Wednesday, March 29, 2006

ஒற்றை அனுபவமும் வீணாகிப் போய்விட்ட என் விசனங்களும்..

இப்படித்தான் சில விசனங்கள் வீணாய்ப் போகின்றன..

வியக்கவைக்கும் ஆளுமைகள்
கற்பிதங்களையும்,
கருத்தியல்களையும்
அடிக்கடி தடம்புரளச் செய்துவிடுவதில்..
இடியப்பச் சிக்கலாய்
அவிழ்க்கமுடியாத சிந்தனை முடிச்சுக்கள்
மனமெங்கும்..,
வெளியெங்கும்
வியாபித்து விடுகின்றன.

முடிவுறாத முடிச்சுக்களின்
வழிதொடர்தலோடு
நீளும்..,
எல்லைகளைக் கடக்கத் துடிக்கும்
ஆன்மாவொன்றின் தேடல்.



விசனம் - 1

"பொம்பளைங்க காதலத்தான் நம்பிவிடாதே.. நம்பியதால் நொந்து மனம் வெம்பிவிடாதே.." தெருவோரத்துத் தேநீர்க்கடையொன்றில் இப்பாடலைத் தற்செயலாகக் கேட்க நேர்ந்ததில் உள்ளம் கொதித்து அனல்பறக்கத் தொடங்கிற்று. அநேகமான - சோகரசம் ததும்பும் - திரையிசைப்பாடல்கள் பெண்களின் துரோகங்களையும் கைவிடுதல்களையும், ஆண்களின் அவலங்களையும் வேதனைகளையும் பற்றி மட்டுமே பேசுகின்றனவே.. யதார்த்தவுலகை நிறைத்திருக்கும் ஆண்களின் வக்கிரங்களைப்பற்றி யார்தான் பேசப்போகின்றார்.. அவர்களது பசப்பு வார்த்தைகளில் அள்ளுண்டுபோன நெஞ்சங்களின் அறியாமையையும், விரக்தியையும் எந்த விரசமுமில்லாமல் எவர்தான் எடுத்துரைப்பார்..? சினிமா... அது ஆண்மேலாதிக்க அற்பர்களின் கூடாரம்.

கைவிடப்பட்ட ஆன்மாவொன்று அழுந்தி அழுகும் வேதனையை.., சந்தர்ப்பவசத்தால் கைவிட நேர்ந்த உள்ளமொன்றின் குறுகுறுப்புக்களை, குற்றவுணர்ச்சிகளை.. எவரையும் கூண்டிலேற்றாமல், எவர்மீதும் பழிசுமத்தாமல், எதன்பொருட்டும் பச்சாதாபப்படாமல்.. உள்ளது உள்ளபடி எடுத்தியம்புதல் சாத்தியமேயில்லை. எவருக்குத் தெரியும் உணர்வுகளை மதிக்க..?


விமோசனம்:

சில தினங்களுக்குமுன், மகளிர் தினத்தினை முன்னிட்டு Women and Media Collective னரால் ஏற்பாடு செய்யப்பட்டுத் திரையிடப்பட்ட சில பெண் இயக்குநர்களின் திரைப்படங்களை கொழும்பின் ரஷ்யக் கலாச்சார நிலையத்தில் பார்வையிடுவதற்கான வாய்ப்புக் கிட்டியது. அபர்ணா சென்னின் இயக்கத்தில் Konkona Sen Sharma, Shabana Azmi மற்றும் Rahul Bose நடித்த '15 Park Avenue' எனும் படம் ஏற்படுத்திச் சென்ற அதிர்வுகள் இன்னமும் மனதின் எங்கோவோர் மூலையில் மெல்லிய சன்னமாகவேனும் மீந்திருக்கத்தான் செய்கின்றன.

உண்மைச் சம்பவமொன்றினைத் தழுவியதாக அமைந்த இக்கதை Meethi (Konkona Sen Sharma) எனும் பெண்ணையும், அவள் வாழ்ந்து கொண்டிருக்கும் - யதார்த்தத்தில் இல்லவேயில்லையென்றாகிவிட்ட... ஒவ்வொரு ஆன்மாவும் ஏங்கிக்கொண்டிருக்கும் அர்த்தமில்லா மகிழ்ச்சிகளும், ஆழமில்லா சோகங்களும் நிறைந்த - ஒரு உலகத்தினைச் சூழ்ந்தும் பின்னப்பட்டுள்ளது. உணர்வுகள்... இப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் கொப்பளித்துத் தெறிக்கின்றன. உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் பாதிப்பிற்குள்ளான Meethi, புகழ்பெற்ற பௌதிகவியல் பேராசிரியையான அவளது மூத்த சகோதரி Anjali (Shabana Azmi), தற்போது திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்துவரும் அவளது அன்புக்குரியவனான Jojo (Rahul Bose) இம்மூவரினதும் உணர்வுப் போராட்டங்கள் மனதில் ஒருவிதக் கனத்தினை இறைத்துச் செல்கின்றன.

சிறுவயதிலேயே மனநிலை பிறழ்வுற்று, பின்னர் குணமடைந்து தேறிவருகையில் Jojo வைச் சந்தித்து.., அவனது திருப்திக்காக, தான் பெறுமதியானவள்.. தன்னால் முடியுமென்பதை அவனுக்கு நிரூபிக்குமுகமாக (ஒரு காட்சியில் அவன் சொல்கிறான்: "நான் அவளிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், she was trying to prove her worth to me") வேலைநிமித்தம் வெளியூர் செல்லும் Meethi சில காமுகர்களால் வன்புணரப்படுகிறாள். அக்கொடூரச் சம்பவத்தின் பின்னர் பால்யகாலத்து மனநிலைப் பிறழ்வு மறுபடியும் அவளைப் பீடிக்க, தவிர்க்கவே முடியாமல் Jojo அவளைப் பிரியநேரிடுகிறது. சகோதரியின் அரவணைப்பில் வாழும் அவள் தனது 15 Park Avenue வீட்டினைச் சென்றடையும் எண்ணத்துடனும், கனவுகளுடனுமே வாழ்நாளின் ஒவ்வொரு கணத்தையும் கழிக்கிறாள். சந்தர்ப்பவசமாக பல வருடங்களுக்குப் பின்னர் Jojo வை மறுபடியும் சந்திக்க நேர்ந்தும், குற்றவுணர்வோடு அல்லாடிக்கொண்டிருப்பவனை அடையாளங்காண முடியாமல் தனது தேடல் படலத்தில் ஒத்துழைக்குமாறு அவனையும் வேண்டுவதாய்த் தொடர்கிறது கதை.

தனது துணவன் Jojo வுடனும், ஐந்து குழந்தைகளுடனும் 15 Park Avenue வில் வாழ்வதாக கற்பனையுலகில் திளைத்திருக்கும் அப்பெண்ணும், தனது இலட்சிய உலகினை அடைவதற்கான அவளது தேடலும் ஏனோவொரு வெறுமையுணர்வினை தூண்டிச் செல்லும் அதேசமயம் அவளைப் பரிதாபத்திற்குரியவளாகக் காட்டி அனுதாபம் தேட விழையாமல் அரிதாரம் பூசப்படாத உணர்வுகளை மிக இயல்பாகவும், கலைநயத்துடனும் பிரதிபலித்துச்சென்ற அபர்ணா சென்னையும், கலைஞர்களையும் மிகவும் மெச்சிக்கொண்டது மனம்.


விசனம் - 2

கனத்துப்போன உள்ளத்துடன் படம்முடிந்து இருக்கையை விட்டெழுகையில்தான் அவதானிக்கிறேன்... அந்த அரங்கிலிருந்தவர்களின் தொகை இருபது அல்லது இருபத்தைந்தினைத் தாண்டியிருந்தால் அதிசயம்தான். தென்னிந்திய மசாலாப் படங்களைப் பார்க்கத் திரையரங்குகளின்முன் அலைமோதும் இளந்தலைமுறையினரின் கூட்டம் நினைவுக்குவர, விக்கித்துப் போனது நெஞ்சம். மக்களைப் பரவலாகச் சென்றடையக்கூடிய வகையில் இந்நிகழ்வு தொடர்பாக விளம்பரப்படுத்த ஏற்பாட்டாளர்கள் தவறியிருப்பார்களென எனக்கு நானே ஆறுதல்கூறிக்கொள்ள முயன்றாலும், பத்திரிகையில் வெளிவந்திருந்த இப்படங்கள் தொடர்பான அறிமுகமும் இன்னபிற தகவல்களும் விழிமுன் விரிந்து அந்த முயற்சியையும் அடியோடு அழித்தொழித்துப் போயின.

'எங்களது குடும்பப் பெண்கள் இப்படிப்பட்ட - எங்கள் பண்பாட்டைச் சிதைக்கிற(?!) - மேலைத்தேயக் கலாச்சாரத்திற்குள் ஊறிப்போன அமைப்புக்களில் பங்குகொள்வதுமில்லை; இரவுநேரங்களில் நடக்கும் இத்தகைய நிகழ்வுகளில் கலந்துகொள்வதுமில்லை...' சட்டென்று நினைவிலறைந்தது முன்னரொரு சந்தர்ப்பத்தில் கேட்டிருந்த ஆண்மேலாதிக்கக் குரல். உண்மைதான்.. பின்மாலைப் பொழுதுகளில் எமது குடும்பப் பெண்களுக்கு நிறைவேற்றவேண்டிய எத்தனையோ முக்கியமான காரியங்கள் காத்திருக்கின்றன.., தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து அழுது வடிவது உட்பட.

தோழர் ஒருவர் அண்மையில் குறைபட்டுக் கொண்டார்.. பிரபலமான தொலைக்காட்சித் தொடர்கள் ஒளிபரப்பாகும் நேரங்களில் உறவினர், நண்பர்களின் வீடுகளுக்குச் செல்ல அந்தரமாயிருக்கிறதாம். மனதுக்குள் சாபமிட்டுக்கொண்டே அசட்டுப் புன்னகையுடன் வரவேற்பதுடன், மனுசன் எப்ப போகுமென்ற அவதியுடன் அவ்வீட்டுக்காரர்கள் தவிப்பதை உணரமுடிகின்றதாம். கேட்க வேடிக்கையாயிருப்பினும் உண்மைநிலை இதுதானெனும்போது வேதனை மீதூரப் பெறுவதைத் தவிர்க்க முடியவில்லை.

பெண்களின் உடல் மட்டுமல்ல.., உணர்வுகளும்கூட சந்தைப்படுத்தப்படக்கூடியவைதான்.. வியாபாரப் பண்டமாக்கப்படுவதற்கான சகல தகுதிகளுமுடையவைதானென்ற புரிதலை ஏற்படுத்தியவை இந்த தொலைக்காட்சி நாடகங்கள். பெண்களின் ஆடைகளைக் களைந்து மோகப்புன்னகை புரியச்செய்து மட்டுமல்ல.., அவர்களை சீண்டியழச் செய்தும் காசு சம்பாதிக்கலாமென்ற அற்புதமான உத்தியைக் கண்டுபிடித்ததோடு அவற்றை விவேகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் தெரிந்திருக்கிறது இந்தக் 'கலைஞர்'களுக்கு.


விமோசனம்:

தோழியொருத்தியுடன் இதுகுறித்து காரசாரமான விவாதமொன்றில் ஈடுபட்டிருந்தபோது அவர் கூறியவை சிந்தனையைத் தூண்டின. '...நாணயமொன்றுக்கு இரண்டு பக்கங்களிருப்பதைப்போல எந்தவொரு விடயத்திற்கும் நன்மை, தீமையென்ற இருபக்கங்கள் இருக்கத்தான் செய்யும். இதுவரைகாலமும் திரைப்படங்களும், மற்றும் பல முயற்சிகளும் பெண்களை ஆண்களின் பின்னிணைப்பாகவும், இரண்டாந்தரப் பிரஜைகளாகவும் மட்டுமே பிரதிபலித்துக் கொண்டிருந்த நிலையில் பெண்களை முதன்மைப்படுத்தி அம்மா, மனைவி, சித்தி என அத்தனை உறவுகளின் பெயர்களிலும் நாடகங்கள் வெளிவருவது வரவேற்கப்பட வேண்டிய விடயமில்லையா? நாயகியும் பெண்தான்.. வில்லியும் பெண்தான்.. பெண் பார்வையாளர்களை இலக்குவைத்த இத்தொலைக்காட்சித் தொடர்களில் ஆண்கள் வெறும் பிற்சேர்க்கைகள்தான். பாராட்டித்தானேயாக வேண்டும்... மிக மிகப் பிரபல்யமான, மக்கள் மத்தியில் பரவலான வரவேற்பினைப்பெற்ற நாடகங்களுள் அநேகமானவை ஒரு பெண்ணின் வீழ்ச்சியையும், அவளது தடைகள் தாண்டிய பயணத்தையும், எழுச்சியையுமே எடுத்துச் சொல்வனவாக அமைந்துள்ளன. எதைச் சொல்கிறார்கள்... எப்படிச் சொல்கிறார்களென்பது தொடர்பான ஆய்வுகளை விடவும் இந்தக் கணத்தில் முக்கியமானது, யாரைப்பற்றிச் சொல்கிறார்களென்பதுதான். முறையான விமர்சனங்களை முன்வைக்க நாம் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கின்றது...'

முற்றிலும் உண்மை... இத்தொடர்கள் - அதுவும் குறிப்பாக, இறைவர்களைப் பற்றிய 'தெய்வீகத்தன்மை' வாய்ந்த நாடகங்கள் - கலாச்சாரப் பரிவர்த்தனைக்காற்றும் பங்கு அளப்பரியதென்பதையும் இங்கு குறிப்பிடத்தான் வேண்டும். கொழும்பில் அநேக தமிழ்நாடகங்கள் சிங்கள உபதலைப்புக்களுடன் ஒளிபரப்பாகின்றமையும், கணிசமானளவு சிங்களமக்கள் அவற்றை விரும்பி ரசித்துப் பார்க்கின்றமையும் உண்மையில் மகிழ்விற்குரிய விடயங்கள்தான். சைவப் புராணக் கதைகள் பலவும், சைவக் கடவுளரும் தற்போது வேறுபட்ட இனத்தவர் மத்தியிலும், மதத்தவர் மத்தியிலும் பிரபல்யமாகிக் கொண்டுவருகின்றன.., இத்தொலைக்காட்சித் தொடர்களின் தயவால்.

என்றாலும், அடிமனம் தன் வீறுகளைத் துறந்து அவ்வளவு இலகுவில் எவருக்கும் அடிபணிந்துவிடுவதில்லை.

அறிவுஜீவித்தனங்களுடன் நாம் வெகு இலகுவில் விமர்சனத்துக்குள்ளாக்கும், புறக்கணித்துவிடத் துணியும் எந்தவொரு விடயத்தினதும் பின்புலத்தில்.., சமூகவியல், உளவியல் காரணிகளின் ஆதிக்கத்தினை அலட்சியப்படுத்தும் எம்மவரது அறியாமையும் புதைந்துதான் கிடக்கின்றது.


விசனம் - 3

'வீட்டுக்குள்ளே பெண்களைப் பூட்டிவைப்போமென்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்..' பாரதி பாடினாலும் பாடினான்.. ஆனாலுமென்ன, இன்றும் இரவு சற்றுப்பிந்தி வீடுதிரும்பும் பெண்களை இந்த மனிதர்கள் பார்க்கும் பார்வை இருக்கிறதே..

பொதுநிகழ்வுகளில் பெண்களின் பங்குபற்றல் இன்னமும் குறைந்தளவிலேதானிருக்கின்றது. வேலைக்குப் போகும் பெண்கள் இரட்டைப் பொறுப்பைச் சுமந்து சோர்ந்து போய்விடுகின்றனர். 'இல்லத்தரசிகளோ' ஆண்களின் வாலைப் பிடிக்காமல் வீட்டுவாசலைமீறி அடியெடுத்துவைக்கத் துணிவதேயில்லை. இன்னமும் கொஞ்சங்கூட வெட்கப்படாமல் நாம் கூறிக்கொள்கிறோம்.., இருபத்தோராம் நூற்றாண்டின் தகவல் தொழிநுட்ப யுகத்தில் வாழ்வதாய்.


விமோசனம்:

அன்றைய நிகழ்வுக்கு வருகை தந்திருந்தவர்களில் 99% மானோர் பெண்கள் (அதுவும் இளம்பெண்கள்). ஓரிரண்டு நடுத்தர வயது ஆண்களை மட்டுமே பார்க்கமுடிந்தது. மகளிர் தினத்தினை முன்னிட்டு மாதர் அமைப்பொன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு நாம் போய் என்னத்தைச் செய்யவென்று நினைத்தார்களோ அல்லது இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரமென்று ஒதுங்கிக் கொண்டார்களோ... யாமறியோம். அநேகமாக இத்தகைய நிகழ்வுகளில் காணக்கிடைக்கும் அறிவுஜீவிப் பட்டாளத்தினரின் சாயலே தென்படக்காணோம். சத்யஜித்ரேயும், அகிரா குரோசோவாவும் இயக்கினால் மட்டும்தான் இவர்கள் பார்க்க வருவார்களாயிருக்குமென்று நினைத்துக் கொண்டேன். வேறென்ன செய்ய..?

வாழ்நாளிலேயே முதன்முறையாக... இத்தகைய கலைநிகழ்வொன்றில் ஆண்களின் - மிக மட்டமான - பிரசன்னத்தையெண்ணி நொந்துகொண்டது மனம்.


(சிறிதுசிறிதாக எனைச் செதுக்கிக் கொண்டிருக்கும் ஆளுமைகளுக்கு.. சாட்டையடியாய் மனதிலறையும் அவர்களது வார்த்தைகளுக்கு..)


3 comments:

இளங்கோ-டிசே said...

நல்லதொரு பதிவு. 15 பார்க் அவன்யூ பற்றிய குறிப்புக்களுக்கும் நன்றி. நான் பார்க்க விரும்பும், இன்னும் சந்தர்ப்பம் வாய்க்காத படங்களில் இதுவும் ஒன்று.
....
சின்னத்திரை நாடகங்கள் பற்றி உங்கள் தோழியின் கருத்துக்களுடன் முற்றிலுமாய் உடன்பட முடியாது இருக்கிறது. சில விடயங்களை முழுமையாக நிராகரித்தல்தான் சாலவும் சிறந்ததாக இருக்கும். சாதி போன்ற விடயங்களில் கூட, இப்படித்தான் சில 'அனுகூலமான' பக்கஙகளைக் காட்டி சாதியைப் பலர் இன்னும் இறுக்கமாய்ப் பிணைத்து வைத்துள்ளார்கள். சினிமாவைப் போல சின்னத்திரையும் ஆண் மைய வாத மையங்களால் இயக்கப்படுவதால், இதனால் பெரிய மாற்றங்கள் எதுவும் பெண்களுக்கு வந்துவிடபோவதில்லை என்பதுதான் எனது எண்ணம். தலித்துக்களைப் போல பெண்களும் அதிகாரங்களைப் பெறுவதன் மூலமே இறுகிப்போயிருக்கும் எமது சமுக அமைப்புக்குள்ளிருந்து ஏதையாவது உருப்படியாக சாதிக்கமுடியும்; இல்லாவிட்டால் சாண் ஏற முழம் சறுக்கிய கதையாய்த்தான் இருக்கும்.

ஒரு பொடிச்சி said...

பதிவுக்கு நன்றி நிவேதா...


//சத்யஜித்ரேயும், அகிரா குரோசோவாவும் இயக்கினால் மட்டும்தான் இவர்கள் பார்க்க வருவார்களாயிருக்குமென்று நினைத்துக் கொண்டேன்.//

;-)
படத்தில கொங்கனா சென்னின் நடிப்புப் பிடித்திருந்தது.
மன நோயானவர்கள் தமதான உலகத்தில் தமதான எதிர்பார்ப்புகளுடன் (கோபப்பட்டும், அதை மறந்தும், வன்முறைக்குட்படுத்தும் அதை மறந்து,) இயல்பாய் இருக்கிறார்கள் - அவர்களுக்கு நடந்த 'கெட்ட'வைக்கு நீண்ட ஆயுள் இல்லை. ஆனால் அவங்களச் சூழ்ந்தவர்கள் ("நோயற்றவர்கள்!") தமது குற்ற உணர்ச்சிகளாலும் நேசத்தாலும் குழப்பத்துக்குள்ளாகிறார்கள்... அந்த வகையில ஜோஜோவவிட அக்கா தனது உறவுகளிடமிருந்து பிரிய தங்கை ஒரு காரணமாக இருந்துகொண்டே இருப்பது அவருக்கான நிரந்தரத் தனிமையாக வாழ்க்கைக்கு (தங்கைக்குப் போலவே) நியாயமற்றதாக இருக்கிறது..
(இயக்குநர் என்ற வகையில் அபர்ணா சென்னின் இந்தப் படம் கொங்கொனா-காக எடுக்கப்பட்டது என்றே நினைக்கிறேன்)

---
//அநேகமான - சோகரசம் ததும்பும் - திரையிசைப்பாடல்கள் பெண்களின் துரோகங்களையும் கைவிடுதல்களையும், ஆண்களின் அவலங்களையும் வேதனைகளையும் பற்றி மட்டுமே பேசுகின்றனவே.. //

பொதுவாய் இந்த மாதிரி வெளிப்படையாய் நம்மள வையிற(!) பாடல்கள இலகுவா தாண்டிச் சென்றிரலாம்; உதாரணமா, -எமக்கு எங்களச் சார்ந்தவர்களிடமிருந்தே பாடலின் வரிகளை கேலியாய் கேட்க நேர்கிறபோது (எவளாச்சும் ஒரு செங்கல் நட்டு வச்சாளா?'' போன்ற அருமையான வரிகளை!!) -அதிர்ஷ்டம் இருந்தா எமக்கு அருகிலேயே- ஒரு செங்கல் கிடக்குமானால், அதை எடுத்துக் கொடுத்து 'இந்தா கொண்டே நட்டு வை' எண்டு விடலாம்!! அவ்வளவுதான் - அங்கால ஒண்டுமில்ல.
ஆனா தொ.நாடகங்கள் இந்துத்துவத்தோட/ மதத்தோட பெண்ணை பூஜிக்கிறதா சொல்லிக்கொண்டே அடக்குறது போல- அக்கா, அண்ணி என ஒவ்வொரு 'புனிதமான' உறவுகளதும் -இயக்குநர்களாய் இருக்கிற ஆண்களது உளவியல் விருப்புக்கேற்பவே-('நல்ல' 'பொறுப்பான' 'குடும்பத்தைப் பாக்கிற') இயங்குகிறார்கள். இது குறிப்பிட்ட பாடல் போல இல்லாமல் இடியப்ப சிக்கலாயிருது...
குறைந்த பட்சம் இவன் புகழுறானா, இகழுறானா என்பதாவது நம்மளுக்கு புரியோணும் அல்ல?
அது தொ.நாடகளங்களில இல்ல; எங்களப் புகழுறதுபோலவே இருக்கு.

இதே தான் இங்க soap operas என்கிற பெயரில் - கிறிஸ்தவ மதப் பின்னணியில - கரு அழிப்பு என்பனவிற்கு எதிராய் கருத்துக்களுடன் போய்க் கொண்டிருக்கு. same concept & same purpose.

80களில கூட சாத்தியமான குறைந்தபட்ச புரட்சிகரமான படங்கள்; (தமிழநாட்டில) பெரியார் போன்றவர்களது கருத்துக்களது தாக்கங்கள் எல்லாத்தையும்; ஒரேயடியாய் அள்ளிக்கொட்டி குப்பையில போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.. 'வயித்தில உள்ளதும் ஒரு உயிர்' எண்டு பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட பெண் சொல்லுவதாய் எடுக்கிற -இண்டைக்கு இப்படி வளர்ந்து போய் இருக்கிற- இந்த தொ-நாடகங்களை என்னதான் செய்ய இயலும்?
ஒரு பெண் பாலியல் வன்முறை என்கிற ஒன்றை தன்மேல் நிகழ்த்தப்பட்ட கோபமும், வன்மும் இருக்கக் கூட அனுமதி யற்று, அப்போதும் வயிற்றில் வளர்கிற ஒரு உயிர் குறித்த 'கருணை' கொண்டிருக்க வேண்டுமென்பது ஆண் வேண்டும் மனம் அன்றி வேறென்ன?
அதிலும் பெண்களது நலத்தை விரும்புகிற உளவியலை மதிக்கிற ஒருவனால் இப்படிச் "சுயநலமற்று" யோசிக்க முடியுமா?

நிவேதா/Yalini said...

டி.சே, பொடிச்சி பின்னூட்டங்களுக்கு நன்றி.

படத்தைப் பற்றிய அறிமுகத்தில் அப்படமேற்படுத்திய தாக்கங்களை முழுமையாக வெளிப்படுத்தத் தவறியமைக்கு வருந்துகின்றேன். என் இயலாமைதானன்றி.. வேறென்னவென்று சொல்ல..?

தொலைக்காட்சி நாடகங்களைப் பற்றிய தோழியின் கருத்து - அவர் அதை நீயொரு pessimist என்றவாறாகக் குற்றஞ்சாட்டியபடி கிண்டலாகத்தான் கூறினாரெனினும் - சிந்திக்கத் தூண்டியது. எந்தவொரு விடயத்தையும் இது சரி, இது பிழையென்று நிர்ணயிக்கக்கூடிய அதிகாரம் எமக்கில்லையென்பதே அவரது வாதம். குடும்பப் பெண்களுக்கு ஒரேயொரு விடுபடலாய், ஆறுதலாயிருக்கும் இந்நாடகங்களை எப்படி முற்றாக நிராகரிப்பது..? எமது பண்பாட்டுப் பாதுகாவலர்கள் குடும்பப் பெண்களென்பவர்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்க வேண்டியவர்கள்தானென வரையறுத்து வைத்திருக்கையில் வேறெப்படி விடுபடலைத் தேடுவது..? டி.சே., புரட்சிச் சிந்தனைகளையும், மாற்றுக் கருத்துக்களையும் விடுத்து யதார்த்தத்தை நோக்கி இறங்கி வந்தால் தேவலை. நானிங்கே சராசரி மனிதர்களைப் பற்றித்தான் பேச விரும்புகின்றேன். 'தா' என்று கைநீட்டியவுடன் கிடைக்கப்பெறுபவையல்லவே அதிகாரமும், அந்தஸ்தும்.

பொடிச்சியின் விசனம் ஏற்றுக்கொள்ளத்தக்கது. மக்களை முட்டாள்களாக்கிக் கொண்டிருக்கும் மதநிறுவனங்களும், அவை போதிக்கும் கடவுளரின் இருப்பும்கூட இந்த வகையறாவுக்குள் உள்ளடக்கப்பட வேண்டியவையே. ஆனாலும், ஆயிரக்கணக்கானவர்கள் ஏதோவொருவகையில் தமது நிம்மதியை அச்சட்டகங்களுக்குள் தேடிக்கொண்டிருக்க, அவற்றை நிராகரிப்பதற்கு முன்னர் ஏற்றதொரு மாற்றுத் தீர்வினையும் முன்வைத்தாக வேண்டிய கடமை விமர்சகர்களுக்கு இருக்கிறதல்லவா.. சாத்தியப்பாடுகளுக்கப்பால் நியாயப்பாடுகளையும் கவனத்திற் கொண்டுதானாக வேண்டும். ம்ம்ம்ம்... இடியப்பச் சிக்கல்தான்... :-)