Thursday, July 27, 2006

*மகா காலம் வியாபித்த அழியாத் துயர்...

பிரிவு என்னைப் பொறுத்தவரை பொய்..!


1.

என்னைப் பற்றியும்
உன்னைப் பற்றியும்
சொல்வதற்கு இனியேதுமில்லை

காலங்கடத்திப் போட்ட
தலைமுறையொன்றின் பிறள்வில்
சரிந்து கிடக்கிற
எம் வாழ்வின் மீது
ஒரு பனிக்காலத்தின் குளிர்மை
வசந்தகாலம் முழுதும்
சிறகடித்தொதுங்கும்
வண்ணத்துப் பூச்சிகளின் நிறக்குவியல்
மழைக்காலத்தின் செழுமை
இனியெதுவும் வேண்டாம்

வாழ்வின் அலைச்சலில்
எதையெதையோ பொய்யாக்கி
இனியும் யாரிடம் சொல்லப் போகின்றோம்

கேட்பதற்கும் சொல்வதற்கும்
யாருமேயற்ற நாளொன்றில்
நானும் நீயும்
நினைவுகளாய் கரைந்தொழுகி...
உன்னொத்த நண்பர்களை
இனியெங்கு தேடிப்போவேன்...

வாழ்வின் கரைசல்களில்
எல்லாம் வந்து போகிறது
அசைவற்றுப் போகின்ற உணர்வுகளில்
உள்மனம் எதையோ
வேண்டிக் கிடக்கிற கணங்களில்
நினைவுகளாய் மீண்டும்
ஏன் வந்து போகிறாய்

எதற்காக வெளிக்கிட்டோம்
இரு தசாப்தங்களைத்
தொலைத்த நாளொன்றில்
இன்னும் வெறுமையாய்
தோற்றுப் போனதென்ற பிரமையில்
நான்... நீயெப்படியோ...

நானும் நீயும்
நாமெல்லோரும்
காலங்கடத்திய
அந்த நாட்களும்
என்னில் அழிந்து போவதாய்
உணரும் போதெல்லாம்
வெடித்துச் சிதறுகிறது
மனப் பெருவெளி...

போர்க்காலத்தின் நெரிசலும்
வரண்டுபோன இந்த வாழ்வும்
சிதைந்து போன கனவுகளும்
இப்போதெல்லாம்
சுகமெனத் தெரிகிறது என்னில்.
- பி. ரவிவர்மன்


2.

யார் எங்கு போனார்கள்
எதற்கு எதுவுமே புரியவில்லை
என்றென்றைக்குமான அகதியாய்
ஓர் மூலையில் ஒதுங்கி

எதை இழந்தேன்
எதைப் பெறத் தோற்றேன்
வெற்றுக் கரத்துடன் வீதியில் இறங்கினேன்
வேதனையில் யாரோ விம்முகிறார்கள்
எங்கோ தூக்கமற்று இரவிரவாய் அழுந்தி
எங்கோவோர் இதயம் வேதனையில் துடிக்கிறது
வேண்டாம்!

அவலம் தரும் பிரிவு வேண்டாம்
பாழ்பட்ட பிரிவினைப்
பழிப்பேன் நான்
வலம் வந்த
இரக்கமற்ற நினைவுகளைப்
பழிப்பேன் நான்

தூக்கமற்று புரள்வதற்காய்
இரவுகள் வருகின்றன
பித்துப் பிடித்தலைவதற்காய்
பகல்கள் காத்திருக்கின்றன

விதியைப்பற்றி எச்சலனமும் இன்றில்லை
வேகமாக அதிர்ந்ததிர்ந்து
ஓயும் கணங்கள் இனியில்லை
இனி எவரும் வரப்போவதில்லை

இனி மனிதர்களைத் தேடி அலைய வேண்டும்
பாழ்வெளியில்
பறவைகளைப் பார்த்து ஏங்கி
குறுகுறுத்து ஓய வேண்டும்
- அஸ்வகோஷ்


3.

ஆசைமகனே என் அன்பான கண்மணியே
நேசத்துரையே நெடுந்தூரம் போனாயோ
உந்தன் தலையரிந்து ஓலைக் குடலைகட்டி
சென்று சென்று விற்றனரோ! தின்று பசியாறினரோ
அம்மாவென அழைக்கும் ஆசைத் திருக்குரலை
எம்மாதுளக் கொளுந்தே நான்கேட்ட தென்னாளோ
ஓங்கிய கத்தி விழும்போது உடல் நடுங்க
ஏங்கியெனை நினைத் தென்னம்மாவே என்றாயோ
- விபுலானந்தர்


* நன்றி - எம்.பௌசர்

Friday, July 21, 2006

உடைபட மறுத்த பிம்பங்கள்

ஆன்மாவின் அலறலுக்கு அமைதியாகச் செவிசாய்த்திருக்கிறீர்களா நீங்கள், எப்போதாவது?

பிம்பங்கள் உடைந்து சிதறும் பொழுதொன்றில் மனிதையாய்.., இறைவியாய்.. ஆதியடையாளங்களுடன் இருத்தல்களின் எல்லைகளை நோக்கிச் சிறகுவிரிக்கையில்...

கனக்கிறது காலம், குருதியிலூறிய பஞ்சாய்...

கண்ணாடியின் முன் நிற்கிறேன்.
அதில் ஒருத்தி தோன்றுகிறாள்.
நான் சிரித்தால்,
அவள் சிரிக்கிறாள்.
நான் முறைத்தால்,
அவளும் முறைக்கிறாள்.
அவள்தான் நானாம்...
அப்படித்தான் அவர்கள் கற்றுத்தந்தார்கள்.

ஆன்மாவோ அலறுகிறது:
இத்தனை உயிர்ப்பற்றதா உனது 'நான்'?
நோவாவின் பேழை மூழ்குவதற்குச்
சில கணங்களுக்கு முன்..
மெடுசாவின் தலை புதைக்கப்பட்டதற்கும்
சில அடிகள் அப்பால்..
தொலைந்துபோன மாயாவின் சிதிலங்களோடு
அது உனக்காகக் காத்திருக்கின்றது.
தேடு...,
தேடு...,
தேடிக்கொண்டேயிரு.


பிம்பம் - 01 (உணர்தல்)

உங்களுக்கு என்னைப்பற்றித் தெரியாது. நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புவதுமில்லை. ஆனாலும் பரவாயில்லை... அதை என்னால் மன்னித்துவிட முடியும். எனக்கும் உங்களைப் பற்றித் தெரியாது.., நானும் உங்களைப் புரிந்துகொள்ள விரும்பவில்லையென்ற காரணங்களை முன்வைத்து உங்கள் அறியாமையை.. அக்கறையின்மையை நான் மன்னித்து விடுகிறேன்.

பரஸ்பரப் புரிந்துணர்வு என்னை அச்சத்திலாழ்த்துகிறது. என்னதும், என் எழுத்துக்களதும் நிர்வாணத்தை என்னால் நேசிக்கமுடிகின்றவரை அது என்னை அச்சுறுத்திக்கொண்டேயிருக்கும். இன்னொருவரால் புரிந்துகொள்ளப்படுவதன் வாயிலாக எம் privacy யை இழக்கிறோம்.., தனித்துவங்களை இழக்கிறோம்.., பொய் சொல்லும் ஆற்றலை.., கபடப் புன்னகைகளை.. இன்னும் பலவற்றை. சுயநலமும், மூர்க்கமும், ஆற்றாமைகளும் பிணித்துள்ள சுயத்தை வெளிக்கொணர யார்தான் விரும்புவார்.. அனைவருள்ளும் வாழ்வது இவைதானென்பதை ஒவ்வொருவருமே அறிந்திருந்த போதும்.


பிம்பம் - 02 (அறிதல்)

எழுத்துக்களின் பின்புலத்தில் ஆயிரம் காரணங்களிருக்கும்.

எனக்குத் தெரிந்தவை:
1. பெயருக்காக, புகழுக்காக, பணத்துக்காக
2. சுய அடையாளமொன்றைப் பெறுவதற்காக
3. பகிர்தலுக்காக
4. விடுபடலுக்காக

எனக்குத் தெரியாதவை:
1. x
2. y
3. z

நான் எந்த வகைக்குள் அடங்குவேனென்று என்னிடம் கேட்காதீர்கள். உங்கள் தெரிவுகளுக்குள் தலையிட நான் ஒருபோதுமே விரும்புவதில்லை.. தவிரவும், x.. y.. z.. க்குள் பொருத்தமான தெரிவொன்று மறைந்திருக்கவும் கூடும். அறியாமைகளின் இருப்பைக் கலைக்காதவரையில், அறிந்தவற்றைக்கொண்டு முடிவுக்கு வருதல் சாத்தியமில்லை எனக்கு.


பிம்பம் - 03 (கற்பிதங்கள்)

எனக்கு முன்னே 'அது' நடந்து செல்கிறது. அவர்கள் அதைப் 'பூனை' என்று அழைக்கிறார்கள். நான் வியப்பிலாழ்கிறேன். அது எப்போதாவது உங்கள் முன் வந்து 'நான்தான் பூனை' என்று கூறியதுண்டா? காலாகாலமாக யாரோ சொல்லிவந்ததை நீங்களும் பின்பற்றுகிறீர்கள், அப்படித்தானே... எவரோ ஒருவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் 'அது நாயாக இருந்தாலும் இருக்கும்' என்று நான் கூறினால் மட்டும் முகஞ்சுளிக்கிறீர்களே ஏன்..? உங்கள் பூனை என் நாயாக முடியாதென்று உங்களுக்குக் கற்றுத் தந்தவர் யார்?

கசப்பின் மறுபெயர் நெருப்பென்கிறேன்.. நீங்கள் திகைக்கிறீர்கள். சாம்பல் பூத்தாலும், அடியாழங்களில் தொடர்ந்தும் உயிர்த்திருக்கும் வல்லமை இரண்டுக்குமே வாய்த்திருக்கிறதென்கிறேன்.. பெருமூச்சொன்று வெளிப்படுகிறது, உங்களிடமிருந்து. நீங்கள் 'பெயர்' குறித்து அதிகம் அலட்டிக் கொள்கிறீர்கள், அப்படித்தானே.. அதைவிடுவோம்.


பிம்பம் - 04 (முறுகல்)

என்னருகில் கிடத்தப்பட்டிருக்கிறாள்.., சில மணிநேரங்களுக்கு முன்பு பிறந்த என் சின்னவள். அவர்கள் வருகிறார்கள், ஆரவாரத்துடன். அவள் முகத்தில் தவழ்வது என் சாயலா.. அவனது சாயலா என்ற ஆராய்ச்சி மும்முரம் பெறுகிறது. சிலர் என்னைத் திருப்திப்படுத்துவதற்காக, எனது புன்னகை அப்படியே அவளுக்கும் வாய்த்திருப்பதாக வாக்குமூலமளிக்கிறார்கள்.

உங்கள் அனைவருக்காகவும் நான் பரிதாபப்படுகிறேன். உங்கள் ஆய்வுகளாலும், ஒப்பீடுகளாலும் என் சின்னவளின் அந்தக் கணத்துப் புன்சிரிப்பினழகை ரசிக்கத் தவறிவிட்டீர்கள்... அதன் மர்மச் சுழிவுகளை முழுமையாக உள்வாங்கவும், அதில் கரைந்துபோகவும் தவறிவிட்டீர்கள்.


பிம்பம் - 05 (..........)

சேற்றினுள் மூழ்கிக்கிடப்பதில் கண்டறியாத சுகங்காணும் காட்டெருமைகளைப்போல சித்தாந்தங்களுள் மூழ்கிக்கிடக்கும் அறிவுஜீவிகளையும், இலக்கியவாதிகளையும் கண்டு அருவருப்படைகிறேன். தமது விதிகளோடு முரண்படுபவை எதையும் அவர்கள் விமர்சனத்துக்குள்ளாக்குகின்றார்கள். விமர்சனம் - சுயநலத்தின் வெளிப்பாடு. விதிகளோடு அனைவரும் பொருந்திப் போகவேண்டுமென்று எதிர்பார்ப்பது அக்கிரமமல்லவா..

..............


சின்ன நட்சத்திரத்தின் கீழ்

விபத்துக்களைத் தவிர்க்க இயலாதவை என்று
அழைப்பதற்காக என்னை மன்னியுங்கள்
சரி சரி ஒருவேளை அது தவறாகுமானால் அத்தியாவசியம்
என்று சொன்னதற்கு என்னை மன்னியுங்கள்
அது என் சொந்தம் எனக் கோருவதற்காக
சந்தோஷம் கோபம் கொள்ளாதென நினைக்கின்றேன்
எனது நினைவுகளில் சதா கவிந்திருப்பதற்காக
மரணமுற்றவர்கள் தம்மை மறந்து போகட்டும்
தொலைந்து போன ஒவ்வொரு நொடிக்காகவும் காலம்
என்னை மன்னிக்கட்டும்
இதுதான் முதல் என்று புதிய காதலைச் சொல்வதற்காக
பழைய காதல் என்னை மன்னிக்கட்டும்
மலர்களை வீடு கொண்டு வந்ததற்காக
தூரத்து யுத்தங்களே
என்னை மன்னித்துவிடுங்கள்
எனது விரலை நான் குத்திக்கொண்டதற்காக
வெளிப்படையான காயங்களே
என்னை மன்னித்துவிடுங்கள்
நடனலயத்தைப் பதிந்ததற்காக புதரினின்று
அழைப்போரே எனை மன்னிக்கவும்
அதிகாலையில் தூங்குவதற்காக ரயிலைப் பிடிப்போர்
எனை மன்னிக்கட்டும்
காயமுற்ற நம்பிக்கையே அதிகப்படியான சிரிப்புக்கு
எனை மன்னிக்கட்டும்
பாலைவனங்களே
ஒரு தேக்கரண்டியில் தண்ணீர் கொண்டுவராததற்காக
என்னை மன்னிக்கவும்
நீயும்கூட என்னை மன்னிக்கவும்
அதே பழைய கூட்டிலிருக்கும் ஆந்தையே
அசைவற்று நிலைகுத்தி எப்போதும் அதே இடத்தில்
அமர்ந்துகொண்டிருக்கும் ஆந்தையே
என்னை மன்னித்துவிடு
நீ ஏதேனும் காரியமாக உட்கார்ந்துகொண்டிருந்தால் கூட.

நாலுகால் மேசைக்காக
மரங்களே என்னை மன்னிக்கவும்
சின்னதாக பதில் சொல்வதற்காக
பெரிய கேள்விகளே என்னை மன்னியுங்கள்
சத்தியமே, கூட கவனிக்காதே
தீவிர சித்தமே, பெரிய மனத்துடன் இரு
இருத்தலின் மாயத்தன்மையே, உனது கண்ணியிலிருந்து
கயிறுகளை உருவுவதற்காக எனைத் துன்புறச் செய்
ஆன்மாவே - உனைக் கொண்டிருப்பதால் -
அவ்வப்போதேனும் - என்னைச் சபிக்காதே

ஒருத்தி அல்லது ஒருவன் மீது காதலில் வீழ்கிற
எவரும் என்னை மன்னிப்பீராக
எனக்குத் தெரியும்
நான் வாழ்ந்துகொண்டிருக்கும்போதே எதுவும்
என்னை மன்னிக்காது ஏனெனில்
நானே எனது இடர்

பேசுமொழியே -
பெரிய வார்த்தைகளை எடுத்துக்கொண்டு
அதை எளிமைப்படுத்துவதற்காக
போராடிக்கொண்டிருப்பதற்காக என்னைக்
குற்றம் சுமத்தாதே.
(மொழிபெயர்ப்புக் கவிதையொன்று.. பெண்கவிஞர்.. பெயர் தெரியவில்லை)


...............

சின்னஞ்சிறு நட்சத்திரமொன்றன் கீழ் வால்வெள்ளிகளின் அந்தங்களை எதிர்நோக்கியபடி தொடரும் பயணத்தில் கைகோர்த்தபடி துணைவரும் ஒரு உறவுக்கு...

Wednesday, July 12, 2006

'பெண்கள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள்'

One is not born a woman;
but becomes one
- சிமோன் தி பூவா

நினைவு தெரிந்த காலந்தொட்டு இன்றுவரை பெண் மற்றும் ஆண் வர்க்கம் தொடர்பாக எமது சமூகம் கட்டமைத்து வந்திருந்த விம்பங்களுடன் முரண்பட்டே வந்திருக்கின்றேன். பெண்கள் பிறப்பதில்லை.., எழுதப்படாத சமூக நியதிகளினாலும், மரபார்ந்த ஒழுக்காறுகளினாலும் அவர்கள் செதுக்கப்படுகிறார்கள். செதுக்குதலென்பது தீயனவற்றைக் களைவதை மட்டுமே குறித்து நின்ற காலங்கள் மலையேறி விட்டன. இப்போதெல்லாம்.. கலைகளும், சிற்பங்களும் செதுக்கப்படுவது வெறும் காட்சிக்காகவேயென்ற புரிதல் வந்தவுடன் விம்பங்களனைத்தும் உடைந்து சிதறத்தான் செய்யும்.

எமது உணர்வுகளைப் புறக்கணிப்பதாகவுணர்ந்த சமுதாயத்துடன் எப்படித்தான் சமரசம் செய்துகொண்டு வாழ்வது?

பாலினம் குறித்த பார்வையின்படி பெண்தன்மை (feminity) எப்படிக் கட்டமைக்கப்பட்ட தன்மையில் இயங்குகின்றதோ, அதுபோல ஆண்தன்மையும் (Masculinity) கட்டமைக்கப்படுவதே. அந்தவகையில் பெண்ணியம் 'பெண்' பற்றியதோ, 'பெண்'ணிடம் பேசுவதோ, 'பெண்'களால் பேசப்படுவதோ அல்ல. பெண்ணியம் பாலின அடிப்படையில் தொழிற்படும் ஒட்டுமொத்தச் சமூகம் பற்றியது.
- அ.மங்கை

சமுதாயம் எமக்கென்று வழங்கியிருக்குமொரு ஸ்தானத்திலிருந்து முன்னேறி, எமக்குரித்தான நிதர்சனமான ஸ்தானமொன்றினைக் கைப்பற்றிக் கொள்தலை நோக்கிய நகர்வே வாழ்தலுக்கான போராட்டமென நினைக்கின்றேன். நிலைகொண்டுள்ள இடத்திலிருந்து அசைய எத்தனிக்கும் எந்தவொன்றும், எவரொருவரும் போராடித்தானாக வேண்டும். நகர்தலென்பது.., இன்னொன்றன் வெளியினை ஆக்கிரமித்தலே...

எனினும்..,

இருளைக் கிழித்துக்கொண்டு விரையும் நடுச்சாமத்துப் புகையிரதத்தினைப்போல.. அதே படபடப்புக்களுடன், அதே அதிர்வுகளுடன் அதிகாலையின் தடித்த பனித்திரையாய் சுற்றிலும் கவிந்திருக்கும் வன்மங்களை ஊடறுத்துப் பயணிக்க முடிகின்ற ஒரு நாளில்.. அடி வயிற்றில் கனக்கும் எந்தன் மதலைக்கு எடுத்துச் சொல்வேன்..,

'என் மாதுளங் கொளுந்தே.. அக்னிக் குஞ்சாகவல்லாது, பிறந்துவிடாதே..'

1.

கடந்த திங்கட்கிழமை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் நிகரி திரைப்பட வட்டத்தினர் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஆதரவில் வழங்கிய Siddiq Barmak ன் 'ஒஸாமா' திரைப்படத்தினைக் கண்டுகளிக்கும் வாய்ப்பு கிட்டியது.

osamapubg

இத்திரைப்படத்தின் நெறியாளரான சித்திக் பர்மக் தலிபான் எழுச்சிக்கு முன்னரும், அதன் பின்னரும் மிகத்தீவிரமாக ஆப்கானிய சினிமாத்துறையில் முனைப்புடன் செயற்பட்டவர். இதுவரை நான்கு குறுந்திரைப்படங்களையும், இரு ஆவணப்படங்களையும் நெறியாள்கை செய்த இவர் 1992 இலிருந்து 1996 காலப்பகுதியில் ஆப்கான் திரைப்பட நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்டுள்ளார். தலிபான் எழுச்சியினையடுத்து சிலகாலம் தலைமறைவாக பாகிஸ்தான் சென்று வாழவேண்டிய நிர்ப்பந்தம் இவருக்கு ஏற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இவரது முன்னைய படைப்புக்கள் யாவும் தலிபான் ஆட்சியின்போது பறிக்கப்பட்டு விட்டனவென்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.
- துண்டுப் பிரசுரத்திலிருந்து...

காபூல் யுத்தத்தில் தந்தையை இழந்த ஒஸாமா எனும் 12 வயதுச் சிறுமியைச் சுற்றியே பின்னப்பட்டுள்ள இப்படத்தின் கதை, தலிபான் கட்டுப்பாட்டுக் காலங்களில் மதத்தின் பெயரால் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும், அக்காலப்பகுதியின் குரூரங்களையும், மக்களது அச்சங்களையும் பதிவுசெய்தபடி நகர்கின்றது.

'I can't forget; but i can forgive' எனும் மண்டேலாவின் வரிகளோடு படம் ஆரம்பிக்கும் விதமே மனதைக் கவர்ந்துவிடுகின்றமை குறிப்பிடத்தகுந்தது. கணவனையிழந்த ஒஸாமாவின் தாய் ஆஸ்பத்திரியொன்றில் பணிபுரிந்து வருகின்றார். தவிர்க்க முடியாத காரணங்களால் ஆஸ்பத்திரி மூடப்பட்டுவிட்ட நிலையில் அவரது வேலை பறிபோவதுடன், வருமானத்திற்கான மார்க்கங்களும் அடைபட்டு விடுகின்றன. ஆண்துணையின்றி பெண்கள் தெருவில் இறங்கவே தலிபான்கள் தடைவிதித்திருக்க, குடும்பத்து ஆண்களை யுத்தங்களில் பறிகொடுத்த பெண்கள் பட்டினியால் இறப்பதென்பது எழுதப்படாத விதியாயிற்று. இந்நிலையில், தன் மகள் ஒஸாமாவின் தோற்றத்தினை மாற்றுவதன் மூலம் அவளை ஒரு ஆணாக வெளியுலகத்திற்கு அடையாளப்படுத்தி தமது ஜீவிதத்தைக் கொண்டுசெல்லத் தீர்மானிக்கின்றார்கள் தாயும், ஒஸாமாவின் பாட்டியும். எதிர்பாலின அடையாளங்கள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட, அக மற்றும் புறச்சூழலின் அழுத்தங்களை ஒஸாமா எவ்வாறு எதிர்கொள்கிறாளென்பதை ஒரு அந்நியராக நின்று இனங்காண முயற்சித்திருக்கிறார், இயக்குனர். படம் பெண்ணிய பார்வையிலோ அல்லது அச்சிறுமியின் நோக்குடனோ நகரவில்லையென்ற குறைபாடுகள் ஒருபுறமிருக்க, மனிதநேயக் கண்ணோட்டத்துடன் இத்தகைய அக்கிரமங்களை வெளிக்கொணர்ந்த இயக்குனர் பாராட்டுக்குரியவரே.

இப்படத்தினைப் பற்றிய கருத்தாடல்களை விடவும், அதன் பின்புலம் பற்றிய ஆய்வே சுவாரசியமானதாகப் படுகின்றது.

2.

படம் முடிவடைந்ததும், சிறு கலந்துரையாடலொன்று இடம்பெறுவது வழக்கம். இம்முறை பங்குபற்றியவர்களனைவரும் உற்சாகமாக அவரவரது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். பொதுவான பார்வையில், பகிரப்பட்ட கருத்துக்கள் பெரும்பாலும் தலிபான்களையும், இஸ்லாம் மதத்தினையும் சாடுவதாகவே அமைந்திருந்தமை வருந்தவைத்தது. தலிபான்களும் மேலைத்தேயத்தின் அடக்குமுறைகளுக்கெதிராகப் போராடும் இன்னுமொரு (மதவாத) ஆயுதப்போராட்ட குழுதானென்பதை உணரத் தவறிவிட்டிருந்தார்களோ என்னமோ...

osamapubc

தலிபான்கள் தொடர்பான அனைத்துப் பிரதிவாதங்களும் ஏற்றுக்கொள்ளத்தக்கனவாயில்லை. அவர்களின் ஆட்சிக்காலத்தில் பெண்களெவரும் ஆண்துணையின்றி தெருவிலிறங்கக் கூடாதென்பது அவர்கள் வைத்த சட்டமாகவிருந்தது. ஆனால், இன்றும்கூட எத்தனையோ ஜனநாயக ஆட்சி நிலவுவதாகக் குறிப்பிடப்படும் நாடுகளில் இவை எழுதப்படாத சட்டங்களாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. நாட்டு நிலைமை, திருடர், காமுகர் மற்றும் இன்னபிற கறுப்பு மனிதர்கள் மீதான அச்சங்களைக் காரணங்காட்டிப் பெண்களை ஒடுக்குவது சர்வசாதாரணமாகவே இடம்பெற்று வருகின்றது. இவ்வெழுதப்படாத விதிகள் காலங்காலமாக மரபார்ந்த போலி விழுமியங்களின் மூலமாகவும், ஒழுக்காறுகளின் மூலமாகவும் எம்முள் ஊட்டி வளர்க்கப்படுகின்றன. இந்நிலைமை முன்னையதை விடவும் அபாயகரமானதென்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லையே...

உண்மையைக் கூறுவதானால்.., எம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தலிபான் உயிர்த்திருப்பதை எவராலும் மறுத்துவிட முடியாது.

மற்றும்படி - தமது ஆயுதப்போராட்டத்தினை வலுப்படுத்தும் முகமாக தலிபான்கள் இஸ்லாம் மதத்தின் பெயரை உபயோகப்படுத்திக் கொண்டமைக்கு - ஒரேயடியாக இஸ்லாம் மதத்தினை மட்டும் குறைகூறவும் முடியாது. மத்திய காலங்களில், ஆயிரக்கணக்கான பெண்களை சூனியக்காரிகளென முத்திரை குத்தி அழித்தொழித்த கிறிஸ்தவ மதபீடமும், இன்றும் விதவைகளைப் படாதபாடுபடுத்தி வரும் இந்துமதமும் செய்யாத அநியாயங்களையா தலிபான்கள் செய்துவிட்டனர்.. சாதியின் பெயரால் இடம்பெறும் அக்கிரமங்களும்கூட இங்கு குறிப்பிடப்பட வேண்டியவைதான். கீழ்ச்சாதிப் பெண்ணாயிருந்தால் - 'பெண்' மற்றும் 'தாழ்ந்த சாதி' எனும் - இரு அடையாளங்களையும் காவித்திரிந்துகொண்டு, இரண்டின் பெயராலும் அடக்குமுறைக்கு ஆளாகவேண்டும்.

அண்மையில் தீபா மேத்தாவின் Water படம் பார்க்கவும் சந்தர்ப்பம் வாய்த்தது. படம் தேவைக்கும் மாறாக வர்த்தகமயப்படுத்தப்பட்டுவிட்டமை ஏமாற்றமடைய வைத்தாலும், இவ்வநீதிகளை ஏதேனுமொருவகையில் வெளிக்கொணர்ந்தமைக்காக தீபா மேத்தாவைப் பாராட்டத்தான் வேண்டும்.

மதங்களொன்றும் கடவுள்களால் அருளப்பட்டவையுமல்ல.. அதேவேளை, பெண்களை இப்படி இப்படித்தான் நடத்த வேண்டுமென எந்தக் கடவுளரும் வந்து ஆணையிட்டுச் செல்லவுமில்லை. அந்தந்தக் காலத்தின் தேவைகளுக்கேற்ப மனிதர்களுள் மகத்துவம் பெற்ற ஒரு சிலரால் அவை உருவாக்கப்பெற்று பரப்பப்பட்டிருக்கலாம். அதில் தவறேதுமில்லையெனினும், ஒவ்வொரு மதமும்.. அது சார்ந்த தத்துவங்கள் மற்றும் கருத்தியல்களும் அது தோற்றம் பெற்ற காலகட்டத்தின் அதிகார வர்க்கத்தின் வெளிப்பாடுகளாகவே அமைந்திருக்க முடியும். மாறிவரும் உலகின் போக்கிற்கேற்றபடி நெகிழ்ந்துகொடுக்காத எந்தவொரு மதமும் - மதம் மட்டுமல்ல.. அனைத்துமே - காலாவதியாகிவிட வேண்டியவைதான்.


3.
osamapubf

படத்தில் மிக மிகப் பாதித்த ஒரு காட்சி: ஒஸாமா எனும் அச்சிறுமியின் ஆள்மாறாட்டம் பிடிபட்டுவிட, விசாரணை நடாத்தப்பெற்று (சாட்சிகளெதுவும் இல்லாமலேயே.. இதுவும் மற்றுமொரு ஒடுக்குமுறையினைத்தான் சுட்டிக்காட்டுகின்றது. ஒரு ஆண் தண்டிக்கப்படுவதற்கு முன்னர் சாட்சிகளும், ஆதாரங்களும் பொதுமக்களின் முன் வெளியிடப்படுகின்றன. ஆனால், ஒரு பெண்ணுக்கு அவை தேவையில்லையெனும் மனப்பான்மையும், கடவுளுக்குத்தான் தெரியுமென்ற ரீதியிலான அவர்களது அலட்சியப்போக்கும் புலனாகின்றன) தண்டனையாக அவள் வயது முதிர்ந்த முல்லா ஒருவருக்கு திருமணம் செய்துவைக்கப்படுகிறாள். அவ்விரவில் அவர் விதவிதமான பூட்டுக்களைக் கொண்ட ஒரு கோர்வையினை எடுத்துக்கொண்டு வந்து அவள் முன் நீட்டுவார். இதில் உனக்குப் பிடித்ததைத் தெரிவுசெய்து கொள் என்றும் வினவுவார். இறுதியாக, அலங்கரிக்கப்பட்ட சற்றுப் பெரிய பூட்டொன்றை நீட்டி.. இதுதான் உனக்குப் பொருத்தமானது.. உனக்கே உனக்கானதென்று கூறும்போது... மனம் என்னிலிருந்து நழுவி காலவெளியின் எத்தனையோ அடுக்குகளைக் கடந்துவிட்டிருந்தது.

இன்றும் உலகில் ஒவ்வொரு பெண்ணுக்கும் நிகழ்ந்துகொண்டிருப்பதும் இதுவேதான்... எனினும் மிக மிக சாமர்த்தியமான முறையில்/திட்டமிட்ட முறையில் இவ்வொடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. ஆரம்பக் கல்வி தொடக்கம் தொழில்வாய்ப்பு, திருமண பந்தமென எதை எடுத்துக்கொண்டாலும் - இவையனைத்தும்தான் இன்று பெண்விடுதலை எட்டப்பட்டுவிட்டமைக்கான அளவுகோல்களாகின்றன என்பதையும் இங்கு கவனத்திற் கொண்டாக வேண்டும் - ஒரு பூட்டுக் கோர்வையை நீட்டி.. இதில் பிடித்ததைத் தெரிவுசெய்து கொள்வதற்கான சுதந்திரம் தான் இன்று நிலவுகின்றது. இதுதானாம் இன்றைய பெண்களின் சுதந்திரம். இதற்காகத்தானாம் பெண்கள் இத்தனை காலம் போராடிக் கொண்டிருந்தார்கள். இன்றைக்குச் சில தசாப்தங்களுக்கு முன்புவரை பூட்டுத் தெரிதலுக்கான சுதந்திரம் கூட இல்லாமலிருந்ததையெண்ணி, நவயுக பாஞ்சாலிகள் ஆசுவாசப்பட்டுக் கொள்ளலாம்.

கல்விமுறையாயிருந்தாலென்ன... தொழில்வாய்ப்பாயிருந்தாலென்ன... எதுவுமே பெண்களின் விடுபடலுக்கான மார்க்கங்களாக அமைவதற்கு இடங்கொடுக்காத வகையில் அவற்றைக் கட்டமைப்பதில் ஆண்மேலாதிக்கச் சமூகம் வெற்றிகண்டுள்ளது. ஒருவகையில், காலனித்துவ நாடுகளின் செயற்பாட்டிற்கு இதனை ஒப்பிடலாம். சுதந்திரம் கொடுக்கிறோம் பேர்வழியென முன்கதவால் நாட்டை விட்டு வெளியேறியவர்கள், பூகோளமயமாக்கலின் வழி பின்கதவால் மறுபடியும் நாட்டினுள் நுழைந்து, பொருளாதாரப் பண்பாட்டுச் சுரண்டலை மேற்கொண்டு வருவதற்கு ஒப்பானதுதான் ஆண்மேலாதிக்கமும். பூகோளமயமாக்கல், மார்க்ஸிசம் மற்றும் இன்னபிற ஆனானப்பட்ட கருத்தியல்களெவையும் பெண்களால் உருவாக்கப்பட்டவையல்லவென்பதால், ஜீவகர்த்தாக்களின் அதிகார ஸ்தானங்களைத் தக்கவைத்துக்கொள்ள அவை மற்றுமொரு அடக்குமுறைக்கான கருவியாகவே தொழிற்படுமென்பதில் எதுவித சந்தேகங்களுமில்லை.

கலந்துரையாடலின்போது ஒருவர் கூறிய கருத்தின்படி, இன்றைக்கு அத்தனை அரசு சாரா நிறுவனங்களும், வெளிநாட்டு அமைப்புக்களும் பெண்களை அதிகளவில் தம்மோடு இணைத்துக் கொண்டதற்கென்ன.. அவ்வமைப்புக்கள் எவற்றிலும் தீர்மானங்காளையெடுக்கக்கூடிய ஸ்தானங்களில் பெண்கள் அரிதிலும் அரிதாகவே காணப்படுகின்றனர். இத்தகைய ஸ்தாபனங்களில் பெண்கள் பயன்படுத்தப்படுவது - ஒரு கண்ணாடிப்பெட்டி பொம்மையைப் போல - தாம் பாலினச் சமத்துவத்தினைப் (Gender Equality) பேணுகின்றோமெனக் காட்டிக்கொள்ளவும், வெளிநாடுகளிலிருந்து நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் மட்டும்தான். இதனை பொதுமைப்படுத்த முடியாதாதலால் இது ஒருவித Radical Thinking எனவும் கூறலாமெனினும், ஒரு தீவிரப் பெண்ணியவாதியின் பார்வையில், ஆண்கள் இத்தகைய கருத்துக்களை முன்வைப்பதென்பது சமூகத்தில் தம்மை முற்போக்குவாதிகளாகக் காட்டிக்கொள்ளவும், சிந்திக்கத் தெரிந்த பெண்களைக் கவரவும் தானெனவும் கருதிக்கொள்ள இடமுண்டு. அகச்சூழலைச் சார்ந்த இத்தகைய முரண்கள் - அலட்சியப்படுத்தவும் முடியாத.. பொதுமைப்படுத்தவும் இயலாத - இடியாப்பச் சிக்கலானவை.


4.

படத்தின் பின்னணியிலான அரசியலும் கலந்துரையாடலின்போது முக்கிய இடம்வகித்திருந்தது. இயக்குனர் தான் சார்ந்த சமூகத்தின் மீதான விமர்சனங்களை முன்வைக்கவே எத்தனிருக்கிறாரெனினும், அதனை மேலைத்தேய ஊடகங்கள் - தலிபான் எதிர்ப்பு மற்றும் முஸ்லிம் மறுப்புக் கோஷங்களுக்கு - சார்பாகப் பயன்படுத்திக் கொள்ளவும் இப்படம் வழிவகுத்து விட்டிருந்தது. இப்படத்திற்குச் சர்வதேச ரீதியாகப் பரவலான கவனம் வழங்கப்பட்டமையையும், சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டமையையும் இதன் நீட்சியாகக் கொள்ளலாம்.

சிவகுமார் கூறியதன்படி, படைப்பாளிகளைப் பொறுத்தவரை இது கத்தியின் நுனியில் நடக்கும் முயற்சியே.


5.

எது எவ்வாறிருப்பினும், சிறுவர்கள் மத்தியில் பாலினப் பேதங்கள் நிலவுவதில்லை; வளர்ந்தோராலேயே அவை வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றனவெனும் நிதர்சனமான உண்மையை இப்படம் எடுத்துக்காட்டுகின்றமையும், ஒஸாமாவுக்கும் அவளது தோழன் எஸ்பான்டிக்குமிடையிலான உறவு எவ்விதத்திலும் கொச்சைப்படுத்தப்படாமல், உணர்வுகளை வருடிச் சென்றமையும் குறிப்பிடத்தகுந்தன.

சிறுவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவோ...