Thursday, April 12, 2007

சரிநிகர் - சில நினைவுக் குறிப்புகள்

1.

அப்போதெல்லாம் நான் மிகச் சிறியவளாயிருந்தேன்.. குறும்பு செய்துகொண்டு துள்ளித் திரிந்த பருவத்தில் என் எதிர்பார்ப்புகள் மிகச் சாதாரணமானவையாக இருந்தன.. கனவுகளோ, களங்கமற்றவையாக இருந்தன..

ஒரு படைப்பை வாசித்துப் புரிந்துகொள்ளும் மனப்பக்குவத்தை அடைந்துவிடாத நாட்களிலேயெ 'சரிநிகர்' என்ற வார்த்தை என்னுள் ஆழப்பதிவதாயிற்று. பனியடர்ந்த பெருவெளியொன்றை ஊடறுத்துப் போன பயணம் குறித்தான மனப்பதிவு அது. இன்றும் சரிநிகரெனும்போது சட்டென்று நினைவுக்கு வருவது அந்த உலகின் முடிவினை நோக்கிய பயணம்தான்.

அந்நாட்களில் நானொரு முரட்டுப் பிடிவாதங்கொண்ட சிறுமியாயிருந்தேன். 'கோள்முட்டி' என அக்கா திட்டிக் கொண்டிருந்ததெல்லாம் இப்போதும் நினைவிருக்கிறது. அன்றும் அப்படித்தான்.. அக்காவுடன் ஏதும் தகராறிருந்திருக்க வேண்டும்.. அருமையானதோர் சந்தர்ப்பத்தை இழந்து போனேன்..

'மழை தழுவிய சாலைகளின் வழி காற்று எழுதிச் சென்ற மௌனங்களோடு..' நட்சத்திரன் அண்ணாவின் கரம் பற்றி, அவர் கவிதை சொல்லக் கேட்டபடி நடந்திருந்த பொழுது இனியொருபோதும் வாய்க்காதென அக்காவைப்போல நானும் மனம்சிலிர்த்துச் சொல்லித் திரிந்திருக்கலாம்..

அக்காவுடனான கோபத்தில் நட்சத்திரன் அண்ணாவின் மற்ற கையைப் பிடித்துக் கவிதை கேட்டுச் செல்லும் வாய்ப்பை இழந்துதான் போனேன்..

பின்னரொரு பொழுதில் இந்தப் பயணம் குறித்து நட்சத்திரன் செவ்விந்தியன் ஒரு கவிதை எழுதியதும் நினைவு.. 'குடிக்கத் துணையின்றி' என்ற தலைப்பிலென்று நினைக்கிறேன்.. அக்கவிதை இந்தப் பயணம் குறித்ததா என்பது சரியாகத் தெரியவில்லை.. எனினும், நினைவினடுக்குகளில் பதிந்திருந்த சம்பவங்கள் இக்கவிதையை வாசிக்கும்தோறும் வெளிக்கிளம்ப அப்படித்தானிருக்கவேண்டும் போலத் தோன்றுகிறது.


2.

சரிநிகரின் இலக்கியப் பங்களிப்பெனும்போது (எனது பார்வையில்)... செல்வி, ஊர்வசி, ரேவதி, ஆழியாளென அத்தனை ஈழத்துக் கவிஞர்களையும் அறிமுகப்படுத்தியது சரிநிகர்தான். அந்நாட்களில்.., கவிதைகளின் உள்ளர்த்தம், அதனுள் பொதிந்திருந்த / கவிஞர் கூறவந்த உண்மையான உணர்வுகள் புரிந்ததோ என்னமோ, அந்தக் கவிதைகள் மிகவும் கவர்ந்திருந்தன. இன்று அக்கவிதைகளை மீள்வாசிப்புக்குட்படுத்தும்போது எனது புரிதல் அன்றைய பொழுதைவிட பெரிதும் மாறுபட்டிருக்கலாம். ஆனால், கவிதை மீதான ஈர்ப்பு விட்டுப்போகாது ஒருபோதுமே..

சிறுகதைகள் அந்தளவு பிடித்தமானதாயிருந்ததில்லை. சிறுகதையின் பரிணாமங்கள் / அது வியாபிக்கக்கூடிய வெளி / அதன் சாத்தியப்பாடுகள் குறித்தான பிரக்ஞையோடு, புரிதலோடு எத்தனைபேர் எழுதுகிறார்களென்று தெரியவில்லை. ஷோபாசக்தி, ரமேஷ் - பிரேம், அம்பை போன்றவர்களை விதிவிலக்கெனலாம்.. அநாமிகாவின் சில கதைகளும் பிடிக்கும்.. சில ரஷ்ய, தென்னமெரிக்க சிறுகதைகளைப் போல ஏன் தமிழில் எழுதமுடிவதில்லையென்ற கேள்வி நெடுநாட்களாகவே இருந்துவந்தது.

உதாரணத்துக்கு ஆல்பெர்தோ சிம்மலின் 'பிரிவு' எனும் தென்னமெரிக்கச் சிறுகதை.. ஒற்றைப் பந்தியைக் கொண்டது..:

அபா நகரம் நிலநடுக்கத்தால் அழிந்துபோன நாளில் ஒரு தாய் தன் மகன் மரணமடைவதைப் பார்த்தாள். அவளால் அந்த மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனைத் திருப்பித் தருமாறு தெய்வங்களிடம் வேண்டினாள். கருணை கொண்ட தெய்வங்களும் அந்தக் குழந்தையின் ஆன்மாவை மறு உலகத்தில் நுழைய அனுமதிக்காமல் மறுபடியும் அதை அவனுடைய உடலிலேயே புகுத்திவிட்டன. ஆனால், தெய்வங்களைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே! அந்த உடல் இன்னமும் செத்துத்தான் கிடக்கிறது. அதன் காயங்கள் ஆறவில்லை. மகன் திரும்பக் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் திளைத்த தாய் அது கஷ்டப்படுவதையும் துன்புறுத்தும் தனது சதைப்பிண்டத்தின் கைதியாயிருப்பதையும் கண்டு பீதி அடைந்தாள். அதன் பிறகுதான் அந்தக் கொடுமை நிகழ்ந்தது. குழந்தை அழுக ஆரம்பித்தது. புழுக்கள் அதன்மீது அப்பிக்கொண்டு அதன் உடலுள் புகுந்தன. அது சாவை வேண்டி அழுதது. ஆனால், நான் தான் சொல்கிறேனே, அது ஏற்கனவே இறந்துபோயிருந்தது. நொந்துபோன அந்தத் தாய் அதைக் கத்தியால் குத்தினாள். ஒருமுறை, இரண்டு முறை, முன்று முறை, பல முறை. பிறகு பெரிய பாறைகளால் தாக்கினாள். விஷத்தைக் கொடுத்தாள்.கழுத்தை நெரித்தாள்.ஆனால் அந்தக் குழந்தை வலியில் அழுதுகொண்டே இருந்தது. கடைசியில் அந்தத் தாய் தோல் கிழிந்த, எலும்புகள் உடைந்த, இரத்தம் உறைந்த அந்த உடலைத் தூக்கிக்கொண்டுபோய் நெருப்பில் எறிந்தாள். பாவப்பட்ட அந்தக் குழந்தையும் எரிந்து புகையாகவும், சாம்பலாகவும் மாறியது. காற்று அதைச் சிதறடித்து வெளியெங்கும் கலக்கச் செய்தது. அந்தத் தாய் முடிந்தளவு அவளைத் தேற்றிக்கொண்டாள். ஆனால் அவள் அதைச் செய்திருக்கக்கூடாது. ஏனென்றால் அந்தக் குழந்தையின் ஆன்மா கண்ணுக்குப் புலப்படாத அந்த எச்சங்களின் வழியாக இன்னமும் அலைந்து கொண்டுதானிருக்கிறது. துயருற்ற அந்த ஆன்மா உலகில் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறது. சுவாசிக்கும்போதும், வாயைத் திறக்கும்போதும், நீங்கள் அதை உணர்கையில் திடீரென்று ஒரு சோகம் உங்கள் மீது கவியும்.
(நன்றி: இந்த நகரத்தில் திருடர்களே இல்லை - லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள். தொகுப்பும் மொழிபெயர்ப்பும்:- ராஜகோபால்)

கதை முடிவடையும் விதம் மனதில் சர்ரென்று ஒருவித வலியை ஏற்படுத்துகிறது.. இல்லையா..?


3.

இப்போது நான் வளர்ந்தவள்.. (அல்லது அப்படித்தான் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது) உச்சகட்ட எதிர்பார்ப்புகளும், விருப்பங்களுமே என்னுள் நிறைந்துள்ளன.. கனவுகள் தொடர்ந்தும் களங்கமற்றவையென இறுமாந்திருப்பது தன்னைத்தான் ஏமாற்றிக்கொள்வதாகும். இந்நிலையில் மறுபடி சரிநிகருடனான தொடர்பு..

தற்போது, சில வருட இடைவெளியின் பிற்பாடு மறுபடியும் சரிநிகர் வெளிவரப்போவதாக அறிந்தபோது - மூன்றாவது மனிதன் வெளிவரப் போவதாக பௌசர் அறிவித்தபோது இருந்ததைப்போல - அத்துணை சந்தோஷமாகவிருந்தது. எம்மவர்களின் எழுத்துக்களை வெளிக்கொண்டுவருவதில் இத்தகைய இதழ்களின் பங்கு அளப்பரியதென்றவகையில் இது தொடர்ந்தும் வெளிவர வேண்டுமென்பதுதான் அனைவரையும்போல எனது விருப்பமும்..

வெளிவந்த முதல் இதழைப் பற்றி சில சுருக்கக் குறிப்புகள்:

- இதழின் தோற்றம்.. அதிகம் ஆடம்பரமாக இருந்ததாகப் பலரும் பேசிக்கொள்கிறார்கள்.., எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இந்தளவு செலவளித்திருக்க வேண்டியதில்லையோ..?! உள்ளுக்குள்ளே இருக்கும் சமாச்சாரங்கள்தான் அதன் தரத்தினைத் தீர்மானிக்கப் போகின்றவை.., வெறும் தோற்றமல்ல.. இதற்குச் செலவளிக்கும் பணத்தைச் சேமித்து விலையைக் குறைக்கமுடியுமானால் சஞ்சிகை பல தரப்பினரையும் சென்றடையக்கூடிய வாய்ப்புண்டு.

- விலை.. அதிகமாக இருப்பதாக குறைபட்டுக் கொள்வதைக் கேட்க முடிந்தது. ஒரு இதழுக்கு முந்நூறு ருபாய் செலவாகுவதாகவும், நூறு ருபாய்க்கு விற்பதாகவும் கேள்விப்பட்டேன். சாதாரணமாக கொழும்பில் விற்கும் அனைத்து சஞ்சிகைகளுமே - மூன்றாவது மனிதன், உயிர்நிழல் உட்பட - இதே விலையில் அல்லது இதற்கும் அதிகமாகவே தான் விற்கப்படுகின்றன. அனைவரையும்தான் கழுமரமேற்றவேண்டிவரும்.. பொதுவாகவே இத்தகைய சஞ்சிகைகள் உயர்தர வர்க்கத்தினருக்கானவை மட்டும்தானென்பதால் இது குறித்து அபிப்ராயம் சொல்வதற்கேதுமில்லை.

- சிங்கள மொழிமூலப் படைப்புகள் பலவற்றின் மொழிபெயர்ப்பு இதழை அதிகம் ஆக்கிரமித்துள்ளதை அவதானிக்க முடிந்தது. ஒருவகையில் நல்ல விடயம்தான்.. எனினும், சிங்கள சஞ்சிகைகளில் தமிழ்ப் படைப்புக்களுக்கு இத்தகைய இடம் வழங்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுவதைத் தவிர்க்கமுடிவதில்லை. இன ஒற்றுமையை / புரிந்துணர்வை பேண முயற்சித்திருக்கிறார்களோ என்னமோ.., ஆனால் நிர்ப்பந்தத்தின் பேரிலா..?? எம்மவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டிய தேவையும், கடப்பாடுமிருக்கின்ற நிலையில் இத்தகைய அதிகப்படியான ஒதுக்கீடு அவசியம்தானா..? இனத்துவேஷம் கதைக்கிறேனென அர்த்தமில்லை.. இத்தகைய தரம்வாய்ந்த சஞ்சிகைகள் இலங்கையிலிருந்து வெளிவருவது அரிதாகவிருக்க, எம்மவர்களது எழுத்துக்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கவேண்டிய கட்டாயமிருப்பதாக உணர்கிறேன்.

- சிமோன் தி பூவா கவிதைகளின் மொழிபெயர்ப்பு அருமையாகவிருந்தது. தமிழாக்கம் செய்தவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.. அவரின் அனுமதியுடன் தானென்றால் மறுப்பேதுமில்லை. தவறுதலாக நிகழ்ந்திருந்தால், இதுகுறித்து கவனத்திலெடுப்பது நன்று. அதுவும் சில தலைப்புகளிலேயே எழுத்து மற்றும் அமைப்பு ரீதியான தவறுகள் இடம்பெற்றிருப்பதும்கூட கவனிக்கப்பட வேண்டியனவே..

- சினிமாப் பகுதியில் வெளிவந்த அனைத்துக் கட்டுரைகளும் மிகவும் அருமையாகவிருந்தன என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்..


வெளிநாடுகளில் வதியும் தோழர்கள் மற்றும் ஆர்வலர்கள் சந்தாதரர்களாவதன் மூலம் சரிநிகரின் தொடர்ச்சியான வருகைக்கு உதவ விரும்பினால்.., தொடர்பு: sarinihar@gmail.com

6 comments:

DJ said...

'சரிநிகர்' குறித்து சில விமர்சனங்கள் இருக்கின்றன. அவை இப்போதைக்கு ஒருபுறம் இருக்கட்டும். கொழும்பில் இருந்த காலங்களில் விரும்பி வாசித்த சஞ்சிகைகள் தினமுரசும், சரிநிகரும் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டியவை. 'திசை' பத்திரிகை ஒருகாலத்தில் பல படைப்பாளிகளைப் பரவலாக வாசகர்களிடம் அறிமுகஞ்செயதது போன்று புதிய படைப்பாளிகளை சரிநிகரும் அறிமுகஞ் செய்திருக்கின்றது. சரிநிகரில் எழுதிய 'திருக்கோயில்' கவியுவன் எனக்குப் பிடித்தமான ஒரு எழுத்தாளராய் அந்தப்பொழுதுகளில் இருந்திருக்கின்றார். சு.வில்வரத்தினம், சேரன் போன்றோரின் கவிதைகளை முதன்முதலாய் வாசிக்கமுடிந்ததும் சரிநிகரினூடாகத்தான். விக்டர் ஐவனின் மொழிபெயர்ப்புகள், நாசமறுப்பானின் பத்திகள் அரசியல் குறித்த மாற்று கோணங்களை அன்றைய காலங்களில் எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றன. அ.இரவி, டேவிட் நந்தகுமார்(?) என்ற பெயரில் ஊர் நினைவுகளை தொடர்ந்து எழுதியபோது அந்தப்பத்திகள் நெருக்கமாயிருந்தது என்பது ஒரு நனவிடை தோய்தல் :-).
........
சரிநிகர் மீண்டும் வருவது மகிழ்ச்சியே. பக்கங்களின் பளபளப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட, பரவலாக வாசகர்களைச் சென்றடைவது குறித்து அக்கறைப்பட்டால் நன்றாகவிருக்கும்.

நிவேதா said...

பின்னூட்டத்துக்கு நன்றி, டிசே!

Anonymous said...

Hi,

Do they have a website for Sarinihar?

நிவேதா said...

வலைத்தளமில்லையென்று நினைக்கிறேன்.. சரிநிகர் பற்றிய எதுவித மேலதிகத் தகவல்களை அறிந்திடவும் மேற்குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியை உபயோகிக்க வேண்டுகிறேன்..

விசரன் (அல்லது விசாரன்??!!) said...

//சிங்கள மொழிமூலப் படைப்புகள் பலவற்றின் மொழிபெயர்ப்பு இதழை அதிகம் ஆக்கிரமித்துள்ளதை அவதானிக்க முடிந்தது. ஒருவகையில் நல்ல விடயம்தான்.. எனினும், சிங்கள சஞ்சிகைகளில் தமிழ்ப் படைப்புக்களுக்கு இத்தகைய இடம் வழங்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுவதைத் தவிர்க்கமுடிவதில்லை//
தமிழ்ச் சனங்கள் (இப்படி ஒற்றை அடையாளத்துக்குள் குறுக்குவதில் மனத்தடை உண்டெனினினும் ஒரு வசதிக்காக பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை) என்ன யோசிக்கிறார்கள் என்பதை சிங்கள மக்கள் மத்தியில் (திரும்பவும் அதே பிரச்சனை!!) தெரிவிப்பதற்கு எவரும் பிரையாசைப் படுவதில்லை என்றால் அதற்காக தமிழிலும் அப்படி நடக்க வேண்டும் என்றில்லை தானே நிவேதா? மற்றவர்களின் சிந்தனை என்ன என்பது குறித்து பிரக்ஞையுடன் இருக்க விழைவது நல்லது தானே? சரிநிகர் கடந்த இதழிலிருந்த அரசியல் கட்டுரைகளில் அரச அதிகார மையத்தை மாத்திரமே விமர்சிக்க நேர்ந்திருப்பதை அவதானித்தீர்களா?

//இத்தகைய தரம்வாய்ந்த சஞ்சிகைகள் இலங்கையிலிருந்து வெளிவருவது அரிதாகவிருக்க, எம்மவர்களது எழுத்துக்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கவேண்டிய கட்டாயமிருப்பதாக உணர்கிறேன்//

அவர்களையும் "எம்மவர்களாக" பார்க்கத் தவறுவதற்கான காரணங்களும் ஆராயப்பட வேண்டியவைதான்.

நிவேதா said...

நன்றி விசாரன்.