Saturday, April 01, 2006

பனையோலைக் குடிசை: ஓர் உருவகமும் சில உவமானங்களும்


உறைந்த சுயம்,
யதார்த்தத்தின் வாலைப் பற்றியவாறு
நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்கின்றது.
சலித்துப் போய்விட்ட
அன்றாடங்களின் கிழிசல்களினூடு
எட்டிப்பார்க்கிறது..,
எங்கேயோ தொலைத்து விட்டிருந்த
ஒரு பிடி அன்பு..


1. இருத்தல்களும் திரிபுகளும்

இங்கே ஒருகாலத்தில் அகலப்பரந்த மரங்களின் குளுமையுடனும், மூங்கில்களினூடே தழுவிச்சென்று கீதமிசைக்கும் தென்றலுடனும், வானம்பாடிகள் சிறகடித்துத் திரிந்த பசுமையான சோலையொன்று இருந்ததாம். அப்படித்தான் எல்லாரும் சொல்கிறார்கள். நான் நம்பவில்லை... வானம் பார்த்தபடி வாய்பிளந்து கிடக்கும் இந்தத்தரிசு நிலத்தினூடு தெள்ளிய நீரோடைகள் சலசலத்துச் சென்றிருக்குமென்றும், இலைகள் உதிர்ந்த மொட்டைக் கிளைகளுடன் காற்றின் நர்த்தனத்திற்கேற்ப தலையசைத்துக் கொண்டிருக்கும் இப்பட்டுப்போன அரசமரம் அழகிய சோலையொன்றின் செழுமை கொஞ்சும் மரங்களுளொன்றாய் இருந்திருக்குமென்றும் நம்புவதற்கு இன்னமும் முட்டாளாகிப் போய்விடவில்லை நான். இவர்களது சரித்திரங்களை எப்படித்தான் நம்புவது..? எனினும் நாம் நம்பித்தானாக வேண்டும். நம்பினவை எத்தனையோவற்றினூடு இந்தக் கதைகளையும் நம்புவதால் நாமொன்றும் தாழ்ந்துவிடப் போவதில்லைதானே.

ஆம்.., என்றோவொரு காலத்தில் இந்தநிலம் வனப்பு மிக்கதோர் சோலையாய் இருந்திருக்கக்கூடும். சில்லூறுகளின் இரைச்சல்களாலும், காட்டுப்பூக்களின் வாசனையாலும் நிறைந்திருந்த இச்சோலையின் வானம்பாடிகள்... சோலை தரிசாகிப்போன ஒருநாளில் சத்திரங்களாய் மாறின. வானம்பாடிகளாவது... சத்திரங்களாக மாறுவதாவது...? நீங்கள் விழிவிரிப்பது புரிகிறது. சோலை எப்படி தரிசாய்ப் போயிற்றென்பது தெரியாதுவிடினும், வானம்பாடிகள் சத்திரங்களாக உருமாறுவதற்கு முன், வீடுகளாகத்தான் இருந்திருக்க வேண்டுமென நானும் நினைக்கிறேன்.

ஆனால், ஒரேயொரு வானம்பாடி மட்டும் தானே விரும்பி குடிசையாக மாறலாயிற்று... பனையோலைக் குடிசையாக.


2. தொலைந்துபோன சிறகுகளும் ஆழப்புதையுண்ட கனவுகளும்

நீங்கள் கேட்கக்கூடும்: 'வானம்பாடியின் சிறகுகள்தான் இல்லையென்று ஆயிற்றே. இனி சத்திரமாக மாறினாலென்ன.. பனையோலைக் குடிசையாக மாறினாலென்ன..' இல்லை, தரிசுநிலத்துச் சத்திரங்களுக்கு மத்தியில்.., அவ்வளவு இலகுவானதல்ல புழுக்களூறும் சாக்கடை நீரோடு - சிறகுகளை மறந்துவிடாத - குடிசையாக வாழ்தல்.

சத்திரங்கள் அழகானவை.., அவர்கள் கூறுவதன்படி. செந்நிற ஓடுகள் இளவெயிலில் தங்கத் தகடுகளாய்ப் பளபளக்க, கண்ணைக்கவரும் வர்ணப்பூச்சுக்களால் சுவர்கள் மினுமினுக்க, கருங்காலியிலோ தேக்கிலோ செதுக்கப்பட்ட கதவுகளுடன்.. சாளரங்களுடன்.. வழிபோக்கர்களைக் கவர்வதற்காகவேனும் அவை அழகாகத்தானிருந்தாக வேண்டும். இரும்பினால் அல்லது உடைமையாளரின் தராதரத்தைப் பொறுத்து தாமிரத்தினால் அவை அடிக்கடி இறுகப்பூட்டப்பட்டன. தனது பூட்டு அழகானதாகவும், உறுதியானதாகவுமிருப்பதாக ஒவ்வொரு சத்திரமும் பெருமிதப்பட்டுக்கொண்டது.., ஒருகாலத்தைய வானம்பாடி வாழ்வினை மறந்து.

ஆனால் குடிசைகளோ அலங்கோலமானவை.., யார் கூறினாலென்ன.. கூறாவிட்டாலென்ன.. உழுத்துப்போன பனையோலைகளுடன், இத்துப்போன களிமண் சுவர்களுடன், உறுதியற்ற வாயில்களுடன்.. சீண்டுவாரற்ற குடிசைகள் அலங்கோலமானவைதான். அவற்றுக்குப் பூட்டுக்கள் அவசியமில்லை.., அவை உடைமையாளர்களை விரும்புவதுமில்லை.., அவற்றின் கனவுகளில் இன்னமும் வானம்பாடியின் சிறகசைப்புக்கள் மீந்திருப்பதனால்.

சத்திரங்கள் கவலைகளின் பிறப்பிடம். அடைமழையில் நனைந்து ஊறிப்போன ஓடுகளை.. அடிக்கடி வெளுத்துப்போய் உதிர்ந்துவிடும் நிறப்பூச்சுக்களை.. புழுதியை வாரியிறைத்துப்போகும் குறும்புக் காற்றினை.. இன்னபிற பலவற்றையும் பற்றியென புலம்புவதற்கு எப்போதும் ஏதாவது இருந்துகொண்டேதானிருக்கின்றது இவற்றுக்கு.

குடிசைகள் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. உக்கிக்கொண்டிருக்கும் ஓலைவேய்ந்த கூரையினூடு மழைநீர் ஒழுகுவதையும், சுவர்கள் விரிசல்களுடன் ஆங்காங்கே இடிந்துகிடப்பதையும், வாயிலில் சாக்கடை நீர் புழுக்கள் நெளியத் தேங்கிக்கிடப்பதையும் சிறகுகளை மறந்துவிடாத அவை பொருட்படுத்துவதில்லை.

அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்: பனையோலைக் குடிசைகள் ஒருபோதும் கவலைப்படுவதில்லை; எதன்பொருட்டும், எவர்பொருட்டும் அதிகம் அலட்டிக்கொள்வதுமில்லை.


3. நிறங்களற்றுப்போன புன்னகைகள்

வழிபோக்கர்கள் வந்தார்கள்.., புன்னகைகளைச் சிதறவிட்டபடி. அவர்களின் இளித்த பற்களினூடு தெறிக்கும் புன்னகைகள்.. தங்க இடந்தேடி, நாக்கைத் தொங்கவிட்டபடியலைகையில் எச்சிலுடன் சேர்ந்து வடியும் இன்னும் சில.. சத்திரங்கள் ஒருகணம் சிலிர்த்துக்கொண்டு வரவேற்கத் தயாராயின; உதட்டைச் சுளித்துக்கொண்ட குடிசையோ முகந்திருப்பி வாளாவிருந்தது.

இளவேனிற்காலத்தின் பின்மாலைப்பொழுதொன்றில், சத்திரங்களின் ருசிகண்டு சலித்துப்போன ஓரிருவர் குடிசையை நாடிவரலாயினர். அவர்களது பொக்கைவாய்ப் புன்னகைகளுக்கு மசியாத குடிசை தன்னுள் நிரந்தரமாக வதியும் சிலந்திகளையும், பல்லிகளையும், பூரான்களையும், இன்னபிற விஷ ஜந்துக்களையும் ஏவி 'நான் சத்திரங்களுள் ஒருத்தியல்ல' வென மறுபடியுமொருமுறை நிரூபித்தது. ஈவிரக்கமற்றுத் துரத்தியடிக்கப்பட்ட வழிபோக்கர்கள் சாபமிட்டார்கள்... குடிசையின் ஏளனப்பார்வையைச் சகிக்கவொண்ணாமல் எங்கோ தலைமறைவானார்கள்.

சத்திரங்களோ குறைபட்டுக்கொண்டன: பனையோலைக் குடிசைகள் புன்னகைப்பதில்லை; புன்னகைகளை மதிப்பதும், ஏற்றுக்கொள்வதுமில்லை.


4. உறைந்த படிமங்களும் உயிர்த்தெழுந்த புனைவும்

பருவங்கள் மாறின. பழுப்புநிறப் பட்டாம்பூச்சிக் குவியல்களாய்க் காலடியில் சரசரக்கும் சருகுகளுடனான காலங்கள் கழிந்து விண்ணிலிருந்து கசிந்த முதல்துளி மண்ணைத் தழுவலாயிற்று. மாரிகாலத்து மழைநாளொன்றில் சேறுகளையும், சகதிகளையும் கடந்து குடிசையை நோக்கி வந்தான் யாத்ரீகனொருவன். சத்திரங்களின் வனப்புக்களால் வசீகரிக்கப்படாதவனிடம் சிலந்திகளையும், பல்லிகளையும் ஏவிவிடும் குடிசையின் பூச்சாண்டிகளெதுவும் பலிக்காமற்போக... சந்தேகமும், பயமும் நமுத்துப்போன சுவர்களிலிருந்து உதிர்ந்துகொண்டிருந்தாலும் அவனைத் தன்னுள் அனுமதிக்கத்தான் செய்தது.

மௌனமாக உள்நுழைந்தவன் ஒட்டடை தட்டவும், சிலந்திவலைகளை அறுத்தெறியவும் முயல அதிர்ந்தே போன குடிசை.., கலவரமடைந்து மூர்க்கமாகத் தடுத்தது அவனை. திரிபடையத் தொடங்கிய ஆரம்பகாலங்களிலிருந்து இன்றைவரையும் துணையாய்.., பாதுகாப்பாய்த் தன்னுடனேயிருந்த நிரந்தர வதிவிடதாரிகளைத் துரத்திவிட எப்படித்தான் மனம்வரும் எவருக்கும்... என்னதான் பாழடைந்த குடிசையென்றாலும் ஈரமும் கசிவும் புறநிலைச் சேர்மானங்களல்லவே. அவனொரு யாத்ரீகன்... இன்று தங்க முன்வருபவன் நாளை வெளியேற நேர்ந்தால்கூட தொடர்ந்தும் கூடவேயிருக்க எஞ்சுபவை இந்தப் புழுக்களும், சிலந்திகளும்தான்.. தூசுகளும், துரும்புகளும்தான்.

அவன் புரிந்துகொண்டான் அல்லது புரிந்துகொள்ள முயற்சித்தான்... அப்படித்தான் நான் நினைக்கிறேன். எது எப்படியோ தான் தொடர்ந்துவந்த தடங்களையும், தன் தனித்துவங்களையும் பேணமுடிந்ததில்... அடையாளங்கள் அழித்தொழிக்கப்படாததில் நெகிழ்ந்துபோன அப்பாழடைந்த பனையோலைக் குடிசை, இறுதியில் இருத்தலின் படிமங்களைத் தொலைத்து ஆவியாகிக் கரைந்தே போனது. வானம்பாடிக் கனவுகளுடன் அது உதிர்த்த கண்ணீர்த்துளிகள் அன்றைய பனியிரவில் அந்திவானத்துத் தாரகைகளாயின.

குடிசைகளுக்குப் புன்னகைக்கத் தெரியாதென்று யார் சொன்னது..??

7 comments:

வசந்தன்(Vasanthan) said...

//அவன் புரிந்துகொண்டான் அல்லது புரிந்துகொள்ள முயற்சித்தான்... //

நானும் முயற்சிக்கிறேன்;-(

நிவேதா/Yalini said...

பின்னூட்டத்திற்கு மட்டுமல்ல, புரிந்துகொள்ள முயற்சிப்பதற்கும் நன்றி வசந்தன்.

புறத்தில் இறுக்கிய, தீவிரமான பிடிகளுடன் வாழ்பவர்கள் உள்ளுக்குள் எத்துணைதூரம் நெகிழ்ந்தவர்களாக இருக்கிறார்களென்றும்... சின்னச்சின்ன அனுபவங்களும், சம்பவங்களும்கூட அவர்களை எந்தளவு தடம்புரளச் செய்துவிடுகின்றதென்றுமே கூற விழைந்தேன்.

அடித்துப்பூட்டப்பட்ட சாளரங்களுடன் வாழப்பழகிய குடிசை, இறுதியில் "இருத்தலின் படிமங்களைத் தொலைத்து ஆவியாகிக் கரைந்தே போனது" என்பதால் அதனைத்தான் உருவகப்படுத்த முயன்றேன். இருப்பையும், தனித்துவங்களையும் காப்பாற்றிக்கொள்ளப் போராடுபவர்கள் பலர் தாமாகவே முன்வந்து அவற்றைத் தொலைத்துவிடத் துணிகிறார்கள், சமயங்களில். வியப்பாக இருந்தாலும், நியாயப்பாடுகளுக்கப்பால் யதார்த்தம் பெரும்பாலும் இப்படித்தானிருக்கின்றது.

எப்போதும் புன்னகைத்தபடியிருக்கப் பழகுவோம்..!

sathesh said...

மாறுபட்ட நடை...சுவையாக உள்ளது...
...வரிகளினூடே ஒருவித இறுக்கம் வாசிப்பை கடினமாக்குகிறது அதுவே மீண்டும் மீண்டும் படிக்கவும் தூண்டச் செய்கிறது...

வசந்தன்(Vasanthan) said...

//எப்போதும் புன்னகைத்தபடியிருக்கப் பழகுவோம்..!//
பல்லக் காட்டுதை புன்னகை எண்டு எடுக்கலாமெண்டா, நான் எப்பவும் அப்பிடித்தான். விளங்கீச்சோ இல்லையோ பல்லக் காட்டிக்கொண்டே இருப்பன்.
தொடர்ந்து எழுதுங்கள்.

நிவேதா/Yalini said...

பின்னூட்டத்திற்கு நன்றி, பாழ். மொழியின் இறுக்கம் வாசிப்பைக் கடினமாக்குவதனைச் சுட்டிக்காட்டியமைக்கும் கூட.. கவனத்திற்கொள்கிறேன்.

வசந்தன், பல்லைக் காட்டுவதெல்லாம் புன்னகையாகுமோ என்னமோ யாமறியோம். ஆனால், புன்னகைகளெல்லாம் பல்லைக் காட்டுவதாக அமையாதென்று நினைக்கின்றேன்.

விளங்குதோ, இல்லையோ எல்லாத்துக்கும் இளிச்சுக் கொண்டிருந்தா, என்ன இந்த மனுசன் 'பேய்'க்கதைகளுக்கெல்லாம் சும்மா 'பேய்'மாதிரி 'பேய்'ச்சிரிப்புச் சிரிச்சுக்கொண்டு எல்லாரையும் 'பேய்'க்காட்டிக்கொண்டிருக்குதென்று உங்களைச் சுற்றியிருக்கிற சனத்துக்கு 'பேய்'க்கோவம் வரப்போகுது. எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்கோ அண்ணை!

வசந்தன்(Vasanthan) said...

நிவேதா,
உவ்வளவு "பேய்"கள் தேவையில்லை. ஆனா பாருங்கோ. மேல பதிவில இவ்வளவு இறுக்கமா எழுதிப்போட்டு கீழ என்னை மாதிரி நடைக்கு வந்திட்டியளே? (உங்கட முந்தின பதிவுகளின்ர பின்னூட்டங்களும் பாத்திருக்கிறன். அதுகள் பதிவின்ர தொடர்ச்சியாத்தான் இருக்கும்)
நாங்கள் கதைக்கிறதே சிக்கல்போலதான் கிடக்கு.

நிவேதா/Yalini said...

வசந்தன் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இறுக்கமாகவேயிருக்க முயன்றால், ஒருகட்டத்தில் வெடித்துச் சிதறவேண்டியதுதான்..

உங்கள் பே(ய்)ப்பதிவுகளைப் படித்ததில், வந்த பே(ய்)ச்சந்தோஷத்தில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேனாக்கும். எல்லாம் சகவாசதோஷம்தான்.