?

நிவேதா said...

நன்றி, பெயரிலி!

இது உங்கள் பார்வை.. நான் கூறவந்த சம்பவம் சிநேகிதப் பெண்ணைப் பற்றியதோ, வாடகை பற்றியதோ அல்ல.. அத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்ததை அப்படியே எடுத்துக்கூறுவதாக அமைந்திருந்தமை உண்மையே.. இது, இறுதிப் பக்கங்களிலுள்ளவொன்று. தற்செயலாக காட்டுப் பிரதேசமொன்றில் சந்தித்த - பாலியல் தொழிலாளியாவென முதலில் சந்தேகப்பட்ட - ஒருவரைப் பற்றியது. இழிவாகக் கூறவரவில்லையென்றால், சோரம் போவதற்கெதிராக (இவ்வார்த்தைப் பிரயோகத்தில் தொனிக்கும் அநாகரிகம் உங்களுக்கே தெரிந்திருக்கும்) செங்கல் நாட்ட விழைந்ததேனோ..

//ஓசிப்புத்தகத்துக்கு நான் உதைக்கக்கூடாதென்ற விதியை மீறினாலுங்கூட//

அப்பனே கந்தா.. ஒன்றுமே புரியவில்லை..:-(

மற்றும்படி, ஈழத்தில் இருக்கின்ற அனைவரும் ஈழத்து வழக்கிலேயே எழுதியாகவேண்டிய கட்டாயமிருக்கிறதா என்ன.. ஏன் கேட்கிறேனென்றால், எம்மைப் போன்ற நகர வாழ்க்கைக்குப் பரிச்சயமான இளந்தலைமுறையினரிடம் அப்படித் தனியான வழக்கென எதுவுமில்லாமற் போன அவலம்தான்.

எழுத்துமூலம் மட்டுமே அறிந்திருந்த நண்பரொருவர் முதன்முறையாக என்னுடன் தொலைபேசியில் கதைத்தபோது, நீங்கள் வீட்டில் ஆங்கிலத்திலா பேசுவீர்களெனக் கேட்டார். தனியார் பாடசாலையில் சிலகாலம் குப்பைகொட்டியதன் விளைவு.. எனது தமிழ் உச்சரிப்பு அவ்வளவு கேவலமாக இருந்திருக்க வேண்டும். கொழும்பில் இந்திய வம்சாவளித் தமிழர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அதிகம். அதிலிருந்து அவர்களின் பேச்சு வழக்கும் தொற்றிக்கொண்டுவிட, வீட்டில் மட்டுமே பேசும் ஈழத்து வழக்கின் ஆதிக்கம் குறைந்து, இதுவுமில்லை அதுவுமில்லையென்ற நிலையில் எமக்கான மொழிகூட இல்லையென்றாகிவிட்டது. புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமே எதிர்நோக்கும் பிரச்சனையல்ல இது.. தாய்நிலத்திலும், ஆங்கிலக் கல்விமுறையின் அறிமுகமும், சக இனத்தவருடனான நெருங்கிய தொடர்புமேகூட இதற்குக் காரணங்களாகவமைகின்றன.

கேடுதான் நிச்சயமாக.. கொடுங்குளிர் நாடுகளிலும் சேலை கட்டி, பொட்டும் பூவுமிட்டு வளர்த்தெடுத்த / பாதுகாத்து வந்த பண்பாடும், கலாசாரமும் இப்படி அழிய நேரிடுவது துர்ப்பாக்கியமே..:-(

செல்வநாயகி said...

நிவேதா,

வேறேதோ எழுத வந்தேன். இதை மறுமொழியப்பட்ட ஆக்கங்களில் பார்த்தபோது உள்ளே வந்து நீங்கள் சொல்லியிருப்பதுபோல் "வாசித்தல் ஒரு தவம்" மாதிரிப் படித்துக்கொண்டிருந்தேன். உங்களின் எல்லா இடுகைகளையுமே அப்படித்தான் படிக்கிறேன் என்பது வேறு விடயம்.

மிக நல்ல அலசல் இது. எழுத்துக்கள் மீதான வாசிப்பு பிரக்ஞையற்றதாய் ஆகிவிட நேருகையில் அங்கதங்களும், நையாண்டிகளும் மொழிப்புலமை என்றே பார்க்கப்படும் அபாயம் நடந்துகொண்டு இருக்கிறதோ என இவ்விடுகையின் முடிவில் நினைத்துக்கொள்கிறேன். அவை சிலசமயங்களில் வக்கிரத்துக்குக் கட்டப்பட்ட ஆடைகளாகவும் அமைகின்றன என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

கனிமொழி பற்றிய உங்கள் பார்வையோடும் ஒத்துப்போகிறேன். நன்றி.

-/பெயரிலி. said...

இரண்டு மறைகளைக் கூட்ட நேராகாது என்பதற்கு உங்கள் பதிவினை நான் புரிந்து கொண்டதும் என் பதிலினை நீங்கள் புரிந்துகொண்டதும் சரியான உதாரணமாகலாம் ;-)

நீங்கள் வாடகைக்காரிலே தொடர்ந்து வந்து போகும் ருமேனிய(/போலந்து?)ப்பெண்ணைப் பற்றிச் சொல்வதாக எண்ணிக்கொண்டது என் பிழைதான். அப்பிழையினாலேதான் என் பின்னூட்டம் - அவர்களிடையே புரிதல் இருந்ததென்ற வகையிலே, அவர் எழுதினாரென- அப்படியாகவிருந்தது.

/ அப்பனே கந்தா.. ஒன்றுமே புரியவில்லை..:-( /
அம்மணி தெய்வானை! ஓசிப்புத்தகம் என்று எனக்கு பெர்லின் நகர இரவுகள் கிடைத்த கிடைத்த வரலாற்றைச் சொன்னேன் ;-)

/மற்றும்படி, ஈழத்தில் இருக்கின்ற அனைவரும் ஈழத்து வழக்கிலேயே எழுதியாகவேண்டிய கட்டாயமிருக்கிறதா என்ன../

தற்செயலாக நான் எழுதியது தெளிவாக இருந்திராவிட்டால்...நான் ஈழத்திலிருந்து எழுதுவதைப் பற்றிச் சொன்னது உங்களைக் குறித்தல்ல. எனது கருத்துக்கென்று நான் கொண்டது மயூரேசன் என்பவர் இணையத்திலே எழுதும் கதைகளிலே வரும் சொற்பயன்பாட்டினை; ஓரிடத்திலே சொக்கலேற் என்று எழுதுகிறவர் அடுத்த வசனத்திலே சாக்கலேட் என்று எழுதுகிறார். தேன்கூடு கதைப்போட்டிக்கு எழுதும்போது, அவருக்கு இது தேவைப்படுகிறதோ என்னவோ, அதுபோலவே கருணாஹரமூர்த்தியும் 'தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் தொப்புட்கொடியுறவென்றென்று ஒன்றில்லை" என்று இதே வலைப்பதிவுலகிலே சொன்ன மாலன் என்பவரின் திசைகள் வலைஞ்சிகையிலே எழுதும்போது, வாசிக்கும் வாசகவட்டத்தைக் குறிவைத்து இப்படியான குழறுபடி எழுத்தமைப்பிலே செய்கின்றாரென்பதைச் சுட்ட வந்தேன்.

ஈழத்துப்பேச்சுவழக்கு என்பது ஒற்றைப்படையான வழக்கில்லையென்பது முதலாவது விடயம். பகுதிக்குப் பகுதி மாறுவதும் நகர்ப்புறங்கள் பேச்சுவழக்கு மாறுபட்டிருப்பதும் எந்நாட்டிலும் ஒன்றே. அதனால், நீண்டகாலம் பேசக் கேட்டிருக்காத ஈழவட்டாரவழக்குகள் அன்றையிலிருந்து இன்றைக்கு மாறியிருக்கலாமென்பதை ஒத்துக்கொள்கிறேன். யதார்த்தம் - சன் டிவியினால், ஸினிமாவால் வந்திருந்தாலுஞ் சரி எதுவானாலுஞ் சரி - ஏற்கப்படக்கூடியதே. ஆனால், வாசிக்கின்ற வாசகர்களுக்காக சொல்பொருளின் தேவைக்கப்பாலும் மொழியைச் சிதைக்கும் எவ்வெழுத்தாளனை, அவன் படைப்பினை நேர்மையுள்ளதென்று கருதலாம்?

/கேடுதான் நிச்சயமாக.. கொடுங்குளிர் நாடுகளிலும் சேலை கட்டி, பொட்டும் பூவுமிட்டு வளர்த்தெடுத்த / பாதுகாத்து வந்த பண்பாடும், கலாசாரமும் இப்படி அழிய நேரிடுவது துர்ப்பாக்கியமே..:-(/
பிழையான மரத்திலே புரட்சிக்கோடரி ஓங்கிப் போடுகிறீர்கள் என்றுமட்டும் இப்போதைக்குச் சொல்லிக்கொண்டு 'சிந்தனைகள் அவரவர் சார்பானவை' என, என் கையைத் தூக்கிக்கொள்வதல்லால் - இப்பின்னூட்டத்தில் - மேலதிகமாகச் இதிலே சொல்ல ஏதுமில்லை. :-(

பத்மா அர்விந்த் said...

சில சமயங்களில் பிரபலங்களின் பிள்ளைகளாக இருப்பதில் சங்கடமும் உண்டு சந்தோஷங்களும் உண்டு. கனிமொழி இதை வெளிப்படையாக தான் கனிமொழியாக உணரப்படுவதைத்தான் விரும்புகிறேன் என்றூ சொன்னார், அல்லது தன் தந்தையின் புகழ் மூலம் தனக்கு எளிதாக வரக்கூடிய வாய்ப்புகளை உதறீ இருந்தாலும் வெளிச்ச மழைதன் மீது விழுவதை புறக்கணித்திருந்தாலும் கூட, அடடா, கருணாநிதியின் பெண்ணுக்கு எத்தனை தன்னடக்கம் என்றூ இன்னொரு வழியிலே புகழாரம் சூட்ட காத்திருப்பர்கள். பெண்கள் தங்கள் சங்கிலிகளை அறுத்து கொண்டோ புறக்கணித்துவிட்டோதான் வெளிவர வேண்டி இருக்கிறது என்றாலும், பிரபலங்களின் பிள்ளைகள் இழக்கும் தனித்துவம் ஆணுக்கும் பெண்னுக்கும் சரிசமமே.

செல்வநாயகி said...

///பிரபலங்களின் பிள்ளைகள் இழக்கும் தனித்துவம் ஆணுக்கும் பெண்னுக்கும் சரிசமமே////

பின்னூட்டமிட்டுவிட்டு நகர்ந்தபின் நானும் இதை யோசித்துக்கொண்டிருந்தேன் பத்மா. நீங்கள் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
பிரபலங்களின் வாரிசுகள் மீது வீசப்படும் விளம்பரவெளிச்சம் ஆண், பெண் என்ற பேதமில்லாமலே பாய்கிறது என்பது சரிதான். அது தவிர்த்துத் தன்னை ஒரு தனிப்பட்ட ஆளுமையாய் நிரூபித்துக்கொள்வதில் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும் பிரச்சினைகள் கனிமொழிக்கும் இருந்திருக்கலாம்.

டிசே தமிழன் said...

நிவேதா,பெர்லின் இரவுகளை வாசித்தபோது, இப்படியான கோணத்தில் யோசித்துப் பார்க்கவில்லை. உங்கள் இவ் விமர்சனத்தை வாசித்துவிட்டு, இன்னொருமுறை திரும்பி வாசிக்கும்போது வேறொருமாதிரியான வாசிப்பனுபவத்தைத் தரலாம். நிற்க.
பெயரிலி கூறுவதுபோல, கருணாகரமூர்த்தியின் எழுத்துக்களை வாசித்தளவில் அவர் விளிம்புநிலை மனிதர்களை வேண்டுமென்றே -சிலரைப்போல தாழ்த்தும் எண்ணம்- அவருக்கு இல்லையென்றே என்றே நினைக்கத் தோன்றுகின்றது. எனினும் நீங்கள் குறிப்பிடுவதுபோல, அங்கதம் என்பது கயிற்றின் மேல் நடப்பதுபோலத்தான். அ.முத்துலிங்கத்தின் சில கதைகளிலும் அங்கதம் அவலமாய்ப்போய்விடுவதைக் கண்டிருக்கின்றேன்.
....
கருணாகரமூர்த்தியின் எழுத்துநடை மற்றும் பிறரின் மொழிப்பிரயோகம் குறித்த பெயரிலியின் கருத்துக்களோடு ஒத்துப்போகின்றேன். பெர்லின் இரவுகளுக்கு சிறு அறிமுகம் எழுதியபோதும் கருணாகரமூர்த்தி கவனமெடுக்கவேண்டிய புள்ளி இதுவெனவும் இங்கே (http://elanko.net/?p=183)எழுதியிருக்கின்றேன். அண்மையில் அவரது சிறுகதைத் தொகுப்பான 'கூடு கலைதலை' வாசித்தபோது இன்னும் இதுகுறித்து உரத்துப்பேசவேண்டியதற்கான அவசியம் இருக்கின்றதெனவே நம்புகின்றேன்.
....
கனிமொழி தனது முதற்தொகுப்பிலிருந்த மனநிலையிலிருந்து வெளியேறிவிட்டார் போலத்தான் தோன்றுகின்றது. தீராநதியில் வந்த ஒரு நேர்காணலில் கலைஞரைப் பற்றித் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டபோது, இது என்னைப் பற்றிய நேர்காணலா இல்லை கலைஞரைப் பற்றிய நேர்காணலா என்று -வெளிப்படையாக- திருப்பிக்கேட்டதை வாசித்தது நினைவு.
நன்றி

தமிழ்நதி said...

நிவேதா,
நான் இன்னும் 'பெர்லின் இரவுகள்'வாசிக்கவில்லை. அதைப் பற்றி நீங்கள் எழுதியிருப்பது வாசிக்கத் தூண்டியது. அவர் என்ன கண்ணோட்டத்தில் பாலியல் தொழிலாளியைப் பார்த்தார் என்பதை சுயவாசிப்பின் மூலம் தெரிந்துகொள்வதே சிறப்பு. இப்போது உங்கள் பதிவு தந்த நினைவு, அதுசார்ந்த பின்னூட்டங்கள் இவையிணைந்த பின்னணியில் எழுத்துக்கள் ஓடப்போகின்றன. உங்கள் பார்வையில் ஓரிடத்தில் வெளிப்பட்ட கோபம் என்னைச் சிரிக்க வைத்துவிட்டது.
"என்னைக் கேட்டிருந்தால், அந்தச் செங்கல்லை இவ்வுலகின் ரம்யத்தினைப் பாதுகாக்கும் பொருட்டு உங்கள் தலையிலேயே போட்டுக்கொள்ளுங்களென ஆலோசனை கூறியிருப்பேன்."

நன்றாக எழுதுகிறீர்கள் என்று மீண்டும் மீண்டும் வந்து சொல்ல ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. சொல்லாமல் இருப்பதுமல்லவா ஒரு மாதிரியாக இருக்கிறது.

நிவேதா said...

செல்வநாயகி, பத்மா அர்விந்த்.. பின்னூட்டங்களுக்கு நன்றி!

///பிரபலங்களின் பிள்ளைகள் இழக்கும் தனித்துவம் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமே////

மிக மிக உண்மை. இருந்தாலும், ஒப்பீட்டளவில் ஒரு பெண்ணை அது அதிகமாகப் பாதிக்குமோ என்று தோன்றுகிறது. காரணம், சாதாரண சூழ்நிலைகளின்கீழ் ஒரு பெண் தனது நிலையிலிருந்து உயர்வதற்கான வாய்ப்புக்களை எமது சமூகம் வழங்கிவிடவில்லை. பெரு முயற்சியெடுத்துக்கொண்டு வெளிவர முயன்றாலும் நடத்தை தொடர்பான கேள்விகளும், குடும்பம், குழந்தை, குட்டியென இன்னபிற கடமைகளும் அவளை முடக்குவதற்கான ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவையொருபோதும் ஆண்களை இலக்கு வைத்து எறியப்படுவதில்லையென்பது ஒருபுறமிருக்க, பிரபலத்தின் வாரிசென்ற அடையாளத்துடன் வெளிவரும் பெண்ணின்மீது, பிரபலத்தின் வாரிசென்ற முன்மதிப்பீடுகளை உடைத்தெறிய வேண்டிய தேவையும்.. அதேவேளை 'பெண்' என்ற கட்டை அறுத்தெறிய வேண்டிய கட்டாயமுமென இரட்டைச் சுமை சுமத்தப்படுகிறதென்றே நினைக்கிறேன். ஆண்களுக்கு இந்தத்தொல்லைகள் / இரட்டைச் சுமை - இல்லவேயில்லையென்று சொல்ல வரவில்லை எனினும் - சற்றுக் குறைவே. பெண்கள் சாதாரணமாகவே இன்னுமொரு ஆணின் பிற்சேர்க்கையாக அடையாளப்படுத்தப்படுமொரு சமூகத்தில் பிரபலத்தின் வாரிசுமென்றால் கேட்கவே வேண்டியதில்லை.
.......
வருகைக்கு நன்றி, பெயரிலி!

எனது வலைப்பதிவில் வந்து ஈழத்திலிருப்பவர்கள் ஈழத்துத் தமிழில் எழுதுவதில்லையென்று சொன்னால் நான் என்னவென்று நினைத்துக்கொள்ள.. உங்களுக்கல்ல என்று ஒரு அடிக்குறிப்பாவது போட்டிருக்கலாம்..:-)

மயூரேசனின் கதைகள் வாசித்ததில்லையெனினும், எழுதுவது அவரவர் சுதந்திரம்.. அதேபோல் பிடித்ததை வாசிப்பதும் ஏனையவற்றைத் தவிர்ப்பதும் எமக்கான சுதந்திரமில்லையா.. எமக்குப் பிடிக்கவில்லையென்பதற்காக ரமணிசந்திரனை இப்படி எழுதவேண்டாமென உத்தரவிட முடியாதுதானே.. இந்த மொழிப்பிரயோகம் தொடர்பாக நீங்களும், டிசேயும் இத்தனை அக்கறையெடுப்பதன் காரணம் உண்மையாகவே புரியவில்லை. என்றாலும், வலைப்பதிவுலகில் என் பெரு மதிப்பிற்குரியவர்களென்ற வகையில் நீங்களிருவரும் கூறுபவற்றை ஒரேயடியாக மறுக்கவும் முடியவில்லை..:-(

பிழையான மரத்திலே புரட்சிக் கோடரியா.. ம்ம்ம்.. அப்படியெதுவும் தெரியவில்லையே.. நல்லாப் பாருங்கோ, இது சாதாரணக் கோடரி அண்ணை.. அதெல்லாம் வெளி வேஷம் காட்டுபவர்கள்தான் தூக்கிகொண்டு திரிவார்களாக்கும்.. எங்களுக்கு இரும்புக் கோடரியே போதும்..:-) மரமும் பட்டுபோனதென்றெல்லவா நினைத்தேன்.. பாவம், பச்சை மரம்.. விடும் பிள்ளாய் என்று சொல்ல வருகிறீர்களாக்கும்.. ஆகட்டும் ஆகட்டும்..

மற்றும்படி, இவ்விரு புத்தகங்களும் அம்மணிக்கும் ஓசியாகத்தான் கிடைத்தனவென்பது கொசுறுத் தகவல்..;-)
.......
பின்னூட்டத்திற்கு நன்றி, டிசே!

//நிற்க. பெயரிலி கூறுவதுபோல, கருணாகரமூர்த்தியின் எழுத்துக்களை வாசித்தளவில் அவர் விளிம்புநிலை மனிதர்களை வேண்டுமென்றே -சிலரைப்போல தாழ்த்தும் எண்ணம்- அவருக்கு இல்லையென்றே என்றே நினைக்கத் தோன்றுகின்றது.//

உட்காரலாமா...;-) முன்னரே கூறியதுபோல அது உங்கள் வாசிப்பு. எனது கருத்துத்தான் முடிந்த முடிவென்றில்லை.. தவறாகவுமிருக்கலாமெனினும், எனக்கு அப்படித்தான் தோன்றியது. அதற்கான சில உதாரணங்களைத்தான் குறிப்பிட்டுக் காட்டியுமிருந்தேன். அவர் வேண்டுமென்றே தாழ்த்துவதாக நினைக்கவில்லை.. ஆனால், கத்திமேல் நடக்கிறாரென்பதையே சொல்ல விரும்பினேன். அந்த அர்த்தத்தில் எழுதப்பட்டதுதான் இது.

//இது வெறும் நகைச்சுவைதானே.. எழுதியவரே இப்படியெல்லாம் யோசித்திருப்பாரோ என்னமோ.. ஒற்றை வரியில் எத்தனை குறை கண்டுபிடிக்கிறாளவையென உங்களில் யாராவது முறைக்கக்கூடும்//
.......
பின்னூட்டத்திற்கு நன்றி, தமிழ்நதி!

ஐயோ, சிரித்தெல்லாம் வைக்காதீர்கள்.. பிறகு, யாராவது சிகாமணிகள் என்னோடு வம்புக்கு வரப்போகிறார்கள்..

பொதுவாக, புத்தகமொன்றைப் பற்றி எழுத விரும்பாமைக்கான காரணமும் இதுதான்.. வாசித்திருக்காதவர்களுக்கு அதைப்பற்றிய முன்மதிப்பீடொன்றை வழங்கிவிட்டது போலாகிவிடும். பிறகு, அந்த முன்மதிப்பீட்டிலிருந்து விடுபடுவதென்பது வாசகருக்கு சற்றுச் சிரமம்தான். மன்னிக்கவேண்டும்.. என்ன செய்ய, கடந்த இரவு 'எழுது எழுதென்று' கை நமநமத்துக்கொண்டேயிருந்தது..:-(

தமிழ்நதி said...

"நிற்க"
"உட்காரலாமா...?"
என்னை நள்ளிரவில் வாய்விட்டுச் சிரிக்கவைத்த பாவத்திற்குப் பரிகாரமாக இன்னொரு பதிவு போட்டுவிடுங்கள்.

நான் அந்தப் பெண்ணைச் சந்தித்தபோது அவள் இவ்வளவு நகைச்சுவையுணர்வு பொருந்தியவளென நினைத்திருக்கவில்லை. அவள் தோழிகளின் சிரிப்பை எடுத்துக்கொள்பவளாக மட்டுமே அன்று இருந்தாள். ஒரு சந்திப்பில் ஒருவரை அடையாளங்கண்டுவிடலாம் என்பது தவறென இப்போதெல்லாம் யாராவது நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இதை நீங்கள் போடலாம்; விடலாம். உங்கள் விருப்பம்.

-/பெயரிலி. said...

/இந்த மொழிப்பிரயோகம் தொடர்பாக நீங்களும், டிசேயும் இத்தனை அக்கறையெடுப்பதன் காரணம் உண்மையாகவே புரியவில்லை/

இம்மொழிப்பயன்பாடு குறித்ததிலே சில தமிழ்நாட்டு இலக்கியக்காரர்கள், அவர்களின் விசிறிகளின் அரசியலிருக்கின்றதாகக் கருதுகின்றேன். இலங்கையர்கோனும் சம்பந்தனும் தமிழகப்படைப்புலகத்தின் காலைப் பிடித்துக் கெஞ்சாத குறையான காலத்தினை எண்ணிக்கொண்டு பார்க்கையிலே தமிழகப்படைப்புலகு படவுலகு போன்றவற்றின் உயர்பீடங்களிலே தம்மை இருத்திக்கொண்டு ஈழப்படைப்புகளையும் அதுபோன்ற இவர்களின் எழுத்துநிலை, படைப்புநிலை சாராதவர்களைக் குனிந்துபார்க்கும் *குறிப்பிட்ட சில" திமிருள்ளவர்களின் பின்னால் தட்டெடுத்துப்போகும் நிலையைத் தவிர்க்கவேண்டியே இவ்வக்கறையுள்ளது. கருணாஹரமூர்த்தியின் எழுத்திலே பெண்ணிலை சார்ந்து எவ்விதம் உங்களுக்குத் தாக்கமுண்டோ, அதுபோல, அவரது சொற்பயன்பாடு, மேற்சொன்னவர்களின் இருப்பினையும் பார்வையினையும் ஈழப்படைப்புகள் குறித்து உறுதிப்படுத்தவிடக்கூடாதென விரும்புகிறேன். இவ்வகையிலேயே முத்துலிங்கம், சேரன் போன்றோரின் எழுத்திலும்விட, அவர்களின் இலக்கிய அரசியல் குத்துகின்றது. புன்னகை மன்னன் பாலசந்தர், எவ்வித அரசியற்பிரக்ஞையுமில்லாமல் பொய்யை மெய்யாகக் காட்டும்போது, தெனாலி சிரிப்புக்கான விடயமென்று காட்டப்படும்போது அவற்றினைச் சுட்டிக்காட்டவேண்டியிருக்கின்றது. ஆணாதிக்கம் என்பதைப் போலத்தான் இவர்களின் இலக்கியநிலை வகுக்கும் ஆதிக்கம்கூட. கருணாஹரமூர்த்திக்கு திசைகளிலே அவர் எழுத்தாளராகக் கொண்டாடப்படுவதும் அதன் மூலம் குறித்த வாசகர்வட்டத்திடையே பேசப்படுவதும் முக்கியமானதாலேதான் அவர் இயல்பில்லாமல் எழுத்திலே என் பார்வையிலே விலகி நிற்கும் சொற்களை விதைக்கின்றாரென்று கருதுகிறேன். ஆதிக்கமென்பது நேரடியாக அமேதிப்படையாக மட்டும் இறங்கி வந்து வன்புணர்ந்து கொலை செய்துவிட்டுப் போகவேண்டியதில்லை. அதற்கு, கூட்டியும் காட்டியும் கொடுப்பவர்கள், ஆயுததாரிகளாகவே இருக்கவேண்டுமென்பதுமில்லை.

எழுத்தென்பது அவரவர் சுதந்திரமே; ஆனால், அம்மொழிப்பயன்பாடே - என் மொழியையும் உள்ளடக்கிய - ஈழத்தமிழ்ப்பயன்பாடு என்று ஒற்றைக்கோட்டுநீரோட்டமாக வரையறை செய்யப்படுவதைக் கண்டிக்கிறோம். மகரந்தப்போலிகள் வேண்டாமே :-(

----
/எனது வலைப்பதிவில் வந்து ஈழத்திலிருப்பவர்கள் ஈழத்துத் தமிழில் எழுதுவதில்லையென்று சொன்னால் நான் என்னவென்று நினைத்துக்கொள்ள.. உங்களுக்கல்ல என்று ஒரு அடிக்குறிப்பாவது போட்டிருக்கலாம்..:-)/

விளக்கமாக விரித்து வரக்கூடிய, வாசிக்கக்கூடிய கோணங்களைக் கண்டு தெளிவாக எழுதுமளவுக்கு நிலை தற்சமயமில்லை. மன்னிக்கவேண்டும்.

நிவேதா said...

நன்றி, தமிழ்நதி!

நீங்கள் இப்படியெல்லாம் வந்து பின்னூட்டமிட்டுப்போக டிசே என்னோடு கொழுவப் போகிறார்..

அந்த வானரக்கூட்டங்களோடு இத்தனை வருடமாய்க் கூட இருந்தும் இப்படியாவது இல்லாமற் போனால்தான் அதிசயம். போதாக்குறைக்கு அன்று, முதல் சந்திப்பிலேயே சுயரூபத்தைக் காட்டி அசரவைக்ககூடாதென்ற நல்லெண்ணத்தில் என் பெரிய மனுசித்தனங்களையல்லவா maintain பண்ண சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன்..:-)

பின்னூட்டத்துக்கு மிக மிக நன்றி, பெயரிலி!

இத்தனை விரிவான விளக்கத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நன்றி. இலக்கிய ஆதிக்கத்தினைப் பற்றி நீங்கள் குறிப்பிடுகையில்தான் ஜெயமோகன் தரவழியினர் குறித்து நண்பரொருவர் விசனம் தெரிவித்தமையும் நினைவுக்கு வருகின்றது.. ம்ம்ம்.. அவர்களது வட்டார வழக்குகள் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும் சில படைப்புகள் எமக்கும் தான் புரிவதில்லை.. அதற்காக அவர்கள் ஈழத்து வழக்குகளைப் பயன்படுத்தி விடுகிறார்களா என்ன..

படைப்புக்கள் தவிர்ந்தவிடத்து, படைப்பாளிகளைப் பற்றி அதிகம் கரிசனை கொள்வதில்லையாதலால் இவ்விடயங்கள் குறித்தும் அக்கறை கொண்டிருக்கவில்லை. ஆனால், அவ்வளவு இலகுவில் இவற்றைப் புறமொதுக்கிவிட முடியாதென இப்போதுதான் நினைக்கத் தோன்றுகிறது.

மறுபடியுமொருமுறை.., நன்றி!

நிவேதா said...

testing 4 new template