கனவுகள் வேண்டாமென்று சொல்லுங்கள்..!
1.
நெக்குவிட்டுருகுகிறது மனம்..,
வழிந்தோடும் உனது பிரியங்களில்.
இளவேனில் வானம்
அதிகாலை வாசம்
மனதில் சுடர்விடும்
உன்மீதான நம்பிக்கையாய்..
முளைக்குமொரு வெள்ளி
எல்லாமே இயல்பாய், முறையாய்,
அதனதன் ஒழுங்கு குலையாமல்
நீ அதிசயிக்கிறாய்..
புன்னகைக்கிறேன் நான்.
எனக்கு மட்டும்தான் தெரியும்..,
நிலவைச் சூழும்
சாம்பல் ஒளிவட்டங்கள்
இயல்பின் நிரந்தரத்துவங்களை
நிராகரிக்கக்கூடுமென்று..
ஒற்றைப்பனையின் சிருங்கார மொழி
ஒருவருக்கும் புரிவதில்லையென
ஊர்க்குருவி குறைபட்டுக் கொள்கிறது,
அணைகட்ட மண் சுமக்கா
ஊனமுற்ற அணிலிடம்
'நான் மட்டுமென்ன விதிவிலக்கா' என
வாய்க்கால் நீரின் அபஸ்வர நாதங்களையும் மீறி
தாழைமடலொன்று வினவிய
காலைப்பொழுதில்..
ஆற்றங்கரையோரத்து நாணற் புற்கள்
தலைநிமிர்வதில்லையென்ற
ஆதாம் காலத்துச் சமன்பாடுகளை
கணனித் திரைகளிலிருந்து பறித்தெடுத்து
மூளைக்குள் திணித்துக் கொள்கிறான்,
என் சின்னவன்
மனிதர்களால் மீறப்படுகின்ற
ஒவ்வொரு வாக்குறுதியும்
கருவேலங்காட்டு முட்களால்
பொத்திப் பாதுகாக்கப்படுகின்றதாம்
எனது நினைவுகளெங்கும்
முட்களே நிறைந்திருக்க,
சில்லூறுகளால் உசுப்பப்பட்டு
ஆதிவாசிக் கனவுகள் உயிர்த்தெழுமொரு பொழுதில்
விடைபெறுவேன் என் இன்மைகளோடு.
2.
இப்போதெல்லாம்...
மின்மினிப் பூச்சிகளும்
மௌனங்காக்கத் தொடங்கியதில்
வெள்ளை யானைகள்
உலாப்போன என் தோட்டங்களில்
பட்டாம்பூச்சிகளின் சிறகசைவுகள்
கரையொதுங்குவதேயில்லை
எப்படிச் சொல்வேன்,
என் கண்ணே..
நெரிசலான பேருந்துப் பயணத்தின்
யன்னலோரத்து இருக்கை போல,
ஆசுவாசமாகிப் போனது
பாம்புகளோடு பழகுதல்;
சௌகரியமாகிப் போனது
பச்சோந்தியாய் வாழுதல்.
நிழல்களும் முக்காடிட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள
தேசத்தில் பிறந்தவளிடம்..
அலட்சியங்களுக்குள் ஊறிப்போய்
நாட்களைக் கடத்துபவளிடம்..
இன்னுமேன் இல்லாமற்போன
ஈரங்களை எதிர்பார்க்கிறாய்
மாமரத்துக் குயில்கள் பாடலுறுவது
எவரும் கேட்டு இரசிப்பதற்காகவல்லவே..
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
-கொஞ்சம் விளங்கினமாதிரியும் விளங்காத மாதிரியும் இருந்தாலும்- நல்லதொரு வாசிப்பவனுபவத்தைத் தருகின்றது. நன்றி
அருண்குமார் சொல்வது சரி என்னைப்போல் டியூப் லயிட்டுகளுக்கும் விளங்கüற மாதிரி எழுதலாமே.
(U.P.Tharsan னது பின்னூட்டம்.. எனது வலைப்பதிவுடன் என்னமோ முரண்படுகிறது. இதோ பப்ளிஷ் பண்ணிவிட்டேன். கோச்சுக்காதீங்கோ.. டியூப் லயிட்டுகளென்றால் வலைப்பதிவுக்கே பிடிக்கவில்லை போல.. ஹி!ஹி!!ஹீ!!)
டி.சே, தர்ஷன், அருண்குமார்..
பின்னூட்டங்களுக்கு நன்றி!
புரிவதும் புரியாமலிருப்பதும் எனது மொழிநடையின் பலவீனமேயொழிய உங்களது குற்றமல்ல.. பொறுத்துக் கொள்ளவேண்டுகிறேன்.
மற்றபடி தர்ஷன்.., டியூப் லைட்டுகள்தான் அதிகம் பிரகாசமானவையென்பதையும் மறந்து / மறுத்துவிட முடியாதுதானே.. (சட்டைக் கொலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம்...;-)))
Post a Comment