Sunday, April 29, 2007

காலனித்துவ இலங்கை அரசியல் சமூகத்தில் தமிழ்ப் பெண்களும் பெண்களின் அரசியலும்

காந்திய வழி சமூக சேவையாளர் மங்களம்மாளை முன்வைத்து..

(வள்ளிநாயகி இராமலிங்கத்தின் 'யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி - ஓர் ஆய்வு' எனும் நூலை வாசித்துக் கொண்டிருந்தபோது அவசரமாகவேனும் சில குறிப்புகள் எழுத வேண்டுமென தோன்றியதன் விளைவு )

1.
அறிமுகம் - வரலாற்றில் மறுக்கப்பட்ட அங்கீகாரம்


அதிகார வர்க்கம் எப்போதும் மிதவாதப் போக்குடையவர்களைத் திருப்திப்படுத்துவதன் மூலம் 'தீவிரவாதி'களின் எழுச்சியை முடக்கிவிட முயற்சிப்பது உலக வரலாற்றின் அத்தியாயங்கள் தோறும் நாம் கண்டுவரும் உண்மை. இறுதியில், அம்மிதவாதிகள் வரலாற்று / காவிய நாயகர்களாகி விடுவதையும், உண்மையாகப் பாடுபட்டவர்கள் போதிய அங்கீகாரம் வழங்கப்படாமல் உதாசீனப்படுத்தப்படுவதையும் கூட பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்.

மல்கம் எக்ஸின் 'என் வாழ்க்கை' எனும் சுயசரிதையை வாசித்து முடித்தபோது மனதில் மேலெழுந்ததும் இதே உணர்வுதான். கறுப்பினப் போராட்ட வரலாற்றில் மார்ட்டின் லூதர் கிங்கையும், நெல்சன் மண்டேலாவையும் அறிந்திருந்தளவு ஏன் மல்கம் எக்ஸை அறிந்திருக்கவில்லையென்ற கேள்வி உறுத்திக் கொண்டேயிருந்தது. இன்றுமே கூட, நியூயோர்க் நகரத் தெருக்களின் அடிமட்டக் கறுப்பின மக்களிடையே போதை வியாபாரியாகவும், பாலியல் தொழில் முகவராகவும் அலைந்திருந்து, சிறைசென்று அமெரிக்க வாழ் கறுப்பின மக்களின் எழுச்சிக்காகவும், அதிலும் முக்கியமாக சுயமரியாதை, சுயசார்புடன் கூடிய கறுப்பினச் சமூகமொன்றை உருவாக்கவும், கறுப்பனென்ற - வெள்ளையர்கள் உருவாக்கிவிட்ட - தாழ்வுச் சிக்கலிலிருந்து விடுபட்டு தனது பிறப்புக் குறித்துப் பெருமைகொள்ளுமோர் மக்கள் குழுவினரின் தோற்றத்துக்காகவும் அயராதுழைத்த மல்கம் எக்ஸுக்கு, படித்த உயர்வர்க்கக் கறுப்பினர்களின் தலைவரான மார்ட்டின் லூதர் கிங்க்கு வழங்கப்பட்ட கௌரவம் வழங்கப்படுகிறதா என்பது சந்தேகமே.

அவ்வளவு தூரம் போவானேன.. இலங்கையின் காலனித்துவ காலங்களின் போதான அரசியலை எடுத்து நோக்குவோமாயின் பிரித்தானியருக்கு வால் பிடித்துத் திரிந்த மிதவாதப் போக்குடைய சேர்.பொன்.இராமநாதன் போன்றோரையே எமது சுதந்திரப்போராட்டத் தலைவர்களாக ( இவர்கள் என்னத்தைப் போராடிக் கிழித்தனரென்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்) அறிந்து வைத்திருக்கிறோமே தவிர, இலங்கைத் தேசிய இயக்கத்தின் ஆரம்ப காலகட்டங்களில் வடபகுதியில் விடுதலைப் போராட்டத்தில் காந்திய வழியினைப் பின்பற்றி வந்த.., தீண்டாமை, சாதியப் பாகுபாட்டிற்கெதிராகத் தீவிரமாகச் செயற்பட்ட சுதந்திரப் போராட்ட இயக்கமான யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் போன்றவற்றைப் பற்றி - அரசியலை ஒரு தனிப்பாடமாகப் படித்திராத - எத்தனைபேர் எந்தளவு தூரம் அறிந்து வைத்திருக்கிறோம்?

இலங்கையின் காலனித்துவ ஆட்சிக்கெதிரான சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும, இலங்கைத் தேசிய இயக்கத்தின் வரலாற்றிலும் யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் பெயரளவில் மட்டும் இடம்பெறுகின்ற நிலையே காணப்படுகின்றது. இவ்வளவுக்கும் கொழும்பில் வசித்த ஏனைய மிதவாதத் தமிழ்த்தலைவர்களை விட சாதாரண மக்களுடன் நெருக்கமாகவிருந்த இவ்வியக்கம் பிரித்தானிய அரசு அறிமுகப்படுத்தியிருந்த டொனமூர் சீர்திருத்தப் பிரேரணையை - பிரதேசவாரிப் பிரதிநிதித்துவத்தினால் சிறுபான்மையினரின் அரசியல் பங்குபற்றுதல் திட்டமிடப்பட்ட வகையில் மட்டுப்படுத்தப்படுகிறதென - கடுமையாக எதிர்த்திருந்தது. தென்னிலங்கைத் தமிழ்த்தலைவர்கள் இவ்வெதிர்ப்புக்கு ஆதரவு வழங்குவதாக வாக்களித்திருந்தும் கடைசிநேரத்தில் கைகழுவிவிட்டமை குறிப்பிடத்தகுந்தது . இம்மிதவாதிகள் டொனமூர் பிரேரணையை எதிர்த்தமை சாதிய அடிப்படையில் தாழ்ந்தவர்கள் மற்றும் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்படப் போகின்றதென்ற காரணங்களுக்காக என்பது வேறுவிடயம்.

இத்தகைய வரலாற்றுச் சம்பவங்களின் தொடர்ச்சியாகத்தான் மங்களம்மாள் எனும் மாபெரும் பெண்ணொருத்தி வரலாற்றில் போதிய அங்கீகாரம் வழங்கப்படாமல் மறக்கடிக்கப்பட்டதையும் கவனத்திற்கொள்ள வேண்டும. அதற்குக் காரணமாகத் தனது நூலில் வள்ளிநாயகி கூறுவது:
'....அவரிடமும் சிறிது ஆடம்பரம், ஒரு கார், மேல்நாட்டுப்பாணி சேர்ட்டிபிகேற், இலங்கை அரசாங்கத்தில் அவரது கணவனுக்கு உயர்பதவி இருந்திருக்குமானால் கல்லினாலல்ல பொன்னினால் சிலையெழுப்புமளவில் யாழ்ப்பாணப் பெண்கள் அணி திரண்டிருப்பார்கள் . வறுமையில் உழன்று, மங்கிப்போன வெள்ளைக் கதராடை புனைந்து, நகை நட்டில்லாமல், ஒரு பையில் புத்தகங்களைக்கொண்டு நடைபவனி வரும் இவரை யார் கவனிப்பார் ..?'
(பக்.145)

2.
மங்களம்மாள் காலத்து சமூக அரசியற் பின்னணி

மங்களம்மாள் தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கிய காலங்களில் இலங்கை அரசியல் சமூகத்தின் நிலையையும, பெண்களின் நிலையையும் அறிந்துகொள்வது அவரது முக்கியத்துவத்தினை உணர்ந்துகொள்ள உதவியாகவிருக்கும். வள்ளிநாயகி கூறுவதன்படி, தமிழ் அரசியல் தலைவர்களாக விளங்கிய சேர்.பொன் .இராமநாதன் போன்றோர் கூட சுதந்திரம் பெறுவதற்கு நாம் இன்னமும் தயாரில்லையென அறிக்கைவிட்ட காலமது. அத்துடன், பெண்கள் அரசியலில் பங்குபற்றுதல், பெண்களுக்கு வாக்குரிமை வழங்குதலென்பவற்றையெதிர்த்து 'குடும்பத்தையும் வீட்டையும் பார்த்துக்கொள்வதுதான் பெண்களின் கடமை .. நாட்டைப் பார்க்க எங்களுக்குத் தெரியும்.. அவர்கள் அரசியலுக்கு வந்தால் வீட்டைப் பார்ப்பது யாராம் ' என்றெல்லாம் எமது ஆனானப்பட்ட தலைவர்கள் உரையாற்றித் திரிந்த காலமது. இவையனைத்தையும் மீறி ஒரு பெண் உத்வேகத்துடன் எழுந்தாலும், நமது பெண்களையும் கெடுத்துவிடுவாளோவென்று அஞ்சி அவளை முளையிலேயே கிள்ளியெறிய ஆயிரம் பேர் கொதித்தெழும் நிலை அன்றைக்கிருந்தது (இன்றைய படைப்புலக பிரம்மாக்கள் சிலர் இவர்களையும் மிஞ்சிவிடக்கூடியவர்களென்பதை இவ்விடத்தில் மறந்துவிடுவது நலம்).

படித்த உயர்வர்க்கத்துப் பெண்கள் கூட நாகரிக மோகத்தினால் ஆட்கொள்ளப்பட்டதாலோ என்னமோ இத்தகைய விழிப்புணர்ச்சியைப் பெற்றிருக்கவில்ல. நமது ஆண்களைப் பகைத்துக் கொள்வானேனென்று நினைத்தும் ஒதுங்கியிருக்கலாம் அல்லது காஞ்சிபுரம் சேலைகளையும், நகைகளையும் விட்டு மங்களம்மாள் கேட்டுக்கொண்ட கதராடையுடனான எளிய வாழ்வுக்கு அவர்கள் தயாரில்லாததாயுமிருக்கலாம்.

3.
பணியும் பங்கேற்பும்

1884ம் ஆண்டு பிறந்த மங்களம்மாள் அதிகம் படித்தவரல்லவெனினும், பட்டம்பெற்ற பலரையும் விட அனுபவ அறிவும், ஆழ்ந்த தேடலும், சீரிய சிந்தனையும் நிறைந்தவர். யாழ்ப்பாணத்தின் முதல் பெண்கள் முன்னேற்ற இயக்கமான பெண்கள் சேவை சங்கத்தினைத் தனது 18வது வயதில் வண்ணார்பண்ணையில் அமைத்தார் (1902). இது மதச்சார்பற்றதாயும், தமிழ்ப் பெண்களுக்கு அறிவும், தன்னம்பிக்கையும் ஊட்டுவதாயும், பெண்விடுதலைக்கான முதலாவது அடியை எடுத்து வைப்பதாயுமிருந்ததென வள்ளிநாயகி எடுத்துரைக்கிறார்.

மங்களம்மாளின் மகளிர் தேசியச் சேவைச் சங்கம் (1932), தமிழ் மகளிர் கழகம் (1933) போன்றவை தீண்டாமை ஒழிப்பு, பெண் விடுதலை, பெண் சமத்துவம் போன்ற சமூக சீர்திருத்த விடயங்களை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தகுந்தது. சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்த இவர் தனது கணவரின் துணையுடன் இந்தியாவுக்குச் சென்று காங்கிரஸ் தொண்டரானார. இந்தியாவிலேயே பெண்கள் அரசியலில் அதிகம் ஈடுபடத் தொடங்கியிராத காலத்தில் இவர் 1927ல் மாநகரசபைத் தேர்தலில் எழும்பூர்த் தொகுதியில் போட்டியிடத் தெரிவுசெய்யப்பட்டார். யாழ்ப்பாணப் பெண்ணொருத்திகு இந்தியத் தேர்தலில் போட்டியிடச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை - பின்புல அரசியலை விடுத்துப் பார்த்தால் - சிறப்புக்குரியதே. டொனமூர் குழுவினர் இலங்கையில் அரசியல் சமூக நிலைகளை ஆராய்ந்து கொண்டிருந்த காலத்தில் ஆண்கள் தமது எண்ணங்கள, கருத்துக்களை அனுப்பினால் இதில் இலங்கைப் பெண்களின் பங்கு என்னவெனக் கேள்வியெழுப்பி இவரெழுதிய கடிதத்தின் பகுதியொன்று :
'..சீ எமக்கு வெட்கம். ஒரு சின்ன விரலைத் தானும் நாம் அரசியலை நோக்கித் திருப்பவில்லை; வெளிநாட்டுப் பெண்கள் பாடுபடுவதுகூட எம்மில் எதுவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எமது பிறப்புரிமைக்காகப் போராடாத எம்மைப்பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்? எமது ஆண் சகோதரர்கள் எமது சீதனத்தினால் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றதோடு, பலர் பிரதிநிதித்துவ அமைப்பில் அமர்ந்துகொண்டு, நம்மைப்பற்றி ஒரு சொல் தானும் தமது மனுக்களில் கூறவில்லையே சகோதரிகளே! பால் வேற்றுமையினால் காட்டப்பட்ட தகைமையீனங்கள் அகற்றப்பட்டு அரசியலில் சமவுரிமை அளிக்கப்பட வேண்டுமல்லவா..'
(பக்.140)

சொத்துடை, படித்த ஆண்களுக்கென வரையறுக்கப்பட்டிருந்த வாக்குரிமையை ஆண்கள் பெற்றுக்கொண்டது பெண்களின் சீதனப் பணத்தினாலேயே. ஆனால், பெண்கள் தொடர்ந்து அடக்குமுறையினையே அனுபவித்துக் கொண்டிருந்தார்களெனும் உண்மை அவரால் எடுத்துக்கூறப்பட்டது. 'நாமார்க்கும் குடியல்லோம்' எனும் இலட்சிய வாசகம் பூண்ட 'தமிழ் மகள்' எனும் சஞ்சிகையினை 1923 ம் ஆண்டு ஆரம்பித்து தொடர்ந்து 40 வருடங்கள் - 1971ல் தான் இறக்கும் வரை - நடத்தி வந்தவரை அக்காலத்தில் சீர்திருத்தம் பேசிய ஆண்கள் கூட மதித்திருக்கவில்லை. ஆண்களுக்குத் 'தான் ஆண்' எனும் அகங்காரமென்றால், கல்வித்தகைமை பெற்ற பெண்கள் கூட 'சும்மா ஓடி ஓடித்திரியும் படிப்பறிவு காணாது ' என மங்களம்மாளைக் குறிப்பிட்டதாக வள்ளிநாயகி கூறுகின்றார். இவர்களைப் பொறுத்தவரை அறிவென்பது பத்திரங்களிலும், காகிதங்களிலும் முத்திரை குத்தப்பட்டது தானே தவிர அனுபவ அறிவும், சிந்தனா ரீதியான கேள்வியறிவுமல்லவெனத் தனது விசனத்தையும் முன்வைக்கிறார்.


மங்களம்மாளின் 'தமிழ்மகள்' சஞ்சிகை பெண் விடுதலை, பெண் சமத்துவம், பெண்மை நலன் பேணுதல், கதராடை, தீண்டாமை, சீதனக்கொடுமை, கன்னிப்பெண்கள் சமூகத் தொண்டு, சமூகச் சீர்திருத்தம் போன்ற பல தளங்களிலும் நின்று கட்டுரைகளை வெளியிட்டுள்ளது .
'..சம்சார சாகரமெனும் நரகக் குழியிலே விழுந்து உண்டு, உறங்குவதைக் கண்டதேயல்லாமல் ஓர் பயனும் எடுத்திலோம் எனும் பெண் பிறவிகளும் உளரே . கல்யாணம் செய்வதும் கதிர்காமம் போவதுதானா வாழ்வின் இலட்சியம்..?' (பக்.148,149)

என தனது கட்டுரையொன்றில் பெண்களைச் சாடவும் செய்கிறார். அவர் இறந்து பல்லாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் இது இன்றைக்கும் பொருந்தக்கூடியளவு பெரும்பான்மையான பெண்கள் தொடர்ந்தும் அறியாமையில் மூழ்கிக் கிடப்பது கவலைக்குரியதே.

வடபகுதியில் பல்கலைக்கழகமொன்றினை அமைப்பதென அரசு முடிவெடுத்திருந்த போது அதை எங்கே அமைப்பதென தமிழரின் இரு கட்சிகளுக்கிடையேயும் முரண்பாடுகள் தோன்றியிருந்த காலத்தில் அது குறித்த கட்டுரையொன்றையும் தனது சஞ்சிகையில் வெளியிட்டிருந்தார்.
'..மாநகர முதல்வர் தேர்வில் ஒன்றுபட்ட இரு தமிழ்க்கட்சிகளும், தமிழ்மக்களின் மிக முக்கியமான பல்கலைக்கழகப் பிரச்சனையைத் தீர்ப்பதில் ஒற்றுமைப்படாதிருத்தல் கண்டு பெண்களாகிய நாம் பெரிதும் வியக்கின்றோம். இத்தகைய தலைவர்களா தமிழ் மக்கள் பிரச்சனைக்குத் தீர்வு காணப்போகிறார்கள்?'
(பக்.151)

4.
துணைவர் மாசிலாமணி

பெரும்பாலான பெண்களின் சமூக வாழ்க்கை அவர்களது திருமணத்துடன் தடைப்படுதல் இயல்பு. ஆனால், மங்களம்மாளைப் பொறுத்தவரையில் திருமணம் தான் அவரது சமூக அரசியல் வாழ்க்கைக்கான உந்துகோலாயமைந்ததெனலாம். இவரது துணைவரான மாசிலாமணி இந்தியாவில் பிறந்த, இந்தியாவிலும், இலங்கையிலும் பொதுப்பணிகளில் ஈடுபட்டு உழைத்தவரும் , 'தேசாபிமானி' பத்திரிகையின் ஆசிரியருமாவார். யாழில் ஒத்துழையாமை இயக்கம் மற்றும் கதராடை பற்றிய தீவிரப் பிரச்சாரங்களில் ஈடுபட்டதுடன் மங்களம்மாள் இந்தியக் காங்கிரஸில் இணைவதை ஊக்குவித்தவரும் இவரே.

பெண்களின் வெற்றிக்குப் பின்னால் சமயங்களில் ஆண்களும் இருப்பதுண்டென்பதற்கு இவர்களது வாழ்க்கையே சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. இன்றைய 21ம் நூற்றாண்டின் முற்போக்குவாதிகள் பலரையும் போல வெளியில் பெண்ணுரிமை பேசித்திரிந்துவிட்டு வீட்டில் மனைவியை தோசைவார்க்க வைத்தவரல்ல இவர். மாசிலாமணியின் இறப்பின் பின்னர் மங்களம்மாள் அவரைப்பற்றி எழுதிய சில வரிகளே இதனை உணர்த்திப் போகும்:
'..இவரிடம் காணப்பட்ட பெருநோக்கு யாதெனில் மற்றும் ஏனையோர், தன்னை இன்னாளின் கணவராமெனக் கொள்ளுதல் வேண்டுமெனும் வாஞ்சையாம் .'
(பக்.147)

இத்தகைய அரும்பெருங்குணத்தை முற்போக்குவாதம், பெண்ணியம், சமத்துவம் பற்றி அளவளாவித் திரிகின்ற ஆண்களிடம் காண்பது அரிதாகவிருக்க இன்றைக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து மறைந்த மாசிலாமணி அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்திருந்தமை வியப்பிற்குரியதே..

5.
பெண்களின் அரசியல்

இது மிக விரிவாக ஆராயப்பட வேண்டிய விடயமெனினும, சுருக்கமாகக் கூறுவதாயின்..., சமீபத்தில் நண்பரொருவருடனான உரையாடலின்போது, 'ஆண்கள் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யும்போது சாடுகிறீர்களே.. சிறிமாவோ, சந்திரிக்கா, ஜெயலலிதா, ஏன் இந்திரா காந்தியென பெண்கள் பலரதும் ஆட்சியைப் பார்த்தவர்கள் நாம் .. இவர்கள் அதிகாரத்திலிருந்தபோது மட்டும் நிலைமை முன்னேற்றமடைந்திருந்ததா..?' எனக் கேட்டார்.

பெண்களின் அரசியலென்ற கருத்தாக்கம் இவ்விடத்தே தான் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்தக் குறிப்பிட்ட பெண் தலைவர்களனைவரும் ஆண்களின் பிரதிநிதிகளாய், ஆண் மேலாதிக்க சமூகம் உருவாக்கி வைத்திருந்த சமூக, அரசியல் சூழ்நிலைகளுக்குள் நின்றுகொண்டு ஆட்சி புரிந்தார்களேயொழிய எவரும் பெண்ணென்ற தமது சுய அடையாளத்தினை வலியுறுத்த முயன்றனரெனக் கூறமுடியாது. ஒருவகையில் தமது அத்தகைய அடையாளங் குறித்து வெட்கி ஆண் தலைவர்களை அப்படியே பிரதியெடுக்க முனைந்ததன் விளைவுதான் இதெனலாம்.


இந்தவகையில்தான் பெண்களின் அரசியல, அரசியலதிகாரத்துக்கு வெளியே நின்று முன்னெடுத்த மங்களம்மாள் முக்கியம் வாய்ந்தவராகின்றார். பெண்களுக்கேயான தனிப்பட்ட பிரச்சனைகள, சவால்களை அரசியல் தளத்துக்குக் கொண்டுவருவது மற்றும் பெண் சிந்தனை வழி நின்று அரசியலுக்கு முகங்கொடுப்பது.. இதனை எத்தனை பெண் தலைவர்கள் முன்னெடுத்துள்ளார்கள், இன்று முன்னெடுத்து வருகிறார்களென்பது கேள்விக்குரியதே.

8 comments:

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

அரசியலைப் பாடமாக எடுப்பவர்கள் கூட இவரைப் பற்றி அறிந்திருப்பார்களா என்று சந்தேகமாக இருக்கிறது.

அறிமுகத்துக்கு மிக்க நன்றி நிவேதா.

amp said...

வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களின் சரித்திரம் என்கின்ற நெருடலான உண்மையினை எழுதியிருக்கிறீர்கள்! இருப்பினும் அதிகார வர்க்கம் மிதவாதிகளை காவியநாயகர்கள் ஆக்கிவிடுவதாக எழுதியனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மக்கள் யாரின் மீது நம்பிக்கை வைக்கின்றனரோ, அவர்கள் தலைவர்கள் ஆகின்றனர்..அவ்வாறு வைத்த நம்பிக்கையினை சரியான முறையில் பயன்படுத்தி, மக்கள் முன்னேற்றத்திற்கு தீர்வளித்த தலைவர்கள் காவிய நாயகர்கள் ஆகின்றனர். பெரும்பாலான மக்கள்(வாலிபர்கள் தவிர), வன்முறையில் நம்புவதில்லை...அத்தோடு வன்முறை போதிக்கும் தலைவர்களால் மக்களை முன்னேற்றப்பாதையில் சரியாக வழநடத்த முடிவதில்லை.வன்முறையின் வழியாக கிடைத்த அதிகார போதையிலிருந்து அவர்கள் மீள்வதற்குள் உலகம் அவர்களை விட்டு பல காததூரம் சென்றுவிடுகிறது.அதுவே மிக முக்கிய காரணம்!!

மங்களம்மாள் பற்றி படித்ததில் மனதில் ஒரு சிலிர்ச்சி!அவரை பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி!இந்தியாவில் இருந்து கொண்டு அவரை பற்றி இதுவரை தெரிந்து கொள்ளாமலிருந்தேனே என்று ஆதங்கப்பட்டேன்!!:)

அது போல இந்திரா, ஜெயலலிதா இவர்கள் ஆண்களின் பிரதிநிதிகளாக செயல்பட்டனர் என்பது சரியல்ல என்பது எனது கருத்து. இருவரின் வாழ்க்கை சரிதைகளை படித்தீர்களானால் தெரியவரும்...உங்கள் நண்பரின் கேள்விக்கு பதில் அளிக்கும் உந்துதலில் காரணங்களை கண்டுபிடிப்பதனை விட்டு, அக்கேள்வியின் மூலாதாரணங்களை ஆராய்ந்தீர்களானால், அதனுள் புதைந்து கிடக்கும் ஒருதலைச்சார்பு தெரியவரும்! ஏன்? நாடுகளை ஆண்ட பல தலைவர்கள் சந்திக்காத ஒரு கேள்வி இந்த தலைவர்கள் மட்டும் ஏன் சந்திக்க வேண்டும்? ? தலைவர்கள் இனம், மதம், பால் என்று எந்த வித பாகுபாடுமில்லாமல் தெரிவு செய்யப்படவேண்டும்.அவ்வளவே..இதில்லாமல், பெண்கள் தலைவர்களானால் சமுகம் முன்னேறும் என்று சொல்வது, இன்னொருவகை பாலின பாகுபாடு ஆகும்!

விசாரன் (அல்லது விசரன்) said...

ஆணாதிக்க, சாதியக் கட்டமைப்புக்குள் இன்னமும் கிடந்துழலும் தமிழ்ச்சூழலில் இத்தகைய மாற்று ஆவணங்கள் பேசப்பட வேண்டியது அவசியம். மிதவாதிகள்/தீவிரவாதிகள் என்ற உங்கள் அடையாளப் படுத்தலில் சிக்கல் உள்ளதென நினைக்கிறேன். 'தீவிரப் புரட்சியாளர்கள்' எல்லோரும் சரியானதையே செய்தார்கள் என நம்புவதற்கில்லை. (இலங்கையின் தற்போதைய அரசிய்ல் நெருக்கடியின் வரலாற்றுப் பின்புலத்தை எண்ணிப் பாருங்கள்). மற்றும்படி, அறியப்பட்ட வரலாறு என்பது தணிக்கையின் கொடுங்கரங்களிலிருந்து தப்பிவந்தவையும் அவற்றால் மாற்றி அமைக்கப்பட்டவையும் தான். பெண் அரசியல்வாதிகள் தொடர்பில் உங்கள் கூற்றோடு எனக்கு முழுமையாக உடன்பாடுண்டு. அரசியல் உள்ளடங்கலாக அனைத்து வெளிகளிலும் ஆண்மைய வியாக்கியான்ங்களுக்கு இசைவாக தம்மை நடிப்பிக்கும் நிர்ப்பந்தம் இன்றுவரை பெண்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. (இவ்விடயம் சம்மந்தமாக பயனுள்ள ஆக்கமொன்று (பெண் எழுத்து - ஆமிரா எழுதியது) www.muranveli.net இல் காணக்கிடைக்கிறது)

நிவேதா said...

பின்னூட்டத்துக்கு நன்றி, ஷ்ரேயா!

உண்மைதான்.. அந்தளவு இவர்கள் அறியப்படாமலேயே போய்விட்டது துர்ப்பாக்கியம்தான்..

அருண், விசாரன் அல்லது விசரன் பின்னூட்டங்களுக்கு நன்றி!

//நாடுகளை ஆண்ட பல தலைவர்கள் சந்திக்காத ஒரு கேள்வி இந்த தலைவர்கள் மட்டும் ஏன் சந்திக்க வேண்டும்? ? தலைவர்கள் இனம், மதம், பால் என்று எந்த வித பாகுபாடுமில்லாமல் தெரிவு செய்யப்படவேண்டும்.அவ்வளவே..இதில்லாமல், பெண்கள் தலைவர்களானால் சமுகம் முன்னேறும் என்று சொல்வது, இன்னொருவகை பாலின பாகுபாடு ஆகும்!//

நன்றி.. மிக மிக நன்றி.. வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருந்தேன்.. சரியாக எடுத்துக் காட்டினீர்கள்.. இதுவேதான் விஷயமே.. ஆனால், உரையாடல் உண்மையில் வேறு திசையில் பயணித்திருந்ததென்பது உங்கள் விளக்கத்துக்காக..:-)

கவனத்திலெடுக்க வேண்டிய முக்கிய விடயம் (விசாரன் அல்லது விசரனுக்கும்).. மிதவாதிகள், தீவிரவாதிகளெனும் எனது வார்த்தைப் பிரயோகம்.. இதை இருவருமே தவறாக எடுத்துக்கொண்டு விட்டீர்களென நினைக்கிறேன். இங்கே மிதம் / தீவிரம் என நான் குறிப்பிட்டிருந்தது, அவர்களது அணுகுமுறையினையே தவிர வேறெதனையுமல்ல. தாம் கொண்ட கருத்தில் அவர்கள் தீவிரமாகச் செயற்படுகிறார்களா அல்லது நெகிழ்ச்சிப் போக்கினைக் கொண்டிருந்தார்களா என்பதைப் பொறுத்தே இப்படி வகைப்படுத்தியிருந்தேன்.. இந்த வகையிடலில் மகாத்மா காந்தியும் உள்ளடங்குவாரென முன்னமொரு பொழுதில் எழுதியதாக நினைவு. மற்றும்படி, துவக்கு தூக்குபவர்கள் மட்டும்தான் தீவிரவாதிகளென்ற நிலை நின்று எழுதவில்லையென்பதைத் தயவுசெய்து கவனத்திலெடுக்கவும்.

மங்களம்மாளோ, மல்கம் எக்ஸோ துவக்கு தூக்கியவர்களல்ல.. வன்முறையினைத் தமது பாதையாகத் தேர்ந்தெடுத்தவர்களுமல்ல.. தாம் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர்கள்.. தீவிரமாகப் போராடியவர்கள்.. ஆகவே, அவர்களும் தீவிரவாதிகள் தான். அதிகாரவர்க்கம் வரலாற்றைத் தனக்குச் சாதகமாக எழுதும்போது தனக்கு ஒத்தூதியவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறதேயொழிய உண்மையான போராட்ட வீரர்களுக்கல்லவென்பது மறுக்கப்பட முடியாதது.

அத்தகையவர்களுக்குப் போதிய அங்கீகாரம் வழங்கப்படுகிறதாவென்பது அடுத்த கேள்வி. உண்மையான ஈடுபாட்டுடன் உழைப்பவர்கள் விளம்பரம் தேட விரும்புவதில்லை - இது யதார்த்தம். ஆகையால், வெளியுலகுக்கு அவர்களைப் பற்றித் தெரியவருவதுமில்லை - இது இயல்பு. ஊடகங்கள் இவ்விடயத்தில் பெரும் பங்கு வகிப்பதாக நினைக்கிறேன். மங்களம்மாளைப் போலவே மலையகத்திலும் பெண்கல்விக்காகப் பாடுபட்ட பாக்கியம் போன்ற பெண் தலைவர்கள் சிலர் இருந்திருக்கிறார்கள். இலங்கையின் கல்விவளர்ச்சிக்காகப் பாடுபட்ட தலைவர்களென கேள்வியெழும்பும்போது இவர்களையெல்லாம் எத்தனை பேர் நினைகூர்வர்? சந்தேகம்தான். தகுதியற்றவர்களே பெரும்பாலும் தூக்கிப்பிடிக்கப்படுகின்றனர்.., இவர்களையே காவிய நாயகர்களெனக் குறிப்பிட்டிருந்தேன். இத்தகையவர்கள் பொதுவாக அதிகார வர்க்கத்துக்கு நெருக்கமானவர்களாகவோ, பண பலம், கல்வித்தகைமை வாய்ந்தவர்களாகவோ, அல்லது பிரபல்யமானவர்களாகவோ இருப்பது வழக்கம். இத்தகுதிகளெதுவுமற்ற சாதாரண மனிதர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படுவது வெகு அபூர்வமே.

ஆமிராவின் கட்டுரை குறித்து அறியத்தந்தமைக்கு நன்றி விசாரன், முரண்வெளி வழக்கமாக வாசிப்பதுண்டெனினும், இந்தக் கட்டுரையை இன்னும் பார்க்கவில்லை. நன்றி.

Anonymous said...

இலங்கைப் பெண்களின் அரசியலும், அரசியலில் பெண்களும் என்கிற நூல் ஒன்று வாசிக்கக் கிடைத்தது. ஆரம்பத்தில் என்.சரவணன் சரிநிகரில் எழுதிய கட்டுரைகளை தொகுத்து மேலதிக சேர்ப்புகளோடு வெளிவந்த அந்த நூல் நிறைய தகவல்களை உள்ளடக்கியிருந்தது. அந்த நூல் நண்பர் ஒருவர் எடுத்துச் சென்றார். அவர் இப்போது இங்கில்லை. நானும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் தேடித்திரிந்துவிட்டேன் கிடைக்கவில்லை. மீண்டும் அதனை எனது சேமிப்பில் வைத்திருக்க விரும்புகிறேன். யாராவது ஆலோசனை சொல்லுங்களேன்.

-கயல்விழி

விசரன் அல்லது விசாரன் said...

ஏறத்தாழ நீங்கள் கொண்டிருக்கும் பொருளிலே தான் நானும் 'தீவிரவாத'த்தை விளங்கிக்கொண்டிருந்தேன் நிவேதா. திருவுருக்களாக ஆக்கப்பட்டிருப்பவர்கள் அனைவரிடமும் தீவிரம் இருந்திருக்கிறது. கிறிஸ்துவும் கிருஷ்ணனும் புத்தனும் முகம்மதுவும் பிறந்து, வாழ்ந்து பேசாமல் மாண்டு போயிருந்தார்களென்றால் உலகத்தில் இவ்வளவு பிரச்சனை இருந்திருக்காது என்பது என் எண்ணம்

DJ said...

மங்களம்மாள் குறித்த அறிமுகத்திற்கு நன்றி நிவேதா.

நிவேதா said...

நன்றி கயல்விழி.. அந்தப் புத்தம் எனது சேமிப்பிலிருக்கிறது. ஆனாலும், எங்கே எடுப்பதென்று சொல்லத் தெரியவில்லை. சரவணனைத் தொடர்புகொள்ள முடிந்தால் அறியத் தருகிறேன்.

நன்றி, விசாரன்..

நன்றி, டிசே.