Sunday, September 02, 2007

மர்மங்கள் நிறைந்து வழிந்திடுமொரு வீடு

கண்மூடித் திறப்பதற்குள்
சிறகுதிர்த்துப் பறந்து மறையும்
வண்ணப் பறவையொன்றன் நினைவில்
அலைவுறும் அடிமனம்..
இறுதியில், எனக்கென மிஞ்சுவதென்னமோ
கூந்தலிடை சிக்கிக்கொண்ட
மென்சிறகிலிருந்து துளிர்த்த கனவுகள் மட்டும்தான்.


பல வருடங்களிருக்கலாம், நானதைக் கடந்து சென்று.
நினைவு தெளியாத வயதில்
அம்மாவின் காலை இறுக்கக் கட்டிக்கொண்டு
முகத்தை எதிர்ப்புறம் திருப்பியபடி
நடந்து சென்றிருந்திருப்பேன், அந்த வீட்டைக் கடந்து

ஒவ்வொரு பொழுதும் வெவ்வேறு விதமாய்
நிறம்மாறிக் கொண்டிருந்தது வீடு
சூனியம் கடலாய்க் காவுகொண்டிருந்தும்,
வீறிட்டபடி வெளிக்கிளம்பும் பெண்ணின் அலறல்
திடீரென்று வந்து செவி துளைத்துப் போகும்
மறுகணம், குழந்தையின் கேவல் ஓங்கியெழுந்து
மனமதிரப் பண்ணும்
சமயங்களில்,
ஆக்ரோஷங் கொண்ட பத்ரகாளியின் உறுமலாய்
ஏதோவொன்று...

அதன் புகை படிந்த யன்னல்களெங்கும்
வெந்நீர்த் திவலைகளெனத் துளிர்த்திருக்கும் மர்மம்
செங்கல் ஓடுகளினிடையே
மழைநீரென ஒழுகிக் கொண்டிருக்கும்
சுவரின் வெடிப்புக்களினூடு தலைநீட்டி
பல்லியொன்று கதை சொல்லித் திரிய
துள்ளி விழும் எனது நிழலும்
மர்ம வீட்டைப் பற்றிய பயம்
பாம்பைப்போல் சரசரவென்று
என் நாடி நாளங்களெங்கும் ஊர்ந்து கொண்டிருந்தது
ஒரு காலம்

இப்போது நான் வளர்ந்தவள்..,
பருக்களெனத் துருத்திக் கொண்டிருக்கும் திமிரும்,
விறைத்த மூளையுமாய்
மரணத்துக்கே மசியாதவளை வீடென்ன செய்துவிடும்,
வெறும் வீடு?

உளுத்துப்போன கூரையிலிருந்து
நம்பிக்கைகள் காரை காரையாய் பொடிந்து
உதிர்ந்திடத் தொடங்குமோர் பொழுதில்
விரிசல் விழுந்த மனத்தினளாய்
தனித்த மனுஷியாய்
மறுபடியுமொருமுறை அதைக் கடந்து போகலானேன்

அப்போது நீங்கள் என்னைப் பார்த்திருக்க வேண்டும்..

விரல் பிடித்து எழுதப்பழக்கியவள்
கதவுகளைத் தட்டித் திறக்கும் வழிசொல்ல மறந்திருந்தாள்
வாயிற்கதவின் ஆயிரமாயிரம் சிறு துளைவழியே
தயக்கத்துடன் எட்டிப் பார்த்து
ஒளிவீசும் பூச்செண்டுகொண்ட சிறுமியொருத்தி
எனை நோக்கி வரக்கண்டு
கவலைகள் மறந்து களித்துத் திரிந்திருந்தேன்
சில காலம்

வடதிசையிலிருந்து சுழன்றடித்த புயற்காற்று
மனதுள் சுழித்து
வீட்டைச் சுற்றி பூத்தூறல் பொழிய
என் பிரியங்களனைத்தும் ரோஜா இதழ்களாய்
வழிநெடுக கொட்டுண்டு கிடக்கக் கண்டேன்
அவசர அவசரமாய் பொறுக்கி மடியில் கட்டி
தலைநிமிர்ந்திட முன்னம்
வெகுதொலைவில் அவள்
சிறுபுள்ளியெனத் தேய்ந்து கொண்டிருந்தாள்

அது என் பிரமையென்கிறார்கள்..

மடி இன்னமும் கனத்தே கிடப்பதும்
பூச்செண்டுக்காரி தூரத்தே மங்கலாய் ஒளிர்வதும்
கனவேயாகுமெனில்,
நனவுநிலைக்குத் திரும்பும் விருப்பு இப்போதைக்கில்லை
தவிரவும்,
வீடுகள் மீதான பிரியம்
அவ்வளவு விரைவில் நீர்த்து விடுவதுமில்லை..


(என் சிறகு முளைத்த பிரியமானவளுக்கு.., நெஞ்சுகொள்ளா நேசத்துடனும், மன்னிப்பு வேண்டியும். இப்படித்தான் காட்டமுடிகிறது எனதன்பை.. நல்லதை நாடிப் போகின்றவளை வாழ்த்துவதல்லாமல், அழுது வழியனுப்புவானேன்?)

There shall be showers of blessings..
this is a promise of love..
There shall be seasons refreshing..
la la la la la la laaa..

10 comments:

இளைய அப்துல்லாஹ் said...

மிகவும் சிறப்பாக வந்திருகிற்து கவிதை

இளய அப்துல்லா

இளைய அப்துல்லாஹ் said...

UNKALIN KAVITHAI MIKA NANRAKA VANTHIRUKKIRATHU INNUM INNUM ELUTHUNKAL

ILAYA ABDULLAH

anasnawas@yahoo.com

முத்துகுமரன் said...

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

சிறப்பான கவிதை. மவுனமாக(கி) வாசித்தேன்.

Anonymous said...

//கண்மூடித் திறப்பதற்குள்
சிறகுதிர்த்துப் பறந்து மறையும்
வண்ணப் பறவையொன்றன் நினைவில்
அலைவுறும் அடிமனம்..
இறுதியில், எனக்கென மிஞ்சுவதென்னமோ
கூந்தலிடை சிக்கிக்கொண்ட
மென்சிறகிலிருந்து துளிர்த்த கனவுகள் மட்டும்தான்.//

கவிதையின் உச்சபட்ச பரவசிப்பு இந்த வரிகளில் தான் நிகழ்வதாகத் தோன்றுகிறது... பிரமிளின் படிமங்கள் தவிர்க்க முடியாமல் நினைவில் எழுகின்றன...

Anonymous said...

உங்கள் வீட்டினிலிருந்து சிறகு முளைத்துப் பறந்து போகும் -உங்களின் பிரியமானவருக்கு- எனது வாழ்த்தும் அன்பும்.

Unknown said...

super

Unknown said...

super

நிவேதா/Yalini said...

பின்னூட்டமிட்ட நண்பர்களின் அன்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி!

நிர்மாணம் Sri Rangan said...

//உழுத்துப்போன கூரையிலிருந்து
நம்பிக்கைகள் காரை காரையாய் பொடிந்து
உதிர்ந்திடத் தொடங்குமோர் பொழுதில்
விரிசல் விழுந்த மனத்தினளாய்//

உழு*-*த்துப்போன கூரையிலிருந்து...


நிவேதா,
தங்கள் கவியருமை
கடும் நினைவினிமை
நெடிய பொழுதும்
சொல்லினிமை சுகம் அதிகம்
ஆயினும்,
நின் கவித் தமிழில் சில
தவறிருப்பது சகிப்பதற்கல்ல
செம்மை கருதுங்கால்
இஃது சிறப்பல்லச் சிறு நெஞ்சே!

உழுத தோட்ட மண்ணில்
உளுத்த காவோலை
தாட்ட மாத்திரத்துள்
தண்ணீர் இறங்கிக் கண்டுதனைக் பெருக்க வளர்க்கும்
உளுத்த கூரையோலை!!

நிவேதா/Yalini said...

நிர்மாணம்,

தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு மிக மிக நன்றி! திருத்தி விடுகிறேன்.