Saturday, June 17, 2006

ஒன்றும்.. எல்லாமும்.. அற்றுப்போய் யாதுமாகி!

சகித்தல்களின் எல்லைகளை மீறிய சம்பவங்களுக்காகவும்.., மௌனிக்க மறுத்த கணங்களுக்காகவும்..


1. மனித உரிமையாளன் பற்றி...

எவ்வாறு சித்திரவதைக்கு உள்ளானவர்களும் சித்திரவதையாளர்களும் ஒரே
இடத்தில் சமாதானமாகி வாழ முடியும்? ஒடுக்குமுறையால்
பீதியூட்டப்பட்ட ஒரு நாட்டில் வெளிப்படையாகப் பேசுவது பற்றிய பயம்
இன்றளவும் எங்கெங்கும் நிறைந்திருக்கும் ஒரு நாட்டில் எவ்வாறு அந்த
நாட்டை வேதனையிலிருந்து மீட்க முடியும்?

பொய்யே வழமையாகி விட்டபோது உண்மையை எப்படித்தான் எட்டுவது?
வரலாற்றின் கைதிகளாக நாம் ஆகாமல் எப்படி கடந்த காலத்தை
உயிர்ப்புடன் வைத்துக் கொள்வது? வருங்காலத்திலும் இவை நேரலாம்
என்று கருதாமல் எவ்வாறு அதை முற்றிலும் மறத்தல் முடியும்?
சமாதானத்தை நிச்சயப்படுத்துவதற்காக உண்மைகளை தியாகம்
செய்யத்தான் வேண்டுமா?

கடந்த காலத்தை நாம் மறுத்து விடும்போதும் நிராகரிக்கும் போதும்
உண்மை நம்மிடம் வந்து முணுமுணுக்கும் போதும் கதறும் வேளையிலும்
அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? இராணுவ அத்துமீறல் பற்றிய
பயம் என்றென்றும் இருக்குமானால் மக்கள் நீதியையும் சமத்துவத்தையும்
தேடிச்செல்வது எங்ஙனம் சாத்தியம்?

இந்த நிலைமைகளையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால்
வன்முறை தவிர்க்கப்படக் கூடியதாகவா இருக்கிறது? மிக மோசமாக
வன்முறைக்கு உள்ளாகிய மக்களுக்கு முன்னால், பாதிக்கப்பட்ட
மக்களுக்கு முன்னால் எவ்வளவு தூரம் குற்றவுணர்ச்சி கொண்டவர்களாக
நாம் இருக்கிறோம்?

எல்லாவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய மனத்துயரம் யாதெனில் தேசத்தின்
ஜனநாயக ஸ்திர நிலையை உருவாக்கும் மனோநிலையை அழித்துவிடாமல்
இவ்விஷயங்களை நாம் எவ்வாறு எதிர்கொள்வது?


2. கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்

நான் ஒரு கைதியாக அவர்களிடம் இல்லையென்று
அவர்கள் சொன்னால்
நீங்கள் அதை நம்பவேண்டாம்
என்றோ ஒருநாள் நிச்சயமாக
அவர்கள் அதை
ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்
என்னை விடுதலை செய்துவிட்டதாக
அவர்கள் சொன்னால்
அதை நீங்கள் நம்பவேண்டாம்
என்றோ ஒருநாள் நிச்சயமாக அவர்கள்
தாங்கள் பொய் சொன்னதாக
ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்
நான் கட்சிக்குத் துரோகமிழைத்து விட்டதாக
அவர்கள் சொன்னால்
நீங்கள் அதை நம்பவேண்டாம்
என்றோ ஒருநாள்
நான் கட்சிக்கு விசுவாசமாகத்தான் இருந்தேன்
என்பதை
ஒப்புக் கொள்வார்கள்.

அவர்களை நம்பவேண்டாம்
நம்பவே வேண்டாம்
அவர்கள் சொல்கிற எதையும்
நம்ப வேண்டாம்
அவர்கள் சத்தியம் செய்கிற எதையும்
அவர்கள்
சுட்டிக் காண்பிக்கிற எதையும்

அவர்களை நம்ப வேண்டாம்

கடைசியாக அந்த நாள் வரும்போது
அவர்கள் உங்களிடம் வந்து
என் உடம்பை
அடையாளம் காட்டச் சொல்லும்படி
கேட்கும்போது
ஒரு குரல் சொல்லும்:
நாங்கள் இவனைக் கொன்றோம்
இந்த அயோக்கியன் செத்துப்போனான்
இவன் செத்தான்

நான் முழுமையாக
முற்று முழுதாக நிச்சயமாக
இறந்துவிட்டேன் என்று அவர்கள்
சொல்லும் போதும்

அவர்களை நம்ப வேண்டாம்
அவர்களை நம்ப வேண்டாம்
அவர்களை நம்ப வேண்டாம்.

மூலம்:- ஆரியல் டோப்மேன் (இலத்தீன் அமெரிக்கக் கவிஞர்)
மொழிபெயர்ப்பு:- யமுனா ராஜேந்திரன்


3. ஆயிஷாவுடன் என் கடைசிநாள்

இப்போது எனக்கு நினைவிருப்பதெல்லாம்
நாங்கள் பேசாத சொற்கள்தான்

காற்று அவற்றை உயரே எடுத்துச் சென்று
இரவின் வானத்துள் வீசியது
சந்திரன் நட்சத்திரங்களை எண்ணியவாறு இருந்தது

சொல்வதற்கு உன்னிடம் நிறைய இருந்தன
ஆனால் மௌனம் நம்மைச் செவிடாக்கியது
வேதனையால் மௌனித்து
ஜெருசலேம் தன் குழந்தைகளைப் புதைப்பதைப்
பார்த்தவாறு நாம் உட்கார்ந்திருந்தோம்

அந்தச் சிறிய புதைகுழியில்
நான் எனது கையை வைத்தேன்
ஒரு கண்ணீர்த் துளியை வழிய விட்டேன்

நாம் இருவரும் கவனித்ததைப் போல்
அது மிகவும் சிறியது
ஊர்க்குருவியின் உடைந்த சிறகுகளையும்
இரத்தம் தோய்ந்த தலையையும்
எனது மென் துப்பட்டியால் போர்த்தினேன்

ஜெருசலேத்தின் துயரத்தின் கரையில்
முஅத்தீனின் அழைப்பு ஒலித்தபோது
அதை நான் மக்காவை நோக்கித்
திருப்பி வைத்தேன்

இப்போது மௌனமாக
அசைவற்றுக் கிடக்கும் ஊர்க்குருவியைப் போல்
அந்த இரவின் இருண்ட தனிமையில் திரும்பிவர
உனக்கு ஒருபோதும் சுதந்திரம் இருந்ததில்லை

பலஸ்தீன் மீதுள்ள உனது காதல்
ஆகாயத்தைக் கொழுத்தி உயிர்ப்பிக்கும் படிக்கு
வலிக்கும் உன் உடலை
நீ பூமியின் விளிம்பின் மீது வைத்தாய்

இப்போது எனக்கு நினைவிருப்பதெல்லாம்
நாங்கள் பேசாத சொற்கள்தான்

காற்று அவற்றை உயரே எடுத்துச் சென்று
வானங்களுக்குள் வீசியது
சந்திரன்
நட்சத்திரங்களை எண்ணியவாறு இருந்தது.

மூலம்:- அமினா கசக் (ஆங்கிலத்தில் எழுதும் பலஸ்தீனக் கவிஞர், 1960 ல் நியூஸிலாந்தில் பிறந்து தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார்.)
மொழிபெயர்ப்பு:- எம்.ஏ.நுஹ்மான்


4. ஒன்றைப்பற்றி மட்டுமே சொல்வது தொடர்பாக

நான் ஒன்றைப்பற்றி பேசும்போது
இன்னொன்றைப்பற்றி பேசுவது போல இருக்கிறது
என்கிறாய்.
மெய்தான் -
இந்த நாளில் ஒன்றை விலக்கி இன்னொன்றைக்
காணுவது இயலாத காரியந்தான்.

மன்னாரிலிருந்து வெளிக்கிட்ட தற்கொலைப்
போராளியின் உடல்
ஜெருசலேம் நகரில் வெடித்துச் சிதறுகிறது.
மட்டக்களப்புக்குப் போகையில் மறிக்கப்படுவோனது
அடையாள அட்டை
இஸ்ரேலியப் படையினனிடம் ஒரு
பலஸ்தீனியனால் நீட்டப்படுகின்றது.
திருகோணமலை முற்றவெளியில் பொலிஸ் தேடும்
சந்தேக நபர்
சிறீ நகரில் இந்தியப்படையினரால்
கொண்டுசெல்லப்படுகிறார்.
பினோஷேயின் சிலேயில் காணாமல் போகின்றவர்கள்
சூரியகந்தவிலும் செம்மணியிலும்
புதையுண்டார்கள்.
கொழும்புச் சோதனைச்சாவடியில்
சிக்குண்ட பெண்ணைத்
தமிழகத்துக் காவல் நாய்கள் தடுப்பு மறியலில்
கடித்துக் குதறுகின்றன.

வட இலங்கையிலிருந்து விரட்டப்பட்ட இஸ்லாமியன்
அவுஸ்திரேலிய அரசால்
அனுமதி மறுக்கப்படுகிறான்.
எல்லா அகதி முகாம்களையும் சூழுகிற வேலி
ஒரே முட்கம்பிச் சுருளால் ஆக்கப்பட்டிருக்கிறது.
எல்லாச் சிறைக்கூடத்துச் சுவர்களும்
ஒரே சூளையின் அரிகற்களால் எழுப்பப்பட்டுள்ளன.
உலகின் எல்லாத் தடுப்பு முகாம்களிலும் உள்ளவர்கள்
ஒரே மொழியில்தான் இரவில் அலறுகிறார்கள்.

துருக்கியில் குர்தியனுக்கு மறுக்கப்பட்ட மொழியை
இலங்கையில் தமிழன் இழந்துகொண்டிருக்கிறான்.
யாழ்ப்பாண நூலகத்தைச் சூழ்ந்த தீயிலல்லவா
பாபர் மசூதியை இடித்த கடப்பாரைகள் வடிக்கப்பட்டன.
சாவகச்சேரியைத் தரைமட்டமாக்கிய குண்டுகள்
காசா நகரத்தின் மீது விழுந்து கொண்டிருக்கிறன.
கிளிநொச்சியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள்
பாமியன் புத்தர் சிலைகளை முடமாக்கிச் சரிக்கின்றன.
கியூபா மீதான் அமெரிக்க வணிகத்தடை
வன்னிக்கு எரிபொருள் போகாமல் தடுக்கிறது.
புலம்பெயர்ந்த உயர்சாதித் தமிழனின் முகம்
கூ-க்ளக்ஸ்-க்ளான் முகமூடிக்குள் ஒளிகிறது.
இலங்கையில் விதிக்கப்படும் செய்தித் தணிக்கை
அமெரிக்காவிலும் செல்லுபடியாகிறது.

காஷ்மீர் விடுதலைப் போராளியின் உயிர்த்தியாகம்
இலங்கைத் தமிழனுக்காக வழங்கப்படுகிறது.
நேபாளத்தின் கெரில்லாப் போராளி
மலையகத் தமிழ்த்தொழிலாளிக்காகப் போராடுகிறான்.
கொலம்பியாவில் விரிகின்ற விடுதலைப்போர்
இலங்கை விவசாயிகளின் விமோசனத்துக்கானது.
இலங்கைத் தமிழரது இடையறாத போராட்டம்
பலஸ்தீனப் போராளிகட்கு உற்சாகமூட்டுகிறது.

ஒரு நியாயத்தை ஆதரிக்கிற சொற்கள்
இன்னொரு நியாயத்தையும் ஆதரிக்கின்றன.
ஒரு கொடுமையை ஏற்கும் சொற்கள்
எல்லாக் கொடுமைகளையும் நியாயப்படுத்துகின்றன.

எனவே
நான் எதைப் பற்றிச் சொன்னாலும்
நீ எதைப் பற்றிச் சொன்னாலும்
எல்லாவற்றைப் பற்றியும் சொன்னது போலத்தான்.

- சிவசேகரம்
--------------------------------------------------------------
(தேடல்களின் ஒவ்வொரு கட்டத்திலும் - இருந்தும் இல்லாமலும் - துணைநின்ற மைத்துனனுக்கு.....)


7 comments:

இளங்கோ-டிசே said...

நிவேதா,
நல்ல கவிதைத்தேர்வுகள்.
முக்கியமாய் 'மனித 'உரிமையாளன் பற்றியும்...', 'ஆயிஷாவுடன் என் கடைசி நாளும்' யதார்த்தமான... போராட்டத்தினூடாக வெளிப்படும் வாழ்வுமுறையினைச் சொல்லிச் செல்கிறது.
....
/இப்போது மௌனமாக
அசைவற்றுக் கிடக்கும் ஊர்க்குருவியைப் போல்
அந்த இரவின் இருண்ட தனிமையில் திரும்பிவர
உனக்கு ஒருபோதும் சுதந்திரம் இருந்ததில்லை

பலஸ்தீன் மீதுள்ள உனது காதல்
ஆகாயத்தைக் கொழுத்தி உயிர்ப்பிக்கும் படிக்கு
வலிக்கும் உன் உடலை
நீ பூமியின் விளிம்பின் மீது வைத்தாய்

இப்போது எனக்கு நினைவிருப்பதெல்லாம்
நாங்கள் பேசாத சொற்கள்தான்/

இதுதான் எனதும்/எங்கள் அனைவரின் சோகங்களாயும் இருக்கும் என்று நினைக்கத்தோன்றுகின்றது. நன்றி.

நிவேதா/Yalini said...

பின்னூட்டத்திற்கு நன்றி டி.சே..,

கண்ணெதிரில் அரிந்து சீவப்படும் தலைகளும், தூக்கிலிடப்படும் குழந்தைகளும், காரணங்களற்றுக் கைதுசெய்யப்பட்டு காணமற்போன நண்பனின் முகமும் நினைவிலறையும் கணங்களின் குரூரம் இனியும் எம்மை மௌனித்திருக்க அனுமதிக்கப்போவதில்லை. நீரோக்களின் அலட்சியங்களோடு சுய தேடல்களுக்குள் ஆழ்ந்துவிட இன்னமும் அரசியல் எம் இருப்பைவிட்டு அந்நியமாகிப் போய்விடவில்லை. வாழ்தலின் ஒவ்வொரு அசைவையும் அரசியலே தீர்மானிக்குமொரு தேசத்தில் குருடர்களாய், செவிடர்களாய், ஊமைகளாய் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். இருந்தாலுமென்ன.. எதைப்பற்றியும் பேசாமலிருத்தல் இனிமேலும் சாத்தியமில்லை.

கொழும்பு நகரத்துத் தெருக்களில் நேற்று மனம் அதிரவைக்கும் சம்பவமொன்றினைக் கண்ணுற நேர்ந்தது. இளைஞர்களும், மத்திய வயதுக்காரர்களுமாய் இருபது இருபத்தைந்து ஆண்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு, கைகளை உயரத் தூக்கியவண்ணம் ஓட உத்தரவிடப்பட... பின்னே சில அதிரடிச் சட்டைக்காரர்கள் தமது ஆயுதங்களால் குறிபார்த்த வண்ணம் நின்றிருந்தனர். விக்கித்துப்போன உள்ளத்துடன் வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தவளை தரதரவென்று அப்பால் இழுத்துப் போனாள், தோழி. இன்றைய பொழுதில் வாழ்தல் இப்படித்தான் நகர்கின்றது. யாரை நோக, நாம்... யார்க்கெடுத்துரைக்க...

......

அடக்குமுறைகளும், ஒடுங்கியழிதலும், வீறிட்டெழுதலும் எல்லைகளைக் கடந்தவை. இலத்தீன் அமெரிக்கப் போராளியின் குரலும், பலஸ்தீனத் தாயின் கதறலும் எமக்கு அந்நியமானவையல்லவே. இனம், மொழி, மதம் வேறு வேறாக இருக்கலாம்.. பண்பாடு, விழுமியங்கள், புவியியல் அம்சங்கள் வேறுபடலாம்.. கிளர்ச்சிகள், போராட்டங்கள், வியூகங்கள் கூட ஒன்றாகத்தானிருக்க வேண்டுமென்பதில்லை.. எனினும், ஒடுக்கப்பட்டவர்களின் குரல் மட்டும் எங்கும், எப்போதும் இதேமாதிரித்தான் இருந்துகொண்டிருப்பது ஆச்சரியத்தினையே ஏற்படுத்துகின்றது.

அண்மையில், நண்பர் சிவகுமாரின் முயற்சியில் நிகரி திரைப்பட வட்டத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த Bahman Ghobadi யின் 'Turtles Can Fly' எனும் ஈரானியத் திரைப்படமொன்றினைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அமெரிக்க - ஈராக்கிய யுத்தத்திற்குப் பின்னரான காலங்களில் ஈராக்கின் எல்லைப்புறங்களில் வாழும் குர்திஷ் இனச் சிறுவர்களின் வாழ்வியல் போராட்டங்களை உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்லும் இப்படத்தின் யதார்த்தத்தினை மீறிய காட்சி நகர்வுகள் சமயங்களில் சலிப்படைய வைத்தாலும், anti - Saddham கோஷத்துடன் ஆரம்பித்து anti - America குரலுடன் படம் முடிவடைந்த விதம் இரசிக்கவைத்தது.

......

துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளில் பரவலாக சிறுபான்மையினமாக வாழ்ந்துவரும் குர்திஷ் இனத்தவர்களின் வரலாற்றுப் படிமங்கள் சிந்தனையைத் தூண்டுகின்றன. ஒவ்வொரு நாடும், தத்தமது நாட்டின் குர்திஷ் விடுதலைப் போராட்டக் குழுவினருக்கு ஆயுதங்களையும், இராணுவப் பயிற்சிகளையும் வழங்கி அண்டைநாட்டின் மீது ஏவிவிடுகின்றது. இறுதியாக ஒருநாள் வளர்த்த கடா மார்பில் பாயும்போது தலையில் துண்டைப்போட்டுக் கொண்டு செய்வதறியாது விழிப்பது அனைவருக்கும் வாடிக்கையாகிப் போனது. அரசியல் சார்ந்த சிக்கல்கள் சர்வதேசியமயமானவை.

மற்றும்படி, வரலாற்றின் கறைபடிந்த அத்தியாயங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் எத்தனையோ. அந்தவகையில் நம்பிக்கையைத் துளிர்விடச் செய்பவை, சர்வதேசச் சந்தையில் தவிர்க்க முடியா இடமொன்றைத் தனதாக்கியிருக்கும் சீனாவும்.., அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாத கியூபாவும்தான்.

சுய இலாபங்கருதி உரிமைக்கான எழுச்சிகளை விலைபேசும் கூட்டத்தினுள் எம்மவரும் உள்ளடங்காததையிட்டு நாம் பெருமைப்படத்தான் வேண்டும்.

Anonymous said...

ம்....

அருள் குமார் said...

//எல்லாவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய மனத்துயரம் யாதெனில் தேசத்தின்
ஜனநாயக ஸ்திர நிலையை உருவாக்கும் மனோநிலையை அழித்துவிடாமல்
இவ்விஷயங்களை நாம் எவ்வாறு எதிர்கொள்வது?// - இந்த நிலையில் இப்படிச் சிந்திப்பதே அபூர்வம்!

நிவேதா/Yalini said...

'ம்' கொட்டிச் சென்ற அனானிமஸ், அருள்குமார்..,

பின்னூட்டங்களுக்கு நன்றி..

// இந்த நிலையில் இப்படிச் சிந்திப்பதே அபூர்வம்! //

உண்மைதான். ஆனாலும் ஜனநாயக ஸ்திரநிலையை உருவாக்கும் மனோநிலையினை அழித்துவிடாமலிருப்பது தொடர்பாக அக்கறை கொள்வதாய், நீலிக்கண்ணீர் வடிப்பவர்களைக் காணும்போதெல்லாம்.. அரசறிவியல் மாணவியாகிய என்னைப் போன்றவர்களுக்கு ஜனநாயகத்திற்கான வரைவிலக்கணம் தொடர்பான குழப்பங்களெழுவது இயல்புதானில்லையா..?

ஜனநாயகமென்று நீங்கள் எதை வரையறுக்கிறீர்கள்..?

ஆயுததாரியான சிறுமியின் கையிலிருந்த துப்பாக்கியைப் பறித்துவிட்டு, தும்புக்கட்டையைப் பரிசளித்து அடிமையாக்குவதையா?

அல்லது அடிப்படை உரிமைகளையும், சுதந்திரத்தையும் முன் கதவால் வழங்கி கொல்லைப்புறத்தினால் உறிஞ்சிவிடுவதையா?

இல்லாதுபோனால், இப்பூகோளமயமாக்கற் சக்திகளைப்போல திரைமறைவுச் சுரண்டல்கள் மூலம் அடுத்தவர் தலையில் மிளகாய் அரைப்பதையா?

ஜனநாயகமென்பதற்கு - ஏட்டுச்சுவடிகள் தவிர்ந்த நடைமுறையுலகினில் - என்னதான் அர்த்தம்?

Anonymous said...

Hi Nivetha,

I don't often read blogs but surf when I see links on literray web pages; so got a chance to see yours too. Like your blog. Good thoughts & expressions. Keep it up.

Regards,
Vino

நிவேதா/Yalini said...

பின்னூட்டத்திற்கு நன்றி, வினோ!