Friday, December 22, 2006

சிதைதல்

தொண்டைக்குள் சிக்குண்ட முள்ளென
நெஞ்சுக்குள் நெருடும்
என்னமோவொன்று
சமயங்களில்
நீ உடைத்தெறிய முயலும்
நெடும் மௌனங்களினூடு
தகர்ந்து போவது
என் முள்ளென்புகளும்தான

நெருக்கமான உரையாடல்கள்
அதன்பின்னரான விடைபெறுதல்கள்
உணர்வுகளை அசுரபசியுடன்
பிடுங்கித் தின்னும்
இந்தக் காதலுடன்
தொலைபேசி கைநழுவ
கால்களினிடையே முகம்புதைத்து
விம்மி விம்மியழும் பொழுதுக்கள்
இனிமேலும் வேண்டாமெனக்கு..

எதுவும் பேசிக்கொள்ளாத கணங்களின்
வலி தெறிக்கும் குரலில்
நினைப்பதனைத்தையும்
சொல்லிவிட முடிந்திடுமாயின்
சிதைதல் சிலகாலங்களுக்கேனும்
தள்ளிப்போகக்கூடும்

காத்திருத்தல்களில் வந்துமுடியும்
கனவுகளின் கனத்த முடிச்சுகளுடன்
தன் வழி ஏகுதலும்
பிரியம் கூற விழைதலும்
பழம் பஞ்சாங்கங்களாய்க் கசக்க
வெறும் வார்த்தைகள்
உன்னில் சலனங்களை
ஏற்படுத்தக் கூடுமோவென்ற
சந்தேகங்களோடு
முன்புபோல் எதுவும்
ஆறுதலளிப்பதாயில்லை

விழிநீரை வீணாக்குவது மட்டுமே அழுகையாகின்
அழத்தோன்றினால்
அழுவதில் ஒன்றுமேயில்லைதான்
நீயற்ற வெறுமைகளின்
இறுக்கந்தளர்த்த வழியற்று
இரத்தங் கசியக் கசியப் பாடலுறுவதே
எனக்கான அழுகையாகிப் போனமை
நீயறிவாயா எனதன்பே.

21.12.2006

Monday, December 04, 2006

அகமெங்கும் பொழியும் முன்பனிக்கால மந்தாரங்கள்


1.

உதடுகள் இறுகத் தாளிடப்பட்டு
ஊடறுக்க முடியா மௌனங்களுடன்
வாழ்தலின் கனம்
உயிர்தின்னத் தொடங்கியவோர் பொழுதில்
கழற்றியெறிந்த கச்சையின்
வியர்வை தோய்ந்த பெண்மையின் வாசனையை
ஆழ உள்ளிழுத்து
குலுங்கிக் குலுங்கியழுதபடி,
ஏதுமற்ற வெளியில் குருதி துளிர்க்க
காற்றைக் கிழித்து சுழன்று கீழிறங்கும்
மனச்சாட்டையின் முறுக்கிய மொழியில்
என் முலைகளுக்கு நான்
பேசக் கற்றுக்கொடுத்தேன்

சுவாலைவிட்டு நிலவு எரிந்து
கருகும் பிணவாடை கவிந்திருந்த இரவதனில்
ஊர் கேட்ட முதற் குரல்:
"நான் மகத்தானவள்..."
என்பதாயிருந்தது
நட்சத்திரங்களும் எதிரொலித்து
அண்டசராசரமெங்கும் நிறைந்து வழிய
காம்புகளில் துளிர்த்த
முதல் துளியின் வாசனை
பறைசாற்றிப் போகும்
நான் மகத்தானவள்..
மகத்தானவள்..

மொழியின் லாவகம் கைவந்த மறுகணம்
காலங்கள் பற்றியதான
இல்லாமலேயே போய்விட்ட பிரக்ஞைகளோடு
வெறித்த கண்கள்
தெருவோரமெங்கும் நிலைகுத்தி நிற்க,
நொடிக்கொரு திசையில்
திரைகளை விலத்தியபடி
விட்டேத்தியாய் சிறகடித்துப் பறக்கும்
என்னொரு முலை..
சமூகத்தின் அடிவயிற்றைக் கீறிப்பிளந்த
தடயங்களைச் சேகரித்தபடி
நானுமொரு பெண்ணென்ற கெக்கலிப்புடன்
பின்தொடரும் மற்றொன்று..

இனியெதற்கு என் தயவு
முலைகளே பேசட்டும்..,
கழுத்தை நெரிக்கும்
'ஆம்பிளை'த்தனங்களைப் பற்றி..
கால்களைப் பிணைக்கும்
யுத்தச் சங்கிலியைப் பற்றி..
இன்னமும்,
அந்தரத்தில் அலைவுண்டிருக்கும்
என் எப்போதைக்குமான
கனவுகளைப் பற்றி...


2.

அனைத்தையும் களைந்தெறிந்து
கனவுகளோடு மட்டுமேயென
வாழ முற்படுவது
தேவலை போலவும்...
அவள் தந்த உடலுக்காகவும்,
நோயில் வீழ்ந்த தேசமொன்றில்
நிர்ப்பந்திக்கப்பட்ட வாழ்தலுக்காகவும்
கண்காணா பரப்பிரம்மத்தை
சபித்துச் சபித்து
தேறுதலடைவது போலவும்...
கட்டற்று பிரவகிக்கும் வார்த்தைகளை
அதன் போக்கிற்குப் பெருக்கெடுத்தோட
அனுமதிக்க மறுத்தவோர்
தனித்த இரவதனில்
எப்படியும் நெஞ்சு வெடித்து
என்றென்றைக்குமாக இறந்துபோவேன்
யாரும் எதிர்பாரா பிரளயமொன்றிற்கு வித்திட்டபடி...

03.12.2006