Tuesday, April 25, 2006
தப்பியோட மறுப்பவள்
நான் மௌனமாயிருக்கிறேன்.
தோற்றுப் போய்விட்டதாக
நீங்கள் கெக்கலிக்கிறீர்கள்.
மௌனங்களின் வெறுமைக்குள்
கனன்று பரவுகிறது தீ...
அதன் பரிமாணங்களின் வழி..,
படிமமாற்றங்களின் வழி..
நழுவிக்கொண்டிருக்கிறது, கசப்பு.
உங்களை வெறுப்பேற்றக்கூடுமெனினும்,
நான் வாழ்தலின் கடுமையைப்பற்றி
பேசவிரும்புகிறேன்..,
தொடர்ந்தும்
உங்களுக்காக அழ மறுத்தபடி.
கசப்பின் மறுபெயர் நெருப்பென்கிறேன்.. நீங்கள் திகைக்கிறீர்கள். சாம்பல் பூத்தாலும், அடியாழங்களில் தொடர்ந்தும் உயிர்த்திருக்கும் வல்லமை இரண்டுக்குமே வாய்த்திருக்கிறதென்கிறேன்.. பெருமூச்சொன்று வெளிப்படுகிறது, உங்களிடமிருந்து.
என்னைப்பற்றி என்னதான் தெரியும் உங்களுக்கு..? ஒரு பெண்.. அசட்டுப் பெண்.. எழுதுகிறாள்.. வெறுக்கிறாள்.. கோபப்படுகிறாள்.. இவற்றை விடவும்...
ம்ம்ம்... நான் உறுதியாக இருக்கவேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்... ஆனால், நிச்சயமாக நான் அவ்வாறிருக்கப் போவதில்லை.
செய்தி:
இன்று நண்பகல், கொழும்பின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் நிகழ்ந்த தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் ஒரு இராணுவ அதிகாரி பலி. பதினொருவர் படுகாயம். தாக்குதலை மேற்கொண்ட கர்ப்பிணிப் பெண்ணின் ஒற்றைக்கால் மட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
(01)
அலுத்துக் களைத்துப்போய் வீடுவந்தால்.., "நாடு கிடக்கிற நிலைமையில் எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருகிறாய்?" வரவேற்புப் பத்திரம் வாசிக்கிறாள், அம்மா; ருத்ர தாண்டவமாடுகிறார், அப்பா. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நாடு இப்படித்தான் இருந்துகொண்டிருக்கிறது... அதே அவசரகாலச்சட்டம்.., ஊரடங்கு.., உயிரிழப்புகள்.., கைதுகள்.., காணாமல் போதல்களென நாட்களும் நீண்டுகொண்டுதானிருக்கின்றன.
சலிப்புடன் தொலைக்காட்சியின் முன் அமர்கிறேன். பிம்பங்கள் தொலைந்த பேரமைதியில், ஒற்றைக்கால் மட்டும் வலம் வந்துகொண்டிருக்கின்றது.
யாரையும் குறைகூற விரும்பவில்லை, நான். பலத்த காயங்களுக்குள்ளான இராணுவத் தளபதி.. அவரது மெய்ப்பாதுகாவலர்கள்.. கொள்கைப் பிடிப்புக்காக தன்னுயிரையீந்த அந்தப் பெண்.. அவளது அடிவயிற்றில் கருக்கொண்டிருந்த மதலை.. அவளைத் தூண்டிவிட்ட அக/புறக் காரணிகள்.. என எவைமீதும், எவர்மீதும் குற்றம் சுமத்த எனக்கு அருகதையில்லை.., உங்கள் கடவுளருள் ஒருத்தியாய் நானில்லாத வரையில்.
(02)
தொலைபேசி அலறுகின்றது... மறுமுனையில், உலகின் நாலாபக்கங்களினின்றும் அவசர நலம் விசாரிப்புகள்... 'இப்போதைக்கு' நலமாகத்தானிருக்கிறோம். சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டதென்றாலும், ஒவ்வொருமுறை கூறும்போதும் அந்த 'இப்போதைக்கு' வினை அழுத்தியே உச்சரிக்கிறேன்.
லண்டன் சித்தி கடிந்துகொள்கிறாள்.., 'எத்தனை தடவை இங்கால் பக்கம் வரச்சொன்னேன்.. கேட்டால்தானே..'
என்னையும் தப்பியோடச் சொல்கிறார்கள், எல்லாரையும் போல. எல்லை கடந்தோரின் பட்டியலில் நாளை நானும்... இருக்கலாம். ஆயிரமாயிரம் ஆண்டுகாலமாக போதிசத்துவரால் ஆசீர்வதிக்கப்பட்டுவந்த பூமியின், வடகிழக்கு மைந்தர்களுக்கு தப்பியோடுதலென்பது பிறப்பின்போதே விதிக்கப்பட்டதோ..?
தகவல்:
ஆசிரியரின் சீண்டல்கள் எல்லைமீறிக்கொண்டிருக்கின்றன... நண்பனிடம் சொல்லிப் புலம்புகின்றேன். ஆ.. அப்படியா.. வகுப்பை விட்டுவிடு... ஒற்றைவார்த்தையில் மிக இலகுவாகப் பதில்வருகிறது, அவனிடமிருந்து.
உங்கள் இயலாமை எனக்குப் புரியாமலில்லை. தனது காதலியை கண்டவனெல்லாம் உரசுவதை.. நீச்சல் வகுப்பில் தங்கையின் உடல் கண்டவர் கண்களுக்கெல்லாம் விருந்தாவதை.. எந்தத் தன்மானமுள்ள 'ஆண்மகனால்' பொறுத்துக்கொள்ள முடியும்..? பெண்ணுடல்தான் உங்களது எழுதப்படாத சொத்தாயிற்றே..
நீங்கள் தப்பியோடுவதற்கு வழிசொல்கின்றீர்கள். நானோ, உடலும் உள்ளமும் சிதைந்து தொங்கி.. கடைசிச்சொட்டு உயிரும் வழிந்தொழுகிப் போகின்றவரை களத்தில் நின்று போராடுவதற்கான மார்க்கங்களைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். உங்கள் நியதிகள் உங்களோடிருக்கட்டும். எனக்கான நியதிகளை நானே உருவாக்கிக்கொள்கிறேன்.
இப்படி வைத்துக்கொள்வோம்..
4 பேர்.. 40 பேர் சமூக நியதிகளை மீறுகிறார்கள்.
விளைவு = கடுமையான தண்டனை + சமூகப் புறக்கணிப்பு.
400 பேர்.. 4000 பேர் சமூக நியதிகளை மீறுகிறார்கள்.
விளைவு = ஆங்காங்கே கண்டனங்கள் கிளம்பும்.
40,000 பேர்.. 400,000 பேர் சமூக நியதிகளை மீறுகிறார்கள்.
விளைவு = புதியதொரு நியதி தோற்றம்பெறும்.
இப்படியாக, எனது விதியினை நாளை நீங்களும் ஏற்றுக்கொள்ளவேண்டி வரலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
Nivetha, very touching...! Keep the good spirit up!!
TheKa.
man....that was some powerfull writing....//நீங்கள் தப்பியோடுவதற்கு வழிசொல்கின்றீர்கள். நானோ, உடலும் உள்ளமும் சிதைந்து தொங்கி.. கடைசிச்சொட்டு உயிரும் வழிந்தொழுகிப் போகின்றவரை களத்தில் நின்று போராடுவதற்கான மார்க்கங்களைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். உங்கள் நியதிகள் உங்களோடிருக்கட்டும். எனக்கான நியதிகளை நானே உருவாக்கிக்கொள்கிறேன்//. i don't think i will ever feel the full extend of your pain and anger...have no idea what to say...just ashamed about myself and the world Iam in...There is one thing i would say for sure....If any person messes with my girlfriend, he is a dead man. It may sound male chauvenistic to you...for me its your wrath that you feel when something happens to your loved ones.....and YES....my lovers body and heart are mine //எந்தத் தன்மானமுள்ள 'ஆண்மகனால்' பொறுத்துக்கொள்ள முடியும்..? பெண்ணுடல்தான் உங்களது எழுதப்படாத சொத்தாயிற்றே..
//its not always that bad
//நீங்கள் தப்பியோடுவதற்கு வழிசொல்கின்றீர்கள். நானோ, உடலும் உள்ளமும் சிதைந்து தொங்கி.. கடைசிச்சொட்டு உயிரும் வழிந்தொழுகிப் போகின்றவரை களத்தில் நின்று போராடுவதற்கான மார்க்கங்களைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். //
என்ன சொல்றதுன்னு தெரியலைங்க.. ரொம்ப வருத்தமா இருக்கு இப்படியும் வாழ்க்கை போராட்டமான சகோதரிகளும் இருக்காங்களே, ஒண்ணும் செய்ய முடியலையேன்னு.. :(
உங்கள் போராட்டத்திற்கு என் வாழ்த்துக்கள், பிரார்த்தனைகள்..
//தாக்குதலை மேற்கொண்ட கர்ப்பிணிப் பெண்ணின் ஒற்றைக்கால் மட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. //
//அவளது அடிவயிற்றில் கருக்கொண்டிருந்த மதலை.. //
இவைகளையும் புனைவுக்குள் எடுக்கவா? செய்தியாய் எடுக்கவா?
கர்ப்பிணிப் பெண்ணா? அப்படி வேடமிட்டு வந்தவளா?
என்றாலும் கர்ப்பிணி என்று சொல்வதும், அடிவயிற்றில் மழலை என்று சொல்வதும் நல்லதொரு புனைவுக்கு உணர்ச்சியேற்ற வல்ல தளம்; உயிரே, ரெறறிஸ்ட் படங்களில் வந்த சினிமாக்கதை போல.
//40,000 பேர்.. 400,000 பேர் சமூக நியதிகளை மீறுகிறார்கள்.
விளைவு = புதியதொரு நியதி தோற்றம்பெறும்.
//
சத்தியமான வார்த்தை. உங்கள் பதிவை படித்து மனம் கனத்துப்போய் கிடக்கிறது. உங்கள் வலி புரிகிறது. உங்கள் பாதையில் நீங்கள் குழப்பமின்றி தெளிவாய் சென்றுகொண்டிருக்கிறீர்கள். தொடருங்கள்...
தெ.கா.., அருண்.., பொன்ஸ்.., பார்வையாளன்.., அருள்குமார்.. பின்னூட்டங்களுக்கு நன்றி.
அருண்..,
// my lovers body and heart are mine //
உங்கள் உறுதியையும், வெளிப்படையான உரையாடலையும் வரவேற்கிறேன்; பாராட்டுகிறேன். எனதிந்தக் கருத்து எந்தளவுதூரம் நியாயமானதென்று தெரியாதெனினும், உங்கள் துணையின் உடலும் உள்ளமும் உங்களதேயென வாதிடுவதன் மூலம் அவரது individuality யினையும், அவரொரு தனிமனிதரென்பதையும் மறுக்கிறீர்களென்றே நினைக்கிறேன்... ஒருவரது வெளிகளை அத்துமீறும் இம்மனோபாவத்தினைத்தான் ஆண்மேலாதிக்கமென்று விளிக்கிறார்களாக்கும். அவளது உடல் எனது சொத்து.. அதைப் பாதுகாக்கவேண்டுமென்ற எண்ணங்கள் மீதூரப்பெறுகையில்தான் அதிகாரமும், அத்துமீறல்களும் ஊற்றெடுக்கத் தொடங்குகின்றன.
உனது இதயம் எனக்கு மாத்திரமே சொந்தம்... என்னைத்தவிர வேறெந்தப் பெண்ணையும் நீ நெருங்கக்கூடாது.., எவருடனும் பழகக்கூடாதென என் துணைக்கு உத்தரவிட என்னால் முடியாது. ஆனால், காலங்காலமாக எத்தனையோ ஆண்கள் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். தனிமனிதத்துவத்தினைப் புறக்கணிக்கும் எந்த உறவும் நெடுங்காலம் நிலைத்திருக்கப் போவதில்லை.
உங்களது உடல் அவளதாகாதவரை.., அவளது உடல் உங்களதாக ஆக முடியாது.
// for me its your wrath that you feel when something happens to your loved ones //
உண்மைதான். ஆனால், அதற்காக தப்பியோட வழிசொல்லாதீர்கள் தயவுசெய்து. ஆசிரியர் அத்துமீறுகிறாரா... வகுப்பை விட்டு நின்றுவிடலாம். மேலதிகாரி அத்துமீறுகிறாரா... வேலையை விட்டு நின்றுவிடலாம். சொந்தத் தகப்பன் துன்புறுத்தினால் என்ன செய்யச் சொல்கிறீர்கள்..? கூடப்பிறந்த அண்ணன் இம்சித்தால் எங்கே போய் ஒளியச் சொல்கிறீர்கள்..? குடும்பத்தை விட்டு ஓடிவிடுவதா..? கட்டிய கணவன் விருப்பத்தை மதியாமல் உறவுகொள்ள முயன்றால்.. - அதுவும் அத்துமீறல்தானே...- திருமண பந்தத்தினை முறித்துக்கொள்வதா..? எங்களை எங்கே தப்பியோடச் சொல்கிறீர்கள்..?
ஊரார் பேச்சுக்கு அஞ்சி, எம் மூதாதைகளுள் ஒருத்தி கல்விகற்க மறுத்திருந்தால்.., வீட்டைவிட்டு அடியெடுத்து வைக்கத் தயங்கியிருந்திருந்தால்... இன்று, பெண்கள் இந்த நிலையையேனும் அடைந்திருக்க முடியாது. எத்தனையோ காலங்களுக்கு முன்னர், எவரோ செய்த தியாகத்தினால் இன்றைக்கு உங்கள் முன்னிலையில் இந்தளவேனும் உரையாடிக் கொண்டிருக்கிறேன்.. நீங்களும் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.
சில தசாப்தங்களுக்கு முன்னர்கூட, இங்கே வடகிழக்கில் பெண்களுக்கு சைக்கிள் ஓட்டுவதென்பது மறுக்கப்பட்டதாகவேயிருந்ததாம். தற்போதோ, சைக்கிள் ஓட்டத்தெரியாவிட்டால்தான் அவமானப்பட வேண்டிய நிலை. சமூகம் இயங்கிக்கொண்டுதானிருக்கிறது.. நியதிகளும் மாறிக்கொண்டுதானிருக்கின்றன.
// If any person messes with my girlfriend, he is a dead man. //
இந்தக் கூற்றோடு நான் உடன்படுவதாயில்லை. இவ்விதமாகக் கூறுவதற்காக நீங்கள் என்னை மன்னிக்கவேண்டும்.. ஆனாலும், என்னைப்போன்ற பெண்களின் குரல் இப்படியாகத்தானிருக்கும்:
'எங்களைப் பாதுகாத்துக்கொள்ள எங்களுக்குத் தெரியும்..'
பொன்ஸ்.., அருள்குமார்..,
உங்கள் வாழ்த்துக்களுக்கும், பிரார்த்தனைகளுக்கும் மிக மிக நன்றி.
பார்வையாளன்..,
நேற்று இடம்பெற்ற வன்முறையில் இறந்த, காயமடைந்தோரின் புள்ளிவிபரங்களில் மாற்றங்களேற்பட்டுள்ளன. அந்தப்பெண் உண்மையிலேயே கர்ப்பிணியல்லவென்றும், இது தாக்குதலல்ல.. உள்வீட்டுச் சதியென்றும் கதைகள் அடிபடுகின்றன. புள்ளிவிபரங்கள் குறித்தோ, சம்பவங்களின் பின்னணியிலான அரசியல் குறித்தோ அலட்டிக்கொண்டிருப்பது வீண்வேலைதானே.
இதைப் புனைவாக அல்லது செய்தியாக எடுத்துக்கொள்வதும்.. உயிரே, ரெறறிஸ்ட் போன்ற 'சினிமாக்கதைகளின்' மற்றுமொரு பிம்பமாக எடுத்துக்கொள்வதும்.. உங்கள் இஷ்டம். அதைப்பற்றிய எந்தவிதக் கரிசனையும் எனக்கில்லை. உங்கள் சுதந்திரங்களுக்குள் தலையிட எனக்கென்ன அருகதையிருக்கிறது? ஒரு தனிமனித அறிதல்களும், உணர்தல்களும் மட்டுமே இங்கே பதிவாகியுள்ளனவென்ற புரிதல் உங்களுக்கிருந்திருந்தால்.. இத்தகைய சந்தேகங்கள் வந்திருக்க மாட்டாதென அபிப்ராயப்படுகிறேன்.
சினிமாத்தனமான கதைகளை இயற்றவும், அதைக்கட்டிக் காக்கவும் எத்தனையோபேர் இருக்கத்தக்கதாக.. அந்தக் கைங்கரியத்தில் நானுமிறங்கவேண்டிய எந்தவிதத் தேவையும் எனக்கிருப்பதாக நான் நினைக்கவில்லை.
நான் இங்கே அரசியலெனும் சாக்கடையினைக் கிளறிக்கொண்டிருக்கவில்லை.. உணர்வுகளின் மொழியினில் பேச முயன்றுகொண்டிருக்கிறேன். என்னைப் பேசவிடுங்கள்.
மிகவும் அருமையான இடுகை நிவேதா. நீங்கள் எழுதும் விதயங்களை உளப்பூர்வமாக உணர்ந்தாலும், இத்தனை கச்சிதமாக வெளிப்படுத்த முடிந்ததில்லை.
நல்லதொரு இடுகைக்கு நன்றி.
//உனது இதயம் எனக்கு மாத்திரமே சொந்தம்... என்னைத்தவிர வேறெந்தப் பெண்ணையும் நீ நெருங்கக்கூடாது.., எவருடனும் பழகக்கூடாதென என் துணைக்கு உத்தரவிட என்னால் முடியாது. ஆனால், காலங்காலமாக எத்தனையோ ஆண்கள் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். தனிமனிதத்துவத்தினைப் புறக்கணிக்கும் எந்த உறவும் நெடுங்காலம் நிலைத்திருக்கப் போவதில்லை.
உங்களது உடல் அவளதாகாதவரை.., அவளது உடல் உங்களதாக ஆக முடியாது.
//
wow! என் உள்ளத்து உணர்வுகளை கனகச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். அதற்கும் நன்றி.
-மதி
i guess my words came out very strong....that's probably cos of the way i felt after reading your blog. I unconditionally accept your reply to my mail. I never wanted to say that my wife should only talk to me and love me alone. Ofcourse, she will love her mother,father,brothers friends etc...but the relationship with your lover is totally differant from the above said relationships in a certain way...thats something you can't share with others....when i said "my lovers heart and body are mine" thats what I meant. I hope you understand. You can share your mother's love, your friendship...those are things you can share...proudly extend the happiness to others...but ur wife, its differant....its two people world.
When I said that if "someone messes with my loved ones they are dead"....thats my anger for the guy who in ur blog "asked the girl to quit". Ofcourse, you can protect yourself. But, what do you expect from others when you tell them that you got a problem with your teacher and its getting big....my gut reaction will be to hit him so hard...so he won't even think about you....thats the only way those disgusting monsters are to be treated and thats the only way they ought to be treated. This Iam 100% sure beyond doubt. I never said to run away from the problem. you have mentioned that in ur reply wrongly...never said that. never.
//உங்களது உடல் அவளதாகாதவரை.., அவளது உடல் உங்களதாக ஆக முடியாது// its a 2 way street...iam not sure which part of my reply made you think that I am against this...Those are words that have been proven ions after ions and I am not disagreeing with it.
Well, if the brother exploits hie sster sexually...then that sucker ought to be hanged...he is a disgrace to the human kind....doesn't belong with us. period. If a husband does it, its not as black and white as brother. Its kind of a gray area. It depends on the guy, the situation and lot of stuffs....have to be decided case by case...But never I told you that you have to run away from the family....you didn't do anything wrong...when I say you its not you....iam just making a point...and also please forgive my annoying habit of puting "...." after every sentence...couldn't help it.
never replied for any blogs...not b'cos they were not good...just laziness....but ur blog it was different. It made be feel bad...so I had to go to kaipullai's blog to read something that will lighten my mood...i guess i was just trying to hide from the harsh realities of this world. Ignorance & innocence is bliss.
Any way this is my second email to a blog...words may not have come out right...if so my apologies....never was my intention to hurt anyone...last but not the least, loved your writings...just trying to pour my feelings out after reading yours....it doesn't do good to keep them inside
Keep them coming
பதிவு நல்லாயிருக்கு. --கொஞ்சம் டென்ஷனாகிப் போனேன்--
ரென்சனை டென்சன் என்கிறியள். அன்ரியை ஆன்டி என்கிறியள். நீங்கள் கொழும்பில் இருக்கிறியளோ இல்லை கோயம்புத்தூரில் இருக்கிறியளோ என்று எனக்கு ஒரே குழப்பமாய்க் கிடக்கிறது :((((
நன்றி, மதி..!
நானுணர்ந்தவரை பெண்கள் பலரது சிந்தனைகளும் ஒத்ததாகத்தானிருக்கின்றன.
மறுபடியுமொருமுறை.., நன்றி.
அருண்..,
தவறான புரிதலுக்கு மன்னிக்கவேண்டுகிறேன்.. உங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துக்கூறியமைக்கு நன்றி.
துவாரகன்..,
அப்பனே, துவாரகா..! உங்களை மாதிரி ஆக்களின்ரை தொல்லை தாங்காமல் கொழும்பிலயிருந்து கோயம்புத்தூருக்கு ஓடிப்போற பிளானில இருக்கிறதால... அதுக்கான டிரெயினிங் எடுத்துக்கொண்டிருக்கிறன். ஆளைவிடுங்கோ..
இனிமேலும், அர்த்தநாரீரீரீரீஈஈஈஸ்வர நினைப்பில வலைப்பதிவுக்குள்ள நுழைஞ்சு நாரதர் வேலை பார்த்தீர்களென்றால்.. மவனே! பிச்சுப்புடுவன்.. பிச்சு.
//உங்கள் இயலாமை எனக்குப் புரியாமலில்லை. தனது காதலியை கண்டவனெல்லாம் உரசுவதை.. நீச்சல் வகுப்பில் தங்கையின் உடல் கண்டவர் கண்களுக்கெல்லாம் விருந்தாவதை.. எந்தத் தன்மானமுள்ள 'ஆண்மகனால்' பொறுத்துக்கொள்ள முடியும்..? //
நிவேதா,
பெண்ணியம் ஒவ்வொரு வர்க்கத்திடமிருந்து வரும்போதும் அவ்வவ்வர்க்கச்சாயலை பெறுகிறது.
என்னுடைய "ஒரு மூக்குத்திப் பிரச்சனை" என்கிற பதிவு (உங்களுக்கு நினைவிருக்கலாம்) அவ்வாறானதொரு வர்க்கச்சாயலைக்கொண்டது. உண்மையில் அது எழுத்து மூலம் நான் செய்த மிகப்பெரிய வன்முறை.
தமிழின் "தீவிர இலக்கிய" சூழல் என்ற மாய உலகத்தை சில சஞ்சிகைகளும் அறிவுகலகப் பிராமணர்களும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களிடையே இருந்து வரும் பெண்ணிய சிந்தனைகள் நிறைய போதாமைகளை கொண்டிருக்கின்றன.
தன் ஆண்துணையை விமர்சிப்பதையும், குற்றஞ்சாட்டுவதையும் மட்டுமே பெண்ணிய இலக்கியமாக பலர் வெளிப்படுத்தியவண்ணமுள்ளனர்.
ஆணாதிக்கம் என்றவுடன் நினைவுக்கு வருவது அப்பா- அண்ணா- காதலன்- துணைவன்
ஆணாதிக்கமென்றால், ஆண்களெல்லாம் பெண்களை ஏமாற்றுகிறார்கள், துன்புறுத்துகிறார்கள், அவர்கள் பெண்களின் உணர்வுகளை மதிப்பதில்லை.
மேல் நடுத்தரவர்க்க, மேல்தட்டு வர்க்க சூழலிலிருந்தே பார்த்தாலும் கூட பெண்களும் தான் ஆண்களை ஏமாற்றுகிறார்கள், துன்புறுத்துகிறார்கள், உணர்வுகளை மதிக்காமலிருக்கிறார்கள்.
ஆகக்கீழ்த்தளங்களில், மனைவியிடம் அன்றாடம் உதைவாங்கும் கணவர்கள் இருக்கிறார்கள்.
ஆணாதிக்கம் என்பது அடிப்படையில் அதிகார துஷ்பிரயோகம்.
ஆண்கள் அதிகாரத்தை தாங்கள் கைப்பற்றிக்கொண்டு, அதனை தங்கள் சுயநலன்களுக்காக பயன்படுத்துகிறார்கள். பெண் இனத்தை எல்லா வழிகளிலும் அடிமைப்படுத்தி, அதிகாரத்தை தொடர்ந்தும் பேணிக்கொள்கிறார்கள்.
ஆணிடமிருந்து இந்த அதிகாரத்தை பறித்தெடுத்து, அதனை பொதுவுடைமை ஆக்குவதுதான் பெண்ணியப்போராட்டம். (கைப்பற்றியவர் அதிகாரத்துக்கு வருதல் அல்ல).
காதலனை, அப்பாவை குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கும் பெண்ணியம் என்பது பெண்களை சிறிய வட்டத்திற்குள் அடைத்து வைக்கும் ஓர் ஆணாதிக்கக்கூறு. அதனை நான் அப்படித்தான் பார்க்கிறேன்.
பாலியல் சுதந்திரம் பேசும் பெண்ணியம் சுத்த ஆண் சுயநல கருத்தியல்.
(பொடிச்சி இதுபற்றி பதிவிட்டிருந்தது நினைவு)
பெண்ணியத்திலிருக்கும் தமக்கு சாதகமான கூறுகளை தொடர்ச்சியாக அழுத்தி, அதனை தேடத்தொடங்கும் பெண்பிள்ளைகை ஒப்பிக்கவைத்து, அவர்களை கருத்தியல் ரீதியாக அடிமையாக்குதல் என்பதும் ஒரு வித அதிகார துஷ்பிரயோகம் தான்.
உடைமையுணர்வையும் ஆணாதிக்கத்தையும் போட்டு குழப்பிக்கொள்ளத்தேவையில்லை நிவேதா.
அன்பு செய்தல், நேசித்தல், so called காதலித்தல் என்பவற்றிலெல்லாம் மதிப்பீடுகள் உருவாகுமெனில், அங்கே மாறி மாறி எடைபோடல்கள் தான் நிகழ்ந்துகொண்டிருக்குமெனில் அந்த உறவு cஎற்று யந்திரமாகி இறுகிப்போய்விடும்.
மதிப்பீடுகள் இருந்தால் நல்ல நட்பு கூட சாத்தியமில்லை.
நீ அந்த பெண்ணோடு கதைத்தது எனக்கு பிடிக்க வில்லை என்று ஒரு பெண் தன் காதலனிடம் சொல்லமுடியாதுபோகுமானால்,
நீ அவனோடு தனியே படம் பார்க்கப்போனது எனக்கு கஷ்டமாக இருந்தது என்று ஒரு ஆணுக்கு தன் காதலியிடம் சொல்ல முடியாமல் போகுமானால்,
இவ்வாறான உரையாடல்கள் காதலன்- காதலியிடம் இல்லாமலாக்கப்படுமானால் அங்கே காதல் எப்போதோ செத்துப்போய்விட்டது என்று தான் அர்த்தம்.
இயல்பான நடத்தையை , இயல்பன உரையாடல்களை மத்ப்பீட்டுக்குள்ளாக்கி விமர்சிக்கத்தொடங்குவது பயங்கரமான பின்விளைவுகளை உருவாக்கும்.
புரிந்துணர்வு போதாமலிருக்கும் சூழ்நிலைகளை இஅயல்காக இட்டு நிரப்பலாம். புரிந்துணர்வை மிக இயல்பாக உண்டாக்கலாம்.
பிரான்சின் மேதட்டு வர்க்க பெண்ணொருத்தி, தனது இலங்கையின் சேரிகளிலிருந்துவந்த தன் காதலனைப்பார்த்து, தனி மனித உருமைகள் பற்றி பேசினால் அது எவ்வளவு பெரிய அதிகார துஷ்பிரயோகம்?
உங்கள் பதிவில் இந்த இடங்களின் பின்னாலிருக்கும் மனநிலையை, என் தங்கை தன் எழுத்துக்களில் வெளிப்படுத்தியிருந்தால்,
தேடத்தொடங்கும் மாணவியான அவளுக்கு என்னுடைய மட்டுப்பட்ட அறிவுத்தளத்திலிருந்து சொல்லக்கூடிய அறிவுரை இதுதான்.
ஆணாதிக்கம் என்பது உலகின் மிகப்பயங்கரமான பிற்போக்குத்தனம். அது எல்லா தளங்களிலும் ஊறிப்போய்க்கிடக்கிறது. அதற்கெதிரான எல்லாவடிவமான போராட்டங்களாயும் பெண்ணியம் எழுச்சிபெற்றுள்ளது. இது மிக முற்போக்கான போரடடம்.
ஆனால் இவ்வளவு உயர்வான பெண்ணிய இயக்கம், காதலனை குற்றஞ்சாட்டுவதிலும், சிறு வட்டங்களுக்குள் தன்னை அடைத்துக்கொள்வதிலும் தன்னை விரயமாக்கிக்கொள்ளக்கூடாது.
அந்த அண்ணனும், அப்பாவும் பாவமடியம்மா, அவரக்ளுக்கு என்ன சொல்லிக்கொடுக்கப்பட்டதோ, அதை வெளிப்படுத்துகிறார்கள். அவர்களுடைய தவறுகளை நியாயப்படுத்தவும், தவறென்று அவர்களே உணரும் விடயங்களை காப்பாற்றி தம்மை தக்க வைத்துக்கொள்ளவும் அவர்கள் ஆணதிகாரத்தை பாவிக்காத வரை அவர்கள் புரிந்துகொள்ளல் மூலம் பெண்ணிய இயக்கத்தின் நேச சக்திகளாக மாறிக்கொள்வார்கள்.
உடைமையுணர்வால் உளவியல் தாக்கத்திற்குள்ளாகி அல்லறும் ஒரு காதலனை உளவியல் ரீதியாக சரிப்படுத்தாது, மேலும் மேலும் குற்றஞ்சாட்டி, வன்முறையை பிரயோகிப்பதால் ஆகக்கூடியது ஒன்றுமிலை.
அது ஒரு சித்திரவதை .
மயூரன்,
/தமிழின் "தீவிர இலக்கிய" சூழல் என்ற மாய உலகத்தை சில சஞ்சிகைகளும் அறிவுகலகப் பிராமணர்களும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களிடையே இருந்து வரும் பெண்ணிய சிந்தனைகள் நிறைய போதாமைகளை கொண்டிருக்கின்றன./
பெண்ணியத்தின் போதாமைகள் பற்றி நீங்கள் குறிப்பிடுவதை ஏற்றுக்கொண்டாலும் சில புள்ளிகளில் உடன்படமுடியாது இருக்கின்றது. தீவிர சிற்றிதழ்கள் மற்றும் அறிவுஜீவிப்பிராமணர்களுக்கு ஊடாக 'மட்டுந்தான்'தான் இன்றும் பெண்ணியப்புரிதல்கள் வந்துகொண்டிருக்கின்றது என்பதை எந்தளவுக்கு ஏற்றுக்கொள்வது என்றும் தெரியவில்லை.
/மேல் நடுத்தரவர்க்க, மேல்தட்டு வர்க்க சூழலிலிருந்தே பார்த்தாலும் கூட பெண்களும் தான் ஆண்களை ஏமாற்றுகிறார்கள், துன்புறுத்துகிறார்கள், உணர்வுகளை மதிக்காமலிருக்கிறார்கள்.
ஆகக்கீழ்த்தளங்களில், மனைவியிடம் அன்றாடம் உதைவாங்கும் கணவர்கள் இருக்கிறார்கள்./
இவையெல்லாம் நடக்கின்ற/நடந்து வருகின்ற விடயங்கள் என்று வைத்துக்கொண்டாலும், மேல் நடுத்தர வர்க்க மேல்தட்டு மற்றும் ஆகக்கிழ்த்தளங்களில் இருக்கும் ஆண்கள் செய்யும் ஏமாற்றல், துன்புறத்துல், வன்கொடுமைகளுக்கு நிகராய் ஒரு தராசில் மற்றப்பக்கத்தில் பெண்களையும் வைத்துக்கொண்டு இப்படி நியாயங்கேட்டுக்கொண்டிருப்பதுதான் ஒருவகை அலுப்பைத் தருகின்றது. பெண்களின் பிரச்சினைகளை பேசவருகின்ற பெண்களிடம், உடனேயே பல ஆண்கள் மேலேயுள்ளதுமாதிரித்தான் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள், அதை பெண்ணியப்புரிதல் உள்ளதாக கூறிக்கொள்ளும் நீங்களும் எழுதிக்கொண்டிருப்பதுதான் வியப்பாயிருக்கிறது.
/காதலனை, அப்பாவை குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கும் பெண்ணியம் என்பது பெண்களை சிறிய வட்டத்திற்குள் அடைத்து வைக்கும் ஓர் ஆணாதிக்கக்கூறு. அதனை நான் அப்படித்தான் பார்க்கிறேன்/
இருக்கலாம். ஆனால் ஒரு சுதந்திர வெளியைத்தேடும் பெண், முதலில் தனக்கு அருகிலிருப்பவரிடம்தானே விமர்சனங்களை வைக்கமுடியும்? தனது தந்தையை, காதலனை விமர்சித்து புரிந்து பொதுத்தளத்தில் பெண்கள்பிரச்சினைகளைப் பற்றிப் பேசத்தொடங்கும் பெண்ணில் எதுவும் தவறிருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. பொதுத்தளத்தில் எதையாவது விசயத்தை கேள்விக்குட்படுத்தும் பெண்ணை, உன்ரை குடும்பம் சரியாய் இருக்கிறதா? உன்ரை கணவன் சரியா இருக்கிறாரா? என்று சமூகம் திருப்பிக் கேள்விகள் கேட்கும்போது தனது காதலனை அப்பாவை முதலில் விமர்சித்து புரிந்து கொள்வதில் என்ன பிழை இருக்கப்போகிறது? இல்லாவிட்டால் பெண்ணியம் பேசுகின்ற பெண்ணுக்கு இருக்கும் தகப்பனும், வரும் கணவனும் எல்லாவற்றையும் புரிந்துகொண்டு perfect யாய் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உங்களிடம் இருக்கிறதோ என்றுதான் யோசிக்கத்தோன்றுகின்றது.
/பாலியல் சுதந்திரம் பேசும் பெண்ணியம் சுத்த ஆண் சுயநல கருத்தியல்.
(பொடிச்சி இதுபற்றி பதிவிட்டிருந்தது நினைவு)/
இது கூட எனக்கு தெளிவாக விளங்கவில்லை. பொடிச்சியின் பதிவுகளை ஒரளவு தொடர்ந்து வாசித்தவன் என்றவளாவில், அவர் ஒருபோது பெண்ணியம் பேசும் பாலியல் சுதந்திரம் பற்றி மறுதலித்ததாய் நினைவில்லை. இன்றைய சமூகக் கட்டுமானத்தில் பாலியல் சுதந்திரத்தைக் கூட ஆண்கள் எப்படி தங்களுக்கு ஏற்றவாறு சாதகமாய்ப் பயன்படுத்தி பெண்களைப் பலிக்கடாக்களாய் ஆக்குகின்றார்கள் என்று எழுதியிருக்கின்றாரே தவிர, பாலியல் சுதந்திரத்தை நிராகரித்ததாய் எதுவும் நான் வாசிக்கவில்லை. பாலியல் சுதந்திரம் என்பது ஒரு பெண் தனக்கு உடலுறவு வைக்க விருப்பமிலலை என்றால் அது கணவனாய் இருந்தால் கூட மறுக்கின்ற வெளியை கொடுக்கின்றது என்பதைச் சேர்த்து உள்வாங்கித்தான் நான் விளங்கிக்கொள்கின்றேன். இன்னும் பெண் உடலை ஒரு 'புனிதத்தன்மையுடன் கொண்டாடிக்களித்துக்கொண்டிருக்கின்றபடியால்தானே, விவாகரத்து நடந்தாலோ அல்லது கைம்பெண்ணானாலோ இயல்பாய் மீண்டும் தங்கள் துணைகளைத்தேடமுடியாது பெண்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 'என்னால் கையாளப்பட்ட உன் உடலை இனி எந்த ஒருவனும் ஏற்றுக்கொள்ளான்' என்று சொல்லிச் சொல்லியே பெண்கள் மீது உடல்/உள சார்ந்த எல்லா வன்முறைகளையும் செய்துகொண்டிருக்கின்ற எங்கள் சமூகத்தில் பாலியல் சுதந்திரம் பற்றிப் பேசாமல் அவர்கள் எப்படி இதன் கொடும்பிடிகளிலிருந்து தங்களை வெளிக்கொணர்தல் சாத்தியமாகும்?
/உடைமையுணர்வையும் ஆணாதிக்கத்தையும் போட்டு குழப்பிக்கொள்ளத்தேவையில்லை /
ஆணாதிக்கம் என்பது இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பது உடமையுணர்வில்தான் என்கின்றபோது எப்படி உடமையுணர்வையும் ஆணாதிக்கத்தையும் பிரித்துப்பார்க்கமுடியும். 'இவள் என் காதலி', 'இவளது உடல் எனது', 'என்னை மீறி எதுவும் பேசக்கூடாது' என்று எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்திக்கொள்ளும் உடைமையுணர்வு ஆணாதிக்கமில்லை என்றால்....?
/பிரான்சின் மேதட்டு வர்க்க பெண்ணொருத்தி, தனது இலங்கையின் சேரிகளிலிருந்துவந்த தன் காதலனைப்பார்த்து, தனி மனித உருமைகள் பற்றி பேசினால் அது எவ்வளவு பெரிய அதிகார துஷ்பிரயோகம்?/
இது என்ன விதமான உதாரணம் என்று விளங்கவில்லை. ஒரு சமூகத்தில் இன்னொருவர்/இன்னொரு சமூகம் இடையூறு செய்வதை எப்படி ஏற்றுக்கொள்வது குறித்து கேள்விகள் உண்டெனினும், பிரான்சில் இருப்பவள் தனது இருப்பால் வருகின்ற உரிமைகளை பேசுவதற்கு அவளுக்கு உரிமையிருக்கறது தானே. 'உன்னுடைய உரிமைகளை பிரான்சில் வைத்துக்கொள் இங்கே என்னிடம் வைத்துக்கொள்ளாதே' என்பது கூட இன்னொரு வகையான வன்முறையே. பிரான்சில் இருந்து வருகின்ற பெண்ணை அவளின் உரிமைகளுடன் மதிக்க முடியாவிட்டால் ஏன் காதலன் என்ற பட்டத்தைச் சூடிக்கொண்டிருக்கவேண்டும்? சும்மா இருக்கவேண்டியதுதானே ....அதில் என்ன பெரிய அதிகார துஷ்பிரயோகம் இருக்கின்றதென்றும் புரியவில்லை.
/ஆணிடமிருந்து இந்த அதிகாரத்தை பறித்தெடுத்து, அதனை பொதுவுடைமை ஆக்குவதுதான் பெண்ணியப்போராட்டம்/
இப்படி ஆரம்பத்த்தில் கூறுகின்ற நீங்களே பிறகு,
/என் தங்கை தன் எழுத்துக்களில் வெளிப்படுத்தியிருந்தால்,
தேடத்தொடங்கும் மாணவியான அவளுக்கு என்னுடைய மட்டுப்பட்ட அறிவுத்தளத்திலிருந்து சொல்லக்கூடிய அறிவுரை இதுதான்./
அதிகாரத்தை பகிரத்தயாராய் இருக்கின்றதாய் கூறுகின்ற நீங்களே, தங்கைக்கு 'அறிவுரை' கூற வெளிக்கிடும்போது, நமது தஙகைகளோ, தமக்மைமார்களோ, காதலிகளோ எம்மைப் போன்ற அருகிலிருப்பவர்களிடமிருந்து தங்கள் விமர்சனங்களை ஆரம்பிப்பதில் தவறேதும் இருக்காதுதானே.
.......
நிவேதா, நீங்கள் பதிவிலிட்டதை விட்டு வெளியே பின்னூட்டம் போனதற்கு மன்னிக்கவும்.
நிவேதா: உறவுகளை "நேர்"கோட்டில் வைத்துப் பார்க்க முடியாது. குறிப்பாக ஆண்-ஆணாதிக்கம், பெண் = அடிமைப்பட்டவள். ஆணின் வெளிப்பாடு ஆதிக்கமாயும் பெண்ணின் வெளிப்பாடு காதலாயும் மட்டுமாய்ப் பார்ப்பது கடினம். ஆணின் தனது துணையுடனான possessiveness-ஐ எப்போதும் ஆணாதிக்கமாகப் பார்க்க முடியாது. அவர்களுடைய உளவியல் + வாழ்வியல் பின்னணியில்தான் அணுக முடியும். உதாரணமாக அவர்களுடைய insecurities, தம்மைப் பற்றிய தாழ்வு மனப்பான்மைகள் எனப் பல காரணங்கள் இருக்கின்றன. பெண்களும் possessive-ஆனவர்களாயே இருக்கிறார்கள்; ஆணில் தங்கியிருக்கிற பெண் விடுபடும் பயங்கள் நிறைந்தவளாய் இருக்கிறாள். படித்த வேலை பார்க்கிற பெண்கள் இதிலிருந்து விடுபட முடியும் என்றாலும், ஆண் எப்போதும் "இளமை"யானவனாய் இருப்பதால், பெண்கள் எப்போதும் அவர்களைத் "தக்க வைத்துக்கொள்ளும்" பயத்துடன் இருக்கிறார்கள். மேலும், "அவர்களால் புரிந்துகொள்ளப்படுகிற" ஆண் எப்போதும் இளைஞனாவும் "புரிந்துகொண்ட" பெண் கிழவியாயும் ஆகிவிடுகிறார்கள். இங்கு குறிப்பிட்ட வயதைக் கடந்த பெண்கள் "முதிர்ச்சியானவர்களாகவும்", அதே குறிப்பிட்ட (முதிர்ச்சியான) வயதைக் கடந்த ஆண்கள் "குறும்பு" செய்யும் கண்ணன்களாக இருக்கிறார்கள். இத்தகைய நடைமுறையில் - எமது சமூகம் அளித்த "இயல்பென்றான" குணங்களுடன்தான் நாம் இருக்கமுடியும்; அவற்றை அறிவாலோ theory-ஆலோ கட்டுப்படுத்த முடியாது.
இங்கே பெண் தமது உணர்வுகள், அது என்ன வென்றாலும் -தனதுமான உரித்துணர்வு தனதுமான பொறாமை என்பனவை- வெளிப்படையாய் வெளிப்படுத்துவது என்பதே ஒரு சுதந்திர வெளிப்பாடுதான். அதுவும் ஒருவகையில் விடுதலைதான்.
இங்கே சிந்திக்கிற பெண்களிடம் சிந்திக்கிற ஆண்கள் "பொறாமை கூடாது" "நான் எனது பழைய காதலியை காணுவதோ முத்தமிடுவதே இயல்பானது; அதை அப்படியே ஏற்றுக்கொள்; அது உணர்வின் வெளிப்பாடு; நீயும் அதைச் செய்யலாம்" என்று சொல்லக் கூடும். அது, மரபாக வந்த இதயத்திற்கு வதைதானே? நாங்கள் பிரான்ஸில் ஒரு சுதந்திரமான சிந்தனைகளை மனதாலும் இதயத்தாலும் அனுபவிக்கிற சூழலில் பிறந்தவர்கள் அல்லவே? பிறந்திருந்தால் நல்லதுதான். ஸோபாசக்தி சொல்வது போல குடும்பமற்ற, -அடக்குதல் அற்ற "காதல்" என்கிற பெயரில் இந்தமாதிரி உடல் ஆக்கிரமிப்புகள் ஆதிக்கங்கள் அற்ற சமூகம் அழகானதுதான். ஆனால் அத்தகைய புரிதல்களில் நாம் முதலாவது படியிலிருந்துகொண்டு எல்லாத்தையும் அளவிட முடியாது.
நான் நினைக்கிறேன்
மயூரன் குறிப்பிட்டது பிரான்ஸிலிருந்து ஒரு பெண் சென்று வன்னியிலுள்ள பையனை திருமணம் செய்துவிட்டு "நான் இப்படி இப்படித்தான் இருப்பேன்" என்பது, தான் வளர்ந்த வாழ்ந்த அறிவார்த்தமான சூழலில் அல்லது வளர்ச்சியில் இருந்து வருகிற ஒரு முடிவை வன்னி போன்ற பின்தங்கிய இடத்திலிருக்கிற பையனிடம் எதிர்பார்ப்பது கூட (apply-பண்ணுவது) வன்முறை - என்பதே. இது வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு சென்று மணமுடிக்கிற ஆண்கள் தமது துணைவியரை நகரப் பெண்கள் போல நுனி நாக்கு ஆங்கிலத்துடன், ஆடையணிகளுடன் இங்கு வாழ எதிர்பார்ப்பது போன்ற ஒன்றையே ஒத்திருக்கிறது. எதிர் எதிர் வகையில், இரண்டுமே வன்முறைதானே?
---தான்யா
வித்தியாசமான எழுத்துநடை! வாழ்த்துக்கள் !! நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
பின்னூட்டமளித்த நண்பர்களுக்கு என் நன்றிகள்.
வாசிப்பின் பின்புலத்தில் இருவிதமான நோக்கங்களிருக்கக்கூடும்.
1. எழுத்தினை இரசித்தல்.
2. எழுத்தினைப் புரிந்துகொள்ளல்.
எழுத்தினை இரசித்தலென்பதன் முக்கிய நிபந்தனை, உள்ளதை உள்ளவாறே அதன் இயல்பு மாறாவண்ணம் ஏற்றுக்கொண்டு.. அதைத் தனக்குள் உணர்வது. இந்தத் தகவமைவின்படி, judgement கள் சாத்தியமில்லை. உண்மையான இரசிகர்கள் ஒருபோதும் இலக்கிய அரசியல்வாதிகளாவதில்லை.
எழுத்தைப் புரிந்துகொள்தலென்பது எழுதுபவரின் குடும்ப - சமூகப் பின்னணி, சூழமைவு, அவர் சார்ந்த அரசியல், அவரது கடந்தகால அனுபவங்கள், நிகழ்கால பாதிப்புக்களென்பவற்றின் பின்னணியில் அவரது எழுத்துக்களை விளங்கிக்கொள்வது. இத்தகைய புரிதலில்லாமல் ஒருவரது சிந்தனைகளையும், அதன் வெளிப்பாடுகளையும் மறுக்கமுனைவதன் மூலம் அவரது தனித்துவங்களை, அவரை எழுதவைத்துக் கொண்டிருக்கும் புறக்காரணிகளை, அவர் எதிர்கொண்ட மனிதர்களை, அவர்களது ஆளுமைகளை, அனுபவங்களை, சந்தர்ப்பங்களை... அனைத்தையும் மறுத்தவர்களாகிறோம். இதனூடு கட்டியெழுப்பப்படும் சித்தாந்தங்களினதும்.., இத்தனை மறுப்புக்களினூடு எழும் விமர்சனங்களதும் நியாயப்பாடுகளை நான் ஏற்றுக்கொள்வதாயில்லை.
கருத்துக்கூறுவதற்கும், கருத்துத் திணிப்பிற்குமிடையில் அடிப்படை வேறுபாடுகளிருக்கின்றன. நண்பர் அருணின் பின்னூட்டத்திற்கும், இறுதியாக வந்த சில பின்னூட்டங்களுக்குமிடையேயான வேறுபாடு இதனைத் தெளிவாக உணர்த்தக்கூடும். உண்மையான வாசகனுக்கும், அறிவுஜீவிகளுக்குமிடையேயான வேறுபாடுகூட இவ்வளவும்தான்.
மனிதர்கள் தனித்துவமானவர்கள். எனது கற்பிதங்களுடன், எனது கனவுகளுடன், எனது எதிர்பார்ப்புக்களுடன் நான் எப்படியும் வாழ்ந்துவிட்டுப் போகிறேன். இன்றைய எனது போக்கு நாளை மாறக்கூடுமெனினும், அது என்னைப் பொறுத்தது. possessiveness உங்களைப் பொறுத்தவரை முக்கியமாகிப் போகலாம்... ஆனால், உடைமையாக்கமற்ற அன்பு அர்த்தமற்றது அல்லது சாத்தியமற்றதெனக் கூற முனைவதன்மூலம் நேசத்தினைக் குறுக்கவே முயற்சிக்கிறீர்கள். இந்தப் பொதுமைப்படுத்தல் எந்தளவுதூரம் நியாயமானதென்பது நான் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லைதானே. தனிமனிதத்துவங்களை மதிப்பவளென்ற வகையில் உங்கள் அனைவரது கருத்துக்களையும் நான் காதுகொடுத்துக் கேட்டுக்கொள்கிறேன். but, let me live with my own values..
உங்களை வெறுப்பேற்றக்கூடுமெனினும் நான் இதனைக் கூறியேயாக வேண்டும்: 'உங்கள் சட்டகங்களைக்கொண்டு என்னை அளவிட முயற்சிக்காதீர்கள். நிச்சயமாக, நான் உங்களில் ஒருத்தியல்ல..'
இது கொஞ்சம் ஓவரா இல்ல :-)) சரி என்னமோ செய்யுங்கள். அதிக பின்னூட்டம் வாங்க இப்படியும் ஒரு வழியா? ம்....
தர்ஷன்..,
அதிக பின்னூட்டங்கள் வாங்க இதைவிடவும் சிறந்த வழிகளிருக்கின்றன. உதாரணமாக, நாங்களே வேறு வேறு பெயர்களில் பின்னூட்டங்கள் எழுதலாம்.. அல்லது நண்பர்களுக்கு ஒருக்கா வந்து பின்னூட்டமிட்டால் குறைந்தா போய்விடுவீர்களென்று தனிப்பட்ட மடல்கள் அனுப்பலாம்.. அதுவுமில்லையென்றால் ஒவ்வொரு வலைப்பதிவாகத் தேடிப்போய் பின்னூட்டமிட்டு, என்னதுக்கும் வந்து பின்னூட்டமிடுங்களேன் என்று கெஞ்சலாம்...
உங்களைப்போல ஓவரா.. குறைச்சலா என்ற ஆராய்ச்சியிலீடுபடும் நண்பர்கள் வாய்த்திருக்கத்தக்கதாக நானெதற்கு பின்னூட்டங்கள் குறித்து கவலைப்படவேண்டும்..:-))
மற்றபடி, இத்தனை ஐடியாக்களை எடுத்துவிட்டமைக்குத் தட்சணையாக வந்து இன்னொரு பின்னூட்டமிட்டு விட்டுப்போங்கோ, என்ன?? (ஹி,,ஹி,,ஹீ)
//உங்களைப்போல ஓவரா.. குறைச்சலா என்ற ஆராய்ச்சியிலீடுபடும் நண்பர்கள் வாய்த்திருக்கத்தக்கதாக நானெதற்கு பின்னூட்டங்கள் குறித்து கவலைப்படவேண்டும்..:-)) //
ம்.... :-(( நான் என்னுடைய பதிவை பதிவதோடுசரி பின்னூட்டம் பற்றி சிந்திப்பதில்லை.(அண்மையில் ஒருவர் என்பதிவில் நக்கல்வேற அடித்திருக்கிறார்) எனினும் பின்னூட்டம் வாங்க நீங்கள் சொன்னவை நன்றாகத்தான் இருக்கிறது. :-)) சரி முயற்சி செய்கிறேன்.{உங்க ஆசைக்காக இந்த பின்னூட்டல்.}
Read ur post and the comments that followed it. So true..each and every word that you wrote..
Read the book called fountain head by Ayn rand? you remind me of the hero of that book.
keep blogging..
Arun
பின்னூட்டத்திற்கு நன்றி, அருண்.
நீங்கள் குறிப்பிட்டிருந்த புத்தகத்தினை வாசித்ததில்லை... ஆனாலுமென்ன நானொரு சாதாரணப் பெண்மட்டும்தான்..:-)
சாதாரணமான பெண் மட்டும் தான் என்று எவ்வளவு சுலபமாக எழுதிவிட்டீர்கள் நிவேதா!
ஆயினும், அது ஒரு வகையில் உண்மை என்பதால்,உங்களிடம் சண்டை பிடிக்கப்போவதில்லை நான்!:)
நான் குறிப்பிட்ட அந்த புத்தகமும் கூட சாதாரண மனிதனாக தனித்துவத்தோடு வாழ யத்தனிப்பதால், நாயகனுக்கு சமுகம் ஏற்படுத்தும் தடங்கல்களும், அவற்றை அவன் எதிர்கொண்ட விதத்தையும் பற்றியதே.
அருண்,
உங்கள் தமிழ்ப் பின்னூட்டம் மகிழ்வைத் தந்தது. நன்றி.
சாதாரணப் பெண்ணாக இருப்பதாய் / இருக்க விரும்புவதாய் சொல்லிக்கொள்வது எளிது. எனினும், அவ்வாறிருக்க சமூகம் அனுமதிக்காத போது - கேட்கிறவன் கேணையனென்றால் எருமைமாடு ஏரோப்ளேன் ஓட்டுமாம் - என்பதைப்போல அடுத்தவர் தலையில் மிளகாய் அரைக்கக் காத்திருக்கும் கூட்டத்தினரின் மத்தியில் தனித்துவங்களைக் காப்பாற்றிக் கொள்வதே வாழ்தலுக்கான போராட்டமாக்கும்.
நிவேதா மிக நன்றாக எழுதியிருக்கின்றீர்கள்
தப்பியோட நினைத்தால் கனடாவிற்கு வந்துவிடாதீர்கள்
தினம் தோறும் செய்திகளில் தமிழர்களின் பெயர் குறிப்பிடும் அளவிற்கு
எதுவாவது நடந்தவண்ணம் இருக்கின்றது
பெண்கள் கொலை செய்யப்படுவது, தற்கொலை செய்வது,
பாலியல் வன்புணர்ச்சி, முதியோருக்கெதிரான வன்முறை
போர் சூழலில் வாழ்ந்து வாழ்ந்து பழகி எம்மவர் மனமும்
வக்கிரம் கொண்டு விட்டதோ என்னவோ
இல்லாவிடின் பனங்கன்றைப் பிடுங்கி வந்து
பனிக்குள் வளரச்சொன்ன கொடுமையோ தெரியவில்லை.
நன்றி, கறுப்பி..
பெருமூச்சு மட்டும்தான் எனது பதிலாக..
Post a Comment