Tuesday, April 11, 2006

சபிக்கப்பட்ட தேவதைகள் - ஓர் உள்ளுறை உவமம்


கடற்கரை மணலில் அடியெடுத்து அடியெடுத்து
கால்புதைய நடக்கின்றேன்..,
தனித்த பயணத்தின் ஏக்கங்களோடு;
அதன் இருத்தல்களோடு;
இன்மைகளோடு.

பேசுவதற்கும், சொல்வதற்கும்
எதுவுமேயற்றுப்போன பொழுதுகளின் நீட்சியில்..
தெறித்துச் சிதறுகின்றது..,
எனது 'நான்'.

என்னவும் சொல்லிக்கொள்ளுங்கள்..
உங்களது வெறுப்பைத் தூண்டிக்கொண்டிருக்கும் அவளை..,
என்னுள் ஒருத்தியை..
எப்படித்தான் தேர்ந்தெடுத்துக் கொல்வேன், நான்?


ஒரு கதைசொல்லியின் கதை

இன்றைக்குச் சிலகாலத்துக்கு முன்புவரை நானொரு புகழ்பெற்ற கதைசொல்லியாக இருந்தேன். சாகாவரம்பெற்ற யுகபுருஷர்களைப் பற்றிய எண்ணற்ற கதைகள் என் கைவசமிருந்தன. எனது ஒவ்வொரு வார்த்தையும் ஆறுதலளிக்கும் பாலைவனத்துச் சோலையாகவும்.., வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகவும், துருவ நட்சத்திரமாகவும் விளங்கிற்றென்கிறார்கள். அதற்காக நான் பெருமிதப்படவில்லை. ஆனால், ஆயிரமாயிரம் துருவ நட்சத்திரங்களைத் தோற்றுவிக்கும் வல்லமை படைத்தவளுக்கு ஒற்றை நிலவின் பிரகாசத்தைப் பிரதியெடுக்க முடியவில்லையேயென்ற வெட்கத்துடனும், அவமானத்துடனும் என்னைப்பற்றி.. என் சகோதரிகளைப்பற்றி நான் பேசத்தொடங்கிய பொழுதொன்றில், அனைவரது செவிப்பறைகளும் தடித்த சவ்வுகளால் மூடப்பட்டு விட்டதைக் கண்ணுற்றபோதோ அதிர்ந்தே போனேன். சவ்வுகளின் தடிப்பு எவ்வளவாக இருந்ததென்றோ, அதன் தோற்றுவாய் எதுவென்றோ என்னிடம் கேட்காதீர்கள். விடைகளைத் தெரிந்துகொண்டே நீங்கள் என்னிடம் குறுக்கு விசாரணை செய்யும்போது.., நான் மௌனமாகிவிடவே விரும்புவேன்.

ஆனாலுமென்ன.., இன்னமும் உங்களுக்குச் சொல்வதற்கென என்னிடம் சில கதைகள் எஞ்சியிருக்கத்தான் செய்கின்றன.


கதை - தொலைந்த காடுகளும் உதிர்ந்த சிறகுகளும்

(தோற்றுவாய்கள்)

ஒருகாலத்தில் இதே காடுகளில்தான் நானும் வசித்து வந்தேன். அப்போதெல்லாம் காட்டுச் சூரியன் மறைவதில்லை... அதனால் உதிக்கவேண்டிய அவசியமும் அதற்கிருக்கவில்லை. காட்டு நிலாக்களின் வதனங்களில் கறைகளிருந்ததாக எனக்கு நினைவில்லை. ஒருவேளை முதுகிலிருந்திருக்கக்கூடும்... என்னைப்போலவே காட்டின் எல்லைகளைக் கடந்து வசிக்க ஆரம்பிக்கின்ற எவரும் விரைவிலேயே தெரிந்துகொள்வர்.., காடுகளைக் கடந்தவருக்கு நிலவின் வதனத்தைப் பார்க்கக் கொடுப்பினையில்லையென்று.

வனதேவதைகளற்ற எந்தக்காடும் முழுமையடைவதில்லை. காட்டில் வசித்த காலங்களிலும், பின்னரும்கூட வனதேவதைகள் பிறப்பிலேயே தோன்றுகிறார்களென்று நினைத்துக் கொண்டிருந்தேன். எனதந்தக் கற்பிதம் நியாயப்பாடுகளை நிராகரித்து விட்டிருந்தது. உங்கள் காடுகளில் அந்திசாயத் தொடங்குகின்றபோது நீங்களும் புரிந்துகொள்வீர்கள்:

வனதேவதைகள் தாமாகவே அவதரிப்பதில்லை; கடவுளர்களின் சாபங்களோடு அவர்கள் தோற்றுவிக்கப்படுகிறார்கள்.


(கதையும் காட்சியும்)

'யாமிருக்க பயமேன்' என்ற தோரணையுடன் வீற்றிருக்கும் கடவுளரை நோக்கி மறுபடியுமொருமுறை கையெடுத்துக் கெஞ்சுகின்றேன்.., இன்றைக்கு மட்டுமாவது அவனைச் சந்திக்கக் கூடாதென. அவன் செத்தொழிய வேண்டுமென நேர்த்திவைத்து, அவ்வேண்டுதல் கைகூடாமற்போனதில் அவனது கைமுறிய வேண்டும்.. காய்ச்சல் வந்து படுக்கையில் கிடக்க வேண்டும்.. என்றவாறாகக் குறைந்து கொண்டே வந்து இன்றோ, சந்திப்பைத் தவிர்த்தால் போதுமென்ற நிலைக்கு இறங்கிவிட்டதென் நம்பிக்கை. புன்னகையுடன் வீற்றிருக்கும் கடவுளர் மனிதவுணர்வுகளைப் பொருட்படுத்துவதில்லை... எவரின் ஆசீர்வாதத்துடனோ அவன் வந்து சேர்கிறான், ஒவ்வொரு நாளும்.

இன்றைக்கும் இதோ வந்துவிட்டான் நீட்டிய கைகளுடன்.., கடவுளரின் முகத்தில் தவழும் அதே புன்னகையோடு. வழமைபோல் எனை இறுக அணைத்துக்கொள்ள முயலும் அவன் பிடியிலிருந்து விடுபட முயற்சிக்கிறேன். நான் திமிறத் திமிற.. அப்போதுதான் குருத்துவிடத் தொடங்கியிருந்த இளமார்புகள் மேலும் மேலும் அவன் மார்பில் அழுந்தலாயின. அருவருப்பு... அசிங்கம்... மூச்சுமுட்டத் தொடங்குகிறது எனக்கு. என்னை விட்டுவிடு.. விட்டுவிடு.. அடிவயிற்றிலிருந்து கிளர்ந்தெழுந்த வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் சிக்குண்டு உயிர்ப்பிழந்து விடுகின்றன.

இல்லை... இது சகோதர பாசம்.., வாஞ்சை.., இன்னும் என்னவென்னமோ... இதிலிருந்து விடுபட நான் முயற்சிக்கக்கூடாது.

அவன் பேசத்தொடங்கி விட்டிருந்தான். இன்னமும் அவனது 'அன்புப்பிடிக்குள்' வலுவாகச் சிக்கியிருந்தது நானற்ற எனது உடல். நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்... தோளிற் கிடந்த கை, முதுகு வழியாக மெல்ல மெல்ல கீழே இறங்கத் தொடங்குகின்றது. முதுகுத்தண்டு ஒருகணம் சிலிர்த்துக் கொண்டது. அருவருப்பு... அசிங்கம்... மூச்சுமுட்டத் தொடங்குகிறது எனக்கு. விரல் நுனிகளிலிருந்து பரவிய அருவருப்பின் ரேகைகள் முதுகெங்கும் விரவிச்செல்கின்றன. இன்னும் இன்னும்...

இல்லை... இது சகோதர பாசம்.., வாஞ்சை.., இன்னும் என்னவென்னமோ... இதிலிருந்து விடுபட நான் முயற்சிக்கக்கூடாது.


(முற்றுப்பெறாத 'முற்றும்'கள்)

இப்படித்தான் ஒருத்தியின் காடு சூறையாடப்பட்டது.., நான் பார்த்துக் கொண்டிருக்கத்தக்கதாக. தேவதையாக வாழ்தலென்பது என்னவென்று தெரியாத வயதுகளிலேயே வனதேவதையாக வாழுமாறு அவள் கடவுளரால் சபிக்கப்பட்டாள்.

நீங்கள் காடுகளைப்பற்றிப் பேசுகிறீர்கள்.
எனக்குத் தெரிந்த எந்த வனதேவதையும் தொலைந்துபோன காடுகளைப்பற்றி பேசவிரும்புவதில்லை.

நீங்கள் சிறகுகளைப்பற்றி அக்கறைப்படுகிறீர்கள்.
எனக்குத் தெரிந்த எந்த வனதேவதையும் உதிர்ந்த சிறகுகளைப்பற்றி அக்கறைப்படுவதில்லை.

4 comments:

ஒரு பொடிச்சி said...

இதுவும் கடந்த பதிவுகளும் சிறு கதை(கள்) போல இருந்தது(ன). மொழி நல்லா வருது...

டிசே தமிழன் said...

/வனதேவதையாக வாழுமாறு அவள் கடவுளரால் சபிக்கப்பட்டாள்./
வனதேவையாக இருத்தல் பலத்தையும் பாதுக்காப்பையும் தருமென்றால் ஏன் அதைச் 'சபிக்கப்பட்டதாய்' கொள்ளவேண்டும்? தேவதைகளாகவும் தெய்வங்களாகவும் இருப்பதை உடைத்தெறிந்து உக்கிரமுள்ள வனதேவதைகளாக மாறுவது கூட பெரிய விடயம்ல்லவா?

நிவேதா said...

நன்றி, பொடிச்சி.

உங்கள் வாதம் நியாயமானதேயெனினும், தேவதையாக வாழ்வதும்.., சாத்தானாக வாழ்வதும் அவரவர் விருப்பமேயொழிய வலிந்து திணிக்கப்படுவது.. அது வரமாயிருந்தாலுமேகூட ஒருவித சாபம்தானே டி.சே.

ஒரு வனதேவதை, எத்தனை இழப்புக்களினூடு தன் இருப்பைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டியிருக்கின்றது. சராசரி வாழ்வை மறுப்பதும், சமூகத்தினின்று அந்நியமாவதும் எளிதான விடயங்களல்லவே.

தாமாகவே அவதரிப்பவர்களைப்பற்றி எதுவுமே சொல்லவேண்டியதில்லை. ஆனால், தோற்றுவிக்கப்படுபவர்கள் குறித்தும், கடவுளர்கள் குறித்தும் பேசுவதற்கு எவ்வளவோ இருக்கின்றது.

paazh said...

ரொம்ப நல்லா இருக்கு...