Thursday, January 25, 2007

கூன் விழுந்த சூனியக்காரியொருத்தி என் பெருங்கனவாயிருந்தாள்..!


கூனல் விழுந்த
எம் பொழுதுகளை
நிமிர்த்த வல்ல மகிழ்ச்சி
எதுவும் எவரிடமும் இல்லை
எல்லாவற்றையும் சகஜமாக்கிக்கொள்ளும்
அசாதாரண முயற்சியில்
தூங்கிக்கொண்டும்..
இறந்துகொண்டும்..
இருப்பவர்க்கிடையே
எனது நம்பிக்கைகளுடன்
தோற்றுக் கொண்டிருக்கிறேன்,
நான்.
- சிவரமணி

இதுகளுக்கெல்லாம் நான் விலையாக் குடுக்கத் துணிஞ்சது என்ட படிப்பையும், எதிர்காலத்தையும் தானென்றதை - அது எப்படி என்னால முடிஞ்சது என்ட கேள்விகளுக்குமப்பால் - என்னால நம்பவே முடியேல்ல.. என்ட இலக்கு எது, எனக்கு என்ன வேணுமென்பது எனக்கே தெரியாம இருக்கிற நேரம் நீங்களெப்படி உங்கள் இஷ்டத்துக்கு முடிவெடுப்பீங்கள்.. எல்லாமே தட்டையா, சம தளத்தில பயணிக்கிறதெப்படியென்டு தெரியுமா.. எப்பவாவது உணர்ந்திருக்கீங்களா.. தட்டையாவே மனசை வைச்சிருக்கிறது எப்படியென்டு.. அது ஏலாட்டி பிடுங்கிப் போடுறது எப்படியென்டாவது..


எனக்கு நிறைய நாளாவே இப்படியொரு ஆசையிருந்ததுதான்.. மனச அதுபாட்டுக்கு கதைக்க விடனும்.. அது கதைக்கிற ஒவ்வொன்டையும், அதுட ஒவ்வொரு கதறலையும் அதுட பாஷைல பதிஞ்சு வைக்கனும்.. எந்தளவுக்கு சாத்தியமென்டு தெரியாட்டியும் இப்படியும் ஆசையிருந்தது என்னட்ட.. என்டக்காவது என்ன முழுசா புரிஞ்சுகொள்ளுறதுக்கு ஆம்பிளையோ, பொம்பிளையோ யாராவது வருவினமென்டும், கடைசி வரைக்கும் என்னோடயே இருப்பினமென்டும் எப்படியொரு நம்பிக்கை அடிமனசுக்குள்ள இருந்திச்சோ அதுமாதிரித்தான் இதுவும்..

வெளியில சொல்லாட்டியும், எப்படி என்ன பற்றின ஸ்மார்ட் ஆன விம்பங்கள மற்ற ஆக்களிட்ட உருவாக்கப் பார்த்தாலும்.. எனக்குள்ள நான் எனக்கு பிடிச்ச ஒருத்தனோட எனக்கு பிடிச்ச மாதிரி.. சின்ன சண்டைகளோடயும், செல்லக் கோபங்களோடயும், அன்பு, காதல், காமம், இன்னும் என்னத்தோடயுமோ வாழ்ந்துகொண்டுதானிருந்தன்.. வெளியுலகம் என்னை வெறுப்பேத்துற நேரங்களில, எரிச்சல் எரிச்சலா வாற நேரங்களில நான் கட்டிலில கிடந்துகொண்டு எனக்குப் பிடிச்ச வாழ்க்கையை.. எனக்கு பிடிச்சவனோட வாழத் தொடங்கிடுவன்.. எங்களை யாரும் பிரிக்க ஏலாது.. யாராலயும் பிரிக்க முடிஞ்சதுமில்லை.. ஒவ்வொரு நாளும் விதவிதமா..

ஒருநாள் நாங்க மாடமாளிகையில இருப்பம்.. மற்றநாள் ஓலைக்குடிசைக்குள்ள இருப்பம்.. ஒருநாள் எங்களுக்குள்ள சண்டை வந்து அவன் என்னைவிட்டு எங்கேயோ போக, நான் மனசுடைந்து தற்கொலை பண்ண போவன்.. ஆனா அவன் எங்கிருந்தாவது எப்படியாவது ஓடி வந்து என்னை காப்பாத்திடுவான்.. சினிமா ஹீரோக்களைப்போல.. ஒருநாளும் என்ட கனவு வாழ்க்கையில நான் செத்ததில்லை.. அவனையும் சாக விட்டதில்லை.. வாழுறதுக்கு கனவு காணுவாங்களா மனுசர் சாகிறதுக்கு காணுவாங்களா.. எப்படியோ, அது எல்லாம் வெறும் கனவு இல்லாட்டி என்ட நினைப்பு மட்டும்தான் என்டு என்னால நினைச்சு கொள்ளமுடியேல்ல.. படுக்கிற நேரம் மட்டும்தானென்டு இருந்த அவனுடனான அந்த வாழ்க்கை பிறகு நான் விழிப்போட இருக்கிற நேரமும் தொடர்ந்தது.. எனக்கு அது பிடிச்சிருந்தது.. கொஞ்சம் இடைவெளி கிடைச்சாலும் நாங்கள் வாழத் தொடங்கிடுவம்.. அதுலயிருந்து எப்ப படுக்க போவமென்டு இருக்கும்.. அவனோட வாழுறதுக்கு.. என்ட தனிமையை யாரும் கலைச்சு போடுறது எனக்கு பிடிக்கேல்ல.. ஏனென்டா என்ட தனிமைய குழப்புற நேரம் அவங்கள் அவனையும் என்னட்டயிருந்து கலைச்சு போடுறாங்கள்.. உலகத்துல வேற எதையும்விட அவனை நேசிச்சன் என்டும் சொல்லலாம்.. இந்த இறுகிப்போன வாழ்க்கைலயிருந்து அவன் என்னைக் காப்பாத்தினான் என்ட ஒரு நன்றியுணர்வே போதுமாயிருந்தது அவன நேசிக்க..

அப்படி இறுகிப்போற மாதிரியோ, வெறுத்துப் போற மாதிரியோ என்ட வாழ்க்கைல என்னதான் நடந்ததென்டு சத்தியமா எனக்கென்டால் விளங்கேல்ல.. எனக்கு தெரிஞ்ச எத்தனையோ பேரை விடவும் எனக்கு அருமையான வாழ்க்கை அமைஞ்சிருக்கு.. நானும் சந்தோஷமாத் தானிருக்கிறன்.. இல்லாட்டியும் அப்படி பாவனை பண்ணிக்கொண்டிருக்க முடியுது என்னால..

எனக்கு ஏதாவது பெரிய வருத்தம் வாறமாதிரியும் என்ன சுத்தியிருக்கிற எல்லாரும் எனக்காக கலங்கிற மாதிரியும், நான் சாகக் கிடக்கிற நேரம் அழுறமாதிரியும் கனவு காணுறதில் அப்படியொரு விருப்பம் எனக்கு.. அதெல்லாம் உண்மையா நடக்கப் போறதில்லையென்டது தெரிந்ததால் சரி கனவாவது காணுவமென்டுதான்.. எல்லாரையும் அழவைச்சு பார்க்க அப்படியொரு விருப்பம்.. நான் வருத்தம் வந்து செத்து போனா நீங்க எனக்காக கவலைப்படுவீங்களா என்டு பழகுற எல்லாரிட்டயும் கேட்க வேணும் போல இருக்கும்.. சிலவேளை அவங்க செத்துப்போனா நான் எப்படியிருப்பனென்டும் நினைச்சு பார்க்கிறனான்.. நினைக்கிற நேரம் அழுகையொன்டும் வாறதில்லை.. யாருக்கு தெரியும் உண்மையா நடந்தால் வருமோ என்னமோ..

என்ட எல்லாத்தையும் ஒருத்தர் வந்து மாத்தி போட்டார்.. நம்பவே முடியேல்ல.. என்ட கனவுல என்னோடயே வருஷக்கணக்கா கூட இருந்தவனை முதல் வேலையா துரத்திப் போட்டார்.. உண்மையா நினைச்சு பார்க்கிறனான்.. கடைசியா அவனோட எப்ப வாழ்ந்தன்.. கடைசியா நாங்கள் இரண்டு பேரும் எப்படியிருந்தமென்டெல்லாம்.. ஒன்டும் நினைவுக்கு வருதில்ல.. இப்ப அந்த இடம் முழுவதையும் அவர் பிடிச்சுக் கொண்டிருக்கிறார்.. எல்லாத்துக்குள்ளயும் அவரத்தான் பார்க்கிறன்.. எப்பவும் அவரோடதானிருக்கிறன்.. சிலவேளை பைத்தியக்காரத்தனமா தோணும்.. ஆனா ஒவ்வொரு நிமிஷமும் நானும் அவரும் கதைச்சு கொண்டுதானிருக்கிறம்..

என்ட எல்லா இயலாமைகளையும், உணர்வுகளையும் தூக்கி தூக்கி அவருக்கு முன்னுக்கு எறிஞ்சு கொண்டிருக்கிறன்.. என்னட்ட வச்சிருக்க பிடிக்காததுகளையெல்லாம் சேர்த்து.. ஆக பயமாவுமிருக்கும் சிலவேளை.. அவரும் ஒரு மனுசர்தானென்றதை ஏன்தான் அடிக்கடி மறந்து போறனோ.. அவருக்கும் எத்தனையோ உணர்ச்சிகளிருக்கும். அது என்னோடதுக்கு எதிராய் போய்ட்டால்... எனக்கு எல்லாமே நான்தான்.. நான் மட்டும்தான்.. என்ட உலகம் தொடங்குறது என்னிலருந்துதான்.. எவ்வளவு சுயநலவாதி நான்.. (ஆனா அப்படியிருக்கிறதுலயும் என்ன தப்பு.. இங்க இருக்கிற சில நாசமா போனவங்களை விடவும் நான் சுத்தமா தானிருக்கிறன்...!) ஆனா அவர் அப்படியில்லையென்டுறதுதான் கஷ்டமாயிருக்கு.. அவரைப் பார்க்க பார்க்க பயமாயிருக்கு.. அவருக்கு நான் பொருத்தமானவளா.. அவர்ட அக்காவுக்கு, அவர் உலகத்துல அப்படி நேசிக்கிற அவாவுக்கு என்னை பிடிக்குமா.. என்ன செய்தால் அவாக்கு பிடிக்கும்.. அப்படி பிடிக்காமல் போனால் நான் என்ன செய்ய.. முதல் என்ட இந்த சின்னபிள்ளைத்தனங்களை விட்டு நான் கொஞ்சம் வளர வேண்டியிருக்கு.. எப்படி வளர்றது..

எனக்குத் தெரியும்.. என்ட விசர்த்தனங்கள்.. உலகத்துக்காக நான் போடுற வேஷங்கள்.. முகமூடிகள்.. திமிர்த்தனங்கள்.. அடிமைக்குணங்கள்.. எப்படிப் பார்த்தாலும் உள்ளுக்குள்ள நானுமொரு சாதாரண மனுசிதானென்ற உணர்வு என்னை சரியா காயப்படுத்துது.. அடியே விசரி.. என்டு யாரும் பேசினாலுமேகூட நீங்கல்லாம் எதிர்பார்க்கிற ஒருத்தியா நானில்லையென்டுதான் எல்லாரிட்டயும் சொல்லத் தோணுது.. உங்களுக்கு ஒருத்தி எப்படியிருக்கோணும்.. ஒண்டில் பவ்வியமான 'பொம்பிளை' மாதிரி அடங்கியொடுங்கி இருக்கோணும்.. இல்லாட்டில், எல்லாத்தையும் எதிர்த்துக்கொண்டு போராளியாய் இருக்கோணும்.. நான் ரெண்டாவுமில்லை..

எங்கையோ வாசிச்சனான்.. 'நான் உறுதியானவளாயிருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள், ஆனால் நிச்சயமாக நான் அப்படியிருக்கப் போவதில்லை..' நான் நானாத்தானிருப்பன்.., உங்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ.

...........

றோட்டில நடந்துவந்து கொண்டிருந்தன். யாரோ கொச்சையா பேசிக்கொண்டிருந்தினம், என்னைப் பார்த்துத்தான். எவனடா அவன் என்ட மாதிரி தோரணையோட திரும்பிப் பார்த்தன். அஞ்சு விரல்களக் காட்டிக்கொண்டு, வாறியாடி.. என்டு கேட்டான். அந்த அஞ்சுக்கு என்ன அர்த்தம் ஐநூறு ரூபாயா.. ஐயாயிரம் ரூபாயா.. போயும் போயும் ஐநூறோ, ஐயாயிரமோ பெறுமதியான உடம்புதானா இது.. சீ.. என்டு போனது.. அவ்வளவுதானா என்ட மதிப்பு.. ஒருக்கா குனிஞ்சு என்னை நல்லாப் பார்த்தன், அப்படிப்போலத்தான் தெரிந்தது. இல்லையில்லை, இந்தக் கேடுகெட்ட உடம்புக்கு இந்த ரேட்டே ஓவர்.. நல்லகாலம் கெதியா அங்கயிருந்து விலகிவந்துட்டன்.. அவன் வீசின அஞ்சு ரூபா சில்லறை உடம்பிலை 'படக்கூடாத' இடத்திலை பட்டு கீழை விழுந்திருந்தால் அவனுகள் இன்னும் கெக்கலிச்சு சிரிச்சிருப்பானுகள். பிறகு, அந்த சில்லறைக்கும் மவுசு கூடியிருந்திருக்கும்.

5' 9".. 5' 8".. 5' 7"....... 29, 28, 27...... இலக்கங்களெல்லாம் மலைப்பாம்பா மாறி கழுத்தை நெரிச்சுக் கொண்டிருக்கிறதாயொரு பிரமை. இன்னும் கொஞ்சம் உயரமா இருந்திருக்கலாம், நான். அப்பத்தான் சரியா, வடிவா இருந்திருக்கும். திரும்பத் திரும்ப டேப்பை வைச்சு அளந்து பார்க்கிறன்.. எல்லாம் ஒரு நப்பாசைதான்.. மூண்டாம் தரம் அளந்தா சிலவேளை கொஞ்சம் உயரமா காட்டுமோ என்டு.. ம்ஹூம்.. 5 அடிக்கு மேலை ஒரு சென்ரிமீற்றர் கூடப் போகுதில்லை.. இந்த அஞ்சடி வந்ததே அப்படி இப்படியென்டு ஆட்டித்தான். சரி இடுப்பைப் பார்க்கலாமென்டால் அது முப்பதிலை நிக்குது.. ஏங்கித்தான் போனன்.. கடைசியா பார்க்கிற நேரம் 29 ஆயெல்லோ இருந்தது.. இன்னும் கொஞ்சம் மெல்லிசாய் இருந்திருக்கலாம், நான். அப்பத்தான் சரியா, வடிவா இருந்திருக்கும். ஒருநாளைக்கு 100 தடவை ஸ்கிப்பிங் அடிச்சுப் பார்ப்பமே.. இந்த ஸ்கிப்பிங் அடிக்கிற நேரத்துக்கு படுத்துத் தூங்கினாலும் ஒரு கொஞ்சநேரம் கஞ்சா அடிச்ச மாதிரி நிம்மதியாய் கவலையெல்லாம் மறந்துட்டு இன்னொரு உலகத்திலை போயிருந்திடலாம். தூக்கம் என்னைப் பொறுத்தவரை கஞ்சா இல்லை கடவுளென்டும் சொல்லலாம். உடம்பைக் கொண்டாடோனுமென்டு சொல்லித் தந்தவனே நக்கலடிக்கேக்குள்ளை இப்படியெல்லாம் யோசிக்காமல் வேறென்னத்தைத்தான் யோசிப்பதாம்..?

பிறந்த ஊர் துரத்திப்போட்டுது.. வாழவந்த ஊரை வேறெவனோவெல்லாம் சொந்தங்கொண்டாடுறான்.. சொந்த நாட்டிலயே அந்நியமாப் போனம். என்ட பெயர் எனக்கு சொந்தமில்ல.. அப்பாட பெயருக்குப் பின்னாலதான் என்ட பெயரும் ஒளிஞ்சு நிக்குது, இன்னார்ட மகளென்ட மாதிரி.. நாளைக்கு அது இன்னார்ட மனுசியென்டு மாறிப்போகும். எதுவுமே எனக்கென்டில்லை, இந்த உடம்பைத் தவிர. பொக்கிஷமா நினைச்சுக் கொண்டிருக்கிற அதையும் வந்து கிண்டலடிச்சுக் கொண்டிருந்தா, அதுட பெயரை / ஒவ்வொரு உறுப்பையும் சொல்லி அவமானப்படுத்தினா எப்படியிருக்குமெனக்கு.. என்ட உடம்பு என்ட சொத்து. அத அழிக்கிறதும், மாத்துறதும், எவனுடனாவது பகிர்ந்துகொள்றதும் என்ட விருப்பம். எவனையும் அதில சொந்தங்கொண்டாட விடமாட்டன், எவனும் அதை கேவலப்படுத்துறதையும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டன்.

காலாகாலத்துக்கும் அடிமையைப்போல, அதை யாராவது ஒருத்தனுக்கு மாத்திரம் தானமா கொடுத்துக் கொண்டிருக்கிற பொம்பிளைகளை விடவும்.., தன்ட உடம்பை முதலீடாக்கி பணம் சம்பாதிக்கிற.. அதுட பெறுமதியையும், மதிப்பையும் உணர்ந்த பொம்பிளைகளை என்னால அதிகமா நேசிக்க முடியுறதும் இதனாலதானாக்கும்.

.........

மஹாஸ்வேதா தேவி எழுதின ஒரு சிறுகதை 'திரோபதி' என்டு அந்தமாதிரி பிடிக்கும்..

"இதெல்லாம் என்ன?" என்று கேட்கத் தொடங்கிய அவர் (ராணுவ அதிகாரி) மௌனமாகி விடுகிறார். திரௌபதி அவர் முன்னால் வந்து நிற்கிறாள். நிர்வாணமான தொடையிலும் அல்குலிலும் தோய்ந்து உறைந்துபோன ரத்தம். இரண்டு முலைகளிலும் ரணங்கள்.
"இதெல்லாம் என்ன..?" அவர் அச்சுறுத்தப் பார்க்கிறார்.


திரௌபதி மேலும் அருகில் நெருங்குகிறாள். இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு சிரிக்கிறாள். "நீ தேடிக்கிட்டு இருந்தியே அந்த தோப்தி மேஜேன் நான்தான்..! கவனிச்சுக்கன்னு சொன்னேயில்ல? அவங்க எப்படி கவனிச்சாங்கன்னு நீ பார்க்க வேண்டாமா..?"

"இவ துணியெல்லாம் எங்கே..?"

"உடுத்த மாட்டேங்கிறா சார்! கிழிச்சுப் போட்டுட்டா.."

திரௌபதியின் கரிய உடல் மேலும் அருகில் வருகிறது. அதிகாரிக்குப் புரியாத ஆவேசத்துடன் சிரித்துக் குலுங்குகிறாள். சிரிக்கச் சிரிக்க, குதறப்பட்ட உதடுகளிலிருந்து ரத்தம் பெருக்கெடுக்கிறது. இந்த ரத்தத்தைப் புறங்கையால் துடைத்துக்கொண்டு வானத்தைக் கிழிக்கும் பயங்கரக் குரலில் கேட்கிறாள்: "துணி என்ன துணி..? யாருக்கு வேணும் துணி? என்னை நிர்வாணமாக்க உன்னால முடியும். ஆனா என்னை திரும்ப உடுத்த வைக்க முடியுமா உன்னால? சீ... நீ ஒரு ஆம்பிளையா..?"

நாலா பக்கமும் பார்த்துவிட்டு ராணுவ அதிகாரியின் தூய வெள்ளை புஷ் ஷர்ட்டின் மேல் இரத்தம் கலந்த எச்சிலைத் 'தூ..' என்று துப்புகிறாள்.

"நான் பார்த்து வெட்கப்பட வேண்டிய ஆம்பள இங்க யாருமில்ல. என்மேல துணியைப்போட எவனையும் விடமாட்டேன். அப்போ என்ன செய்வே? வா.. என்னை கௌன்ட்டர் பண்ணு.. வா.. கௌன்ட்டர் பண்ணு.."

அருகில் நெருங்கி சிதைக்கப்பட்ட இரு முலைகளையும் அதிகாரியின் மேல் உரசுகிறாள். தனது ஆயுளில் முதல்முறையாக ஒரு நிராயுதபாணியான டார்கெட் முன்னால் நிற்க ராணுவ அதிகாரி பயப்படுகிறார். அது ஒரு அமானுஷ்ய பயம்.

வாசித்தபோது ஒன்டு மட்டும் விளங்கினது : நிர்வாணம் எனதும் - என்னைப்போன்ற இன்னும் பலரினதும் - மாபெரும் விருப்பு!

..........

இப்படியெல்லாம் பேசத்தொடங்கினா எங்கயிருந்தாவது எவனாவது கிளம்புவான். எல்லாரும் அணி சேர்ந்துட்டீங்க.. கொடி பிடிக்கிறீங்க என்டு.. எனக்கு முக்கியமாப் போனதைப்பற்றித்தான் என்னால பேசமுடியும். இண்டைக்கு கிடைக்கிற அனுபவங்களெல்லாம் சேர்ந்து, நாளைக்கு 'கணவன்' என்டுற அந்தஸ்தோட யாராவது தொடவந்தா கூட அருவருத்து நெளிவனோ என்ட எனக்கேயுரிய பயங்களெல்லாம் இந்த மரத்துப்போன மனுசங்களுக்குப் புரியுமென்டும் எதிர்பார்க்க ஏலாதுதான்.

ஒரு பொம்பிளையா இல்லை.. நானொரு சூனியக்காரியாப் பிறந்திருக்கோணும்.. தும்புக்கட்டைக்கு மேலை ஏறி கையிலை ஒரு துவக்கோட ஊரூரா அலையோணும். யாராவது என்னைப் பார்த்து, இதெல்லாம் வன்முறை.. அஹிம்சை வழியில் போராடு.. என்டெல்லாம் அட்வைஸ் பண்ணினாங்களென்டா அவங்க நானாகப் பிறந்து, நான் அனுபவிச்சதெல்லாத்தையும் அனுபவிக்கோணுமென்டு - அஹிம்சை நெறியில் - சாபமிடுவன். அதுக்குப் பிறகு பாருங்கோ.. எத்தனை சூனியக்காரிகள் தும்புக்கட்டைக்கு மேலை ஏறி கையிலை துவக்கோட அலையினமென்டு.

16 comments:

-/பெயரிலி. said...

/ஒரு பொம்பிளையா இல்லை.. நானொரு சூனியக்காரியாப் பிறந்திருக்கோணும்.. தும்புக்கட்டைக்கு மேலை ஏறி கையிலை ஒரு துவக்கோட ஊரூரா அலையோணும். யாராவது என்னைப் பார்த்து, இதெல்லாம் வன்முறை.. அஹிம்சை வழியில் போராடு.. என்டெல்லாம் அட்வைஸ் பண்ணினாங்களென்டா அவங்க நானாகப் பிறந்து, நான் அனுபவிச்சதெல்லாத்தையும் அனுபவிக்கோணுமென்டு - அஹிம்சை நெறியில் - சாபமிடுவன். அதுக்குப் பிறகு பாருங்கோ.. எத்தனை சூனியக்காரிகள் தும்புக்கட்டைக்கு மேலை ஏறி கையிலை துவக்கோட அலையினமென்டு. /

+

மதி கந்தசாமி (Mathy) said...

//ஒரு பொம்பிளையா இல்லை.. நானொரு சூனியக்காரியாப் பிறந்திருக்கோணும்.. தும்புக்கட்டைக்கு மேலை ஏறி கையிலை ஒரு துவக்கோட ஊரூரா அலையோணும். யாராவது என்னைப் பார்த்து, இதெல்லாம் வன்முறை.. அஹிம்சை வழியில் போராடு.. என்டெல்லாம் அட்வைஸ் பண்ணினாங்களென்டா அவங்க நானாகப் பிறந்து, நான் அனுபவிச்சதெல்லாத்தையும் அனுபவிக்கோணுமென்டு - அஹிம்சை நெறியில் - சாபமிடுவன். அதுக்குப் பிறகு பாருங்கோ.. எத்தனை சூனியக்காரிகள் தும்புக்கட்டைக்கு மேலை ஏறி கையிலை துவக்கோட அலையினமென்டு. //

:) good one nivetha.

சோமி said...

..............................

வாசித்தேன்.....எதை கோடிட்டுக் காட்டா எதைப்பற்றி பேச என்னிடம் தேங்கியிருப்பது கனத்த மௌனம் மட்டுமே.

மௌன மொழி... said...

நிவேதா உங்கள் ஆக்கங்கள் அனைத்தும் மிக நன்றாக இருக்கின்றன. ஆனால் அனைத்தையும் வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. முடிந்தபோது வாசித்துக் கருத்துக்களைப் பரிமாறுகின்றேன்.

நன்றிகளும் பாராட்டுக்களும்
அன்புடன்
வை.

DJ said...

நிவேதா, கனவுகள் மிகவும் அழகானவை. எனக்குப் பிடித்ததும் அதுவே :-). இக்கதைசொல்லியின் கனவுகளில் ஒருவர் இருப்பதும் அதை இன்னொருவர் வந்து கலைத்துப் போடுவதும்...அதை வாசித்தபோது முல்லை 'உயிர்நிழலில்' எழுதிய கதையொன்று நினைவுக்கு வந்தது. கணவனின் உறவுகளின்போது எல்லாம் அந்தப்பெண் தனக்குப் பிடித்த ஒரு இராஜகுமாரனை நினைத்துக் கொள்வது என்று.... அந்தக் கதை விரியும். மற்றும்படி எதன்பொருட்டும்/எவரின்பொருட்டும் தனது கனவுகளையும், விருப்புக்களையும் விட்டுக் கொடுக்காதீர்கள் என்று மட்டுமே கதைசொல்லிக்கு சொல்ல முடிகின்றது. இன்னும் தெளிவாய் உங்கள் மொழியில் சொல்வதென்றால்...
/நான் நானாத்தானிருப்பன்.., உங்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ./.

tamilnathy said...

அன்பு நிவேதா,

"ஒண்டில் பவ்வியமான 'பொம்பிளை' மாதிரி அடங்கியொடுங்கி இருக்கோணும்.. இல்லாட்டில், எல்லாத்தையும் எதிர்த்துக்கொண்டு போராளியாய் இருக்கோணும்.. நான் ரெண்டாவுமில்லை.."

என்ற உங்கள் வரிகளில் நான் என்னைப் பார்த்தேன். எல்லோருக்கும் வார்த்தைகள் வசப்படுவதில்லை. சொல்ல நினைப்பதை மிச்சம் மீதியில்லாமல் மிகச்சரியாக திருப்தியோடு சொல்லி முடிக்கமுடிவதில்லை. எல்லாப் படைப்புகளுமே மனசில் தனக்கென ஏதோவொன்றைத் தக்கவைத்துக்கொண்டே எழுத்தாக வருகிறது. ஆனால்,உங்கள் எழுத்துக்களில் ஒரு முழுமையைக் காண்கிறேன். வாசிக்கும்போது அற்புதமான உணர்வை அடைகிறேன். இந்தப் பின்னூட்டங்கள் பற்றி சிலர் ஏதோ ஏதோவெல்லாம் சொல்கிறார்கள். அதனால் யாருக்குப் பின்னூட்டமிடப் போனாலும் ஒரு தயக்கம் வந்துவிடுகிறது. ஆனால் 'எனக்குப் பிடித்திருக்கிறது'என்பதை 'எனக்குப் பிடித்திருக்கிறது'என்று சொல்லாமல் வேறெப்படிச் சொல்வது நிவேதா! அருமையாக எழுதுகிறீர்கள். 'அருமை'யாகத்தான் எழுதுகிறீர்கள்.

நிவேதா said...

நன்றி, -/பெயரிலி! பின்னூட்டம் வந்ததுமே இந்தக் குறியீட்டைத்தான் உற்றுக் கவனித்தேனாக்கும், விழிபிதுங்கிப் போகும் வரை..;-)

மதி, சோமி, மௌனமொழி.. பின்னூட்டங்களுக்கு மிக மிக நன்றி. 'அடி.. கெட்டிக்காரி..' என்று செல்லமாய்க் கன்னங்கிள்ளி முதுகையும் தட்டிக்கொடுப்பதாக உணர்கிறேன். சிறு வயதிலிருந்தே அதுதான் எனது மிகப்பெரும் விருப்பமாயுமிருந்தது.. இப்போது மட்டும் என்னவாம்..? நன்றி!

பின்னூட்டத்திற்கு நன்றி, டிசே. கனவுகள் ஒருவகையில் இவ்வுலகிலிருந்தான மிகப்பெரிய தப்பித்தலாயமைவதையும் மறுக்க முடியாதுதான்.. என்றாலும் அவை அழகாக மட்டுமே இருந்துவிடுவதில்லைதானே.. கதைசொல்லியின் கனவுகளில் வாழ்ந்துவந்த ஒருவனை இன்னொருவர் வந்து கலைத்து விட்டிருக்கலாம். ஆனாலும், யதார்த்தம் கலையும்போது கனவுகள் மீளத்தான் செய்யும்.. அப்போது அதை ஆறுதல் என்பீர்களா இல்லை வலி என்பீர்களா.. ம்ம்ம்.. எது எப்படியிருந்தாலும் கனவுகள் விட்டுக்கொடுத்துவிட முடியாதனதானில்லையா..

நன்றி, தமிழ்நதி.. நேரில் பழகியறிந்த ஒருவர் எனது எழுத்துக்களை வாசித்து தனது கருத்துக்களையும், பாராட்டுக்களையும் பகிர்ந்து கொள்கிறாரென்பதனாலோ என்னமோ.. உங்கள் பின்னூட்டங்களைப் பார்க்கும்போது ஏனோ ஒருவிதப் பரவசம் வந்து தொற்றிக் கொள்கிறது. என் 'சுயரூபம்' அறிந்தவர்களில் ஒருவரல்லவா நீங்கள்..;-)

ஆனால், உண்மையைக் கூறுவதாயின் எனது எழுத்துக்களில் என்னால் ஒருபோதும் முழுமையைக் கண்டடைய முடிந்ததேயில்லை. என்ன சொல்ல வந்தேன்.. என்னத்தை சொல்லியிருக்கிறேனென்ற கேள்விகள் எழாமல் என்னால் ஒருபோதும் மீள்வாசிப்புச் செய்யமுடிந்ததுமில்லை. உண்மைதான்.. தனக்கான சில மர்மங்களோடு படைப்பு தொக்கி நிற்பதுதான் சமயங்களில் இன்னுமதிகமாக எழுதத் தூண்டுகிறதாக்கும்.

செல்வநாயகி said...

//ஒரு பொம்பிளையா இல்லை.. நானொரு சூனியக்காரியாப் பிறந்திருக்கோணும்.. தும்புக்கட்டைக்கு மேலை ஏறி கையிலை ஒரு துவக்கோட ஊரூரா அலையோணும். யாராவது என்னைப் பார்த்து, இதெல்லாம் வன்முறை.. அஹிம்சை வழியில் போராடு.. என்டெல்லாம் அட்வைஸ் பண்ணினாங்களென்டா அவங்க நானாகப் பிறந்து, நான் அனுபவிச்சதெல்லாத்தையும் அனுபவிக்கோணுமென்டு - அஹிம்சை நெறியில் - சாபமிடுவன். அதுக்குப் பிறகு பாருங்கோ.. எத்தனை சூனியக்காரிகள் தும்புக்கட்டைக்கு மேலை ஏறி கையிலை துவக்கோட அலையினமென்டு. //

:) good one nivetha.

நிவேதா said...

நன்றி, செல்வநாயகி!

ஆளாளுக்கு இதையே மேற்கோளிட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. ம்ம்ம்..;-)

எத்தனையோ பதிவுகளில் பக்கம் பக்கமாய் எழுதியும் சொல்ல முடியாமற் போனதை இந்த ஒரு பந்தி எடுத்துக்காட்டிவிட்டதுபோலும்..

sooryakumar said...

அன்பு நண்பி
இதை இந்த படைப்பை ஒரு சஞ்சிகையில் பிரசுரிக்க உங்கள் அனுமதி தேவை(அது மஞ்சல் பத்திரிகை அல்ல என்பது மட்டும் இப்போதைய உங்கள் தரவு)
நீங்கள் ஒன்றும் யோசிக்க வேண்டாம்.
ஆம் என்று சொல்லுங்கள்....ப்ளீஸ்.

நிவேதா said...

நன்றி, சூர்யகுமார்!

சஞ்சிகையில் பிரசுரிக்குமளவுக்கு இதில் என்ன இருக்கிறதென்பது தெரியவில்லை. இருந்தாலும், எனது எழுத்தினைப் பிரசுரம் செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு முன்பு அச்சஞ்சிகை தொடர்பான முழு விபரங்களையும் எதிர்பார்க்கும் உரிமை எனக்கிருக்கிறதுதானே.. மஞ்சள் பத்திரிகையல்லவென்று மட்டும் சொல்லி தப்பித்துக்கொள்ளப் பார்க்காதீர்கள்..:-)

Anonymous said...

hey man, udhellam ennendu freud ida bashaiyila vilangapaduthadde? :-)

IIஒரு பொடியன்II said...

அன்பின் நிவேதா இந்த இடத்தில் எதை எழுதினாலும் தட்டிக்கொடுப்பதாகத்தான் புரிந்து கொள்ளப்படும்.இவ்வளவு விரிவாகச் சிந்திக்கும் ஒரு"பெட்டைக்கு" தட்டிக் கொடுத்து வளர்த்துவிட இன்னும் என்ன இருக்கு.முழுமையை நோக்கிய பயணங்கள்தான் சுவாரசியமானவை முழுமையல்ல. நீங்கள் அதை நோக்கிப் பயணித்துக் கொண்டேயிருங்கள்

மனித உடலைக் கொண்டாடுவது என்பதும் இன்னொருவரின் கொண்டாட்டத்திற்குத் தயார்ப்படுத்துவது என்பதும் இருவேறு முரண்புள்ளிகள்.தன்னால் கொண்டாடப்பட முடியாத உடலை இன்னொருவரின் கொண்டாட்டத்தை எதிர்க்கும் ஆயுதமாகப் பயன்படுத்தல் என்பது சமகாலத் தமிழ்க் கவிதைகளில் செவ்வனே பாடுபொருளாக்கப்படுகின்றது.

இந்திய இராணுவம் தங்கள் மீது செலுத்திய பாலியல் வன்முறைக்குப் பதிலடியாக மணிப்பூர் பெண்கள் தெரிவு செய்தது நிர்வாணம்.முகத்திலறையும் நிர்வாணம்

நிவேதா said...

நன்றி அனானிமஸ்,

நானும் அந்த ப்ராய்டைத் தான் நெடுங்காலமாக தேடிக் கொண்டிருந்தேனாக்கும்:-) தெரிந்தவாளெல்லாம் ப்ளொக் வாசிக்க வந்தால் இதுதான் ப்ரொப்ளம்..

பின்னூட்டத்திற்கு நன்றி, ஒரு பொடியன்!

தட்டிக் கொடுப்பதோ, தடக்கி வீழ்த்துவதோ.. எல்லாமும்தான் பிடித்திருக்கிறது. வலைப்பதிவெழுதத் தொடங்கிய ஆரம்பத்தில் இந்தப் பின்னூட்டங்கள் மிகவும் அசௌகரியமாக உணரவைத்தன. நாட்குறிப்புகள் எழுதிய பழக்கத்துடன் எழுத வந்தவளுக்கு அதைப் பலரும் வாசித்து போதாக்குறைக்கு கமெண்டும் அடித்தால் எப்படியிருக்கும்..? தற்போதோ அனைத்தையும் இரசிக்கப் பழகியாயிற்று..:-)

நீங்கள் கூறியது போல.. முழுமையையும், பரிபூரணத்தையும் நோக்கிய பயணங்கள் தான் எம் இன்றைய இருப்பினைத் தீர்மானிக்கின்றனவாயிருக்க வேண்டும். முழுமையை அடைவதென்பது.. எவராலும் சாத்தியப்படக்கூடுமென எனக்குத் தோன்றவில்லை..

'நிர்வாணம் எனது மாபெரும் விருப்பு' என்ற வரிகளை எழுதிக்கொண்டிருந்தபோது மனது முழுக்க நிறைந்திருந்தது.., மணிப்பூர் பெண்களின் போராட்டம் குறித்தான ஒரு டொக்கியூமென்டரியும் (நிகரி திரைப்பட வட்டத்தினரால் திரையிடப்பட்டிருந்தது), மாலதி மைத்ரியின் 'நிர்வாணமே ஆயுதம்' என்ற பத்தியும்தான்.

உடலைக் கொண்டாடுவதென்பது உடலை அதனதன் இயல்புகளோடு அனுமதிப்பதும், மதிப்பதும். பிறரின் கொண்டாட்டத்திற்குத் தயார்படுத்துவதென்பது, அதற்கான வரையறைகளுடன் பொருந்திப் போகும்படி உடலை மாற்றியமைப்பதும், ஆட்டிப் படைப்பதும். அந்தவகையில் கொண்டட்டத்திற்கான கருவியையே ஆயுதமாக்கிப்போன மணிப்பூர் பெண்களின் போராட்டம் மிகவும் கவர்ந்திருந்தது.

"அதுவொரு பயம்.. அமானுஷ்ய பயம்..":-)

Arasi said...

after i read this i feel like my secret feelings and my own dreamworld are approved!!
this column may not make everyone feel the same, but makes me feel good!!
(wanted to leave this in tamil but haven't figured out how)

Nila said...

ம்ம்ம்ம்.... !