Thursday, August 03, 2006

மானுடவுயிரும் மகத்தானதோர் ஆயுதமே!


- மேல்புலத் தோற்றப்பாடுகளும் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சாராம்சங்களும்



'When everybody wants to fight there's nothing to fight for. Everybody wants to fight his own little war, everybody is a guerilla'
- James Ahmed

விலகி நின்று பார்க்கையில் விசித்திரமானதாகவிருக்கிறது உலகத்தின் போக்கு. ஓரிடத்தில் போற்றப்படுபவை மற்றுமோர் இடத்தில் இகழப்படுகின்றன. ஒரு சாராருக்கு இயல்பாகத் தோன்றுகின்றவை இன்னோர் சாராருக்கு அசாதாரணமாகிப் போகின்றன. அரசியல் நடத்தைகளிலும், பண்பாட்டுப் படிமங்களிலுமே இம்முரண்நகை அதிகமதிகம் வெளிப்பட்டுத் தெரிகின்றது.


யார் 'தீவிரவாதிகள்'..?


என்றென்றைக்குமாக செத்துப்போனவர்கள் நாங்கள்.. மீண்டும் சாகிறோம் இப்போது வாழ்வதற்காக.
- கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ்

உண்மையில் எவர்தான் தீவிரவாதிகளல்லரென தொடுக்கப்பட்டிருக்க வேண்டும் இவ்வினா. பொருட்பயன்பாடு / வார்த்தைப் பிரயோகத்தினை அடிப்படையாகக் கொண்டு நோக்குவோமாயின் தனக்கான கொள்கைப் பிடிப்புக்களிலிருந்து சற்றும் வழுவாமல், இரட்டை வேடமணியாமல் இறுதிவரை தனதேயான தனித்துவங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் போரிடுபவர்களனைவருமே - நஞ்சூட்டப்பெற்று மரணித்த சோக்ரடீஸிலிருந்து இந்தக் கணத்தில் உலகின் எங்கோவோர் மூலையில் தான் கொண்ட இலட்சியத்தின் பொருட்டு உயிர்துறந்து கொண்டிருக்கின்றவோர் போராளிவரை - ஒருவகையில் தீவிரவாதிகள்தான். காந்தியை 'மகாத்மா' என்கிறார்கள்; 'அஹிம்சாவாதி' என்கிறார்கள்; அவரைப்போல அமைதியாகப் போராடக் கற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்கள். காந்தியம் குறித்து கடும் விமர்சனமிருந்தாலும் அவருமொரு தீவிரவாதிதானென்பதை எத்தனைபேரால் ஏற்றுக்கொள்ளமுடியும்?

அப்படியேயாகுமெனில் (அப்படியாகாதெனினும்) 'பயங்கரவாதி' களென அடையாளப்படுத்தப்படுவோர் யார்? புறநிலைப் பொருட்களாலான ஆயுதங்களை / கருவிகளைத் தரித்தபடி, தம்மைத் தவிர்ந்த ஏனைய உடைமைகளுக்கு - அவை உயிராகட்டும், சொத்தாகட்டும், வேறேதேனும் பொருளாகட்டும் - சேதம் விளைவிப்பவர்களேயென பொதுமைப்படுத்தப்படுவதில் சிக்கல்களிலிருக்கின்றன. அப்படியெனின் அவர்களைச் 'சேதவாதிகள்' அல்லது 'உடைமைப் பறிப்பாளர்கள்' என அழைப்பது வேண்டுமானால் பொருத்தமாயிருக்கக்கூடும்.

ஆயுதங்களென எவற்றை வரையறுக்கிறார்கள்? இன்றைய காலத்தில் (பயங்கரவாதிகளின்) ஆயுதங்களென்றாலே எவரது நினைவிற்கும் முதன்முதலில் வருவது துடைப்பங்கட்டையளவிலான துவக்கும், கண்ணிவெடிகளும், இன்னுமின்னும் பல 'கறுப்பு' பொருட்களும்தான். தொழினுட்பம் முன்னேறிவிட அணுவாயுதங்களும், உயிரியல் ஆயுதங்களுமே கூட இன்று முக்கிய பேசுபொருளாகின்றனதான். ஆனால், இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழ்கிறோமென்ற மிதப்பில் என்றோவொரு காலத்தில் எமது மூதாதையர் வாள்களாலும், வேல்களாலும் அதற்கும் முன்னர் கற்களாலும், மரத்தடிகளாலும் போரிட்டனரென்பதை மறந்துவிடுவதோ, மறுத்துவிடுவதோ எந்தவிதத்தில் நியாயமாகும்?

ஏன் அவர்களைப் பயங்கரவாதிகளென அழைக்கிறோம்? எண்ணிப் பார்ப்பதற்கே பயங்கரமான காரியங்களை அவர்கள் செய்வதனாலென நீங்கள் சாட்டுச் சொல்லலாம். அதென்ன அது பயங்கரமான காரியம்... உயிர்பறித்தலொன்றும் அவ்வளவு சிரமமான காரியமல்லவே. இன்று நானுமொரு கொலை செய்தேனென்றால் யார் நம்புவீர்கள்? ஒன்றல்ல, இரண்டல்ல.. சரியாகச் சொல்வதானால் நான்கு உயிர்கள் இன்று என் சுயநலத்தின் பொருட்டு காவுகொள்ளப்பட்டன. நுளம்புகளைச் சொல்கிறேன். காதுக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டு உறக்கத்தைக் கலைத்துக் கொண்டிருந்தவைகளை சந்தர்ப்பத்திற்காய்க் காத்திருந்து, குறிவைத்து சடாரென்று கைகளால் தாக்கினேன். இரத்தம் தெறிக்க சுருண்டு வீழ்ந்து இறந்தன. இனம்புரியாதவோர் உணர்வு மனதில் மின்னி மறைந்தது. நாளை என்னையும் 'பயங்கரவாதி' யென அடையாளப்படுத்துமோ இந்த நுளம்புகள்? உயிரிழந்தவற்றின் உறவுகள் நாளையிரவு என்மீது போர்ப்பிரகடனம் செய்யக் கூடுமோ?

நுளம்புகளையும் மனிதவுயிர்களையும் சமானமாகக் கருதுவது எவ்விதத்தில் நியாயமென சிலர் கொதித்தெழக்கூடும். ஒரு போத்தல் கசிப்பைவிடவும் மனிதவுயிரின் பெறுமதி மலிந்துபோன தேசமொன்றில் காவியுடைகளும் குருதியில் தோய்ந்துகொண்டிருக்க... இதிலென்ன இருக்கிறது அதிசயிக்க..? இன்றே தொடங்கிவிட்ட நாளையினை முன்னிட்டு இந்தப் பொழுதின் இருத்தலுக்கெதிராகப் போராடும் அனைவருமே போராளிகள்தான்.


எது 'சுதந்திரம்'..?


இரத்தத்தில் பிறந்தது அந்தச் சொல்,
இருண்ட உடலில் வளர்ந்து, துடித்து
உதடுகளின் வழியாகப் பறந்து சென்றது அந்தச் சொல்

தூரத்தில் மிக அருகில்
இறந்த தந்தைகளிடமிருந்து
அலையும் இனங்களிடமிருந்து
கல்லாக மாறிய நிலங்களிலிருந்து
வந்தது அந்தச்சொல்
ஏழைப் பழங்குடிகளால்
களைத்துப்போன நிலங்கள்
துக்கம் சாலையை நிறைத்த போது
மக்கள் புறப்பட்டார்கள்
வந்து சேர்ந்தார்கள்
சொற்களை மீண்டும் விளைவிக்க
புதிய நிலத்தையும் நீரையும்
இணைத்தார்கள்
நாம் பெற்றிருப்பது இதுதான்
இன்னும் வெளிச்சத்திற்கு வராத
புதிய உயிர்களின் விடியலுடன்
இறந்த மனிதர்களுடன்
நம்மைப் பிணைக்கும் அலைவரிசையும் இதுதான்.
- பாப்லோ நெரூதா


01. ஊடக சுதந்திரம்/உரிமை

இன்றைய கொழும்புத் தமிழ் நாளிதழ்களின் தலையங்கங்களை அவசர அவசரமாக நோட்டம் விட்டதில் முகமெங்கும் இழையோடத் தொடங்கியது மெல்லிய புன்னகை.

மூதூர் புலிகள் வசம்; சமர் தொடர்கின்றது! படையினரின் பல மினி முகாம்கள் தொடர் வரிசையில் வீழ்ச்சியுற்றன.
- சுடரொளி

மூதூரிலும் சுற்றுப்புறங்களிலும் தொடர்ந்தும் கடும் சமர். நகரை புலிகள் கைப்பற்றியதாக கூறப்படுவதை படையினர் மறுப்பு.
- தினக்குரல்

மூதூரைக் கைப்பற்ற புலிகள் முயற்சி; இருதரப்புக்கும் கடும் மோதல். மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகள், ஆலயங்களில் தஞ்சம்.
- வீரகேசரி

ஒரே கதையை ஒவ்வொருவரும் எப்படிச் சொல்கிறார்கள். எவரென்ன செய்தாலும் பரவாயில்லை.. தனது தரப்பை மேம்படுத்த வேண்டுமென்ற முனைப்பு ஒருவரிடம். தனது தரப்பும் முக்கியம்தான்.. அதற்காக மற்றவரை பகைத்துக்கொள்ள முடியாதென்கிறார் இன்னொருவர். ஐயோ.. தரப்பை விடுங்கள்.. எனக்கு மற்றவர்களில் சரியான பயமென ஒதுங்கி பொதுப்படையாகப் பேச ஆரம்பிக்கிறார் வேறொருவர்.

ஊடகங்களின் அரசியலானது யதார்த்தத்தினையே புரட்டிப்போடும் ஆற்றல் வாய்ந்ததென்பதை எவரும் இலகுவில் மறுத்துவிட முடியாது. மாவிலாறு அணைக்கட்டுப் பகுதி இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு விட்டதென்று சிங்கள நாளேடுகளில் இன்று செய்தி வெளியாகியிருந்தமையை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். கெப்பற்றிப்பொல சம்பவம் மக்கள் மத்தியில் தேவைக்குமதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டளவுக்கு வங்காலைச் சம்பவமோ, எகலியகொட பம்பேகம தோட்டத்தில் காடையர் உட்புகுந்து மக்களைத் தாக்கியமையோ சிங்கள மக்களைச் சென்றடையவில்லையென்பதே உண்மை. இப்படியெல்லாம் நடந்திருக்கிறதாவென்றே அவர்களுக்குத் தெரிந்திருக்கப் போவதில்லை. இலங்கைத்தீவின் வரலாற்றேடுகளிலிருந்து தமிழர்கள் மற்றும் தமிழ் மன்னர்கள் பற்றிய குறிப்புக்களுக்கு நேர்ந்ததைப்போல இதனையும் திட்டமிட்ட மறைப்பென்றே கூறவேண்டும்.

தொடர்ச்சியாக நிகழ்ந்துவரும் ஊடகவியலாளர் மீதான வன்முறைகளையும், தொடர் கொலைகளையும்கூட கவனத்திற்கொண்டேயாக வேண்டும். கடந்த மாதம் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த, பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாகப் பத்திரிகைகளில் எழுதிவரும் சுதந்திர ஊடகவியலாளரான சம்பத் லக்மல் சில்வா (வயது 24) கடத்திச் செல்லப்பட்டு கொலையுண்டமைக்கு தலையற்ற உடல்கள் மலையகப் பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்களும் ஆதாரங்களும் அவரிடத்திலிருந்தமையே காரணமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூதூர் மோதல் தொடர்பாக தகவல்களெதனையும் வெளியிட வேண்டாமென இன்று அரசாங்கம் செய்தி ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமற்ற அறிவித்தலொன்றைக் கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதே. இவ்வறிவித்தலைத் தொடர்ந்து தனியார் வானொலிகளும் மௌனம் சாதிக்கத் தொடங்கியுள்ளதுடன் செய்தியறிக்கைகளைத் தவிர்த்து திரையிசைப் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கின்றன. அதுவுமொரு விதத்தில் நல்லதுக்குத்தான். மக்களைத் தூண்டிவிட்டு இனவழிப்பினைத் திட்டமிட்ட முறையில் மேற்கொள்வதை விடவும், அறியாமையிலாழ்த்தி நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க அரசாங்கம் முயல்வதை மனிதாபிமானரீதியான முயற்சிகளுள் ஒன்றாகவும் எடுத்துக் கொள்ளலாம்.


02. அறிதலுக்கான சுதந்திரம்/உரிமை (The right to know)

அண்மையில் பெரும்பான்மையினத்தினைச் சேர்ந்த தென்பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவியொருவருடனான உரையாடலின்போது, உண்மையில் உங்களுக்கு என்னதான் தேவை.. உங்களுக்கு என்ன இல்லையென்று போராடுகிறீர்களென்று அவர் வினவியபோது விக்கித்துப் போனது நெஞ்சம். சிங்கள மொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டமை, பல்கலைக்கழக அனுமதியில் மட்டுப்பாடு, யாழ். பொதுநூலகம் எரியூட்டப்பட்டமை, செம்மணிச் சம்பவமென ஒவ்வொன்றாக கூறக்கூற அவர் விழிவிரித்துக் கேட்டுக்கொண்டிருந்தார். இருந்தாலுமேகூட இது ஆயுதமேந்துமளவுக்கு பாரிய பிரச்சனையல்லவே.. பேசித் தீர்த்திருக்கலாமென்பது அவரது நிலைப்பாடு. ஆமாம்... தந்தை செல்வா, அமிர்தலிங்கம் காலத்திலிருந்து நாம் பேசிக்கொண்டுதானிருக்கிறோம். எதிர்க்கட்சியெனும் அந்தஸ்து 1977 களில் கைவசமானவுடன் தமிழீழத் தாயகத்தினை விழுங்கிவிட்டார்களென தமிழரசுக் கட்சியினரை ஒரேயடியாகக் குற்றம் சாட்ட முடியாதெனினும் - தமிழ்த்தேச அரசியலுக்கு அவர்களாற்றிய அளப்பரிய பங்கினை மறுத்துவிட முடியாதென்பதால் - உண்மை அதுவாகத்தானிருக்கின்றது. வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக்கொள்ளுமளவுக்கு எம்மவர்களின் வரலாறுகள் திறமானவையாகவில்லை. காரணம், அவ்வக் காலங்களின் அதிகார வர்க்கத்தினரின் நலன்களுடன் முரண்படும் எவையும் வரலாற்றில் தொகுக்கப்படுவதில்லை. யதார்த்தத்தினை நோக்கின், வரலாற்றில் கூறப்பட்ட விடயங்களையும் விட கூறப்படாத விடயங்களிலேயே உண்மையான வரலாறு பொதிந்துள்ளது.


03. நீதித்துறைசார் சுதந்திரம்

அதிகாரப்பிரிவினைக் கோட்பாட்டின்படி ஒரு சிறந்த ஜனநாயக ஆட்சி நிலவுவதற்கு இன்றியமையாததோர் காரணி எந்தத் தலையீடுகளுமில்லாமல், கட்டுப்பாடுகளுமில்லாமல் சுதந்திரமாக இயங்கக்கூடிய நீதித்துறையாகும். நீதித்துறையானது அரசுக்கோ / நாட்டின் தலைவருக்கோ கூட கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. நியாயத்தின்படி நடைமுறை அரசியலிலிருந்து (கூட்டாட்சி நாடுகளில் மத்திய / பிராந்திய அரசுகளுக்கிடையேயான பிணக்குகளைப் பாகுபாடில்லாமல் தீர்ப்பதற்கு) அது விலகியே நின்றாகவேண்டும். இலங்கைக்குப் பொருத்தமானதோர் தீர்வாக தற்போது முன்வைக்கப்படுவது - ஐரோப்பிய யூனியனையொத்த - நாடுகளின் கூட்டாட்சியென்ற கோட்பாடாகும். இதன் பொருத்தப்பாடுகளை விடுத்துப் பார்த்தாலும், இலங்கையில் நீதித்துறையின் நிலைமை கேள்விக்குரியதே.

இதற்கோர் சிறந்த உதாரணம்: யாழ். மேலதிக நீதவான் சிறிநிதி நந்தசேகரன் இராணுவத்தினரால் மிரட்டப்பட்டமை. அரச இயந்திரத்தில் அங்கத்துவம் வகித்துக்கொண்டே இராணுவத்தினரின் அடாவடித்தனங்களைத் துணிச்சலுடன் தட்டிக்கேட்பவர்களில் மிகவும் கவர்ந்தவர்கள் இவரும், வவுனியா மாவட்ட நீதிபதி இளஞ்செழியனும்தான். பாதுகாப்பு மற்றும் சோதனைகளைக் காரணஞ்சாட்டி யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் பாதுகாப்புக் கவசமணிந்து கொண்டு பயணிப்பதை இராணுவத்தினர் நிறுத்த முயற்சித்தபோதும், வீடுகளில் படலைகளை அகற்றும்படி நிர்ப்பந்தித்த போதும் மக்களின் முறையீட்டின் பேரில் அதனைத் தடுத்து நிறுத்தியவர் சிறிநிதி. மேலும், எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்தவொரு குடிமகனும் தன்னைத் தனிப்பட்ட முறையில் நாடிவந்து முறைப்பாடு செய்யலாமென பகிரங்கமாக அறிவித்து நீதித்துறையினர் மீதான மக்களின் நம்பிக்கையினை வலுப்படுத்தியவர்.

இத்தகைய காரணங்களுக்காக முன்னரும் பலமுறை அவர் இராணுவத்தினரின் சீண்டல்களுக்கு ஆளானபோதும், அவரது உத்தியோகபூர்வ வாகனத்தின் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடாத்த முயன்ற சந்தர்ப்பம் - நாடளாவிய ரீதியில் தமிழ் மக்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் மத்தியில் - பரவலான விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது.

வியக்க வைக்கும் ஆளுமைகளுள் ஒருவரான அவரை அண்மையில் சந்திக்கச் சந்தர்ப்பம் வாய்த்த போது, யாழ். இளைஞர்களின் மனோநிலை மாற்றங்கள் தொடர்பாக வருத்தம் தெரிவித்திருந்தார். தென்னிலங்கையை விடவும் இங்கே நிலைமை மோசமாகவுள்ளதெனவும், இரு தசாப்தகாலத்திற்கும் மேலாகத் தொடரும் முறுகல் நிலையினால் கசிப்பு அடிக்காமலேயே சக மனிதனின் கழுத்தைச் சீவுமளவுக்கு மக்களின் மனங்கள் இறுகிப்போயுள்ளனவெனவும் கூறியமை சிந்தனையைத் தூண்டியது. வாழ்ந்தால் அவரைப்போல வாழவேண்டுமென்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.


04. நடமாடுவதற்கான சுதந்திரம்

சில தினங்களுக்கு முன்னர் முச்சக்கர வண்டியொன்றில் பயணிக்கப் புறப்படுகையில் வண்டிச் சாரதி தனது தோழரொருவரையும் ஏற்றிக்கொள்வதற்கு அனுமதி கேட்டார். அவர்களிருவரும் பெரும்பான்மையினத்தவர்கள். முச்சக்கர வண்டிச் சாரதியுடன் வருடக்கணக்கான அறிமுகமிருந்ததாலும், மனிதாபிமான / சகமனித நேயத்துடனும் அனுமதிக்கப்போனதுதான் வினையாகப் போயிற்று. வழியில் இடைமறித்த பொலிஸார் ஆயிரத்தேட்டு கேள்விகளை முன்வைக்கலாயினர். இன்றைய நாட்களில் பெரும்பான்மையினத்தவர்களைக்கூட அவர்கள் நம்புவதாயில்லை. இராணுவத்தினரே பணத்திற்கு விலைபோகும் போது சாதாரணச் சனங்கள் எம்மாத்திரம்? அவர்களது சந்தேகித்தல்களின் காரணமாக அன்றைய பயணம் அரைமணி நேரத்திற்கும் மேலாக தாமதித்திருந்தாலும் ஒருவழியாக விடுபட்டு வந்தது நிம்மதிப் பெருமூச்சுவிட வைத்தது.

அண்மைக் காலங்களில் கொழும்பு நகரெங்கும் பொலிஸார் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுப்பதும், பாடசாலைகளிலும் மக்கள் குடியிருப்புக்களுக்கண்மையிலும் ஒன்றுகூடல்களை ஒழுங்குபடுத்தி வருவதும் குறிப்பிடத்தகுந்ததே. சந்தேகத்திற்கிடமானவர்கள்/பொருட்களைக் கண்ணுற்றால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மக்களும், மாணவரும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். ஆனாலும், சந்தேகத்திற்கிடமானவர்களென இவர்களால் அடையாளப்படுத்தப்படுபவர்கள் யார்? சந்தேகத்திற்கிடமானவர்களென்பது தொடர்பில் இவர்களது வரையறைகள் யாது? முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கான கருத்தரங்கின் போது வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள்:

'மூன்று பேருக்கு மேலதிகமாக வண்டியில் ஏறிவிட்டு இடையில் இறங்கிச் செல்லும் நபர் தொடர்பாகக் கவனமெடுக்க வேண்டும். வண்டியில் வரும்போது முக்கிய இடங்கள் தொடர்பாகக் குறிப்பெடுப்பவர்கள், அநாவசியமாக பேச்சுக் கொடுப்பவர்கள், முக்கியமான இடங்கள் தொடர்பாக விசாரிப்பவர்கள் தொடர்பில் அவதானித்து இராணுவத்திற்கு தகவல்களை வழங்கலாம் அல்லது இராணுவ, பொலிஸ் காவலரண்களில் சந்தேகப்படுபவர்களை ஒப்படைக்கலாம்.

செல்லுமிடத்தின் கட்டணம் தொடர்பாக எதுவித விசாரணையுமில்லாமல் ஏறுபவர்கள், வண்டியில் ஏறியபின் முக்கியஸ்தர்களின் விலாசங்களை விசாரிப்பவர்கள், செலூலர் தொலைபேசியினூடாக சந்தேகத்திற்கிடமாக உரையாடுவோர் தொடர்பாக கவனம் செலுத்தி பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவிக்க வேண்டும்.'

இச்சந்தர்ப்பத்தினை சிலர் தமக்கு வேண்டாதவர்களைப் பழிதீர்ப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் அவலமும் இடம்பெறத்தான் செய்கின்றது. மனிதர்கள் எப்போதும் மனிதர்கள்தான்.

இன்னமும் பேச்சுச் சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், உயிர்வாழ்வதற்கான சுதந்திரம், இத்யாதி.. இத்யாதி.. தொடர்பில் நான் கவனஞ் செலுத்தவில்லையென்பதனால் அப்படியும் சமாச்சாரங்களிருக்கின்றவென்பதையாவது மறந்துவிடாமலிருப்போம்.


என்னதான் 'தவறு'..?


எங்களை யாரும் பொருட்படுத்தவில்லை.
இயந்திரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் வாழ்க்கையைக்
காட்டிலும் எமது உயிர்கள் குறைவான மதிப்பை
உடையனவாகவே இருந்தன.
நாங்கள் கற்களைப் போல,
சாலையோரத்துக் களைச்செடிகள் போல இருந்தோம்.

எங்கள் குரல்கள் அடக்கப்பட்டன.
நாங்கள் முகமற்றவர்களாக இருந்தோம்.
நாங்கள் பெயரற்றவர்களாக இருந்தோம்.
எங்களுக்கு எதிர்காலமே இருக்கவில்லை.
நாங்கள் உயிர்வாழவே இல்லை.

எங்களுக்கு ஒரு குரல் வேண்டுமென்றால்
நாங்கள் ஆயுதங்களை ஏந்தவேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.
எங்களுக்கு ஒரு முகம் வேண்டுமென்றால்
எங்கள் முகங்களை மறைத்துக்கொள்ள வேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.
எங்களுக்கு ஒரு பெயர் வேண்டுமென்றால்
எங்கள் பெயர்களை மறந்துவிட வேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.
எங்களுக்கு ஓர் எதிர்காலம் வேண்டுமென்றால்
எங்கள் கடந்த காலத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.

எனவேதான் நாங்கள் போராளிகளானோம்.
எமது மக்கள் சாவதை
எமது மக்கள் ஏமாற்றப்படுவதை
இனியும் நாங்கள்விரும்பவில்லை,
நாங்கள் மறக்கப்படுவதை
இனியும் நாங்கள் விரும்பவில்லை.

எங்கள் கறுப்பு முகமூடிக்குப் பின்னால்
எங்கள் ஆயுதமேந்திய குரலுக்குப் பின்னால்
பெயர்சொல்லி அழைக்க முடியாத
எங்கள் பெயருக்குப் பின்னால்
நீங்கள் காண்கின்ற எங்களுக்குப் பின்னால்
நாங்கள் உண்மையில் நீங்களேதான்.
(நன்றி: எதிர்ப்பும் எழுத்தும் - துணைத்தளபதி மார்க்கோஸ்)

இழந்துவிட்ட உரிமைகளை, மறுக்கப்பட்ட சுதந்திரங்களை மீட்பதற்கு உயிரையும் ஆயுதமாக்கிப் போனவர்களின் நினைவாக...

4 comments:

இளங்கோ-டிசே said...

நிவேதா, இந்தப்பதிவின் மூலம் ஈழத்தில் நடக்கும் நிறைய விடயங்களை அறியக்கூடியதாக இருக்கின்றது. நன்றி.
..........
மார்கோஸின் கவிதை யதார்த்தத்தை நன்கு பிரதிபலிக்கிறது.

நிவேதா/Yalini said...

பின்னூட்டத்திற்கு நன்றி, டி.சே.

Arun Appadurai said...

/*யதார்த்தத்தினை நோக்கின், வரலாற்றில் கூறப்பட்ட விடயங்களையும் விட கூறப்படாத விடயங்களிலேயே உண்மையான வரலாறு பொதிந்துள்ளது.*/

மிகவும் உண்மையான கூற்று நிவேதா! உலகில் ஆதிக்க சக்திகள் பயன்படுத்திய சக்தி வாய்ந்த ஆயுதம் இது! ஆக்கிரமிப்பு செய்த நிலங்களின் பெருமை பொருந்திய சரித்திரங்களை இருட்டடிப்பு செய்து விட்டால் அந்நில மக்களளுக்கு தாங்கள் யாரென்ற உண்மை அறியாது, அடிபணிவர்.மனிதருக்கு சுயமரியாதை கற்றுத் தந்து மறுக்கப்பட்ட உரிமைகளுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராட வைப்பது சரித்திரமே! மார்கோஸின் கவிதை மிகவும் அருமை!
தொடர்ந்து எழுதுங்கள்!!

நிவேதா/Yalini said...

நன்றி, அருண்...

// உலகில் ஆதிக்க சக்திகள் பயன்படுத்திய சக்தி வாய்ந்த ஆயுதம் இது! ஆக்கிரமிப்பு செய்த நிலங்களின் பெருமை பொருந்திய சரித்திரங்களை இருட்டடிப்பு செய்து விட்டால் அந்நில மக்களுக்கு தாங்கள் யாரென்ற உண்மை அறியாது, அடிபணிவர். //

உண்மையிலும் உண்மை.