Monday, May 14, 2007

மோகித்திருப்பதன் சாபங்களைக் கனவில் வரைதல்

நேற்று
அவனென்னைப் பிரிந்தான்
அதிலிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும்
எல்லாமே...

நான் இன்னொருத்தனை மோகித்திருந்தேனாம்..

(எப்போதும் உங்களுக்கென்று ஒருத்தியை பெயர் குறித்து நிச்சயித்துக் கொள்ளுங்கள். அவள் வேறெந்த ஆடவனையும் பார்க்கக்கூடாது.. பேசக்கூடாது, தீண்டவும் கூடாது. அதைவிடவும் கேவலம், நான் ஒருத்தனைக் காதலிக்கிறேனென ஒரு பெண் உங்கள் முன்னிலையில் உரத்துச் சொல்தலாகாது. பண்பாட்டின் பாதுகாவலர்களுக்கு நடத்தை கெட்டவளாயும், முற்போக்குவாதிகளின் பார்வையில் மேலாதிக்கத்துக்கு கொடிபிடிக்கும் மற்றுமொரு சராசரியாயும், வேறெப்படியும் முத்திரை குத்தப்பட விரும்பாதவரை ஒரு பெண்ணுக்கு எதையும் உரத்துப் பேசுதல் எப்போதும் மறுக்கப்பட்டதுதான்.)

ஒரு வார்த்தை தானும் சொல்லிக்கொள்ளாமல்
பிரிந்தவனைத் தேடி
எலுமிச்சம்பழக் கிழவியொருத்தி
காட்டிய வழியில்
ஓரடியெடுத்து வைத்து பகலிரவைக் கடந்தேன்
நான் பலவீனமானவளென்பதை
அவர்கள் அறியாதிருக்கும் பொருட்டு
புன்னகைக்க புன்னகைக்க
பல்லெல்லாம் கொட்டுண்டு
கடைவாயிலிருந்து புன்னகை இரத்தமாய் வடிந்தது.
வேண்டும்போதெல்லாம்
நினைக்க முன்னரே மறுபடி முளைத்த
பற்களிடமிருந்து தப்பியோடி
தொலைந்துபோன கனவுகளெங்கும்
தேசாந்திரியாய் அலைந்து திரிய
இதோ இருக்கிறான் நீ தேடிக்கொண்டிருந்தவனென
அரைக்காற்சட்டைச் சிறுவனொருவன்
கைநீட்டிக் காட்டிய திசையில்
என் கனவு வெறும் நீர்க்குமிழியென
உடைந்து மறைந்தே போயிற்று.

அதனைத் தொடர்ந்தது,
வெறுமைகளற்ற பாதாளங்களை நோக்கிய
உறவொன்றின் தற்கொலைப் பயணம்
மனங்கேளாத தங்கை
தனக்கு நீச்சல் தெரியாதென்பதையும் மறந்து
அவனைக் காப்பாற்றவென தானும் பாய்ந்து
மடிந்து போனாள், கையில்
கையடக்கத் தொலைபேசியுடன்
விளிம்பினை நெருங்கிவிட்ட என்னை
பிடித்திழுத்த கரங்களைச் சபித்தபடி,
வெட்டிப்போட வெறிகொண்டு
தெருக்களெங்கும் ஓலமிட்டுத் திரிந்தேன், சிலகாலம்.

மற்றுமொரு மழைநாளில்
ஊரைவிட்டு விலகியோடவென ரயில் நிலையமடைந்து
அம்மாவுக்குத் தொலைபேசினேன்..
அம்மா என்னை மன்னித்துவிடு
நான் போகிறேன்
என்றென்றைக்குமாக போகிறேன்
இனி உன் சமையலை யாரும் குறைசொல்லப் போவதில்லை
கலைந்த துணிகளும், சிதறிக்கிடக்கும் புத்தங்களும் வரவேற்க
பொறுப்பற்றவளென இனி யாரையும் நீ பேசவேண்டியதில்லை..
என்னை மன்னித்துவிடு.
நீயும் போகாதையடி அசட்டுப் பெண்ணே..
எதிர்முனையில் அறுந்தது அவள் குரல்,
கையில் காசில்லாமல் போனதில்.

பின்னமொரு பொழுதில்
என் விருப்பம் வேண்டி வழிதொடர்ந்தவனின்
வாசலில் பிச்சைக்காரியாய் கையேந்தியபடி
எனதிருப்பு...
நிராகரிப்பின் வலி படர்ந்த முகத்தை
புன்னகைப் பூச்சுக்குள் மறைத்துக்கொண்டு
உள்ளழைத்து உணவு தந்து
மரியாதையுடன் அவன் வழியனுப்பி வைக்க
மனம் இலேசாகி மிதந்து
கருமேகம் கவிந்திருந்த தெருவதனில் நினைவு வந்தது
அவன் வீட்டில் மறந்து விட்டிருந்த குடை

இனிமேலும்,
எவரும் எனக்காகக் காத்திருக்கப் போவதில்லை
இழுத்தணைத்து நெஞ்சில் தாங்க
மார்பில் கிடந்தழ
எவரும் என்னை அனுமதிக்கப் போவதுமில்லை.

8 comments:

தூரன் குணா said...

கவிதையின் ஆழத்தை விட தலைப்பு வசீகரமாய் உள்ளது.கொஞ்சம் எடிட்டிங்கை நினைவில் கொள்ளுங்கள்.
வாழ்த்துகள்

விசாரன் said...

வாக்கிய நீள்வுகளில், சுழிப்புக்களில் அர்த்தங்களை மறுத்தும் மீறியும் செல்லும் கவிதை, குற்றக்கூண்டில் ஏற்றும், நிலைகுலைக்கும் 'ஆண்தனத்தை' ஒருங்கே அனுதாபிக்கவும் விசனிக்கவும் தோன்றுகிறது. இங்கு ஈழத்தில் இப்படி மௌனமுடைக்கும் பெண்குரலை அரிதாகவே கேட்க இயல்கிறது. வாழ்த்துக்கள்

sooryakumar said...

நல்ல எழுத்து. வாழ்த்துகள்

Anonymous said...

இன்னும் கவிதையைக் குறுக்கினால் நன்றாக வரும். கவிதைகள் ஒரு குறிப்பிட்ட பாடுபொருளுக்குள் சுருங்கிவிடும் அபாயத்தையும் சற்று கவனியுங்களேன்.

சோமி said...

நிசத்தைவிட கவிதை அழகானதுதான்.

நிவேதா said...

பின்னூட்டத்துக்கு நன்றி, தூரன் குணா..

//கவிதையின் ஆழத்தை விட தலைப்பு வசீகரமாய் உள்ளது//

நன்றி..:-)))

விசாரன், சூரியகுமார்.. பின்னூட்டத்துக்கு நன்றி.

அனானிமஸ், நன்றி! இப்படித்தான் எழுதவேண்டுமென்று நினைத்துக்கொண்டு எதையும் எழுதுவதில்லைதானே..

நன்றி, சோமி! நிஜத்திலிருந்து பிறப்பதால்.. கவிதை அழகாயிருக்கும் பட்சத்தில் நிஜமும் அழகாகத்தானேயிருந்தாக வேண்டும்..

LakshmanaRaja said...

//எலுமிச்சம்பழக் கிழவியொருத்தி
காட்டிய வழியில்
ஓரடியெடுத்து வைத்து பகலிரவைக் கடந்தேன்
நான் பலவீனமானவளென்பதை
அவர்கள் அறியாதிருக்கும் பொருட்டு
புன்னகைக்க புன்னகைக்க
பல்லெல்லாம் கொட்டுண்டு
கடைவாயிலிருந்து புன்னகை இரத்தமாய் வடிந்தது. //

மிக அருமை. உணர்வுகளின் பதிவாய் உணர்கிரேன்!

//அரைக்காற்சட்டைச் சிறுவனொருவன்
கைநீட்டிக் காட்டிய திசையில்
என் கனவு வெறும் நீர்க்குமிழியென
உடைந்து மறைந்தே போயிற்று.//


நீயும் போகாதையடி அசட்டுப் பெண்ணே..
எதிர்முனையில் அறுந்தது அவள் குரல்,
கையில் காசில்லாமல் போனதில்.

பின்னமொரு பொழுதில்
என் விருப்பம் வேண்டி வழிதொடர்ந்தவனின்
வாசலில் பிச்சைக்காரியாய் கையேந்தியபடி
எனதிருப்பு...
நிராகரிப்பின் வலி படர்ந்த முகத்தை
புன்னகைப் பூச்சுக்குள் மறைத்துக்கொண்டு
உள்ளழைத்து உணவு தந்து
மரியாதையுடன் அவன் வழியனுப்பி வைக்க
மனம் இலேசாகி மிதந்து
கருமேகம் கவிந்திருந்த தெருவதனில் நினைவு வந்தது
அவன் வீட்டில் மறந்து விட்டிருந்த குடை ///

என்னை மிக‌வும் பாதித்த‌ க‌வதை. வாழ்த்துக்க‌ள்.

உணர்வுகளின் ப‌திய‌வேனும் வ‌ழி இருக்கிறேதே என்று சந்தோஷிக்கிறேன்!

நிவேதா said...

நன்றி, லக்ஷ்மண ராஜா!