Monday, October 22, 2007

புகையெனப் படரும் பிணங்களின் வாசம்


1.

எந்தச் சந்தர்ப்பத்திலும் நீ அதை எதிர்கொள்ள நேரலாம்
காலப்புதைகுழியின் செவ்விய மண் மூடுண்ட
சிதைந்த சில உடலங்களைப் பற்றிய கதையொன்று
ஊர் நெடுக உலாவித் திரிந்தது தன் தலை சிலுப்பி
இழுத்து விரித்து என் படுக்கையில்
போர்த்தப்பட்டிருந்த ஒரு சவம்
தொண்டைக்குள் நுழைந்துகொண்டு
வார்த்தைகளை வடிகட்டியது
உடல் தின்று செரித்த கவிதை
வடக்கில் பொய்த்த மழை பேய்த்தூறல் தூவ
நீளும் விரல்களைத் தட்டிவிட்டபடி
கடந்து கொண்டேயிருக்கிறாய்,
எழுதப்படாத வார்த்தைகளுள்
உறைந்து கிடக்கும் என் பிணங்களை


2.

விரகம் புலியென வெறிகொண்டெழும் இரவுகளில்
இறுக்கிய தொடைகளின் இடுக்கில்
குரல்வளை நெரித்துக் கொன்ற தாபம்
பற்றைகளின் ஆழங்களில் புதையுண்டு கிடக்கிறது
ஒரு நெடுங்கால மர்மத்தைப் போல
யோனியெனுமொரு பாம்பு நீட்டிய நாக்குடன்
கால்களினூடு கசிய
என் கனவுகளெங்கும் பிணவாசம்
புகையெனப் படர்ந்தது
இனி, அகாலம் விடியும் வேளையில்
என் படுக்கையின் மீது
நிணக்கூழ் வடியும் கண்களுடன்
பிணமொன்று தவழும்
மழலையென

17 comments:

Anonymous said...

உடலை பாலியல்வெளியாக மட்டுமே கட்டமைக்கும் முறைமைகளுக்கு எதிராய் இன்னொரு பார்வையை இக்கவிதை தருகின்றது. முக்கியமாய்
//அகாலம் விடியும் வேளையில்
என் படுக்கையின் மீது
நிணக்கூழ் வடியும் கண்களுடன்
பிணமொன்று தவழும்
மழலையென//
என்னும் இவ்வரிகள் பெண்ணுடல் கொழுகொழுப்பான மழலைகளை ஈன்றெடுக்கும் இயந்திரம் என்ற பொது அபிப்பிராயங்களை கேள்விக்குட்படுத்துகின்றது போலத் தோன்றுகின்றது.

தூரன் குணா said...

நிவேதா,

மிகப் பிரமாதமான கவிதைகள்..இத்தனை நாட்களாய் உங்கள் பதிவை கவனிக்காமல் விட்டது வருத்தமளிக்கிறது.மிகப்பிரமாதமான மொழிநடை..வாழ்த்துகள்..

தூரன் குணா.

நிவேதா said...

நன்றி, அனானிமஸ்!

நன்றி, தூரன் குணா!

அந்நியன் said...

-இனி, அகாலம் விடியும் வேளையில்
என் படுக்கையின் மீது
நிணக்கூழ் வடியும் கண்களுடன்
பிணமொன்று தவழும்
மழலையென-

ஆரோக்கியமான மனதுக்கு அறிகுறியல்ல. சற்று யோசியுங்கள். பின்னூட்டங்களினாலேயே உங்களுக்கு புதைகுழி தோண்டப்படுகிறது.

வியாபகன் said...

"சிதைந்த உடலங்களைப் பற்றிய கதை தன் தலை சிலுப்பி
நெடுக உலாவித் திரியும் ஊரி"ல் ஆரோக்கியமான மனதின் அறிகுறியை எங்கு போய்த் தேடுவது அந்நியன்?

ReMo said...

--ஆரோக்கியமான மனதுக்கு அறிகுறியல்ல--
அம்பி எந்த பாஷையில் நிவேதா எழுதனும்னு சித்தம் செப்பேன்டா

Kiran said...

I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

ஜமாலன் said...

ரமேஷ்-பிரெம் கவிதைகளைப் படிப்பதுபோல் இருக்கிறது.

//எழுதப்படாத வார்த்தைகளுள்
உறைந்து கிடக்கும் என் பிணங்களை//

அருமை...

நிவேதா said...

அந்நியன், வியாபகன், ரெமோ.. பின்னூட்டங்களுக்கு நன்றி!

ம்ம்ம்..

வாழைப்பொத்திகளாய் மனிதவுடல்கள் அறுந்துவிழுமொரு தேசத்திலிருந்துகொண்டு மனதின் ஆரோக்கியங் குறித்து அலட்டிக்கொள்வதும் வேடிக்கைதான்.

'படபடக்கும் விழிகளுடன்/ வண்ணத்துப் பூச்சியொன்று தவழும்/ மழலையென'

என்றெல்லாம் எழுதத் தெரியாமலில்லை.. இதைத்தான் ஆரோக்கியம் என்பீர்களாக்கும்.. (கொன்று புதைக்கப்பட்ட உணர்வுகளைப் பற்றிய கவிதைக்கும் இதுக்கும் எவ்விதத் தொடர்புமில்லாமல் போனாலும்) வண்ணத்துப் பூச்சிகளையும், சின்னஞ்சிறு தேவதைகளையும் பெற்றெடுத்த காலம் போய்விட்டது அந்நியன்..

தமிழ் இலக்கியத்தில் இரட்சணிய யாத்ரீகம் பாடல் பகுதியின் செய்யுளடியொன்று நினைவுக்கு வருகிறது..

'வரிசைபெறு மகப்பெறாம லடிகள்பாக் கியரென்னா
உரைசெறியத் தருநாளிங் குளதாம்'

(பிள்ளைப்பேறற்ற பெண்கள் பாக்கியம் செய்தவர்களெனக் கூறத்தக்க காலம் இங்குண்டாகும்)

அந்நாள் இங்கு வந்து நெடுங்காலமாகிப் போனது..

மேலதிக விளக்கத்துக்காக: வலுக்கட்டாயமாய் அடக்கிவைக்கப்பட்ட உணர்வொன்றே (ஏதோவொரு விதத்தில் அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுமென்பதாக) இங்கு மழலையென உவமிக்கப்பட்டுள்ளமையையும் கவனத்திற் கொள்ளவும்.

நிவேதா said...

நன்றி, கிரண்!

நன்றி, ஜமாலன்!

Murali said...

நிவேதா,
உங்களது முந்தைய கவிதைகளைக் காட்டிலும், மிகச் செறிந்த வார்த்தைகள். அற்புதமான ஒரு நவீன சித்திரம் போல இருக்கிறது...வாழ்த்துக்கள்.

முரளி

நிவேதா said...

நன்றி, முரளி!

Soorya said...

அருமையான கவிதை நண்பி.

இறக்குவானை நிர்ஷன் said...

// எழுதப்படாத வார்த்தைகளுள்
உறைந்து கிடக்கும் என் பிணங்களை//
வித்தியாசமான சிந்தனை. தொடருங்கள்.

கோசலன் said...

நிவேதா
நல்ல கவிதைகள்.

ஒரு கேள்வி...உங்களின் பிரதிகளை மீளப்பதிதல் 1 இல் கண்ட

//இது அம்மாமாரின் மற்றும் தாய்மையின் புனிதம் பற்றி காலங்காலமாக நாம் கொண்டிருந்த கற்பிதங்களைத் தகர்த்தெறிவதாகவுள்ளது. தனது உடல் குறித்தான கரிசனை கொண்டவளாக Estha, Rahel ன் அம்மா சித்தரிக்கப்படுகிறாள்; ஒரு பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிடவும்படுகிறாள்//

என்ற வரிகள்

//அகாலம் விடியும் வேளையில்
என் படுக்கையின் மீது
நிணக்கூழ் வடியும் கண்களுடன்
பிணமொன்று தவழும்
மழலையென//

என்ற வரிகளுக்கு காரணமாயிருந்திருக்க கூடுமா?

நிவேதா said...

நன்றி, சூர்யா!

நன்றி, இறக்குவானை நிர்ஷன்!

பின்னூட்டத்துக்கு நன்றி, கோசலன்!

இருக்கலாம்.. ஒருவகையில் மேற்குறித்த கட்டுரையின் வரிகளும், கவிதை வரிகளும் ஒரே சிந்தனையின் வெளிப்பாடே..

ஜோதிபாரதி said...

கண்ணீரை வரவழைக்கும் அழகான கவிதை! இன்றுதான் உங்கள் பக்கம் வந்தேன்.

அன்புடன் ஜோதிபாரதி
http://jothibharathi.blogspot.com