Tuesday, April 25, 2006

தப்பியோட மறுப்பவள்


நான் மௌனமாயிருக்கிறேன்.
தோற்றுப் போய்விட்டதாக
நீங்கள் கெக்கலிக்கிறீர்கள்.

மௌனங்களின் வெறுமைக்குள்
கனன்று பரவுகிறது தீ...
அதன் பரிமாணங்களின் வழி..,
படிமமாற்றங்களின் வழி..
நழுவிக்கொண்டிருக்கிறது, கசப்பு.

உங்களை வெறுப்பேற்றக்கூடுமெனினும்,
நான் வாழ்தலின் கடுமையைப்பற்றி
பேசவிரும்புகிறேன்..,
தொடர்ந்தும்
உங்களுக்காக அழ மறுத்தபடி.


கசப்பின் மறுபெயர் நெருப்பென்கிறேன்.. நீங்கள் திகைக்கிறீர்கள். சாம்பல் பூத்தாலும், அடியாழங்களில் தொடர்ந்தும் உயிர்த்திருக்கும் வல்லமை இரண்டுக்குமே வாய்த்திருக்கிறதென்கிறேன்.. பெருமூச்சொன்று வெளிப்படுகிறது, உங்களிடமிருந்து.

என்னைப்பற்றி என்னதான் தெரியும் உங்களுக்கு..? ஒரு பெண்.. அசட்டுப் பெண்.. எழுதுகிறாள்.. வெறுக்கிறாள்.. கோபப்படுகிறாள்.. இவற்றை விடவும்...

ம்ம்ம்... நான் உறுதியாக இருக்கவேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்... ஆனால், நிச்சயமாக நான் அவ்வாறிருக்கப் போவதில்லை.



செய்தி:
இன்று நண்பகல், கொழும்பின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் நிகழ்ந்த தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் ஒரு இராணுவ அதிகாரி பலி. பதினொருவர் படுகாயம். தாக்குதலை மேற்கொண்ட கர்ப்பிணிப் பெண்ணின் ஒற்றைக்கால் மட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


(01)

அலுத்துக் களைத்துப்போய் வீடுவந்தால்.., "நாடு கிடக்கிற நிலைமையில் எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருகிறாய்?" வரவேற்புப் பத்திரம் வாசிக்கிறாள், அம்மா; ருத்ர தாண்டவமாடுகிறார், அப்பா. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நாடு இப்படித்தான் இருந்துகொண்டிருக்கிறது... அதே அவசரகாலச்சட்டம்.., ஊரடங்கு.., உயிரிழப்புகள்.., கைதுகள்.., காணாமல் போதல்களென நாட்களும் நீண்டுகொண்டுதானிருக்கின்றன.

சலிப்புடன் தொலைக்காட்சியின் முன் அமர்கிறேன். பிம்பங்கள் தொலைந்த பேரமைதியில், ஒற்றைக்கால் மட்டும் வலம் வந்துகொண்டிருக்கின்றது.

யாரையும் குறைகூற விரும்பவில்லை, நான். பலத்த காயங்களுக்குள்ளான இராணுவத் தளபதி.. அவரது மெய்ப்பாதுகாவலர்கள்.. கொள்கைப் பிடிப்புக்காக தன்னுயிரையீந்த அந்தப் பெண்.. அவளது அடிவயிற்றில் கருக்கொண்டிருந்த மதலை.. அவளைத் தூண்டிவிட்ட அக/புறக் காரணிகள்.. என எவைமீதும், எவர்மீதும் குற்றம் சுமத்த எனக்கு அருகதையில்லை.., உங்கள் கடவுளருள் ஒருத்தியாய் நானில்லாத வரையில்.


(02)

தொலைபேசி அலறுகின்றது... மறுமுனையில், உலகின் நாலாபக்கங்களினின்றும் அவசர நலம் விசாரிப்புகள்... 'இப்போதைக்கு' நலமாகத்தானிருக்கிறோம். சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டதென்றாலும், ஒவ்வொருமுறை கூறும்போதும் அந்த 'இப்போதைக்கு' வினை அழுத்தியே உச்சரிக்கிறேன்.

லண்டன் சித்தி கடிந்துகொள்கிறாள்.., 'எத்தனை தடவை இங்கால் பக்கம் வரச்சொன்னேன்.. கேட்டால்தானே..'

என்னையும் தப்பியோடச் சொல்கிறார்கள், எல்லாரையும் போல. எல்லை கடந்தோரின் பட்டியலில் நாளை நானும்... இருக்கலாம். ஆயிரமாயிரம் ஆண்டுகாலமாக போதிசத்துவரால் ஆசீர்வதிக்கப்பட்டுவந்த பூமியின், வடகிழக்கு மைந்தர்களுக்கு தப்பியோடுதலென்பது பிறப்பின்போதே விதிக்கப்பட்டதோ..?



தகவல்:
ஆசிரியரின் சீண்டல்கள் எல்லைமீறிக்கொண்டிருக்கின்றன... நண்பனிடம் சொல்லிப் புலம்புகின்றேன். ஆ.. அப்படியா.. வகுப்பை விட்டுவிடு... ஒற்றைவார்த்தையில் மிக இலகுவாகப் பதில்வருகிறது, அவனிடமிருந்து.


உங்கள் இயலாமை எனக்குப் புரியாமலில்லை. தனது காதலியை கண்டவனெல்லாம் உரசுவதை.. நீச்சல் வகுப்பில் தங்கையின் உடல் கண்டவர் கண்களுக்கெல்லாம் விருந்தாவதை.. எந்தத் தன்மானமுள்ள 'ஆண்மகனால்' பொறுத்துக்கொள்ள முடியும்..? பெண்ணுடல்தான் உங்களது எழுதப்படாத சொத்தாயிற்றே..

நீங்கள் தப்பியோடுவதற்கு வழிசொல்கின்றீர்கள். நானோ, உடலும் உள்ளமும் சிதைந்து தொங்கி.. கடைசிச்சொட்டு உயிரும் வழிந்தொழுகிப் போகின்றவரை களத்தில் நின்று போராடுவதற்கான மார்க்கங்களைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். உங்கள் நியதிகள் உங்களோடிருக்கட்டும். எனக்கான நியதிகளை நானே உருவாக்கிக்கொள்கிறேன்.


இப்படி வைத்துக்கொள்வோம்..

4 பேர்.. 40 பேர் சமூக நியதிகளை மீறுகிறார்கள்.

விளைவு = கடுமையான தண்டனை + சமூகப் புறக்கணிப்பு.

400 பேர்.. 4000 பேர் சமூக நியதிகளை மீறுகிறார்கள்.

விளைவு = ஆங்காங்கே கண்டனங்கள் கிளம்பும்.

40,000 பேர்.. 400,000 பேர் சமூக நியதிகளை மீறுகிறார்கள்.

விளைவு = புதியதொரு நியதி தோற்றம்பெறும்.


இப்படியாக, எனது விதியினை நாளை நீங்களும் ஏற்றுக்கொள்ளவேண்டி வரலாம்.



Tuesday, April 11, 2006

சபிக்கப்பட்ட தேவதைகள் - ஓர் உள்ளுறை உவமம்


கடற்கரை மணலில் அடியெடுத்து அடியெடுத்து
கால்புதைய நடக்கின்றேன்..,
தனித்த பயணத்தின் ஏக்கங்களோடு;
அதன் இருத்தல்களோடு;
இன்மைகளோடு.

பேசுவதற்கும், சொல்வதற்கும்
எதுவுமேயற்றுப்போன பொழுதுகளின் நீட்சியில்..
தெறித்துச் சிதறுகின்றது..,
எனது 'நான்'.

என்னவும் சொல்லிக்கொள்ளுங்கள்..
உங்களது வெறுப்பைத் தூண்டிக்கொண்டிருக்கும் அவளை..,
என்னுள் ஒருத்தியை..
எப்படித்தான் தேர்ந்தெடுத்துக் கொல்வேன், நான்?


ஒரு கதைசொல்லியின் கதை

இன்றைக்குச் சிலகாலத்துக்கு முன்புவரை நானொரு புகழ்பெற்ற கதைசொல்லியாக இருந்தேன். சாகாவரம்பெற்ற யுகபுருஷர்களைப் பற்றிய எண்ணற்ற கதைகள் என் கைவசமிருந்தன. எனது ஒவ்வொரு வார்த்தையும் ஆறுதலளிக்கும் பாலைவனத்துச் சோலையாகவும்.., வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகவும், துருவ நட்சத்திரமாகவும் விளங்கிற்றென்கிறார்கள். அதற்காக நான் பெருமிதப்படவில்லை. ஆனால், ஆயிரமாயிரம் துருவ நட்சத்திரங்களைத் தோற்றுவிக்கும் வல்லமை படைத்தவளுக்கு ஒற்றை நிலவின் பிரகாசத்தைப் பிரதியெடுக்க முடியவில்லையேயென்ற வெட்கத்துடனும், அவமானத்துடனும் என்னைப்பற்றி.. என் சகோதரிகளைப்பற்றி நான் பேசத்தொடங்கிய பொழுதொன்றில், அனைவரது செவிப்பறைகளும் தடித்த சவ்வுகளால் மூடப்பட்டு விட்டதைக் கண்ணுற்றபோதோ அதிர்ந்தே போனேன். சவ்வுகளின் தடிப்பு எவ்வளவாக இருந்ததென்றோ, அதன் தோற்றுவாய் எதுவென்றோ என்னிடம் கேட்காதீர்கள். விடைகளைத் தெரிந்துகொண்டே நீங்கள் என்னிடம் குறுக்கு விசாரணை செய்யும்போது.., நான் மௌனமாகிவிடவே விரும்புவேன்.

ஆனாலுமென்ன.., இன்னமும் உங்களுக்குச் சொல்வதற்கென என்னிடம் சில கதைகள் எஞ்சியிருக்கத்தான் செய்கின்றன.


கதை - தொலைந்த காடுகளும் உதிர்ந்த சிறகுகளும்

(தோற்றுவாய்கள்)

ஒருகாலத்தில் இதே காடுகளில்தான் நானும் வசித்து வந்தேன். அப்போதெல்லாம் காட்டுச் சூரியன் மறைவதில்லை... அதனால் உதிக்கவேண்டிய அவசியமும் அதற்கிருக்கவில்லை. காட்டு நிலாக்களின் வதனங்களில் கறைகளிருந்ததாக எனக்கு நினைவில்லை. ஒருவேளை முதுகிலிருந்திருக்கக்கூடும்... என்னைப்போலவே காட்டின் எல்லைகளைக் கடந்து வசிக்க ஆரம்பிக்கின்ற எவரும் விரைவிலேயே தெரிந்துகொள்வர்.., காடுகளைக் கடந்தவருக்கு நிலவின் வதனத்தைப் பார்க்கக் கொடுப்பினையில்லையென்று.

வனதேவதைகளற்ற எந்தக்காடும் முழுமையடைவதில்லை. காட்டில் வசித்த காலங்களிலும், பின்னரும்கூட வனதேவதைகள் பிறப்பிலேயே தோன்றுகிறார்களென்று நினைத்துக் கொண்டிருந்தேன். எனதந்தக் கற்பிதம் நியாயப்பாடுகளை நிராகரித்து விட்டிருந்தது. உங்கள் காடுகளில் அந்திசாயத் தொடங்குகின்றபோது நீங்களும் புரிந்துகொள்வீர்கள்:

வனதேவதைகள் தாமாகவே அவதரிப்பதில்லை; கடவுளர்களின் சாபங்களோடு அவர்கள் தோற்றுவிக்கப்படுகிறார்கள்.


(கதையும் காட்சியும்)

'யாமிருக்க பயமேன்' என்ற தோரணையுடன் வீற்றிருக்கும் கடவுளரை நோக்கி மறுபடியுமொருமுறை கையெடுத்துக் கெஞ்சுகின்றேன்.., இன்றைக்கு மட்டுமாவது அவனைச் சந்திக்கக் கூடாதென. அவன் செத்தொழிய வேண்டுமென நேர்த்திவைத்து, அவ்வேண்டுதல் கைகூடாமற்போனதில் அவனது கைமுறிய வேண்டும்.. காய்ச்சல் வந்து படுக்கையில் கிடக்க வேண்டும்.. என்றவாறாகக் குறைந்து கொண்டே வந்து இன்றோ, சந்திப்பைத் தவிர்த்தால் போதுமென்ற நிலைக்கு இறங்கிவிட்டதென் நம்பிக்கை. புன்னகையுடன் வீற்றிருக்கும் கடவுளர் மனிதவுணர்வுகளைப் பொருட்படுத்துவதில்லை... எவரின் ஆசீர்வாதத்துடனோ அவன் வந்து சேர்கிறான், ஒவ்வொரு நாளும்.

இன்றைக்கும் இதோ வந்துவிட்டான் நீட்டிய கைகளுடன்.., கடவுளரின் முகத்தில் தவழும் அதே புன்னகையோடு. வழமைபோல் எனை இறுக அணைத்துக்கொள்ள முயலும் அவன் பிடியிலிருந்து விடுபட முயற்சிக்கிறேன். நான் திமிறத் திமிற.. அப்போதுதான் குருத்துவிடத் தொடங்கியிருந்த இளமார்புகள் மேலும் மேலும் அவன் மார்பில் அழுந்தலாயின. அருவருப்பு... அசிங்கம்... மூச்சுமுட்டத் தொடங்குகிறது எனக்கு. என்னை விட்டுவிடு.. விட்டுவிடு.. அடிவயிற்றிலிருந்து கிளர்ந்தெழுந்த வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் சிக்குண்டு உயிர்ப்பிழந்து விடுகின்றன.

இல்லை... இது சகோதர பாசம்.., வாஞ்சை.., இன்னும் என்னவென்னமோ... இதிலிருந்து விடுபட நான் முயற்சிக்கக்கூடாது.

அவன் பேசத்தொடங்கி விட்டிருந்தான். இன்னமும் அவனது 'அன்புப்பிடிக்குள்' வலுவாகச் சிக்கியிருந்தது நானற்ற எனது உடல். நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்... தோளிற் கிடந்த கை, முதுகு வழியாக மெல்ல மெல்ல கீழே இறங்கத் தொடங்குகின்றது. முதுகுத்தண்டு ஒருகணம் சிலிர்த்துக் கொண்டது. அருவருப்பு... அசிங்கம்... மூச்சுமுட்டத் தொடங்குகிறது எனக்கு. விரல் நுனிகளிலிருந்து பரவிய அருவருப்பின் ரேகைகள் முதுகெங்கும் விரவிச்செல்கின்றன. இன்னும் இன்னும்...

இல்லை... இது சகோதர பாசம்.., வாஞ்சை.., இன்னும் என்னவென்னமோ... இதிலிருந்து விடுபட நான் முயற்சிக்கக்கூடாது.


(முற்றுப்பெறாத 'முற்றும்'கள்)

இப்படித்தான் ஒருத்தியின் காடு சூறையாடப்பட்டது.., நான் பார்த்துக் கொண்டிருக்கத்தக்கதாக. தேவதையாக வாழ்தலென்பது என்னவென்று தெரியாத வயதுகளிலேயே வனதேவதையாக வாழுமாறு அவள் கடவுளரால் சபிக்கப்பட்டாள்.

நீங்கள் காடுகளைப்பற்றிப் பேசுகிறீர்கள்.
எனக்குத் தெரிந்த எந்த வனதேவதையும் தொலைந்துபோன காடுகளைப்பற்றி பேசவிரும்புவதில்லை.

நீங்கள் சிறகுகளைப்பற்றி அக்கறைப்படுகிறீர்கள்.
எனக்குத் தெரிந்த எந்த வனதேவதையும் உதிர்ந்த சிறகுகளைப்பற்றி அக்கறைப்படுவதில்லை.

Saturday, April 01, 2006

பனையோலைக் குடிசை: ஓர் உருவகமும் சில உவமானங்களும்


உறைந்த சுயம்,
யதார்த்தத்தின் வாலைப் பற்றியவாறு
நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்கின்றது.
சலித்துப் போய்விட்ட
அன்றாடங்களின் கிழிசல்களினூடு
எட்டிப்பார்க்கிறது..,
எங்கேயோ தொலைத்து விட்டிருந்த
ஒரு பிடி அன்பு..


1. இருத்தல்களும் திரிபுகளும்

இங்கே ஒருகாலத்தில் அகலப்பரந்த மரங்களின் குளுமையுடனும், மூங்கில்களினூடே தழுவிச்சென்று கீதமிசைக்கும் தென்றலுடனும், வானம்பாடிகள் சிறகடித்துத் திரிந்த பசுமையான சோலையொன்று இருந்ததாம். அப்படித்தான் எல்லாரும் சொல்கிறார்கள். நான் நம்பவில்லை... வானம் பார்த்தபடி வாய்பிளந்து கிடக்கும் இந்தத்தரிசு நிலத்தினூடு தெள்ளிய நீரோடைகள் சலசலத்துச் சென்றிருக்குமென்றும், இலைகள் உதிர்ந்த மொட்டைக் கிளைகளுடன் காற்றின் நர்த்தனத்திற்கேற்ப தலையசைத்துக் கொண்டிருக்கும் இப்பட்டுப்போன அரசமரம் அழகிய சோலையொன்றின் செழுமை கொஞ்சும் மரங்களுளொன்றாய் இருந்திருக்குமென்றும் நம்புவதற்கு இன்னமும் முட்டாளாகிப் போய்விடவில்லை நான். இவர்களது சரித்திரங்களை எப்படித்தான் நம்புவது..? எனினும் நாம் நம்பித்தானாக வேண்டும். நம்பினவை எத்தனையோவற்றினூடு இந்தக் கதைகளையும் நம்புவதால் நாமொன்றும் தாழ்ந்துவிடப் போவதில்லைதானே.

ஆம்.., என்றோவொரு காலத்தில் இந்தநிலம் வனப்பு மிக்கதோர் சோலையாய் இருந்திருக்கக்கூடும். சில்லூறுகளின் இரைச்சல்களாலும், காட்டுப்பூக்களின் வாசனையாலும் நிறைந்திருந்த இச்சோலையின் வானம்பாடிகள்... சோலை தரிசாகிப்போன ஒருநாளில் சத்திரங்களாய் மாறின. வானம்பாடிகளாவது... சத்திரங்களாக மாறுவதாவது...? நீங்கள் விழிவிரிப்பது புரிகிறது. சோலை எப்படி தரிசாய்ப் போயிற்றென்பது தெரியாதுவிடினும், வானம்பாடிகள் சத்திரங்களாக உருமாறுவதற்கு முன், வீடுகளாகத்தான் இருந்திருக்க வேண்டுமென நானும் நினைக்கிறேன்.

ஆனால், ஒரேயொரு வானம்பாடி மட்டும் தானே விரும்பி குடிசையாக மாறலாயிற்று... பனையோலைக் குடிசையாக.


2. தொலைந்துபோன சிறகுகளும் ஆழப்புதையுண்ட கனவுகளும்

நீங்கள் கேட்கக்கூடும்: 'வானம்பாடியின் சிறகுகள்தான் இல்லையென்று ஆயிற்றே. இனி சத்திரமாக மாறினாலென்ன.. பனையோலைக் குடிசையாக மாறினாலென்ன..' இல்லை, தரிசுநிலத்துச் சத்திரங்களுக்கு மத்தியில்.., அவ்வளவு இலகுவானதல்ல புழுக்களூறும் சாக்கடை நீரோடு - சிறகுகளை மறந்துவிடாத - குடிசையாக வாழ்தல்.

சத்திரங்கள் அழகானவை.., அவர்கள் கூறுவதன்படி. செந்நிற ஓடுகள் இளவெயிலில் தங்கத் தகடுகளாய்ப் பளபளக்க, கண்ணைக்கவரும் வர்ணப்பூச்சுக்களால் சுவர்கள் மினுமினுக்க, கருங்காலியிலோ தேக்கிலோ செதுக்கப்பட்ட கதவுகளுடன்.. சாளரங்களுடன்.. வழிபோக்கர்களைக் கவர்வதற்காகவேனும் அவை அழகாகத்தானிருந்தாக வேண்டும். இரும்பினால் அல்லது உடைமையாளரின் தராதரத்தைப் பொறுத்து தாமிரத்தினால் அவை அடிக்கடி இறுகப்பூட்டப்பட்டன. தனது பூட்டு அழகானதாகவும், உறுதியானதாகவுமிருப்பதாக ஒவ்வொரு சத்திரமும் பெருமிதப்பட்டுக்கொண்டது.., ஒருகாலத்தைய வானம்பாடி வாழ்வினை மறந்து.

ஆனால் குடிசைகளோ அலங்கோலமானவை.., யார் கூறினாலென்ன.. கூறாவிட்டாலென்ன.. உழுத்துப்போன பனையோலைகளுடன், இத்துப்போன களிமண் சுவர்களுடன், உறுதியற்ற வாயில்களுடன்.. சீண்டுவாரற்ற குடிசைகள் அலங்கோலமானவைதான். அவற்றுக்குப் பூட்டுக்கள் அவசியமில்லை.., அவை உடைமையாளர்களை விரும்புவதுமில்லை.., அவற்றின் கனவுகளில் இன்னமும் வானம்பாடியின் சிறகசைப்புக்கள் மீந்திருப்பதனால்.

சத்திரங்கள் கவலைகளின் பிறப்பிடம். அடைமழையில் நனைந்து ஊறிப்போன ஓடுகளை.. அடிக்கடி வெளுத்துப்போய் உதிர்ந்துவிடும் நிறப்பூச்சுக்களை.. புழுதியை வாரியிறைத்துப்போகும் குறும்புக் காற்றினை.. இன்னபிற பலவற்றையும் பற்றியென புலம்புவதற்கு எப்போதும் ஏதாவது இருந்துகொண்டேதானிருக்கின்றது இவற்றுக்கு.

குடிசைகள் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. உக்கிக்கொண்டிருக்கும் ஓலைவேய்ந்த கூரையினூடு மழைநீர் ஒழுகுவதையும், சுவர்கள் விரிசல்களுடன் ஆங்காங்கே இடிந்துகிடப்பதையும், வாயிலில் சாக்கடை நீர் புழுக்கள் நெளியத் தேங்கிக்கிடப்பதையும் சிறகுகளை மறந்துவிடாத அவை பொருட்படுத்துவதில்லை.

அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்: பனையோலைக் குடிசைகள் ஒருபோதும் கவலைப்படுவதில்லை; எதன்பொருட்டும், எவர்பொருட்டும் அதிகம் அலட்டிக்கொள்வதுமில்லை.


3. நிறங்களற்றுப்போன புன்னகைகள்

வழிபோக்கர்கள் வந்தார்கள்.., புன்னகைகளைச் சிதறவிட்டபடி. அவர்களின் இளித்த பற்களினூடு தெறிக்கும் புன்னகைகள்.. தங்க இடந்தேடி, நாக்கைத் தொங்கவிட்டபடியலைகையில் எச்சிலுடன் சேர்ந்து வடியும் இன்னும் சில.. சத்திரங்கள் ஒருகணம் சிலிர்த்துக்கொண்டு வரவேற்கத் தயாராயின; உதட்டைச் சுளித்துக்கொண்ட குடிசையோ முகந்திருப்பி வாளாவிருந்தது.

இளவேனிற்காலத்தின் பின்மாலைப்பொழுதொன்றில், சத்திரங்களின் ருசிகண்டு சலித்துப்போன ஓரிருவர் குடிசையை நாடிவரலாயினர். அவர்களது பொக்கைவாய்ப் புன்னகைகளுக்கு மசியாத குடிசை தன்னுள் நிரந்தரமாக வதியும் சிலந்திகளையும், பல்லிகளையும், பூரான்களையும், இன்னபிற விஷ ஜந்துக்களையும் ஏவி 'நான் சத்திரங்களுள் ஒருத்தியல்ல' வென மறுபடியுமொருமுறை நிரூபித்தது. ஈவிரக்கமற்றுத் துரத்தியடிக்கப்பட்ட வழிபோக்கர்கள் சாபமிட்டார்கள்... குடிசையின் ஏளனப்பார்வையைச் சகிக்கவொண்ணாமல் எங்கோ தலைமறைவானார்கள்.

சத்திரங்களோ குறைபட்டுக்கொண்டன: பனையோலைக் குடிசைகள் புன்னகைப்பதில்லை; புன்னகைகளை மதிப்பதும், ஏற்றுக்கொள்வதுமில்லை.


4. உறைந்த படிமங்களும் உயிர்த்தெழுந்த புனைவும்

பருவங்கள் மாறின. பழுப்புநிறப் பட்டாம்பூச்சிக் குவியல்களாய்க் காலடியில் சரசரக்கும் சருகுகளுடனான காலங்கள் கழிந்து விண்ணிலிருந்து கசிந்த முதல்துளி மண்ணைத் தழுவலாயிற்று. மாரிகாலத்து மழைநாளொன்றில் சேறுகளையும், சகதிகளையும் கடந்து குடிசையை நோக்கி வந்தான் யாத்ரீகனொருவன். சத்திரங்களின் வனப்புக்களால் வசீகரிக்கப்படாதவனிடம் சிலந்திகளையும், பல்லிகளையும் ஏவிவிடும் குடிசையின் பூச்சாண்டிகளெதுவும் பலிக்காமற்போக... சந்தேகமும், பயமும் நமுத்துப்போன சுவர்களிலிருந்து உதிர்ந்துகொண்டிருந்தாலும் அவனைத் தன்னுள் அனுமதிக்கத்தான் செய்தது.

மௌனமாக உள்நுழைந்தவன் ஒட்டடை தட்டவும், சிலந்திவலைகளை அறுத்தெறியவும் முயல அதிர்ந்தே போன குடிசை.., கலவரமடைந்து மூர்க்கமாகத் தடுத்தது அவனை. திரிபடையத் தொடங்கிய ஆரம்பகாலங்களிலிருந்து இன்றைவரையும் துணையாய்.., பாதுகாப்பாய்த் தன்னுடனேயிருந்த நிரந்தர வதிவிடதாரிகளைத் துரத்திவிட எப்படித்தான் மனம்வரும் எவருக்கும்... என்னதான் பாழடைந்த குடிசையென்றாலும் ஈரமும் கசிவும் புறநிலைச் சேர்மானங்களல்லவே. அவனொரு யாத்ரீகன்... இன்று தங்க முன்வருபவன் நாளை வெளியேற நேர்ந்தால்கூட தொடர்ந்தும் கூடவேயிருக்க எஞ்சுபவை இந்தப் புழுக்களும், சிலந்திகளும்தான்.. தூசுகளும், துரும்புகளும்தான்.

அவன் புரிந்துகொண்டான் அல்லது புரிந்துகொள்ள முயற்சித்தான்... அப்படித்தான் நான் நினைக்கிறேன். எது எப்படியோ தான் தொடர்ந்துவந்த தடங்களையும், தன் தனித்துவங்களையும் பேணமுடிந்ததில்... அடையாளங்கள் அழித்தொழிக்கப்படாததில் நெகிழ்ந்துபோன அப்பாழடைந்த பனையோலைக் குடிசை, இறுதியில் இருத்தலின் படிமங்களைத் தொலைத்து ஆவியாகிக் கரைந்தே போனது. வானம்பாடிக் கனவுகளுடன் அது உதிர்த்த கண்ணீர்த்துளிகள் அன்றைய பனியிரவில் அந்திவானத்துத் தாரகைகளாயின.

குடிசைகளுக்குப் புன்னகைக்கத் தெரியாதென்று யார் சொன்னது..??