Tuesday, December 13, 2005

அன்பே சிவம்...


இந்த மனிதர்களைப்பற்றிச் சொல்வதற்கு
இனியும் என்னிடம்
எதுவுமேயில்லை..

இவர்களுடனான
என் கசந்துபோன
சில அனுபவங்களை
நினைவுக்குவியலிலிருந்து பொறுக்கியெடுக்கிறேன்..

என் கட்டுப்பாடுகளையும் மீறி..,
அடிமனத்தின் ஆழங்களில் ஊற்றெடுத்து..,
திடீரென்று கிளம்பிப்
பொங்கிப் பாய்கிறது..
இவர்கள் மீதான வெறுப்பு.


தெய்வநியதிகளுக்குள் மனிதத்தைத் தொலைத்துவிட்டவர்கள் இவர்கள்...

ஒரு திருவிழா தினத்தன்று, தோழியரின் ஓயாத வற்புறுத்தலின் பேரில் நீண்டகாலத்திற்குப் பின்னர் சிவன்கோவில் வாசலில் அடியெடுத்துவைத்தேன். முக்கியமான தினமென்றபடியால் கோவிலில் கூட்டத்திற்குக் குறைவிருக்கவில்லை. புத்தாடைகளுடனும், மினுமினுக்கும் ஆபரணங்களுடனும், முகம் முழுக்கப் புன்னகையுடனும் ஆண்களும்.., பெண்களும்.., சிறுவரும்.., வயது முதிர்ந்தோரும்.., இன்னுமின்னும் பலருமென களைகட்டிக் கொண்டிருந்தது கோவில் முன்றம். அனைவரையும் கடந்து, உள்நுழைந்து பூசையில் கலந்துகொண்டோம். நாதஸ்வரத்தினதும் இன்னபிற இசைக்கருவிகளினதும் ஓசை காதைத்துளைக்க.. புரியாத மொழியில் அர்ச்சகரும் ஏதேதோ கூற.. பக்திப் பரவசத்துடன் மெய்மறந்து நின்றிருந்த மனிதர்மீது திரும்பியது என் பார்வை. என்ன வேண்டுகிறார்களாயிருக்கும் இவர்கள்..?

அதோ அந்தச் சிறுமி.. பூசை முடிந்ததும் அம்மா பஞ்சுமிட்டாய் வாங்கித்தரவேண்டுமென வேண்டுகிறாளோ..? அந்தப் பையன்.. இந்தமுறை தவணைப் பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கவேண்டுமென நேர்ந்து கொண்டவனாயிருக்கும்.. ஆனால் அந்த இளைஞன்.. காதலியின் தரிசனம் இன்றைக்காவது கிட்டவேண்டுமென்று வேண்டுகிறானோ..? அந்த அம்மாள் என்ன வேண்டுகிறாளாயிருக்கும்..? பிள்ளைகள் சுகமாக இருக்க வேண்டும்.., கணவன் நீண்டகாலம் வாழவேண்டுமென்றாக்கும்.. அப்படியென்றால் அந்தக் கிழவர்.. விரைவில் என்னை உன்னிடம் அழைத்துக்கொள் என்று கேட்கிறாராக்கும்..

இவர்களில் எத்தனைபேர் எந்தவித எதிர்பார்ப்புகளுமேயில்லாமல் இறைவனை வணங்குகிறார்கள்? எத்தனைபேர் அநியாயமாய் மாண்டுபோன ஆன்மாக்களுக்காகப் பிரார்த்திக்கிறார்கள்? எத்தனைபேர் துன்பத்திலுழலும் மக்களைத் தங்கள் வேண்டுதல்களின்போது நினைவு கூருகிறார்கள்? 'மக்கள் சேவை மகேசன் சேவை' என்பது கேட்பதற்கு நன்றாய்த்தான் இருக்கிறது. நடைமுறையில், இந்த மதங்கள் மக்கள் மத்தியில் சுயநலத்தை அல்லவா மென்மேலும் வளர்த்துக் கொண்டிருக்கின்றன..

அபிஷேகம் ஆரம்பமாகின்றது.. பால், இளநீர், இன்னும் எத்தனை எத்தனையோ திரவியங்களால் திருவுருவச் சிலை நீராட்டப்படுகின்றது. இனம்புரியாத அதிர்வு உள்ளத்தில்.. இங்கு லீட்டர் கணக்கில் அநியாயமாய் வீணாய்ப் போகும் பால் எத்தனை குழந்தைகளின் பசி தீர்க்கப் பயன்பட்டிருக்கும்? கொழும்பு மாநகரின் சேரிப்புறங்களில்.. மூக்கிலிருந்து சளி வடிய வடிய.. இத்துப்போன கந்தலாடைகளுடன் ஓடித்திரியும் சிறுவர்களின் முகங்கள் நினைவில் அறைந்து சென்றன. பேருந்தில், சில மாதங்களே நிரம்பிய குழந்தையை இடுப்பில் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டிருந்த.., பிள்ளைக்குப் பாலூட்டவும் வழியில்லாத ஒட்டியுலர்ந்துபோன மேனியுடனான அந்தப் பெண்ணுருவத்தின் நீட்டிய கைகளும் விழிமுன் நிழலாடின..

என்ன மனிதர்கள் இவர்கள்..? கல்லிலும்கூட இறைவனைக் காணத்தெரிந்த இந்தக் கனவான்களால் ஏன் அந்தக் குழந்தையின் முகத்திலும்.., பரிதாபத்திற்குரிய அந்தப் பெண்ணின் விழியிலும்.., இதுபோன்ற இன்னும் எத்தனையோ வறிய நெஞ்சங்களிலும் கடவுளைக் காணமுடியாமல் போயிற்று?


அறியாமையெனும் சுழலுக்குள் சிக்குண்டு விடுபட மறுத்தவர்கள் இவர்கள்...

சுனாமி வந்தாலும் வந்தது.. அதைச் சாட்டாகக்கொண்டே அசட்டுச் சனங்களை ஏய்க்கவும் தவறவில்லை இந்த மனிதர்கள். முழு ஊரையும் கடல்கொண்டு போனபின்பும், சுவடே தெரியாமல் மானுட இருப்பே அழிந்துவிட்ட பின்பும், சில ஆலயங்களில் இறைவனின் திருவுருவச் சிலைகள் மட்டும் எந்தச் சேதாரமுமில்லாமல் தற்செயலாகத் தப்பிப்பிழைத்ததை வைத்துக்கொண்டு அரசியல் நடத்தத் தொடங்கிவிட்டனர். சிலைகள் சிதைவுறாமை அதிசயமாம்.., அற்புதமாம்.., இறைவனின் மகிமையாம்.. மக்களின் நம்பிக்கையை வைத்துப் பணம் சம்பாதித்தல் இங்கு பிரபல்யமான தொழிலாகப் போயிற்று. சுனாமியிலிருந்து தப்பிப்பிழைத்த சிலைகள் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றன; புனிதம் பொருந்தியவையாகவும், சக்தி வாய்ந்தவையாகவும் கருதப்பட்டு பயபக்தியுடன் வணங்கப்படுகின்றன.

நல்ல வேடிக்கைதான்.. எந்த இதயமுள்ள இறைவனாவது தன் குழந்தைகளைப் பலிகொடுத்து உருவச் சிலைகளை மீட்பானா..? மண்ணாலும், கல்லாலுமான சிலைகளைவிட மானுட உயிர்களைக் கேவலமாக நினைக்கும் இறைவர்களின் புத்திரர்களா நாங்கள்..? உயிருள்ள ஜீவன்களைக் கைவிட்டு, தன்னைத்தான் காப்பாற்றிக்கொள்ளும் சக்திவாய்ந்த இந்தச் சிலைகள் இருந்தாலென்ன.. இல்லாவிட்டாலென்ன..? சொல்பவன் சொல்கிறானென்றால்.. கேட்பவனுக்கு எங்கே போயிற்று புத்தி?


காலத்தின் மாறுதல்களுக்கேற்ப தம்மைத் தகவமைக்க மறந்தவர்கள் இவர்கள்...

மதமாற்றத்தைச் சட்டரீதியாகத் தடைசெய்யகோரி ஆர்ப்பாட்டம்.., போராட்டம்.., கூச்சல்... எய்தவனிருக்க அம்பை நொந்துகொள்ளும் பேதமைத்தனத்தின் உச்சகட்டம். விரும்பிய மதத்தினைக் கடைப்பிடிக்கும் உரிமையை மறுக்கக்கோருபவர்கள்.., புதிதாக முளைத்த சிறிய சிறிய மிஷனரிகளால் தங்கள் நூற்றாண்டுகாலப் பழைமை வாய்ந்த மதங்களின் பாரம்பரியப் பெருமையும், புகழும் சீர்குலைந்து போவதாக அஞ்சுபவர்கள்... மதமாற்றங்கள் இடம்பெறுவதற்கான அடிப்படைக் காரணங்களை ஏன் உணரத் தவறினார்கள்?

வறுமை.. வறுமை.. வறுமை..

அடுத்தவேளைச் சாப்பாடு கிடைப்பதுகூட நிச்சயமற்ற நிலையிலிருப்பவனிடம் போய் தேவ உலகின் மேன்மை பற்றியும், அடுத்த ஜென்மத்தின் விமோசனம் பற்றியும் கதையளந்தால்.. எவன் கேட்பான்? பசியில் வாடும் குழந்தையிடம் சொர்க்கத்துக்குப் போக விருப்பமா என்று கேட்டால்.., அங்கே நிறைய பாண் (bread) கிடைக்குமா அக்கா என்றுதான் அது திருப்பிக் கேட்கும். இனிவரும் பிறவிகளில் கோடானுகோடி செல்வத்தைத் தரக்கூடிய கடவுளைவிட.., அடுத்தவேளை உணவை உறுதிப்படுத்தக்கூடிய.., இவ்வுலகில் வாழ்தலை இலகுவாக்கக்கூடிய கடவுளரே இத்தகைய கதியற்ற மனிதர்களுக்குத் தேவை... அது எந்த மிஷனரியாயிருந்தாலும் சரி.. அவற்றின் பின்னணியிலிருக்கும் அமெரிக்காவாயிருந்தாலும் சரி.. வேறு யாராயிருந்தாலும் சரி.. இந்த யதார்த்தத்தினைக்கூடப் புரிந்துகொள்ள முடியாத பழம்பெரும் மதங்களின் இருப்பு கேள்விக்குள்ளாவதில் வியப்பென்ன?

மறுபுறம் சாதிய அமைப்பு... தாழ்த்தப்பட்ட சாதியினர் மேலாதிக்க வர்க்கத்தினரின் விருப்பு வெறுப்புக்களுக்குக் கட்டுப்பட்டே வாழ்ந்தாக வேண்டிய நிலை. கல்வி, மற்றும் மதவழிபாடுகளின்போது புறக்கணிப்பு.. மனிதரை மனிதராக மதிக்கத்தெரியாத பிராமணிய சித்தாந்தங்களினால் வந்த வினை. முறையான கல்விவசதியும், அதன்வழிவந்த சமூக அந்தஸ்தையும் பெற்றுத்தரக்கூடிய.., வழிபாடுகளின்போது தம் பிறப்பினைக் காரணங்காட்டித் தம்மை அவமதிக்காத ஒரு மதத்தினை இழிகுலத்தவரென இவர்களால் அடையாளப்படுத்தப்படுவோர் தெரிந்தெடுப்பதில் என்ன தவறு?

கிலோக்கணக்கான தங்கத்தினாலும், விலையுயர்ந்த பட்டுப்பீதாம்பரங்களாலும் திருவுருவச் சிலைகளை அலங்கரித்து அழகுபார்க்கத் தெரிந்தவர்கள்.. அந்தக் கரிசனையில் கொஞ்சத்தை இந்த ஏழைச் சனங்களிடமும் காட்டினால் பிறகும் தேவைப்படுமோ இந்த மதமாற்றத் தடைச்சட்டங்கள்? சாதிய ஏற்றத்தாழ்வுகளாலும், வர்க்க முரண்பாடுகளாலும் மனிதரைப் புறக்கணிக்காதிருந்தால்.., அவர்களை அகௌரவப்படுத்தாதிருந்தால்.., அனைவருக்கும் சமவாய்ப்பினை வழங்க முன்வந்தால்... அதன்பின்னும் நிலைபெறுமோ இம்மதமாற்றங்கள்?

இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்... இந்த அறியாமையிலுழலும் மானிடப் பதர்கள். அன்புநிறை நெஞ்சங்களுள் தெய்வீகம் உறைந்திருப்பதை உணராமல் கல்லிலும், முள்ளிலும், இன்னும் எங்கெல்லாமோ தேடியலைந்து கொண்டிருக்கிறார்கள்.

என்ன செய்து கொண்டிருக்கிறது இந்த உலகம்..?
புதிய தெய்வங்களைக் கண்டுபிடிக்கிறது..
புதிய சட்டங்களை உருவாக்குகிறது..
பாப்லார் மரங்களில் காற்று ஊடுருவிச் செல்லும் ஓசை.
காலையொளியில் ஒரு தேவனைப் போல்
சுடர்விட்டபடி ஒரு தேனீ இதோ செல்கிறது.
அதன் ரீங்காரத்தில் ஓங்கார நாதம்.
உலகை விடுங்கள்.
நான் கேட்க விரும்பும் பூமியின் வரலாறு
இதில்தான் உள்ளது.
- ஹேர்மன் ஹெஸ்ஸே

15 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

கோவிலுக்குச் சென்றால் அங்கே அபிஷேகம் நடந்துகொண்டிருந்தால் என்னுள்ளும் இந்த அதிர்வு ஏற்பட்டிருக்கிறது.

இந்த இடுகை முழுக்க நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்விகளும் உள்மனதில் உங்களுக்கு வெளிப்படும் எண்ணங்களும் என்னுள்ளும் எழும்பியிருக்கின்றன.

முக்கியமாக..


//என்ன மனிதர்கள் இவர்கள்..? கல்லிலும்கூட இறைவனைக் காணத்தெரிந்த இந்தக் கனவான்களால் ஏன் அந்தக் குழந்தையின் முகத்திலும்.., பரிதாபத்திற்குரிய அந்தப் பெண்ணின் விழியிலும்.., இதுபோன்ற இன்னும் எத்தனையோ வறிய நெஞ்சங்களிலும் கடவுளைக் காணமுடியாமல் போயிற்று?
//

//கிலோக்கணக்கான தங்கத்தினாலும், விலையுயர்ந்த பட்டுப்பீதாம்பரங்களாலும் திருவுருவச் சிலைகளை அலங்கரித்து அழகுபார்க்கத் தெரிந்தவர்கள்.. அந்தக் கரிசனையில் கொஞ்சத்தை இந்த ஏழைச் சனங்களிடமும் காட்டினால் பிறகும் தேவைப்படுமோ இந்த மதமாற்றத் தடைச்சட்டங்கள்? சாதிய ஏற்றத்தாழ்வுகளாலும், வர்க்க முரண்பாடுகளாலும் மனிதரைப் புறக்கணிக்காதிருந்தால்.., அவர்களை அகௌரவப்படுத்தாதிருந்தால்.., அனைவருக்கும் சமவாய்ப்பினை வழங்க முன்வந்தால்... அதன்பின்னும் நிலைபெறுமோ இம்மதமாற்றங்கள்?//

//அன்புநிறை நெஞ்சங்களுள் தெய்வீகம் உறைந்திருப்பதை உணராமல் கல்லிலும், முள்ளிலும், இன்னும் எங்கெல்லாமோ தேடியலைந்து கொண்டிருக்கிறார்கள்//


பதிவுக்கு மிக்க நன்றி நிவேதா.

-மதி

Unknown said...

நிவேதா,
என்னுள் பலமுறை எழுந்த கேள்விகள் இவை. அருமையாய் தொகுத்து இருக்கின்றீர்கள்.

//இவர்களில் எத்தனைபேர் எந்தவித எதிர்பார்ப்புகளுமேயில்லாமல் இறைவனை வணங்குகிறார்கள்? //

என்ன கிண்டலா?
எதிர்பார்ப்பு மனிதனுக்கு இல்லையென்றால் கடவுளுக்கு இங்கே என்ன வேலை.

"நான் தான் கடவுள். என்னைக் கும்பிடுவதால் உனக்கு ஒரு பயனும் வராது.
என்னைக் கும்பிடு, எப்படி வேண்டுமானாலும் கும்பிடு, எனக்கு எதுவும் வேண்டாம், எனக்காக எந்த அடையாளங்களும் சாஸ்திர சம்பிரதாயங்களும் வேண்டாம்,எந்த புனித நூலும் வேண்டாம்,நீ எனக்கு ஓதவும் வேண்டாம்...ஆனால் உன் தெருவில் உள்ள ஏழைக்கு உதவு அதுவே போதும்."

என்று எந்த கடவுளாவது சொல்லுமா?
அப்படிச் சொன்னால் எவனாவது அந்தக் கடவுளைச் சரணடைவானா?

அட போங்க நீங்க..


//அடுத்தவேளைச் சாப்பாடு கிடைப்பதுகூட நிச்சயமற்ற நிலையிலிருப்பவனிடம் போய் தேவ உலகின் மேன்மை பற்றியும், அடுத்த ஜென்மத்தின் விமோசனம் பற்றியும் கதையளந்தால்.. எவன் கேட்பான்? //

//என்ன மனிதர்கள் இவர்கள்..? கல்லிலும்கூட இறைவனைக் காணத்தெரிந்த இந்தக் கனவான்களால் ஏன் அந்தக் குழந்தையின் முகத்திலும்.., பரிதாபத்திற்குரிய அந்தப் பெண்ணின் விழியிலும்.., இதுபோன்ற இன்னும் எத்தனையோ வறிய நெஞ்சங்களிலும் கடவுளைக் காணமுடியாமல் போயிற்று?.//
//உயிருள்ள ஜீவன்களைக் கைவிட்டு, தன்னைத்தான் காப்பாற்றிக்கொள்ளும் சக்திவாய்ந்த இந்தச் சிலைகள் இருந்தாலென்ன.. இல்லாவிட்டாலென்ன..? சொல்பவன் சொல்கிறானென்றால்.. கேட்பவனுக்கு எங்கே போயிற்று புத்தி?//

சுனாமி ஒரு காஞ்சிக் கைதால்தான் வந்தது என்றும், தவறு செய்யும் மக்களை அழிக்கவே வந்தது அது இறைவனின் செயலே என்றும் இங்கே விவாதம் நடந்து கடைசியில் மதவாதிகள் அப்படியேதான் இருக்கிறார்கள். யாரும் மாறவில்லை.


//மனிதரை மனிதராக மதிக்கத்தெரியாத பிராமணிய சித்தாந்தங்களினால் வந்த வினை. முறையான கல்விவசதியும், அதன்வழிவந்த சமூக அந்தஸ்தையும் பெற்றுத்தரக்கூடிய.., வழிபாடுகளின்போது தம் பிறப்பினைக் காரணங்காட்டித் தம்மை அவமதிக்காத ஒரு மதத்தினை இழிகுலத்தவரென இவர்களால் அடையாளப்படுத்தப்படுவோர் தெரிந்தெடுப்பதில் என்ன தவறு?//

தமிழ் நாட்டில் மதம் மாறினாலும் கூடவே சாதியும் வரும் அது போகாது.பிராமணராய் இருந்து கிறிஸ்டியனாய் மாறிய ஒருவர் அதே சாதிப் பெண்ணைத்தான் மணமுடிப்பேன் என்று தேடியதை பார்த்திருக்கிறேன். மேலும் தமிழ் நாட்டில் இந்து நாடார்- கிறிஸ்டியன் நாடார் என்பது போன்ற அடையாளங்கள் சர்வ சாதாரணம்.


//அன்புநிறை நெஞ்சங்களுள் தெய்வீகம் உறைந்திருப்பதை உணராமல் கல்லிலும், முள்ளிலும், இன்னும் எங்கெல்லாமோ தேடியலைந்து கொண்டிருக்கிறார்கள்//

ஆன்மிகம் எனும் போது படித்தவன்,படிக்காதவன்,ஏழை, பணக்காரன் அனைவரும் மூடர்களாக இருக்கவே விரும்புகிறார்கள்.

Anonymous said...

MIKAVUMM NAALLA ORUUU PAAIDAIPPUU

INKUUU VARUMMA ELLAARUMM(EELA TAMILIAR AND INDIAN THAMILIAR) KAITTAYAM VASAEEKA VEENDEEYA PAKKAAMM

RAJANIKKUMM CRICKETIKKUUM ETC... ELLATHUMM ARVELLIGALLUKKKU ITHUU ORUU NALLA SAAITAI ADEEE

MIKAVUMM NAANREE

Anonymous said...

thrpf;Fk; NghNj neQ;rk; milj;Jf; nfhz;lJ.
cq;fisg; NghyNt gy Ntisfspy; vdf;Fk; Njhd;wpaJ cz;L. gy ehl;fs; flTs; ek;gpf;ifAlDk;
rpy nghOJfs; rhkpahtJ G+jkhtJ vd;w vz;zq;fSlDk; nry;tJz;L. ,d;Wtiu tho;f;if ,g;gbj;jhd; efh;fpwJ.
ey;yitfis Nfl;gjw;F kl;Lky;y nraw;gLj;jTk; kdj;JzpT Ntz;Lk; Nghy. kdij njhl;l ey;y gjpT.
ikjpyp

இளங்கோ-டிசே said...

வாசிக்கும் போதே நெஞ்சம் அடைத்துக் கொண்டது.
உங்களைப் போலவே பல வேளைகளில் எனக்கும் தோன்றியது உண்டு. பல நாட்கள் கடவுள் நம்பிக்கையுடனும்
சில பொழுதுகள் சாமியாவது பூதமாவது என்ற எண்ணங்களுடனும் செல்வதுண்டு. இன்றுவரை வாழ்க்கை இப்படித்தான் நகர்கிறது.
நல்லவைகளை கேட்பதற்கு மட்டுமல்ல செயற்படுத்தவும் மனத்துணிவு வேண்டும் போல. மனதை தொட்ட நல்ல பதிவு.

மைதிலி

Converted Mythili's comment to unicode (from Baamini)...DJ

Anonymous said...

மதி! உங்களுக்கும், எனக்கும் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ பேருக்கும், ஏன் இவற்றை முன்னின்று நடத்தும் 'தெய்வ புத்திரர்களுக்கே' இந்த அதிர்வு ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனாலும் இறைபக்தியென்ற போர்வையில் அவற்றை மறைக்கவும், மறக்கவும் முயன்று கொண்டிருக்கிறார்கள். எது எவ்வாறிருப்பினும் உண்மை மரணிப்பதில்லையல்லவா?

கல்வெட்டு, உங்கள் பின்னூட்டத்துக்கு மிக மிக நன்றி. என்னால் தவறவிடப்பட்ட சில விடயங்களைக் குறிப்பிட்டு பதிவினை முழுமையாக்கி விட்டீர்கள்.

உண்மைதான்.. 'ஒரு வரமும் தரமாட்டேன்; சரிதான் போடா' என்று தெய்வங்கள் சொல்லிவிடுமானால் அப்புறம் எந்த மனிதன் இந்தக் கடவுளரின் பின்னால் அலைந்து கொண்டிருப்பான்? இதுதான் மனிதரின் சுபாவம். மதங்கள் இவற்றை மென்மேலும் வளர்க்கத்தான் துணைபுரிகின்றன.

சுனாமியில் மாண்டவர்களைப் பற்றி சமீபத்தில் சந்தித்த ஒரு பெரியவர் கூறினார்: 'பாவிகள்தான் இறைவனால் இப்படி தண்டிக்கப்படுகிறார்கள்'. பிறந்து சில மாதங்களேயான பச்சிளங் குழந்தையையும்கூட கடல் விட்டுவைக்கவில்லையே. அது என்ன பாவம் செய்தது? அது யாருக்குத் தீங்கு நினைத்தது? சரி, அக்குழந்தை போன பிறவியில் ஏதோ தீவினை புரிந்துவிட்டதாக வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் இப்போது உயிருடனிருப்பவர்கள் எல்லோரும் புண்ணியம் செய்தவர்களா? எவருக்கும் எந்தக் கெடுதலும் நினையாத உத்தம புத்திரர்களா? அபத்தமாயில்லை..?

// மேலும் தமிழ் நாட்டில் இந்து நாடார்- கிறிஸ்டியன் நாடார் என்பது போன்ற அடையாளங்கள் சர்வ சாதாரணம். //

வேதனையளிக்கிறது.. இலங்கையில் இந்நிலை நானறிந்தவரையில் சற்றுக் குறைவாக்கும். இரு தசாப்த காலமாகத் தொடர்ந்துவரும் யுத்தம் மக்களின் மனநிலையையும் பெருமளவில் மாற்றிவிட்டதென்றே கூறவேண்டும்.

anonymous, மைதிலி உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

DJ, மைதிலியின் பின்னூட்டத்தை convert பண்ணி வாசிப்பதை இலகுவாக்கியமைக்கு மிகவும் நன்றி.

வன்னியன் said...

மதங்கள் தனிப்பட்டவரின் நம்பிக்கையாக இருக்கும்வரை சரி. அனால் அதுவே நிறுவனமயப்படுத்தப்பட்டு, சமூகத்திலும் அரசியலிலும் செல்வாக்குள்ளதாகவும் மாற்றுச் சக்திகளால் கையாளப்படுவதாகவும் உள்ள சந்தர்ப்பத்தில் எப்பாடுபட்டாவது அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
ஈழத்தில் இப்போதைய நிலையில் மதங்கள் பழையபடி தலையெடுக்கத் தொடங்குவதுபோல் தோன்றுகிறது. நானறிய, குறிப்பிட்ட சபையைச் சார்ந்தவர்கள் வீடுவீடாக, வீதிவீதியாத் திரிந்து குறிப்பாக இளையவர்கள் மீது பிரச்சாரம் செய்தார்கள். அதன் முதன்மைத்தொனி, விடுதலைப்போராட்டம் தவறானதென்ற எண்ணத்தை விதைப்பதே. இதைவிட யுத்தபூமியில் நின்று கொண்டு, இரத்ததானம் செய்வதே பாவம் என்ற பிரச்சாரங்களும் நடத்தப்பட்டன. தன் மனைவிக்கு பிறிதொருவரின் இரத்தம் ஏற்றப்படக்கூடாதென்று வைத்தியசாலையில் மருத்துவர்களோடு சண்டைபிடித்து மனைவியைச் சாகடித்த மதபோதகனை நேரிற் பார்த்தவன் நான்.
எனவே மதமாற்றம் யாரால் நடத்தப்படுகிறது, இதன் பின்னணி யார் என்றெல்லாம் ஆராயவேண்டிய தேவையுண்டு. அது சமூகத்தைக் காப்பது தானேயொழிய, குறிப்பிட்ட மதத்தை(பழம்பெரும்)க் காப்பதன்று. என்னளவில் சில சக்திகள் பற்றிய, அவர்களின் நோக்கங்கள் பற்றிய புரிதலின் அடிப்படையில் இவற்றை என்னாற் சொல்ல முடியும்.

பத்மா அர்விந்த் said...

நிவேதா
மனிதத்தை நேசிப்பது பலவித சிக்கல்களில் கொண்டுவிடும். அன்பை கொடுத்து சிக்கலில் மாட்டி தவிக்க பொறுமையும் நேரமும் அவசியம்.இறையன்பு என்பதுகூட இக்காலத்தில் தன் இயல்பை இழந்து போட்டியில் சிக்கி யார் எந்த கோவிலுகு எவ்வளவு செய்தார்கள் என்றூ பட்டியலிடுகிற ஒரு அந்தஸ்து என்றான போது பலவும் கேள்விக்கிறியதாகிறது.

Anonymous said...

மரமண்டைகளை சம்மட்டியால் ஓங்கி அடிக்கும் படியான வார்த்தைகள்.

பேசப்படுவதற்கும் சர்ச்சை செய்யப்படுவதற்கும் உரிய அருமையான பதிவு.

நேரமில்லாததனால் பேசுவதற்கு முடிந்தால் நாளை வருகிறேன்.

இறை நேசன்.

Anonymous said...

வெறும் உணர்ச்சிகளால் உந்தப்பட்டு எழுதி இருக்கிறீர்கள்.
//முகம் முழுக்கப் புன்னகையுடனும் ஆண்களும்.., பெண்களும்..,//
மக்கள் தங்கள் மகிழ்சிக்காக, தங்களுக்கு தெரிந்த வழியில் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள், அவ்வாறு செய்வது உங்களுக்கு புரியாமல் போனாலும், அவர்கள் மகிழ்சி அடைகிறார்கள் என்பது புரியாமல் போகாது என்று நினைக்கிறேன். முடிவில் அது தான் முக்கியம் என உணர்ந்தீர்களானால், அனாவசியமாக உங்கள் வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தி இருக்க மாட்டீர்கள்.
//அறியாமையெனும் சுழலுக்குள் //
அறியாமை - மற்றவர்கள் மட்டும் தான் அறியாமையில் சுழலவேண்டும், சரிதானே?

//
என்ன செய்து கொண்டிருக்கிறது இந்த உலகம்..?//
உலகத்தில் இருப்பது நாம் ஒவ்வொருவரும்தான்!

இடதுசாரி சித்தாந்தம், கேட்பதற்கும், உணர்வு பூர்வமாக பேசுவதற்கும் வேண்டுமென்றால் ஒத்து வரலாம், நடைமுறைக்கு ஒத்து வராது.

அன்பே சிவம் என்றறியார் இரண்டென்பார்.
அன்பே சிவம் என்றறிந்தார்க்கு இரண்டில்லை.
அன்பு சிவம் என்றறிவால் அறிந்தபின்
அன்பே சிவம் என்றறிந்தேனே.
- திருமூலர்

பழைய விழுமியங்களில் குறை சொல்வதிலும், அவற்றில் கசந்து போவதிலும் தவிர்த்து, உங்கள் சுயத்தை தேடலாமே!

மு. மயூரன் said...

இடதுசாரி சித்தாந்தத்தை இதுக்குள் ஏன் இழுக்கிறீர்கள் சிவம்?

சொர்க்கத்தைபற்றியும், அடுத்த பிறப்பு பற்றியும், தேவர்கள் பற்றியும், புராணங்கள் பற்றியும்
பேசாமல மக்களைப்பற்றி பேசியவுடனேயே அது கண்ணைக்குத்தும் சிவப்பாகி உறுத்துகிறதா?

எப்படி வேண்டுமானாலும் இன்பம் துய்க்கலாம் என்ற நினைப்புத்தான் இதிலிருக்கும் பிரச்சனையே.

மற்றவருக்கு கேடு விளைவிக்கும் இன்பத்துய்ப்பாக நிவேதா இந்த கோயில் சம்பவத்தை
விபரிக்கிறாரே தவிர, ஆன்மீகம் பற்றியோ, ஆன்ம ஆறுதல் பற்றியோ பேசவரவில்லை.

கோயில்களும் திருவிழாக்களும், தேர்களும் தோரணங்களும் பெரிய சமூக அவலம்.
பணத்திமிரினதும், அடிமைத்தனத்தினதும் ஒருமித்த வெளிப்பாடு.

நல்ல வியாபாரமும் கூட.

கொழும்பு வடக்கின் கோயில் திருவிழாக்கள்தான் பால்வினைத்தொழில் கோலோச்சும் பகட்டுச்சந்தை.
விசாகப்பெருநாள் போன்ற பவுத்த பண்டிகைகளும் இதனுள் அடக்கம்.

தங்கம் கொழிக்க, மக்களின் பணத்தை உறிஞ்சி பெருத்து நிற்கும் கோபுரங்கள் "சளிவடிய" நிற்கும்
சேரிக்குழந்தைகளை பார்த்து எள்ளி நகையாடும் கேவலங்கள்.

ஆன்ம விடுதலை பெற்றுத்தருவதாய் பொய்சொல்லி மக்களை மந்தைகளாக்கி, அடிமைகளாக்கி வியாபாரம்
பண்ணும் திணிப்பு மதங்களை இன்னும் அழிக்காமல் வைத்திருப்பதுதான் சோகம்.

இறைநேசன் ஏதோ பிறகு எழுதுவதாக சொல்லியிருக்கிறார். எழுதினால் இன்னும் விரிவாக சில
விஷயங்களை சொல்லலாம்.

அருள் குமார் said...

உங்களுக்கு எழுதிய பின்னூட்டம் ஒரு பதிவாக இங்கே...

அருள்.

Anonymous said...

வன்னியன், சில குறிப்பிடத்தகுந்த முக்கியமான விடயங்களைப் பற்றியும்.. என் கருத்துக்களிலிருந்த குளறுபடிகள் பற்றியும் எடுத்துச் சொன்னமைக்கு நன்றி.

தேன்துளி, இறைநேசன் உங்களுக்கும் என் நன்றிகள்.

சிவம், ஒவ்வொருவருக்கும் தான் உணர்ந்ததை வெளிப்படுத்த உரிமை இருக்கின்றது. அந்தவகையில் உங்களுக்கான உரிமையை அங்கீகரிப்பதுடன், உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன்.

// வெறும் உணர்ச்சிகளால் உந்தப்பட்டு எழுதி இருக்கிறீர்கள். //

சரிதான். அதிலென்ன தவறு? என்னைப் பொறுத்தவரை மொழியென்பது உணர்வு வெளிப்பாட்டிற்கான ஒரு ஊடகம். அதைப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறேன். அவ்வளவுதான்.

மகிழ்ச்சியடைவது தவறல்ல.. எமது சந்தோஷம் இன்னுமொருவருக்கு ஏக்கத்தினை விளைவிப்பதாக இருக்கக் கூடாது. அந்த மகிழ்ச்சிக்கு அர்த்தமேயில்லாமல் போய்விடும்.

// உலகத்தில் இருப்பது நாம் ஒவ்வொருவரும்தான்! //

உண்மைதான். இங்கே என் சுயம் தனித்திருக்க.. நான் தவிர்ந்த உலகத்தைக் குறைகூறுவதாக என் எழுத்துக்கள் அமைந்திருப்பதாக 'நீங்கள் உணர்ந்தால்' அதற்காக மன்னிக்க வேண்டுகிறேன்.

உலகத்தை மட்டுமல்ல.., அதன் ஒரு அணுவென்றவகையில் என் இருப்பையும் கேள்விக்குள்ளாக்கும் முயற்சிதான் இதுவென நீங்கள் புரிந்து கொள்ளாமை என் தவறல்ல.

என்னைச் சுற்றிலும் கவிந்திருக்கும் இந்த விழுமியங்களையும், பண்பாட்டு நெறிமுறைகளையும் தவிர்த்து என் சுயத்தை எங்கே போய்த் தேட?

அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்..
அன்பே சிவமாவதாரும் அறிகிலார்..
அன்பே சிவமாவதாரும் அறிந்தபின்..
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே..

இவ்வளவையும் சொல்லி ஏன் நேரத்தை வீணாக்குவானென நினைத்துத்தான் 'அன்பே சிவம்' என சுருக்கமாகத் தலைப்பிட்டேன்.

அதனை பின்னூட்டத்தில் மீண்டும் குறிப்பிட்டிருந்தமைக்கு நன்றி.

இப்பதிவில் இடதுசாரிச் சித்தாந்தம் தொனிப்பதாக எச்சரித்தமைக்கும் நன்றி.

மயூரன், அருமையாகப் பதிலடி கொடுத்திருக்கிறீர்கள். தவறெனப் பட்டதைத் துணிந்து எதிர்க்கும் துடிப்பினைப் பாராட்டுகிறேன். நன்றி.

அருள்குமார், இத்தனை நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் கருத்துக்கள் சிந்திக்க வைக்கின்றன.

Anonymous said...

செந்து, நீங்கள் கூறுவதிலும் நியாயம் இல்லாமலில்லை. உண்மைதான்.., இன்னொருவரின் நம்பிக்கைகளை விமர்சிக்க எமக்கென்ன தகுதியிருக்கிறது? ஏற்றுக் கொள்கிறேன். பின்னூட்டத்துக்கு நன்றி.

மா சிவகுமார் said...

செந்து,

நமக்கு கிடைத்திருக்கும் செல்வங்கள், இறைவன் கொடுத்த கொடை. அதை நம் விருப்பபடியெல்லாம் செலவளிப்பது என்பது பக்தியாகாது. இறைவனுக்கு மனம் குளிரும் வண்ணம் நம் செல்வத்தைப் பயன்படுத்துவது அல்லவா உண்மையான பக்தி. ஏழைக் குழந்தையின் பசியைப் புறக்கணித்து கோயிலில் அபிஷேகம் செய்வதை இறைவன் ஏற்றுக் கொள்வார் என்று நினைக்கிறீர்களா?

அன்புடன்,