Wednesday, July 12, 2006

'பெண்கள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள்'

One is not born a woman;
but becomes one
- சிமோன் தி பூவா

நினைவு தெரிந்த காலந்தொட்டு இன்றுவரை பெண் மற்றும் ஆண் வர்க்கம் தொடர்பாக எமது சமூகம் கட்டமைத்து வந்திருந்த விம்பங்களுடன் முரண்பட்டே வந்திருக்கின்றேன். பெண்கள் பிறப்பதில்லை.., எழுதப்படாத சமூக நியதிகளினாலும், மரபார்ந்த ஒழுக்காறுகளினாலும் அவர்கள் செதுக்கப்படுகிறார்கள். செதுக்குதலென்பது தீயனவற்றைக் களைவதை மட்டுமே குறித்து நின்ற காலங்கள் மலையேறி விட்டன. இப்போதெல்லாம்.. கலைகளும், சிற்பங்களும் செதுக்கப்படுவது வெறும் காட்சிக்காகவேயென்ற புரிதல் வந்தவுடன் விம்பங்களனைத்தும் உடைந்து சிதறத்தான் செய்யும்.

எமது உணர்வுகளைப் புறக்கணிப்பதாகவுணர்ந்த சமுதாயத்துடன் எப்படித்தான் சமரசம் செய்துகொண்டு வாழ்வது?

பாலினம் குறித்த பார்வையின்படி பெண்தன்மை (feminity) எப்படிக் கட்டமைக்கப்பட்ட தன்மையில் இயங்குகின்றதோ, அதுபோல ஆண்தன்மையும் (Masculinity) கட்டமைக்கப்படுவதே. அந்தவகையில் பெண்ணியம் 'பெண்' பற்றியதோ, 'பெண்'ணிடம் பேசுவதோ, 'பெண்'களால் பேசப்படுவதோ அல்ல. பெண்ணியம் பாலின அடிப்படையில் தொழிற்படும் ஒட்டுமொத்தச் சமூகம் பற்றியது.
- அ.மங்கை

சமுதாயம் எமக்கென்று வழங்கியிருக்குமொரு ஸ்தானத்திலிருந்து முன்னேறி, எமக்குரித்தான நிதர்சனமான ஸ்தானமொன்றினைக் கைப்பற்றிக் கொள்தலை நோக்கிய நகர்வே வாழ்தலுக்கான போராட்டமென நினைக்கின்றேன். நிலைகொண்டுள்ள இடத்திலிருந்து அசைய எத்தனிக்கும் எந்தவொன்றும், எவரொருவரும் போராடித்தானாக வேண்டும். நகர்தலென்பது.., இன்னொன்றன் வெளியினை ஆக்கிரமித்தலே...

எனினும்..,

இருளைக் கிழித்துக்கொண்டு விரையும் நடுச்சாமத்துப் புகையிரதத்தினைப்போல.. அதே படபடப்புக்களுடன், அதே அதிர்வுகளுடன் அதிகாலையின் தடித்த பனித்திரையாய் சுற்றிலும் கவிந்திருக்கும் வன்மங்களை ஊடறுத்துப் பயணிக்க முடிகின்ற ஒரு நாளில்.. அடி வயிற்றில் கனக்கும் எந்தன் மதலைக்கு எடுத்துச் சொல்வேன்..,

'என் மாதுளங் கொளுந்தே.. அக்னிக் குஞ்சாகவல்லாது, பிறந்துவிடாதே..'

1.

கடந்த திங்கட்கிழமை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் நிகரி திரைப்பட வட்டத்தினர் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஆதரவில் வழங்கிய Siddiq Barmak ன் 'ஒஸாமா' திரைப்படத்தினைக் கண்டுகளிக்கும் வாய்ப்பு கிட்டியது.

osamapubg

இத்திரைப்படத்தின் நெறியாளரான சித்திக் பர்மக் தலிபான் எழுச்சிக்கு முன்னரும், அதன் பின்னரும் மிகத்தீவிரமாக ஆப்கானிய சினிமாத்துறையில் முனைப்புடன் செயற்பட்டவர். இதுவரை நான்கு குறுந்திரைப்படங்களையும், இரு ஆவணப்படங்களையும் நெறியாள்கை செய்த இவர் 1992 இலிருந்து 1996 காலப்பகுதியில் ஆப்கான் திரைப்பட நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்டுள்ளார். தலிபான் எழுச்சியினையடுத்து சிலகாலம் தலைமறைவாக பாகிஸ்தான் சென்று வாழவேண்டிய நிர்ப்பந்தம் இவருக்கு ஏற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இவரது முன்னைய படைப்புக்கள் யாவும் தலிபான் ஆட்சியின்போது பறிக்கப்பட்டு விட்டனவென்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.
- துண்டுப் பிரசுரத்திலிருந்து...

காபூல் யுத்தத்தில் தந்தையை இழந்த ஒஸாமா எனும் 12 வயதுச் சிறுமியைச் சுற்றியே பின்னப்பட்டுள்ள இப்படத்தின் கதை, தலிபான் கட்டுப்பாட்டுக் காலங்களில் மதத்தின் பெயரால் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும், அக்காலப்பகுதியின் குரூரங்களையும், மக்களது அச்சங்களையும் பதிவுசெய்தபடி நகர்கின்றது.

'I can't forget; but i can forgive' எனும் மண்டேலாவின் வரிகளோடு படம் ஆரம்பிக்கும் விதமே மனதைக் கவர்ந்துவிடுகின்றமை குறிப்பிடத்தகுந்தது. கணவனையிழந்த ஒஸாமாவின் தாய் ஆஸ்பத்திரியொன்றில் பணிபுரிந்து வருகின்றார். தவிர்க்க முடியாத காரணங்களால் ஆஸ்பத்திரி மூடப்பட்டுவிட்ட நிலையில் அவரது வேலை பறிபோவதுடன், வருமானத்திற்கான மார்க்கங்களும் அடைபட்டு விடுகின்றன. ஆண்துணையின்றி பெண்கள் தெருவில் இறங்கவே தலிபான்கள் தடைவிதித்திருக்க, குடும்பத்து ஆண்களை யுத்தங்களில் பறிகொடுத்த பெண்கள் பட்டினியால் இறப்பதென்பது எழுதப்படாத விதியாயிற்று. இந்நிலையில், தன் மகள் ஒஸாமாவின் தோற்றத்தினை மாற்றுவதன் மூலம் அவளை ஒரு ஆணாக வெளியுலகத்திற்கு அடையாளப்படுத்தி தமது ஜீவிதத்தைக் கொண்டுசெல்லத் தீர்மானிக்கின்றார்கள் தாயும், ஒஸாமாவின் பாட்டியும். எதிர்பாலின அடையாளங்கள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட, அக மற்றும் புறச்சூழலின் அழுத்தங்களை ஒஸாமா எவ்வாறு எதிர்கொள்கிறாளென்பதை ஒரு அந்நியராக நின்று இனங்காண முயற்சித்திருக்கிறார், இயக்குனர். படம் பெண்ணிய பார்வையிலோ அல்லது அச்சிறுமியின் நோக்குடனோ நகரவில்லையென்ற குறைபாடுகள் ஒருபுறமிருக்க, மனிதநேயக் கண்ணோட்டத்துடன் இத்தகைய அக்கிரமங்களை வெளிக்கொணர்ந்த இயக்குனர் பாராட்டுக்குரியவரே.

இப்படத்தினைப் பற்றிய கருத்தாடல்களை விடவும், அதன் பின்புலம் பற்றிய ஆய்வே சுவாரசியமானதாகப் படுகின்றது.

2.

படம் முடிவடைந்ததும், சிறு கலந்துரையாடலொன்று இடம்பெறுவது வழக்கம். இம்முறை பங்குபற்றியவர்களனைவரும் உற்சாகமாக அவரவரது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். பொதுவான பார்வையில், பகிரப்பட்ட கருத்துக்கள் பெரும்பாலும் தலிபான்களையும், இஸ்லாம் மதத்தினையும் சாடுவதாகவே அமைந்திருந்தமை வருந்தவைத்தது. தலிபான்களும் மேலைத்தேயத்தின் அடக்குமுறைகளுக்கெதிராகப் போராடும் இன்னுமொரு (மதவாத) ஆயுதப்போராட்ட குழுதானென்பதை உணரத் தவறிவிட்டிருந்தார்களோ என்னமோ...

osamapubc

தலிபான்கள் தொடர்பான அனைத்துப் பிரதிவாதங்களும் ஏற்றுக்கொள்ளத்தக்கனவாயில்லை. அவர்களின் ஆட்சிக்காலத்தில் பெண்களெவரும் ஆண்துணையின்றி தெருவிலிறங்கக் கூடாதென்பது அவர்கள் வைத்த சட்டமாகவிருந்தது. ஆனால், இன்றும்கூட எத்தனையோ ஜனநாயக ஆட்சி நிலவுவதாகக் குறிப்பிடப்படும் நாடுகளில் இவை எழுதப்படாத சட்டங்களாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. நாட்டு நிலைமை, திருடர், காமுகர் மற்றும் இன்னபிற கறுப்பு மனிதர்கள் மீதான அச்சங்களைக் காரணங்காட்டிப் பெண்களை ஒடுக்குவது சர்வசாதாரணமாகவே இடம்பெற்று வருகின்றது. இவ்வெழுதப்படாத விதிகள் காலங்காலமாக மரபார்ந்த போலி விழுமியங்களின் மூலமாகவும், ஒழுக்காறுகளின் மூலமாகவும் எம்முள் ஊட்டி வளர்க்கப்படுகின்றன. இந்நிலைமை முன்னையதை விடவும் அபாயகரமானதென்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லையே...

உண்மையைக் கூறுவதானால்.., எம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தலிபான் உயிர்த்திருப்பதை எவராலும் மறுத்துவிட முடியாது.

மற்றும்படி - தமது ஆயுதப்போராட்டத்தினை வலுப்படுத்தும் முகமாக தலிபான்கள் இஸ்லாம் மதத்தின் பெயரை உபயோகப்படுத்திக் கொண்டமைக்கு - ஒரேயடியாக இஸ்லாம் மதத்தினை மட்டும் குறைகூறவும் முடியாது. மத்திய காலங்களில், ஆயிரக்கணக்கான பெண்களை சூனியக்காரிகளென முத்திரை குத்தி அழித்தொழித்த கிறிஸ்தவ மதபீடமும், இன்றும் விதவைகளைப் படாதபாடுபடுத்தி வரும் இந்துமதமும் செய்யாத அநியாயங்களையா தலிபான்கள் செய்துவிட்டனர்.. சாதியின் பெயரால் இடம்பெறும் அக்கிரமங்களும்கூட இங்கு குறிப்பிடப்பட வேண்டியவைதான். கீழ்ச்சாதிப் பெண்ணாயிருந்தால் - 'பெண்' மற்றும் 'தாழ்ந்த சாதி' எனும் - இரு அடையாளங்களையும் காவித்திரிந்துகொண்டு, இரண்டின் பெயராலும் அடக்குமுறைக்கு ஆளாகவேண்டும்.

அண்மையில் தீபா மேத்தாவின் Water படம் பார்க்கவும் சந்தர்ப்பம் வாய்த்தது. படம் தேவைக்கும் மாறாக வர்த்தகமயப்படுத்தப்பட்டுவிட்டமை ஏமாற்றமடைய வைத்தாலும், இவ்வநீதிகளை ஏதேனுமொருவகையில் வெளிக்கொணர்ந்தமைக்காக தீபா மேத்தாவைப் பாராட்டத்தான் வேண்டும்.

மதங்களொன்றும் கடவுள்களால் அருளப்பட்டவையுமல்ல.. அதேவேளை, பெண்களை இப்படி இப்படித்தான் நடத்த வேண்டுமென எந்தக் கடவுளரும் வந்து ஆணையிட்டுச் செல்லவுமில்லை. அந்தந்தக் காலத்தின் தேவைகளுக்கேற்ப மனிதர்களுள் மகத்துவம் பெற்ற ஒரு சிலரால் அவை உருவாக்கப்பெற்று பரப்பப்பட்டிருக்கலாம். அதில் தவறேதுமில்லையெனினும், ஒவ்வொரு மதமும்.. அது சார்ந்த தத்துவங்கள் மற்றும் கருத்தியல்களும் அது தோற்றம் பெற்ற காலகட்டத்தின் அதிகார வர்க்கத்தின் வெளிப்பாடுகளாகவே அமைந்திருக்க முடியும். மாறிவரும் உலகின் போக்கிற்கேற்றபடி நெகிழ்ந்துகொடுக்காத எந்தவொரு மதமும் - மதம் மட்டுமல்ல.. அனைத்துமே - காலாவதியாகிவிட வேண்டியவைதான்.


3.
osamapubf

படத்தில் மிக மிகப் பாதித்த ஒரு காட்சி: ஒஸாமா எனும் அச்சிறுமியின் ஆள்மாறாட்டம் பிடிபட்டுவிட, விசாரணை நடாத்தப்பெற்று (சாட்சிகளெதுவும் இல்லாமலேயே.. இதுவும் மற்றுமொரு ஒடுக்குமுறையினைத்தான் சுட்டிக்காட்டுகின்றது. ஒரு ஆண் தண்டிக்கப்படுவதற்கு முன்னர் சாட்சிகளும், ஆதாரங்களும் பொதுமக்களின் முன் வெளியிடப்படுகின்றன. ஆனால், ஒரு பெண்ணுக்கு அவை தேவையில்லையெனும் மனப்பான்மையும், கடவுளுக்குத்தான் தெரியுமென்ற ரீதியிலான அவர்களது அலட்சியப்போக்கும் புலனாகின்றன) தண்டனையாக அவள் வயது முதிர்ந்த முல்லா ஒருவருக்கு திருமணம் செய்துவைக்கப்படுகிறாள். அவ்விரவில் அவர் விதவிதமான பூட்டுக்களைக் கொண்ட ஒரு கோர்வையினை எடுத்துக்கொண்டு வந்து அவள் முன் நீட்டுவார். இதில் உனக்குப் பிடித்ததைத் தெரிவுசெய்து கொள் என்றும் வினவுவார். இறுதியாக, அலங்கரிக்கப்பட்ட சற்றுப் பெரிய பூட்டொன்றை நீட்டி.. இதுதான் உனக்குப் பொருத்தமானது.. உனக்கே உனக்கானதென்று கூறும்போது... மனம் என்னிலிருந்து நழுவி காலவெளியின் எத்தனையோ அடுக்குகளைக் கடந்துவிட்டிருந்தது.

இன்றும் உலகில் ஒவ்வொரு பெண்ணுக்கும் நிகழ்ந்துகொண்டிருப்பதும் இதுவேதான்... எனினும் மிக மிக சாமர்த்தியமான முறையில்/திட்டமிட்ட முறையில் இவ்வொடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. ஆரம்பக் கல்வி தொடக்கம் தொழில்வாய்ப்பு, திருமண பந்தமென எதை எடுத்துக்கொண்டாலும் - இவையனைத்தும்தான் இன்று பெண்விடுதலை எட்டப்பட்டுவிட்டமைக்கான அளவுகோல்களாகின்றன என்பதையும் இங்கு கவனத்திற் கொண்டாக வேண்டும் - ஒரு பூட்டுக் கோர்வையை நீட்டி.. இதில் பிடித்ததைத் தெரிவுசெய்து கொள்வதற்கான சுதந்திரம் தான் இன்று நிலவுகின்றது. இதுதானாம் இன்றைய பெண்களின் சுதந்திரம். இதற்காகத்தானாம் பெண்கள் இத்தனை காலம் போராடிக் கொண்டிருந்தார்கள். இன்றைக்குச் சில தசாப்தங்களுக்கு முன்புவரை பூட்டுத் தெரிதலுக்கான சுதந்திரம் கூட இல்லாமலிருந்ததையெண்ணி, நவயுக பாஞ்சாலிகள் ஆசுவாசப்பட்டுக் கொள்ளலாம்.

கல்விமுறையாயிருந்தாலென்ன... தொழில்வாய்ப்பாயிருந்தாலென்ன... எதுவுமே பெண்களின் விடுபடலுக்கான மார்க்கங்களாக அமைவதற்கு இடங்கொடுக்காத வகையில் அவற்றைக் கட்டமைப்பதில் ஆண்மேலாதிக்கச் சமூகம் வெற்றிகண்டுள்ளது. ஒருவகையில், காலனித்துவ நாடுகளின் செயற்பாட்டிற்கு இதனை ஒப்பிடலாம். சுதந்திரம் கொடுக்கிறோம் பேர்வழியென முன்கதவால் நாட்டை விட்டு வெளியேறியவர்கள், பூகோளமயமாக்கலின் வழி பின்கதவால் மறுபடியும் நாட்டினுள் நுழைந்து, பொருளாதாரப் பண்பாட்டுச் சுரண்டலை மேற்கொண்டு வருவதற்கு ஒப்பானதுதான் ஆண்மேலாதிக்கமும். பூகோளமயமாக்கல், மார்க்ஸிசம் மற்றும் இன்னபிற ஆனானப்பட்ட கருத்தியல்களெவையும் பெண்களால் உருவாக்கப்பட்டவையல்லவென்பதால், ஜீவகர்த்தாக்களின் அதிகார ஸ்தானங்களைத் தக்கவைத்துக்கொள்ள அவை மற்றுமொரு அடக்குமுறைக்கான கருவியாகவே தொழிற்படுமென்பதில் எதுவித சந்தேகங்களுமில்லை.

கலந்துரையாடலின்போது ஒருவர் கூறிய கருத்தின்படி, இன்றைக்கு அத்தனை அரசு சாரா நிறுவனங்களும், வெளிநாட்டு அமைப்புக்களும் பெண்களை அதிகளவில் தம்மோடு இணைத்துக் கொண்டதற்கென்ன.. அவ்வமைப்புக்கள் எவற்றிலும் தீர்மானங்காளையெடுக்கக்கூடிய ஸ்தானங்களில் பெண்கள் அரிதிலும் அரிதாகவே காணப்படுகின்றனர். இத்தகைய ஸ்தாபனங்களில் பெண்கள் பயன்படுத்தப்படுவது - ஒரு கண்ணாடிப்பெட்டி பொம்மையைப் போல - தாம் பாலினச் சமத்துவத்தினைப் (Gender Equality) பேணுகின்றோமெனக் காட்டிக்கொள்ளவும், வெளிநாடுகளிலிருந்து நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் மட்டும்தான். இதனை பொதுமைப்படுத்த முடியாதாதலால் இது ஒருவித Radical Thinking எனவும் கூறலாமெனினும், ஒரு தீவிரப் பெண்ணியவாதியின் பார்வையில், ஆண்கள் இத்தகைய கருத்துக்களை முன்வைப்பதென்பது சமூகத்தில் தம்மை முற்போக்குவாதிகளாகக் காட்டிக்கொள்ளவும், சிந்திக்கத் தெரிந்த பெண்களைக் கவரவும் தானெனவும் கருதிக்கொள்ள இடமுண்டு. அகச்சூழலைச் சார்ந்த இத்தகைய முரண்கள் - அலட்சியப்படுத்தவும் முடியாத.. பொதுமைப்படுத்தவும் இயலாத - இடியாப்பச் சிக்கலானவை.


4.

படத்தின் பின்னணியிலான அரசியலும் கலந்துரையாடலின்போது முக்கிய இடம்வகித்திருந்தது. இயக்குனர் தான் சார்ந்த சமூகத்தின் மீதான விமர்சனங்களை முன்வைக்கவே எத்தனிருக்கிறாரெனினும், அதனை மேலைத்தேய ஊடகங்கள் - தலிபான் எதிர்ப்பு மற்றும் முஸ்லிம் மறுப்புக் கோஷங்களுக்கு - சார்பாகப் பயன்படுத்திக் கொள்ளவும் இப்படம் வழிவகுத்து விட்டிருந்தது. இப்படத்திற்குச் சர்வதேச ரீதியாகப் பரவலான கவனம் வழங்கப்பட்டமையையும், சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டமையையும் இதன் நீட்சியாகக் கொள்ளலாம்.

சிவகுமார் கூறியதன்படி, படைப்பாளிகளைப் பொறுத்தவரை இது கத்தியின் நுனியில் நடக்கும் முயற்சியே.


5.

எது எவ்வாறிருப்பினும், சிறுவர்கள் மத்தியில் பாலினப் பேதங்கள் நிலவுவதில்லை; வளர்ந்தோராலேயே அவை வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றனவெனும் நிதர்சனமான உண்மையை இப்படம் எடுத்துக்காட்டுகின்றமையும், ஒஸாமாவுக்கும் அவளது தோழன் எஸ்பான்டிக்குமிடையிலான உறவு எவ்விதத்திலும் கொச்சைப்படுத்தப்படாமல், உணர்வுகளை வருடிச் சென்றமையும் குறிப்பிடத்தகுந்தன.

சிறுவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவோ...


13 comments:

செல்வநாயகி said...

விரும்பிப் படிக்கிறேன் உங்களின் பதிவுகளை.

டிசே தமிழன் said...

நல்லதொரு அறிமுகம்.

ஈழநாதன்(Eelanathan) said...

நிவேதா நிகரி திரைப்பட வட்டத்தில் திரையிடப்படும் படங்களை எங்களுக்கும் அறிமுகப்படுத்துவதற்கு நன்றி தொடர்ந்து எழுதுங்கள்.பிரெஞ்ச்,ஜேர்மன்,ரஷ்யன் கலாச்சார மையங்களுக்குச் சென்று படம் பார்ப்பதுண்டா?அவை பற்றியும் எழுதலாமே

நிவேதா said...

செல்வநாயகி, டி.சே,

பின்னூட்டங்களுக்கு நன்றி.

ஈழநாதன்,

ரஷ்யக் கலாச்சார மையத்திற்குச் சென்றதுண்டு. அதுதொடர்பாகப் பதிவொன்றும் எழுதியதாக நினைவு. ஆனால் பிரெஞ்சு, ஜேர்மனிய மையங்களுக்குச் சென்றதில்லை. சில தனிப்பட்ட காரணங்களையும், சோம்பேறித்தனங்களையும் விடுத்துப் பார்த்தால் அவற்றின் மேலைத்தேய மற்றும் உயர்வர்க்கத்துச் சூழலுடன் இயல்பாக ஒன்றிணைந்து போகமுடியாத என் இயலாமையையும் ஒரு காரணமாகச் சொல்லலாம்.

அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச நினைவரங்கத்தில் (BMICH) இடம்பெற்ற திரைப்பட விழாவொன்றினைத் தவறவிட்டமை மிகவும் மனம் வருந்தச்செய்தது. எனினும், கொழும்பின் அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தினுள் அமைந்துள்ள இத்தகைய இடங்களுக்கு அதுவும் பின்மாலைப்பொழுதுகளில் செல்ல நாட்டின் நிலைமை அனுமதிப்பதில்லை. நாடு கிடக்கிற கேட்டில் இப்போது படமொன்றுதான் குறையென வீட்டில் வாங்கிக்கட்டிக் கொள்ளவும் நேரும்..:-)

நாம்தான் சபிக்கப்பட்ட இனமொன்றன் பெயரினால் அடையாளப்படுத்தப்படுபவர்களாயிற்றே...

amp said...

too gud..both the movie and your view abt it.

Yet, I disagree with your comments on taliban.Although not intended, they give a picture of taliban being anti-western.

although they were against westernization also, it was just an outcome of their more fanatical cause of religion. In my opinion, they were the result of our own ideology, which perpetrates inequality among humans by advocating racial and gender supremacy. The fact that they opposed western civilization was just a result,not the cause.

its odd, commenting on a tamil blog in english.I wish i cud do it in thamizh.Unfortunately, i lack the expertise, and i do not wish to chisel and squeeze the beautiful thamizh words in english script, which spoils both of them.

looking forward to your new posts,
Arun

ஈழநாதன்(Eelanathan) said...

நிவேதா படம் பார்த்தேன்.மிகவும் பாதித்தது ஆணாக மாற்றப்படுவதற்காக வெட்டப்பட்ட தனது பின்னப்பட்ட நீண்ட முடியை பூச்சாடியிலிட்டு நீரூற்றும் காட்சி

நிவேதா said...

நன்றி ஈழநாதன்.

நீங்கள் குறிப்பிட்ட காட்சியும் மனதை அதிரவைத்ததுதான்.. நினைவில் நீங்காமல் நிற்கும் காட்சிகளில் அதுவுமொன்று. பாட்டியின் வானவில் பற்றிய கதை.., தன்னாலும் முடியுமென்பதை நிரூபிக்க ஒஸாமா விறுவிறுவென்று மரத்திலேறுவது.. இப்படி பாதித்த காட்சிகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த மரமேறும் காட்சிதான் சட்டென்று மனதிலறைந்தது.., பெண்கள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்களென்று. பெண்களுக்கு மரமேறத் தெரியாது / பெண்கள் மரமேறுவதில்லையென்ற அவர்களது கற்பிதங்களை ஒற்றைக் கணத்தில் அவளால் உடைத்தெறிய முடிந்தது. யார் சொன்னது பெண்களுக்கு மரமேறத் தெரியாதென்று..? மரத்திலேறுவது மட்டுமல்ல.., குட்டிச்சுவரில் தொங்கியபடி கடந்து போகும் ஆண்களை ஈவ் டீஸிங் செய்யவும் பெண்களுக்குத் தெரியும்தான். இதற்கென்ன பெரிய சாமர்த்தியம் / துணிச்சல் வேண்டிக்கிடக்கிறது? இவையனைத்தும் பிறப்பிலிருந்து தொடர்பவையல்ல; மாறாக, சமூகத்தால் கட்டமைக்கப்படுபவைதானில்லையா.

பின்னூட்டத்திற்கு நன்றி, அருண்.

தலிபான்களின் மேலைத்தேய எதிர்ப்பு ஒரு விளைவேயொழிய, மூல காரணியல்லவெனும் உங்களது வாதத்தினை எந்தவிதத்திலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சோவியத் ரஷ்யாவிற்கெதிராக அமெரிக்காவினாலும், பாகிஸ்தானாலும் ஊட்டிவளர்க்கப்பட்டவோர் இயக்கத்தினை விமர்சிப்பதென்றால் - அவர்கள் மதவாதிகளாகவிருந்தாலும், ஆண்மேலாதிக்கவாதிகளாகவிருந்தாலும் - நாம் அதன் தோற்றத்திற்குக் காரணமான அனைத்துத் தரப்பையும் (அரசாங்கங்கள், அவற்றின் செயற்பாடு, உலகத்து அரசியலின் போக்கு) விமர்சனத்திற்குள்ளாக்க வேண்டியிருக்கும். துரதிர்ஷ்டவசமாக அகச்சார்புக் கருத்துநிலைகள், சூழ்நிலை மற்றும் பின்னணிகளின் காரணமாக தலிபான்களை மேலைத்தேய அடக்குமுறைக்கெதிராகப் போராடும் ஓர் விடுதலை இயக்கமாக மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது.

வட இந்தியாவின் போராளிக் குழுக்களை எடுத்துக் கொண்டாலென்ன, இலங்கையின் தமிழீழப் புலிகளை எடுத்துக் கொண்டாலென்ன, மத்திய கிழக்கின் இஸ்லாமிய இயக்கங்களை எடுத்துக் கொண்டாலென்ன... - பயங்கரவாதிகள், தீவிரவாதிகளென முத்திரை குத்துவதற்கு முன்னர் கவனிக்க வேண்டிய / மறந்துவிடக் கூடாத முக்கிய அம்சம்.. - அவை ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடும் ஆயுதக்குழுக்களே... ஒரு அரசுக்கு தனது ஆள்புலப் பிரதேசத்தில் அல்லது அதற்கப்பால் வாழும் மக்கள்/ இனங்கள்/ இன்னபிற தொடர்பாகக் காணப்படும் தார்மீகக் கடப்பாடு அவற்றிற்குக் கிடையாதென்பதும், அவ்வாறிருக்கத் தேவையில்லையென்பதும் ஒருபுறமிருக்க, அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் தென்னிலங்கை அரசாங்கத்திற்கும், ஆண்டாண்டு காலமாக அடக்கியாண்டு கொண்டிருக்கும் இந்திய அரசாங்கத்துக்கும், லெபனானிலும் பாலஸ்தீனத்திலும் இல்லாத பொல்லாத அநியாயங்களையெல்லாம் செய்துகொண்டிருக்கும் இஸ்ரேலிய அரசாங்கத்துக்கும், உலகத்துப் பொலிஸ்காரன் அமெரிக்காவுக்குமில்லாத - இருந்திருக்க வேண்டிய - தார்மீகவுணர்வுடன் இவ்விடுதலை இயக்கங்கள் செயற்படுவதாகவே எனக்குத் தோன்றுகிறது.

டிசே தமிழன் said...

நிவேதா உங்களது கடைசிப்பின்னூட்டத்தை வாசிக்கும்போது ஒரு படத்தில்(Munich?) நடக்கும் உரையாடல்தான் நினைவுவந்தது. ஜேர்மனியில் இருக்கும் ஒரு பாலஸ்தீனியப் போராளி கூறுவான், யூதர்கள் உண்மையில் இலட்சக்கணக்கில் தங்களைக் கொன்ற ஜேர்மனியர்களிடம் சண்டை பிடிக்காமல், அங்கே தமக்கென்றொரு சொந்தநாட்டைக் கேட்டு போராடாமல், யூதர்களை வதைக்காமல் தங்கள்பாட்டில் வாழ்ந்துகொண்டிருந்த பாலஸ்தீனியர்களின் நிலங்களை அபகரிப்பதும், கொடூரப்படுத்துவதும் சரியா என்று....? நியாய அநியாயங்களைப் பற்றி இன்றைய உலகில் யார் அக்கறைப்படுகின்றார்கள்? வலியதாய் இருப்பதே எதையும் சாதிக்கும் என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கும்போது, ஒடுக்கப்படுவர்களும் வலியதாய் மாறவேண்டியது, அவர்களும் தங்கள் இருப்பை தக்கவைக்க... இருக்கக்கூடிய கடைசித் துரும்பாய் இருக்கும் என்று நம்புகின்றேன்.
....
ஈரான் படம் என்று நீங்கள் எழுதிய முதல் பதிவொன்றை யோசிக்கையில்தான், இப்போது வாசிக்கத்தொடங்கிய- நோபல் பரிசு பெற்ற Shirin Ebadi யின்- Iran Awakening நூல் நினைவுக்கு வருகின்றது. ஒரு லோயராக, தாயாக, துணையாக, மனித உரிமைப் போராளியாக, சிறைக்கைதியாக, தனது நாட்டு அரசாங்கத்தாலேயே கொல்லப்படக்கூடிய சந்தர்ப்பம் அவரது கதவைத் தட்டிய பெண்மணியாக வாழ்ந்ததை//வாழ்ந்துகொண்டிருப்பதைஎல்லாம் விபரிக்கின்றார். முக்கியமாய் மூன்றாகவுலக நாடுகளைச் சேர்ந்த நம்மைப்போன்றவர்கள் வாசித்துப் பார்க்கவேண்டிய முக்கிய நூல் இதுவென்பேன்.
....
இவற்றுக்கப்பால், Shirin Ebadi இன்னும் ரெகிரானில் வசித்துக்கொண்டிருப்பதும், தனது நம்பிக்கையுடன் எதிர்காலச் சந்ததிக்காய் போராடிக்கொண்டிருப்பதும், ஈரானில் கருத்துச் சுதந்திரம் இல்லையென்று - மேற்கத்தைய நாடுகள் இட்டுக்கட்டிக்கொண்டிருக்கையில்- Shirin Ebadi போன்றவர்கள் ஈரானில் இருந்து வெளிப்படையாக எழுதி/பேசிக்கொண்டிருப்பதும்.... எனக்கு முக்கியமாய்ப்படுகிறது.

amp said...

Thats an interesting observation you made nivetha. But Im afraid, i have to disagree with it.It is true that the said organizations were a result of oppressive policies of the government,external influences and world politics. But that is not a justification for what they did. I took exception to your view of taliban as freedom fighters because of this. Coz if you call them as fighters who fought for freedom then it is denigrating for the leaders like Gandhi and Mandela, who are the real freedom fighters. A mistake can never be corrected by another mistake. Thus, to me, taliban is a group of religious fanatics who were bent on creating a new world order based on what they thought was right. They dint bother or care for their people, nor did they bother about the western oppression. If they had bothered, they would not have accepted aid from the same western/pro western sources that they detested.

Fighting against injustices and trying to correct things is one thing. But doing it right, is the most critical part where all these organizations fumble. The example of taliban is one good case to observe. They had won the right to rule over their country and had a great chance in reviving the country torn with wars. And what did they do? They destroyed what ever was left of that country's social fabric and finally ended up reversing the country back by a decade. And there lies the problem with all these organizations. They are strictly hierarchial organizations and what ever the leader thinks as right is implemented, without any questioning. And they expect the society also not to question them. A society which denies the freedom of speech and expression to its citizens is more liable to falter in its policies and more likely to commit terrible sins, just what happened in afghanistan.

The words “democracy” and “freedom of speech” may now sound hollow, after being used most frequently and most inappropriately by the director general of World police, Mr.Bush. But those two words are our towering achievements, for humanity, for they symbolise the steps man took to live together as a group. I agree, it is not perfect and there have been grave mistakes committed in the name of them. But among all the systems ever tried by us, it is the only system which atleast in letter, though not in spirit enables even a smallest man to express his dissent within the system. And Im sure given adequate time, it will develop into an ideal system which will cater to the interests of all sections of people. Further, I do not agree with the view point that every group fighting in the name of freedom has a common cause. Every one has a different cause, if it was religion for taliban and north indian groups, it was race for palestine and LTTE. But im yet to find a single group which chose to respond rightly to the oppression and injustice. But we do have individuals who fight for the same and who do it right. As pointed by Thamizhan in his comment, shirin ebadi is a gud example. India's Medha patkar is another example.As for the groups, they seem to be interested in righting a wrong by doing a bigger wrong. But no one seems to understand that it goes on a never ending cycle. Some one has to bell the cat and the group that does it, I will agree with you that it really fought oppression. The rest, I apologize for putting it this way, are merely using the cause for their survival.

நிவேதா said...

டி.சே., பின்னூட்டத்திற்கு நன்றி!

அருண்..,
உங்கள் வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதேயெனினும், கடந்து போய்விட்ட நூற்றாண்டினைச் சேர்ந்த காந்தியையும் மண்டேலாவையும் மட்டுமே உண்மையான போராளிகளாய்க் கொள்வதை - காந்தியத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பவளென்றவகையில் - நியாயப்படுத்த முடியவில்லை. காந்தியால் மட்டுமே கிடைக்கப் பெற்றதல்லவே இந்திய விடுதலை.

விடுதலைப் போராளிகளை எல்லாவிதத்திலும் நியாயப்படுத்தவோ, கண்மூடித்தனமாக ஆதரிக்கவோ முனையவில்லை நான். முதலாளித்துவவாதிகள் செய்துகொண்டிருப்பதைப்போல ஒரேயடியாக அவர்களது போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவதற்கு எமக்கு எந்தவித அருகதையுமில்லையென்றே கூற விரும்புகிறேன். Are we perfect enough to criticize others Arun?

நீண்ட பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.. பரீட்சைகள் நெருங்குவதால் நேரம் கிடைப்பதில்லை. விரிவான பதிலொன்றை பின்னரொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

amp said...

தங்கள் எழுத்து அளித்த ஊக்கத்தில், தமிழில் கருத்துக்களை பதிய கற்றுக்கொண்டேன்:).!பிழையிருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள்!!

உங்களின் கூற்று முற்றிலும் உண்மை நிவேதா!விடுதலை போராளிகளை கொச்சைப் படுத்துவது முதலாளிகளின் தலையாய தன்மையாகி விட்ட காலச்சூழ்நிலையில்,எனது முந்தைய வாதமானது அவற்றை போன்றே ஒரு பிம்பத்தை பிரதிபலிப்பது விளங்கிக் கொள்ள முடிகிறது. ஆயினும் முதலாளித்துவ பிரதிநிதிகளின் நோக்கத்தைப் போலன்றி எனது வாதமானது ஒரு ஆக்கப்பூர்வமான விமரிசனமாக அமைய வேண்டுமென்பதே எனது விருப்பம்.மொழியின் மிகப்பெரிய குறைபாடு இது தான்.அதனை சரிவர கையாளும் திறன் கைவரவில்லை என்றால்,நாம் நினைத்த கருத்து சரிவர சென்றடையாமல் திரிவு பட்டுப் போகிறது. காந்தியும் மண்டேலாவையும் நான் உதாரணமாக கூறியது அவர்கள் விடுதலை வாங்கிக் கொடுத்தமைக்காகவோ அல்லது அமைதியான முறையில் போராடியமைக்காகவோ இல்லை,அவர்கள் போராடிய நெறிமுறைகளுக்காக.காந்தியம் என்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை என்றாலும், அவர் போராடிய விதம் என்னைக் கவர்கின்றது. போராட்டம் என்பது ஆள்பலத்தையோ அல்லது அறிவு மற்றும் தொழில்நுட்ப பலத்தையொ சார்ந்தது அல்லவென்பது என் கருத்து. போராட்டம் என்பது தார்மிக (moral) பலத்தை பற்றியது. எனக்கு நேர்ந்த அநீதியினை எதிர்பதற்காக நானும் அநீதி செய்வேன் என்றால் அது போராட்டமல்ல.அத்தகைய போராட்டங்களை நிகழ்த்துபவரும் போராளிகள் அல்ல என்றே எனது முந்தைய வாதத்தில் கூற விழைந்தேன்.
/Are we perfect enough to criticize others Arun?/

No. We are not perfect Nivetha:). But as a human, it is my goal to strive for perfection. And I view criticisms and self introspections as tools that aid us in achieving it..

நிவேதா said...

அருண்! தாங்கள் தமிழில் பின்னூட்டம் பதிய விழைந்ததில் மகிழ்ச்சி. தாமதித்த பதிலுக்கு வருந்துகிறேன்.

//போராட்டம் என்பது தார்மிக (moral) பலத்தை பற்றியது.//

உண்மையிலும் உண்மை... பலர் புரிந்துகொள்ள மறுப்பதும் இதைத்தானாக்கும்.

ஜமாலன் said...

நான் பதிவுலகிற்கு வந்து 5 மாதங்களே ஆன நிலையில் தற்சமயம் உங்களது இப்பதிவை படிக்க நேர்ந்ததின் விளைவே இது.

ஓஸாமா பற்றிய உங்கள் பதிவும் அதன் பின்னோட்டங்களும் ஆரோக்கியமான மனதையும் கருத்துக்களையும் வெளிப்படுத்துகின்றன. ஆரோக்கியமான மனது என்று சொல்வதன் பொருள் நடுநிலைமை என்கிற பெயரில் பொதுவாக இவனும் வேண்டாம் அவனும் வேண்டாம் என எதாவது சொல்லாமல் சமன் செய்து சீர்தூக்கும் அந்த அளவையைக் கொண்ட மனது என்பதைதான்.

உங்கள் எழுத்தும் சிறப்பாக வெளிப்படுகிறது. இப்படத்தின் என்னைக் கவர்ந்த விடயம் 3 தலைமுறை பெண்கள் இரண்டு தலைமுறையினர் காபூல் யுத்தத்தில் பலியானவர்கள். 3-வது தலைமுறை தாலிபான்களால் என்று கதைக்கான இந்த தேர்வு. ஆண்களற்ற குடும்பம் இஸ்லாமின் ஆண் மையத்தன்மையை மையப்படுத்தவென எடுத்தாளப்படுகிறது. அப்புறம் பூட்டு. அது சரியாக உங்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பாலின வேறுபாட்டுறுதல் குறித்து நீங்கள் சுட்டியக் கோணம் உண்மையில் தற்சமயம்தான் யோசிக்கிறேன். பாலினமாதல் குறித்து நானே பதிவுகளில் எழதி உள்ளேன். ஏனோ அப்படம் பார்க்கும்போது இது எனக்கு தோன்றவில்லை.

எனது கட்டுரை பாலினமாதல் பற்றியது. சுட்டி: http://tamilbodypolitics.blogspot.com/2007/10/blog-post.html ஆச்சர்யமான விடயம் இக்கட்டுரையின் பேசுபொருள் குறித்து நீங்கள் முன்பே பேசியுள்ளீர்கள். கடந்தவாரம் ஒரு விவாதத்தில் கழிந்தது. தஸ்லிமா பற்றி. பொதுவாக இஸ்லாம் அரசியலாக ஆக்கப்பட்டிருப்பதை ஏனோ இஸ்லாம் பேசும் நபர்கள்கூட புரிந்தகொள்வது இல்லை. ஒஸாமா மற்றும் காந்தஹார் இரண்டுமே தாலிபானின் கொடுமைகளைப் பேசுபவைதான். ஆனால், தாங்கள் சுட்டிக்காட்டியதுபொல அரசியலில் அது வேறுவிதமான பேச்சாக மாறிப்போகிறது. அதற்காக இப்படங்கள் எடுக்கப்படவதையோ அல்லது அவை கூறும் உண்மைகளையோ பதியாமல் விடுவதற்கில்லை. அதேசமயம் எடுப்பவர் அரசியல் புரிதலுடன் மற்ற பரிமாணங்களையும் உள்ளடக்கி எடுப்பது என்பது அவசியமானது.

-ஜமாலன்