Tuesday, June 27, 2006

என் தேவனே.., ஏன் எம்மைக் கைவிட்டீர்..?

- ஓர் இறுதி மன்றாடல்

1.

முலைக்காம்புகளைக் கீறிப்பிளந்துகொண்டு
தெறிக்க முனைகின்றது வலி..
உடலெங்கும் திட்டுத்திட்டாய்ப்
படிந்தும், ஒழுகியும் கொண்டிருக்கிறது,
உங்கள் எச்சில் நாற்றம்..

என் சகோதரர்களே..,
என்னை மன்னியுங்கள்

உங்கள் எல்லைகளை
அத்துமீறப்போவதற்காக..
நீங்கள் பேசவிரும்பாதவொரு மொழியினை
என்னதாக நான் தேர்ந்தெடுத்துக் கொண்டமைக்காக..

விறைத்த குறிகள்
படுக்கைப் பரப்பெங்கும்
காளான்களாய் முளைக்கும்..,
கிளைத்தெழுந்து பரவி
உடல் துளைக்க நீள்வதான
பிரமைகளுடனும், கனவுகளுடனும்

இப்படித்தான்..,
உங்களால்தான்..,
நானுமொரு பெண்ணாகிப் போனேன்...


2.

மனச்சாட்சியைத் தொலைத்தவர்களுக்கு..,

மனங்களையும், சாட்சிகளையும் மறுத்தெறிந்தவள் எழுதிக்கொள்வது...,

நீங்களெல்லாம் நாய்ப்பிறப்புக்களென்று எனக்குத் தெரியும். எனதிந்தச் சொல்லாடல் உங்களுடனானதல்லவென்பதால், அதுகுறித்து அதிகமாக நீங்கள் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. இன்னமும் எனது மனிதத்தன்மைகளிலிருந்து நான் பிறழ்ந்து போய்விடவில்லையாதலால், நாய்களுடன் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லையென்ற நொண்டிச்சாட்டுக்களுக்குமப்பால், உங்களது வக்கிரம் தொனிக்கும் மொழி இன்னமும் கைவரப்பெறாதவளென்ற ஒரே காரணத்தால் உங்களுடனான என் உரையாடல்களைத் தவிர்த்துக்கொண்டு சுயம் மீள்கிறேன்.

உங்களுக்குத் தெரிந்திருக்குமோ என்னமோ... அப்போதெல்லாம் நான் மிகவும் சிறியவளாயிருந்தேன். எனது கவலைகளெல்லாம் விரைவில் வளர்ந்து பெரியவளாகி விடவேண்டுமென்பதாயிருந்தன. இன்னமும் தெளிவுற்றால் குழந்தைமை எனது வெறுப்பிற்குரியதாகவிருந்தது. சொந்தங்கொண்டாடிய சில வல்லூறுகளால் என் பால்யகாலம் என்னிலிருந்து பிடுங்கப்பட்டு விட்டிருக்க, மூப்பு எனது மிகப்பெரிய கனவாயிருந்தது. பெரியதொரு விடுதலையினை, சுதந்திரத்தினை அது பெற்றுத்தரக்கூடுமென்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கையாகவுமிருந்தது.

பால் / பாலியல் என்பவற்றின் பொருளறியாத வயதுகளிலேயே.. அப்பா, அண்ணாவெனும் அர்த்தங்களற்ற உறவுகளின் சுரண்டல்களின் நீட்சியில்.., ஒற்றையிரவில்.. தலை நரைத்து, உடலெங்கும் முகமெங்கும் சுருக்கங்கள் விழுந்து நாங்கள் கிழடுகளாகிப் போனோம்.

*அந்தப் பெண் குழந்தை
சர்வசாதாரணமாக நடந்து போவாள்
அப்புறம் அப்புறமான நாட்களில்
அந்தப் பெண்ணால் முடியாது; முடியாது
திரும்பவே முடியாது.
தனது கடந்த கால சுயத்துக்கு
தனது பழைய
குழந்தை மயமான வாழ்வுக்கு...

அலறித்துடித்தபடி விழித்தெழுந்து.. கனவுதானென்ற ஆசுவாசங்களுடன்.. நிம்மதிகளுடன் மறுபடியும் படுக்கையில் சாய்கையில்.. தொலைந்துபோன பால்யகாலத்து சாம்ராஜ்யம் நினைவுகளாய் விரிந்து மனதை விம்மப் பண்ணும்; உள்ளம் கதறியழும்...

என் தேவனே.., ஏன் எம்மைக் கைவிட்டீர்..?


3.

மதிய உணவு இடைவேளைக்குப் பின்னரான பொழுதுகளில், நண்பர்களுடனான வழமையான அரட்டை சற்றே திசைதிரும்பி அரசியல், பெண்ணியமென ஆழ்வெளிகளை ஊடறுத்துப் புகலாயிற்று. அண்மையில் வங்காலையிலும், மன்னாரிலும் இடம்பெற்ற சம்பவங்களும் நேற்றைய இராணுவத் தளபதியின் படுகொலையும் விவாதத்தில் இடம்பிடிக்க காரசாரமான வார்த்தைப் பரிமாற்றங்கள் வெளியேறிப் பரவி அறையினை நிறைத்துக்கொள்ளலாயின. தோழியொருத்தி ஆவேசத்துடன் தன்னிலை மறந்து பேசத்தொடங்கினாள்:

நேற்றைக்கு நிகழ்ந்ததைப் பயங்கரவாதமென்கிறீர்கள்.. படுகொலையென்கிறீர்கள்.. பச்சைக் குழந்தைகள் தூக்கில் தொங்கியபோது எங்கே தொலைந்தன உங்கள் பச்சாதாபமெல்லாம்..? கட்டிய மனைவி கண்ணெதிரில் துன்புறுத்தலுக்குள்ளானபோது எப்படியிருந்திருக்கும் அந்தக் கணவனுக்கு..? பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகி.. பெண்ணுறுப்பில் வாழைப்பொத்தியும், இன்னபிறவும் சொருகப்பட்ட பெண்ணின் நிலையில் நீங்களிருந்திருப்பீர்களானால் என்னதான் செய்திருப்பீர்கள்..? அப்போதும் அனைத்துமே எங்கள் தலைவிதிதான்.. கடவுளின் திட்டங்கள்தானென்று வாய்மூடி மௌனித்திருந்திருக்க முடியுமா உங்களால்..? அந்தக் கணத்தில் கயவர்களின் கைகால்களை செயலிழக்கச் செய்ய வக்கில்லாத கடவுள் ஒரு குருடுதான்.. சந்தேகமேயில்லாமல் உங்கள் கடவுள் குருட்டுக் கடவுள்தான்..

அவர்கள் பதிலளிக்கிறார்கள்: உணர்ச்சிவசப்பட்டு கடவுளைக் குற்றஞ்சாட்டாதே.. உன் நாக்கு அழுகித்தான் போகும். அவர் எது செய்தாலும் அதற்கொரு தக்க காரணமிருக்கும். பாவம் செய்தவர்கள் என்றேனுமொருநாள் எப்படியேனும் தண்டிக்கப்படுவார்கள். மனிதர்களின் போன ஜென்மத்துப் பாவங்கள்தான் இந்தப் பிறப்பில் அவர்கள் அனுபவிக்கும் அனைத்திற்கும் காரணங்களாகின்றன.

தீவிரமடையும் வாக்குவாதத்தினுள் தலையிடுகிறேன், நான்: தனது தாய்தந்தையரைத் தொலைத்திராத வரையில், தனது தங்கைக்கோ தோழிக்கோ இப்படியெதுவும் நடந்திராதவரையில் இவர்கள் தொடர்ந்தும் பேசிக்கொண்டுதானிருப்பார்கள்.. இறந்துவிட்ட சகோதரியின் சடலத்தினருகிலமர்ந்திருக்கையில், 'எல்லாம் கடவுளின் எண்ணம்.. போன ஜென்மத்துப் பாவபுண்ணியம்' தானென எவராவது சொல்வாராகில் அப்போது உறைக்கும் இவர்களுக்கும்.. எல்லாம் தனக்கு வந்தால்தான் தெரியும்.

சரிதான் போங்கடா.. நீங்களும் உங்கள் கடவுளரும்.. என்று சாடிவிட்டு, என்னையும் இழுத்துக்கொண்டு அவ்விடத்திலிருந்து நகர்கிறாள்.., சிறுவயதிலேயே தாய்தந்தையரை இழந்து பதின்மங்களிலேயே குடும்பப் பொறுப்பினைச் சுமக்கவேண்டிய நிலைக்காளான தோழி..


4.

கடந்த வருடம் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்திற்குச் செல்லும் வழியில், நடுக்கடலில் நாங்கள் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் படகு இயங்காமல் திடீரென்று நின்றுவிட்டது. என்னென்னமோ பாடுபட்டும் படகு அசைந்துகொடுப்பதாயில்லை. கிட்டத்தட்ட 20 அல்லது 25 பேர் இருந்திருப்போம்.. அடுத்த படகு வந்தால் அனைவரையும் அதற்கு மாற்றி கரையேற்றிவிடுகிறோம்.. வேறு வழியில்லையென கைவிரித்து விட்டார், எம்மை ஏற்றிச் சென்றவர். கலக்கத்துடன் காத்திருந்தோம்.., இன்னுமொரு படகிற்காக. எங்கோவோர் மூலையிலிருந்து ஒரு வயது முதிர்ந்த பெரியவரின் குரல் வேதனையுடன் எழுந்தது: 'இன்று காலையில் வீட்டிலிருந்து வெளிக்கிடும்போது யாரோ கடவுளைக் கும்பிடாமல் வந்துவிட்டார்கள்.. அதுதான் இறைவன் இப்படிச் சோதிக்கிறார்..'

நான் குனிந்து அருகிலிருந்த தோழியின் காதில் முணுமுணுத்தேன்: 'அது அநேகமாக நாங்களிருவரும் தானாக்கும்..' சூழ்நிலையின் இறுக்கங்களைக் கட்டுடைத்துக்கொண்டு எம்மிருவரினுள்ளிருந்தும் வெடித்துப் பீறிட்டது சிரிப்பு. அத்தனை விழிகளும் எம்மையே நோக்க, சுதாகரித்துக்கொண்டு தலைகுனிந்து மௌனமானோம்.

பிரார்த்தனைகள் பலக்கத் தொடங்கின. அவரவரும் தத்தமது இஷ்ட தெய்வத்தினை மனமுருக வேண்டிக்கொண்டிருந்தார்கள்; நாங்கள் வேடிக்கை பார்த்தபடியிருந்தோம். அதிசயமோ, தற்செயலோ... படகோட்டிகளின் முயற்சியில் எஞ்சின் மறுபடியும் வேலைசெய்யத் தொடங்கியது.. படகும் விரைந்தது. அனைவர் முகத்திலும் ஆசுவாசப் பெருமூச்சு.

படகினைக் கிளப்ப இப்படியும் குறுக்குவழிகள் இருக்கின்றனவா... வியப்பால் விரிந்தன, என் விழிகள். அப்படியெனின் இனிமேல் வாகனத்தில் வீட்டை விட்டுக் கிளம்புவதானால் எவரும் பெற்றோலைப் பற்றியோ அல்லது டீசலைப் பற்றியோ கவலைப்படத் தேவையில்லை. ஆளுக்கொரு பிரார்த்தனைப் புத்தகத்துடன் கிளம்பினால் போதுமே. மானியப் பற்றாக்குறையினால் இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் மசகெண்ணெய் வழங்குதலைக் கட்டுப்படுத்தியமையால், எரிபொருளுக்குப் பயங்கரத் தட்டுப்பாடு நிலவி பொருட்களின் விலைகளும் பனையளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் இந்தத் தந்திரோபாயம் எத்துணை பயனுள்ளதாக இருக்கக்கூடும்...


5.

** உனக்கு நானொரு சாளரமாயிருந்தேன்
நீ என்னைத் திறந்தாய்.
நீ விரும்பிய காட்சியை ரசித்தாய்
தென்றலையும் நிறங்களையும் முகர்ந்தாய்
புயலினின்றும் அடைக்கலம் தேடி
சாளரக் கதவுகளைச் சாத்தினாய்
உன்னைப் பாதுகாப்பாய்த் தழுவிய
போர்வையாக ஆனேன்.

இப்படித்தான் நீர் எம்மைப் படைத்தீரா.., என் தேவனே? இப்படி வாழ்ந்திருக்கத்தான் படைத்தீரா..? வசதிகேற்றபடி வெறும் போகப்பொருளாய், பாலியல் பண்டமாய் வாழ்ந்திருக்கத்தான் முலைகளுடனும், யோனிகளுடனும் எம்மைப் படைத்துத் தொலைத்தீரா..?

எம்மைப் போன்ற பெண்களுக்கு சிந்தனையென்பது ஒரு விஷம்.. ஆலகால விஷம்..

உங்கள் உலகினில்.. தெய்வ நியதிகளுக்கு மத்தியில் எங்களுக்கு இடமில்லை. நீங்கள் தருவதை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு, அதற்கு மேலும் ஒரு வார்த்தைகூட - அது எங்கள் சுதந்திரம் பற்றியதாயிருந்தாலுமே கூட - வினவாமல், உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதையே இருத்தலின் நோக்காகக்கொண்டு வாழமறுக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு உங்கள் உலகினில் இடமேயில்லை.

யோனிகளினாலும், முலைகளினாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் உடல்தனில் மூளையையும் இணைத்து வைத்து ஏன் எம்மைப் பழிவாங்கினீர்..?

ஏன்.. என் தேவனே.., ஏன்..?


நன்றி:
*சுஜாதாபட்
**கிஸ்வர் நஹீத்

(எல்லைகள் அத்துமீறப்பட்டு, மரத்துப்போன உணர்வுகளுடன் எதிர்பார்ப்புக்களைத் தொலைத்த தோழிக்கும் அவள் சகோதரிக்கும்)

2 comments:

துவாரகன் said...

வெகு அழுத்தமான பதிவு

நிவேதா said...

நன்றி, துவாரகன்!