Tuesday, March 27, 2007

தவறவிடப்படக்கூடாத சாட்சியங்கள்...

1.

மின்சாரத்தடை
சுற்றிவளைப்பு
தேடுதல்..

நாய்களின் ஓலம்
பூட்ஸ்களின் தடதடப்பு
நெரிபடும் சருகுகள்..

விமானத்தாக்குதலின் பின்னரான இரவு
இப்படித்தான் கழிந்து கொண்டிருந்தது
ஒவ்வொரு கணத்தின் கணமும்
நூற்றாண்டுகளாய்..

மணலுக்குள் தலைபுதைத்து நின்று
ஆசுவாசப் பெருமூச்செறியும்
தீக்கோழியென எனதிருப்பும்..
தலையணையின் அடியில்
குழிதோண்டி முகம் பதித்து
கருவறையுள் மீண்டதான
கனவுகளுடன்.

சாளரங்களுக்கப்பால்..,
ஓங்கிவளர்ந்து
அகலக் கிளைவிரித்து
கரும் பூதமென
ஓவென்று நின்றிருக்கும்
மாமரம் மட்டும்
அனைத்துக்குமான சாட்சியமாய்..


2.

'அந்த அங்கிள்மார்
குண்டு போடுறதுக்கு முதல்
தமிழாக்களுக்கெல்லாம் சொல்லுவாங்களாம்
அம்மா சொன்னா..
உங்களுக்கு தெரிந்தால்
எனக்கும் சொல்லுங்கோ,
ஒண்டாய் ஓடி ஒளியலாம்
அபி அம்ப யாளுவோ நேத'

'என்ன இல்லையென்று
இப்படி சண்டை பிடிக்கிறாங்கள்'

பரிதாபத்துடன் பார்க்கிறேன்
அந்தச் சின்னப் பெண்ணை..

எதையும்
சொல்லிக்காட்டிக் கொண்டிருக்க
விருப்பமில்லை எனக்கு.
புளித்துப்போன கதைகளவை..
யாழ்நூலக எரிப்பு
செம்மணி
சூரியகந்த
83'

அவள் குழந்தை.
சிங்களத்திதானென்றாலும்,
அவளுக்குத் தெரியவேண்டாம்
பெரியவர்களின் வக்கிரங்கள்

இருந்தும்,
சொல்லாமலிருக்க முடியவில்லை..
பாடசாலைவிட்டு வரும் வழியில்
துவக்குச் சூடு பட்டு விழுந்த
மைத்துனனைப் பற்றி..,
கிழக்கே
பசியால் உயிர்துறந்து கொண்டிருக்கும்
அவள்போன்ற ஆயிரமாயிரம்
சிறுவர்களைப் பற்றி..

வியப்பால் விழிவிரித்துக்
கேட்டுக் கொண்டிருந்தவளின்
கன்னங்கிள்ளி
புன்னகைத்தேன்

'நான் சொல்வது இருக்கட்டும்..
இன்னொரு 83ன்போது
என்னை நீ பாதுகாப்பாயா..'

சின்னக் குழந்தை
கேட்டிருக்கக்கூடாதோ..

புரிந்ததோ இல்லையோ
தலையை ஆட்டினாள்
ஓவென்று..

படபடக்கும் அவள் விழிகளிலிருந்து
விரிந்தன எல்லாமே..
இலங்கையில் இனப்பிரச்சனையா..
எவர் சொன்னது..?


(வலைப்பதிவை மெருகூட்டித் தந்த நண்பனுக்கு..)

18 comments:

Jeyapalan said...

இலங்கையிலிருந்து ஒரு மாணவியிடமிருந்து ஒரு வலைப்பூ, தரமான எழுத்து. ஆனந்தம், வாழ்த்துக்கள். அது என்ன "ரேகுப்தி"? :)

மலைநாடான் said...

நிஜங்களின் தரிசனம் சொல்லும் வரிகள்.
நன்றி!

நிவேதா/Yalini said...

நன்றி செயபால்..,

உங்கள் விளக்கத்துக்காக.., பதிவு தொடங்கிய ஆரம்பகாலங்களில் எழுதியது...

//இவ்வலைப்பதிவின் தலைப்பு உங்கள் சிந்தனைகளைக் கிளரக்கூடும். இத்தலைப்பினைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணத்தினை நானே சொல்லிவிடுகிறேன்.

கர்நாடக சங்கீதத்துடன் நெருங்கிய தொடர்புடைய தலைப்பு இது. இசையறிவுடையவர்கள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்றுதான். "ரேகுப்தி" என்பது மோஹன ராகத்திற்கு முற்காலத்தில் வழங்கப்பட்டு வந்த பெயராகும். அதென்ன, மோஹன ராகத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறேனேயென யோசிக்காதீர்கள். இது புராதன ராகங்களிலொன்று. முல்லைப்பண் எனவும் அழைக்கப்படுகின்றது. இரவு நேரத்தில் பாடுவதற்கு மிகவும் உகந்ததாக இவ்விராகம் கருதப்படுகின்றது. மோஹனத்தின் ரஞ்சகத்தன்மைக்கு இதைவிடவும் சான்றுகள் வேண்டுமா என்ன? மேலும், தென்னிந்திய இசை தவிர பிறநாட்டு சங்கீதங்களிலும் இடம்பெறும் பெருமை இதற்கேயுரியது. மாணிக்கவாசகரின் திருவாசகம் தொன்றுதொட்டு இவ்விராகத்திலேயே பாடப்பட்டு வருவதும் இதன் தனிச்சிறப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

இவற்றையெல்லாம் வாசித்துவிட்டு இவ்வலைப்பதிவு முழுக்க முழுக்க இசை பற்றியதென்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். காலங்களையும் கடந்து நிலைபெற்றிருக்கின்ற..., சர்வ வியாபகத்தன்மை வாய்ந்த..., உள்ளம் நெகிழும் உணர்வுகளைப் பிரதிபலிக்கக்கூடிய ஒன்றன் பெயரை எந்தன் வலைப்பதிவுக்குத் தலைப்பாகத் தேர்ந்தெடுத்ததில் தவறில்லையே...?

மழைக்கால அந்திவேளையொன்றில் பாட மறுத்த ஊமைக்குயிலின் குரல்வளையின் ஆழத்தில் சிக்குண்ட கானங்களைப் பற்றியவை எனது பதிவுகள்... கரைசேர முன்னரே காணாமற்போன அலைகளின் ஓலங்களைப் பற்றியவை எனது பதிவுகள்...//


நன்றி, மலைநாடான்!

மிதக்கும்வெளி said...

/புளித்துப்போன கதைகளவை..
யாழ்நூலக எரிப்பு
செம்மணி
சூரியகந்த
/

நல்ல வரிகள். ஆனால் இன்னும் கொஞ்சம் ஆழமான கவிதைகளை எதிர்பார்த்தேன். 'அபி அம்ப யாளுவோ நேத'

' என்றால் என்ன அர்த்தம்?

Anonymous said...

சாதாரணமாய் போய்க்கொண்டிருந்த வாசிப்பு கடைசிப்பகுதியில் கூர்மையாகின்றது. எனினும் சற்று விரிவாய் விபரித்து எழுதியிருக்கலாம் போலத்தோன்றுகின்றது.

சோமி said...

'நான் சொல்வது இருக்கட்டும்..
இன்னொரு 83ன்போது
என்னை நீ பாதுகாப்பாயா..'

"ரேகுப்தி"
விளக்கத்துக்கு நன்றி.
சூழலின் பிரதிபலிபுகள் உங்கள் எழுத்துகளில் தெரிவது புளித்துபோன அரசியலைக் கவிக்கத் தூண்டுபவை.
தொடர்ந்து எழுதுங்கள்

கானா பிரபா said...

வணக்கம் நிவேதா

தொடர்ந்தும் உங்கள் பதிவுகளைப் படித்துவருகின்றேன். நிதர்சன நடப்புக்களைச் சோரம் போகாது உங்கள் பாணியில் தருவது சிறப்பு. தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன்.

நிவேதா/Yalini said...

மிதக்கும் வெளி, அனானிமஸ், சோமி, கானா பிரபா.. பின்னூட்டத்துக்கு நன்றி!

அபி அம்ப யாளுவோ நேத - நாங்கள் மாங்காய்த் தோழர்கள் தானே.. இது நேரடி மொழிபெயர்ப்பு. மன்னிக்கவும் பதிவில் குறிப்பிட மறந்தமைக்கு. இந்த மாங்காய்த் தோழர்களென்பது ஒரு மரபுத் தொடர்..( அப்படித்தான் நினைக்கிறேன்) இணைபிரியா நண்பர்கள்.. என்று பொருள்படும்.

மிதக்கும் வெளி,

இதை ஒரு கவிதையென நான் குறிப்பிட விரும்பாமைக்கு காரணங்களிருக்கின்றன. முதலில் கட்டுரையாகத்தான் எழுத நினைத்தேன்.. நேரமிருக்கவில்லை. சுருக்கமாக வசனங்களை உடைத்துப் போட்டாற்போல அது கவிதையாகிவிடுமா என்ன..

இதுவேதான் அனானிமஸுக்கு கூற விரும்புவதும்.. விபரித்தெழுத விருப்பமில்லாமலில்லை..

மற்றும்படி, பின்னூட்டத்துக்கு நன்றி!

காட்டாறு said...

//மணலுக்குள் தலைபுதைத்து நின்று
ஆசுவாசப் பெருமூச்செறியும்
தீக்கோழியென எனதிருப்பும்..//

நச்சென்று இருக்கின்றன... தொடர்ந்து எழுதுங்கள்.

Anonymous said...

Dear Nivetha,
I am a regular reader of your poems and article. This poem is well said.I expect more in these line.
Eswaran

நிவேதா/Yalini said...

காட்டாறு, ஈஸ்வரன்..

பின்னூட்டங்களுக்கு நன்றி.. பதிவுகளைத் தொடர்ந்து வாசிப்பதற்கும்..:-)

த.அகிலன் said...

வணக்கம் நிவேதா
நிணடநாட்களுக்குப்பிறகு வந்தேன் தமிழ் மணத்திற்கும் உங்கள் வலைப்பூவிற்கும்.

இது ஒரு நல்லபதிவு. முக்கியமானதும்கூட இதில் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கிற வழமையான அரசியல் மீதான அல்லமது சம்பவங்கள் மீதான ஒரு விதமான சலிப்பு கவனிக்கப்படவேண்டியது.

அது இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் புளித்துப்போன அரசியலுக்கும் இதையே தொடர்ந்தும் சுமக்கவிரும்பா புதிதலைமுறையினதுமான இடைவெளியை உணர்த்துகிறது
வாழ்த்துக்கள்
அன்புடன்
த.அகிலன்

நிவேதா/Yalini said...

நன்றி அகிலன்,

வருகைக்கும்.., பின்னூட்டத்துக்கும்..

Prem said...

One of close friend Jamalan introduced this pages. It is strange to know such responses.
-prem(Ramesh)

ரூபன் தேவேந்திரன் said...

தமிழ்மணத்தில் தவற விடுகின்ற ஏராளம் நல்ல பதிவுகள் போல இதனையும் தவறவிட்டிருப்பேன். காலம் தாழ்த்தியாவது வாசிக்க கிடைத்தது.

//'அந்த அங்கிள்மார்
குண்டு போடுறதுக்கு முதல்
தமிழாக்களுக்கெல்லாம் சொல்லுவாங்களாம்
அம்மா சொன்னா..
உங்களுக்கு தெரிந்தால்
எனக்கும் சொல்லுங்கோ,
ஒண்டாய் ஓடி ஒளியலாம்
அபி அம்ப யாளுவோ நேத'//

இந்த வரிகள் மிகவும் தாக்கமானவை. ஒரு பகுதிகள் மக்களே உணர்ந்த வலிகள் எல்லா இடங்களிலும் பரவும் பொழுது வெற்றிப் பார்வைகளை விடுத்த இன்னொரு பார்வைத்தான். இன்னும் கொஞ்சக்காலம் போனால் அக் குழந்தையும் தான் வன்மம் பேசுதற்கான நியாயத்தை தேடும்.

எனினும், இவையெல்லாம் நடக்காது என்றும், இவற்றை புரட்ட உதவும் ஒரு சிறு நெம்பாய் தானும் எங்களின் எழுத்துக்கள் அமையட்டும் என்று நம்புவோம். வழமை போலவே......

நிவேதா/Yalini said...

மிகவும் நன்றி, பிரேம்(ரமேஷ்)!

இந்த நாளை மேலும் வனப்பாக்கிப் போனது உங்கள் பின்னூட்டம்.. நாம் எமது ஆதர்சமாகக் கருதுபவர்கள் எமது பதிவுக்கே வந்து கருத்துத் தெரிவிக்கும்போது ஏற்படும் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி மொழியின் வெளிப்பாட்டு எல்லைகளை மீறியதுதான். நிச்சயமாக உங்களை இங்கே எதிர்பார்த்திருக்கவேயில்லை. கால் நிலத்தில் பாவுதில்லையென நண்பரொருவருக்கு கூறிக்கொண்டிருந்தேன். மிக மிக நன்றி.., ஜமாலனுக்கும்.

இருந்தாலும், இது வேறு பதிவில் வந்திருக்க வேண்டுமோ..

நன்றி கோசலன்,

ம்ம்ம்.. நீங்கள் சொல்வதும் உண்மைதான். அவரவர்க்கும் அவரவரது நியாயங்கள்..

Prem said...

இருந்தாலும், இது வேறு பதிவில் வந்திருக்க வேண்டுமோ..

No it is for your Blogg.
I really did mean it.
Regards
prem

நிவேதா/Yalini said...

மிக மிக நன்றி, பிரேம்!

இன்னமும் நிலத்தை விட ஒரு அடி உயரத்தில்தான் மிதந்து கொண்டிருக்கிறேன்..;-)

மனதுக்குப் பிரியமானவர்களையெல்லாம் நெருக்கமாகக் கொண்டு வந்து சேர்த்ததென்றளவில் எழுத்தின் மீதான நேசம் இன்னுமின்னும் அதிகரிக்கிறது.