Tuesday, May 01, 2007

தேவதைகள் காத்திருப்பதில்லை

தேவதைகள்
சினங்கொள்ளக் கூடாதென்கிறார்கள்..
பெருந்தன்மை வாய்ந்தவையென்கிறார்கள்..


எற்றுண்டு கிடத்தல்...


மரணபீதியில் வெளிறியிருந்த பௌர்ணமி நிலவு
சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்படும்
தமிழரின் முகத்தை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது
ஒன்றாய்.. ஒவ்வொன்றாய்..
மனங்கொள்ளா எதிர்பார்ப்புகள் பொய்த்திடப் பொய்த்திட
வானக் கந்தலிலிருந்து கழன்றுவிழும் தாரகைகள்
முக்கால் மணிநேரத்தில் முற்றத்தில் கிடந்த
முழுவாளி நிறைத்தன
அது விளிம்புடைந்த பழம் வாளியென்பது வேறு கதை.

புறநிலைக் குறிப்பு

தனித்தனியே பொறுக்கியெடுத்து தூசு தட்டி
சேலை நெய்து அணிந்திட்ட ஒருத்தி
தேவதையாக உருக்கொண்டு - அவர்கள்
கதவுகளைத் தட்டத் தொடங்கினாள்
அகலத் திறந்த கோட்டைகளின் கதவுகள்
அல்லோலகல்லோலத்துடன் ஆடம்பரமாய் வரவேற்க
பாளம் பாளமாய் வெடித்திருந்த வறள் நிலத்தில்
முதல் துளியின் ஸ்பரிசத்தை உணர்ந்து ரசித்தவள்
'நீ மட்டுமா வந்தாய்' என்ற புருவமுயர்த்தல்களை
கவனிக்கத் தவறியதை எப்படிக் கண்டிக்க..

எல்லாம் தேவதையாய் உருக்கொண்டதால் வந்த வினை

விருந்துக்கும் உபசாரத்துக்கும் பரிகாரமாய்
இனி அவள் அரசர்களை அழைத்துவர வேண்டும்
வெடிச்சத்தங்களும், வாணவேடிக்கைகளும்,
தோரணங்களும், பந்தல்களுமென
கோட்டைகளும் இப்போது விழாக்கோலம் பூண
இம்முறை வரவேற்பு இன்னமும் பலமாகவிருக்கும்

அரசர்களை உள்நுழைய அனுமதித்த பின்
கோட்டையின் சுவர்களிலிருந்து வெளிக்கிளம்பும் பிசாசொன்று
அவளைப் பிதுக்கி வெளித்தள்ள
அதிக காலமெடுக்காதென..
அவளது தயவின்றி அரசர்களின் அருட்கடாட்சம் கிட்டாதென்பது
அவர்களுக்குத் தெரியுமென - பாவம்
அவளெப்படி அறிவாள்?

அகவயத் தெளிவு

கழுத்தைப் பிடித்து புறந்தள்ளப்பட்ட வேதனையுடன்
புழுதியில் கிடந்துகொண்டு
அண்ணாந்து பார்க்கிறேன்..
நெடிதுயர்ந்த மதில்களுக்கும் மேலால்
இன்னமும் ஓரிரண்டு தாரகைகள்
அந்தரத்தில் தொங்கிக்கொண்டுதான் கிடக்கின்றன

இனியென்ன..
கலைந்த ஆடைகளை சரிசெய்தபடி
அடுத்த கதவினை நோக்கி விரைய வேண்டியதுதான்,
தூக்கியெறியப்படுதலை எதிர்பார்த்தபடி.
எனினும்
நீட்டிய கரங்களுடன் நீங்கள் ஓடிவருமோர் நாளில்
புறந்திரும்பி,
உங்கள் எல்லை கடந்து
வெகுதூரம் சென்றுவிட்டிருந்திருப்பேன்

தேவதைகள் காத்திருப்பதில்லை எவருக்காகவுமே.


(2007-04-27)
16 comments:

அய்யனார் said...

/இனியென்ன..
கலைந்த ஆடைகளை சரிசெய்தபடி
அடுத்த கதவினை நோக்கி விரைய வேண்டியதுதான்,/

இதென்ன வார்த்தைகள் ..எங்கிருந்து முளைவிட ஆரம்பிக்கிறது இவ்வளவு கணமான சொற்கள்..துயரின் ஊற்றுக்குழியிலிருந்தா??

Anonymous said...

//எற்றுண்டு கிடத்தல்...//

ஒன்னும்மே புரியலையே

விசாரன் said...

தொடக்கத்தில் ஈழத்து நிகழ்கால அரசியல் அவலத்தோடு பொருத்தி வாசிக்க நிர்ப்பந்தத்தித்த கவிதை ஈற்றில் குழப்பமாக முடிகிறது. எந்தக் கவிதைக்கும் ஒற்றைத்தன்மையான புரிதல் சாத்தியமில்லை என்ற அளவில் ஆசுவாசப்பட்டுக்கொள்ள நேர்கிறது.

//நீட்டிய கரங்களுடன் நீங்கள் ஓடிவருமோர் நாளில்
புறந்திரும்பி,
உங்கள் எல்லை கடந்து
வெகுதூரம் சென்றுவிட்டிருந்திருப்பேன்//

ஆண்மைய ஆதிக்கச் சமூகம் மீதான தாய்மையின் கோபமாக வாசிக்கலாமா இதை?

Anonymous said...

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்

மற்றும் அன்பு......
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)

நிவேதா said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

sooryakumar said...

மிக நல்ல படைப்பு..பலதடவை மீண்டும் மீண்டும் படித்தேன்.

நிவேதா said...

நன்றி, சூர்யகுமார்

LakshmanaRaja said...

மிக அருமையான வலிகளின் பதிவு.வாழ்த்துக்க‌ள். அனைத்து வ‌ரிக‌லும் என் எண்ணக்கூட்டுகுள் பற‌க்க‌ ம‌ன‌மின்றி சிற‌க‌டிகின்ற‌ன‌!

நிவேதா said...

நன்றி, லக்ஷ்மண ராஜா!

ஜெயபாலன் said...

மரணபீதியில் வெளிறியிருந்த பௌர்ணமி நிலவு
சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்படும்
தமிழரின் முகத்தை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது
நல்ல வாசிப்பு அனுபவமும் மகிழ்வும். இன்னும் கவிதை உழைப்புக்கு சாட்ய்ஹியங்களை அவைத்த்ருக்கும் கவிதை. நன்றியுடன் / வ.ஐ.ச.ஜெயபாலன்

ஜெயபாலன் said...

நீட்டிய கரங்களுடன் நீங்கள் ஓடிவருமோர் நாளில்
புறந்திரும்பி,
உங்கள் எல்லை கடந்து
வெகுதூரம் சென்றுவிட்டிருந்திருப்பேன்

மிதக்கும்வெளி said...

நீங்கள் நீண்டநாட்களாக எழுதவில்லையா, அல்லது நான் உங்கள் எழுத்தை இடையிலே தவறவிட்டுவிட்டேனா என்று தெரியவில்லை. ஆனால் வழக்கம்போல் நல்ல கவிதை.

நளாயினி said...

"ஒன்றாய்.. ஒவ்வொன்றாய்..
மனங்கொள்ளா எதிர்பார்ப்புகள் பொய்த்திடப் பொய்த்திட
வானக் கந்தலிலிருந்து கழன்றுவிழும் தாரகைகள்"


"கழுத்தைப் பிடித்து புறந்தள்ளப்பட்ட வேதனையுடன்
புழுதியில் கிடந்துகொண்டு
அண்ணாந்து பார்க்கிறேன்..
நெடிதுயர்ந்த மதில்களுக்கும் மேலால்
இன்னமும் ஓரிரண்டு தாரகைகள்
அந்தரத்தில் தொங்கிக்கொண்டுதான் கிடக்கின்றன"

நம்பிக்கையும் அதன்மீதான பற்றுதலும் கட்டாயம் வெற்றியை தரும். கவிதை நன்று.

வவ்வால் said...

ஒரு கவிதைகுள்ளே பல்வேறு நிலைகளை காட்ட வேண்டும் என்ற அதீத ஆசையினால் எதுவும் நிறைவு பெறவில்லை, ஒரு வேளை அபாரம் அற்புதம் என புரியாமலே பின்னூட்டமிட்டவர்களின் வெற்று புகழ் வார்த்தை மட்டும் உங்களுக்கு போதுமானதாக இருக்கலாம்!

Anonymous said...

உங்களின் இந்த கவிதை சரிநிகரில் வந்திருந்தது

நிவேதா said...

ஜெயபாலனுக்கு நன்றிகள்.

நன்றி மிதக்கும்வெளி, நானும் எழுதவில்லைதான்..:-))

நன்றி, நளாயினி!

பின்னூட்டத்துக்கு நன்றி, வவ்வால்!

//ஒரு கவிதைகுள்ளே பல்வேறு நிலைகளை காட்ட வேண்டும் என்ற அதீத ஆசையினால் எதுவும் நிறைவு பெறவில்லை, //

இருக்கலாம், அது உங்கள் பார்வையில்.. உங்கள் வாசிப்பின்படி. மொழியினதும், கவிதையினதும் நிகழ்தலுக்கான வெளி குறித்தும், அவற்றின் பன்முகப்பட்ட சாத்தியப்பாடுகள் குறித்துமான தெளிவிருந்தால் சரிதான்.

//ஒரு வேளை அபாரம் அற்புதம் என புரியாமலே பின்னூட்டமிட்டவர்களின் வெற்று புகழ் வார்த்தை மட்டும் உங்களுக்கு போதுமானதாக இருக்கலாம்!//

எனக்கு அது போதுமா, போதாதா என்பதெல்லாம் ஒருபுறமிருக்க.. ஏனைய வாசகர்களின் வாசிப்பை - புரியாமலேயே என்ற ரீதியில் - மட்டந்தட்டும்/ குறைத்து மதிப்பிடும் உரிமையை உங்களுக்கு யார் தந்ததென்பது எனது கேள்வி. உங்களுக்குப் புரிந்தது அவர்களுக்குப் புரியாமலிருக்க சாத்தியங்களுண்டெனினும், அவர்களுக்குப் புரிந்ததெல்லாம் உங்களுக்கும் புரிந்திருக்குமா என்பது சந்தேகம்தானில்லையா..

அனானிமஸ்.. ஆமாம், சரிநிகரில் வந்திருந்ததுதான்..