Tuesday, June 13, 2006

ஆழ்மனப்பிரவாகங்களும் உயிர் துளைக்கும் அலட்சியங்களும்

- ஒரு மீள்வாசிப்பு


இரண்டாம் சாமம் தாண்டியிருக்கக்கூடும்.. இன்னும் சில மணிநேரங்களில் விடிந்தும்விடும். ஒற்றை நிலவுடனும், ஒருசில நட்சத்திரங்களுடனும் நான் மட்டும் காத்திருக்கிறேன், சில வார்த்தைகளுக்காய்.., எழுதவே படாத உன் மடலுக்காய். மயிர்பிடுங்கும் வேதனையுடன்.. உயிர் உறிஞ்சும் காயங்களுடன்.. உறக்கம் தொலைந்துபோன என் மற்றுமொரு இரவு இது. அணைக்க வந்த நித்ராதேவியை உதறித்தள்ளிவிட்டு எனதேயெனதான வீம்புப் பிடிவாதங்களுடன் இன்னமும் விழித்திருக்கிறேன்.., படுக்கைக்குப் போக விருப்பமில்லாமல். படுத்தால்.. நித்திரை வரும்; நித்திரை வந்தால்.. கனவு வரும்; கனவுகளில் நீ வருவாய்.. உனது கோபங்களுடன், அலட்சியங்களுடன், புறக்கணிப்புக்களுடன்.

நான் மென்மையானவள்.., உணர்வுகளால் ஆளப்படுபவள்.., இவையனைத்தையும்விட உன்னை உயிருக்குயிராய் நேசிப்பவள். கண்ணீரால் நனைந்திருக்கும் என் தலையணைகூட கதறியழும், உனக்காய்க் காத்திருக்கும் இந்தக் கணங்களில்.

எல்லாமும் முடிந்து போய்விட்டதாக ஒருபோதும் கருதியதில்லை, நான். வாழ்தலெனும் பயணத்தில் தங்கல்களும், தரித்தல்களும் நிரந்தரமில்லையென்பது நிதர்சனமெனின் உறைந்துவிட்ட புள்ளியிலிருந்து மறுபடியும் புதியதொரு தடம் தொடரத்தான் செய்யும். எனினும், இன்றைய கணத்தின் அவலங்கள் என்றென்றைக்குமாகத் தொடருமாயின்.. எஞ்சிய ஒவ்வொரு நாளும் இதேபோலத்தான் கழியுமாயின்.. மேலும் மேலும் எதிர்காலங்குறித்த எதிர்பார்ப்புக்களை வளர்த்து வளர்த்து மாய்வானேன்?

நாளைய பொழுதும் இப்படித்தான் விடியுமாமெனில்.. கனவுகள் வேண்டாமென்று சொல்லுங்கள்..!

எனையறியாமலேயே நிலைகுலைந்து சாய்கிறேன், கணனி மேசையில். மனதை உலுக்கும் கனவொன்றின் பின்னணியில் திடுக்கிட்டு விழிக்கிறது என் சுயவுணர்வு.. மெல்லிய அலையாய் வருடிச் செல்கிறது உனது நினைவு. இந்தக் கணத்தில் அடிமனத்தாழங்களில் எஞ்சியிருப்பதென்னமோ உன்மீதான நம்பிக்கை மட்டும்தான். அதுவும் கனவாய்க் கலைந்துவிடுமொரு பொழுதில் என் இருத்தல் குறித்தும், அதன் பின்னரான என் வாழ்தல் குறித்தும் கவலைகொள்ள உங்கள் எவருக்கும் அருகதையில்லை.

நெக்குவிட்டுருகுகிறது மனம்..,
வழிந்தோடும் உனது பிரியங்களில்.

இளவேனில் வானம்
அதிகாலை வாசம்
மனதில் சுடர்விடும்
உன்மீதான நம்பிக்கையாய்..
முளைக்குமொரு வெள்ளி

நானும் எல்லாரையும்போல அமைதியாகவும், சுமுகமாகவும் என் நாட்களைக் கழித்துக்கொண்டிருப்பதாக எண்ணி நீ நிம்மதி கொள்ளலாம். ஒவ்வொரு இரவும் நன்றாக உறங்கி எழும்புகிறேனென ஆசுவாசப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், இன்றளவும் *சமூகத்தின் நிசப்தமோ பயங்கர இரைச்சலாய் என் மன அமைதியைக் கெடுத்துக் கொண்டிருப்பது நீ அறியாதது.

எல்லாமே இயல்பாய், முறையாய்,
அதனதன் ஒழுங்கு குலையாமல்

நீ அதிசயிக்கிறாய்..
புன்னகைக்கிறேன் நான்.

நிலவைச்சுற்றி சாம்பல் ஒளிவட்டம் தென்படுவது புயல் வருவதற்கான முன்னறிவித்தலென பௌர்ணமிப் பொழுதொன்றில், நிலாச்சோறு ஊட்டியபடி அப்பம்மா கூறியது, அறியாப்பருவங்கள் கடந்தபின்னரும்.. இன்னமும் நினைவிலுண்டு. இளம்தென்றலின் ஸ்பரிசமும், கடலலைகளின் தாலாட்டும் மனதை மயக்கினாலும் ஒற்றைச் சாம்பல் வட்டம் இயற்கையின் போலி அரிதாரங்களைக் கணப்பொழுதில் களைந்தெறிந்து, பீதியை மனதில் வாரியிறைத்துச் செல்லும்.

சில்லறைத்தனமான விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறி அடிக்கடி 'பன்னாடை' என நீ என்னை செல்லமாகக் கடிந்துகொண்டாலும், நேற்றும் முரண்பட நேரிட்டது உன்னோடு. உணர்ச்சிவசப்படுதலும்.., உடைந்து சிதறும் உள்ளத்தினைக் கொண்டிருத்தலும்தான் நான் செய்த குற்றங்களா..?

நான் உன்னை நேசிக்கிறேன்... அதனாலேயே மிக மிக அதிகமாக உன்னோடு முரண்படவும் செய்கிறேன். தெரியவில்லை அன்பே... இன்னுமொரு சாம்பல் வட்டமா, இது..?

எனக்கு மட்டும்தான் தெரியும்..,
நிலவைச் சூழும்
சாம்பல் ஒளிவட்டங்கள்
இயல்பின் நிரந்தரத்துவங்களை
நிராகரிக்கக்கூடுமென்று..

நீ தனித்துவமானவன். உனைப்போலவே இனிமையாய்.. எல்லாவற்றையும் அசாத்தியப் பொறுமையுடன் செவிமடுத்தபடி.. அவரவர் பலவீனங்களுடன் மனிதரை நேசிக்கும் பாங்கு அனைவருக்கும் வாய்ப்பதில்லை.

நானொரு சுயநலவாதியென்பது நீ அறியாததல்லவே. என் கவலைகளனைத்தும் என்னைப் பற்றியவை.. எவரிடமும் தோற்றுவிட விரும்பா என் தன்னகங்காரத்தைப் பற்றியவை.. குரல்வளைதனை நெரித்துக்கொண்டிருக்கும் என் பலவீனங்களைப் பற்றியவை.. எவராலும் இலகுவில் எடைபோட்டுவிட முடியா என் ஆளுமையைப் பற்றியவை.

கடல் கடந்து, கண்டங்கள் தாண்டும் வகையறியாதவளை நொந்தும் என்னதான் செய்ய..?

ஒற்றைப்பனையின் சிருங்கார மொழி
ஒருவருக்கும் புரிவதில்லையென
ஊர்க்குருவி குறைபட்டுக் கொள்கிறது,
அணைகட்ட மண் சுமக்கா
ஊனமுற்ற அணிலிடம்

அழுத்தங்கள் பால் / பாலின வேறுபாடுகளைக் கடந்து அனைவருக்கும் பொதுவானவையே. உனது வார்த்தைகளில் கூறுவதானால்..

'...பெண்ணாய் இல்லாதவரை பெண்ணுக்குரிய வலிகளை முழுதாய் உணரமுடியாதது மாதிரி ஆண்களுக்கும் வலிகள் உண்டு. 'நீ ஆணாய் இருக்கின்றாய்' என்று சமூகம் அடிக்கடி நினைவுபடுத்தி, கொடுக்கின்ற அழுத்தங்கள் எங்களுக்கும் இருக்கின்றன. பெண்களுக்குள்ள ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகள் போல ஆண்களும் பலவிடங்களில் பாதிக்கப்படுகின்றனர். புலம்பெயர் வாழ்வு, காலநிலை, புதியமனிதர்கள், அடிமையாய் பலவிடங்களில் முதுகை வளைக்கவேண்டிய வேலைத்தள சூழ்நிலை, மேலும் குறைந்த சம்பளத்துடன் குடும்பத்தை நடத்திச்செல்லவும் தாய் நாட்டில் இருக்கும் சொந்த பந்தங்களுக்கு உதவவேண்டிய நிலை, அரசியல் காரணங்களால் தப்பிவந்துவிட்டோம் என்ற குறுகுறுக்கும் மனநிலை... இப்படி பலப் பல மன உளைச்சல்கள்/ அவசங்கள் ஆண்களுக்கும் உண்டு. ஒரு பெண்ணை இன்னொரு பெண் புரிந்துகொள்வதைப்போல, பகிர்ந்துகொள்வதற்கு வெளிகளைக் கொடுப்பதுபோல், ஒரு ஆண் இன்னொரு ஆணிடம் எதையும் அவ்வளவு இலகுவாய் பகிரமுடிவதில்லை. இப்படிப் பிரச்சினைகளை பகிர்தலோ கேட்டலோ, ஒரு 'ஆணுக்குரிய' அடையாளம் இல்லை என்று கதவுகளை இறுக அடைத்துவிடுவார்கள்..'

இவ்வாறெல்லாம் கூறி நீ சினந்ததும்.. நான் அதிர்ந்ததும் இன்னமும் மனதை விட்டகன்றபாடில்லை.

'நான் மட்டுமென்ன விதிவிலக்கா' என
வாய்க்கால் நீரின் அபஸ்வர நாதங்களையும் மீறி
தாழைமடலொன்று வினவிய
காலைப்பொழுதில்..

என்னதான் இருந்தும் என்ன..? இன்றைய தகவல் தொழினுட்ப யுகத்திலும் வரையறுக்கப்படாத விதிகளையும், நெகிழ்த்தப்படாத சட்டகங்களையும் விடுத்து எவரும் வெளியேறுவதாகக் காணோம். என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

ஆற்றங்கரையோரத்து நாணற் புற்கள்
தலைநிமிர்வதில்லையென்ற
ஆதாம் காலத்துச் சமன்பாடுகளை
கணனித் திரைகளிலிருந்து பறித்தெடுத்து
மூளைக்குள் திணித்துக் கொள்கிறான்,
என் சின்னவன்

உனது வார்த்தைகளில் மெய்சிலிர்த்து எனை மறந்து போகிறேன், அடிக்கடி. எமது பாதைகள் திசைமாறிப் பிரிந்தாலும் உனதந்த வாக்குறுதிகள் மட்டும் என்றென்றும் என்னை உயிர்த்திருக்கச் செய்யும். ஆனால், வாக்குறுதிகள் நீர்த்துப் போகின்ற நாளொன்றில் எனதன்பே...

மாமரத்துக் குயில் எனைத்தேடி வரக்கூடும். அந்தத் துறுதுறு அணில்குஞ்சும்.. ஊர்க்குருவியும் எனைக்காணாமல் சோர்ந்துவிடக்கூடும். தலைகோதும் தென்றல் காற்றிடம் ரகசியமாக எடுத்துச் சொல்.. எனக்காக அலைந்தொழிய வேண்டாமென்று. எதிர்வீட்டுப் புளியமரத்து நிழலிடம் சொல்.. நான் ஒருபோதும் திரும்பப் போவதில்லையென்று. நிலவு கரைந்து பால்வீதி வழியே வெள்ளமாகப் பாய்ந்து வருமாயின்.. வானம் தாரகைப் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்துமாயின்.. அவற்றினிடமும் சொல்.. பிரபஞ்ச வெளிகளை நோக்கிய என் பயணத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாதென்று.

நான் உன்னை நேசிக்கிறேன்... அதனாலேயே அதிகமதிகம் அஞ்சுகின்றேன், உனது மௌனம் குறித்து.. புருவ நெரிவுகள் குறித்து.. அதிருப்தியைப் பிதுக்கும் உன் உதட்டுச் சுளிவுகள் குறித்து.

மனிதர்களால் மீறப்படுகின்ற
ஒவ்வொரு வாக்குறுதியும்
கருவேலங்காட்டு முட்களால்
பொத்திப் பாதுகாக்கப்படுகின்றதாம்
எனது நினைவுகளெங்கும்
முட்களே நிறைந்திருக்க,
சில்லூறுகளால் உசுப்பப்பட்டு
ஆதிவாசிக் கனவுகள் உயிர்த்தெழுமொரு பொழுதில்
விடைபெறுவேன் என் இன்மைகளோடு.

*நினைவில் நின்ற கவிதை வரியொன்று

3 comments:

KARTHIKRAMAS said...

நல்லதொரு வாசிப்பவனுபவத்தைத் தருகின்றது. நன்றி

துவாரகன் said...

புரியவேண்டியவருக்கு விளங்கினால் சரி அக்கா

நிவேதா said...

பின்னூட்டத்துக்கு நன்றி, கார்த்திக்.

தம்பீஈஈஈஈஈக்கு.. எப்பவும் என்னோட விளையாட்டுதான். அக்கா கொக்கா என்று கூப்பிட்டால் மட்டும் போதாது. வயதில் மூத்தவர்களுக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுக்கவும், பெரியாக்களிட பேச்சைக் கேட்கவும் தெரிந்திருக்க வேணும்.

முன்னைய பதிவும், இந்தப் பதிவும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில்.. வெவ்வேறு மனநிலைகளுடன் எழுதப்பட்டவை. பிறிதொரு அர்த்தத்தில் முன்னைய பதிவு எழுதப்பட்டிருந்தாலும், மீள்வாசிப்பின்போது மனநிலைக்கேற்றவாறு மொழியானது நெகிழ்ந்து கொடுத்துவிட்டது. ஒருவகையில் இந்நெகிழ்ச்சி வியப்பினையூட்டினாலும்.. மறுபுறத்தில், மொழியின் இந்தப் பலவீனம் புரிதல்களில் எத்தகைய தாக்கத்தினையேற்படுத்தக்கூடுமெனும் போது அச்சம் தான் மிகுகின்றது.

ம்ம்ம்...