Friday, July 21, 2006

உடைபட மறுத்த பிம்பங்கள்

ஆன்மாவின் அலறலுக்கு அமைதியாகச் செவிசாய்த்திருக்கிறீர்களா நீங்கள், எப்போதாவது?

பிம்பங்கள் உடைந்து சிதறும் பொழுதொன்றில் மனிதையாய்.., இறைவியாய்.. ஆதியடையாளங்களுடன் இருத்தல்களின் எல்லைகளை நோக்கிச் சிறகுவிரிக்கையில்...

கனக்கிறது காலம், குருதியிலூறிய பஞ்சாய்...

கண்ணாடியின் முன் நிற்கிறேன்.
அதில் ஒருத்தி தோன்றுகிறாள்.
நான் சிரித்தால்,
அவள் சிரிக்கிறாள்.
நான் முறைத்தால்,
அவளும் முறைக்கிறாள்.
அவள்தான் நானாம்...
அப்படித்தான் அவர்கள் கற்றுத்தந்தார்கள்.

ஆன்மாவோ அலறுகிறது:
இத்தனை உயிர்ப்பற்றதா உனது 'நான்'?
நோவாவின் பேழை மூழ்குவதற்குச்
சில கணங்களுக்கு முன்..
மெடுசாவின் தலை புதைக்கப்பட்டதற்கும்
சில அடிகள் அப்பால்..
தொலைந்துபோன மாயாவின் சிதிலங்களோடு
அது உனக்காகக் காத்திருக்கின்றது.
தேடு...,
தேடு...,
தேடிக்கொண்டேயிரு.


பிம்பம் - 01 (உணர்தல்)

உங்களுக்கு என்னைப்பற்றித் தெரியாது. நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புவதுமில்லை. ஆனாலும் பரவாயில்லை... அதை என்னால் மன்னித்துவிட முடியும். எனக்கும் உங்களைப் பற்றித் தெரியாது.., நானும் உங்களைப் புரிந்துகொள்ள விரும்பவில்லையென்ற காரணங்களை முன்வைத்து உங்கள் அறியாமையை.. அக்கறையின்மையை நான் மன்னித்து விடுகிறேன்.

பரஸ்பரப் புரிந்துணர்வு என்னை அச்சத்திலாழ்த்துகிறது. என்னதும், என் எழுத்துக்களதும் நிர்வாணத்தை என்னால் நேசிக்கமுடிகின்றவரை அது என்னை அச்சுறுத்திக்கொண்டேயிருக்கும். இன்னொருவரால் புரிந்துகொள்ளப்படுவதன் வாயிலாக எம் privacy யை இழக்கிறோம்.., தனித்துவங்களை இழக்கிறோம்.., பொய் சொல்லும் ஆற்றலை.., கபடப் புன்னகைகளை.. இன்னும் பலவற்றை. சுயநலமும், மூர்க்கமும், ஆற்றாமைகளும் பிணித்துள்ள சுயத்தை வெளிக்கொணர யார்தான் விரும்புவார்.. அனைவருள்ளும் வாழ்வது இவைதானென்பதை ஒவ்வொருவருமே அறிந்திருந்த போதும்.


பிம்பம் - 02 (அறிதல்)

எழுத்துக்களின் பின்புலத்தில் ஆயிரம் காரணங்களிருக்கும்.

எனக்குத் தெரிந்தவை:
1. பெயருக்காக, புகழுக்காக, பணத்துக்காக
2. சுய அடையாளமொன்றைப் பெறுவதற்காக
3. பகிர்தலுக்காக
4. விடுபடலுக்காக

எனக்குத் தெரியாதவை:
1. x
2. y
3. z

நான் எந்த வகைக்குள் அடங்குவேனென்று என்னிடம் கேட்காதீர்கள். உங்கள் தெரிவுகளுக்குள் தலையிட நான் ஒருபோதுமே விரும்புவதில்லை.. தவிரவும், x.. y.. z.. க்குள் பொருத்தமான தெரிவொன்று மறைந்திருக்கவும் கூடும். அறியாமைகளின் இருப்பைக் கலைக்காதவரையில், அறிந்தவற்றைக்கொண்டு முடிவுக்கு வருதல் சாத்தியமில்லை எனக்கு.


பிம்பம் - 03 (கற்பிதங்கள்)

எனக்கு முன்னே 'அது' நடந்து செல்கிறது. அவர்கள் அதைப் 'பூனை' என்று அழைக்கிறார்கள். நான் வியப்பிலாழ்கிறேன். அது எப்போதாவது உங்கள் முன் வந்து 'நான்தான் பூனை' என்று கூறியதுண்டா? காலாகாலமாக யாரோ சொல்லிவந்ததை நீங்களும் பின்பற்றுகிறீர்கள், அப்படித்தானே... எவரோ ஒருவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் 'அது நாயாக இருந்தாலும் இருக்கும்' என்று நான் கூறினால் மட்டும் முகஞ்சுளிக்கிறீர்களே ஏன்..? உங்கள் பூனை என் நாயாக முடியாதென்று உங்களுக்குக் கற்றுத் தந்தவர் யார்?

கசப்பின் மறுபெயர் நெருப்பென்கிறேன்.. நீங்கள் திகைக்கிறீர்கள். சாம்பல் பூத்தாலும், அடியாழங்களில் தொடர்ந்தும் உயிர்த்திருக்கும் வல்லமை இரண்டுக்குமே வாய்த்திருக்கிறதென்கிறேன்.. பெருமூச்சொன்று வெளிப்படுகிறது, உங்களிடமிருந்து. நீங்கள் 'பெயர்' குறித்து அதிகம் அலட்டிக் கொள்கிறீர்கள், அப்படித்தானே.. அதைவிடுவோம்.


பிம்பம் - 04 (முறுகல்)

என்னருகில் கிடத்தப்பட்டிருக்கிறாள்.., சில மணிநேரங்களுக்கு முன்பு பிறந்த என் சின்னவள். அவர்கள் வருகிறார்கள், ஆரவாரத்துடன். அவள் முகத்தில் தவழ்வது என் சாயலா.. அவனது சாயலா என்ற ஆராய்ச்சி மும்முரம் பெறுகிறது. சிலர் என்னைத் திருப்திப்படுத்துவதற்காக, எனது புன்னகை அப்படியே அவளுக்கும் வாய்த்திருப்பதாக வாக்குமூலமளிக்கிறார்கள்.

உங்கள் அனைவருக்காகவும் நான் பரிதாபப்படுகிறேன். உங்கள் ஆய்வுகளாலும், ஒப்பீடுகளாலும் என் சின்னவளின் அந்தக் கணத்துப் புன்சிரிப்பினழகை ரசிக்கத் தவறிவிட்டீர்கள்... அதன் மர்மச் சுழிவுகளை முழுமையாக உள்வாங்கவும், அதில் கரைந்துபோகவும் தவறிவிட்டீர்கள்.


பிம்பம் - 05 (..........)

சேற்றினுள் மூழ்கிக்கிடப்பதில் கண்டறியாத சுகங்காணும் காட்டெருமைகளைப்போல சித்தாந்தங்களுள் மூழ்கிக்கிடக்கும் அறிவுஜீவிகளையும், இலக்கியவாதிகளையும் கண்டு அருவருப்படைகிறேன். தமது விதிகளோடு முரண்படுபவை எதையும் அவர்கள் விமர்சனத்துக்குள்ளாக்குகின்றார்கள். விமர்சனம் - சுயநலத்தின் வெளிப்பாடு. விதிகளோடு அனைவரும் பொருந்திப் போகவேண்டுமென்று எதிர்பார்ப்பது அக்கிரமமல்லவா..

..............


சின்ன நட்சத்திரத்தின் கீழ்

விபத்துக்களைத் தவிர்க்க இயலாதவை என்று
அழைப்பதற்காக என்னை மன்னியுங்கள்
சரி சரி ஒருவேளை அது தவறாகுமானால் அத்தியாவசியம்
என்று சொன்னதற்கு என்னை மன்னியுங்கள்
அது என் சொந்தம் எனக் கோருவதற்காக
சந்தோஷம் கோபம் கொள்ளாதென நினைக்கின்றேன்
எனது நினைவுகளில் சதா கவிந்திருப்பதற்காக
மரணமுற்றவர்கள் தம்மை மறந்து போகட்டும்
தொலைந்து போன ஒவ்வொரு நொடிக்காகவும் காலம்
என்னை மன்னிக்கட்டும்
இதுதான் முதல் என்று புதிய காதலைச் சொல்வதற்காக
பழைய காதல் என்னை மன்னிக்கட்டும்
மலர்களை வீடு கொண்டு வந்ததற்காக
தூரத்து யுத்தங்களே
என்னை மன்னித்துவிடுங்கள்
எனது விரலை நான் குத்திக்கொண்டதற்காக
வெளிப்படையான காயங்களே
என்னை மன்னித்துவிடுங்கள்
நடனலயத்தைப் பதிந்ததற்காக புதரினின்று
அழைப்போரே எனை மன்னிக்கவும்
அதிகாலையில் தூங்குவதற்காக ரயிலைப் பிடிப்போர்
எனை மன்னிக்கட்டும்
காயமுற்ற நம்பிக்கையே அதிகப்படியான சிரிப்புக்கு
எனை மன்னிக்கட்டும்
பாலைவனங்களே
ஒரு தேக்கரண்டியில் தண்ணீர் கொண்டுவராததற்காக
என்னை மன்னிக்கவும்
நீயும்கூட என்னை மன்னிக்கவும்
அதே பழைய கூட்டிலிருக்கும் ஆந்தையே
அசைவற்று நிலைகுத்தி எப்போதும் அதே இடத்தில்
அமர்ந்துகொண்டிருக்கும் ஆந்தையே
என்னை மன்னித்துவிடு
நீ ஏதேனும் காரியமாக உட்கார்ந்துகொண்டிருந்தால் கூட.

நாலுகால் மேசைக்காக
மரங்களே என்னை மன்னிக்கவும்
சின்னதாக பதில் சொல்வதற்காக
பெரிய கேள்விகளே என்னை மன்னியுங்கள்
சத்தியமே, கூட கவனிக்காதே
தீவிர சித்தமே, பெரிய மனத்துடன் இரு
இருத்தலின் மாயத்தன்மையே, உனது கண்ணியிலிருந்து
கயிறுகளை உருவுவதற்காக எனைத் துன்புறச் செய்
ஆன்மாவே - உனைக் கொண்டிருப்பதால் -
அவ்வப்போதேனும் - என்னைச் சபிக்காதே

ஒருத்தி அல்லது ஒருவன் மீது காதலில் வீழ்கிற
எவரும் என்னை மன்னிப்பீராக
எனக்குத் தெரியும்
நான் வாழ்ந்துகொண்டிருக்கும்போதே எதுவும்
என்னை மன்னிக்காது ஏனெனில்
நானே எனது இடர்

பேசுமொழியே -
பெரிய வார்த்தைகளை எடுத்துக்கொண்டு
அதை எளிமைப்படுத்துவதற்காக
போராடிக்கொண்டிருப்பதற்காக என்னைக்
குற்றம் சுமத்தாதே.
(மொழிபெயர்ப்புக் கவிதையொன்று.. பெண்கவிஞர்.. பெயர் தெரியவில்லை)


...............

சின்னஞ்சிறு நட்சத்திரமொன்றன் கீழ் வால்வெள்ளிகளின் அந்தங்களை எதிர்நோக்கியபடி தொடரும் பயணத்தில் கைகோர்த்தபடி துணைவரும் ஒரு உறவுக்கு...

2 comments:

ஈழநாதன்(Eelanathan) said...

நிவேதா.அற்புதமான மொழிநடை அதற்கேற்ப பிரவாகமெடுக்கும் சிந்தனை.தொடர்ந்து எழுதுங்கள்

நிவேதா/Yalini said...

நன்றி, ஈழநாதன்...