ஆமைகள் பறப்பதில்லைதானெனினும்..
அவற்றுக்குப் பறக்கவே தெரியாதென
எமக்குக் கற்பித்தவர் யார்?
நான் பார்த்த ஆமைக்குச்
சிறகுகளிருந்ததென்று
எவரேனும் கூறுவாராகில்
அதை நாம் மறுப்பது எங்ஙனம்?
எம் விழிகளுக்குத் தட்டுப்படாத
ஒரேயொரு காரணத்தைக்கொண்டு
முடிந்த முடிவுக்கு வருதல்
எத்துணை நியாயம்?
அண்மையில் நண்பர் சிவகுமாரின் ஏற்பாட்டில் நிகரி திரைப்பட வட்டத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த Bahman Ghobadi யின் 'Tutles Can Fly' எனும் ஈரானியத் திரைப்படமொன்றினைக் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் கண்டுகளிக்கும் - உண்மையைக் கூறுவதானால்.. கண்டுகலங்கும் - வாய்ப்புக் கிடைத்தது. நிகரி திரைப்பட வட்டத்தினர் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இதுபோன்ற கிடைத்தற்கரிய திரைப்படங்களைத் திரையிட்டு, முடிவில் அன்றைய படம் சார்ந்த கலந்துரையாடலொன்றையும் தொடர்ந்து சில மாதங்களாக நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தகுந்தது. சராசரி தென்னிந்திய மசாலாப் படங்களின் ஆதிக்கத்தில் கட்டுண்டு கிடக்கும் தலைநகர்வாசிகளுக்கு - அதிலும் குறிப்பாக இளந்தலைமுறையினருக்கு - இத்தகைய கலைநயம் வாய்ந்த படங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைப்பது வெகு அபூர்வம். அந்தவகையில் நிகரியினரின் முயற்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதே.
துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளில் பரவலாக சிறுபான்மையினமாக வாழ்ந்துவரும் குர்திஷ் இனத்தவர்களின் வரலாற்றுப் படிமங்கள் துர்ப்பாக்கிய நிலைக்குள்ளான இனக்குழுமமொன்றின் அவலநிலையினையே எடுத்துக்காட்டுகின்றன. ஈரானிய குர்திஸ்தானைச் சேர்ந்த இயக்குனர் Bahman Ghobadi தனது மூன்றாவது படமான 'Turtles Can Fly' ன் மூலம் அதனை பகுதியளவிலாயினும் ஆவணப்படுத்த முயன்றிருக்கிறார்.
அமெரிக்க - ஈராக்கிய யுத்தத்திற்குப் பின்னரான காலங்களில் ஈராக்கின் எல்லைப்புறங்களில் வாழும் குர்திஷ் இனச் சிறுவர்களின் வாழ்வியல் போராட்டங்களை உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்லும் இப்படத்தின் யதார்த்தத்தினை மீறிய காட்சி நகர்வுகள் சமயங்களில் சலிப்படைய வைத்தாலும், anti - Saddham கோஷத்துடன் ஆரம்பித்து anti - America குரலுடன் படம் முடிவடைந்தமை விதந்து குறிப்பிடத்தகுந்தது.
இதில் சுவாரசியமான அம்சம்.. இப்படத்தில் நடித்த சிறுவர்கள் எவருமே தொழில்ரீதியான நடிகர்களல்ல - அனைவரும் ஏதோவொரு வகையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சராசரிக் குழந்தைகள் - என்பதுதான். காட்சிகளின் ஆரம்பத்திலேயே வழங்கப்பட்டுவிடும் இத்தகவல் படத்தின் கனதியை இன்னமும் அதிகரிக்கச்செய்யும்.
அநேகமான சந்தர்ப்பங்களில் சமூகத்தின் குரூரங்களுக்கும், வக்கிரங்களுக்கும் அதிகளவில் பலியாவது சிறார்கள்தான். ஈராக்கிய இராணுவத்தினரால் பாலியல் துன்புறுத்தலுக்காளாகிய குர்திஷ் சிறுமியொருத்தியையும், அமெரிக்க - ஈராக்கிய யுத்தத்தின் விளைவாக கண்ணிவெடியொன்றில் அகப்பட்டு இரு கைகளையும் இழந்த அவளது மூத்த சகோதரனையும் முக்கிய கதாபாத்திரங்களாகக் கொண்டு கதை நகர்கின்றது.
பதின்ம வயதிலேயே வலுக்கட்டாயமாக, தாய்மைப் பொறுப்பினையேற்க வைக்கப்பட்ட சிறுமி.. வக்கிரத்தின் சின்னமான பார்வைத்திறனிழந்த தன் குழந்தையை நேசிக்கவும் தெரியாமல், வெறுத்தொதுக்கவும் முடியாமல் தத்தளிக்கின்றமை உணர்வுபூர்வமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இறுதியாக அக்குழந்தையைக் கொல்லும் நோக்குடன் மலையொன்றின் விளிம்பில் அமரவைத்துவிட்டு, இறுகிய மனத்துடன் திரும்பி, தானும் மலையுச்சியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறாள். இக்காட்சியிலிருந்து தொடங்கும் படம், கடந்தகாலங்களுக்கு நழுவி, சுற்றித் திரும்பி, மீண்டும் அதே சம்பவத்துடன் முடிவடைகின்றது. அவளது குழந்தை தப்பித்துக்கொள்ள, அவள் மட்டும் என்றென்றைக்குமாக மறுபடியுமொருமுறை மரணித்து விடுகின்றாள்.
இவ்விருவரதும், இவர்கள் தவிர்ந்த ஏனைய சிறார்களதும் அதிமுக்கிய பிரச்சனையாக விளங்கும் கண்ணிவெடிகளே அவர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்குகின்றன. கண்ணிவெடிகளை அகழ்ந்து அதனை உள்ளூர் தரகர்களுக்கு விற்பதன் மூலம் அன்றாடச் சீவியத்தினை நடாத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளான இச்சிறுவர்களின் பால்யகாலம் யுத்தத்தினாலும், வயதினை மீறிய பொறுப்புக்களினாலும் களவாடப்பட்டு விடுகின்றமை வேதனைக்குரியதே. ஆட்சியதிகாரம் சதாமின் கைகளிலிருந்தாலென்ன.. அமெரிக்காவின் கைகளிலிருந்தாலென்ன.. இவர்களின் கதைகள் மட்டும் காலாகாலத்திற்கும் தொடரத்தான் செய்யும்.
ஒப்பீட்டு ரீதியில் நோக்கின் ஈழத்தமிழர்களது நிலையும் இதற்கு விதிவிலக்கானதல்லவே..
அனைத்தையும் தாண்டி..,
ஆமைகளுக்கும் பறக்க முடியும்.. அண்டசராசரங்களையும், வானவீதிகளையும் கடந்து எல்லைகளற்ற வெளிகளை நோக்கி பயணிக்கவும் தெரியும்..
நேற்றிருந்த வீட்டை விட்டு
நெடுந்தூரப் பயணம்
நான் செய்து கொண்டதல்ல
அது என்மீது வீசப்பட்ட ஒரு விசம்
ஆயினும் நினைக்க முடியாத எல்லைகள்
பல தாண்டியும் என் பயணம்
முற்றுப் பெறுவதாயில்லை.
என்னொரு தேசத்தை விட்டு
கானகமும் வயல்வெளிகளையும் நோக்கி
நான் எவ்வளவு தூரம்
பயணம் செய்தல் சாத்தியம்
வியாபிக்கும் நச்சிலிருந்து என் மரணம்
என்றாவது சம்பவிக்குமென்று
என்னால் காத்திருக்கவும் முடியவில்லை
உயிர்துடித்து என் மனமும்
இறந்து போகும் பொழுதும்
காத்திருப்பு தவிர்க்க முடியாதது
என்கிறார்கள்
எனக்கொரு காத்திருப்பு இனித் தேவையில்லை
அது தரும் ஏக்கமும் கண்ணீரும்
எனக்கு வேண்டாம்
நானொரு விட்டேத்தியாய்ப்
புறப்படப் போகிறேன்
என்னிலிருந்து கண்ணீர் இல்லாதபடியால்
எல்லைகளற்ற பரந்தவெளி மீது
என்னாலியன்ற
எனக்குப் பிடித்தமான பாடலை
எழுதிவிட்டுப் போகவே விரும்புகிறேன்
அது எனது சுதந்திரத்தை நோக்கியதாயினும்
உங்களுக்குள் பிரளயத்தினை
ஊட்டுவதாகவும் இருப்பின்
நான் என் செய்தல் இயலும்?
எனது சுதந்திரத்தினை
அங்கீகரிக்காத நீங்கள்
என்னிலிருந்து எதை
எதிர்பார்க்கிறீர்கள்?!
- கலா
மரத்துப் போன உணர்வுகளுடனான அந்தச் சிறுமியின் முகம் கலாவின் இந்தக் கவிதையை நினைவுறுத்தியது. உணர்வுவெளிப்பாடுகள் தேசம், இனம், மொழி, மதம், பண்பாடு அனைத்தையும் கடந்து ஒன்றிப்போகக்கூடியவையே.
(நண்பரொருவரின் வேண்டுகோளுக்கிணங்க, ஏற்கனவே பின்னூட்டமொன்றில் குறிப்பிட்டிருந்த பட அறிமுகம் சற்றே விரிவாக)
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
ரெம்ப நல்ல பதிவு. ஏதாவது மின் இதழில் வெளியிடலாம்
அந்த ஆமை குறித்த துவக்கம் எல்லோரும் சிந்திக்கவேண்டியது.
நன்றி நிவேதா நல்லதொரு திரைப்படம் பற்றிய அறிமுகத்திற்கு
பதிவுக்கு நன்றி
அலெக்ஸ், ஈழநாதன், வசந்தன்...
பின்னூட்டங்களுக்கு நன்றி.
இத்தகைய திரைப்படங்கள் சராசரி மக்களைச் சென்றடைவதற்கு வழிவகுக்கும் சரிநிகர் சிவகுமாரே உண்மையில் பாராட்டுக்குரியவர். என்னதான் மாய்ந்தாலும் பார்த்துவிட முடியாத படங்கள் பலவற்றை - எவரது உதவியுமில்லாமல் தானே தனித்து நின்று - திரையிட்டு இவற்றின் பரவலுக்கு அவராற்றும் பங்களிப்பு அளவிட முடியாதது. ஆனால் அவரது இந்த அரும்பெரும் முயற்சிக்குப் போதிய ஆதரவு வழங்கப்படாமை வருத்தத்திற்குரியதே..
//எம் விழிகளுக்குத் தட்டுப்படாத
ஒரேயொரு காரணத்தைக்கொண்டு
முடிந்த முடிவுக்கு வருதல்
எத்துணை நியாயம்?//
நிதர்சனமான உண்மை.
பதிவும் அருமை. நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல இது அரசியலில் பொறுப்புடன் சொல்லப்பட்டுள்ள ஒன்றுதான்.
பாராட்டுக்கள்.
thanks nevetha
நல்ல படங்களை அறிமுகப் படுத்தி உள்ளீர்கள்
ரொம்ப நன்றி
நல்ல படங்களை அறிமுகப் படுத்தி உள்ளீர்கள்
ரொம்ப நன்றி
Post a Comment