1.
மார்பின் மீது கவிழ்ந்து கிடந்தது
ரமேஷ் - பிரேமின் கவிதைத் தொகுதி
என்னையறியாமலேயெ உறங்கிவிட்டிருந்தேன்
பிரதியின் பக்கங்களிலிருந்து நழுவிய
புலிக் கவிதையொன்று
ஆழ்கனவுகளினூடு நுழைந்து
என் முலையுறிஞ்சத் தொடங்கியது
இருண்ட தெருக்களின்
ஆளரவமற்ற வளைவுகளின் மறைப்புகளில்
எதிர்கொள்ள நேர்ந்த
சிலமனிதர்களின் நினைவும்,
பாம்பின் வாலாய்
தொங்கிக்கொண்டு கிடப்பதை
அவர்கள் காட்டிக்கொண்டு திரிவதும்
ஏனோவொரு இனம்புரியா அதிர்வுடன்
கனவினை ஒருகணம் உலுப்பலாயிற்று
பேருந்துகளின் நெரிசல்களினூடு
பிருஷ்டமுரசிய விறைத்த வால்களை
முறித்தெறிய தீராத அவாக்கொண்டு
இரட்டைப் பூட்டிட்டு
தன்னைத்தான் தாளிட்ட
என் யோனி
கவிதையின் ஸ்பரிசத்தில்
கிளர்ந்தெழுந்து கசியவாரம்பித்ததும்
அதிசயம்தான்.
2.
கொஞ்சங் கொஞ்சமாக
இல்லாமலாகிக் கொண்டிருந்தது,
மொழியினதும், எழுத்துக்களினதும்
சாத்தியப்பாடுகள் குறித்தான
எனது பிரக்ஞை.
வரிவடிவங்கள் கலைத்து
அடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன
எனது மொழி பிடுங்கப்பட்டு
அந்நிய எழுத்துருவமொன்று
வலிந்து திணிக்கப்பட்டது
என் மண்டையோடு பிளந்து
'அவை எங்கள் உணர்வுகளை
மோப்பம் பிடிக்கக் கூடியவை'
கூட்ஸியின் வரிகள்
ஆறுதல் தரத் தவறின.
கனவு வளர்ந்தது,
சாத்தியப்பாடுகளை கட்டுடைத்துக்கொண்டு
இனி,
நான் பேசப்போவதில்லை
எதுவும் எழுதுதலும் இனி சாத்தியமில்லை
என்னைப் பற்றி,
என் கனவுகளைப்பற்றி
எப்படித்தான் பேசுவது
உங்கள் வாயைக்கொண்டு?
3.
புலியின் நெற்றிப்பொட்டிலிருந்து
நழுவிய ஏதோவொன்று
தொடைகளின் இடுக்கைத் தடவி உள்நுழைந்து
கருப்பையை நிறைக்க
திடுக்கிட்டு விழித்தேன்
கனவினைக் கீறிப்பிளந்து
வெளியேறிய கவிதை
பிரதிக்குள் தஞ்சமடைந்து
அப்பாவியாய் ஏறெடுத்து நோக்கிற்று
பீதியில் தோய்ந்திருந்த என் முகத்தை
ரௌத்திரம் கொண்ட
பெண்புலியின் குரல் மட்டும்
தொடர்ந்தும் காதின் மடல்களைத்
துளைத்த வண்ணம்,
'நான் சிட்டுக் குருவிகளைப்
பிரசவிக்க விரும்புகிறேன்..'
தொடைகளினிடையே இரத்தம் கசிந்தபடியிருக்க,
'சக்கரவாளக் கோட்டம்'
என் மார்பின் மீது
கவிழ்ந்திருந்தது.
*Painting: Girl from the Back by Salvador Dali
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
/பேருந்துகளின் நெரிசல்களினூடு
பிருஷ்டமுரசிய விறைத்த வால்களை
முறித்தெறிய தீராத அவாக்கொண்டு
இரட்டைப் பூட்டிட்டு
தன்னைத்தான் தாளிட்ட
என் யோனி
கவிதையின் ஸ்பரிசத்தில்
கிளர்ந்தெழுந்து கசியவாரம்பித்ததும்
அதிசயம்தான்.
/
இந்த வரிகள் என்னைக் கொன்றன நிவேதா. ஆனால் மற்ற இரு கவிதைகளும் கிராப்ட் - ஆக முடிந்துபோனதாகவே தோன்றுகிறது. அதுவும் நீங்கள் தேர்ந்தெடுத்த படம் கனிமொழிகருணாநிதியின் (அப்படித்தான் அவர் அந்தநூலில் குறிப்பிட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்). 'கருவறைவாசனை' நூலின் முகப்பு என்று நினைக்கின்றேன். நல்ல கவிதைகளைத் தந்ததற்காக இன்னும் ஒருகோடி வணக்கங்களும் வாழ்த்துக்களும்..
பிரியங்குளுடன்..
சுகுணாதிவாகர்.
இவ்வாறான விடயங்களை ஒரு பெண் எழுதுவதற்கும்,ஆண் எழுதுவதற்கும் இடையிலான வித்தியாசங்கள் தெளிவாகப் புரிகின்றன. நன்றி.
'நான் சிட்டுக் குருவிகளைப்
பிரசவிக்க விரும்புகிறேன்..'
நல்ல கவிதைகள் ..DALI யின் புகைப்படம் தெரியவில்லை ..க்ளிக்கி னால் அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட பகுதி ..:) (site blocked)அருமையான நாடு..
நன்றி, சுகுணா திவாகர்!
ஆம், அந்தப் படம் 'கருவறை வாசனை'யின் முகப்பில் இடம்பெறுவதுதான்.
நன்றி, டிசே!
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்..:-)
பின்னூட்டத்துக்கு நன்றி, அய்யனார்!
படம் தெரியாததன் காரணம் புரியவில்லை.. எதற்கும் ஒருமுறை பார்க்கிறேன்.. இந்தவிடயங்களில் எனது கணனி அறிவு பூச்சியத்துக்கு கொஞ்சம் மேலேதான் நிற்கிறது..:-(
நிவேதா,
உங்களது வலைப்பதிவை இப்போதுதான் முழுமையாக படித்து முடித்தேன்.
ஆரம்பத்தில் நண்பியொருவர் மூலமே உங்களை அறிந்து சில பதிவுகளை படித்த போது ஏமாற்றமாக இருந்தது. (அருளரின் லங்காராணி பற்றி எதுவோ எழுதியிருந்தீர்கள்)
பிரேம்-ரமேஷ் வாசிப்பு அனுபவமாக இக்கவிதை இருந்தபடியால் தான் மீள்பரிசீலனை(!) செய்தேன். முக்கியமானவராக தோன்றுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள், கொழும்பின் இலக்கிய சம்பவான்களின் கையில் சிக்கி விடாதீர்கள் - மறந்தும் கூட. சராசரி ஆண்களை விட மோசமான பிற்போக்காளர்கள் அவர்கள். அதை நானும் என் குழுவினரும் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறோம்.
பரீட்சைகளில் கவனம் குவிக்க வேண்டியிருப்பதால் நிறைய எழுத முடியவில்லை. பிறிதொரு சமயம் விரிவாக எழுதுகிறோம்.
நன்றி அதீதன்,
உங்கள் பதிவுகளைப் பற்றியும் நண்பரொருவர் மூலமாக அறிந்து வாசித்தேன்.. நன்றாக இருந்தன.. நன்றி..
ரமேஷ் - பிரேம் எனதும் இலக்கிய ஆதர்சனமென்று சொல்லலாம்.. அதிகம் பிடித்தது அவர்களது சிறுகதைகள்தான்.. சொல் என்றொரு சொல், மகா முனி, முன்பொரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன.. ஆதியில் மாமிசமிருந்தது, கட்டுரையும் கட்டுக்கதையும், பேச்சு மறுபேச்சு, உப்பு, சக்கரவாளக் கோட்டம் போன்றவை அவர்களது நூல்களில் வாசித்தவை.. மொழிபெயர்ப்புக்களும் வாங்கி வைத்திருக்கிறேன்.. இன்னும் வாசிக்கவில்லை.. உங்களது பெயரைப் பார்த்ததும் ஒருகணம் புன்னகைத்துக் கொண்டேன்..:-)
ஏமாற்றத்துக்கு மன்னிக்கவேண்டும்.. நான் யாரின் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றும் நோக்கத்துடன் எழுதுபவளல்ல.. ஒரு மாணவியாக எனக்கான கடமைகளையும், பொறுப்புக்களையும் சரிவர நிறைவேற்றவே அல்லாடிக் கொண்டிருப்பவள்.. இடைக்கிடை சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பாதிக்கப்படும்போது மட்டும் ஒருவிதத் தப்பித்தலுக்காக எழுதுவது.. எனக்குத் தோன்றிய எதையுமே.. அதை எவரும் வாசிக்க வேண்டும், பாராட்ட வேண்டுமென்ற குறைந்தபட்ச எதிர்பார்ப்பு கூட இல்லை.. அது பிடிப்பதும், பிடிக்காததும் அவரவரைப் பொறுத்தது..
நானொன்றும் அவ்வளவு முக்கியமான பேர்வழியல்ல.. ஆமாம், இலக்கியவாதிகளைப் பற்றி நீங்கள் கூறியதென்னமோ உண்மைதான்.. அவர்களுடன் சிறுவயது முதலே - வண்டவாளங்களெல்லாம் தெரிந்து கொண்டதால் - விலகி நிற்கப் பழகியாயிற்று.. இங்கே பெரும்பாலும் எவருக்கும் என்னைத் தெரியாது.. தெரிந்துகொள்ள வேண்டுமென்றும் நான் விரும்பியது கிடையாது.. அல்லது அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்..:-)
எனக்கும் பரீட்சைகள்தான்.. இருந்தாலும் என்ன செய்ய..:-(
மறுபடியுமொருமுறை, வருகைக்கு நன்றி!
/உங்களது பெயரைப் பார்த்ததும் ஒருகணம் புன்னகைத்துக் கொண்டேன்..:-)/
சொல் என்றொரு சொல் ஞாபகம் வந்ததா ..எனக்கும் :)))
அய்யனார், ரமேஷ் பிரேமின் ஆரம்பகால எழுத்துக்களைத் தொகுத்து 'அதீதனின் இதிகாசம்' என்றொரு தொகுப்பும் வந்திருக்கின்றது :)).
தகவலுக்கு நன்றி அனானி
கட்டமைப்பு வசதியின் அடிப்படையில் ரமேஷ் ப்ரேம் இன் எழுத்துக்களை எந்த வகைப்பாட்டில் அடக்க?
சிறிது மேஜிக்கல் ரியலிச தன்மை கொண்டிருந்தாலும் ..அதை என்னால் முழுவதுமாக ஒத்துக் கொள்ள முடியவில்லை
நன்றி அய்யனார், அனானிமஸ்!
இரண்டும்தான் நினைவுக்கு வந்தன..:-)
மாயா யதார்த்தமென்ற கட்டமைப்புக்குள் அவர்களது எழுத்துக்களை வரையறுப்பது சரியெனத் தோன்றவில்லை.. எது எப்படியிருந்தாலும், படைப்புக்களை ஒவ்வொரு பெயரிட்டு அழைப்பதும், குறித்த சட்டகங்களுக்குள் முடக்கிவிடுவதும் மனதுக்கு அவ்வளது உவப்பில்லாதவை..
வழமையான சிறுகதைப்பாணியை கட்டுடைத்தவர்கள் அவர்கள்.. அப்படியிருக்க, அவற்றை இன்னமும் - பழைய - சிறுகதையென்ற சட்டகத்துக்குள்ளேயே அடக்கிவிட வேண்டுமா என்ன.. புதிய பெயர்களைக் கண்டுபிடித்தாக வேண்டிய தேவையிருக்கிறது.. அல்லது தலைப்பிடப்படாத பிரதியொன்றை ஏற்றுக்கொள்வதற்கான / வாசிப்பதற்கான பக்குவம் வேண்டியிருக்கிறது..
Post a Comment