Sunday, October 15, 2006

இரவின் தடங்கள்

அந்தக் கணத்தின் நிசப்தம்
எதையும் உணர்த்திப் போனதாக
நினைவில்லை
இருட்டும் நானும் மட்டுமேயான தெருக்களில்
மழைச்சரங்களும் சில்லூறுகளும்
என் காலடித்தடங்களுடன்
வழித்துணையாக கூடவே
சலனங்களில்லாப் பொழுதுகளின்
பிரளயங்களைத் தூண்டியபடி

மௌனங்கள் இன்னமும்
மொழிபெயர்க்கப்படா
சாலைகளின் வளைவுகளுள்
ஏதோவொன்றிலிருந்து தோன்றிப் பின்
தொடர்கிறது
கனவுகளைக் கலைத்துப்போகும்
முகமூடி மனிதனைப்போல
இன்னுமொரு காலடியோசை

பாதங்கள் விரிந்து
முதுகுப் பரப்பெங்கும்
நிழலாய்ப் படர்வதை உணர்ந்து
திடுக்கிட்ட மனம் சில்லிட்டுப் போக
பிரபஞ்சத்தை நிறைத்தபடி
கண்ணெதிரே விரிகிறது
முன்னமொரு நாளில்
அணுவணுவாய் உணர்வுகளை
சிதைத்துப் போனவனின் முகம்

மற்றுமொரு மழைக்காலத்தில்
பீதியூட்டும் காலடியோசை
பின்தொடராத் தவிப்பில்
பதறுகின்ற மனத்தோடு
மறுபடியும் நான்

தெருக்கள் மட்டும்
நீண்டு கொண்டே போகும்
என்றென்றைக்குமாய்...

15.10.2006

6 comments:

தமிழ்நதி said...

We have to bear the noise of the footsteps until the last drop of our lives because we are women.
good poem.

த.அகிலன் said...

நல்ல கவிதை நிவேதா தொடருங்கள் வாழத்துக்கள்
அன்புடன்
த.அகிலன்

நிவேதா/Yalini said...

நன்றி அகிலன்!

உண்மைதான், தமிழ்நதி. பெண்ணெனப் பிறந்திடில் பேயும் இரங்குமென்பார்.. பேய்தான் இரங்கும் அற்ப மானிடரல்லவே..

மஞ்சூர் ராசா said...

இந்தக் கவிதையின் உருவம் சரியாக அமைந்திருக்கிறது.

சலனங்களில்லாப் பொழுதுகளின் பிரளயங்களைத் தூண்டியபடி - நல்ல சிந்தனை.

மற்றுமொரு மழைக்காலத்தில்
பீதியூட்டும் காலடியோசை
பின்தொடராத் தவிப்பில்
பதறுகின்ற மனத்தோடு
மறுபடியும் நான் -

பாதிப்பு மிக அதிகம் போல தோன்றும் வரிகள்.

நல்லதொரு கவிதை.

நிவேதா/Yalini said...

நன்றி மஞ்சூர் ராசா!

sukan said...

கவிதையின் தொடக்கத்தில் இருந்து முடிவுவரை உணர்வுகள் தத்துருபமாக வெளிப்படுகின்றது.