வி(ழிப்/ளிம்)பு நிலை அணுகல்
எனக்குள்ளே
ஒரு சின்னஞ்சிறுபெண்
எப்போதும் இருந்து கொண்டு
ஒருபோதும்
மூப்படையவோ - சாகவோ
மறுத்தபடி வாழ்கிறாள்
- லிவ் உல்மன்

'..என் எந்த வெற்றியும் அவளைத் திருப்தி செய்வதில்லை. என் எந்த சந்தோஷமும் அவளுக்குக் கிளுகிளுப்பு ஊட்டுவதில்லை. பல அதிகாலை நேரங்களில் விழிப்பு வந்ததும் இனிமேல் 'அவளுடைய' வாழ்க்கையை வாழ்ந்துவிட வேண்டியதுதான் என்று தீர்மானம் உருவெடுக்கும். படுக்கையில் பக்கத்தில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் என் செல்ல மகளின் மூலமாக எனக்குள் வாழும் அந்தச் சிறுமியின் வாழ்வை வாழ்ந்துவிட ஆசை மிகக் கொள்வேன்..'
ஹோர்மோன்களும் என்னை வஞ்சித்துவிட்ட நாளொன்றில் சாளரத்தினருகேயமர்ந்து சலசலக்கும் மாமரத்து இலைகளையும், அதன் கிளைகளினூடு ஓடித்திரிந்து கொண்டிருந்த அணில்குஞ்சையும் ஏக்கத்துடன் ரசித்துக் கொண்டிருக்கையில்தான் உணர்ந்தேன், உள்ளத்தை அழுத்தும் பெண்மையின் கனத்தை. அன்று, நிர்மலமான ஆகாயத்தில் நான் வெறித்திருந்த இனம்புரியாத புள்ளியொன்றிலிருந்து தொடங்கிற்று, குழந்தைகளின் உலகத்தினிடமிருந்தான என் அந்நியப்படல். அதன்பின்னரான பொழுதுகளில்.., முடிந்ததில்லை; ஒருபோதும் முடிந்ததில்லை.. அவளது வாழ்க்கையினை வாழ்தலென்பது என்றென்றைக்குமான கனவாகிப் போயிற்று.
'..ஜன்னலருகே நின்றபடி நீ தோட்டத்தில் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அச்சமயங்களில் எனக்குத் தெரிந்த எதையும்விட நான் உனக்கு நெருக்கமானவளாகிறேன்.
நீ என்னுடைய பகுதி - முழுச்சுதந்திரம் பெற்ற பகுதி. இன்னும் கூடவேயிருந்து இன்னும் நெருக்கமாக உன்னைக் கவனித்து எப்படி உன் சுதந்திரம் உனக்குள் வாழ்கிறது என்பதை உள்வாங்க ஆசைப்படுகிறேன்.
நீ மற்ற குழந்தைகளோடு சிரிக்கும்போது - தனியே உன் ரகசிய விளையாட்டுக்களில் ஆழ்ந்துவிடும்போது - விதவிதமான வண்ணங்களும் வாசனைகளும் அழகுகளும் இன்னும் உன் உலகமாக இருக்கும்போது நான் எல்லாவற்றையும் விட்டு உன்னிடம் ஓடிவந்து உன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்துவிடத் துடிக்கின்றேன்.
நான் இடைவிடாது தேடிக்கொண்டிருக்கிற - தொலைத்துவிட்ட பால்யகாலத்து சாம்ராஜ்யம் அதுவாகவே இருக்கலாம்...'
(நன்றி:- 'நான் பேச விரும்புகிறேன்' - ச.தமிழ்ச்செல்வன்)
பெரியவர்களுக்கு மறுக்கப்பட்டுவிட்டதோர் சாம்ராஜ்யம் அது.. வாழ்தலின் வன்மங்களின் உச்சாணிக் கொம்பிலேறி கிடுகிடு பள்ளத்தினை நோக்கிப் பலவந்தமாகத் தள்ளப்படுகையில், தலைகுப்புற விழுந்துகொண்டிருக்கும் - யுகங்களாகத் தோன்றும் - அந்தக் கணத்தில் கறைபடிந்துவிட்ட பால்யகாலங்கள் நினைவெங்கும் விரிந்து சிறகடித்துப் பறக்கத்தொடங்கும். பிஞ்சுக்குழந்தையின் மாசுமறுவற்ற அறியாமையின் உலகத்தின் இதயத்தில் மௌனங்களால் நிரம்பி வழியுமொரு மூலையினைப் பெற்றுக்கொள்தல் சாத்தியமாகுமெனில்.., அதன் கபடமற்ற மனதில் நெளிந்து வளையும் பாதைகளினூடாக பயணித்தல் முடியுமெனில்.., இதம் தராத கடந்தகாலத்து நினைவுகளைச் சுமந்தபடி, வதைத்துக் கொண்டிருக்கும் நிகழ்காலத்தினூடு.. நினைப்புக்கும் நடப்பிற்குமிடையேயான இடைவெளிகளை அளந்தபடி நீண்டிருக்கும் எமது பயணங்களும் பசுமையின் முதல்துளியால் ஆசீர்வதிக்கப்படக்கூடும்.
குழந்தைகள் சுவர்க்கத்திலிருந்து தருவிக்கப்படவில்லை; மாறாக, தமது இருத்தலின்.. நடத்தைகளின் மூலம் சுவர்க்கங்களை அவர்களே உருவாக்குகிறார்கள்.
1.
சிலதினங்களுக்கு முன்னர், மற்றுமொரு பௌர்ணமி தினத்தில் - இப்போதெல்லாம் பௌர்ணமிகள் முன்னைவிடவும் அழகாகத் தோன்றுகின்றனவென்பதையும் இங்கே குறிப்பிட்டுத்தானாக வேண்டும் - கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஆதரவில் நிகரி திரைப்பட வட்டத்தினரால் (niharifilmcircle@gmail.com) திரையிடப்பட்ட Majid Majidi யின் Children Of Heaven எனும் மற்றுமொரு ஈரானியத் திரைப்படமொன்றைக் கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. மேலைத்தேயத் திரையுலகின் மெத்தனங்களுக்குச் சவால்விடுக்கும் வகையில் புதிய புதிய திரையம்சங்களுடனும் பண்பாட்டுப் பின்னணிகளுடனுமான ஈரானியப் படங்களின் வடிவமைப்புப் பாங்கு (patterns) மனதைச் சிலிர்க்கவும், பெருமிதங்கொள்ளவும் வைப்பதுடன், இவர்களது திரைப்படத் தொழினுட்ப உத்திகள் மேலைத்தேயனவற்றிலும் எந்தவிதத்திலும் சளைத்தனவல்ல என்பதற்குமப்பால் நவீன தொழினுட்பங்களை மட்டும் நம்பிக்கொண்டு படங்களையெடுத்து ஆஹா.. ஓஹோவென்ற பாராட்டுதல்களையும், கைதட்டல்களையும் பெற்றுவிடும் ஹொலிவுட்டையும், அதன் தீவிர இரசிகர்களின் இரசனைகளையும் கேள்விக்குள்ளாக்கவும் செய்கின்றன. சினிமாவும் மற்றுமொரு கலையூடகம் அல்லது கலைத்துறையென்றவகையில் - இன்னவின்ன மட்டுமே கலைகளெனக் கருதப்படக் கூடியவையென எமக்கு நாமே வரையறைகளை விதித்துக்கொள்தல் அபத்தமென்பதால் - பரந்ததோர் நோக்குடன் விமர்சனங்களுக்கப்பால் அனைத்தையும் ஏற்றுக்கொண்டும் இரசித்துக்கொண்டும் நகரவேண்டியதுதான்.
ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் 1959ம் ஆண்டு பிறந்த மஜித் மஜீதி தனது 14வது வயதிலேயே அமெச்சூர் நாடகக் குழுக்களில் நடிக்கத் தொடங்கி பின்னர் நாடகக் கலை தொடர்பான கல்விநிறுவனமொன்றில் சேர்ந்து பயின்றார். ஈரானில் 1978ல் இஸ்லாமியப் புரட்சி நிகழ்ந்ததுடன் சினிமாவை நோக்கி அவரது ஈடுபாடு திசைதிரும்பலாயிற்று. அவர் முதலில் எழுதி நெறியாள்கை செய்த Baduk (1992) பல்வேறு விருதுகளையும் பெற்றது.
- துண்டுப் பிரசுரத்திலிருந்து..
உரையாடலுக்கான மிகவும் பலவீனமானதோர் ஊடகமென்றவகையில், ஒரு சிறந்த திரைப்படத்தினை இரசிப்பதற்கு மொழியொன்றும் அத்தியாவசியமான நிபந்தனையல்ல. காட்சியமைப்புக்களும், கமராக் கோணங்களும், பாத்திரங்களின் நடிப்பும் பேசாத வார்த்தைகளை வேறெந்த ஆனானப்பட்ட செம்மொழியினாலும் உணர்த்திவிட முடியாது. சகோதரர்களான அலியும், சாராவும், அவர்களுக்கிடையே கால்மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் காலணிகளும்தான் Children Of Heaven படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாகவமைய, படம் முழுக்க உரையாடிக் கொண்டிருப்பது அச்சிறுவர்களின் பார்வைப் பரிமாற்றங்களும், அந்த அழுக்குக் காலணிகளுமேயொழிய அங்கு மொழியின் பிரயோகம் மிக மிகக் குறைவாகவே காணப்பட்டது.
சிறுமி சாராவின் ரோஸ் நிறக் காலணிகள் தைக்கப்படுவதிலிருந்து தொடங்கும் படம், அக்காலணிகள் அண்ணனான அலியின் கவனக்குறைவினால் தொலைந்து போக.. காலணியில்லாமல் பாடசாலைக்குச் செல்லவழியில்லாது அலியின் காலணிகளையே இருவரும் மாற்றி மாற்றிப் பாவிப்பதும், தொலைந்துவிட்ட காலணியைத் தேடும் படலம் தொடர்வதும், இனியும் அதனால் பயனில்லையெனத் தெரிந்து குற்றவுணர்ச்சியோடு புதுக்காலணி வாங்குவதற்கான வழிவகைகளை அலி திட்டமிடுவதுமென நீள்கின்றது.
சாதாரணத் தொழிலாளியான அப்பா, நோய்வாய்ப்பட்ட அம்மா, நினைத்தமாத்திரத்தில் புதிதாக காலணிகள் வாங்கவியலாதளவு வறிய குடும்பப் பின்னணி... இவற்றினூடு வெளிப்பட்டுத் தெரியும் குழந்தை மனத்தின் கபடமற்ற சகோதர பாசம் மனதை நெகிழவைத்தது. காலணிகள் தனது கவனக்குறைவினால் தொலைந்தமை வீட்டிற்குத் தெரியவந்தால் அப்பாவிடம் திட்டு வாங்க நேரிடுமென்பதால் எவரிடமும் சொல்லவேண்டாமென்றும், தனது காலணிகளைப் பயன்படுத்தும்படியும் அலி சாராவைக் கெஞ்சுவதும்.. வேறுவழியின்றி அவள் ஒத்துக்கொள்வதும்.. தங்கையின் சீவிச் சீவிக் குட்டையாகிப்போன பென்சிலுக்குப் பதிலாக அலி நீண்ட பென்சிலொன்றை அவளுக்குக் கொடுப்பதுமென காட்சிகளெங்கும் மேவித் தெரிந்தவை அக்குழந்தைகளின் மாசுமறுவற்ற உலகம்தான். அண்ணனின் காலணிகளோடு பாடசாலை செல்ல நேரும் முதல்நாளில் சாரா உணரும் குறுகுறுப்பையும், வெட்கத்தையும் இயக்குனர் பதிவுசெய்திருந்த விதம் இரசிக்கவைத்தது. தனது பாடசாலை முடிவடைந்தவுடன் மூச்சிரைக்க ஓடிவந்து அலியிடம் காலணிகளை ஒப்படைப்பதும், அலி அதனை மாற்றிக்கொண்டு மூச்சிரைக்க தனது பாடசாலைக்கு ஓடுவதுமென ஒருவித படபடப்புடனேயே படம் நகர்வது குறிப்பிடத்தக்கது.
மனதை மிகவும் கவர்ந்த, மூச்சைப்பிடித்துக் கொண்டு பார்க்கவைத்த காட்சி: இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க.. சாராவிற்கு அலியின் காலணிகள் அளவிற் பெரிதாகையால், ஒருநாள் அவள் அவசரத்துடன் பஹ்ரைன் தெருக்களில் ஓடி வருகையில் காலணியொன்று நழுவி நீர்நிறைந்த வாய்க்காலொன்றினுள் வீழ்ந்து நீரோட்டத்துடன் ஓடத் தொடங்குகையில் நெஞ்சம் அதிர்ந்து போனது. நீரோட்டத்துடன் சேர்ந்து காலணியும் ஓட ஓட, இதயத்தின் படபடப்பு எல்லை கடந்துவிட்டிருந்தது. நாற்காலியின் நுனியில் அமர்ந்து கைகளைக் குவித்துக்கொண்டு, அந்தக் காலணி மறுபடி கிடைத்துவிட வேண்டுமென்று கெஞ்சிக்கொண்டேயிருந்தேன். அன்றைய தினம் படம் பார்த்துக்கொண்டிருந்த எவரையும் அந்தக் காட்சி அப்படித்தான் உணரவைத்திருக்கும்; இல்லாவிட்டால்தான் ஆச்சரியப்பட்டிருந்திருக்க வேண்டும். வாய்க்காலில் ஓரிடத்தில் சிக்கிக்கொண்ட காலணியை சிறுமிக்குதவும் நோக்கில் ஒரு பெரியவர் எடுத்துவிட முயற்சிக்கும்போது மனம் ஆசுவாசத்துடன் நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், அடுத்த கணம் அவரது கைகளிலிருந்து நழுவி அது மறுபடியும் நீரோட்டத்துடன் இணைந்து கொண்டபோது மூச்சு ஒருகணம் நின்றே போயிருந்தது. பின்னர் வாய்க்கால் சுத்திகரிப்பவரொருவரால் அக்காலணி காப்பாற்றப்பட்ட போது, சாராவின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்த அதே சந்தர்ப்பத்தில் எமது கண்களையும் பனிக்கவைத்த - காட்சிகளினதும் கதாபாத்திரங்களினதும் ஒவ்வொரு அசைவினூடும் எம்மையும் கரைந்துபோக/இரண்டறக் கலக்க வைத்த - இயக்குநரின் அசாத்தியத் திறமை வியக்கவைத்தது. படத்தில் பிரமிக்க வைக்கும் மற்றுமொரு விடயம், அக்குழந்தைகளின் நடிப்பு. போலித்தனங்களின் சாயல்களேதுமில்லாமல் இயல்பாக அக்கதாபாத்திரமாகவே அவர்கள் வாழ்வதைப் பார்த்தபின்னும், தமிழ்ச்சினிமாவின் சில 'நடிப்பு வீரர்' களின் சாகசங்களைச் சகித்துக்கொள்தலென்பது சந்தேகமேயில்லாமல் இயலாமைக்கு அப்பாற்பட்டதே.

தங்கைக்கு எப்படியாவது ஒரு காலணியைப் பெற்றுத்தந்துவிட வேண்டுமென்ற முனைப்பிலிருக்கும் அலியின் கண்களில் ஒரு மரதனோட்டப்போட்டி - அதில் மூன்றாவது இடத்தினைப் பெற்றுக்கொள்பவருக்கு காலணிகள் பரிசாக வழங்கப்படுமென்ற - அறிவிப்பு தென்படுகின்றது. அதைத் தங்கையிடம் வந்து தெரிவிக்கும் காட்சியும், இருவரும் குதூகலத்துடன் சோப்பு நுரைகளைக் கொண்டு விளையாடுவதும் இரசிக்கவைத்தன. ஓட்டப்போட்டியும் மிக அருமையாகப் படம்பிடிக்கப்பட்டிருந்தமையைக் குறிப்பிட்டுத்தானாக வேண்டும். முடிவை நாம் முன்கூட்டியே ஊகிக்கக்கூடியதாகவும், எப்போதுதான் முடியுமோவென பொறுமையின்றிச் சலித்துக்கொள்ள வைப்பனவாகவுமமைந்த - எமது தமிழ்த்திரைப்படங்களில் இடம்பெறுவதைப் போன்ற - மற்றுமொரு போட்டியல்ல இது. அக்காட்சி சிறிது நீண்டநேரம் நீடித்திருந்த போதும், ஒவ்வொரு கணத்திலும் சிறுவன் அலியுடன் கூடவே நாமும் ஓடிக்கொண்டிருப்பதானவோர் உணர்வு மனதை நிறைத்திருந்தது. ஒருகட்டத்தில் தான் முதலாவதாக ஓடிக்கொண்டிருந்தும் மூன்றாவது இடத்தைத்தானே பிடிக்கவேண்டுமென்ற நினைப்பு வந்து தாக்க, வேண்டுமென்றே தனது வேகத்தைக் குறைத்து இருவரைத் தன்முன்னே அனுமதிக்கும்போது, கவலை உள்ளத்தில் கவிந்துபோனது.., கூடவே ஒரு பதட்டமும்.. ஒருவேளை மூன்றாவது ஸ்தானம் கிடைக்காமல் போகுமானால்...
இறுதியாக, போட்டியில் முதலிடம் வென்று கோப்பையைத் தூக்கும்போது அலி எவ்வித சந்தோஷமுமில்லாது விக்கி விக்கி அழும்.. மூன்றாவது பரிசான காலணிகளைப் பார்த்து ஏங்கும் - அவன் போட்டியிட முன்வந்ததே சாராவுக்காகத்தானென்பதால் - காட்சி மனதைப் பிசைந்தது. இதைத்தானோ குழந்தையுள்ளம் என்கிறார்கள்..?
2.
Children Of Heaven படம் நேரடியாக எவ்வித அரசியலையும் பேசியிருக்கவில்லையெனினும், இத்தகைய படங்கள் அரசியலைப் பேசாதிருப்பது அபூர்வமே. இதன் காட்சி நகர்வுகளினூடு சாரம்சமாக மறைந்திருந்தது, பிற்படுத்தப்பட்ட பிரதேசங்களின் வறுமைதான். உயர்வர்க்கத்துக் குடும்பங்களின் செழிப்பையும், நகர்ப்புறத்தின் முன்னேற்றங்களையும் பஹ்ரைனின் கீழ்வர்க்கத்து மக்களின் அன்றாடப்பாடுகளின் அல்லல்களுடனும், குச்சு ஒழுங்கைகளுடனும் ஒருங்கே ஒப்புநோக்குகையில் மனதையுறுத்துவது இரு வர்க்கங்களுக்கிடையேயான பாரிய இடைவெளிதான். மாடமாளிகைகளும் கூடகோபுரங்களும் ஒருபுறமிருக்க, மறுபுறத்தே இடிந்த வீடுகளும் சாதாரணக் காலணிகளுக்காக துன்பப்படும் குழந்தைகளும். முதலாளித்துவ சமுதாயத்தில் பணக்காரர்கள் இன்னுமின்னும் பணக்காரர்களாகிக் கொண்டிருக்க.., ஏழைகள் இன்னுமின்னும் ஏழைகளாவது உண்மைதான் போலும்.
காலணிகளைத் தாமதமாகக் கொண்டுவந்து சேர்த்ததற்காகத் தங்கையைக் கடிந்து கொள்ளும் அண்ணன் பின்னர் அவளைச் சமாதானப்படுத்துவதற்காகவும், தன்னால்தானே அவள் சிரமப்படுகிறாளென்ற குற்றவுணர்ச்சியோடு அவளை மகிழ்விப்பதற்காகத் தனக்கு ஆசிரியரிடமிருந்து பரிசாகக் கிடைத்த விலையுயர் பேனாவை தங்கைக்குக் கொடுப்பதும்.., அப்பேனாவை சாரா தொலைத்துவிட, அதைக் கண்டெடுக்கும் விழிப்புலனற்ற பிச்சைக்காரரொருவரின் குழந்தை - அதைத் தானே வைத்துக்கொள்ளப் போகின்றதென்ற எமது எதிர்பார்ப்புக்களைப் பொய்யாக்கியபடி - பேனாவை மறுபடியும் சாராவிடம் ஒப்படைப்பதும்.. இத்தனை சிரமங்களுக்கிடையேயும் குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகத்தான் இருந்துவருகிறார்களென நிரூபித்து விடுகின்றன.
3.
"You may give them your love
But not your thoughts,
For they have their own thoughts…
You may house their bodies
But not their souls,
For their souls dwell
In the house of tomorrow,
Which you cannot visit,
Not even in your dreams.."
- Kahlil Gibran
இவையனைத்தும் ஒருபுறமிருக்க, எமதிந்தச் சுவர்க்கத்தின் சிருஷ்டிகர்த்தாக்களுக்குச் சமூகத்தில் நாம் வழங்கியிருக்கும் ஸ்தானம் யாதென ஆராயப் புகுவோமாயின் வெறுமையே மிஞ்சும். யுத்தம் தொடக்கம் வறுமை வரை சமூகத்தின் அத்தனை இயலாமைகளுக்கும், பாலியல் துஷ்பிரயோகம் / பாலியல் தொழில் போன்ற சமூகத்தின் அதீத வக்கிர மனப்பான்மைகளுக்கும் முதலில் பலியாவது குழந்தைகள்தான்.
இலங்கையின் மிக மோசமான சிறுவர் துஷ்பிரயோகமாகக் கருதப்படுவது (வட-கிழக்கில்) அவர்களை ஆயுதமேந்த வைத்தலும், படையில் சேர்த்தலும்தான். சர்வதேசரீதியாகவும் இதுசார்ந்த பிரச்சாரம் இன்றளவும் பாரியளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது (அமெரிக்காவில் இராணுவத் தேவைகளின் நிமித்தம் பராயமடைந்தவர்களுக்கான வயதெல்லை குறைக்கப்பட்டமை தொடர்பில் எதுவும் பேசாதிருத்தல் நலம்.., அவற்றைக் கேள்விகேட்பதற்கு எமக்கு அருகதையில்லாததால்..?!). பராயமடையாதவர்களைப் படையில் இணைத்தலென்பதன் நியாய/அநியாயங்களை ஆராய்வதற்கு முன்னர் - பெண்களுக்கு ஆயுதமேந்துதல் மறுக்கப்பட்டிருந்த காலங்களில் பூலான்தேவி கொள்ளைராணியானதை எந்தளவு நியாயப்பாடுகளுடன் ஏற்றுக்கொள்கிறோமோ / மறுக்கிறோமோ அதேபோல - அதன் பின்னணி குறித்தும் கவனஞ்செலுத்தியேயாக வேண்டும். பலவந்தப்படுத்தல்களை விடுத்து நோக்கினால்.. தனது சகோதரி சிதைக்கப்படுவதையோ, தனது உறவினர் அல்லது நண்பர் கொல்லப்படுவதையோ நேருக்கு நேர் பார்க்கும் எந்தவொருவரும் உளவியல்ரீதியாக கடும்தாக்கத்திற்குள்ளாக்கப்பட்டு.. ஆயுதத்தினைத் தீர்விற்கானவோர் வழியாகத் தேர்ந்தெடுத்தல் தவிர்க்கமுடியாதது. அடிப்படை மூலகாரணியான இனமுரண்பாடு தீர்க்கப்பட்டாலேயொழிய இத்தகைய வன்மங்களைத் தடுத்துநிறுத்த முடியாது.
இவ்வடிப்படை யதார்த்தத்தினை விளங்கிக்கொள்ளாத சர்வதேச சமூகமும் மற்றவர்களும் பராயமடையாத ஆயுததாரிகளின் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களேயொழிய, தென்னிலங்கைச் சிறாரின் அவலநிலையை யாரும் கருத்திற்கொண்டபாடில்லை. வடகிழக்கில் ஆயுதமேந்துவதன் மூலம் 'உரிமை மறுக்கப்பட்ட' சிறுவர்களைவிடவும் பலமடங்கானோரின் உரிமை தென்னிலங்கையில் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்துமே உரிமை மறுப்புகள்தான்.., அங்கே யுத்தத்தின் பெயரால்; இங்கேயோ வறுமையின் பெயரால். எண்ணற்ற சிறுவர்கள் வறுமையின் காரணமாக - வயிற்றுப் பிழைப்பிற்காக - தமது கல்வியையும் துறந்து வீட்டு வேலைகளுக்குச் செல்கிறார்கள். உடல், உளரீதியான பாதிப்புகளின் படி நோக்குவோமாயின் துவக்கு ஏந்துவதற்கும், துடைப்பங்கட்டை ஏந்துவதற்குமிடையிலொன்றும் பாரிய வேறுபாடுகளில்லை.
அதைவிடவும் வருந்தவைப்பது பாலியல் துஷ்பிரயோகங்களதும், பராயமடையாத பாலியல் தொழிலாளர்களதும் அபரிமிதமான அதிகரிப்பு. இவற்றிற்குப் பலியாவது சிறுமிகள் மட்டும்தானென நினைத்தால், நீங்கள் ஏமாந்துபோக வேண்டியதுதான். விகிதாசார அடிப்படையில் சிறுமிகளை விடவும், சிறுவர்களே அதிகமதிகம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. பராயமடையாத பாலியல் தொழிலாளர்களுக்கும், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குமிடையிலான வேறுபாடு / முரண்பாடு குறித்தும் - பொதுவாக இவ்விரண்டு பதங்களும் ஒன்றுடனொன்று சிக்கார்ந்த நூலிழை வேறுபாட்டினைக் கொண்டுள்ளநிலையில் - நாம் இங்கு கவனஞ்செலுத்த வேண்டியதாகின்றது. பாலியல் தொழிலினைத் தனது வாழ்வாதாரமாகவும், வாழ்க்கை முறையாகவுமேற்றுக்கொண்டவரே பாலியல் தொழிலாளியென அடையாளப்படுத்தப்படுகின்றார். ஒரு ஆண் / பெண் சுயவுணர்வுடனோ அல்லது சுயவுணர்வற்ற நிலையிலோ, இத்தகைய வாழ்க்கைமுறையினை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டு, காலப்போக்கில் அதுவே அவரது / அவராகவே ஏற்றுக்கொள்ளப்பட்ட வாழ்தலாகவும், தொழிலாகவும் மாற்றமடைகின்றது. ஆயினும், சிறுவர்கள் / பராயமடையாதவர்களின் நிலையினையெடுத்து நோக்கின் பலவந்தமாகவோ, சூட்சுமமாகத் திட்டமிடப்பட்ட முறையிலோ, வன்முறையினூடாகவோ அல்லது வேறுவழிகளேதுமற்றுப்போன காரணத்தினாலோ அவர்கள்மீது இத்தகைய வாழ்க்கைமுறை வளர்ந்தோரினால் திணிக்கப்படுகின்றது. பணம், வருவாய் போன்ற பொருளாதாரக் காரணிகளும், சில சமூகக் காரணிகளுமே கூட இதற்கான ஊக்குவிப்பான்களாகவமைகின்றன.
ஆனால் பாலியல் துஷ்பிரயோகத்தினைப் பொறுத்தவரை, ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள் பராயமடையாதவரொருவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல்களுக்குள்ளாவதையே அது குறித்து நிற்கின்றது. ஆனால் அவர் பாலியல் தொழிலாளியொருவரைப் போல 'பால்' இனை தனது வாழ்வாதாரமாகவோ, வாழ்க்கை முறையாகவோ ஏற்றுக்கொண்டவரல்ல. இத்தகைய பாலியல் துஷ்பிரயோகம் அல்லது பாலியல் ரீதியான அத்துமீறலானது பிற்பட்ட காலங்களில் சிக்கார்ந்த, மோசமான பிரச்சனைகளைத் தோற்றுவிக்கக்கூடிய அதேவேளை ஒருவரின் ஆளுமை வளர்ச்சியிலும் கடும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும். சிறுவயதில் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியமை நாளடைவில் பாலியல் தொழிலாளியாக உருவெடுப்பதில் தாக்கம் செலுத்தக்கூடிய சாத்தியப்பாடுகளையும் மறுப்பதற்கில்லை.
இலங்கையைப் பொறுத்தவரை பராயமடையாதோரின் பாலியல் தொழிலானது - இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பிரதேசங்கள், கடற்கரைகள், ஆயுர்வேத சிகிச்சை முறைகள் ஆகியவற்றுக்குச் சமானமாக - ஒரு மறைமுக Tourist Attraction ஆக வளர்ந்து வரும்நிலையில் அதுதொடர்பான அடிப்படை விழிப்புநிலைசார் அறிவு எத்தனை பேருக்கு இருக்கக்கூடுமென்பது சந்தேகத்திற்குரியதே. இதுபற்றிய பகிரங்கக் கருத்தாடல்கள் - அதுவும் அறிவுஜீவிகள் மட்டத்தினைவிடத் தாழ்ந்த மட்டங்களில் / சராசரி மக்கள் மத்தியில் - இடம்பெறுவது மிகக்குறைவு. அரசியல், பணம் மற்றும் இன்னபிறக் காரணிகளின் பின்னணியில் திட்டமிட்ட முறையில் அவை மூடிமறைக்கப்படுகின்றன. இது வெறுமனவே சமுதாயத்தின் மைய நீரோட்டத்திலிருந்து விலகிய சபிக்கப்பட்டவொரு பிரிவினரின் உரிமைகள் பற்றிய கரிசனையல்ல. மாறாக, ஒட்டுமொத்தச் சமூகக் கட்டமைப்பின் - தவிர்க்க முடியாததோர் அங்கமாக விளங்கிவருபர்களாதலால் - போக்கினைக் கேள்விக்குள்ளாக்க வேண்டிய தேவையை இந்நிலைமை உருவாக்குகின்றது.
சமூகத்துக் கயமைகளை ஊடறுத்து உள்நுழைய வழிசமைக்காதவரையில், குழந்தைகளுக்கும் சுவர்க்கத்திற்குமிடையிலான உறவு/முரண் குறித்து நாமெல்லோரும் அலட்டிக்கொண்டிருத்தல் - குழந்தைகள்=சுவர்க்கம் எனக் கொள்வோமாயின்.. அதுவே உண்மையாயினும் - அபத்தமானதில்லையா..?
(ஒரே கணத்தில் தாயாகவும், குழந்தையாகவும் உணர்தலை சாத்தியமாக்கிப்போன என் பிரிய மாதுளங்கொளுந்திற்காக..)
நன்றி: படங்கள்
8 comments:
நல்ல பதிவு நன்றி
நன்று.
நாசமறுப்பான், டிசே..
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
மஜித் மஜிதியின் படங்களில் குறிப்பிடத்தக்க மற்றிரண்டு படங்கள் Colour of paradise,Baran.சந்தர்ப்பம் கிடைத்தால் பாருங்கள்
இன்றைய படம் ஷ்யாம் பெனகலின் ஆங்கூர் என்று கேள்விப்பட்டேன்.உங்கள் விமர்சனத்தை எதிர்பார்த்திருக்கிறேன்
பின்னூட்டத்திற்கு நன்றி, ஈழநாதன்.
இங்கே இத்தகைய படங்கள் பார்க்கக் கிடைப்பது வெகு அபூர்வம். இருந்தாலும் பார்க்க ஆசையாகத்தான் இருக்கிறது.
அதே படம்தான். இப்போதுதான் பார்த்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறேன். படம் இரசிக்கவைத்தது.. சமூகத்தின் அசட்டுத்தனங்களை ஷியாம் பெனகல் எடுத்துக்காட்டியிருக்கும் விதம் அருமை.
//உங்கள் விமர்சனத்தை எதிர்பார்த்திருக்கிறேன்//
இதென்னடாப்பா பெரிய வம்பாப் போச்சு.. ஆனாலும் இது நல்லாயில்லை பாருங்கோ..:-(
சிவகுமாரை அல்லது படம் பார்க்க வரும் துவாரகனைக் கேட்டால் இந்தப் படங்களை வாங்கும் கடையைக் காட்டுவார்கள் முடிந்தால் வாங்கிப் பாருங்கள்.
விமர்சனம் என்ன விமர்சனம் இணையத்தில் தேடினால் ஆயிரத்தெட்டு விமர்சனம் கிடைக்கும்.ஆனால் படம் பற்றின உங்கள் பார்வை(ஏதோ கொஞ்சம் நல்லா எழுதுறீர் என்ற முறையிலை) எப்படியிருக்கிறது என்று பார்க்கும் ஆசையில் கேட்டால் பெரிய நடப்புக் காட்டுறீர்.சரி சரி விரும்பினால் ஒரு மின்னஞ்சல் போடும்
eelanathan at yahoo.com
இந்தப் படத்தை முப்பது முறையேனும் பார்த்து இருப்பேன். மனம் சோர்வடையும் போது சாரா, அலி முகத்தைப் பார்த்தாலே அந்த innocence மனதுக்குப் புத்துணர்ச்சி தரும். என் நண்பர்கள், ஊர்ப் பிள்ளைகள் எல்லாருக்கும் காட்டியிருக்கிறேன். தமிழ் மட்டுமே தெரிந்த என் ஊர்ப் பிள்ளைகள் காட்சிகள் ஊடாகவே இந்தப் படத்தை புரிந்து கொண்டது படத்தின் கலை த் தரத்துக்கு அத்தாட்சி. படத்தைத் தொடர்ந்து உண்மையில் குழந்தைகள் இருக்கும் நிலை குறித்து எழுதி இருப்பதைப் பார்க்கையில் தான் உறுத்தல் :(
பின்னூட்டத்துக்கு நன்றி, ரவிசங்கர்!
அருமையான காரியம் செய்து வருகிறீர்கள்.. இத்தகைய படங்களை எமக்குத் தெரிந்தவர்கள் பலருக்கும் அறிமுகப்படுத்த வேண்டிய கடமையிருக்கிறது. உண்மையான திரைப்படமொன்றினை இரசிப்பதற்கு மொழியொன்றும் அத்தியாவசியமான நிபந்தனையல்ல என்பதென்னமோ உண்மைதான்.
இப்படத்தைப் பார்க்கையிலும் கூட அதிகம் நினைவுக்கு வந்து மனதையுறுத்தியது, எமது சமூகத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் இடமும், அவர்களது நிலையும்தான்.
நிரூபாவின் 'சுணைக்குது' வும் நினைவுக்கு வருகின்றது இப்போதெல்லாம்..
Post a Comment