Monday, May 14, 2007

மோகித்திருப்பதன் சாபங்களைக் கனவில் வரைதல்

நேற்று
அவனென்னைப் பிரிந்தான்
அதிலிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும்
எல்லாமே...

நான் இன்னொருத்தனை மோகித்திருந்தேனாம்..

(எப்போதும் உங்களுக்கென்று ஒருத்தியை பெயர் குறித்து நிச்சயித்துக் கொள்ளுங்கள். அவள் வேறெந்த ஆடவனையும் பார்க்கக்கூடாது.. பேசக்கூடாது, தீண்டவும் கூடாது. அதைவிடவும் கேவலம், நான் ஒருத்தனைக் காதலிக்கிறேனென ஒரு பெண் உங்கள் முன்னிலையில் உரத்துச் சொல்தலாகாது. பண்பாட்டின் பாதுகாவலர்களுக்கு நடத்தை கெட்டவளாயும், முற்போக்குவாதிகளின் பார்வையில் மேலாதிக்கத்துக்கு கொடிபிடிக்கும் மற்றுமொரு சராசரியாயும், வேறெப்படியும் முத்திரை குத்தப்பட விரும்பாதவரை ஒரு பெண்ணுக்கு எதையும் உரத்துப் பேசுதல் எப்போதும் மறுக்கப்பட்டதுதான்.)

ஒரு வார்த்தை தானும் சொல்லிக்கொள்ளாமல்
பிரிந்தவனைத் தேடி
எலுமிச்சம்பழக் கிழவியொருத்தி
காட்டிய வழியில்
ஓரடியெடுத்து வைத்து பகலிரவைக் கடந்தேன்
நான் பலவீனமானவளென்பதை
அவர்கள் அறியாதிருக்கும் பொருட்டு
புன்னகைக்க புன்னகைக்க
பல்லெல்லாம் கொட்டுண்டு
கடைவாயிலிருந்து புன்னகை இரத்தமாய் வடிந்தது.
வேண்டும்போதெல்லாம்
நினைக்க முன்னரே மறுபடி முளைத்த
பற்களிடமிருந்து தப்பியோடி
தொலைந்துபோன கனவுகளெங்கும்
தேசாந்திரியாய் அலைந்து திரிய
இதோ இருக்கிறான் நீ தேடிக்கொண்டிருந்தவனென
அரைக்காற்சட்டைச் சிறுவனொருவன்
கைநீட்டிக் காட்டிய திசையில்
என் கனவு வெறும் நீர்க்குமிழியென
உடைந்து மறைந்தே போயிற்று.

அதனைத் தொடர்ந்தது,
வெறுமைகளற்ற பாதாளங்களை நோக்கிய
உறவொன்றின் தற்கொலைப் பயணம்
மனங்கேளாத தங்கை
தனக்கு நீச்சல் தெரியாதென்பதையும் மறந்து
அவனைக் காப்பாற்றவென தானும் பாய்ந்து
மடிந்து போனாள், கையில்
கையடக்கத் தொலைபேசியுடன்
விளிம்பினை நெருங்கிவிட்ட என்னை
பிடித்திழுத்த கரங்களைச் சபித்தபடி,
வெட்டிப்போட வெறிகொண்டு
தெருக்களெங்கும் ஓலமிட்டுத் திரிந்தேன், சிலகாலம்.

மற்றுமொரு மழைநாளில்
ஊரைவிட்டு விலகியோடவென ரயில் நிலையமடைந்து
அம்மாவுக்குத் தொலைபேசினேன்..
அம்மா என்னை மன்னித்துவிடு
நான் போகிறேன்
என்றென்றைக்குமாக போகிறேன்
இனி உன் சமையலை யாரும் குறைசொல்லப் போவதில்லை
கலைந்த துணிகளும், சிதறிக்கிடக்கும் புத்தங்களும் வரவேற்க
பொறுப்பற்றவளென இனி யாரையும் நீ பேசவேண்டியதில்லை..
என்னை மன்னித்துவிடு.
நீயும் போகாதையடி அசட்டுப் பெண்ணே..
எதிர்முனையில் அறுந்தது அவள் குரல்,
கையில் காசில்லாமல் போனதில்.

பின்னமொரு பொழுதில்
என் விருப்பம் வேண்டி வழிதொடர்ந்தவனின்
வாசலில் பிச்சைக்காரியாய் கையேந்தியபடி
எனதிருப்பு...
நிராகரிப்பின் வலி படர்ந்த முகத்தை
புன்னகைப் பூச்சுக்குள் மறைத்துக்கொண்டு
உள்ளழைத்து உணவு தந்து
மரியாதையுடன் அவன் வழியனுப்பி வைக்க
மனம் இலேசாகி மிதந்து
கருமேகம் கவிந்திருந்த தெருவதனில் நினைவு வந்தது
அவன் வீட்டில் மறந்து விட்டிருந்த குடை

இனிமேலும்,
எவரும் எனக்காகக் காத்திருக்கப் போவதில்லை
இழுத்தணைத்து நெஞ்சில் தாங்க
மார்பில் கிடந்தழ
எவரும் என்னை அனுமதிக்கப் போவதுமில்லை.

Tuesday, May 01, 2007

தேவதைகள் காத்திருப்பதில்லை

தேவதைகள்
சினங்கொள்ளக் கூடாதென்கிறார்கள்..
பெருந்தன்மை வாய்ந்தவையென்கிறார்கள்..


எற்றுண்டு கிடத்தல்...


மரணபீதியில் வெளிறியிருந்த பௌர்ணமி நிலவு
சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்படும்
தமிழரின் முகத்தை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது
ஒன்றாய்.. ஒவ்வொன்றாய்..
மனங்கொள்ளா எதிர்பார்ப்புகள் பொய்த்திடப் பொய்த்திட
வானக் கந்தலிலிருந்து கழன்றுவிழும் தாரகைகள்
முக்கால் மணிநேரத்தில் முற்றத்தில் கிடந்த
முழுவாளி நிறைத்தன
அது விளிம்புடைந்த பழம் வாளியென்பது வேறு கதை.

புறநிலைக் குறிப்பு

தனித்தனியே பொறுக்கியெடுத்து தூசு தட்டி
சேலை நெய்து அணிந்திட்ட ஒருத்தி
தேவதையாக உருக்கொண்டு - அவர்கள்
கதவுகளைத் தட்டத் தொடங்கினாள்
அகலத் திறந்த கோட்டைகளின் கதவுகள்
அல்லோலகல்லோலத்துடன் ஆடம்பரமாய் வரவேற்க
பாளம் பாளமாய் வெடித்திருந்த வறள் நிலத்தில்
முதல் துளியின் ஸ்பரிசத்தை உணர்ந்து ரசித்தவள்
'நீ மட்டுமா வந்தாய்' என்ற புருவமுயர்த்தல்களை
கவனிக்கத் தவறியதை எப்படிக் கண்டிக்க..

எல்லாம் தேவதையாய் உருக்கொண்டதால் வந்த வினை

விருந்துக்கும் உபசாரத்துக்கும் பரிகாரமாய்
இனி அவள் அரசர்களை அழைத்துவர வேண்டும்
வெடிச்சத்தங்களும், வாணவேடிக்கைகளும்,
தோரணங்களும், பந்தல்களுமென
கோட்டைகளும் இப்போது விழாக்கோலம் பூண
இம்முறை வரவேற்பு இன்னமும் பலமாகவிருக்கும்

அரசர்களை உள்நுழைய அனுமதித்த பின்
கோட்டையின் சுவர்களிலிருந்து வெளிக்கிளம்பும் பிசாசொன்று
அவளைப் பிதுக்கி வெளித்தள்ள
அதிக காலமெடுக்காதென..
அவளது தயவின்றி அரசர்களின் அருட்கடாட்சம் கிட்டாதென்பது
அவர்களுக்குத் தெரியுமென - பாவம்
அவளெப்படி அறிவாள்?

அகவயத் தெளிவு

கழுத்தைப் பிடித்து புறந்தள்ளப்பட்ட வேதனையுடன்
புழுதியில் கிடந்துகொண்டு
அண்ணாந்து பார்க்கிறேன்..
நெடிதுயர்ந்த மதில்களுக்கும் மேலால்
இன்னமும் ஓரிரண்டு தாரகைகள்
அந்தரத்தில் தொங்கிக்கொண்டுதான் கிடக்கின்றன

இனியென்ன..
கலைந்த ஆடைகளை சரிசெய்தபடி
அடுத்த கதவினை நோக்கி விரைய வேண்டியதுதான்,
தூக்கியெறியப்படுதலை எதிர்பார்த்தபடி.
எனினும்
நீட்டிய கரங்களுடன் நீங்கள் ஓடிவருமோர் நாளில்
புறந்திரும்பி,
உங்கள் எல்லை கடந்து
வெகுதூரம் சென்றுவிட்டிருந்திருப்பேன்

தேவதைகள் காத்திருப்பதில்லை எவருக்காகவுமே.


(2007-04-27)