கொதித்துக் கொண்டிருக்கிறது என் தேசம்..
உலையிலிட்ட அரிசியாய்
அச்சத்திலே வெந்து கொண்டிருக்கும் சனங்கள்.
இன்னும்..
ரோம் எரிந்து கொண்டிருக்க,
பிடில் வாசிப்பில் மூழ்கியிருந்த நீரோ மன்னனாய்
சுய தேடல்களுக்குள் ஆழ்ந்தபடி நான்..
கணனியின் திரையில்
நேற்றுத்தான் பார்த்த
அவளது மரத்துப் போன உடல்...
அதே இறுகியும்,
புதைந்தும்
போன உணர்வுகளோடு.
தர்சினி...
வஞ்சிக்கப்பட்ட
என் ஆயிரமாயிரம் சகோதரிகளுள்
ஒருத்தி.
உருண்டையாய், குமிழியாய் இனம்புரியாத ஏதோவொன்று அடிவயிற்றிலிருந்து விண்ணென்று கிளம்பித் தொண்டையை அடைத்துக் கொள்கிறது.. மூச்சு முட்டுகிறது. என்னை விட்டுவிடுங்கள்... விட்டுவிடுங்கள்... முருகா... கந்தா...
'காக்க காக்க கனகவேல் காக்க,
நோக்க நோக்க நொடியில் நோக்க,
தாக்க தாக்க தடையறத் தாக்க,
பார்க்க பார்க்க பாவம் பொடிபட...'
எப்போதோ பாடமாகிப் போன வரிகள் இப்போதேன் நினைவுக்கு வருகின்றன? ....என்னை விட்டுவிடுங்கள்.... விடுங்கள்ள்ள்ள்ள்..
'அல்லற் படுத்தும் அடங்கா முனியும்,
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்,
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்,
பெண்களைத் தொடரும் பிரம ராட்ஷதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட...'
உயிர்ப்பிழந்த குரல் தேய்ந்து கொண்டே போகிறது... கடைசி நம்பிக்கையும் கைநழுவிப்போன தருணங்களில், இயலாமையின் உச்சகட்டத்தில் தத்துவங்களும், சித்தாந்தங்களும் செயலிழந்துபோக ஆன்மாவோ இருந்தும் இல்லாதிருக்கின்ற.. - அல்லது யாருக்குத் தெரியும் - ..இல்லாதிருந்தும் இருக்கின்ற இறைவனிடம் சரணடைந்து விடுகிறது.
உதடுகள் கிழிந்து தொங்க... மார்பு கடித்துக் குதறப்பட்டிருக்க... திமிறித் தோற்றுப்போய் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.., அவர்களது காம விளையாட்டுக்களை. பிய்த்தெறியப்பட்ட ஆடைகளுக்குள்ளால் வடிந்து கொண்டிருக்கிறது என் ஆன்மா... தனது வீம்புகளோடும்.., (அவ)மானங்களோடும்.., (அவ)மரியாதைகளோடும்.
வேதனை.. வேதனை.. உயிர்பிடுங்கும் வேதனை. ஒவ்வொரு அணுவும் வலிக்கிறது.. ஒவ்வொரு உணர்வும் மரத்துப் போகிறது.
*எனது கண்களின்
வடிப்பில்..,
என்னுள்ளத்தின் தவிப்பில்..
உங்களுக்குத்தான் எவ்வளவு இன்பம்..?
எரிந்து கொண்டிருக்கிறது உடம்பு, அனலிலிட்ட புழுவாய்த் துடித்துக் கொண்டிருக்கிறது இதயம். உடலில் எஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச சக்தியையும் ஒன்றுதிரட்டி நெருங்க முயன்ற மூன்றாவது **அதிரடிச் சட்டைக்காரனின் முகத்தில் காறி உமிழ்கிறேன்... "சீ... நாயே!" பூட்ஸ் காலால் அடிவயிற்றில் விழுந்தது ஒரு உதை. சர்வமும் கலங்கிற்று.., கர்ப்பப்பை கரைந்து கால்களினூடு ஒழுகிற்று. பிறக்காத என் மதலையின் ஈனக்குரல் எங்கிருந்தோ அலைந்துவந்து உயிர் பிடுங்கிச் சென்றது.
*பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தைப் போன்று
சிதைக்கப்பட்டேன்..
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்படுத்தப்பட்டன..
நிலமெங்கும் சிதறிக் கிடக்கும் பச்சை இரத்தம் நான் சிதைந்து போனதன் தடயமல்ல... அவர்களிலிருந்து வெளிப்பட்ட குரூரத்தின் அடையாளம். அவர்களது வக்கிர புத்தியால் வென்றெடுக்க முடிந்தது இவ்வளவும்தான். தோற்றுப் போனது என் உடல்தான்.., உயிரல்ல. மரணித்தது வெறும் பிண்டம்தான்.., நானல்ல.
ஒருகாலத்தில் 'நானாயிருந்த' என் உடலைக் கல்லோடு பிணைத்துக் கிணற்றிலெறிகிறார்கள். கோழைப் பயல்கள்.. பயந்தாங்கொள்ளிகள்.. நானோ இங்கிருக்க, வெறும் உடல் உங்களை என்ன செய்துவிடப் போகிறது?
'நான்' இன்னும் உயிர்த்திருக்கிறேன்...
சீதையாய்ப் பிறந்தபோது கற்பு என்ற உங்கள் கற்பிதத்தை நிரூபிப்பதற்காகத் தீக்குளிக்க வைத்தீர்கள்..
நான் உயிர்த்திருந்தேன்.
திரௌபதி என்னை, அடகுப் பொருளாய் வைத்து சூதாடியபோதும், நட்டநடுச் சபைதனில் துகிலுரிந்தபோதும்..
நான் உயிர்த்திருந்தேன்.
அரிச்சந்திரன் மனைவியாய், அரியணையில் அமர்ந்திருந்தவளை வெறும் பண்டமாய் மதித்து அந்தணனுக்கு விற்றீர்கள்..
நான் உயிர்த்திருந்தேன்.
குஷ்டரோகி உன்னைக் கூடையில் சுமந்துதிரிய நேர்ந்தபோதும்..
நான் உயிர்த்திருந்தேன்.
நம்பிவந்தவளை, துன்பங்களை மட்டுமல்ல ஒற்றை ஆடையையும் பகிர்ந்துகொண்டவளை நடுக்காட்டில் தன்னந்தனியே விட்டு ஓடினீர்கள்..
நான் உயிர்த்திருந்தேன்.
மன்னம்பேரி, கோணேஸ்வரி, கிருஷாந்தி, சாரதாம்பாள் வரிசையில் நாளை நானும்..,
உங்கள் வரலாற்றின் கறைபடிந்த அத்தியாயங்களில்..,
என் ஆயிரமாயிரம் சகோதர சகோதரிகளின் நினைவுகளில்..
உயிர்த்திருப்பேன்.
என்றென்றைக்கும் உயிர்த்திருப்பேன்.
*ஓய்ந்தேன் என மகிழாதே,
உறக்கமல்ல தியானம்..
பின்வாங்கல் அல்ல பதுங்கல்..
எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன,
உனக்கு நரையேற்றும் காலங்கள்...
*நினைவில் நின்றவை..
**அதிரடிச் சட்டை - (நன்றி:- திசேரா)
(அண்மையில்தான் அறிமுகமாகி, ஆழ்மனச் சிதைவுகளிலிருந்து எனை மீட்பித்த ஒரு உறவுக்கு..)
Tuesday, December 27, 2005
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
நினைவில் நீங்காமல் நிலைத்திருக்கின்ற பல கவிவரிகளுக்குச் சொந்தக்காரர் யாரென்பது மட்டும் மறந்தே போய்விடுகிறது..
தோழர்கள் யாராவது அறிந்திருப்பார்களானால் நிச்சயம் பின்னூட்டத்தில் குறிப்பிடத் தவறமாட்டார்களென எதிர்பார்க்கிறேன்.
நிவேதா
போதுமம்மா போதும்
கையாலாகாத் தனத்திற்கு வெட்கி
வருந்தி,வேதனையில் தவிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை
என்றென்னுகையில் உயிர் வாழ்தலின் நோக்கம் அர்த்தமில்லாததாகத் தெரிகிறதே
எரிந்த உள்ளங்களுக்கு
மறைந்த நெஞ்சங்களுக்கு அஞ்சலி செய்வதைத் தவிர வேறு என்ன செய்ய இயலுமம்மா கைப்பாவைகளாகக் கிடக்கும் நாம்
பச்சாதாபமாக எழுத வேண்டிய நிர்ப்பந்தங்கள் இனி நிகழக் கூடாதென்று வேண்டிக் கொள்கிறேன்
மதுமிதா, உங்கள் பின்னூட்டத்திற்கு மிக மிக நன்றி. ஒரு கணம் அவளாய் வாழ்ந்து பார்க்க முயன்றதன் விளைவுதான், இந்தப்பதிவு. கற்பனையே இத்தனை கலங்க வைக்கிறதே, யதார்த்தம் எத்தனை கொடூரமாய் இருந்திருக்கக்கூடும்?
இத்தகைய சந்தர்ப்பங்கள் இனியும் நேரக்கூடாதென்பதுதான் என் வேண்டுதலும்.
இன்னும், 'இரவில் அவாவுக்கு என்ன படிப்பு வேண்டிக்கிடக்கு? அப்படி இரவில் நடமாடித்திரிந்தால் ஆமி இப்படித்தான் செய்வான்' என்று நியாயம் பேசுபவர்கள்தான் இந்த இராணுவத்தைவிட இன்னும் எனக்கு அச்சமூட்டுகின்றனர் (அண்மையில் வீட்டுக்கு வந்த ஒருவர் பேசிய அருமையான 'தத்துவம்' தான் மேலே கூறியது).
....
கடைசி * கவிதை,சுந்தர ராமசாமியினது என்று நினைவு.
இனவாதம், பாலியல்வாதம் ஆகிய இருபெரும் பிசாசுககளின் கூட்டுக் குருரமே தர்சினியின் அவலம். இப்பிசாசுகள் எவ்வடுவம் எடுத்தாலும் அவைக்கெதிரான குரல்களைக் கொடுப்பதும் போராட்டங்களைத் தொடர்வதுமே நாம் தர்சினிக்குச் செய்யும் அஞ்சலியாக அமையும்.
சீதையே சீரழிந்து போ!
நளாயினியே நாசமாகப் போ!
நாங்கள் பது யுகப் பெண்கள்!
நாங்கள் விடுதலை பெற்ற "நாங்கள்". ஆனால், உடல்கள் அல்ல!
விடுதலைப் பெற்று நாங்கள் இப்போ நாடு கடந்து போனோம்!
இங்கே நாங்கள் தினமும் ஒரு கலவி, தினமும் ஒரு கணவன். ஏனைன்றால், நாங்கள் "நாங்கள்"- உடல்கள் அல்ல.
நாங்கள் இப்புதிய சமுதாயம் படைத்தோம். இங்கே மூன்று வினாடிக்கு ஒருத்தி சீரழிகிறாள்.
நாங்கள் புதுமைப் பெண்கள்! நளாயினியே நாசமாகப் போ!
நாங்கள் கற்பென்னும் கட்டு களைந்தோம். கலவிக்காக கட்டுடல் வளர்த்தோம்! சீக்கிரம் விளகுங்கள். நாங்கள் சீரழிய செல்லவேணும்.
சீதையே நீ சீறழிந்தது போதும்!
டிசே, உண்மைதான்.. தங்கள் சகோதரியோ, குடும்பத்துப் பெண்களோ நேரடியாகப் பாதிப்படையாதவரை இத்தகைய 'தத்துவவாதிகள்' இன்னுமின்னும் பேசிக்கொண்டேயிருப்பார்களென உங்கள் கவிதையொன்றில் வாசித்த ஞாபகம்..
அநியாயக்காரர்களை நியாயப்படுத்தி.., பலியாடுகள்மீது பழிசுமத்தி... எங்கே போய் முடியப்போகிறதோ?
அது சு.ரா வினுடையதாகத்தானிருக்க வேண்டுமென்றே நானும் நினைத்திருந்தேன். ஆனால் நிச்சயமாகத் தெரியாதபடியால் அவரது பெயரைக் குறிப்பிடவில்லை. நினைவூட்டியமைக்கு நன்றி.
தர்சன், பின்னூட்டத்திற்கு நன்றி. மேலே குறிப்பிட்ட தத்துவவாதிகளைவிட உங்களைப்போல போராடத் துடிப்பவர்கள்தான் இன்றைய உலகிற்குத் தேவை.
ஜோதி, பின்னூட்டத்திற்கு நன்றி என்பதைவிட இந்தவிடத்தே வேறு எது சொன்னாலும் பொருத்தமற்றதாகப் போய்விடுமோவென்ற அச்சம் என்னை மௌனியாக்கிவிட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள்.
பழம்பெரு புராணப் புரட்டுகளைத் தூக்கியெறிந்தால் மட்டுமே
பெண்கள் எழுச்சியுற முடியும் என்ற புரிதல் இன்று வந்திருக்கிறது.
எப்பொழுதுமே இந்தக் கணல் காக்கும் படி வாழுங்கள்.
உரிமை என்பது எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம். அதைக் கையாளும் பக்குவம் வந்தால் - இருந்தால் - எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னூட்டத்திற்கு நன்றி, நண்பன்.
எல்லாம் அருமை. விழிப்பு உணர்ச்சியைத் தூண்டும் வார்த்தைகள்!
வாழ்த்துக்கள் சகோதரி!
உங்கள் எழுத்தாற்றல் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்
பின்னூட்டத்துக்கு நன்றி, மௌனமொழி!
மனசின் வரிகள். வெளிப்பட்ட எழுத்து பச்சைக்குழந்தையின் உதிரத்தோடும் நிணத்தோடும் இருக்கிறது. பூங்காவழி உங்கள் எழுத்துக்களை வந்தடைந்தேன். ஒரு சில அரசியல் வாக்குமூலங்களைப் படைப்பில் தவிர்த்திருக்கலாம். மற்றபடி வழமையான ஈழத்துத் தோழர்களின் மொழியினின்று வேறுபட்டு நிற்கிறது உங்கள் மொழி. ஆளுமையும் கனமுமிக்க மொழியின் அடிநாதமாய் ரவுத்திரமும் அடக்கவியலா விசும்பல்களும் பிரதிக்கு வலுசேர்த்து வாசிப்பாளனைக் வீழ்த்துகின்றன. வாய்ப்பிருந்தால் உங்களின் பிற ஆக்கங்களையும் வாசித்துவிட்டு கருத்துப்பதிய முயல்கிறேன்.
நன்றி, மிதக்கும்வெளி!
அக்கா,
உங்களுடைய கவிதை வாசித்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது. நானும் இலங்கையில் இருக்கின்ற பாடசாலை மாணவி. கவிதை எழுதுவதில் எனக்கும் ஆர்வம் உண்டு. வாசித்து பாருங்களேன்.
http:\\anaha.elankaonline.com
நிவேதா உங்கள் கவிதைகள், ஆக்கங்களை படித்தாலும் பின்னூட்டம் இடுவது குறைவு.
உங்கள் ஆக்கங்கள் பேசும் விடயங்கள், அதன் நடை எப்போதுமே வித்தியாசமானதாகவும், கனமானதாகவும் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி அநகா..,
உங்கள் வலைப்பதிவு பார்த்தேன்.. தொடர்ந்து எழுதுங்கள்.. ஊடகத்துறை சார்ந்த உங்கள் ஆர்வம் பிடித்திருந்தது.. கனவு நிச்சயம் நனவாக வாழ்த்துகிறேன்..
பின்னூட்டத்துக்கு நன்றி, வி.ஜெ.சந்திரன்!
Post a Comment