Friday, October 12, 2007

ஒரு துண்டும் சில தகடுகளும் குறித்து...

'நச்சுப் பொய்கையொன்றின் நடுவே ஒரு செந்நிறத் தாமரை பூத்தது. அதுக்கு தான் *வெடிபலவன் மாதிரி இருக்கவேண்டுமென்று விருப்பம். தன்ரை கண்ணைக் குத்துற சிவப்பு அதுக்கு பிடிக்கேல்லை. வெடிபலவன் மாதிரி வெள்ளையாய் இருக்கோணும். தன்ரை கால் சேத்துக்குள்ளை புதைஞ்சிருக்கிறதும் அதுக்கு பிடிக்கேல்லை. வெடிபலவன் மாதிரி கால்கள் பற்றின உணர்வேயில்லாமல் பறந்து திரியோணும்.

தண்ணியில் கழுவிக் கழுவி தன்ரை சிவப்பில் கொஞ்சத்தை ஒருவழியா போக்கிக் கொண்டது. சரியா நொந்ததென்டாலும் தன்ரை காலை சேத்துக்குள்ளையிருந்து பிடுங்கியும் கொண்டது அந்தப் பிடிவாதம் பிடிச்ச தாமரை.

இப்ப அது வெள்ளையில்லை, ஆனா சிவப்பாவும் இல்லை. இப்பவும் அதாலை பறக்க முடியேல்லை, ஆனா ஒரே இடத்தில் முந்திமாதிரி புதைஞ்சும் இல்லை.

அது முக்கியம்.

தண்ணிக்குள்ளை தன்ரை பாட்டுக்கு மிதந்து திரிய முடிஞ்சது. அந்தமட்டில் அதுக்கு சந்தோஷம்தான்.'


ஏதோவோர் புள்ளியிலிருந்து தொடங்கியாகத்தான் வேண்டும், அல்லது கோட்டிலிருந்தாவது. ஒரு கதையெழுதவென உட்கார்ந்தேன்.. அந்தக் கதை என் மூளையிலிருந்து தன்னை நிகழ்த்திக்கொள்ளத் தொடங்கியது.

..................

மேசையின் மேலிருந்த அழைப்பிதழை அவள் வெறித்துக் கொண்டேயிருந்தாள். கணங்கள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்தியாலங்களாகி, மணித்தியாலங்கள் நாட்களாகி, நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி, வருடங்கள் யுகங்களாகி காலம் அவள் கண்ணெதிரே ஒரு நீர்த்திவலையென உருண்டோடிக் கொண்டிருந்தது.

இந்தத் திருமணத்துக்கு கட்டாயம் போகத்தான் வேண்டுமா?

'வேண்டும்' என்பதற்கான காரணங்கள்:
- அது மிக மிக நெருங்கிய தோழியின் திருமணம்.
- பாடசாலைக் காலத்துக்கு முன்பே அறிமுகமாகி இன்றுவரையும் வாழ்வின் மேடு பள்ளங்கள், கோணல்மாணல்கள், இன்பதுன்பங்கள் அனைத்திலும் பங்குகொண்டவள்.
- கட்டாயம் வர வேண்டுமென்று நேற்றும் தொலைபேசியில் தனியாக அழைப்பு விடுத்திருந்தாள்.
- அவளது வாழ்வின் மிக முக்கியமான தருணமொன்றில் நான் கூடவிருந்தாக வேண்டியது கட்டாயம்.
- போகாவிட்டால் ஒருபோதும் என்னை மன்னிக்க மாட்டாள்.
- ஒரு அருமையான நட்பை இழந்து விடுவேன்.
- என்னில் அதிகம் அக்கறை கொண்டிருப்பவளை மனம் வருந்தச் செய்துவிடுவேன்.
- etc. etc.

'வேண்டாம்' என்பதற்கான காரணங்கள்:
- அந்த இடத்தில் நான் நானாக இருக்க மாட்டேன்.
- சாறி உடுத்த வேண்டும், அது என்னால் முடியாது.
- காது கழுத்துக்கு ஏதாவது போட்டுக்கொண்டு போகவேண்டும், அதுவும் என்னால் முடியாது.
- ஆக மொத்தத்தில், என் சுயத்தை விட்டுக் கொடுக்க வேண்டிவரும்.

'நீ ஒன்டும் போடாமல் வந்தாலும் நான் எதுவுமே சொல்ல மாட்டன், வந்தால் காணும், எனக்கென்னமோ யோசனையாவேயிருக்கு வர மாட்டியோ என்டு'' (நன்றாகவே புரிந்து கொண்டிருப்பவள்).
'எனக்கும் ஒன்டும் போடாமல் வர விருப்பம்தான்.. பிறகு உன் மாப்பிள்ளை மயங்கி எனக்குப் பின்னால் வந்தாரென்டால்.., வேண்டாம், என்னாலை ஏன் ஒரு கல்யாணம் குழம்ப வேணும்'

வேடிக்கையாகப் பேசுவதொரு வித்தைதான். இக்கட்டான சந்தர்ப்பங்களிலிருந்து அவ்வப்போது நழுவிக்கொள்வதற்கான சிறந்த உபாயம். யாரையும் காயப்படுத்தாமலும், அதேநேரம் பிடிகொடுக்காமலும் கேள்விகள், மற்றும் எதிர்பார்ப்புக்களிலிருந்து மிக இலகுவாகத் தப்பித்துக்கொள்ளலாம், அந்த நேரத்துக்கு மட்டும். அதுவொரு தற்காலிக தப்பித்தல்.

சாறி கட்டத்தானே பிடிக்காது; சல்வார் இல்லாட்டி குர்தா ஏதும் போட்டுக்கொண்டு போகலாம். ஆனால், திருமண வீட்டில் அவள் மட்டுமொரு விநோதப் பிராணியாகிப் போவாள். ஆண்களை கோட் சூட்டுக்குத் தாவ அனுமதித்த திருமணங்களில் கூட பெண்களுக்கு சாறியிலிருந்து விடுதலையே இல்லை. 'எந்நாடு போனாலும் தென்னாடுடைய சிவனுக்கு மாதவிலக்குடைய பெண்கள் மட்டும் ஆவதேயில்லை' எங்கேயோ வாசித்திருந்த கவிதை அவள் நினைவுக்கு வந்தது. எல்லாம் ஒன்றுதான். பண்பாடும், மரபும் பெண்களாலேயே கட்டிக் (சாறி கட்டி, தாலி கட்டி) காப்பாற்றப்பட வேண்டும். ஆண்கள் அனைத்தையும் மொனிட்டர் பண்ணிக் கொண்டிருப்பார்கள்.

சாறி கட்ட, நகை போட ஏன் பிடிக்காது? இது அவள் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பதில் (கேள்வியின் தோரணையைப் பொறுத்து) அவள் கைவசமிருக்கும்.

அதிகாரத்துடன் அல்லது இளக்காரத்துடன் மூன்றாம் பேரால் கேட்கப்பட்டால்:
'என் உடம்பு.. எதுவும் போடுவதும் போடாததும் என் இஷ்டம்.. நீங்கள் யார் அதைப்பற்றிக் கவலைப்பட'

அக்கறையுடன், உண்மையாகவே அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் (மூன்றாம் தரவழி):
'நானொரு உயிருள்ள மனுசி.. ஷோக்கேஸ் பொம்மையில்லை.'

மிக நெருங்கிய யாரும் எந்தத் தோரணையுடன் கேட்டாலும்:
'விருப்பமில்லை'
வேறென்ன, மௌனம்ம்ம்...

ஒருமுறை அப்பாவின் நண்பரொருவர் 'ஏன் தோடு போடுவதில்லை?' எனக் கேட்டபோது, இதே கேள்வியைப் பல்லாயிரம் முறை எதிர்கொண்ட சலிப்பில் அமைதியாக அவரை நோக்கி 'ஏன் போட வேண்டும்?' எனத் திருப்பிக் கேட்டாள். சுவரில் மோதுண்ட பந்தைப் போல எதிர்பாராத மறுகேள்வியில் ஒருகணம் அதிர்ந்துபோய் வாயைப் பிளந்தார் அவர். 'she's really a smart girl..' அவரது வியப்பு வார்த்தைகளில் தொனித்தது. 'அது எங்கடை tradition என்டதுக்கும் அப்பாலை இந்தக் கேள்விக்கு எனக்கும் பதில் தெரியாது. அடுத்தமுறை உங்களைப் பார்ப்பதற்கு முதல் இதுக்கு பதில் கண்டுபிடித்து விடுகிறேனா பார்ப்போம்' என்றுவிட்டுப் போனார். அந்தக் கணத்தில் அவளுணர்ந்த சந்தோஷம், அது வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது. மிக மிக நுணுக்கமான முறையில் அவளை விளங்கிக்கொண்டவர் அவர் மட்டும்தான். மரபு அல்லது பண்பாடு என்ற வெகு அபத்தமான (பண்பாடு என்பது வெறுமனவே ஆறுமுழ சேலையிலும், ஒன்றரைப் பவுன் தங்கத்திலும் மட்டும் தங்கியிருப்பதில்லையென்ற புரிதலுடன். எ+கா 4 அபத்தம்: ஆண்கள் கோட்சூட் போட்டாலும் தொலையாத பண்பாடு சேலை கட்டியவுடன் காப்பாற்றப்பட்டு விடும்) காரணங்களுக்கு அப்பால் எதற்காக சாறி உடுத்தவும், தோடு போடவும் பெண்கள் நிர்ப்பந்திக்கப்பட வேண்டும் என்பது தான் கேள்வி.

பெண்களுக்கான அடையாளங்களாய் சமூகத்தால் முத்திரை குத்தப்பட்டவற்றைப் புறக்கணித்து வாழ்வதன் சிரமம் வாழ்ந்து பார்த்தவர்களுக்குத்தான் புரியும். 'என்ன தைரியம் உனக்கு இப்படிப் பண்ண' என்ற அதிகாரப் பார்வைகள், 'ஐயோ பாவம் அவ்வளவு வசதியில்லை போல' என்ற அங்கலாய்ப்புக்கள், 'வடிவாய் வெளிக்கிடத் தெரியாத பெட்டை' என்ற இளக்காரங்கள் கூடப் பரவாயில்லை. 'நீ இப்படியிருப்பதெல்லாம் மற்றவர்களிடமிருந்து உன்னை வித்தியாசமாய்க் காட்டிக்கொள்ளவும், மற்றவர்களது attention ஐ உன் பக்கம் திருப்பவும்தான், எல்லாரும் உன்னிடம் வந்து நீ ஏன் இப்படியென்று கேட்பதில் உனக்கு ஒருவித சந்தோஷம்' என்பதான அல்லது 'மற்றவர்களுக்கு முன்னால் உனது இமேஜை விட்டுக்கொடுக்காமலிருக்கத்தான் நீ இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறாய், மற்றபடி உண்மையில் உனக்கு விருப்பமில்லாமலில்லை' என்பதான 'நான் இப்படி' களை எதிர்கொண்டு எதிர்கொண்டு அவளுக்கு உண்மையில் 'தான் எப்படி' என்பதே ஒருவித குழப்பமாகிப் போனது.

இருந்தாலும் அருமையான குடும்பமொன்று அவளுக்கு வாய்த்திருந்தது. 'இப்படி தோடு கூட போடாமலிருந்தால் கல்யாணத்துக்கு வாற சனமெல்லாம் எங்களுக்கென்னமோ வசதியில்லையென்டு நினைக்கும்' என அங்கலாய்த்தாலும், 'நாங்கள் வசதியாயிருக்கிறமா இல்லையா என்டதை ஊர் முழுக்க சொல்லிக்கொண்டு திரியவேண்டுமா என்ன.. வசதியில்லாட்டியும் அக்கம்பக்கத்தில் கடன் வாங்கிக்கொண்டு போட்டு அழகு காட்டுற ஆக்களைப் பார்த்த பிறகுமா இப்படிக் கேட்கிறீங்கள்' என திருப்பிக் கேட்கும் மகளை நினைத்து உள்ளூரப் பெருமைகொள்ளும் அம்மா. சாமத்தியப்பட்டபோது இதெல்லாம் ஒன்றுமேயில்லையென்டு உடனேயே வெளியில் திரிய அனுப்பினவா, இவ்வளவுக்கும் அவளின் தோழிகளெல்லாம் ஒரு மாதம் வரை அறையை விட்டே எட்டிப்பார்க்க அனுமதிக்கப்படவில்லை. சுதந்திரமாகச் சிந்திக்கப் பழக்கிய அப்பா. 'என்ன வளர்ப்பு வளர்த்திருக்கிறீங்கள்' என்று விடுப்புக் கேட்பவர்களுக்கெல்லாம், 'என் பிள்ளையை நான் சராசரி பொம்பிளையா வளர்க்கவில்லை' என்று அடிக்கடி சொல்பவர். உண்மைதான்.., திருமணச் சந்தையில் விலைபோக தன் பிள்ளையை அவர் வளர்க்கவில்லைதான்.

ஆனால், இந்தப் பாதுகாப்பும் பிடிவாதங்களும் இந்தக் குடும்பத்துக்குள் இருக்கும்வரை மட்டும்தானென்பதும் அவளுக்குத் தெரிந்துதானிருந்தது. திருமணம் போன்ற சட்டகங்களுள் அடைபட்டால் அதற்கேயான விதிகளுடன் தான் (அவரின் விருப்பம், பிள்ளைகளின் விருப்பம், இனசனத்தின் விருப்பமென்று - அவளது விருப்பத்தை யார் பொருட்படுத்துவார் - சுயம் துண்டு துண்டாய்ச் சிதறி திசைக்கொன்றாய்ப் பறக்க) தொடர்ந்து வாழவேண்டிவரும், எமது விதிகளையும் ஒழுக்கங்களையும் தொலைத்துவிட்டு. 'நானும் விழுமியங்களுடதான் வாழ்கிறேன். ஆனால், எனக்கான விழுமியங்களையும், ஒழுக்கக் கோட்பாடுகளையும் நானே உருவாக்கிக் கொள்கிறேன்' (-அருந்ததி ரோய்?) எங்கேயோ வாசித்தது போல வாழ்ந்துவிட விருப்பம் தானெனினும், அதற்காகத் தனித்திருக்கவும் தயாரில்லை. ஏன் மனிதராய்ப் பிறந்த அனைவரும் நேசிக்கவும், நேசிக்கப்படவும், துணை தேடவும் சபிக்கப்பட்டிருக்கிறோம்..? நேசம் அவளது மாபெரும் பலவீனம்!

எப்படிப் பார்த்தாலும் அவள் இன்று திருமணத்துக்கு போய்த்தானாக வேண்டும். தனது சுயத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் ஒரு உறவை இழந்துவிட முடியாது. போகத்தான் வேண்டுமென்பதைக் கட்டாயமாக்கினால் பின்னும் அவள் முன் இரு தெரிவுகள்:
1. சாறி உடுத்திக்கொண்டு, நகையணிந்து போவது (சமூகத்துடன் ஒன்றிவாழும் முயற்சி. ஆனால், விருப்பமில்லாத ஒன்றை வருந்திச் செய்ததில் இயல்பாக இருக்க முடியாமற் போகும்)
2. வேறேதாவது இயல்பு குலையாமல் அணிந்து கொண்டு தான் தானாகவே போவது (ஆனால் நிறைய விநோதப் பிராணி பார்வைகளையும், கேள்விகளையும் எதிர்கொள்ள நேருமாகையால் அங்கும் இயல்பு குலையாமலிருக்குமா என்பது சந்தேகமே)

உறவுகள் வேண்டுமென்றால் 'என்'னை இழக்கவேண்டிவரும். எனது 'என்' வேண்டுமென்றால் உறவுகளை இழக்கவேண்டி வரும். நான் நானாக.., இதே மனிதர்களுக்கு மத்தியில் அவர்களை நேசித்துக்கொண்டு வாழ்வது எப்படி???


மனம் இவ்வளது தூரம் வட்டமிட்டு வரும்வரை அவள் அழைப்பிதழை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தாளென்று எழுதிக்கொண்டு அவசர அவசரமாக கதையை ஒரு முடிவுக்கு கொண்டுவந்து விடுகிறேன்.

.....................

கேரளாவில் ஆதித்தாய்வழிச் சமுதாயம் நிலவியதன் எச்சங்களாக இன்றும் நிலைத்திருப்பவற்றுள் அங்கு பெண்கள் பெரும்பாலும் வெள்ளை நிற சேலை கட்டுவதைக் குறிப்பிடலாம் என்கிறார் ஜெயமோகன் (ஆழ்நதியைத் தேடி-கட்டுரைத் தொகுப்பு). வெள்ளை நிறச் சேலைக்கும் ஆதித்தாய்வழிச் சமுதாயத்துக்குமான தொடர்பு என்னவென்ற கேள்வியெழலாம். தாய்வழிச் சமுதாயத்தில் பெண்களுக்குப் பாலியல் சுதந்திரமிருந்தது. அங்கு அவர்கள் எவரையும் கவர்ந்திழுக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது. கண்கவர் வண்ணங்களில் ஆடை அணிவதும், தம்மை அலங்கரித்துக் கொள்வதும் எதிர்பாலாரைக் கவர்ந்திழுக்க வேண்டிய, பெண்களுக்குப் பாலியல் சுதந்திரம் மறுக்கப்பட்ட, தந்தைவழிச் சமுதாயத்திலேயே அறிமுகமாகியிருக்கலாமெனும் ரீதியில் தொடர்பை நிறுவுகிறார் அவர்.

பெண்ணுடம்பு மிக மிக இயல்பாய்ப் பண்டமயமாதல் எனவும் தலைப்பிட்டிருக்கலாமோ?*வெடிபலவன் - ஒருவிதத் தாவரம். பஞ்சைப்போல காற்றில் பறந்து செல்லும் கீழே ஒரு சிறிய விதையுடன்.

11 comments:

துவாரகன் said...

சேலை கட்டுவதில் கூட இவ்வளவு அரசியல் இருக்கா?

Kannan said...

Nivedha,

Nice...

Loved the way you have written it. Reminded me of a short story of Ambai. I remember connecting to it too, and yet, this is still an eye-opener.

This cannot be won by your renunciation of the "institutionalized value system for women". Every individual has to fight one's own subscription to, and faith in such ideas.

I know I have a big fight in my hands :(

பாவை said...

ம்... ம்.. இந்த விடயத்தில் எத்தனையோ இப்படிகளைத் (குறிப்பாக 'மற்றவர்களுக்கு முன்னால் உனது இமேஜை விட்டுக்கொடுக்காமலிருக்கத்தான் நீ இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறாய்)தாண்டி வந்த போது, எதிர் கொள்ள சிரமப்பட்டாலும் நான் எப்படி என்பதில் குழம்பியிருந்த போதும் யாருக்காகவும் என் சுயத்தை விட்டுக் கொடுக்காமல் நான் நானாக தான் இருக்கிறேன் என்பதில் ஒரு திருப்தி இருக்கத்தான் செய்கிறது.. ஆனால் எத்தனை நாளைக்கு முடியும் என்ற கேள்வியும் மனதில் இல்லாமலில்லை பெண்ணாய்ப் பிறந்ததால்....

நிவேதா said...

இதென்ன துவாரகன், இதுக்கு மேலையும் கூட இருக்கு..:-)

பின்னூட்டத்துக்கு நன்றி, கண்ணன்! ம்ம்ம்.. ஒருவகையில் நீங்கள் சொல்வது போல இது தனியாள் போராட்டம் தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கைகள் /விருப்பங்கள் இல்லையா.. இப்பதிவும் தனியொரு ஆளுமையின் வெளிப்பாடு மட்டும்தானென்று நினைக்கிறேன். சில விடயங்கள் பொதுமைப்படுத்த முடியாதன தான்.

//I know I have a big fight in my hands//

?!

நன்றி, பாவை! இதே கேள்வி என்னுள்ளும் எழுந்திருக்கிறது.. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியிருக்க முடியுமென்ற பயமும்.. கூடவே ஒருவித சலிப்பும்..

இருந்தாலும், எதன் பொருட்டும் என் சுயத்தை இழக்காமலிருக்கிறேன்.., நான் இன்னும் தோற்றுப் போகவில்லை.. என நினைக்கும்போது வரும் திருப்திக்கும், பெருமிதத்துக்கும் எதுவும் ஈடாகாதென்றும் தோன்றும்.

வியாபகன் said...

//This cannot be won by your renunciation of the "institutionalized value system for women".//
//Every individual has to fight one's own subscription to, and faith in such ideas.//

kannan, aren't these two remarks contradictory to each other? to renounce or deviate from such an institutionalized system is a way of fighting against the system itself, isn't that so?

Anonymous said...

பயமும் சலிப்பும் தான் எதிரி..
அதை தூக்கி எறியுங்கள்

//ஆனால் எத்தனை நாளைக்கு முடியும் என்ற கேள்வியும் மனதில் இல்லாமலில்லை பெண்ணாய்ப் பிறந்ததால்....//

பாவை ..எனது சீன நாட்டு தோழிகள் யாரும் காது குத்தவில்லை..
அவர்களது நாட்டில் பெண்கள் யாராவது காது குத்தி இருந்தால் அதை .. பிழை என்று கருதுவார்களாம்

உதாரணத்துக்கு
எம் நாட்டில் நாங்கள் உதட்டில் தோடு போட்டால் எப்படி இருக்கும் கிட்டத்தட்ட அப்படி..

இது..தமிழர்களின் கலாச்சாரம் அவ்வளவுதான் உலகம் முழுதும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று இல்லை..

ஆனால் இன்னும் ..எந்த சமூகத்தவரிடையேயும் .. "பெண்"
என்கின்ற வேறுபாடும்
ஆணாதிக்கமும் இருக்கத்தான் செய்கிறது..

//பெண்என்பதால் எவ்வளவு காலத்துக்கு ..
பெண் என்பதால் என்னால ஒன்றும ்செய்ய முடியவில்லை
பெண் என்பதால்..
இப்படி இப்படி .காரணம் சொல்லிச்சொல்லி தான் நாங்கள் எங்களை ..காலகாலமாக அடிமைகளாகவே வைத்திருக்கிறோம்..

இப்படிச்சொல்லுவதை முதலில் விடுவோமே பாவை..!!!

நிவேதா .பாராட்டுக்கள் ..

Anonymous said...

நிவேதா ஓர் உதவி செய்யுங்கள் எனக்கு.

நான் ஓர் ஆண். கலியாணவீடு, தாலி சம்பிரதாயங்களில் எள்ளளவும் நம்பிக்கையில்லாதவன். நான் காதலித்துச் சேர்ந்த வாழவுள்ள பெண் தோடு-பொட்டு-சாமத்தியவீடு-நகைநட்டு என்று வளர்ந்தவள். அதுகளை ரசிப்பவள்.

தனியே எழுத்துடன் நிறுத்திக் கொள்ள ஆசைப்படுகிறேன் நான். அவளுக்குக் கலியாணவீடு செய்து மகிழ ஆசை.

சாகும்வரை வாழப்போகும் உறவை ஒரு கலியாணவீட்டுடன் தொடங்குவது உவப்பாகத் தெரியவில்லை எனக்கு. அதேவேளை அவளுக்கு ஒரு கவலையுடன் தொடங்க நினைப்பதும் உறுத்துகிறது.

அவளுக்கு என்மனநிலையைத் தெரியப்படுத்தியுள்ளேன். எனக்காக கலியாணவீட்டைத் 'தியாகம்' செய்ய அவள் தயார்தான். அவள் வீட்டினருடன் மோதத் தொட்ங்கியும் விட்டாள். (ஆனால் கலியாணவீடு என்றால் இன்னும் சந்தோசம் என்கிறாள்)

அவளை அவளாகவே ஏற்றுக் கொண்ட மனநிலை என்னுடையது. என்னை எல்லாமாக நினைக்கும் மனநிலை அவளுடையது.

பெண்மையுடன் அதிர முடியாத சிக்கலாக உள்ளது இது எனக்கு... எனக்கு என் சுயத்தையும் சமுதாயத்தின் சம்பிரதாயங்களையும் விட அவள் முக்கியம். "எல்லாத்தையும் அவளுக்கு விளங்கப்படுத்து" என்ற சராசரிப் பதிலைக் கேட்டுக் களைத்துப் போய் விட்டேன்.

எனது சுயத்துக்காக கலியாண வீட்டைத் தவிர்க்க வேண்டுமா? அல்லது அவளுக்காக..... ஒரு பெண்ணாக நீங்கள் நினைப்பதைச் சொல்லி உதவுங்கள்.

பாவை said...

//பெண் என்பதால் எவ்வளவு காலத்துக்கு ..
பெண் என்பதால் என்னால ஒன்றும செய்ய முடியவில்லை
பெண் என்பதால்..
இப்படி இப்படி .காரணம் சொல்லிச்சொல்லி தான் நாங்கள் எங்களை ..காலகாலமாக அடிமைகளாகவே வைத்திருக்கிறோம்..


இப்படிச்சொல்லுவதை முதலில் விடுவோமே பாவை..!!!//

இது வரை முடிந்தது, இனியும் முடியுமோ என்ற என் (நம்பிக்கையுடன் கூடிய) பயத்தை தான் வெளிப்படுத்தினேன்.. தனித்திடுவேனோ என்ற பயம்.. நிவேதாவின் வார்த்தைகளே அழகாய்ச் சொல்கிறது

எனக்கான விழுமியங்களையும், ஒழுக்கக் கோட்பாடுகளையும் நானே உருவாக்கிக் கொள்கிறேன்' (-அருந்ததி ரோய்?) எங்கேயோ வாசித்தது போல வாழ்ந்துவிட விருப்பம் தானெனினும், அதற்காகத் தனித்திருக்கவும் தயாரில்லை. ஏன் மனிதராய்ப் பிறந்த அனைவரும் நேசிக்கவும், நேசிக்கப்படவும், துணை தேடவும் சபிக்கப்பட்டிருக்கிறோம்..? நேசம் அவளது மாபெரும் பலவீனம்!

(வாசித்த போது முழுவதுமே நானே எழுதிய மாதிரியான ஒரு உணர்வு தான் ஏற்பட்டது).

Kannan said...

வியாபகன்,

I was commenting on these lines - this is the renunciation I was referring to:


//பெண்களுக்கான அடையாளங்களாய் சமூகத்தால் முத்திரை குத்தப்பட்டவற்றைப் புறக்கணித்து வாழ்வதன் சிரமம் வாழ்ந்து பார்த்தவர்களுக்குத்தான் புரியும்.//

I was merely suggesting that this was not enough, and every man and woman has to fight his/her own urge to wear the "culture" or the "value system" goggles and put individual freedom ahead of anything else.

You are right in a way - such renunciation is required, not only by women, but men too.

Anonymous said...

//நேசம் அவளது மாபெரும் பலவீனம்!//
அன்புள்ள பாவை இந்த பலவீனத்தை விடச்சொல்லித்தான் சொல்கிறேன்..
அனுபவத்தால் வரலாம்..
எம்மை ..அடக்கும் ஒடுக்கும் ..கேள்வி கேட்கும் உறவுகளை விட்டு பிரிவது..
அவர்கள் இல்லாமலும எம்மால் வாழ்ந்து விட முடியும் என்று ..விழுந்தே இருக்காமல் அவர்கள் முன்னால் நிமிர்ந்து வாழ்ந்து காட்டுவது..
முள்ளில் நடப்பது போல கடினம் தான்.
ஆனால் முடியும் ..!! :-)

ஒவ்வொரு தனி மனிதனினதும் .. முயற்ச்சியும் வெற்றியும் தான் ஒரு சமுதாயத்தின் வெற்றி..ஆக பாவை
இந்த தனி மனித முயற்ச்சிகள் ஒரு சமுதாயத்தின் வெற்றியாக மாறலாம்.
:-)

அன்புள்ள ஆண் அனானிக்கு ..
பெண்களது விடுதலை உணர்வு .ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது..
அவளை அவளது விடுதலை உணர்வுகளுடன் வாழவிடுவதுதான் உண்மையான பெண்சுதந்திரம்.
.."அவள் அவளாக முடிச்சுக்களை அவிழ்க்கும் போது .. கற்பு கால் வழியே போகிறது என்று கூவாமல் இருப்பது."
(ஆழியாளின் கவிவரிகள்)

ஆனால் அனானி உங்களது நிலை சற்று சிக்கலானது ..
நீங்கள் உங்கள் துணையை தெரிவு செய்யும் போதே இவற்றை பற்றி சிந்தித்து இருக்க வேண்டும்..அல்லது ..நீங்கள் நீங்களாக
இருக்க கூடிய ஒரு உறவு எப்படி ..இந்த சடங்கு சம்பிரதாயங்களுக்கு கட்டுப்படக்கூடிய ஒருவராக இருக்க முடியும் என்பதும் எனது சிறு சந்தேகம்( :-) )

சரி அது ஒரு புறம் இருக்க..
இந்த கேள்வியை நீங்கள் உண்மையிலேயே தான் கேட்கிறீர்கள் என்றால்
எனது பதில்
பெண்களை அவர் அவர் விருப்பத்துடன் வாழ விடுங்கள்..பெண் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக முடக்காதீர்கள்
உங்கள் கருத்துக்களை திணிக்காதீர்கள்

உங்கள் துணைக்கு சம்பிரதாயபூர்வமான கல்யாணம் தான் திருப்தி என்றால் ..
பண்ணிக்கொள்ளுங்கள்
உங்கள் துணையின் விருப்பத்திற்க்காக..
அதில் பிழையே இல்லை

:-)

எதற்காகவும் உங்கள் கருத்துக்களை திணிக்காதீர்கள்.
:-)

நிவேதா said...

வியாபகன்,

நிறுவனமயப்படுத்தப்பட்ட முறைமையொன்றைத் துறப்பது/ மறுப்பதென்பது அதற்கெதிரான போராட்டம்தான். It's pretty obvious I guess, that renouncing is the first but major step towards a battle against the 'ideals'. ஆனால், தனியொருவரின் துறப்பு/ மறுப்பு மட்டும் இங்கு எடுபடப் போவதில்லையென கண்ணன் குறிப்பிட விரும்புகிறாரென்றே விளங்கிக் கொண்டேன்.

கண்ணன்,

//I was merely suggesting that this was not enough, and every man and woman has to fight his/her own urge to wear the "culture" or the "value system" goggles and put individual freedom ahead of anything else.//

இந்த இடத்தில்தான் சிக்கல் முளைக்கிறது. அது அவரவர் விருப்பம்; விடயங்களை அவரவர் பார்க்கும் விதம். அழகுபடுத்திக் கொள்வது தனக்கானதோர் விடுபடலாயிருக்கிறதென்று கூறும் தோழிகளையும் கவனித்திருக்கிறேன். என்னதான் நாங்கள் ஆயிரம் நியாயங்களை முன்வைத்தாலும், தமது சுய விருப்பத்துக்கெதிராய் ஒவ்வொருவரும் போராட வேண்டுமென எதிர்பார்ப்பதும் ஒருவகையில் தனியாள் சுதந்திரத்தில் கட்டுப்பாடுகளை விதிப்பதுதான். Intellectual domination is a far worse controversial issue than anything else, and not just another matter of fact as it seems.

அனானி -1,

பின்னூட்டத்துக்கு நன்றி. பாவையின் பயம் எனக்கு நியாயமெனப்படுகிறது. எதையும் சொல்லிக்கொண்டிருப்பதும், எழுதிக் கொண்டிருப்பதும் எளிது, வாழ்ந்து காட்டுவதைவிட. சமூகம் ஆண்களைவிட பெண்களிடம் எதிர்பார்ப்பது அதிகம்.

அடக்கும், ஒடுக்கும் ஒரு உறவு உதறியெறியப்படத்தான் வேண்டும். அதிகாரத்தையும், அடக்குமுறையையும் எதிர்க்கும் துணிவையும், வீரியத்தையும் அந்தக் கொள்கைப் பிடிப்பு வழங்கிவிடும். ஆனால், எனது சந்தேகம் அடக்குமுறையை எதிர்த்து நிற்பது குறித்தானதல்ல (அதில் சந்தேகத்துக்கும் இடமில்லை), மனதின் மென்மையான உணர்வுகளை எதிர்த்திருப்பதைப் பற்றியது. மேலே பதிவிலுள்ள சம்பவத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். அது அடக்கும், ஒடுக்கும் உறவல்ல. தோழியை அவளாகவே ஏற்றுக்கொண்ட உறவு. 'நீ சேலை, நகைநட்டு எதுவும் போடாவிட்டாலும் பரவாயில்லை.. வந்தால் போதும்' என்கிறாள். இங்கே இருதரப்பும் எதையோ விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கிறது. தனது சேலை, நகைநட்டு விருப்பங்களைத் தோழியின் மீது அவள் திணிக்காதபோதும் தனக்காக, திருமணத்துக்கு வரும்படி அழைப்பு விடுப்பதனூடாக, ஒரு சிறிய விட்டுக்கொடுப்பை எதிர்பார்க்கிறாள். இங்கே எதனை முன்னிறுத்துவது.. நட்பையா, கொள்கையையா? முழுவதுமாகப் புரிந்து கொண்டவள், அப்படித் திருமணத்துக்கு வராமற் போனாலும் அதற்காக உறவை முறித்துக்கொள்ள மாட்டாள்தான். இருந்தாலும், மனதில் ஒரு சிறிய குறையிருக்குமில்லையா? தனது வாழ்வின் மிக முக்கியமானதோர் நாளில் தனக்கு மிகப் பிரியமான ஒருத்தி தன்னருகில் இல்லையென்பது.. அப்படி எம்மை நேசிப்பவர்களை, புரிந்து கொண்டவர்களைக் காயப்படுத்தித்தான் எமது கொள்கைகள் வாழ வேண்டுமா என்ற கேள்வியும் எழுமில்லையா?

சுயத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் எத்தனையோ பெறுமதியான உறவுகளையும், தருணங்களையும் இழந்துவிட்டு இந்தளவுதூரம் வந்து, கடந்துவந்த வழியைத் திரும்பிப் பார்க்கும்போது என்னத்தைச் சாதித்தோம்.. இன்னும் எவ்வளவை இழக்கப் போகிறோமென்ற சலிப்பு வருவது தவிர்க்க முடியாதது. ஆனால் அதே சலிப்பு, இவ்வளத்தை இழந்தாயிற்று.., இனியும் இழக்க என்ன இருக்கிறதென்பதாய் எம்மைத் தொடர்ந்தும் எமது பாதையிலேயே இட்டுச்செல்லவும்கூடும்.

அனானி -2,

முதலில், இந்தளவுதூரம் உங்கள் துணையின்மீது, அவரின் விருப்பத்தின்மீது அக்கறையெடுத்து சிந்திப்பதற்கு என் பாராட்டும், நன்றியும். தங்களைப் பெண்ணிலைவாதிகள் எனக்கூறிக்கொள்ளும் ஆண்கள் பலர் சறுக்கிவிடுவது இந்தப்புள்ளியில்தான்.

பெரும்பாலும், இவ்வாறு தாலி, திருமண சம்பிரதாயங்களில் உவப்பில்லையெனக் கதைக்கும் ஆண்கள் தங்களை விட ஒருபடி அதிகமாகச் சிந்திக்கின்ற (எழுத்தில் பதிவதுகூட வேண்டாம்.. living together ஆக இருந்துவிடுவோமெனக்கூறும்) பெண்கள் துணையாகக் கிடைக்கும்போது, சராசரி ஆண்களாகிவிடுவார்கள் (இவள் முந்தி இப்படி எத்தனை பேருடன் இருந்தாளோ தெரியவில்லையென்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை). சம்பிரதாயங்களில் நாட்டமுள்ள ஒரு பெண்ணிடம் இதெல்லாம் எனக்கு விருப்பமில்லை, நானொரு முற்போக்குவாதி எனச் சொல்லித்திரிவது இலகு. ஆனால், சம அலைவரிசையுடன் சிந்திக்குமொரு பெண்ணிடம் நாம் இப்படி முற்போக்குவாதிகளாயிருப்பதற்காக பெருமை கொண்டாட முடியாது.

//நீங்கள் நீங்களாக இருக்க கூடிய ஒரு உறவு எப்படி ..இந்த சடங்கு சம்பிரதாயங்களுக்கு கட்டுப்படக்கூடிய ஒருவராக இருக்க முடியும் என்பதும் எனது சிறு சந்தேகம்//

அனானி -1 ன் இந்தக் கேள்விக்கு பதில் மேலே குறிப்பிட்டது..

என்னுள் எழுந்த கேள்வி இதுதான்:

நீங்கள் உங்கள் மனநிலையை துணைக்கு விளங்கப்படுத்தி, அவர் உங்களுக்காக தன் விருப்பத்தை விட்டுக்கொடுக்கவும் முன்வரலாம். அதேபோல, கல்யாணவீடு, தாலி, நகை, புடவை இன்னபிற சம்பிரதாயங்களில் நம்பிக்கையில்லாத ஒரு பெண் அவற்றிலெல்லாம் நம்பிக்கையுள்ள - அவற்றை இரசிக்கின்ற - துணையிடம் இதே விட்டுக்கொடுப்பை எதிர்பார்க்க முடியுமா என்ற சந்தேகம் எழுகிறது. (quote: எந்தவொரு ஆணுக்கும் தனது மனைவியை கொஞ்சம் வடிவாய் வெளிக்கிடுத்திப் பார்க்க ஆசையிருக்கும்தானே..?!! பெண்களுக்கு அப்படி ஆசைவந்தால் என்ன செய்வார்களாயிருக்கும்??)

நூற்றுக்கு நூறு வீதம் ஒரே எண்ண அலையுடையவர்களாக (same frequency) இருவரும் இருக்க முடியாத சந்தர்ப்பங்களில் விட்டுக்கொடுப்பு யாரிடம் அதிகளவில் எதிர்பார்க்கப்படுகிறது?

உங்கள் துணையை 'அவளை அவளாகவே' ஏற்றுக்கொண்ட மனோநிலை உண்மையாகவே உங்களுக்கு இருக்குமானால், 'அவளை அவளாகவே' இருக்க அனுமதியுங்கள் என்பதுதான் எனது வேண்டுகோளாயுமிருக்கும்.

மேலே குறிப்பிட்டதைப்போல, Intellectual domination is the worst disease of all.

நண்பரொருவருடன், உங்களது இந்தக் கேள்வி தொடர்பாக கதைத்துக்கொண்டிருந்தபோது, அப்படி நீங்கள் உங்கள் கருத்தை துணையிடம் திணிப்பதென்பது, தான் விரும்பிய சம்பிரதாயங்களைப் பின்பற்றுவதற்கான அவரது உரிமையை மறுப்பதாகிவிடுமெனக் குறிப்பிட்டார். அதேபோல, இவற்றில் நம்பிக்கையில்லாத ஒரு பெண்ணைத் துணையாகக் கொண்ட நம்பிக்கையுள்ள ஒரு ஆணைப் பொறுத்தவரை தனது துணைவியை அலங்கரித்துப் பார்ப்பதற்கான விருப்பம் அவருக்கு மறுக்கப்படுவதாகவும் கொள்ளலாம்.

எப்படிப் பார்த்தாலும் ஏதோவொரு கட்டத்தில் யாரோவொருவர் விட்டுக்கொடுத்துத்தானாக வேண்டும். அல்லது, இருவரையும் மனம் நோகப் பண்ணாத வழியொன்றைக் கண்டுபிடித்தாக வேண்டும். சில விடயங்கள் எப்போதும் நாம் நினைப்பதுபோல கறுப்பு வெள்ளையாக மட்டுமிருப்பதில்லை. நடுவில் எங்காவதோரிடத்தில் சாம்பலும் இருக்கும். அதைக் கண்டுபிடிப்பது எம் கையில்தான் தங்கியுள்ளதென்று நினைக்கிறேன்.

உறவா, கொள்கையா எதனை முன்னிலைப்படுத்துவதென்ற கேள்வியெழும்போது எதிர்கொள்ளும் சிக்கலைத்தான் பதிவும் வெளிப்படுத்துகிறது. தக்க மறுமொழியை இன்னமும் கண்டுகொள்ள முடியவில்லை. சந்தர்ப்பங்கள்தான் பதில்களை உருவாக்குகின்றன போலும். என்னைக் கேட்டீர்களானால், கொள்கைகளைவிட உறவுகளை மதிப்பவளெனினும், சமயங்களில் நான் 'சுய'-நல-வாதியும்கூட..:-))